குளம்பொலி

 

“என்ன சப்தம்?”

…………………..

“யாரங்கே?”

நிசப்தம்…….

அந்த யாமத்தின் மத்திமப்பொழுதில் இலேசான குளம்பொலிகள் கேட்டன. உற்றுக் கேட்ட நந்திவர்மன், அக்குளம்பொலிகளின் ஓசையைக் கணித்து, குடிலைவிட்டு வெளியேறித் தன் புரவியைத் தேடினான்.

“உதயா…..!’ நந்திவர்மனின் குரல் வசியத்தில் ஈர்க்கப்பட்ட உதயன் அமைதியாக அவனருகே சென்று சென்னியைத் தாழ்த்தி, தனது பிடரி மயிரை நந்திவர்மன் கோதிவிட வழிவகுத்தது. பலநாள் காத்திருப்பு ஆயிற்றே! அச்சிலநிமிடக் கிறக்கத்தின் பிடியில் இருக்கையில்…

“காலம் கனிந்ததோ?”

அவ்விருளிலும், உதயனின் வால் காற்றில் மிதந்து ‘ஆமாம்’ எனச் சொன்னவிதம் அழகோவியம்!

மந்திரப் புன்னகை முகத்தில் இழையோட, உதயனின் மேல் அனாயாசமாக ஏறிக் கம்பீரமாக அமர்ந்த நந்திவர்மன், உதயன் கூட்டிச்சென்ற வழியே பயணம் தொடங்கினான். பரிமேல் அமர்ந்து பயணித்த, அவன் தோளழகும், சிகையழகும், மார்பழகும் வருணிக்க வார்த்தைகளில்லை! வானமும் வனமும் முத்தமிடும் பாதைவழி அவர்கள் பயணம் தொடர்ந்தது. வழி நெடுக வளர்ந்திருந்த தைல மரங்களினின்று கசிந்த நறுமணம், இளவெயினியின் அருகாமையை அவனுக்கு நினைவூட்டியது.

‘இளவெயினி…..’ எத்தனை அழகு அவள்! முழுநிலவின் ஒளியில் தெரியும் அல்லி மலரின் களங்கமில்லா அமைதியான அழகு! இச்சிறிய வயதில்தான் எத்துணைத் தெளிவு! அருகாமையை அனுமதித்தவள் அணைத்திடச் சிறிதினும் இடந்தந்திலள்!

‘களவுமணம் தவறில்லை என்ற எண்ணம் கொண்டிருந்த என்னையே கரைத்து, கற்புமணம் சிறப்பென உணர்த்திய எழில் தாரகையே! குறுநில மன்னனின் மைந்தன் எந்தன் இதயத்தை உன்வசப்படுத்தி, அது இருந்த இடத்தையே வெற்றிடமாக்கியவளே!’

‘நெருங்கிவிட்டேன் என் அமுதமே!’

‘காத்திரு! இன்னும் சில வினாடிகள்தாம்!’

‘பகலவன் துயிலெழும் நேரம் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது! நாம் ஒன்று சேரும் நேரமும்தான் என் கண்மணியே!’

நிலவவன் துயிலச்செல்ல, பகலவன் விழித்தெழும் வைகறையில், அதோ! அங்கே உப்பரிகையில், ஒளிதிகழ் அழகுடன், கோடி நட்சத்திரங்களின் பேரெழிலுடன், கடைவிழி காதல் சொல்ல, சிற்றிதழ் புன்னகை தவழ, காத்திருந்த இளவெயினியின் அழகில் மயங்கிக் கிறங்கிய நந்திவர்மனின் கைகள் தந்த சமிக்ஞையை உணர்ந்த உதயன், இலாவகமாகத் தன் நடையைத் தளர்த்த, குளம்பொலி சன்னமாகக் கேட்டு நின்றது!

“கதை ரொம்ப நல்லா வந்திருக்கு பாலா. ஆனா நீங்க சொல்ல வர்றது எல்லார்க்கும் புரியுமா?!? இன்னும் தெளிவா சொல்லலாமோன்னு தோணுது.” என்றார் ஞானசூரியன் பத்திரிக்கையின் ஆசிரியர்.

“சொல்லிடுவோம்,” பாலா.

“அன்னையே! அவளன்றி என்னால் ஒரு நாளும் அவனியில் வாழ்வதென்பது அரிது. தந்தையின் மனமறிந்து தாங்கள்தாம் அவரிடம் எனக்காகத் தூது செல்ல வேண்டும்! செய்வீர்களா?” எனக்கேட்ட நந்திவர்மனிடம்,

“மான்விடு தூது, மயில்விடு தூது, அன்னம்விடு தூதெல்லாம் கேட்டிருக்கிறோம். இது ஏதடா அன்னைவிடு தூதாக உள்ளதே!”

“சிறு பாலகனாய் மரக்குதிரை உருட்டி, நீ விளையாடிய காட்சி இன்னும் என் மனத்தில் இருக்கிறதடா! புரவியேறிப் பல நாடுகள் கடந்து, ஒரு பெண்ணையும் உன் வசப்படுத்தி மணம் புரியும் பருவம் அடைந்துவிட்டதை இம்மனம் ஏற்க மறுக்குதடா!”

வாஞ்சையோடு அவன் நெற்றியில் முத்தமிட்டு, பேருவகையோடு, “நல்ல செய்தி விரைவில் கிட்டும்! சற்றே பொருத்திரு!”

அன்னையின் அர்த்தம் பொதிந்த வார்த்தைள் நிம்மதியைத் தர, நித்திரைப் படகில் பிரயாணித்தவனை, அவனின் மாந்தளிர் மேனியள் கனவில் வந்து அணைத்தனள்.

உறக்கத்தில் பிதற்றியவனின் உளம் அறிந்த அன்னை, போர்வை கொண்டு போர்த்திவிட எத்தனிக்கையில், தன் செய்கை அவன்தன் ஆனந்தத் துயிலைக் கலைத்திடுமோ என்றெண்ணி, வந்த வழி திரும்பினள்.

மாலையில், சோலையில் உலவுகையில், அங்கே நின்ற மயிலின் அழகு இளவெயினியின் தோற்றத்தை நினைவூட்டி அவனின் உளம் முழுதும் ஆக்கிரமிக்க, அன்னையின் அழைப்புகூட காதில் விழவில்லை. யாரோ துயிலெழுப்பியதைப் போல் உணர்ந்தவன், அருகில் நிற்கும் அன்னையின் குறும்பு நகையைக்கண்டு, “காயா பழமா?” என வினவினன்.

“எது வேண்டும் உனக்கு? அதுவே கிட்டும்!” என நகைத்த அன்னை,

“இளவெயினியை நாங்களும் பார்க்க வேண்டாமா? நாளையே புறப்படுவோம்! மணநாள் குறித்து வருவோம்!”

விமானம் இல்லாமலேயே ஆகாயத்தில் பயணித்த நந்திவர்மனின் காதுகளில், அன்னை அதற்கு மேல் பேசிய எதுவுமே விழவில்லை!

கனவு நனவாகும் காலம் வந்துவிட்டதை எண்ணி உளம்பூரித்த நந்திவர்மனும் இளவெயினியும், இரு குடும்பத்தினர் முன்பு ஒருவருக்கொருவர் சந்திக்கப்போகும் அத்தருணத்திற்காகக் காத்திருந்தனர்.

காத்திருத்தல்தானே காலம் காலமாய்க் காதலின் அடிப்படைப் பாடம்!

தன் மனங்கவர்ந்த காதலனுடன் உடன்போக்குக் கொள்ளாத தன் மகளின் ஒழுக்கத்தால் பெருமிதம் கொண்டாலும், இளவெயினியின் பெற்றொர் நந்திவர்மனின் குடும்பத்தினரை பணிவுடன் வரவேற்றது, அக்குடும்பத்தினரின் பரம்பரைக் குணத்தைப் பறைசாற்றியது.

சந்தனச் சிலை நடந்து வருவது போன்றதொரு பிரமிப்பை அனைவருக்கும் ஏற்படுத்திய இளவெயினியின் அழகு நந்திவர்மனுக்கு மீண்டும் ஒரு கிறக்கத்தைத் தூண்டியது.

ஏறெடுத்தும் பாராமல் தலைக் குவிழ்ந்து நின்ற இளவெயினி, மாந்தளிர் விரல்களால் தனது சேலையின் நுனியைத் திருகுவதையும், கால்கள் கோலம்போட எத்தனித்து அதை உடனே நிறுத்தச் செய்த முயற்சியையும் நந்திவர்மன் கவனிக்கத் தவறவில்லை.

நந்திவர்மனுக்கும் இளவெயினிக்கும் இடையே நடந்த இந்த மௌனப் பரிவர்த்தனைகளை அவையோரும் கவனிக்காமலில்லை!

அங்கே அனைவரின் மௌனமும் அழகான சம்மதமாக உணரப்பட்டாலும்…..

“வனவாசம் செய்வீரோ, ……தங்கள் இளவெயினிக்காக?” இளவெயினியின் தந்தை தொடுத்த இக்கேள்வி அனைவரையும் ஒரு கணம் உலுக்கிவிட்டது.

வெகுண்டெழுந்த நந்திவர்மனின் தாயை, மெல்லிய புன்னகையால் கையமர்த்திய கணவன், “அவர்கள் பேசிக்கொள்ளட்டும், நடப்பதை அமைதியாகக் கண்டு இரசிப்பாயாக!” எனக் கண்களால் விடுத்த செய்தியை உடனே படித்து அமைதியுறலானாள்.

‘…..தங்கள் இளவெயினிக்காக’ என்ற சொல் இளவெயினிக்கான அவனின் ஏகதேச உரிமையை ஒருவாராக அவனுக்குப் பறைசாற்ற,

“வனவாசம் மட்டும்தானோ? எத்துணைக் காலம்?” நந்திவர்மன்.

“தங்கள் உதயனின் குளம்பொலி கேட்கும்வரை!”

“விளங்கவில்லையே?” நந்திவர்மன்.

“தாங்கள் சம்மதிக்கும் இந்த நிமிடம், உதயன் உங்களை நம்மிரு நாடுகளுக்கும் புறத்தே விரவியிருக்கும் காட்டில் கொண்டு சேர்ப்பான். அங்கேயே தாங்கள் தங்கி, தங்கள் வாழ்வை நடத்தவேண்டும்! அங்கே தாங்கள் நடத்தும் வாழ்க்கை என்பது தங்கள் சாமர்த்தியத்தைப் பொறுத்தது. என்றாவது ஓர் யாமப்பொழுதில் தாங்கள் கேட்கப்போகும் உதயனின் குளம்பொலி சத்தமே மீண்டும் தாங்கள் இங்கு திரும்பி வருவதற்கான கணையாழி! அன்றைய விடியும் பொழுது தங்களின் மணநாளுக்கான அனைத்து ஏற்பாடுகளுடன் தயாராக இருக்கும்.”

“விடைகொடுங்கள்!” எனத் தனது பெற்றொரின் பாதங்களில் விழுந்து ஆசி பெற்றுச் சென்றான் நந்திவர்மன்.

இருவரின் தந்தையரும் அர்த்தமாய்ப் புன்னகைத்துக்கொண்டனர்.

உதயன் ஓர் அழகான வனத்தில் நிற்க, நந்திவர்மன் அதன்மேனின்று இறங்கி அதன் பிடரியைத் தடவ, முன்னும் பின்னுமாய் நடந்த உதயனின் தவிப்பை நந்திவர்மன் உணராமலில்லை. இப்போது நந்திவர்மன் உதயனைத் தட்ட, அது ‘செல்!’ என்பதாய்ப் புரிந்துகொள்ளப்பட்டு அங்கிருந்து கிளம்பியது உதயன். அவனின் குளம்பொலி கேட்டு மறையும்வரை அதன் வழித்தடத்தைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்தான் நந்திவர்மன்.

மாளிகையில் வாழ்ந்தவன் மண்குடிலில் வாழலானான். அறுசுவை உணவருந்தியவன் காட்டுவாசியைப் போல் கிடைத்ததைப் புசிக்கலானான். பட்டும் பீதாம்பரமும் உடுத்தியவன் மிருகங்களின் தோல் போர்த்தலானான். எல்லாம் காதல் தரும் பலம்!

ஆனால் இவை எதுவும் அவனுக்குத் துன்பத்தைத் தரவில்லை இளவெயினியைப் பிரிந்திருப்பதைப் போல! இளவெயினியைக் காணாமல் நிமிடங்கள் யுகங்களாய் உருண்டோடினாலும், உதயனின் குளம்பொலி விரைவில் கேட்கும் என்ற நம்பிக்கையுடன் வனவாசம் வாழலானான்.

நிமிடங்கள் மணித்துளிகளாய், நாட்களாய், வாரங்களாய், மாதங்களாய்…….ஹா உருண்டோடிய அந்த ஒரு யாமப் பொழுதில்… உதயனின் குளம்பொலி கேட்க….

“அதுக்கு மேல நடந்தது என்னான்னுதான் நமக்குத் தெரியுமே!” பாலா.

“நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, உதயனின் குளம்பொலி கேட்டு அதன்மேலேறி நாடு திரும்பியவன் அந்த இனிய காலைப் பொழுதில், இளவெயினியின் கைப்பிடித்தான். சுபம் சுபம் சுபம்!”

“இப்போ சொல்லுங்க! குளம்பொலி எப்படி இருக்கு?” 

தொடர்புடைய சிறுகதைகள்
“நாராயண... நாராயண...” என்றவாரே நுழைந்த நாரதரை யாரும் கண்டுகொண்டதாய்த் தெரியவில்லை. சிவன் ஐஃபோன் 8-இல் பூலோகத்து அப்டேட்ஸ் பார்த்துக்கொண்டிருக்க, இன்னொரு ஐஃபோன் 8-இல் பார்வதி வாட்ஸ்ஆப்பில் எதையோ அவசர அவசரமாக அனுப்பிக்கொண்டிருக்க, வினாயகரும் முருகரும் ஆளுக்கொரு ஐஃபோன் 8-இல் ‘கிரிட்டிக்கல் ஆப்ஸ்’, ‘கிளாஷ் ...
மேலும் கதையை படிக்க...
சதுர சாளரம் வழியாகச் சீரான தூறல்களைப் பார்த்துக்கொண்டிருந்த அவளுக்கு எழும்பிய மண்வாசனை பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது. அருண், “சந்தியா, செரங்கூன் ரோட் பக்கம் ஒரு சின்ன வேலை இருக்கு! போய்ட்டு வரலாமா?” “கொஞ்சம் இருங்க. வெளிய காயப்போட்ட துணிகளை எல்லாம் எடுத்து உள்ள போட்டுட்டு ...
மேலும் கதையை படிக்க...
“டேய்! நான் நடுரோட்டுக்கு வந்துட்டேண்டா!” என்றான் கார்த்திக். “என்னடா சொல்றே?” என்றான் மாதவன் அதிர்ச்சியுடன். “மிடில் ரோடுக்கு வந்துட்டேன்கிறதைத் தமிழ்ப்படுத்திச் சொல்றேன்டா!” கார்த்திக். “நல்லாத் தமிழ்ப்படுத்துறீங்கடா! தமிழைப் ‘படுத்துறீங்க’!” “நீ எங்கடா இருக்கே?” “நானும் அதே நடுரோட்லதான் இருக்கேன். ஆனா நான் இருக்கறது பூகிஸ் நூலகத்துக்கிட்ட இருக்கிற நடுரோடு!” ...
மேலும் கதையை படிக்க...
ரகசியங்கள்னா பெருசாத்தான் இருக்கணும்னு அர்த்தமில்லை! ஒரு அற்பத்தனமான விஷயம், அடுத்தவங்ககிட்ட சொன்னா எங்கே ரொம்பக் கேவலமா எண்ணிடுவாங்களோ என்ற எண்ணம்; மேலும் இதெல்லாம் ஒரு விஷயமான்னு கூடச் சொல்லிவிடுவார்களோ என்ற பயம்! சின்ன விஷயம்தான். நிறைய நிறைவேற்றப் படாத சின்னச் சின்ன ...
மேலும் கதையை படிக்க...
ஐ ஃபோன் எக்ஸ்
மழை
காதல் சொல்ல வந்தேன்
சின்ன விஷயம்!

குளம்பொலி மீது 2 கருத்துக்கள்

  1. dharmaraj says:

    ithu raja kambeera simma vishnu kathai thaane..?

    • chithra says:

      இது என் சொந்தக் கதை. ‘ராஜ கம்பீர சிம்ம விஷ்ணு’ கதை யார் எழுதியது? நான் இன்னும் படிக்கவில்லை. கதை எப்படி இருந்தது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)