குந்தியின் தந்திரம்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: January 23, 2017
பார்வையிட்டோர்: 119,436 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

வானத்திலே இருந்து மின்னல் ஒன்று ஓசையில்லாமல் இறங்கியதுபோல குந்திதேவியின் சிந்தனையிலே இந்த யோசனை பளிச்சென்று பூத்தது. இது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. இந்த அபூர்வமான யோசனை ஏன் அவளுக்கு முன்பே உதிக்கவில்லை. இத்தனை காலமும் அவளை ஆட்டிவைத்த சிக்கலுக்க இவ்வளவு இலகுவான தீர்வா என்று அதிசயமாக இருந்தது.

சாலிவாகன தடாகத்தின் அருகில் குந்தி தன் குமாரர்களோடு ஒரு வருடம்வரை தங்கியிருந்தாள். இங்கே தான் பீமன் இடும்பனைக் கொன்றான். அவனுடைய தங்கை இடும்பியோ பீமனுடைய யௌவன உடல்வாகைக் கண்டு மயங்கி காதல் கொண்டுவிட்டாள். குந்தியிடமே வந்து தன் காதலை பிரகடனம்செய்து பீமனை யாசித்தாள். பீமன் என்றால் தரையைப்பார்த்து காலால் கற்களை உருட்டியவாறிருந்தான். புதிஷ்டிரனக்க விஷயம் புரிந்துவிட்டது. தடை சொல்லாமல் அவர்களுடைய விவாகத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டான். அப்போதுகூட குந்திதேவிக்கு இந்த உபாயம் தோன்ற வில்லையே!

இந்த ஏகசக்கிரபுரத்து வாழ்க்கையும் அவர்களுக்கு அலுத்துவிட்டது. அதிலும் மறைவாக வாசம் செய்யும்போது ஒரே இடத்தில் இருப்பது புத்திசாலித்தனமாகாது. ராஜ குமாரர்களாகப் பிறந்துவிட்டு பிராமண வேஷம் தரித்து, பி€க்ஷ பாத்திரம் ஏந்தி எவ்வளவு காலத்துக்குத்தான் அவர்கள் நரகத்தை சுற்றி வலம் வருவார்கள். குந்தியின் குமாரர்கள் எல்லாம் உற்சாகம் இழந்து காணப்பட்டனர்.

அதிலும் பீமனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. பகாகரன் இருக்குமட்டும் பீமன் அவனை வதம் செய்வதிலேயே குறியாய் இருந்தான். இப்போது பகாசுரனும் இறந்துவிட்டான்; பி€க்ஷயும் குறைந்துகொண்டே வந்தது உணவு பற்றாமல் பீமன் மெலிந்து வருவதைப் பார்க்க குந்திக்கு வருத்தமாக இருந்தது.

அதிர்ஷ்டவசமாக இந்த சமயத்தில் பாஞ்சால தேசத்து அரசன் துருபதன் தன்மகள் திரௌபதிக்கு சுயம்வரம் நிச்சயித்துவிட்டதால் பிராமணர்கள் எல்லாம் கூட்டம் கூட்டமாக அங்கே போய்க் கொண்டிருந்தார்கள். ஐந்து தூண்களைப்போல இருந்த குந்தியின் குமாரர்கள் இந்த சுயம்பரத்தில் கலந்துகொள்ள ஆசைப்பட்டார்கள். ஆனால் இதை எப்படி குந்தியிடம் சொல்வார்கள்?

லௌகீகம் அறிந்த குந்திதேவி தன் நுண்ணிய மதியினால் இதை உணர்ந்து கொண்டாள். காம்பிலிய நகரத்துக்கு செல்லுவதற்கு அனுமதி தந்துவிட்டாள். பாண்டு குமாரர்களுக்கு உற்சாகம் கரைகொள்ளவில்லை. எல்லோருமாக பலநாள் பயணித்து சுயம்வர நகரத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே ஒரு குயவனுடைய யாகையில் இடம் செய்துகொண்டு தங்கினார்கள்.

சுயம்வரம் நாளன்று பாஞ்சால தேசம் கோலாகலமான அலங்காரங்களுடன் காட்சியளித்தது. ஆடவரும், பெண்டிரும் பட்டாடைகள் புனைந்து தங்கள் தங்கள் வீட்டு பண்டிகைபோல மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். குந்தியினுடைய ஐந்து குமாரர்களம் பிராமண வேடம் பூண்டு சுயம்வர மண்டபத்துக்கு சென்றுவிட்டார்கள். குயவனும், மனைவியும் கூட போய்விட்டார்கள். குந்திமாத்திரம் வீட்டிலே தனியாக இருந்தாள்.

அவள் மனம் சஞ்சலத்தில் மீண்டும் உழன்றது. வெகுகாலமாக மனதிலே கனன்று கொண்டிருந்த தீ இப்பொழுது சுவாலைவிட்டு எழும்பியது. அவளுடைய தீராத விசனத்துக்கு விரைவிலேயே விமோசனம் கிடைக்கக்கூடும்! தன் குமாரர்களின் பௌருஷத்தில் வைத்த நம்பிக்கை வீண்போகாமல் அவர்கள் வெற்றி வீரர்களாகத் திரும்புவார்களென்று காத்திருந்தாள்.

என்னதான் பிராமண வேடம் போட்டாலும் க்ஷத்திரிய சின்னங்களை முற்றாக மறைக்க முடியுமா! சிங்கம் போன்ற நடையும், நிமிர்ந்த செஞ்சும், தரை பார்க்காத தலையும் அவர்கள் ராஜவம்சத்தை சேர்ந்தவர்கள் என்று கட்டியம் கூறிவிடுமே! தோள்களில் நாண் உறைந்த காய்ப்புகளையும், பெரு விரல்களின் தடிப்புகளையும் எங்கே கொண்டுபோய் மறைப்பது? குந்தி மறுபடியும் விசாரத்தில் ஆழ்ந்தாள்.

அர்ஜூனன் தனுசை அநாயாசமாக வளைத்து, நாண் ஏற்றி, ஐந்து சரங்களையும் செலுத்தி மத்சயத்தை வெட்டி விடுவான் என்பதில் அவளுக்கு ஐயமேயில்லை. சுயம்வரத்திற்கு காத்திருக்கும் திரௌபதி நெருப்பிலே பிறந்தவள். துருபதராஜன் செய்த பெரும் தவத்தினால் அர்ஜூனனை மணப்பதற்கென்றே அவதரித்தவள். தேவர்களடைய அந்த வாக்கு பொய்யாகிப் போய்விடுமா? அங்கே வந்து கூடியிருக்கும் அரசர்கள் ஒரு பிராமணன் திரௌபதியை அபகரிப்பதை சும்மா பார்த்துக் கொண்டிருப்பார்களா? பீமன் தன் தோள் வலிமையைக் காட்டாமல் வரமாட்டானே!

இப்பொழுதெல்லாம் பீமனை நேரிலே பார்க்க அவள் கண்கள் கூசுகின்றன. நாணம் வந்து விடுகிறது. ஏதோ பெரும் குற்றம் புரிந்தது போல அவள் மனம் படபடக்கிறது.

அரக்கு மாளிகையில் இருந்து அவர்கள் தப்பி சுரங்க வழியாக வெளியேறி விட்டார்கள். பீமன் குந்தியை முதுகிலும், நகுல சகாதேவர்களை இடையிலும், யுதிஷ்டிரனையும், அர்ஜூனனையும் தோளிலும் வைத்துக்கொண்டு புயல்போல வேகமாக நடக்கிறான். எங்கே துரியோதனனுடைய ஒற்றர்கள் பார்த்து விடுவார்களோ என்ற கவலை வேறு. விதுரன் முன்னெச்சரிக்கையாக ஏற்பாடு செய்திருந்த படகுக்காரன் மூலம் கங்கையைக் கடந்து தென்திசையாக செல்கிறான். எண்பது யோசனை தூரம் கடந்தாகிவிட்டது. பயங்கரமான காடு, களைப்பே அறியாத பீமனுக்கு அப்போது களைப்பு மேலிட்டுவிடுகிறது. சிறிது இளைப்பாறலாம் என்று பார்க்கிறான். பீமனுடைய வலிமையில் நம்பிக்கை வைத்து அவனடைய தாயும், சகோதரர்களம் நிச்சிந்தனையாக உறங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

பீமன் தன் பிதாவை மனத்தினால் தியானித்தான். வாயுதேவன் அப்போது மென்தென்றலாக உருவெடுத்து வந்து பீமனை ஒரு குழந்தையை அணைப்பதுபோல வாஞ்சையுடன் அணைத்துக்கொண்டாள். பீமனுடைய தேகம் பரவசமானது. ஒருவித புத்துணர்ச்சி வந்து புதுப்பலத்துடன் பிரகாசித்தான்.

வாயுதேவன் தான் வந்தகாரியம் முடிந்து திரும்பும்போது குந்திதேவியைப் பார்த்தான். அவள் அழகுற ஒரு மரத்தடியில் தன்னை மறந்து சயனித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய குறையாத சௌந்தர்யத்தில் தடுமாறிய வாயு அடக்கம் இழந்து அவளை இறுக்கத் தழுவிட்டான். எல்லாம் ஒரு கணம்தான். குந்திக்கம் பழைய ஞாபகம் வந்து ஒரு நொடிப்பொழுது அந்த ஸ்பரிச இன்பத்தில் தன்னை இழந்துவிட்டாள். வாயுதேவன் மறைந்துவிட்டான்.

கண்களைத் திறந்தபோது அவள் முன்னால் பீமன் நின்று கொண்டிருந்தான். அவனுடைய முகத்தில் என்றுமில்லத ஓர் அருவருப்பு. குந்திதேவிக்கு அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்கக்கூட கூச்சமாக இருந்தது. தலையைக் குனிந்து ரகஸ்யமாக தன்னைக் கடிந்துகொண்டாள்.

சொந்த மகனையே நேருக்கு நேர் பார்க்க முடியாத படிக்கு அவமானமாக இருந்தது. மனத்திலே பெரும் சுமையொன்று ஏறி உட்கார்ந்து கொண்டது. துரியோதனாதியரும், சிசுபாலனும் மற்ற அரசர்களும் அவளைத் தூற்றுவதை அவள் அறியமாட்டாளா? முறையற்ற முறையிலே கர்ப்பம் சுமந்தவள் என்று அவளை தூஷ’க்கிறார்களே! முறைகேடாக பிறந்த குமாரர்களுக்கு எப்படி ராஜ்யம் சித்திக்கும் என்று குதர்க்கம் பேசுகிறார்களே! திருதராட்டினன் பிறந்த முறையை மறந்துவிட்டார்களா?

இந்த அற்புதமான யோசனையை பரீட்சித்துப் பார்க்கும் நேரம் நெருங்கிவிட்டது. சிறு பெண்ணாயிருந்த போது துர்வாச முனிவர் உபதேசித்த மந்திரத்தை பரீட்சித்து சூரியனிடம் ஒரு மகவைப் பெற்றவள். நெஞ்சைக் கல்லாக்கிக்கொண்டு கவச குண்டலத்தோடு ஜொலித்த அந்தக் குழந்தையை ஒரு பேழையிலே வைத்து ஆற்றிலே அனுப்பியவள். அந்த ரகஸ்யம் அவள் மனத்தின் அடியிலே மிகவும் பாதுகாப்பாகப் பூட்டப்பட்டுக் கிடந்தது. அப்படித்தான் இந்த சோதனையும் அவள் மனத்தின் ஆழத்தில் புதைந்துபோய்விடும்.

பாண்டுவுடன் குந்தியும், மாத்ரியும் வனத்திலே வாழ்ந்த காலம். ஒரு ரிஷ’யும் அவர் பத்தினியும் காட்டிலே மான் உருவம் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதை அறியாத பாண்டு அம்பை எய்து ரிஷ’யைக் கொன்றுவிட்டார். அந்த ரிஷ’ இறக்குமுன் பாண்டு தன் மனைவியுடன் சேர்ந்தால் தட்சணமே அவருக்கு மரணம் சம்பவிக்கும் என்று சபித்துவிட்டார்.

பாண்டு மனம் உடைந்துபோனார். திரும்பவும் நகரத்துக்கு போகாமல் வனத்திலேயே மீதி நாட்களையும் தவத்திலே கழிப்பது என்று தீர்மானிக்கிறார். இப்படியே காலம் போகிறது மூன்று வருடங்கள் ஓடி விடுகின்றன.

திடீரென்று பாண்டுவுக்கு தான் புத்திரபாக்கியம் இல்லாமல் இறந்துவிடுவோமென்று வருத்தம் ஏற்படுகிறது. சந்ததியைச் சிருஷ்டிக்காமல் இறப்பவன் நரகத்துக்கு போவான் என்ற வாக்கு பாண்டுவை இரவும் பகலுமாக வதைக்கிறது. இந்த வேதனையில் பாண்டு பலநாட்களாக வருந்துகிறான். இறுதியில் ஒரு நாள் குந்தியிடன் தன் யோசனையை வைக்கிறான். ஒரு ரிஷ’ மூலம் தனக்கு ஒரு மகவைப் பெற்றுத் தரும்படி வேண்டுகிறான். குந்தி நிர்த்தாட்சண்யமாக மறுத்துவிடுகிறாள். பாண்டு திரும்பத் திரும்ப யாசிக்கிறான். அப்படியும் குந்தியின் மனத்தை அவனால் தளர்த்த முடியவில்லை.

ஒருநாள் பாண்டு படும் வேதனையை குந்தி பார்த்தாள். அவனுடைய துயரத்தை அவளால் தாங்க முடியவில்லை. இறுகியிருந்த அவளுடைய மனது இளகிவிட்டது. பல வருடங்களுக்கு முன்பு துர்வாசர் தனக்கு உபதேசித்த மந்திரத்தைப் பற்றி பாண்டுவிடம் கூறினாள். பாண்டுவின் மனம் மீண்டும் துளிர்த்தது.

பாண்டுவின் ஆலோசனைப்படி தர்மதேவனை வேண்டி குந்தி ஒரு மகவைப் பெற்றாள். தர்மம் மறு உருவம் எடுத்து வந்ததுபோல வந்து விறந்தவன்தான் யுதிஷ்டிரன். பாண்டுவின் மகிழ்ச்சியை சொல்ல முடியாது.

ஒரு வருடம் கழிந்தது; பாண்டுவுக்கு மீண்டும் ஆசை. குந்தியினால் மறுக்க முடியவில்லை. இம்முறை வாயு பகவானை வேண்டினாள். வலிமைக்கு ஓர் எல்லையல்லவா வாயு? அப்படிப் பிறந்தவன்தான் பீமன். தர்மதேவனிடம் குந்தி பக்தியுடன் நடந்து கொண்டாள் என்றால் வாயுவின் பலம் காரணமாக அவனை பயத்துடன்தான் சேர்ந்து கொண்டாள்.

ஆனால் பாண்டுவுக்கு இன்னும் ஆசை அடங்கவில்லை. இந்தமுறை குந்தி இந்திரனை நினைத்துக்கொண்டாள். அகலிகை மேல் காதல் கொண்டவன் இந்திரன்! தேவர்களக்கெல்லாம் அரசன். குந்திக்கு பெருமையாக இருந்தது. அவனிடம் அளவில்லாத காதலுடன் நெருங்கினாள். அப்படிப் பிறந்தவன்தான் அர்ஜூனன். கண்ணைப் பறிக்கும் வனப்புடன் ஜொலித்தான் அவன்.

கண்டவர்கள் எல்லாம் காதல் கொள்ளும் லட்சணம் கொண்டவன் அர்ஜூனன். அதற்கு சமமான வீரமும் பராக்கிரமும் படைத்தவன் யுதிஷ்டிரனுக்கு வலது கரம் பீமன் என்றால் அவனுடைய இடது கரம் அர்ஜூனன். வஞ்சகமாக இழந்த ராஜ்யத்தை மீட்பதற்கு யுதிஷ்டிரன் இவர்களுடைய பராக்கிரமத்தைதான் நம்பியிருந்தான்.

அர்ஜூனன் பிறந்த பிறகுகூட பாண்டுவி ஆசை தணியவில்லை. மீண்டும் குந்தியை வற்புறுத்தினான். ஆனால் குந்தி பிடிவாதமாக மறுத்துவிட்டாள். தேவேந்திரனுடன் கூடிய பிறகு அவளுக்கு வேறு தேவர்களை வரிப்பதில் நாட்டமில்லை. அவளே வலிந்து சென்று துர்வாசருடைய மந்திரத்தை மாத்ரிக்கு உபதேசித்தாள். அந்த மந்திரத்தின் மகிமையில் மாத்ரிக்கும், அஸ்வினி குமாரர்களுக்கும் பிறந்தவர்கள்தான் இந்த நகுலனும், சகாதேவனும்.

அழகு என்று பார்த்தால் சகாதேவனுடைய அழகு யாருக்கு வரும்? எல்லோருக்கும் இளையவன். அவன் நிறமும் தாமரை போன்ற கண்களும் எவரையும் மயக்கிவிடும். அதிலும் மகாபுத்திசாலி, வாக்குவல்லவன். உண்மையைச் சொல்வதற்கு அஞ்சமாட்டான்.

இந்த சகாதேவன் சிறுவனாக இருந்தபோது என்ன கேள்வி கேட்டுவிட்டான்?

சதஸ்சிருங்க வனத்தில் குந்தியும் மாத்ரியும் ஐந்து புதல்வர்களுடன் கழித்த அந்த மகிழ்ச்சியான காலம். சிறுவர்கள் ரிஷ’களிடம் பாடம் கற்று வந்தார்கள். அப்பொழுது ஒரு நாள் சகாதேவன் அழுதுகொண்டே ஓடி வந்தான். குந்தி அவனை அள்ளி மடியில் இருத்தி ‘குழந்தாய்! என்ன நடந்தது?” என்று கேட்கிறாள்.

அதற்கு சிறுவன் சகாதேவன் சொல்கிறான்: ‘தாயே! என்னால் இந்த ரிஷ’ குமாரர்களின் பரிகாசத்தை இனிமேலும் தாங்க முடியாது. என் தந்தை யார்? என் உடன் பிறந்தவரிகளின் தந்தையார் யார்? யுதிஷ்டிரனடைய பிதா தர்மதேவன் என்று சொல்கிறார்கள். பீமனுக்கு வாயுதேவனாம். அர்ஜூனனுக்கு இந்திரனாம். எங்கள் பிதாவோ அஸ்வினி குமாரர்கள். ரிஷ’ குமாரர்களுக்கோ ஒரேயொரு தந்தைதான். எங்களுக்கோ பல தந்தைகள்! என்னால் இந்த அவமானத்தை எப்படி தாங்கமுடியும்? எப்பொழுது பார்த்தாலும் அவர்கள் என்னை இம்சித்தபடியே இருக்கிறார்கள்.

குந்தியினால் பதில் சொல்ல முடியவில்லை. அவள் முகம் தரை பார்த்தது. கண்களில் நீர் கோத்துவிட்டது. அன்று தொடங்கிய இழுக்கு இன்றுவரை இழுத்துக்கொண்டே போகிறது ரிஷ’ குமாரர்கள் மாத்திரமா? எல்லோரும்தான் அவளைத் தூற்றுகிறார்கள்.

அவளுடைய துயரம் எல்லாம் இந்த சுயம்வரத்தில் நிச்சயமாக தீர்ந்துவிடும். அதற்குப் பிறகு குந்தியை யாரும் நூதனப் பிறவி போலப் பார்க்க மாட்டார்கள். இழித்துக் கூறார்கள், பாண்டு இருக்கும்போதே பிற புருஷர்களை வரித்தவள் என்று வசைபாட மாட்டார்கள்.

தூரத்திலே கேட்ட அந்த சத்தம் ஓங்கி வளர்ந்து வாசல் வரைக்கும் வந்துவிட்டது. அதைத் தொடர்ந்து பெரிய ஆரவாரமும், சனங்களின் சிரிப்பொலியும் கேட்டது. குந்தி தான் செய்ய வேண்டியதை இன்னொருமுறை மனதிலே நன்கு தீர்மானித்துக்கொண்டாள். சோதனைக்கான சமயம் வந்துவிட்டது. வாசல் பக்கம் போகாமல் குந்தி நன்றாக உள்ளேபோய் உட்கார்ந்துகொண்டாள்.

வாசலில் இப்போது காலடிச்சத்தம் வெகு துல்லியமாகக் கேட்டது. காதுகளைக் கூர்மையாக்கி கவனித்தபோது வளையல் குலுங்கும் ஓசையும் கேட்டதுபோல இருந்தது.

யுதிஷ்டிரன்தான் பேசினான். வாசலில் இருந்து கொண்டே மகிழ்ச்சி பொங்க உரத்த குரலில் கூறினான்.

‘தாயே! பி€க்ஷ கொண்டு வந்திருக்கிறோம்’

குந்திதேவி உடனேயே பதில் கூறவில்லை. இந்தத் தருணத்திற்காக அவள் எவ்வளவு வருடங்கள் காத்திருந்தாள்!

சிறு பெண்ணாக இருந்த போது குந்தி சூரியனை வேண்டி கர்ப்பம் திறந்து கர்ணனை பெற்றாள். உலகறிய சுயம்வர மண்டபத்தில் பாண்டுவுக்கு மாலையிட்டாள். சதஸ்சிருங்க வனத்தில் பாண்டுவின் ஆணைப்படி மூன்று தேவர்களை வரித்து பிள்ளைகளைப் பெற்றாள்; எல்லாமா அவளுக்கு ஐந்து புருஷர்கள்.

மனதைத் திடப்படுத்திக்கொண்டு குந்தி யுதிஷ்டிரனுக்கு பதில் கூறினாள்.

‘என் குமாரர்களே! பி€க்ஷ கொண்டு வந்திருக்கிறீர்களா? வழக்கம்போல ஐவரும் பங்கு போட்டுக்கொள்ளுங்கள்.’

தாயாருடைய வாக்கை தேவவாக்காக எடுத்துக் கொள்ளும் பாண்டவர் ஐவரும் திரௌபதியை தங்கள் மனைவியாக ஏற்றுக்கொண்டனர்.

குந்தி தன் மனத்திற்குள்ளே மெல்ல நகைத்துக் கொண்டாள். இனிமேல் யாரும் அவளை ஓர் அவச்சொல் சொல்லப்போவதில்லை. நிம்மதியான பெருமூச்சு ஒன்று அவளிடமிருந்து வெளியே வந்தது.

பி.கு: நான் காலையில் எழுவதற்கு ஐந்து நிமிடங்கள் முன்பே என் மனமானது எழுந்துவிடும். எழுந்து எனக்காகக் காத்திருக்கும் இந்த மனம் கேட்கும் ஆயிரம் கேள்விகளக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும். இது அன்றாடம் நடக்கும் சங்கதி.

இப்படியான ஒரு காலை வேளையில் என் மனம் கேட்ட கேள்விகளில் எனது கற்பனை விரிந்தது. அதில் பிறந்ததுதான் இந்தக் கதை. பாரதம் அறிந்த பெரியவர்கள் மன்னிப்பார்களாக.

– 1996-97, வடக்கு வீதி (சிறுகதைத் தொகுப்பு), மணிமேகலைப் பிரசுரம், நவம்பர் 1997

– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.

Print Friendly, PDF & Email

2 thoughts on “குந்தியின் தந்திரம்

  1. இந்த இதிகாசங்கள் இருக்க, அவை கடவுளை பற்றியவை என்ற அதி மூட நம்பிக்கை அழிந்தாலே இந்த நாடு உருப்படும். அந்த மூட நம்பிக்கையின் ஆட்சியால்தான் அங்க வங்க கலிங்க… நாடுகள் அடிமைப்பட்டன பிறகு இந்தியா என்ற ‘அமைப்பும்’ அடிமைப்பட்டது.
    இன்றும் இங்கே தோன்றி அழிக்கப்பட்ட புத்த மத அடிப்படையில் மனப்போக்கை வளர்த்துக்கொண்ட ஜப்பான் , சீனா இந்தியாவை விட அளவுகடந்து ,நெருங்க முடியாத அளவுக்கு முன்னேறியிருக்கின்றன.
    புத்தராக இருந்தாலும் ரகுராம் ராஜா ஆனாலும் சிறந்ததை அடித்துத் துரத்திவிட்டு அனுபவமே இல்லாத வீடியோ விளம்பர வித்தகி, இரண்டாம்தர படித்தாரா என்பதே கேள்விக்குறியான வீடியோ நடிகை இவர்களுக்கெல்லாம் ராணுவ மந்திரி… தந்தால் இன்னமும் கழிசடையாகத்தான் ஆகும் .
    ஆகிக்கொண்டிருக்கிறது.

    ராமச்சந்திரனும் ரஜினிகாந்தும் கடவுள் ஆவதில் எனக்கு வியப்பே இல்லை.

  2. உங்களுடைய கற்பனை மிக கேவலமாக உள்ளது
    இறைவனை போற்றப்பாடா வேண்டியவர்களை காம பிசாசை போல் சித்த்தரித்து உள்ளீர்கள் , தனது இச்சைக்காய் வாஸ்த்தவர்கள் அல்ல அவர்கள் , வஸ்வின் முழுதும் தியாகத்தை அடிப்பாதையாய் கொண்டு வாஸ்த்தவர்கள் . எல்லோருக்கும் என்ன ஓடடம் இருக்கும், கற்பனை இருக்கும் அதை எல்லாம் கட்யஹையாய் எஸுதி ஓடவிட்ட்தால் நாடு நாசமாய் போகும் ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *