சகுனியின் சிரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: September 22, 2022
பார்வையிட்டோர்: 7,493 
 

1

கிருஷ்ணனால் தூங்க முடியவில்லை. அன்று மாலை முடிவுற்றிருந்த முதலாம் நாள் பாரதப் போரின் அவலங்களெல்லாம் மீள மீளவெழுந்து அவன் மனத்தை உலுப்பிக்கொண்டிருந்தன. கையிழந்த காலிழந்த மெய்பிளந்த மனிதர்கள் எழுப்பிய வதைப்பாட்டின் பெருவோலம், குலைந்த சுருளின் விசையுடன் விரிந்தெழுந்துகொண்டு இருந்தது. போலவே, சரங்களைத் தம் தொண்டைக் குழிகளிலும் பழுவிலும் வயிற்றிலும் தாங்கிய யானை குதிரை ஆதியாம் படை மிருகங்களின் பெருந்தொனி அவனால் தாங்கமுடியாததாய் இருந்தது. அர்ச்சுனனுக்கான சாரதியத்தைச் செலுத்தியபொழுதிலும் கிருஷ்ணன் கவனம் கள நிகழ்வுகளில் பிசகாதேயிருந்தது. அந்த அவலமும் ஓலமும் தன்னுள் நினைவுகளாய் உறையவிட்டு தான் எப்போதும் எவர்க்கும் எடுத்துரைக்கும் கருமத்தில் கண்ணாயிருத்தலை மேற்கொண்டான். இரவின் படுக்கையில் உடல் களைத்துக் கிடந்திருந்தபோது அவை மறுசுழல் கொண்டெழுந்து தாங்கமுடியாமையின் எல்லைக்கு அவனை நகர்த்தின. அன்றைய யுத்தத்தின் தோல்வி முகம்கூட எந்த அழுத்தத்தையும் அவனில் செய்திருக்கவில்லை.

அவன் போர்கள் கண்டவன்; யுத்தங்கள் புரிந்தவன். ஆயினும் அவன் அதுவரை கண்டதும் புரிந்ததும் இரண்டு, அதிகமானால் அவற்றின் அணுக்க நாடுகளும் இணைந்த, சைன்யங்களின் யுத்தங்களாகவே இருந்தன. அப்போது நடைபெறுவதோ நாளதுவரையான துவேஷங்களிலும், மணமுறைக் காரணங்களிலும் ஊறிக் கிடந்த பன்னூறு நாடுகள் இரண்டு கன்னைகளாகப் பிரிந்துநின்று புரியும் போர். அக்குரோணிக் கணக்கான சேனைகளும், யானை குதிரைப் படைகளும் இரண்டு குலங்களின் வன்மத்தின் பலி அடையாளங்களாய் குருசேத்திரமென்ற ஒற்றைப் புள்ளியில் குவிக்கப்பட்டிருக்கும் போர்.

பெரும் புவிப் பரப்பான குருசேத்திரம் நாற்பது லட்சம் வீரர்களின் பொருதுகைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. முன் அணியிலிருப்போர் பின் அணியையோ, பின் அணியிலிருப்போர் முன் அணியையோ கண்டுவிட முடியாத பெரும் களம். அந்தளவுக்கு அதன் அழிவுகளும் இருக்கும்.

மரணமல்ல, யுத்தத்தின் ஆகக்கூடுதலான துன்பம் கிருஷ்ணனுக்கு மரண இம்சைப்படும் காயம்பட்ட உயிர்களாகவே அப்போது தோன்றியது. தாங்கமுடியாத ரண வலியில் வைத்திய உதவிபெறும் ஆயிரக்கணக்கான உயிர்களின் பரிகாரவிடங்கள் பாசறைகளுக்கப்பால் வெகு தொலைவில் அமைந்திருந்தும், அங்கிருந்து கிளம்பும் ஓலம் பாசறை வாயில் தாண்டி உள்ளே இறங்கி மனத்துள் அடங்கிக் கிடந்த உணர்வுகளை கிருஷ்ணனிடத்தில் கிளர்தெழ வைத்துவிட்டது. யுத்தத்தில் அவையெல்லாம் இயல்பானவையென்ற தெளிவிருந்தும், தன்னளவிலும் ஏதோவகையில் அதற்குக் காரணதாரியானதுபோல் உள்ளம் கனத்துப்போனான் அவன். அவ்வாறு அவனது இதயம் கனத்ததில் கண் கனக்க மறுத்துவிட்டது. அது தன் நித்திரை வெகுதூரத்திலென்பதை அவனுக்கு அர்த்தப்படுத்தியது. அவன் படுக்கையில் உருள்வதை நிறுத்தினான். எழுந்தமர்ந்து சிறிதுநேரத்தில் பாசறையைவிட்டு வெளியே வந்தான்.

வெளி இருண்டு கிடந்தது. நடுச்சாமம் கடந்திருந்ததை நட்சத்திரங்கள் புலப்படுத்தின. அது உலவும் வேளையாக மட்டுமன்றி, அதற்கான இடமாகவம் இல்லாதிருந்தது. ஆனால் மனம் குமைந்து குமைந்து முறுகி நெரிவதை அடக்க வேறு வழி காணாதவனாய் அவன் நடக்கத் தொடங்கினான்.

போர் நிலத்தின் அவ்விரவைத் தமக்கானதாய்ச் சுவீகரித்த ராட்சத நரமாமிசப் பட்சணிகள், வெட்டுண்டு கிடந்த மிருக மனித அங்கங்களின் அபரிமிதத்தால் போட்டியின் அவதியழிந்து கிரீச்… கிரீச் என்ற திருப்தியின் அடங்கியவொலி எழுப்பியதில் அவற்றின் வேட்டை தொடங்கிவிட்டிருந்ததை கிருஷ்ணன் அறிய முடிந்தான். வானத்தில் எழுந்த விசையிறக்கைகளின் இரைச்சல் தூர தூர தேசங்களிலிருந்தும் மாம்ச மொச்சையில் பட்சணிகள் படை படையாய் வந்துகொண்டிருப்பதை அனுமானித்தான். அத்தனை உயிரழிவுகள் அந்த ஒற்றைத் தினத்திலெனில் வெற்றி – தோல்வி கண்டு போரோயும் அந்த நாள்வரையில் எத்தனை அழிவுகள் நிகழக்கூடும்! அவனது சதிரம் பதறியது.

நிகழக்கூடிய அத்தனை அழிவுகளில் துரியன்போல் சகுனிபோல் தர்மன்போல் அவனுக்கும் ஒரு பங்கு இருக்கிறதல்லவா?

இல்லை, அவ்வாறெல்லாம் சொல்லிவிட முடியாது. ஆயினும் அவ்வாறான பங்குதாரியானான்போலவே அவனது துடிப்பு மேலும் மேலுமாய் வெகுத்துக்கொண்டிருந்தது.

சாரதியம்மட்டும் செய்வேன், ஆயுதம் தரிக்கமாட்டேனென அன்று அர்ச்சுனனுக்குச் சொன்னபோதுகூட யுத்தத்தில் எவர் பக்கம் நிற்பது என்பதுபற்றிய தெளிவெதுவும் தன்னிடத்தில் இல்லையென அவன் சொல்லியது மெய்யே. அது யார் பக்கத்தில் நியாயமுள்ளதென்பது தெரியவில்லை எனக் கூறுவதன் இன்னொரு வடிவமே. குந்தவி, பாஞ்சாலி, சுபத்திரையென மகிமையுள்ள பாண்டவ குல மாதர்கள்போலவே குருகுலத்திலும் அவனின் மரியாதைக்குரிய பெண்கள் இருந்திருந்தார்கள். சத்யவதி, துச்சலை, பானுமதியாகியோர் நியாயாதிக்கத்தில் இளகிய மனநிலை கொண்டவர்களில்லை.

திருதராஷ்டிரன் இயற்கையிலடைந்த அங்கக் குறைபாட்டில் அரசுரிமை இழந்தவன்; அதனால் வெகுட்சி கொண்டிருந்தவன். எனினும் அவனது ஆரம்ப கால குணநலன்கள் பின்னாளில் அவனிடம் இருந்திருக்கவில்லை. ஏன், கிருபரில்லையா அங்கே? ஆசாரியர்களான துரோணரும் பீஷ்மரும்கூட அங்கேதானே! அர்ச்சுனனுக்காக ஒருவேளை அவன் பக்கம் சார்ந்தாலும், அந்த இரண்டு கன்னைகளிலுமே அவன் பெரிய வித்தியாசத்தைக் கண்டிருக்கவில்லை.

பாண்டவர்களுக்காகத் தூது சென்றதும், அவர்களுக்காக ஐந்து வீடுகளையாவது கொடுங்களென கௌரவர்களிடம் கேட்டதும் பாண்டவர் பக்கத்தில் நியாயமிருப்பதாக எண்ணியதாலல்ல, பாரிய யுத்தமொன்றை பாரத பூமியில் தடுப்பதற்காகவே செய்தான். அதையும் மூத்த கௌரவன் மறுத்தபோது கிருஷணன் சோகமே பட்டான். அவனேன் சகுனிபோலவே எல்லாம் யோசிக்கிறானென பின்னால் கோபமும் கொண்டான்.

கிருஷ்ணன் முளைகள் அடித்திறுக்கி பாசறைகளை நிமிர்த்திக் கட்டியிருந்த கயிறுகளில் தடுக்கிவிடாத அவதானத்துடன் மெல்ல அடிவைத்து மேலேமேலேயாக நடந்தான். ஆயினும் யுத்தத்திலிருந்து விலகி ஓடிவிடும் தீர்க்கம் அதிலிருந்ததாய்க் காணமுடியவில்லை. அவனது களவிருப்பு ஏற்கனவே அங்கே நிச்சயபட்டாயிற்று. அதைத்தான் ஏனென காரணம் அறியமுடியாதிருந்தது. அவனே அதை அறிவானா?

மேலே பாதி நிலாப்போல் ஓர் ஒளி வளையம் தெரிந்தது. பகல் நேரப் போர்க்களத்திலிருந்து கிளம்பிய தூசு மண்டலம் இன்னும் அடங்காதிருந்து கட்புலன் வானம் எட்டாத மூட்டத்தை விரித்திருந்தது. அன்றைய இரவை பரத கண்டத்தில் யாருமே விரும்பியிருக்கவில்லை. அவனை வருத்திய காரணத்தினால் அல்லவெனினும் களமுனைப் பாசறைகளிலும் பலபேர் அந்த இரவில் தூங்கியிருக்கவில்லை. யுத்தம் அவர்களை உசுப்பிக்கொண்டிருந்தது. அது யுத்தம் முடிந்து பல நாட்களுக்கும்கூட தொடர்ந்துகொண்டிருக்கவே செய்யும். துக்கத்தில், அவலத்தில் தம் மனத்தின் சமநிலையைப் பலபேர் இழந்துபோயிருக்கிறார்கள். நியாயமோ அற்றதோ யுத்தமானது அதற்கான அழிவின் சாபத்தையும் சுமந்துகொண்டே நகர்கிறது.

ஆனால் அர்ச்சுனன் நிறை தூக்கத்திலிருந்தையே கிருஷணன் அவனது பாசறை வாசல் கடக்கும்கும்போது கண்டிருந்தான். போரின் முதல்நாள் காலைப்பொழுதில் அவன் சிறிது குழம்பினான். அது அவனது இயல்பு. எதன் தாமதிப்பிலும் சிடுசிடுவென்று மனங்கொதித்து கிறுக்குத்தனமாய் நடந்துவிடுவான். அதை உணராத கிருஷ்ணன்தான் ஆச்சாரியர்களை எதிர்நிற்க முடியாமல் ஓடுகிறானென எண்ணி அவன் பின்னால் இறங்கி ஓடினான். ஆனால் அர்ச்சுனன் கலங்கியிருக்கவில்லை. வெகுநிதானமாக தன் கருமத்தின் அர்த்தம் தெளிவுறத் தெரிந்தவனாகவே இருந்தான். ஆனால் கிருஷ்ணன் தனக்கான விசனங்களையும் விசாரங்களையும் அந்த முதல் நாள் யுத்தத்தின் முடிவிலே அடைந்திருக்கிறான். சொல்லப்போனால் அர்ச்சுனனிடமிருந்த அதே விசனங்களின் வேறு வடிவங்கள் அவை.

தீரா மனச் சுமையுடனே கிருஷ்ணன் நடந்துகொண்டிருந்தான். ஒரு தெளிவின்மையிலிருந்து இன்னொரு தெளிவற்ற புள்ளியை நோக்கிப்போல் இருந்தது அவனது நகர்ச்சியின் ஏகாங்கித்தனம்.

முதல்நாளில் அவ் விசனம் மேவி கிருஷ்ணன் களத்தை விலகியிருப்பானேல் அர்த்தம் இருந்திருக்கும். ஆனால் அதையும் அவனால் செய்திருக்க முடியாதுபோலவேயிருந்தது. ஏனெனில் யுத்தம் நடவாதிருப்பது சிறப்பெனினும், யுத்தமொன்று நடக்குங்கால் அதன் கட்புலச் சாட்சியாக தானிருக்கவேண்டுமென அவன் விரும்பினான். எதற்காகவென்று அவனுக்கே அது தெரிந்திருக்கவில்லை. வாழ்வின் தாற்பரியம் மரணத்தில் காண்பதுபோல், மனித மனங்களின் அவச, ஆசைக் கூறுகளதும், அரசியல் ஞானத்தினதும் அடைதற் பேரனுபவம் அங்கே திரண்டெழுகிறதாய் நினைத்தானோ என்னவோ?

அப்போது தொடர்பற்ற விதமாக அவன் மனத்தில் சகுனியின் முகம் தோற்றம் காட்டியது. அது மனித முகமாகவன்றி உலக மாயையின் ரூபமாக அவனுள் விஸ்வரூபித்தது.

2

அன்று தூக்கம் பிடிக்காத இன்னொருவனும் பாசறைப் படுக்கையில் கிடந்து உழன்றுகொண்டிருந்தான். விடிய இன்னும் வெகுநேரமற்றிருந்த அந்தப் பொழுதில் சகனி பலவற்றையும் யோசித்தவாறு கிடந்திருந்தான். யுத்தம் தொடங்கியது நல்லதுதான். அவனது சூதின் களம்தான் குருசேத்திரம்வரை விரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வெற்றியின் சூசகம் பாண்டவர்களது அன்றைய தோல்வியில் எழுதப்பட்டிருப்பது தெரிந்திருந்தும், அதில் ஏதோவொரு தடங்கலை அவனது மனம் உணர்ந்துகொண்டிருந்தது. அது யாராக, எதுவாக இருந்தது? சகுனி அக்கணத்தில் எண்ணிப்பார்த்தான்.

யுத்தத்தில் தேரோட்டியாய் கிருஷ்ணன் பங்குபெறுவதில் அவனுக்குப் பெரிய தடங்கல் தெரியவில்லை. பாஞ்சஜன்னம் மட்டும்கொண்டு ஆயுதமற்வனாய் களம் வரும் கிருஷ்ணனால் என்ன செய்துவிட முடியுமென்பதே அவனது எண்ணமாக இருந்தது. ஆனால் இப்போது மனத்தைச் சுற்றிக் கிளர்ந்தெழுகிறது ஒரு அவதியின் சுருள். அது அந்த நவ கோமாளியின் உருவாக மாறிமாறி ஒளிர்கிறது. அது ஏன்?

அவன் அதைக் கண்டாகவேண்டும். எத்தனை காலம் காத்திருந்து அவனது மதி மகிமையில் காணப்பட்டிருக்கிற அப் போரும், போரின் மூலமும் எண்ணியெண்ணி அவன் காரணம் துளாவினான்.

கடந்த கால் நூற்றாண்டில் நிகழ்ந்த சகலதும் அவன் நினைவடுக்கில் வெளித்தன. இறுமாந்திருந்த காந்தாரத்தின் வனப்புறு அரச மாளிகையின்மீது கரி படர்ந்த நாளிலிருந்து அவன் நினைவுகளைப் புரட்டினான்.

காந்தாரம் உள் கொதித்திருக்கும் வறள் பூமியென்பார்கள். அந்த வறட்சியின் உறைவு மனித மனங்களிலும் அப்பியிருந்தது. நிலனும் வளனும் ஏன், எதற்கு, எங்ஙனமெனத் தெரியாதபடிக்கு திடீர் திடீரெனத் தீப்பிடித்தழியும். மனங்களும் அதுபோலவே ஒரு வெப்பப் பிரவாஹத்தில் எப்போதும் சுழன்றுகொண்டிருக்கும். சகுனி சின்னனிலிருந்து வாலிபனாய் வளர்ந்தது என்றும் மாறாத அத்தகு சூழ்நிலையிலேயே. அதனால்தான் ஆட்சிப் பங்காளன்போல் அரசதிகாரம் கொண்டிருந்த காந்தார இளவரசன், அந்த வெப்பு வலயத்திலிருந்து எங்கேனும் ஓடி ஒரு நிரந்தரப் புகல் கொண்டுவிடுவதை வாழ்வின் தீராத இலக்காக உள்வரித்திருந்தான்.

அத்தகு சூழ்நிலையில்தான் அத்தினாபுரத்திலிருந்து அதன் அரசன் திருதராஷ்டிரனுக்குப் பெண்கேட்டு பீஷ்ம தூது வந்தது. சகுனி அத்தினாபுரம்பற்றி, அதன் வல்லமை வாய்ந்த அரசுபற்றி கேள்வியில் பட்டிருந்தான். திறன் வாய்ந்த ஆச்சார்யர்களின் அஸ்திர வித்தையால் நாற்றிசையும் பாதுகாக்கப்பட்டிருந்த அந்த அரசின் தலைவன் அந்தகனாயிருந்ததும் அறியவே செய்திருந்தான். உடனே சினங்கொண்டு பொங்கினான் சகுனி. பின் மனத்தே வேறொரு சிந்தனையோட அடங்கினான். நீர் வளம், நில வளம், வன வளம், கோ வளங்கள்கொண்டு தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாததாய் விளங்கிய அத்தினாபுரத்தை எண்ணினான். அவன் கனவிலும் தேடியிருந்த மண் அதுதானே! அதனால்தான் அரசன் மணவினை மறுப்பைப் புகல்வதின் முன்னம் காந்தாரத்தின் பாதுகாப்புக்கு இனி அரண் வேண்டியதில்லை, படை மறவரும் வேண்டியில்லையென தந்தைக்குரைத்து சாதக பதிலை தூதனுக்களிக்க வைத்தான். பின்னர் மாமனின் அந்தஹம் மறந்து, மணப்பெண்ணின் அத்தினாபுரப் பயணத்தில் தன் சோதரியைப் பிரிந்திருக்கும் ஆற்றாமையின் காரணம் சொல்லி தானும் அப்போதே வருவேனென பாலகனாய் அடம் பிடித்தான்.

அது வெகு விதூஷகத்தனமாய் இருந்தது கண்டு அங்கே அச் சமயம் நின்றிருந்த காந்தாரி கலகலவெனச் சிரித்தாள். ‘மணம் எனக்கு; உனக்கில்லை, சோதரா. பின்னேன் இத்தனை அடம் உனக்கு?’ எனச் சீண்டினாள்.

கணவனாக வரப்போபவனின் உண்மைநிலை தெரியாது தன்னைச் சீண்டிக் கலகலக்கும் சோதரிமேல் கோபத்திற்குப் பதிலாய் இரக்கமே பட்டான் சகுனி. ‘சோதரி, எல்லா உன்னின் கலகலப்பையும் இங்கேயே உதிர்த்து முடித்துவிடு; நீ இவ்வாறு கலகலப்பாய்ச் சிரிக்க அத்தினாபுரத்தில் ஒரு காரணம் உனக்கிருக்கா’தென உள் பிரலாபித்தான்.

மணப்பெண்ணென காந்தாரி, முதிர் தோழி சுகர்மி, உடனுறை ஏவலாளிகளென குதிரை வண்டிகள் நிறைந்திருந்தன. இன்னும் சில இரத்த உரித்தாளிப் பெண்கள் பிறிதொரு வண்டியில். சகுனி தன் தேரில் தனித்து முன் சென்றுகொண்டிருந்தான். சிறப்புகள், சீர்வரிசைகள் அடங்கிய இன்னும் சில வண்டிகளும் காவலர்களுமான மங்கலப் படையணி அது.

காந்தாரத்திலிருந்து மணப்பெண் பிரயாணம் தொடக்கிய சிறிதுநேரத்திலேயே சூரியன் தன் கதியில் உச்சமடைந்த பொழுதாயிருந்தும் சகுனி தன் மேனியில் வியரடங்குதல் உணர்ந்தான். மேலே கண்கவர் பொழில்கள் பாதை மருங்குகளில் கழிவன கண்டான். ஒழுகும் அருவிகள், சலசலக்கும் ஓடைகளின் ஓய்ச்சலற்ற ஒலி கேட்டான். வெயில் நுழைபறியாக் குயில் நுழை பொதும்பர்களை வியந்தான். ஆனால் அவற்றுக்காக அவன் தங்கையை பணயம் வைப்பதான எண்ணமொன்றெழ திடுக்குற்றான். தனக்காக அதை அவனால் தவிர்த்துவிட முடியாது. அவளை எண்ணினாற்கூட அதைத் தவிர வேறு நிலைமைகள் அவளுக்குக் கைகூடிவிட முடியாது. செல்வமும் அதிகாரமும்கொண்ட அத்தகு ஒரு ஸ்தானம் காந்தாரியால் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அடைந்துவிடுதல் சாத்தியமில்லை. அதனால் எதுவொரு காரணம்பற்றி அந்த அவளது நிலைக்கு ஆபத்தேதேனும் ஏற்படின் என்ன விலை கொடுத்தேனும் அதை அவன் போக்கிவைப்பதென திடம்கொண்டான்.

வெப்ப மண்டலத்தை நீங்குதல்மட்டுமல்ல, அவனுக்கு மிகவும் ஈடுபாடான பகடையாட்டத்திற்கும் ‘நாடா வளந்தரு நாடு’ ஒன்றே மிக்க வாய்ப்புக்களை அடுக்கிக்கொடுக்கும். சூதில் காய்களை உருட்டுதல் மிகுந்த சாதுர்யத்தை வேண்டுவது. அது எக் காரணம்கொண்டும் பலச் சமநிலையை இழந்துவிடக்கூடாது. அதை பணய இருப்பின் ஸ்திரம் வலுப்படுத்துகிறது. லட்சம் கோடியென பொன்னும் மணியுமான குவியங்களும் மிகச் சாதாரணமாய்ப் பணயமாகி, மிகச் சிறிய ஒரு பொழுதில் இழப்பின் கெடு அடையாளங்களாவதுண்டு. காவலாளிகள், உபதளபதிகள், தளபதிகள், அமைச்சர்கள், குலத் தலைவர்கள், குறுநில மன்னர்களென்ற குறுகிய அளவிலேயே அவனது சூதும் பணயமும் அதுவரை இருந்துவந்திருக்கின்றன. இனி அது பெருவட்டம் காணும். அவனுக்கு மிகப் பெரும் பணயச் சூதில் ஒரு மயக்கமே இருந்தது. முடிமன்னர்கள், பேரரசர்களை முடியிழந்துபோக வைக்கும் வேணவா. இப்போது அவை கைகூடலின் சாத்தியங்கள் மிக்கனவாகின்றன.

வில் வித்தை, கதா யுத்தம், மற்போர் கற்றவன் சகுனி. ஆனால் ஆசார்யனின்றி அவன் கற்ற வித்தையான பகடையே அவனது சாமர்த்தியத்தின் உச்சபட்ச அடையாளம். இன்னொன்றும் அவன் இயல்புக் குணமாய்க் கொண்டவன். அது சூது புனைதல். அதிலும் அவனை நிகர்த்தவர் தரணியில் எவருமில்லை; மூவுலகத்திலும் இல்லை.

மிதிலையின் கிருஷ்ணனும் அந்தக் கலையில் வெகு சமர்த்தனாய்க் கதா காலங்களில் விவரிக்கப்படுகிறான். சகுனிக்கு அதில் முழு நம்பிக்கையில்லை. சூது புனைவதில், இதயத்தை தனியே அப்பாலெடுத்து வைத்துவிட்டு வினையாற்றும் கொடுசிந்தை தேவையாயிருக்கும். அது, நிலம் வெளி யாவும் வெம்மை கனலும் ஓர் மண்ணக மனத்திலேயே உருக்கொள்ளும் சாத்தியம் இருக்கிறது. சூது விளையாடவும், சூது புனையவும் அவனை விஞ்ச இனியொருவர் பிறந்தே வரவேண்டும்.

எல்லாம் எண்ணியபடி சென்றான் சகுனி. எல்லாம் கண்டு குதூகலித்தபடி காந்தாரி சென்றாள். அவ்வப்போதான ஓய்வுடன் சிரமமின்றித் தொடர்ந்த பயணத்தில் நான்காம் நாள் விடிய வழிக் காவலின் முதல் அரண் கடந்தவேளை அஸ்தினாபுரமென்ற பிரமாண்டத்தின் மங்கிய உரு அவர்கள் கண்டார்கள்.

3

அந்தப்புரத்துள் பார்வையற்ற திருதராஷ்டிரன் தூங்கினானோ இல்லையோ பார்வை மறைத்த காந்தாரி இன்னும் தூங்காமலேதான் இருந்திருந்தாள். காலதர்களினூடு வான் பார்த்து கட்டிலில் அமர்ந்திருந்தாள். திருதராஷ்டிரனால் அதை உணராமல் இருந்திருக்க முடியாது. ஆனால் பேச்சற்றுப் போயிருந்தான். அன்று மாலை போர்க் களச் சஞ்சயன் களத்தின் வெற்றி நிலைமை உரைத்துப் போன பின்னால், அதுவரையிருந்த ஒருவகை நம்பிக்கை அவனிலிருந்து கழன்று போயிருப்பதை காந்தாரி அக் கணமே உணர்ந்திருந்தாள். அது ஏனென்று அவளுக்கு விளங்கவில்லை. எல்லோரும் யுத்தம் செய்தார்கள், சகுனி சத்தம் செய்தானென சஞ்சயன் உரைத்திருந்தான். அவனது தேர் எங்கேயும் சஞ்சரித்துத் திரிந்ததை யாரும் கண்டிருக்கவில்லையென்றும் சொல்லியிருந்தான். அதிலிருந்துதான் அவன் அவ்வாறு ஆனான். அவளே அவ்வாறு ஆனதும் அப்போதிலிருந்துதான்.

அவளுக்கும் நினைக்க நிறையவிருந்தது. அப் போரில் அவளது பங்குமே கலந்திருக்கிறதல்லவா? சகுனியின் பின்னால் நின்றிருந்தது அவள்தானே! அது மாமாங்கங்களின் ஞாபகங்களாய் விரிந்தது.

அரண்மனைக்குள் காந்தாரத்திலிருந்து வந்த மணப்பெண் குழு வாசலிலிருந்து விமரிசையாக அழைத்துச் செல்லப்பட்டது. மயக்கும் வனப்புடைய மத்திய கூடம் வந்தது. இனி ஆண், பெண் விருந்தினர்கள் அவரவர் தகுதி தேவைகளில் பொருந்திய இடம் சேர்க்கப்படுவர்.

மத்திய கூடத்தில் தன் தங்கையின் முகம் கண்டு ஒருகணம் தயங்கினான் சகுனி. அவளது கண்களின் சிரிப்பு மயக்கமே உண்டாக்கியது. அந்த அழகு… அந்தச் சிரிப்பு… அந்த நிறைவு… யாவும் இன்னும் சிறுபொழுதில் திருதராஷ்டிர நிலையறிய உடைந்து சிதறப்போகின்றன. காந்தாரி சிரிப்பையே மறக்கப்போகிறாள். அவள் முன்னராகவே அருண்டுவிடாத அவதானத்துடன் எல்லாவுணர்வும் உள்ளடக்கி, ‘செல்! ஓய்வெடு!’ என்றான் சகுனி. தான் பூண்டிருந்த மகிழ்வின் ரேகை அழியாமலே திரும்பி தன் முது தோழியுடன் நடந்தாள் காந்தாரி.

அன்று மாலைக்குள் நினையாப் பிரகாரமாக அந்த இரகசியம் முதுதோழி முன்னால் வெளிப்பட்டது. அதை, ‘அம்மா, அஸ்தினாபுர அரசர் பார்வையற்றவராய்க் காணப்படுகிறா’ரென அவள்தான் தன் கண்கண்டு செவி உறுதிசெய்த உண்மையை அப்படியே காவிவந்து காந்தாரியிடத்தில் சொன்னாள்.

அப்போது கண்களை இடுக்கிக் கூர்த்தபடி வார்த்தையற்ற மௌனத்தில் சுகர்மா பக்கம் திரும்பினாள் காந்தாரி. ‘என்னடி, பயித்தியமா உனக்கு? யாரின் கண், பார்வை தொலைத்தது? உன்னதா, அரசரதா?’ என்ற சொற்கள் அந்தக் கண்களிலிருந்து உதிர்வனவாய்த் தென்பட்டது சுகர்மாவுக்கு.

அதற்காக அவள் அஞ்சவேண்டியதில்லை. அவள் அறிந்துவந்ததில் கிஞ்சித்தும் ஐயமேதும் அவள் கொண்டிருக்கவில்லை. ஓலக்க மண்டபத்திலிருந்து அயலில் நின்றிருந்த காவலனை அழைத்து முன்னே நடக்கவிட்டு செவிப்புலனைக் கூர்த்து அவனடி கிரகித்தவன்போல், ஆனாலும் வேகமாக அரசன் நடந்திருப்பினும், சுகர்மாவால் அந்த அவதானத்தின் காரணத்தை விளங்கிக்கொள்ள முடிந்தது. ஆயினும் அது அனுமானமானதனால் அவள் மேலும் அவர்களைத் தொடர்ந்தாள்.

நடைவழியின் எதிரே சத்தியவதியும் பீஷ்மரும் எதிர்வந்தனர். சத்தியவதி முறுவலோடிருந்தாள். அது அவர்கள் சில முக்கியமான முடிகளை அனைவர்க்கும் அனுகூலமான வழியில் எடுத்துவிட்டிருந்ததைக் காட்டியது. அவ்விடத்தில் நின்ற திருதராஷ்டிரனை நோக்கி பீஷ்மரின் வார்தைகள் பிறந்தன. ‘நானும் உன் பாட்டியும் சில காரியங்களை இப்போதுதான் பேசித் தீர்மானித்தோம். காந்தாரி உன்னைப் பார்க்க எதுவமில்லை. நீ பார்ப்பதென்ன, நாங்கள்தானே உன் பார்வை! குரு வம்சம் தழைப்பதற்கான தகுந்த நிலம்தான் காந்தார இளவரசி. வம்ச ரீதியாகவும் அதன் ஆதாரங்கள் பல கொண்டிருக்கிறாள். அதாவது நூறு நூறாய்ப் பெருக்கும் பெண்ணியல் வமிசம் அவளது. தோற்றமும் சிறப்பு. குரலும் இனிமை செய்கிறது. மணவினைக்கு நாள் குறிக்க நினைத்திருக்கிறோம்’ என்றான்.

திருதராஷ்டிரன் மௌனமும் புன்னகையும் தவழ நின்றுகொண்டிருந்தான்.

எல்லாம் கண்டும் கேட்டும் கொண்டிருந்த சுகர்மா திடுக்குற்றாள். அவளது அனுமானத்தை பீஷ்மர் நிச்சயப்படுத்தியிருக்கிறார். பெருமாளிகையின் அழகினை வியப்பவளாய் எங்கணும் எங்கணும் மினக்கெட்டுநின்று காந்தாரி இல்லம் வந்துசேர்ந்தாள். சொல்லவேண்டியதை முதலில் அவளுக்குச் சொல்லியவளுமானாள்.

காந்தாரியின் பார்வையின் வினவுதலுக்கு, ‘சந்தேகமில்லாமலே, காந்தாரி, காட்சியிலும் சொல்லிலுமாய் நானறிந்த உண்மை…. ‘ என்றவளை இடைமறித்து, ‘நீ இப்போது போகலாம், சுகர்மா. மாலையில் வா. வழமையான தேவையுண்டு’ என்ற காந்தாரி, சுகர்மா தன்னிடம் செல்ல கதவைச் சத்தமெழச் சாத்தினாள்.

சுகர்மாவுக்கு ஆச்சரியமில்லையெனினும் சஞ்சலமிருந்தது. காந்தாரி என்ன முடிவெடுப்பாளென ஏதும் சமிக்ஞை அவள் கண்டிருக்கவில்லை. அவளது சோதரன் சகுனியிடம் சொல்லலாமாவென ஒரு கணம் எண்ணினாள். ஆயினும் அவனை எங்கே காண்பதென அவளுக்கு அனுமானம் இருக்கவில்லை.

மாலையில் காந்தாரியிடம் வழக்கம்போல் சென்றாள். அவள் சிரிப்பெல்லாம் தொலைந்துவிட்டதைக் கண்டாள். கடந்த சில தினங்களாய் அவள் அதிகமாகவே சிரித்திருந்ததையும் சுகர்மாவால் அப்போது ஞாபகம்கொள்ள முடிந்தது. சிரிப்பிழந்திருப்பவள் முகத்தில் சிந்தனை நிறைந்திருந்தது. முடிவற்ற சிந்தனையின் சுழற்சியுடன் தோழியின் முகம்நோக்கித் திரும்பினாள்: ‘அரண்மனை கோலாகலமடையத் தொடங்கிவிட்டதா திருதராஷ்டிர – காந்தாரி மணவினை காண? என் சம்மதிப்பு அவர்களுக்கு வேண்டியில்லை. காந்தாரத்திலிருந்தான என் புறப்பாடு ஏற்கனவே அவர்களுக்கான என் சம்மதத்தின் அச்சாரமாகிவிட்டது. நான் காந்தாரத்தின் இளவரசியாயிருந்தென்ன? அஸ்தினாபுரத்தின் வெகுஜனத்திபோலவே இனி இங்கு நானும். என்னுள் ஒரு ஐயமிருக்கிறது, யார் மக்கள் அரசுரிமை கொள்வரென்பதில். பாண்டுவே அரசை சிற்றப்பன் பொறுப்பில் நடத்துவதில் அது நியாயமான சந்தேகமேயல்லவா? அதற்கான பதில் என்னை அடங்கியிருக்கப்பண்ணலாம். எனக்கு எந்தத் தெரிவுமில்லையடி. மூத்தவரின் திருமணம் முடிய இளையவர் காடேகுவரென்று குலங்களில் ஒரு முதுபேச்சிருக்கிறது. அதை பாண்டுவுடன் பொருத்துவது எனக்கு சிலாக்கியமானதாக இருக்கும். விடையற்றபொழுதில் ஒரு அந்தகாரத்துள்போல்தான் என்னை நான் மணவினைக்குள் புகுத்தவிருக்கிறேன், சுகர்மா.’

எங்கோ பார்த்தபடிதான் காந்தாரி இத்தனையும் சொன்னாள். அப்போது அவளது கரங்கள் தன் மேலாடையிலிருந்து கிழித்தெடுத்த நீள் சதுரத் துண்டை தன் கண்களை மூடிக் கட்டிக்கொண்டிருந்தன.

அவளுக்கு நிச்சயமாக அது தவிர்ந்த எந்தத் தேர்வும் இல்லை, சோதரி என்ற சகுனியின் குரல் வாசலோரம் எழுந்தது. இருவரும் திடுக்குற்றாற்போல் திரும்பினர். சகுனி உள்ளே வந்தான்.

சோதரியின் சந்திப்பைத் தவிர்த்துவந்த சகுனி அப்போது ஓர் அவசியம் கருதித்தான் அங்கே வந்தான். உள்ளே பேச்சுக் குரல் கேட்டு நடைவேகம் தணிந்தபொழுதில் தன் காதில் விழுந்த காந்தாரியின் வார்த்தைகள் அவனிடத்தில் அதுவரையிருந்த தயக்கத்தின் பெரும்பங்கினையும் நீக்கின. அவன் நடந்து மேலே வர சோதரியின் கண்கட்டுக் கோலம் அவனை அதிர்ச்சியுற வைத்தது. ‘இது என்ன நீ செய்திருப்பது, காந்தாரி? ஏன் இவ்வண்ணம் செய்தாய்?’ என்றலறினான்.

‘எல்லாமே மோசமாக இருக்கிற இந்த உலகத்தை பார்க்காமலே இருப்பதுதான் சேமம், சோதரரே!’

‘அப்படியென்ன மோசம் இங்கு வந்த இந்தச் சிறுபொழுதுள் நீ அடைந்தது?’

‘எல்லாம் நீ ஏற்கனவே அறிந்தே இருப்பாய். இருந்தும் ஏன் மறைத்தாயென நானறியேன். அந்த விசாரணை இனி முக்கியமுமில்லை. ஆனால் நீயறியாத ஒன்று இப்போது நான் சொல்கிறேன், கேள். அந்தகன் கணவனாகிற நிலையில் மனைவி பார்வையோடிருப்பது கற்பறம் இல்லையென்பதை அறி.’

அவள் பேச்சில் வெடவெடத்து நின்றான் சகுனி. பின் தெளிந்துகொண்டு, ‘இங்கு வந்த பின்னரே அரசரின் பார்வைக் குறைபற்றிய விபரம் நானறிந்தேன். அது பிறவியில் உள்ளதா, இடையில் உற்றதா என அறியவே காலத்தைக் கடத்தினேனன்றி, வேறல்ல. அதை உன் திறமான தோழியும் உனக்கு கண்டுரைத்திருப்பாளென எண்ணி நீயே உன்னைத் தெளிவிக்கக் காத்திருந்துவிட்டு இப்போது வந்தேன்’ என்றான். பின்னரும் துணிந்து சொன்னான்: ‘காந்தாரி, எதுவாயினும் உனதிந்த முக வைரத்தை மணவறையிலும், பின்னால் உன் படுக்கையிலும் காட்டிவிடாதே. நூறாகப் பெருகவேண்டியது உன் வமிசம். மணவிழா முடிந்ததும் வந்தவர்கள் காந்தாரம் திரும்புவார்கள். ஆனால் நான் அவ்வாறு செய்யப் போவதில்லை, காந்தாரி. இங்கு உன்னுடனேயே தங்குவேன். யார் அரசுரிமை பெறுவரென்பதில் இன்னும் அஸ்தினாபுரம் பூடகமே பூண்டிருக்கிறது. ஆனால் யாரெவர் குறுக்கிடினும் நான் இந்த அஸ்தினாபுரத்தை உன் பிள்ளைகளுக்கே உரிமையாக்குவேன். என் வார்த்தைகள் சபதம். எனை நீ நம்பு.’

அவனுறுதியில் அவளுக்கு ஐயமிருக்கவில்லை. அவன் செய்வான். அவள் அவனை நன்கறிந்தவள். அதுவே அவளது அவன்மீதான காட்டத்தினை மெல்ல அழித்தது. ‘நீ இருந்தால் எனக்கு பெரும்பலம்தான்’ என்றாள் அவள்.

‘நானும் உடனுறைவேன்’ என்றாள் சுகர்மா.

‘நீ இனி என் சூதின் ஒரு பாதியாக இருப்பாய், சுகர்மி. என் சோதரிக்கு பார்வையாயுமிரு. சரி, செல்லவேண்டும் நான். தெம்பாயிரு, காந்தாரி. காந்தாரத்திற்கு மணநாள் அறிவிக்கத் தூது சென்றுவிட்டது. நாளை மறுநாள் தாய் தந்தையரை இங்கு எதிர்பார்க்கிறேன். அவர்கள் முன்பாகவும் நீ உன் உள்மனம் காட்டவேண்டியதில்லை. விதி வலியதெனினும் அதையும் நாம் மாற்றுவோமென நினைத்து ஆறுதலடை’ என்றுவிட்டு உண்மையில் அவசரமான காரியம் உண்டுபோல விரைவாக நடந்தான் சகுனி.

திருமணம் நடைபெற்றது; குழந்தைகள் பிறக்கத் தொடங்கின. அஸ்தினாபுரம் வந்த ஓரிரு நாள்களில் கண்டிருந்த மாளிகையின் ஓரிரு புறம் தவிர வேறறியா காந்தாரி மகிழ்வுடனேயே காலத்தைக் கழித்துக்கொண்டிருந்தாள். கண்களைக் கட்டிய நிலையில் கட்டிலின்பம் தவிர வேறெதனதும் முழுமையற்ற இன்பத்தையே அவளால் அனுபவிக்க முடிந்திருந்தது. அதை அவள் உணர்வதிலிருந்து காலம் பெரும்பாலும் அவளை விலக்கியிருக்கவில்லை. முழுமையாக எல்லாம் அனுபவித்தது சகுனியாகயிருந்தான். எந்த வித்தையின் முன்பும் அவன் தன் மருகர்களுக்குப் பயிற்றுவித்த வித்தை வஞ்சமாக இருந்தது. வஞ்சம் உலகையாள போதுமென்றிருந்த அவர்களும் வேறு வித்தைகள் பழக ஆர்வமற்றுப் போனார்கள். நற்போக்கு ஓரளவு கண்ட விகர்ணன்போலும் துச்சலைபோலுமான ஓரிரு குழந்தைகள் தவிர பிறவெந்தக் குழந்தையும் ஒன்றேபோல் வளர்ந்து கௌரவ குடியில் பல சகுனியர் ஆயினர்.

துரியோதனன் தலைமகனாகயிருந்தான். மாமனின் சொல் பிசகாத மருகனெனப் பெயரெடுத்தான். அவனில் தீராத ஆசைகளை எழுப்பினான் சகுனி. அதுவே வஞ்சகத்தின் வாய் திறப்பதென்பதை அவன் சரியாகவே கணித்திருந்தான். தன்னதுகளில் அவர்களை அவன் கொள்ளவைத்த ஆசையானது பிறரதுகளிலும் கொள்ளும் நெருப்பாக அவர்களில் பரிமாணம்பெற்றபோது அவர்கள் செயலுக்குத் தயாராகிவிட்டதை சகுனி உணர்ந்தான்.

4

அவனது செயற்றிட்டம் என்னவாகயிருந்தது? யாருமதை அறியாதிருந்திருந்தார்கள். ஆனால் சகுனி தன் திட்டத்தை கணிதக் கூர்மையுடன் தீட்டியிருந்தான். காலத்தில் சூழ்நிலைக்குத் தக ஏதோவோர் அளவில் தடங்கல் ஏற்படக்கூடுமாயினும் அதையும் முன்னனுமானித்து மாற்று ஏற்பாடுகளை அவன் கைவசம் கொண்டிருந்தான்.

கௌரவர்களுக்காக பாண்டவரை இள வயதினிலேயே அழிப்பதற்கும் அவனிடத்தில் திட்டம் இருந்தது. குறைந்தபட்சம் பீமனையாவது கொன்றுவிட அவன் கருதினான். குந்தியால்மட்டுமே அதை உணரமுடிந்திருந்தது. விதுரரே அதை புள்ளிவைத்துக் காட்டினாரென்பதிலிருந்து அவரும் அதை அறியாதிருந்தாரெனக் கொள்ளலாம். இந்த வலயங்களுக்கு அப்பால் சத்தியவதிக்கும் ஆடுகளத்தின் போக்கு புரிந்திருந்தது. ஆனால் அவள் கௌரவ வம்சத் தூய்மையில் மிகு நம்பிக்கை வைத்தவளாயிருந்ததில் சிலவற்றைத் தன் கண்கள் காணாமலிருக்க கற்றுக்கொண்டாள்.

அதுவொன்றுமறியாத ஏமாளியாகவும் துரியன்மீதான பயவாளியாகவுமிருந்தான் யுதிர்ஷ்டிரன். இந்திர பிரஸ்தத்தின் அரக்கு மாளிகை புரோசனனால் பாண்டவர் உள்ளிருப்பதாக எண்ணி தீவைத்து அழிக்கப்பட்டதற்கும் பின்னாலேயே அதை துரியோதனனின் பொறாமை செய்த வினையாக அவன் கொண்டான். அதையும் துரியனின் உடம்பில் சகுனியின் சிரமேறி நின்று செய்த தீவினையாகவே அவனால் கொள்ளக்கூடியதாகயிருந்தது. கௌரவர்களிடத்தில் ஆசையையும், பாண்டவர்களிடத்தில் ஆத்திரத்தையும் ஒற்றை வினையால் விதைத்ததின்மூலம் எல்லாம் அவனால் சாதிக்கப்படக்கூடியதாகயிருந்தது என்பதை அர்ச்சுனனின் நண்பனான கிருஷ்ணன் மட்டுமே அறிந்தான். ஆனால் மாற்று அவனும் அறியாததாகவே இருந்தது.

எல்லாம் மீறி விதிவழி விளையாட்டில் பாதி ராஜ்யமெனக் கொடுக்கப்பட்ட காண்டவ வனமென்ற இடம் பாண்டவர்களுக்கான இந்தர பிரஸ்த நகராக ஒருபோது உருவெடுக்கின்றது.

அத்தனை நிகழ்வுகளாலும் தான் ஏற்கனவே வகுத்திருந்த சூதின் கூர்முனைகள் முறிந்தே வந்திருந்தனவென்பதைக் காலம் விறைப்பாக சகுனிக்கு உணர்த்தியது. இனி அவன் வஞ்சத்திலல்ல, சூதில் தன் கருத்தைப் புகுத்தியாகவேண்டும். எதார்த்தத்தைப் போலியாகத் தோன்றச் செய்து, அதன் வழியில் ஓர் அழிவைச் செய்யும் எத்தகைய செயற்பாடும்கூட சூதாகவே கருதப்படும். அதை பகடை வழியில் செய்யமுடியுமெனில் அது விசேஷமானது.

சகுனி தன் காய் நகர்த்தல்களை அவ்வழியில் சாதுர்யமாய் ஆரம்பித்தான்.

ஒருபோது இந்திர பிரஸ்த மாளிகைக்கு துரியனாதியோர் விருந்தாட்டுக்கு அழைக்கப்படுகிறார்கள். ஆசையின் விளைநிலமாய் ஏற்கனவே பதப்படுத்தப்பட்டிருந்த கௌரவர்களிடத்தில் திரௌபதிமேலான ஆசையேபோல மாளிகையில் ஆசை பிறக்கிறது. அந்தநாள் கௌரவர்களால் மறக்கப்பட முடியாதது. அன்றுதான் மாளிகையே கலீரிடும்படியான தன் நகைப்பை கௌரவர்களைநோக்கி பாஞ்சாலி சிதறினாள்.

மாயதந்திரம் நிகழ்கிறது. இந்திர பிரஸ்தத்தில் கெளவர்கள் சூது விளையாட பாண்டவர்களை அழைக்கிறார்கள். அது ஒரு அரச குல பொழுதுபோக்கு விளையாட்டுத்தானேயென தன் இரகசிய ஆசையை அங்கே பிரஸ்தம் செய்கிறான் யுதிர்ஷ்டிரன். ஆனால் அதையே விதியின் வழி நின்று பெருஞ்சூதாய் மாற்றுகிறான் சகுனி. பணயம் வைத்துப் பகடையாடிய தருமன் தன் முடி, தன் உடைவாள், தன் ஆரம், தன் நிதிக்குவை, தன் அரசு, தான், உடன் பிறந்த தம்பியர், இறுதியாக திரௌபதியென தன்னின் பொருளுடைமை, உறவுடைமை சகலதும் இழக்கிறான்.

துச்சாதனன் பாஞ்சாலியின் கூந்தல்பற்றி இழுப்பதும், துரியனவையில் அவள் துகிலுரியப்படுவதுமென எல்லா எல்லைகடந்தனவும் நிகழ்கின்றன. பன்னீராண்டு கால வனவாசமும் ஓராண்டு வனவாசமுமென சூதின் பணய நிபந்தனை இறுதியாக பாண்டவர்க்கு கனவு வாசலொன்றைத் திறக்கிறது. வனவாச காலத்தின் பின்னான அஞ்ஞாதவாச காலத்தின் ஓராண்டு கச்சிதமாக நிறைவேற்றப்படின் இழந்த ராஜ்யம் மறுபடி பாண்டவர்வசமாகுமென்ற வார்த்தை திருதராஷ்டிரனால் தெரிவிக்கப்படுகிறது.

அவற்றின் விளைபொருளான தீமையின் உருப்பெருக்கமே அப்போது குருசேத்திர யுத்தமாய் உருவாகியிருக்கிறது. அதை அவளுக்காக சகுனியே செய்தான். பெரும் அரசியல்ஞானியான கிருஷ்ணனால்கூட அந்த நிலைமையை வழிப்படுத்த முடியாது போய்விட்டதே! ஆனால் வெற்றி எவர் பக்கமாயினும் பழி என்னவோ அவள்மீதும் சகுனிமீதும்தான் வந்து விழப்போகின்றது. குந்தவி, பாஞ்சாலி யாரும் அதற்காகக் கருதப்படவே போவதில்லை.

ஆனால் அன்றைய களத்தில் சகுனியின் தேர் மறைந்திருந்ததின் மர்மம் அவளுக்குத் தெரியவில்லை. அங்கேயும் ஒரு வஞ்சச் சூதில் சகுனி இறங்கியிருக்கிறானோ? அல்லது கிருஷ்ணனே வாட்டத்துடன் கண்டு திரிந்த அப் பெரும் போரில் மரணமும் அழிவும் கொண்டிருந்த விஸ்தீரணம் அவனைத் திகைத்து ஒழியவைத்ததோ?

காந்தாரி யோசித்திருந்த சமயம் வெளியே விடியல் புலனாக, அந்தப்புரத் தாதியர் துயிலுணர்ந்துவிட்ட அரவமெழுந்தது. யுத்தத்தின் இரண்டாம் நாள் ஆயிற்று.

5

கிருஷ்ணனது அரசியல் ஞானம் மெச்சப்பட்டிருக்கிறது பல விடங்களில், பல சமயங்களில். அப்படியானவனின் குருசேத்திர யுத்த பங்களிப்பின் விதம் கவனிப்புக்குரியது. ஒரு பசுநிரை மீட்புப் போரில் பார்த்தன் கேட்டான், ‘கிருஷ்ணா, நான் பார்த்திருப்பேன் என்று சொன்னாயா? காத்திருப்பேனென்று சொன்னாயா?’வென. ஆம், அவன் களத்தில் இருந்திருந்தும் ஒதுங்கியிருந்த தருணங்கள் உள. அவையெல்லாம் குருசேத்திரப் போரின் பங்குபற்றுகைக்கான பயிற்சிபோலவே ஆகியிருக்கின்றன. ஆயினும் அவன் யுத்தங்களை வெறுத்தானென்பதன் அடையாளமும்தான் அவையெல்லாம்.

போர் தொடங்குவதற்கு முன்பாக, பாண்டவர் அஞ்ஞாதவாச காலத்தை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்த உடனடியாகவே இரு தரப்புக்குமான சந்துப்பேச்சில் இறங்கியவன் கிருஷ்ணன். பாதி ராஜ்யத்திலிருந்து, ஐந்து ஊர்கள், குறைந்தது ஐந்து வீடுகள்வரை பாண்டவருக்காகக் கேட்டவன் அவன். அக்கணம்வரை உண்மையில் ராஜ்யமானது பாண்டவரதா கௌரவரதா இருவரினதுமாவென்ற தெளிவின்மையை அவன் கொண்டிருந்தான். ஆனால் ஒரு வித்தியாசமான நினைப்பு ஆயுதமேற்காது போரில் பங்கேற்கும் நிலைமை அவனுக்கு அந்தப் போரில் ஏற்படுத்தியது. அதிலிருந்துமே விலகியோடும் அவசம் அவன் கொண்டது விந்தை.

நேற்றொரு விந்தை நடந்தது.

யுத்த ஆரம்பத்தின் பூஜைகளெல்லாம் நற்பொழுதில் நிறைவேற்றி விடியும்பொழுதுக்காய் இரு பக்க சேனைகளும் காத்திருக்கின்றன. எழுந்திருந்த சமுத்திரமனைய ஆரவாரங்கள் மெல்லத் தணிந்து படையினருள் ஓர் அழிப்பின் உத்வேகம் உறுமத் தொடங்கியிருக்கிறது. முதல்நாள்வரையில் போர்களில் சக அணியினராய் இருந்தவர்கள் அப்போது எதிரணிக்கு மாறியிருக்கிறார்கள்; எதிரணியிலிருந்து வெட்டிச் சாய்த்தவர்கள் சக அணியினராய் பக்கத்தில் நின்றுகொண்டிருக்கிறார்கள். அது ஐயத்தை விளைக்கிறது. மாற்றணியிரனருக்கெதிராய் ஆயுதத்தை ஏந்திவிட்டாலும், உறவினருக்கெதிராய் அதைச் செய்வதெப்படி? இரண்டு நாள் முன்னர் வரை மாமன், மச்சான், பெரியண்ணா, சிற்றப்பா என அழைக்கப்பட்டவர்கள் அவர்கள். எல்லோருக்கும் இல்லாவிடினும் பலருக்காவது அத்தகு மனநிலை உருவாகிவிட்டிருக்கக்கூடும். எல்லாம் கிருஷ்ணன் எண்ணிக்கொண்டிருக்கிற பொழுதில் ஆயுதங்களைக் களைந்துவிட்டு அர்ச்சுனன் தேர்த்தட்டிலிருந்து குதித்திறங்கி அப்பால் நகர்கிறான். கண்ட கிருஷ்ணன் திகைத்துப்போனான். ஆயினும் தான் எண்ணியபடி உறவினர்க்கெதிராக ஆயுதமெடுத்தலின் அவனது மனஹிம்சையையே காரணமெனக் கருதினான். அப்படி அது நடந்திருந்தாலும் பெரும்பிழை ஆகிவிடாது. ஆனால் நடந்தது வேறு.

தொடர்ந்தோடிய பார்த்தன், ‘அர்ச்சுனா, என்ன ஆனது?’ என அலறிக் கேட்டான்.

‘பார். எதிரில் நிற்பவர்கள் யார் யாரென காண்கிறாயல்லவா? எப்படி எதிர்கொண்டு நிற்பது?’ என்றான் அர்ச்சுனன்.

‘யுத்தம் இனி தவிர்க்க முடியாதது, அர்ச்சுனா.’

அர்ச்சுனன் சிரித்தான். ‘அதை, நீ ஐந்து வீடுகளைக் கேட்டு, அதுவும் கிடைக்காது உன் தூதில் நீ தோற்றுத் திரும்பிய அன்றே நான் தீர்மானித்துவிட்டேன். ஆனால் எதிர்கொள்ள முடியாமலிருப்பது எதிர்நிற்கும் துரோண ஆசாரியரும், பீஷ்ம குருவும், கிருபரும், விதுரரும், சல்லியன் மாமாவும் இன்னும் பல உறவினர்களையும்தான்.’

‘எமது அணியில் இல்லாதவர் எதிரணியினர்களே ஆகிறார்கள்.’

‘அதிலெனக்குச் சந்தேகமில்லை. அவர்கள் எதிர்க்கப்படவேண்டியவர்களே என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை. அவர்கள் எம்மீது அம்பு செலுத்தத் துணியுமளவு நான் கோழைமையும் கொண்டுவிட மாட்டேன். ஆனால் அவர்கள்மீதான நெடுநேர நோட்டம் என் இறுக்கத்தைத் தளர்த்திவிடுமோவென்றுதான் எனக்குப் பயமாக இருக்கிறது, கிருஷ்ணா. அது நிகழாதிருக்கவே அவர்களை நோக்காதபடிக்கு கீழே வந்து நின்றிருக்கிறேன்.’

திகைப்பிலிருந்து மீண்டு, ‘நல்லது, அர்ச்சுனா’ என்றான் கிருஷ்ணன்.

அந்த உரையாடல் நேற்று அந்தளவோடு முடிந்தது.

ஆனால் எந்த அவலங்களை அர்ச்சுனன் கொண்டுவிட்டானோவென நேற்று அவனைத் தேற்றத் தயாரான கிருஷ்ணன், ஒருநாட் போருடைய உயிர் ஊன் அழிவுகளில் பேரவலம்கொண்டு ஆவியின் உருநிலையெடுத்து பேயாய் அலைந்துகொண்டிருக்கிறான்.

அவன் நிகழ்ந்த அழிவுகளைக் கண்டும், நிகழப்போகும் அழிவுகளை உய்த்துணர்ந்தும் அலமந்திருக்கிறானென்று தெளிவாகவே தெரிந்தது. அது, அப்படியானவனுக்கு அங்கேயென்ன வேலையென்ற கேள்வியை உருப்படுத்துகிறது. அவனை அங்கிருந்து ஓடாமல் தடுக்கிற அம்சம் எதுவென்ற கேள்வியாய் அது விளைகிறது.

கிருஷ்ணன் மனத்தில் விரியும் சகுனியின் முகம் அவனுக்கொரு பதிலை அளிக்கிறதா?

மணவினையின் பின் சகுனி அஸ்தினாபுரத்தில் காந்தாரியோடு தங்கியிராது இருந்திருந்தால் காந்தாரி அந்தளவு ஆக்ரோஷத்தின் வீறுகொண்டவளாய் ஆகியிருக்க மாட்டாள். சகுனி அங்கே செவிலித் தாய்போல் கொளரவர்களை வளர்க்கத் துவங்கியிராவிட்டால் அவனது மருகர்களும் அதீத ஆசை கொள்பவர்களாய் வளர்ந்திருக்க மாட்டார்க்கள். சகுனி அங்கே இல்லாதிருந்திருந்தால் இந்திர பிரஸ்தம் வந்த கௌரவர்கள் சூதாடும் எண்ணம் கொண்டிருந்தாலும் பெருநிதியும் மனிதப் பணயமும் வைக்க உடன்பட்டிருக்கமாட்டார்கள். கிருஷ்ணன் தூதுசென்ற வேளை சகுனி அங்கே இல்லாதிருந்திருந்தால் கௌரவர்கள் அவ்வளவு பிடிவாதமாக அந்தளவு ராஜதந்திரனான கிருஷ்ணனுக்குத் தோற்காது இருந்திருக்க மாட்டார்கள். ஐந்து ஊர்களுக்காவது சம்மதித்திருப்பார்கள். அதன்வழி யுத்தம் எழாதிருக்க நிறைய வாய்ப்பிருந்திருக்கிறது.

அக்ரோணிக் கணக்கான இந்தளவு சைன்யத்தின் மொத்தமான அழிவின் முன்னதாக சமாதானமொன்று பகரப்பட்டு இந்த யுத்தம் நின்றுபோக நிறைய வாய்ப்பிருக்கிறது. ஏன், யுதிர்ஷ்டிரனேகூட, ‘வாடீ என் பாஞ்சாலி, போய் காலமெல்லாம் ஆடுவோம் வனவிளையாட்டு’ என கூவிக்கொண்டு அவள் கைப்பிடித்தோடவும் கூடும். வன வாழ்வில், வான வாழ்வுபோல் அப்படியோர் ஆறாத் தாகம் தன்னிடமிருப்பதை ஒருபோது மனந்திறந்து கிருஷ்ணனுக்கு அவன் கூறியும் இருக்கிறான். சாத்தியமாயினும் அதைக்கூட, பாண்டவர் முற்றாய் அழியும்வரை நிகழ விடமாட்டான் சகுனி. மேலும் யுத்தமே தொடர்ந்தாலும் களத்தில் அவனது சூது பாண்டவ வீரத்தை ஒடுக்கி கௌரவர்களின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கவே செய்யும்.

நட்பு காரணமாயன்றி அந்த யுத்தத்தில் பங்குபெற வேறு காரணம் இல்லை கிருஷ்ணனுக்கு. பாஞ்சாலிக்கு அண்ணனாவது, நண்பனது மனைவி என்பதனாலேயாகும். அவளது சபதமா, யுத்த நிறுத்தமா முதன்மையென தீர்மானிக்கும் அதிகாரம் அவனிடமிருக்குமானால் கூந்தலை விரித்தபடி நடந்து திரிவதே அவளது அழகுக்கு அழகு சேர்ப்பதாயிருக்கிறதென அவன் தயங்காது பாடல் செய்துவிடுவான். யுத்த அழிவு, நாடுகள் அறிந்ததேனும் குருசேத்திர அழிவு கதாபாடல்களும் கண்டிராததாயிருக்கும். அதனால் யுத்தம் அவனது வெறுப்பின் முழு வடிவம் கொண்டிருந்தது.

முதலாம் நாள் போரில் பல மகாரதர்களை கிருஷ்ணன் கண்டிருந்தான். ஆனால் சகுனியின் தேர்க் கொடியைக்கூட அவனால் கண்டிருக்க முடியவில்லை. அதுவே அவன் வஞ்சத்தின் சூதை பாண்டவர்க்கெதிராய் அன்றைக்கே தொடக்கிவிட்டதன் அடையாளமும் ஆகக்கூடும். அதனால் அவன், கிருஷ்ணன், அந்த யுத்தகளத்தில் பிரசன்னமாவது தவிர்க்க முடியாதது. அவன் மட்டுமே சகுனியின் சூதை எதிர்கொள்ளக்கூடிய ஒரே ஆத்மா துவாபர யுகத்தில். இன்னும் துல்லியமாகச் சொல்லப்போனால் சகுனியின் சிரம் துரியனின் தோளில் இருக்கும்வரை அது அவசியமாகிறது. துரியன் சகுனி தலையால் யோசிப்பவன்.

கிருஷ்ணன் திரும்பவும் பாசறையைச் சமீபித்தபோது பாசறைகளுள் அரவங்கள் எழுந்துகொண்டிருந்தன. அவன் சாரதியத்திற்குத் தயாராகத் தொடங்கினான்.

– தாய்வீடு, இணைய இதழ், ஆகஸ்ற் 2021

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *