அப்பாவின் காதல் கடிதங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 11,260 
 

அம்மாவின் காதல் கடிதங்கள் படிக்கக் கிடைத்தபோது தேனுகாவைப்போலவே அம்மாவும் துர்பாக்கியம்அடைந்தவளாக வீட்டில் இருந்தாள். பல வருடங்களுக்கு முன்பே கடிதங் களைத் தேடி எடுத்து வாசித்திருந்தேன். இருந்தபோதிலும் தேனுகாவுடன், ஆச்சர்யமாக முதன்முதலாகப் பார்ப்பதுபோல பொய்யாக நடித்தபடி படித்தேன். வீட்டின் துக்கத்தில் பொய்யாக நடிப்பதும் ஆச்சர்யத்தை வரவழைப்பதும், மனதுக்கு வேதனையாக இருக்கிறது.

தேனுகாவின் கணவர் விபத்தில் மரணம் அடைந்து 30 தினங்கள் முடிந்துவிட்டன. நேற்று இரவு அவளது ஊரில் இருந்து புறப்பட்டு வந்துவிட்டாள். இனிமேல் இந்த வீட்டில்தான் இருக்கப்போகிறாள்.

தேனுகாவின் திருமணத்துக்கு வாங்கிய புடவைகள் எனக்கு மிகவும் பிடிக் கும். எனக்குக் கிடைத்த பாசிப்பயறுப் பச்சை கலர் புடவையும் கத்தரிப்பூ கலர் சுடியும் நன்றாக அமைந்துவிட்டன. சட்டையும் சுடிதாரும் தைத்ததுகூட உடம்புக்கு ஏற்றதுபோல இருந்தன. என்னுடைய சுடியை ஒருமுறை அணிந்துவிட்டுத் தருகிறேன் என்று அடம்பிடித்தாள் தேனுகா. இதற்கு அர்த்தம் என்னஎன்று எனக்குத் தெரியும். அப்பாதான் இதைக் கண்டுப்பிடித்தது. அப்படியே அந்த டிரெஸ்ஸை வைத்துக்கொள்வாள். அபேஸ் செய்து திரும்பத் தர மாட்டாள். ”உங்க ஊரில் போய் இதேபோல வாங்கிக்கொள்” என்று தர மறுத்துவிட்டேன். அப்பா அவளைச் சமாதானம் செய்துவைத்தார்.

வைகாசி மாதத்தில் திருமணம் நடந்தால், உடனே ஆடியும் தீபாவளியும் வந்துவிடும். தேனுகாவும் அவளது கணவனும் பண்டிகைக்கு வந்துவிடுவார்கள் என்று அப்பா சொன்னார். அம்மா அவளைவிட்டுப் பிரிந்திருக்கப் பழக வேண்டுமெனச் சொன்னாள். அப்போதுகூட நாங்கள் நினைத்திருக்கவில்லை, தேனுகா திரும்பவும் வீட்டுக்கு வந்துவிடுவாள் என்று. எங்கள் வீட்டுக்கே உண்டான துரதிருஷ்டம் அவளைத் தொடரத் தான் செய்தது.

தேனுகா என் அறையில் தற்சமயம் இருக்கட்டும் என முடிவு செய்தார்கள். அப்பாவினால் தீர்மானமாக யோசிக்க முடியவில்லை. குழப்பங்களாலும் நிம்மதி இல்லாததாலும் ரத்த அழுத்தம் கூடிப் படுத்துக்கிடந்தார். அவர் ஏற்கெ னவே ஒருமுறை இதய வலியினால் அவதிப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்தியம் செய்து திரும்பியவர். இப்போதும் அவருக்கு பாதுகாப்பும்கண் காணிப்பும் வீட்டில் இருக்கிறது. அவரது சந்தோஷமும் நிம்மதியும் முழுமையாக இல்லையென்றாலும், சிறிது சிறிதாக அவரிடம் இருந்து விலகிச் சென்றபடி இருந்தன.

அப்பாவுக்கு உணவு தயாரித்துக்கொண்டு அவரை எழுப்பினாள் அம்மா. அவர்கள் இருவருக்குமே முகம் கறுத்துப்போய் இருந்தது. குழந்தைகளைப்போல அமர்ந்து பேசிக்கொள்வார்கள். தேனுகா பலமுறை அவர்கள் பேசுவதை உறங்குவதைப்போல படுத்துக்கொண்டு கேட்டிருக்கிறாள். ‘அப்பாவைப்போல ஒருத்தர் எனக்குக் கணவனாகக் கிடைத்தால் போதும்’ என்பாள் தேனுகா. இப்படி நினைத்ததுதான் தவறுபோல. நண்பனாகவும் ஆசானாகவும் இருக்கும் அப்பாவைப்போன்று கணவன் வேண்டுமென எந்தப் பெண்ணும் நினைக்கக் கூடாதுபோல. தேனுகாவின் கணவர் விபத்தில் மரணம் அடைந்த தற்கு, எங்கள் வீட்டுக்கே உண்டான துரதிருஷ்டமோ, இல்லை அவளது துரதிருஷ்டமோ எது காரணம் என்று தெரியவில்லை.

அரிசிக் கஞ்சியின் மணம் அறையில் சூடாகப் பரவியது. அப்பா மதிய நேரத்தில் சாப்பிடும் மருந்துகளை எடுத்துக்கொண்டு அருகே சென்று அமர்ந்துகொண்டேன். கண்களில் சிவப்பாக வரி வரியான கோடுகள் இருந்தன. ”நீ சாப்பிட்டாயா?” எனக் கேட்டதும் சாப்பிட்டேன் என்று சொல்ல முடியாமல் தலையை மட்டும் ஆட்டினேன்.

எனது அறையில் தேனுகா உறங்கிக்கொண்டு இருந்தாள். இன்னமும் எழுந்திருக்கவில்லை.

அவள் தூங்கிக்கொண்டேதான் இருக்கிறாள். ஏன் என்று தெரியவில்லை. வெறும் நெற்றியுடன் கழுத்து வரை போர்த்தியபடி படுத்திருப்பதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. தயவுசெய்து அவளது சந்தோஷத்தைத் திருப்பித் தந்துவிடுங்கள் என்று யாரிடமாவது கெஞ்சி அழ வேண்டும்போல இருக்கிறது.

அப்பா கஞ்சியைக் குடித்துவிட்டு என்னிடம் மாத்திரைகளை வாங்கிக்கொண்டார். அம்மாவுக் குத் தூக்கம் வருவதே இல்லை. விழித்துக்கொண்டு தான் ராத்திரி நேரம்கூடப் படுத்திருக்கிறார். ஏதாவது சத்தம் கேட்டால் உடனே எழுந்து முன் அறையில் விளக்குகளைப் போட்டுவிடுகிறார். கை விளக்கை எடுத்துப் பூட்டிய கதவுகளைச் சரிபார்ப்பார். ”ஏன் இப்படி இரவு வேளைகளில் சத்தத்துக்குப் பயப்படுகிறாய்?” என அம்மாவிடம் கேட்டால், அவளும் பயந்தவளாகத்தான், ”அக்கா இருக்காள்ல… அதான்” என்று பதில் சொல் கிறாள்.

தேனுகா இப்படி எப்போதும் உறங்கியது இல்லை. ஏன் அமைதியாகக்கூட இருந்ததே இல்லை. பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது எப்போதும் வீட்டில் ஒரு கூட்டம் இருக்கும். கல்லூரிக்குப் போகும்போதும் அதேபோலத்தான் சதா நேரமும் பேசிக் கொண்டும் சிரித்துக்கொண்டும் பூந்தோட்டத்தில் மலர்ந்திருக்கும் ஒற்றை ரோஜாவின் முகத்தைப்போலத் திரிவாள். ”ஏன்டீ, உனக்கென்ன 16 அடியா முடி? சீவிக்கிட்டே இருக்கேன். நீபாட்டுக்குப் போய்க்கிட்டே இருக்கே? ஏன்டீ, உன்னோட ஃப்ரெண்ட்ஸோடு அமைதியாப் பேச மாட்டியா?” என்று அம்மா திட்டாத நாட்களே கிடையாது.

திருமணத்தின்போது மண்டப மேடையில் அவளைச் சுற்றி இருந்த கூட்டத்தில் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் யாரும் மேடைஏற முடியவில்லை.

அப்படிப்பட்ட அக்கா இப்போது தனியாக இருக்கிறாள். அவள் தனியாக இருக்கவே விரும்புகிறவள்போல, அருகே யாரேனும் வந்தால் உடனே விலகி வேறு இடம் சென்றுவிடுகிறாள். தனியாகப் படுத்துக்கொள்வதும் தனியாக அமர்ந்து தினசரி வார இதழ்களைப் படிப்பதுமாக இருக்கிறாள். எங்களுடன் சாப்பிடாமல் தனியாக அறையிலேயே சாப்பிடுகிறாள். தன்னுடன் யாரும் இருக்கக் கூடாது என்று முடிவு செய்துவிட்டாள்.

அக்காவுக்கு அம்மாவின் காதல் கடிதங்களைப் படிப்பதற்கு எனத் தந்தால், ஒருவேளை அவளது இப்போதைய குணம் மாறிவிடும் என்று கடிதங்களை எடுத்துத் தந்தேன். அவள் வெறுப்புற்றவள்போல வேண்டாம் என்று மறுத்துவிட்டாள். அவளது கண்ணில்படும் இடத்தில்வைத்துவிட்டுச் சென்றுவிட்டேன். இரவு நேரங்களில் நிச்சயமாகப் படிப்பாள் என்று நினைத்தேன்.

கடிதம் அந்த இடத்தில் அப்படியே இருந்தது. எங்கள் அப்பா ஆசை ஆசையாக எழுதிய காதல் வாக்கியங்கள் அவை. எழுதப்பட்ட காலத்தில் அந்தக் காகிதத்துக்கு இருந்த அர்த்தங்கள் இப்போதும் இருக்கின்றன.

தேனுகாவுக்குக் கடிதங்களைப் படிப்பதில் மனப்பூர்வமாக விருப்பம் இருக்கத்தான் செய்யும். எங்களின் முன்னால் படிப்பதில் வெட்கம் இருக்கக்கூடுமென, கடிதத்தை இப்போதுதான் கண்டெடுத்ததுபோலவும் புதிதாகப் படிப்பதுபோல பொய்யான நடிப்பில் படித்தேன். என் நடிப்பை அவள் பொய் என்று நினைத்துவிடக் கூடாது. அக்காவின் முன் நடிக்கிறாமே என்ற வேதனை உண்டானது. கடிதத்தைப் படிப்பதை நிறுத்தச் சொல்லி கையில வாங்கிக்கொண்டாள்.

அக்கா இனி எந்த சந்தர்ப்பத்திலாவது படித்துவிடுவாள். நிச்சயம் அவளது தனித்திருக்கும் குணம் மாறிவிடும் என்றுநினைத்தேன். எங்கள் வீட்டுக்கே உண்டான துரதிருஷ்டமோ, இல்லை அம்மாவின் துர்பாக்கியமோ எதுவென்று தெரியவில்லை. எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.

காதல் கடிதங்களைப் படிப்பதற்கு என்று ஓர் அதிர்ஷ்டம் வேண்டும். முதன்முறையாக அம்மாவின் காதல் கடிதங்களை எடுத்துப் படித்தபோது எனக்கும் யாராவது காதல் கடிதங்கள் எழுதக் கூடாதா என்று ஏக்கம்தான் வந்தது. இந்த எண்ணம் ஒரு நொடிதான். பிறகு மறைந்துவிடும். அப்பாவைப்போல நட்பாகப் பேசவும் வாழ்வைக்கற்பிக் கவும் கணவன் கிடைத்துவிட்டால் போதுமே. இந்த உலகில் வாழ்வதற்கு வேறென்ன வேண்டும்?

கல்லூரி விடுமுறை சமயத்தில் தற்செயலாகப் புடவைகளைத் தேடும் சமயத்தில் அம்மாவின் மர பீரோவில் இருந்த கடிதங்களை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். அம்மா எவ்வளவு அழகானவள் என்று திருமண போட்டோவிலும் எங்கள் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களிலும் பார்த்திருக்கிறேன். அதை எப்படிச் சொல்வது என்று தெரியாமல் எனது தோழிகளிடம் அம்மா அவ்வளவு அழகு என்று முடித்துக்கொள்கிற அறிவு மட்டும்தான் என்னிடம் இருந்தது. அப்பா அவ்வளவுஅழகையையும் எழுத்தாக்கி இருக் கிறார். அவரது காதல் கடிதங்களில் வரிக்கு வரி அம்மாசிரித்துக்கொண்டே இருக்கிறாள்.

அம்மாவும் அப்பாவும் திருமணம் செய்துகொண்டு மூன்று வருடங்கள் வேறுவேறு ஊர்களில் வேலை பார்த்திருக்கின்றனர். அம்மா பஞ்சாயத்து யூனியன் ஆபீஸில் தட்டச்சராகவும், அப்பா கூட்டுறவு வங்கியில் எழுத்தராகவும் 150 கிலோமீட்டர் தூர இடைவெளியில் வேலை செய்திருக்கின்றனர். மனு மேல் மனு போட்டு பிறகு இடமாற்றம் கிடைத்து ஒரே ஊரில் ஒரே வீட்டில் வாழத் தொடங்கினார்கள். அவர்கள் இருவரும் நிச்சயமாக மனு எழுதியிருக்க மாட்டார்கள். இப்படி அழகாக எழுதும் காதல் கடிதங்களுக்காகவே மூன்று வருடங்கள் இடைவெளியில் வசித்திருக்கிறார்கள்போல.

அம்மாவின் காதல் கடிதத்தில் ஏதாவது ஓர் இடத்தில் வெறுப்பை, எரிச்சலை, கோபத்தை அப்பா எழுதியிருக்கட்டுமே. அவ்வளவு அழகு என்று சொல்கிறேனே… அதைத் தூரத்தில் இருந்து ஒளிந்து பார்த்து எழுதுவதுபோலஎழுதி இருக்கிறார்.

கடிதங்கள் கைக்குக் கிடைத்த சமயம் அக்காவின் திருமணம் முடிந்துவிட்டது. அவள் இல்லாமல் வீடும் நாங்களும் கவலையாக இருந்தோம். அம்மாவின் கவலையை நீக்க, அந்தக் கடிதங்களைப் படித்துக்காட்டினேன். அப்பாவும் அம்மாவும் தங்களது கவலைகளை மறந்தவர்களானார்கள்.

எப்போதும்போல குழந்தைகளாகிப் பேசிக்கொள்வதும் சிரித்து விளையாடிக்கொள்வதுமாக மாறிவிட்டனர். கடிதத்தைக் கண்டுபிடித்ததற்கா எனக்கும், கடிதத்தை எழுதியதற்காக அப்பாவுக்கும் அம்மா முத்தம் தந்தாள்.

அம்மாவிடம் இருந்து அவ்வளவு எளிதில் முத்தம் வாங்கிக்கொள்ள முடியாது. தேனுவுக்கும் எனக்கும் முத்தம் வாங்குவதற்கு போட்டியே நடக்கும். போட்டியில் விதிமுறைகள் எவ்வளவோ உண்டு. முத்தத் துக்கும் வாழ்க்கைக்கும் அதிர்ஷ்டம் வேண்டும் என்பது உண்மைதான். காய்ச்சல், மாதாந்திர வயிற்றுவலி உபாதை, மண்டைவலி என்று படுத்துவிட்டால், அனுசரணைக்குக்கூட முத்தம் தர மாட்டாள். அவளது முத்தத்தைப் பெற பெரும் போராட்டமே நடத்த வேண்டும். ‘முத்தம் வேண்டும். முத்தம் வேண்டும். முத்தம் தரும் வரை போராடுவோம், போராடுவோம்…’ என்று சாப்பிடாமல் இருந்து இருக்கிறோம். அம்மா எதற்கும் தன்னுடைய விதிமுறைகளை மாற்றிக்கொண்டதே இல்லை.

தன் சந்தோஷத்தைச் சொல்வதற்குத்தான் முத்தம் தருகிறாள் என்று கண்டுபிடித்துவிட்டோம். ஆனால், முத்தம் பெற்றுக்கொள்வதில் எந்தத் தயக்கமும் வெட்க மும் கிடையாது அவளுக்கு. எங்கள் முன்பாக அப்பா முத்தம் இடும் முறையே தனி. ஓட்டப் பந்தயத்தில் கண் மூடித் திறப்பதற்குள் வீரர்கள் முந்திக்கொண்டு கடப்பதுபோல இருக்கும் அந்தக் காட்சி.

தேனுகா கடிதத்தைப் படித்துவிட்டாள். காய்ந்துபோன உதடுகளில் அவள் சிரிப்பு ஒட்டியிருந்ததில் தெரிந்துகொள்ள முடிந்தது. சமையலறைக்குச் சென்று அம்மாவிடம், ‘ஒரு டம்ளர் பால் வேண்டும்’ என்று கேட்டாள். கல்லூரிக்கு போகும்போது இருந்த அந்தக் குரல் வந்துவிட்டது.

‘இனி தேனுக்குட்டி தேறிவிடுவாள்’ என்றாள் அம்மா. அம்மாதான் அக்காவுக்கு முத்தம் தருவாள் என்று எதிர்பார்த்து நின்றேன். தேனுகா அம்மாவுக்கு முத்தம் தந்தாள். அம்மா ஒன்றும் பேசவில்லை.

தேனுகா எங்களுடன் இரவுச் சாப்பாட்டுக்கு வந்து அமர்ந்தபோது தலை சீவி முடித்திருந்தாள். நீல வர்ணப் பச்சையில் சேலை உடுத்தி இருந்தாள். இட்லியும் தேங்காய் சட்னியும் சாம்பாரும் சாப்பிட்டு முடிக்கும் வரை எங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

அப்பாவுக்கு நடுஇரவில் இதய வலி உண்டானது. அம்மாவுடன் நாங்கள் துரதிருஷ்டத்தைக் கையிலேயே பிடித்துக்கொண்டு மருத்துவமனைக்குப் போனோம். சற்று முன்புதான் இறந்திருக்கிறார் என்று டாக்டர் சொல்லிவிட்டார். தேனுகா அம்மாவின் கடிதத்தைக் கொஞ்ச நாட்களுக்கு முன்படித்து இருக்கக் கூடாதா. கொஞ்ச நாட்கள் அவளது சிரிப்பையும் அவளது பேச்சையும் அப்பா கேட்டுக்கொண்டு இருந்திருப்பாரே?

அம்மா துர்பாக்கியவதியாக வீட்டில் இருந்தாள். அப்பா இருந்த அறைக்குள் நுழையவே அவள் விரும்பவில்லை. எனது அறையில் எங்களுடன் படுத்துக்கொண்டாள். தேனுகா சமைக்கத் தொடங்கியதும் அம்மா யாருடனும் பேசாமல் அறைக்குள்ளேயே கிடந்தாள். தனக்கு வந்த கடிதங்களை அவள் தட்டச்சு செய்வதுபோல விரல்களை அசைத்து அசைத்து படித்துக்கொண்டு இருந்தாள். வேறு எதுவும் படிக்க மறுத்த£ள். தனியாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும் என யாருடனும் பேசவில்லை. உணவைக் கடிதம் படித்துக்கொண்டே சாப்பிடத் தொடங் கினாள். அவள் கூந்தலும் உதடுகளும் உலரத் தொடங்கின. அவளிடம் இருந்து இனி ஒரு போதும் முத்தங்களைப் பெறவே முடியாது என்று தெரிந்தது.

அதிர்ஷ்டமும் துரதிருஷ்டமும் சூழந்த வீட்டில் அம்மா எங்களுடன் இடைவெளியோடு இருந்தாள். திருமணம் செய்துகொண்ட புதிதில் 150 கி.மீ. தூர இடைவெளியில் அவள் அப்பாவைவிட்டுப் பிரிந்து இருந்தபோது எப்படிக் கடிதத்தை ஆவலோடு படிப்பாளோ அப்படித்தான் படித்தாள் தினமும். நாங்கள் எதுவும் அவ ளைச் சொல்லவில்லை. ஒவ்வொரு வேளையிலும் சாப்பிடுவதற்காகக் காத்திருந்தோம். அப்படி ஒருநாள் காத்து இருந்தபோதுதான் தேனுகா, ”என் திருமணத்துக்கு முன்பே அம்மாவின் காதல் கடிதங்களைப்படித்துவிட்டேன்” என்று என்னிடம் சொன்னாள்!

– மே 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *