அப்பாவி அடிமைகளுக்கு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: June 30, 2019
பார்வையிட்டோர்: 23,407 
 

“அம்மா! ராமு புதுசா பேட் வாங்கியிருக்கான். அவன் கூட கிரவுண்டுக்கு வெளையாட போறேம்மா”

“கிருஷ்ணா ஒழுங்கா சமர்த்தா போய் படுத்து தூங்கு. லீவு வந்தாலே போதுமே. வெய்யில்ல சுத்த கிளம்பிடுவியே”

“அம்மா. ப்ளீஸ்மா ஹோம் ஒர்க் எல்லாம் சமர்த்தா முடிச்சிட்டேம்மா. ப்ளீஸ்மா.”

“சொன்னா கேட்க மாட்டே. டாடி வந்தா அடிச்சுடுவார். போயி தூங்குடா”

***

“சார் பையன் மேத்ஸ், சயின்ஸ் ரெண்டுத்தேலேயும் நைண்டி பர்சண்ட் ஸ்கோர் பண்ணியிருக்கான் சார். தயவுசெஞ்சி பர்ஸ்ட் குரூப்பே கொடுத்துடுங்க”

“இல்லே சார். பர்ஸ்ட் குரூப்லே மொத்தம் 24 வேகன்ஸி தான் இருக்கு. அதுலே நாலு ஏரியா கவுன்சிலர் ஆக்குபை பண்ணிட்டார். 10 மேனேஜ்மெண்ட் ஆளுங்க எடுத்துக்கிட்டாங்க. மீதி பத்து டொனோர்ஸ்க்கு போயிடும். முடிஞ்சா 25 ரூபா ரெடி பண்ணிடுங்க. டோனோர்ஸ் கோட்டால கொடுத்திடலாம்”

“சார். நான் ஒரு பிரைவேட் கம்பெனிலே கிளார்க்கா இருக்கேன். ஹையர் செகண்டரிக்கே 25 ரூவா எல்லாம் செலவு பண்ண முடியாது சார். பையன் நல்லா படிப்பான். உங்க ஸ்கூல் பேரைக் காப்பாத்துவான்”

“இல்லே சார். பாலிசி டிசிஸன் இது. நான் நெனைச்சா மாத்த முடியாது. பிரின்ஸிபால் சொந்தக்காரப் பையன் ஒருத்தனுக்கே தேர்ட் க்ரூப் தான் கொடுத்திருக்கார். வேணும்னா உங்களுக்கு தேர்ட் குரூப் ஹிஸ்டரிக்கு பதிலா மேத்ஸ் கொடுக்க ட்ரை பண்ணுறேன்”

***

“சார். தீவாளி கேம்பைனுக்கு புதுசா ஒரு கான்செப்ட் ரெடி பண்ணியிருக்கேன். அட்டகாசமா வந்துருக்கு. ஓபனிங்லே புராடக்ட் லாங் ஷாட்டுலே இருந்து ஜூம் ஆகுது. அப்போ ஒரு பொடியன் கையிலே ராக்கெட்டோட வந்து…….”

“குமார் உங்களுக்கு எதுக்கு தேவையில்லாத வேலை? நீங்க சாதாரண விஷுவலைஸர். கிரியேட்டிவ் டைரக்டர் இல்லே. ஞாபகம் வெச்சுக்கங்க”

“இல்லே சார். எம்.டி. சொல்லியிருக்காரு. யாரு வேணும்னாலும் கான்செப்ட் கிரியேட் பண்ணலாம்னு”

“யோவ் எத்தனை வாட்டி சொல்லுறது? மாசாமாசம் ஒழுங்கா சம்பளம் வருதில்லே. அதை வாங்கிட்டு ஒழிய வேண்டியது தானே? எதுக்குய்யா எங்க தாலி அறுக்கறே?”

***

“ஏண்டா. எவன் எவன் வெள்ளை சட்டை போட்டுக்கிட்டு வாட்ச் கட்டிக்கிட்டு போறதுன்னு வெவஸ்தை இல்லையா?”

“இல்லே எஜமான். பட்டணத்துலே வேலை செய்யுற எம் மவன் ஆசையா வாங்கிக் கொடுத்து அனுப்பிச்சான் எஜமான்”

“அதுக்கு பகட்டா நீ பாட்டுக்கு வெள்ளை வேட்டியும், கையிலே வாட்சும் கட்டிக்கிட்டு ஊருக்குல்லே நடந்தேன்னா, நாளைக்கு எவண்டா என்ன மதிப்பான்? உன்னை எல்லாம்……….”

***

“ஏங்க. கல்லுல்லே மாவரைச்சு மாவரைச்சு மாரெல்லாம் வலிக்குது. ஒரு கிரைண்டர் வாங்கணுங்க”

“வாங்கலாம்மா”

“எப்போங்க?”

“எதுக்குடி இப்போ நொய் நொய்ன்னு உயிரை எடுக்கறே? ஸ்ட்ரைக் முடிஞ்சு போனஸும், அரியர்ஸும் வரட்டும், வாங்கிடலாம்”

***

“தலைவா. இதெல்லாம் நியாயமில்லே. அசெம்பிளி எலெக்சனுலே தான் இதயத்திலே இடம் கொடுத்துட்டு கவுத்திட்டீங்க. லோக்கல்லேயாவது நம்ம ஆளுங்களை திருப்தி படுத்தற மாதிரி ஏதாவது இடம் கொடுங்க”

“இருந்தா இல்லேன்னாய்யா சொல்லப்போறேன். திண்டிவனத்தான், வந்தவாசிக்காரன், நாகைப்பட்டினத்துக்காரன், இடது, வலது எல்லாத்துக்கும் பிரிச்சி கொடுத்துட்டு கடைசியிலே எனக்கே ஒண்ணும் நிக்கலையேய்யா. பார்க்கலாம். மேல் சபை கொண்டாந்து உன் கட்சியிலே சில பேரை எம்.எல்.சி. ஆக்கறேன்”

“அதுவரைக்கும் நான் என்னத்த அரசியல் பண்ணுறது? ஏற்கனவே மதுரைக்காரன் கட்சியை உடைச்சிடுவேன்னு மெரட்டிக்கிட்டிருக்கான்”

“அப்போ ஒண்ணு பண்ணு… என்னை புடுங்காம அந்தப் பொம்பளை காலுலே போயி விழு….”

***

“ப்ளீஸ்மா. இன்னைக்கு மட்டும்”

“நோ. முடியாது”

“ப்ளீஸ்… ப்ளீஸ்… வருஷத்துக்கு ஒரு முறை தான் நியூ இயர். வெறும் பீர் மட்டும் தான்”

“இன்னைக்கு பீர்னு சொல்லுவீங்க. நாளைக்கு பிராந்தி. அப்புறம் மறுபடியும் சிகரெட், பான்பராகுன்னு பழைய வழிக்கு திரும்பிடுவீங்க. இனிமே உங்க பிரண்ட்ஸ் யார்கூடவும் நீங்க வெளிய போகக்கூடாதுன்னா போகக்கூடாது தான்.”

—————————————————————-

“இன்னைக்கு எங்க டியூட்டி”

“வேளச்சேரி சுபிக்சாவிலே”

“டே மட்டும் தானே?”

“ஆமா சார். ஈவ்னிங் என் மச்சினிச்சிக்கு நிச்சியதார்த்தம். 6 மணிக்கெல்லாம் போயிடுவேன்”

“மணி லீவுலே இருக்கான் தெரியுமில்லே. யுனிவர்ஸல் டியூட்டி 7 மணிக்கும் நீதான் பார்த்துக்கணும்”

“இல்லே சார். நான் வீட்டுக்கு மூத்த மருமவன். அதான்….”

“யோவ். சொன்னா கேட்க மாட்டே. முதலாளி சொன்னதை தான் நான் சொல்லுறேன். டியூட்டி பார்த்தா பாரு. இல்லேன்னா இப்போவே மச்சினிச்சி நிச்சயதார்த்தத்துக்கு போயிடு. திரும்ப வரவே வராதே”

***

“தலை. எத்தினி நாளுக்கு தான் கத்தி, கபடான்னு உன் பின்னாலேயே சுத்திக்கிட்டு இருக்கறது. அந்த போக் ரோடு பார் டெண்டர் எடுத்துக் கொடு”

“ஏண்டா. வளர்ந்துட்டியா?”

“இல்லே தலை. எனக்கும் குடும்பம், குட்டின்னு இருக்கு. பையனை அடுத்த வருஷம் காலேசில சேர்க்கணும். நாலு காசு பார்க்கணும்…. எவ்வளவு நாளைக்கு தான்…..”

“அடிங்கொ…….. ஆளாளுக்கு வெள்ளை வேட்டி கட்ட ஆசை வந்துட்டா. நாங்கள்லாம் என்னாத்தைடா பண்ணுறது? அளவுக்கேத்த ஆசை வேணாமா? போடா…. பொழைப்பை பாரு…. என்னடா முறைக்கிறே”

***

“லொள்…. லொள்….”

“லொள்…. லொள்…. லொள்….” – கொஞ்சம் கோபமாக…

“லொள்…. லொள்…. லொள்…. லொள்….” – கொஞ்சம் ஆவேசமாக…

“லொள்…. லொள்…. லொள்….” – கொலைவெறியுடன்…

“லொள்…. லொள்….” – கொஞ்சம் சத்தம் குறைத்து வாலை ஆட்டி புறமுதுகிட்டு….

“லொள்…. லொள்…. லொள்…. லொள்….” – ஓவர் சவுண்டுடன். மனதுக்குள் “ஏரியா விட்டு ஏரியா வந்து சைட் அடிக்கிறியா? மவனே கொளுத்திடுவேன்”…

***

நாட்டுக்கு விடுதலை கெடைச்சி 60 வருஷமானாலும் பொருளாதாரரீதியா, வர்க்கரீதியா, சாதிரீதியா, மதரீதியா, அரசியல்ரீதியா, குடும்பரீதியா…. இன்னும் ஏகப்பட்ட ரீதிகளாக அடிமைப்பட்டிருக்கும் அப்பாவிகளுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்……..

– 2006ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தேன்கூடு-தமிழோவியம் போட்டியில் முதல் பரிசு பெற்ற படைப்பு!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *