நாட்டியத்தில் ஒரு நாடகம்

 

கடிவாளத்தை இறுக்கி பிடித்து நிறுத்தியதில் ஏற்பட்ட வேதனையால் நின்ற குதிரை வலியால் கணைத்து நின்றது. குதிரை மேலிருந்த மன்னன் “தளபதியாரே” இந்த இரவில் அங்கு என்ன கூட்டம்? அதுவும் இவ்வளவு பிரகாசமாய் தீபங்களை ஏற்றி வைத்துக்கொண்டு அங்கு என்ன செய்கிறார்கள்?

பின்னால் திரும்பிய தளபதி ஒரு ஆளை சமிக்ஞை செய்து அழைத்து “நீ போய் அங்கு என்ன நடக்கிறது என்று கேட்டு விட்டு வா” சரி என்று தலையாட்டிய அவ்வீரன் சிறிது வேகமாக குதிரையை முடுக்கினான்.

சிறிது நேரத்தில் குதிரையின் மூச்சு வாங்க வந்த வீரன் தளபதியாரிடம் சற்று நேரத்தில் மோகினி ஆட்டம் என்ற நாட்டியம் நடை பெற போகிறதாம், நாட்டியக்காரி யாரோ ஒருத்தி வந்திருக்காளாம், அவளின் நாட்டியத்தை அந்த ஊர் பெரிய தனக்கார்ர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதனை காணத்தான் அவ்வளவு பேரும் கூடியிருக்கிறார்கள்.

நல்லது தளபதி, சொல்லம் வீரன் தலை குனிந்து விடை பெற்றான்.தளபதி மன்ன்னிடம்,மன்னா அங்கு ஏதோ ஆட்டம் நடை பெற போகிறதாம், அதற்காக குழுமியிருக்கிறார்கள். நாம் என்ன செய்யலாம்? அவர்களை கலைந்து போக சொல்லலாமா?

வேண்டாம் மந்திரியாரே, மக்கள் அவர்கள் மன மகிழ்ச்சிக்கு ஏதேனும் ஒன்றை ஏற்பாடு செய்யும் போது நாம் அவர்களுக்கு தடை போடுவது அவ்வளவு நல்லதல்ல. ஒன்று செய்வோம் நாம் இங்கு சற்று இளைப்பாறுவோம். அப்படியே அனைவரும் அவர்கள் கவனத்தை சிதறாமல் அமைதியாக அவர்களின் ஆட்டத்தை பார்ப்போம்.

தளபதி வீர்ர்களிடம் சென்று ஏதோ சொல்ல அவர்களும் மெல்ல குதிரையை ஓரமாக கொண்டு சென்று இறங்கி அங்குள்ள மரங்களில் கட்டி வைத்து விட்டு சற்று தொலைவு சென்று ஓரமாக அமர்ந்து கொண்டனர்.

மன்ன்னும் தளபதியும், குதிரையை விட்டு இறங்கி மெல்ல அந்த கூட்ட்த்தை நோக்கி நடை போட்டு சற்று தள்ளி அங்குள்ள பாறைகளில் உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.

திடீரென்று கூட்டம் ஆர்ப்பரிக்க நாட்டியமாடப்போகும் பெண் மேடை ஏறினாள்.அவளை பார்த்துத்தான் அந்த ஆரவாரம். அவளும் அவர்களை நோக்கி கைகளை அசைக்க அவர்களுக்கு மேலும் உற்சாகம் தாங்காமல் கைகளை அசைத்து கை தட்டி ஆர்ப்பரித்தனர்.

மன்ன்னும் புன்னகையை சிந்தி அந்த பெண்ணின் நாட்டியத்தை இரசிக்க ஆரம்பித்தார்.தளப்தியாரோ மன்ன்னின் அருகில் உட்கார்ந்திருந்தாலும் அவர் எண்ணம் வீட்டை சுற்றியே இருந்தது. இந்நேரம் தன் மனைவி தனக்காக காத்திருப்பாள். இங்கு மட்டும் மன்ன்ன் நிற்காமல் இருந்திருந்தால் இந்நேரம் நமது நாட்டின் எல்லைக்கு அருகில் போயிருக்கலாம். தனது பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டார் இரவு விருந்துக்கு வருவதாக சொல்லி இருக்கிறார்கள். காலையிலேயே வீட்டை விட்டு கிளம்பும்போது மனைவி இன்றாவது மன்னரிடம் சொல்லிவிட்டு நேரமாக வீடு திரும்புங்கள். அவர்கள் வந்த பின்னால் நீங்கள் வீட்டில் இல்லாமல் இருந்தாள் அவர்கள் நம் குடும்பத்தை பற்றி என்ன நினைப்பார்கள்?

சரி என்று தான் தலையாட்டி வந்திருந்தார். ஆனால் மன்னர் மதியம் மேல் அருகில் உள்ள ஒரு ஊருக்கு விவசாயிகளின் குறைகளை கேட்க போகலாம் என்று சொல்லி கிளம்பி விட்டார். இவருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. சரி பத்து காத தூரம் உள்ள இடம்தானே விரைவில் வந்து விடலாம் என்று மன்னருடன் கிளம்பி விட்டார்.

ஆனால் அந்த ஊரில் உள்ள ஒவ்வொருவரின் சிரமங்களையும் மன்னர் காது கொடுத்து கேட்டு அவைகளுக்கு தீர்வை கண்டு முடிக்கும்போது பொழுது சாய்ந்து விட்டது.அதற்கு மேல் கிளம்பி வந்து கொண்டிருக்கும்பொழுதுதான் இந்த நிகழ்ச்சி இவர்கள் பயணத்தை தடை செய்து விட்டது.

“ஆஹா அற்புதம்” மன்னரின் வாயிலிருந்து வந்த சத்தத்தை கேட்டு அவரின் நினைவுகளில் இருந்து மீண்ட தளபதியார், எதை கண்டு மன்னர் மன்னர் இவ்வாறு சொல்கிறார் என்று அந்த கூட்ட்த்தை பார்க்க, கூட்ட்த்தின் நடுவில் அந்த பெண் சுழன்று சுழந்று ஆடிய ஆட்ட்த்தை பார்த்துவிட்டுத்தான் அவ்வாறு பாராட்டியிருக்கிறார் என்பதை புரிந்து கொண்டவுடன் மெல்ல சிரித்து மன்னா தங்கள் பாராட்டுக்குரியவள்தான் இந்த நாட்டியக்காரி. அவளின் ஆட்டம் எவ்வளவு அழகாக இருக்கிறது பாருங்கள், சொல்லி புன்னகை பூத்தார் தளபதி.

ஒரு நாழிகை கழிந்தும் மன்னர் எழாமல் இருப்பதை கண்டு மெல்ல கணைத்த தளப்தியார் “மன்னா நேரமாகிறது, இராணி அம்மையார் காத்திருப்பார்கள் என்று நினைவு படுத்தியதும் சட்டென நினவு வந்தவர்போல் சற்று நேரம் பார்ப்போமே என்று சொன்னவர் என்ன நினைத்தாரோ சரி கிளம்புவோம் மெல்ல எழுந்து குதிரையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

தளபதியார் தன்னுடைய வீர்ர்களுக்கு மெல்ல சீட்டி ஒலியுடன் சமிக்ஞை தர விறு விறுவென அனைவரும் தயாராகி வந்து நின்றனர். இப்பொழுது மன்னர் ஏதோ சிந்தனையுடன் குதிரையில் உட்கார்ந்து கொண்டு வந்தார். மன்னரின் மனநிலை அந்த நாட்டியத்தில் இருக்கிறது என்பதை புரிந்து கொண்ட தளப்தியார் எதுவும் பேசாமல்

அவர் அருகிலேயே குதிரையில் வந்தார். அவருக்கு சற்று பின்னால் வந்த வீர்ர்களும் அமைதியாக பின் தொடர்ந்தனர்.

வீட்டிற்கு வந்த பின் மனைவியின் முணு முணுப்பை பற்றி கவலைப்படாமல் அந்த நேரத்திலும் மாப்பிள்ளை வீட்டுக்கு சென்று தாமதமாய் வந்த காரணத்தை தெரிவித்தார். அவர்கள் பெருந்தன்மையுடன் “தளபதியாரே” இதற்காகவா இவ்வளவு தொலைவு வந்தீர், ஒரு நாட்டின் தளபதிக்கு எந்த அளவுக்கு பணிச்சுமை இருக்கும் என்பது தெரியும், நீங்கள் கவலைப்படாமல் செல்லுங்கள் என்று அவரை அந்த ஊர் எல்லை வரை வந்து வழி அனுப்பி வைத்தார்கள்.

இரவு பனிரெண்டு நாழிகை ஆகியிருக்கலாம். நல்ல நிலவு காய்ந்து கொண்டிருந்தது. குடியிருப்பு பகுதி தாண்டி சற்று காட்டு பகுதிக்குள் குதிரையை செலுத்தினார். சொந்த வேலைக்கு எப்பொழுதும் வீர்ர்களை வைத்துக்கொள்வதில்லை. அரசாங்க விசயமாக செல்லும்போது மட்டும் வீர்ர்களை அழைத்துக்கொள்வார். அதனால் அந்த இரவில் நாட்டின் தளப்தியாகி தான் தனியாக குதிரையில் சென்று கொண்டிருப்பதை நினைத்து அவரே சிரித்துக்கொண்டார்.மெல்லிய சிரிப்பொலி அவர் காதுகளில் விழுந்தது. அவரது அனுபவப்பட்ட செவி கூர்மையானது.

சட்டென குதிரையை நிறுத்தி அதன் ந்டையை மெளனமாக்கினார்.குதிரையும் அவரின் இயல்பை புரிந்து விட்ட்து போல் சிறிது சத்தம் கூட வராமல் தனது நடையை நளினமாக்கி அவரை கூட்டி சென்றது. சத்தம் எங்கிருந்து வந்திருக்கும் என்ற அனுமானத்தில் ஒரு இட்த்தில் நின்று சத்தம் வந்த இட்த்தை கூர்ந்து பார்த்தார்.சற்று தொலைவில் அந்த பால் நிலவு காய்ந்து கொண்டிருந்த வேளையில் ஒரு ஆணும் பெண்ணும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தவுடன் மெல்ல குதிரையை விட்டு இறங்கி அவர்களுக்கு தெரியாமல் தன்னுடைய நடையை மெதுவாக்கி அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று அறிய ஒரு புதரில் பதுங்கினார்.

இன்று உண்மையிலேயே உன் ஆட்டம் அற்புதமாக இருந்தது. உன் ஆட்டத்துக்கு நான் மட்டும் மயங்கவில்லை மன்னரே மயங்கி விட்டார்.

அவள் சற்று முகத்தை சுழித்து எதற்காக மன்னர் வரும் பாதையின் அருகில் இந்த நாட்டியத்தை நடத்த சொன்னீர்கள்?

அவன் சற்று மெளனமானான் இதெல்லாம் இரகசியமான விசயங்கள், உனக்கு இதற்கு மேல் சொல்ல முடியாது.

ஏதோ போங்கள், என்று அவள் முகத்தை திருப்பிக்கொள்ள அவன் அவளை சமாதானப்படுத்த பெண்ணே கேள், இது ஒன்றும் பெரிய ரகசியமல்ல, இராஜ துரோக செயலுமல்ல. நீ பயப்படாதே. நாளை இரவுக்குள் இதற்கு ஒரு முடிவு கிட்டும் என நினைக்கிறேன்.

அதற்கு மேல் அவர்கள் பேசிக்கொள்ளும் காதல் வார்த்தைகளை தளபதியார் வயது கருதி விலகி சென்று விட்டார். குதிரையில் ஏறியவர் நாளை இரவு இதற்கு ஒரு முடிவு என்று ஏன் சொன்னான்? அவர் மனது சிந்தனையில் இருந்ததால் அவரது இல்லத்துக்கே குதிரை கூட்டி வந்தது கூட அவர் அறியவில்லை. சட்டென சிந்தனை கலைந்து பார்த்தவர் இல்லம் வந்த்தை கண்டு குதிரையை தட்டிக்கொடுத்தார். வாயிலை காத்து நின்ற வீரன், குதிரையை அழைத்துக்கொண்டு கொட்டடி சென்றான்.

மறு நாள் வழக்கம்போல அரசு அலுவல்கள் நடை பெற்றாலும் அவரது சிந்தனை இன்றைய இரவை பற்றிய சிந்தனையே இருந்தது. மாலை பொழுது சாய்வதற்கு முன்னரே மன்னர் தளப்தியை அழைத்து இல்லம் செல்ல அனுமதி கொடுத்து விட்டார். தளபதி ஆச்சர்யத்துடன் விடை பெற்றார்.

அன்று இரவு ஆட்டம் நடை பெற்ற இடத்தில் அதே போல் கூட்டம் இன்றும் கூடியிருந்தது.இன்றைய கூட்டத்தில் நிறைய புதிய ஆட்களும் வந்திருந்தனர்.அதை விட பெண்களும் நிறைய பேர் வந்திருந்தனர். அந்த பெண் வந்து அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு ஆட ஆரம்பித்தவுடன், கூட்டம் தன்னை மறந்து ‘ஆஹா” என்று வாய் பிளந்து இரசித்தது.

ஆட்டம் முடிவதற்கு இரவு நெடு நேரமாகி விட்டது. கூட்டம் கலைந்து அனைவரும் வெளியேறும்போது நேற்று இரவு அந்த பெண்ணுடன் பேசி கொண்டிருந்த இளைஞன் திடீரென அந்த கூட்டத்திற்கு முன் வந்து, ஒரு நிமிடம் கலைந்து செல்லாதீர்கள். இந்த ஆட்டத்தை பற்றி அபிப்ராயத்தை ஒருவரிடம் கேட்கப்போகிறேன். நீங்கள் அவர் என்ன சொல்கிறார் என்பதை கேட்க வேண்டும். என்று சொல்லி விட்டு அந்த ஆட்டத்தை இரசித்து பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு பெரிய மனிதரை அழைத்தான். அவர் திடுக்கிட்டு என்னையா? என்பது போல பார்க்க, ஆம் ஐயா தங்களைத்தான், நீங்கள் எங்கள் முன்னால் வந்து இந்த ஆட்டத்தை பற்றி நாலு வார்த்தை சொல்ல வேண்டும் என்று கேட்டு கொண்டான்.அவர் கொஞ்சம் சங்கடத்துடன் எழுந்து அந்த கூட்டத்தின் முன்னால் வந்து “உண்மையிலேயே இந்த நாட்டியம்” மிகவும் அற்புதம்’ நான் மிகவும் இரசித்தேன். நீங்களும் இரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். சொல்லி முடித்தவுடன் சுற்றியிருந்த கூட்டம் ஆம், ஆம் அற்புதம், என்று சொல்லி கரகோசம் எழுப்பின.

உடனே அந்த இளைஞன் முன் வந்து ஐயா உங்கள் வாயால் இந்த பெண்ணை பாராட்டி விட்டீர்கள், ஆனால் உங்கள் உண்மையான உருவத்தால் பாராட்டினீர்கள் என்றால் நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்வோம்.

அந்த பெரியவர் ஒரு நிமிடம் திகைத்து, பின் புன்னகையுடன் தன்னுடைய தலைப்பாகையையும், முகத்தில் ஒட்டியிருந்த மீசை, தாடி போனறவைகளை கழட்டினார். மன்னர் நின்று கொண்டிருந்தார்.

ஆஹா !..மன்னர், அனைவரும் எழுந்து அவரை வணங்கினர். அப்பொழுது சற்று தொலைவில் இருந்து பத்து பதினைந்து குதிரை வீர்ர்கள் மன்னரை சுற்றி பாதுகாப்பாக நின்று கொண்டனர். தளபதியார் மறைவிலிருந்து வெளியே வந்தார்.

தளபதியாரே ! நீங்கள் எப்பொழுது வந்தீர்கள்? தாங்கள் மாறு வேடமிட்டு கிளம்பும்போதே உங்களுக்கு ஏதேனும் ஆபத்து வருமோ என்று பின் தொடர்ந்து வந்தோம்.

அந்த இளைஞன் தளபதியாரே ! மன்னனுக்கு எந்த ஆபத்தும் விளைவிக்க மாட்டோம். நாங்கள் ஊர் ஊராய் சென்று மோகினி ஆட்டம் என்ற இந்த நாட்டியம் ஆடி மக்களை மகிழ்விப்பவர்கள். நாட்டு மன்னனுக்கு, அவரது நாட்டிய அரங்கில் வந்து நடனமாடுபவர்கள் மட்டுமே கலைஞர்க:ள் என்ற எண்ணம் உண்டு. இதை பல முறை என்னைப்போல் நாட்டியக்குழுக்கள் சொல்லியிருக்கிறார்கள். அது மட்டுமல்ல எங்களை அரண்மனை அரங்கத்துக்குள் ஆடவும் அனுமதிப்பதில்லை.

அப்பொழுதுதான் நான் ஒரு சபதம் எடுத்தேன். நாட்டு மன்னனை, சாதாரண நம்மைப்போல் தரையில் உட்கார வைத்து எங்கள் மோகினி ஆட்டத்தை இரசிக்க வைப்பேன் என்று. அதை இன்று செய்து காட்டி விட்டேன். இதில் தவறு இருந்தால் நீங்கள் தாராளமாக எனக்கு தண்டனை தரலாம்.நேற்று இரவு கூட நீங்கள் வருவது தெரிந்துதான் நாங்கள் இருவரும் அந்த காட்டில் தனியாக பேசிக்கொண்டிருப்பது போல நடித்தோம்.

தளபதியாருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஒரு நாட்டியம், ஆடும் கூட்டம் அவரை எப்படி மடக்கி இருக்கிறார்கள் என்பதை நினைத்து வியந்து போனார்.

மன்னர் அப்பொழுது ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இனிமேல் எல்லா விதமான நாட்டியங்களும், ஆடல் பாடல்களும் அரண்மனை அரங்கில் நடை பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன், அது மட்டுமல்ல இனி நானும், என் மனைவியும் நம்முடைய ஒவ்வொரு ஊர்களிலும் நடைபெறும் நாட்டியத்தை வார நாட்களில் ஒரு நாள் கலந்து கொண்டு, பார்த்து இரசிப்போம் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

சொல்லிவிட்டு சரி.. இளைஞனே ஒரு இரகசியம் சொல்கிறேன் கேள், நீங்கள்தான் இந்த நாடகத்தை நடத்துகிறீர்கள் என்பது எனக்கு முன்னரே,தகவல் தெரிந்து விட்டது. அது உனக்கு தெரியுமா? என்று சிரித்துக்கொண்டே கேட்கவும், மன்னா ! வியப்புடனும் ஆச்சர்யத்துடனும் கேட்டவனை, அங்கு பார்? என்று சொல்ல மாறு வேடத்தில் இருந்து அப்பொழுதுதான் தங்களது வேடங்களை கலைந்து உடகார்ந்திருந்த மகாராணியுடனும், அவருடன் இருந்த பணிப்பெண்களுடனும் சுவாரசியமாய் பேசிக்கொண்டிருந்தாள் அந்த நாட்டியமாடிய பெண். 

தொடர்புடைய சிறுகதைகள்
பகல்! சூரியன் உச்சியில் இருந்தான், அன்று சந்தை! கூட்டமாய் இருந்தது, அது நகரமும் இல்லாமல் கிராமமும் இல்லாமல் நடுத்தரமாய் இருக்கும் ஊர், அதனால் நகரத்தாரும், கிராமத்தாரும் கலந்து காணப்பட்டனர், ஆடு மாடுகள் கூட விற்பனைக்கு வந்ததால்,அதை வாங்க வருவோரும் விற்க வருவோரும் ...
மேலும் கதையை படிக்க...
கண்ணாடியை கழற்றி பக்கத்தில் இருந்த மேசையின் மேல் வைத்துவிட்டு களைப்பால் அப்படியே மேசையின் மீதே கன்னத்தில் முட்டு கொடுத்து கண்ணயர்ந்தாள் தேவகி.உடலில் அப்படி ஒரு அசதி, அதை விட மனதில் ஒரு வித அலுப்பு,யாருக்காக? எதற்காக? ஒன்றும் புரியவில்லை. முப்பத்தி ஐந்து வருடங்கள் ...
மேலும் கதையை படிக்க...
நடந்து சென்று கொண்டிருந்த என் மீது யாரோ புண்ணீயவான் காரை ஓட்டி வந்து, மோதி உயிருக்கு ஆபத்தாக மருத்துவமனையில் ஆழ்ந்த மயக்க நிலை (கோமா) இருக்கிறேன். அப்பொழுது இரண்டு உருவங்கள் என்னை பிடித்து எங்கோ கொண்டு போகிறார்கள். நான் மெல்ல திமிற முயற்சிக்கலாம் ...
மேலும் கதையை படிக்க...
இன்று எப்படியும் சேகரிடம் பேசிவிட வேண்டும் என்று நினைப்பாள் காஞ்சனா, இது போல் தினமும் நினைத்து நினைத்து பாழும் வெட்கம் வந்து அவளை தடுத்து விடுகிறது, அவளும்தான் என்ன செய்வாள்? மனதில் சலனங்கள் இல்லாதவரை பெண்ணும் ஆணும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ...
மேலும் கதையை படிக்க...
ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி மகாதேவனின் இறப்புக்கு உறவினர்கள் கூட்டத்தை விட நண்பர்கள் கூட்டமே அதிகமாக காணப்பட்டது. நிறைய முகங்களில் உண்மையான சோகம் காணப்பட்டது. அவரின் நண்பர்கள் தள்ளி உட்கார்ந்திருந்த அவரது மனைவி சாருமதியிடம் வந்து வணக்கம் சொல்லி உண்மையான வருத்தத்தை ...
மேலும் கதையை படிக்க...
ஒரு வாய் சோறு
வாழ்க்கை வாழ்வதற்குத்தான்
ஞாபகம் வருதே
காஞ்சனாவின் தவிப்பு
வாழ்க்கை வாழ்வதற்கே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)