புரியும் சரிதம்

 

போக்குவரத்து விதிகள் ஒழுங்கு செய்யப்படாத நகரின் பிரதான சாலையொன்றில் தேர்க்கால் ஏறிச்செத்த கன்றுக்கு நியாயம் கேட்டு கோட்டைகள்தோறும் பசுக்களால் மறிபட்டது. கழுத்துமணியின் கிங்கிணியை மீறி ஹோவென எழும்பியது ஆராய்ச்சி மணியொலி. பஞ்சபூதங்களின் பாகமெங்கும் கலந்து நிரவிய மணியோசை குறும்பியால் காதடையுண்டிருந்த மன்னர்களுக்கு மரணத்தின் பேரழைப்பாய் கேட்க, நீதிவழுவா நேர்மையாளன் எனும் கீர்த்திக்கு இரையாகி தேரேற்றிக் கொன்றனர் மகன்களை. இளவரசர் சாவுகளில் திருப்திகொண்ட பசுவும் கன்றுமாகிய பெருங்கூட்டம் மன்னர்களை எதிர்த்தடக்கிய மகுடம் தரித்து வேலியையும் சேர்த்தே மேய்ந்து வயிறு வளர்த்தது. மடிநோக்கி திறந்த மக்களின் வாயில் பாலுக்கு பதிலாய் கோமியம் பெய்தன.

வாரிசில்லாத ராஜாங்கங்கள் மூளிகளாகி இவ்வண்ணம் சிதைந்ததாய் கடைசி உளியேந்தியவன் கற்களில் செதுக்கிப்போனான்.

வேட்டைக்குப் போனான் வேறொரு மன்னன். கொழுகொம்பற்ற முல்லைக்கு தேரீந்துவிட்டு நாடு திரும்பும் வழியறியாது கானகத்துள்ளேயே கனிகளையுண்டு சுனைகளை குடித்து ஓர் நாள் மிருகங்களின் வயிற்றிருந்து லத்தியாகவும் புழுக்கையாகவும் விழுந்து திசையெங்கும் நாறினான். தேரிலிருந்து தரித்து விடப்பட்ட குதிரைகள் லாயமிருக்கும் திக்கை வெறுத்து காட்டின் வேறு ஜீவராசிகளை புணர்ந்து புது உருவில் ஜீவிதம் நீட்டின. (மனித, தாவர, மிருக ஜாதிகள் குறித்த ஞான சூனிய ராஜ திலகங்களே மன்னர்களாயிருந்தமைக்கு இன்னொரு சான்றுமுண்டு. அவன் குடிமக்களின் கோவணத்தை உருவி அங்கவஸ்திரமாய் வள்ளவட்டம் போட்டவன். அதை, பின்னாளில் ஆடும் மயிலுக்கு குளிர்போக்க போர்வை போர்த்திய குறையறிவுப் பெட்டகம்)

அந்தப்புரங்களில் அளவிறந்த சேடிகளும் ராணிகளும் கௌரதை நிமித்தமாய் பெருகி மொய்த்திருக்க, வாயிற்காப்போன்களின் இரவுகள் உப்பரிகைகளின் சப்ரமஞ்சங்களில் கழிந்தன. மாறுவேடத்தில் நகர்வலம் சென்ற ராஜாக்கள் எங்கோ கூடிக் கலவி கோட்டை திரும்பி நிலவறையின் துர்வாடையில் க்ஷணித்துக் கிடந்தார்கள். ரகசிய நோய்கண்டு இறந்தான் மன்னனென சொல்ல ராஜவைத்தியர் யாருக்கும் நாவெழவில்லை. அரச, சேவக வம்சாவளிகள் இடம்மாறி பிறந்து வழிமாறி வாழ்ந்தனர்.

சேனைகளோடு எண்திசையும் ஏகிய பேரரசர்களும், சக்ரவர்த்திகளும் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாத தூரம் வந்துவிட்டிருந்தனர். தீரா உளைச்சலிலும் ஆத்திரத்திலும் வெற்றியே அவமானத்தின் சின்னமாகிவிட மனைவிமக்களை காணவொட்டாத ஆற்றாமை மீதுற எல்லாத்தேச மாந்தர்களையும் வாள்புசிக்க கொன்று தீர்த்தார்கள். ஜெயபரணி யாத்திசைத்த பஞ்சைப் புலவர்களுக்கு போர்க்களத்து பிணங்களை பரிசாக ஈந்தனர். உணர்ச்சிவயப்பட்ட புலவர் பெருமக்கள் ‘‘பிணமீந்த பெருவள்ளல்கள்’’ என்று மற்றும் சில காவியம் யாத்து ஆற்றுப்படைகளை அதிகமாக்கினர். யாருமற்ற நடுநிசியில் புகழ்ப்பாட்டின் கொடூரம் தாங்காது காதுகளில் கத்தி பாய்த்து கிழித்துக்கொண்டு பைத்தியமான மன்னர்கள், ரத்தம் ஊறிய சேறை அள்ளியுண்டு அஜீரணத்தில் செத்தார்கள். ‘‘யுத்தத்தை வெறுத்த உத்தம அரசன்’’ என்று புகழ்ந்துபாட நான்கைந்து புலவர்களோடு பேரம் முடிந்தபிறகே உயிர்விட்டதாக கல்வெட்டொன்று கூறுவது கவனத்திற்குரியது.

வடக்கேயொரு தேசத்தில், கவச உடைகளோடு எதிர்வந்த மகனை போருக்குப் போகிறானென ஆசிர்வதிக்க வந்த தகப்பனை, வாள்முனையில் சிறைபிடித்து அரியணையை கைப்பற்றினான் இளவரசன். இருவரின் விசுவாசிகளுக்கும் எப்போதும் ஓயாச்சண்டை- எல்லோரும் யாருக்கு அடிமையாய் இருப்பதென்று. கடைசியில் ஜென்மாந்திர பகைமூண்டு செத்தார்கள் குடிமக்கள் ஒற்றுமையாய்.

இப்படியாக, மனிதரற்ற வெறுமையில் தகித்துக்கிடந்தன நாடும் நகரங்களும். காகங்கள், கழுகுகள், பிணத்திலிருந்து நெண்டும் புழுக்கள் மாத்திரமே உயிரோடிருந்தன.

ராஜ்யங்களை வெறுத்தொதுக்கி எப்போதோ காட்டுக்குள் ஓடியிருந்த முனிவனொருவன் கடுந்தவசியாய் காலம் தள்ளினான். இலையாடை, மரவுரி தரிப்பதும் கூட இன்னொரு உயிருக்கு துன்பமிழைக்கும் பாபமென நிர்வாணியாய் திரிந்தானா எனக்கூறும் ஆவணம் ஏதும் இதுகாறும் கிட்டாதது வரலாற்றின் அதிர்ஷ்டவசமான துரதிருஷ்டம். ஆசைகளின்றி வாழவேண்டுமென்ற தன் ஆசையை பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் வனாந்திரத்து ஜீவராசிகளுக்கும் போதித்தபடியே இருந்தான். உறக்கத்திலும் இதுவே அவனது உச்சாடனமாயிருந்தது.

குட்டிப்பாம்புகள் போல் நீண்டிருந்த ஜடாமுடியில் கொசகொசத்துக்கிடக்கும் பேனையும் ஈரையும் நசுக்கித் தொலைக்க முடியாதபடிக்கு ஜீவகாருண்யம் அவனை சித்ரவதை செய்தது. பேன்களுக்கும் குஞ்சுகளுக்கும் அவனது போதனா மொழி புரியவேயில்லை. ஓயாது கடித்தபடியே இருந்தன. தபஸை கலைக்கும் சைத்தானின் பிள்ளைகள் போல் இம்சித்தன அவனை. கூர் நீண்ட கற்கத்தியால் தலையையும் முகத்தையும் மழித்துக்கொள்ள, வழுக்குப்பாறையென்றோ சிலையென்றோ எண்ணிய பட்சியொன்று எச்சமிட்டுச் சென்றது தலையில். அசிங்கம் கழுவ ஆற்றுக்குப் போனான். தெளிந்த ஆடியாய் தேங்கிய நீரில் முகம்பார்த்து முனிதவம் மறந்தான். நெடுநேரம் நீராடியில் பார்த்து பார்த்து நேர்த்தியாய் திருத்திக்கொண்டான். புதிய அலங்காரங்களைப் பற்றிய அலைக்கழிப்பில் மனம் நகரத்து அங்காடிகளுக்கு ஓடியது.

குகை திரும்பியவனுக்கு இருள் பயமூட்டியது புதிதாய். தவவலிவால் விளக்குகள் செய்தான். காற்றின் மூர்க்கத்தில் விளக்கணையாதிருக்க கதவு பொருத்தினான். கதவு பொருத்தியதும் கள்ளமும் முளைத்தது. பூட்டுகள் செய்தான். அவனே உடைத்தான். போலீஸ் வந்தது.

லௌகிக ஆசையில் லயிக்கத் துவங்கியதும் தவவலிமை போய்க்கொண்டிருப்பதை உணர்ந்தான். பறக்கும் கம்பளமேறி பலபாகம் சுற்றினான். மிச்சமிருந்த தவயோகத்தால் குரங்கொன்றை பெண் துணையாக்கிப் பெற்றான். பிறந்த குழந்தைகளுக்கு இரண்டாம் அமீபா, மூன்றாம் அமீபா என்று எண்வரிசை தப்பாமல் பெயரிட்டான். முதலாம் அமீபா யாரென்ற குழந்தையின் கேள்விக்கு பதில் தெரியாத அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டான் தவயோகி. (பின்னால் வந்த சரித்திவியலார், இவன் பெயர் இன்னதாகத் தானிருக்கும் என்று எண்ணாயிரம் பெயர் கூற, கடைசியாய் அரசாங்க கெஜட்டில் எண்ணாயிரம் பேருடைய சன்னாசி என்று வெளியிடப்பட்டது.) வனாந்திரத்து மரங்கள் இப்போது ஜன்னல் சட்டங்களாகவும், கதவு நிலவுக் கால்களாகவும், உத்திரங்களாகவுமே முளைத்தன. பாறைகள் தாமே சிதைந்து கலவை ஜல்லிகளாக சிறுத்தன. கானகமே கருகி வீட்டின் முற்றம், தாழ்வாரங்களில் தொட்டிச் செடிகளாய் முளைத்தன. உமிழ்நீர் சிறுநீர் ஈரத்தில் வளர்ந்தன செடிகொடிகள். காய்கனிவகைகள் மீது எடையும் விலையும் அரும்பும்போதே அச்சாகி வந்தது.

அழிவுண்ட நகரங்களின் சுதைகளிலிருந்து சுரந்தன புதிய நகரங்கள் காடுகளில். தம்மையும் மண்ணையும் தோண்டி தோண்டி எல்லாம் படைத்தனர் புதிய வம்சத்தார். வானத்து நட்சத்திரங்களை கொய்து, நான்மாட வீதி முக்குகளில் விளக்காய் தொங்கவிட்டனர் தங்கக்கொடிகளில். வீதியும் வீடுகளும் வெள்ளமெனப் பொழியும் நட்சத்திர ஒளியில் மூழ்கிப்போக கூச்சமெடுத்த விழிகளை இருள் கொண்டு மூடிக்கிடந்தனர் மாந்தர்.

சொந்தநாட்டில் சோறற்றவர்களும், சட்டத்தால் குற்றப் பரம்பரையென குறித்துக் கொள்ளப்பட்டவர்களும், நாடு கடத்தப்பட்டவர்களும் தொலைநோக்கி வழியாக தூரதேசங்களை கண்டறிய அலைந்தார்கள். காற்றின் திசையில் கலங்கள் மிதந்தபடியே இருந்தன. அமைதியை குலைத்தவர்களை கடல் திருப்பியடித்தது அலைக்கரங்களால். கலங்கள் மூழ்கி திமிங்கல வயிற்றில் தீராப்பயணம் செய்தபடியிருக்க, எஞ்சிய கப்பல்கள் நடுக்கடலில் கொள்ளையடிக்கப்பட்டன. கரையொதுங்கியவர்கள் ஆங்காங்கே ஆதிகளோடு கலந்து புதிய முகலட்சணங்கள் புனைந்து மனிதர் போலானார்கள்.

பின்னும் கடற்பரப்பு கிழிந்துகொண்டேயிருந்தது. அலைகள் விடவும் கலங்களே அதிகமாகிப் போனது கடலில். உலகையே தன் சுருக்குப் பையிலிட்டு பூட்டிக்கொண்டு சாவிக்கொத்தை விரல்நுனியில் சுழற்றும் லாவகத்தோடு வான பூகோள சாஸ்திரம் பயின்றவன் போல் செருக்கோடு வந்த வாஸ்கோடகாமாவின் காலையும் கப்பலையும் நன்னம்பிக்கை முனைக்கு முன்பாகவே உடைக்க கிளம்பியவர்கள் அவன் நீட்டிய அகண்ட மதுக் கோப்பையில் வீழ்ந்து மூழ்கி சொந்தக் கடலின் உப்பை மறந்தார்கள். பின்னொரு நாளில் உப்புக்காக போர் நடத்தி உப்பளத்திலேயே உயிர் கரைந்து வீழ்ந்தார்கள். ரத்தம் மணக்கும் உப்பும் இன்னபிறவும் துறைமுகங்கள் வழியாக எங்கோ போய்க்கொண்டேயிருக்கிறது இன்றளவும்.

வாஸ்கோடகாமா இப்போது ஜேம்ஸ்பாண்டாக மாறிவிட்டான். அவன் தன்னை தொடர்ந்து ஒரு பெயரால் அடையாளம் காட்டிக் கொண்டானில்லை. இங்கத்திய வீரர்கள் உடைவாள் சொருகிக்கொள்ளும் இடத்திலிருந்து அவன் எடுத்து நீட்டியது வேறொன்றாயிருந்தது. தளவாடங்களை கழற்றி வைத்து சரணென்று மண்டியிட்டோர் மேல் ஏறிநின்று மறித்தோரை சுட்டான். வேட்டோசை கேட்ட மாத்திரத்தில் வாளும் வேலும் வலிமை குன்றி வெற்று உலோகப் பண்டங்களாயின. மிஞ்சியிருந்தோரை மேய்க்கவும் மாய்க்கவும் எல்லாத் திசைகளிலும் தனது ஏவல் பூதங்களை உலவவிட்டான். வேறுவேறு ஒப்பனைகளில் விதவித ரூபம் காட்டி ஓர்நாள் சர்க்கஸ் கூடாரம் போல் யாவையும் உள்ளடக்கும் வெள்ளைகவுன் தரித்து வந்தான். மகாராணி என்று மண்டியிட்டனர் முழங்காலற்ற கொஞ்சம்பேர். வரிபோடவும் வாட்டியெடுக்கவும் தன்னிடத்தில் வேற்றாளா என்று வெகுண்டெழுந்த மன்னர்கள் கனம் மிகுந்த கத்திகளை தூக்க முயன்று தோள்பட்டை நோக, மகாராணியிடம் மானியம் பெற்று வலி நிவாரணத் தைலம் வாங்கி பூசிக்கொள்வதிலேயே பொழுதைக் கழித்தார்கள்.

அப்புறம் ராணியும் இங்கிருக்கும் ராஜாக்களும் அவர்தம் விசுவாசிகளும் சேர்ந்து பெற்ற குழந்தைகள் வந்தனர். குழந்தைகள் கோட்பூட் குழந்தைகள், கோவணம் கட்டும் குழந்தைகள், குண்டி மறைக்காத குழந்தைகள் என வளர்ந்து தனிக்குடித்தனம் கேட்டனர். வட்ட சதுர முக்கோண உருளை மேஜை மாநாடுகள் போட்டு பேசிப்பேசி பிஸ்கட் தின்று டீ குடித்தார்கள். பேச்சு வார்த்தையில் குறுக்கிட்டு உருப்படியாயும் யோக்கியமாயும் பேசுமாறு கருத்து சொன்னவர்களின் கழுத்தை சுருக்குக்கயிற்றில் சுற்றி வளைத்தனர். தன் கைப்பாங்கில் வளர்ந்த குழந்தை தன்னைப் போலவே எல்லா வகையிலும் இருக்குமென்ற நம்பிக்கை வந்ததும் ராணி தன்தேசம் போய்ச் சேர்ந்தாள்.

குழந்தைகள் இப்போது குழந்தைகள் பெற்றனர். தாய்வீடு போய்ச் சேர்ந்த ராணியிடமும் தாயாதிகளிடமும் ஆலோசனை பெற்றே குழந்தை வளர்க்கும் வழிமுறையறிந்தனர். அவள் தொட்டு ஆசிர்வதித்துக் கொடுத்திருந்த மெகாலே சொட்டுமருந்தை உள்ளெண்ணை போல விட்டு வளர்த்தார்கள். எல்லோருக்கும் பாலூட்டினால் எழில் போய்விடுமென பாற்கடலாய் சுரக்கும் மார்பகத்தை கவசமிட்டுப் பூட்டி காவலும் வைத்தனர். இரவுவேளையில் கள்ளத்தனமாய் சிலருக்கு மட்டும் மார்க்காம்பை சுவைக்கும் வழிவகைகான சட்டதிட்டங்கள் நீதி நிர்வாகம் வந்தது. தாய்ப்பால் கனவில் சவலைகள் பெருத்துப் போயினர்.

என்றேனுமொரு நாள் தாய்ப்பால் கிட்டுமென நாச்சப்பி சவலைகள் தங்களைத் தாங்களே தின்று வாழ்கின்றனர். வயிறுமுட்ட பால் குடித்தவர்கள் செரிமானத்திற்காக பாட்டியும் அவளது அக்கா தங்கை அண்ணன் தம்பிகளும் அனுப்பிவைக்கும் கோக்கும் பெப்ஸியும் குடித்து ஏப்பம் விடுகின்றனர். காலி பாட்டில்களில் தாயின் ஸ்தனங்களை இறுக்கிப் பிழிந்து பாலெடுத்து பார்சலாக்கி ஆகாய கடல் மார்க்கங்களில் அனுப்பிக் கொண்டேயிருக்கின்றனர். ஆகாயத்திற்கும் அகண்ட கடலுக்கும் குறிவைக்க கண்களில் தூரெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் சவலைகள் இப்போது. 

தொடர்புடைய சிறுகதைகள்
அடர்ந்திறங்கும் பனியில் யாவும் உறைந்து கிடக்கின்றன உருவழிந்து. விரைத்து மொன்னையாய் நிற்கும் கம்பங்களின் உச்சியிலிருந்து கிளம்பும் விளக்கொளி பனியில் நமுத்து பாதியிலேயே விழுகிறது நிழல்போல கறுத்து. ஆங்காரமாய் வீசும் காற்றில் குளிரின் கடுமை கூடி விஷமெனக் கடுக்கிறது. கதகதக்கும் குளிராடைகளுக்குள் தூந்திரபிரதேசவாசிகளைப் போல் ...
மேலும் கதையை படிக்க...
1.கடவுள் வாழ்த்து நற்சிந்தனை நன்மொழியையும், அத்தகு நன்மொழி நல்லெழுத்தையும், அந்த நல்லெழுத்து நல்ல வாசகர்களையும் பெற்றுத்தருமாதலால் யார் மனதையும் தொந்தரவு செய்யாமல் இந்தக் கதையையாவது எழுதுவதற்கான வல்லமையை அல்லது கருணையை எனக்கு கடவுள் வழங்குவாராக. அப்படி வழங்குவதற்கு சத்தும் சாமர்த்தியமும் இல்லாதிருக்கும் பட்சத்தில் ...
மேலும் கதையை படிக்க...
மசங்கல் இளகின விடிபொழுது. கொய்யக் காத்திருக்கும் சாமந்திக்காடாய் மீன் சிரிச்சுக் கிடக்கு காசம் முழுக்க. தோள் நழுவிய துணியாட்டம் கள்ளமா தரையிறங்குது பனித்தாரை. வரப்படியில் அண்டின பூச்சிப்பொட்டுக குளுர்தாங்காம சில்லாய்க்கிறதில் காதடையுது. காவாயில் ஜதிபோட்டு ஓடியாரும் தண்ணி வெதுவெதுன்னு பாயுது. வெடிப்புல மண்டியிருந்த ...
மேலும் கதையை படிக்க...
அன்பில் ஊறும் மகாவுக்கு, ரொம்பவும் சிரமப்பட்டு வந்து சேர்ந்தேன். டிக்கெட் ரிசர்வ் பண்ணிட்டு கிளம்புங்கன்னு நீ சொன்னது வழி முழுக்க ஞாபகத்தில். காலம் கடந்து நினைத்தால் எது நடக்கும். பங்குனி உத்திர கூட்டம் வேறு. ஈரோடு வரைக்கும் ஸ்டாண்டிங். நெரிசல்ல சிக்கி முழி ...
மேலும் கதையை படிக்க...
எங்கப் போனா இந்தத் திருட்டு முண்ட... செரியான ஓடுகாலியா கீறாளே... கால்ல சக்கரம் கிக்கரம் கட்டினிருப்பாளா... த்தூ... என்னா மனுசி இவ... கம்பம் கண்ட எடத்துல காலத்தூக்கினு ஊரலையற நாயாட்டம்... நாலுவாட்டி ஆள் மேல ஆளா சொல்லியனுப்பிச்சும் இந்நேரங்காட்டியும் வரலேன்னா என்னாங்கறது... தம் ...
மேலும் கதையை படிக்க...
ஓடு மீன் ஓட….
லிபரல்பாளையத்தில் தேர்தல்
வஞ்சம்
விரகமல்ல தனிமை
நமப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)