2060 தேர்தல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 6,176 
 

நாயர் டீ கடையில் கூட்டம் அவ்வளவாக இல்லை. நண்பர்களை தேடினேன். லாங்டன் மட்டும்தான் கிடைத்தான். அமெரிக்கன். இந்தியாவைத் தெரிந்துகொள்வதில் அதிகம் பிரியம் காட்டுவான். கோப்பில் பழைய தமிழ் படங்களை பார்த்துவிட்டு எனக்கே தெரியாத விஷயங்களை அலசுவான். சிலநேரம் எரிச்சலூட்டுமளவுக்கு கேள்வி கேட்பான். தியாகராஜ பாகவதர் என்கிற யாரோ ஒரு பழம் பெரும் நடிகர், இவனுக்கு அவர்மேல் உயிர். என் தாத்தா அவரைப்பற்றி சொல்ல கேள்விபட்டிருக்கிறேன். இவன் நக்கலாய் பேசுகிறானா இல்லை உண்மையிலேயே புகழ்கிறானா என பலமுறை சந்தேகித்திருக்கிறேன்.

அவனே என்னை அழைத்தான்,”வணக்கம் செந்தமிழ், நலமா?”.

அவன் ஆங்கிலத்தில் கேட்பதை தமிழில் மொழிமாற்றியது என் ‘இன்டர்ப்ரெட்டர்-VII’.

“நலம் லாங்டன், நீ எப்படி?”.

“பெரிதாய் ஒன்றுமில்லை.” சலித்துக்கொண்டான்.

“2021ல் முடிந்த மின்னணு புரட்சி பற்றி ஏதோ புத்தகம் படித்துக்கொண்டிருந்தாயே முடிந்துவிட்டதா?”

“நீதித்துறையில் மின்னணு இயந்திரங்கள் எப்படி குற்றவாளிகளை துல்லியமாக கண்டுபிடித்து தண்டிக்கின்றன என்பதை படித்துக்கொண்டிருக்கிறேன்.”

“ஓ… ஜஸ்டிஸ்-IV-U. வடிவமைத்தது இந்தியர்தான் தெரியுமா?”

“ம். தெரியும். முன்பெல்லாம் பொய்சொல்கிறார்களா என்பதை கண்டுபிடிக்கத்தான் இயந்திரம் பயன்பட்டதாம், ஆனா ‘ஜஸ்டிஸ்’ குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளியா இல்லையா என துல்லியமாக சொல்லிவிடும்.”

“மூளையை ஏதோ நாவல் படிப்பது போல படித்துவிடும் திறன் இருக்குதே சும்மாவா?”.

“சரி உங்கள் ஊரில் தேர்தல் எனக் கேள்விப்பட்டேன். துளசி சொன்னாள்.”

“ஆமாம்.”

“எங்கள் ஊர்போல தானியங்கும் அரசாங்கம்தானா அங்கேயும்?”

“அவ்வளவுதூரம் மனிதர்களை நாங்கள் மறந்துவிடவில்லை லாங்டன்.”, சிரித்தான்,”எங்கள் ஊரில் இன்னும் மக்களாட்சிதான்.”

“அப்படீன்னா ஓட்டுப்போடும் முறையா? இந்த பழைய முறைகளெல்லாம் ஒழிந்துவிட்டது என நினைத்தேன். வல்லரசு இந்தியா, அங்கே இன்னும் இந்த முறைகள் இருப்பது ஆச்சரியம்.”

இன்டர்ப்ரெட்டரில் காசுவல் மோட் (Casual Mode) தட்டி அளவை அதிகரித்தேன், தூயதமிழில் விவாதிக்க இது ஒன்றும் இலக்கியமில்லையே.

“லாங்டன், உங்கள் ஊரில் 90% எந்திரங்கள் ஆட்சி பொறுப்பிலுள்ளன இங்கே 30% என வைக்கலாம். முழுமையாக எந்திர ஆட்சி இன்னும் இங்கே சாத்தியமாகவில்லை. பழமைவாதம் இந்தியாவில் மலிவான பொருள். உனக்கே தெரியும் சாதியை ஒழிப்பதற்கு நாங்கள் பட்டபாடு.”

“போனமாதம் அதைப்பத்தி சொன்ன நியாபகமிருக்கு. சரி இப்போ 70% ஆட்சியாளர்கள எப்படி, ஓட்டுப்போட்டா தேர்ந்தெடுக்கிறீங்க?”

காசுவல் மோட் செட்டிங் சரியில்லை இன்னும் அவன் பேசுவது என் பேர்போல ‘செந்தமிழாய்’ ஒலித்தது.

“இல்ல லாங்டன் ஓட்டெல்லாம் இல்ல. 2023 ல, மின்னணு புரட்சிக்குப்பின்னால அரசு அலுவல்கள் பலவும் கணிணிகள் செய்ய ஆரம்பித்தன. இதில் பல ரோபோக்களும்.

ஒரு கணிணி முன்னால போய் திருமணம் செய்துகொள்ளலாம் அல்லது பதிவு செய்யலாம், சட்ட ஒழுங்கு முழுவதும் கணிணிமயம். சூப்பர் ஜி.பி.எஸ் வந்தபிறகு டிராபிக் முதல் திருட்டுவரை எல்லாமே செயற்கைகோள் கண்காணிப்பில் ஒழுங்கு செய்யப்படுகின்றன.

வரவு செலவு திட்டமெல்லாம் கணிணிகளே தீட்டுகின்றன. இந்தவருடம் மழை எப்படியிருக்கும், விளைச்சல் எப்படி வரும் என்பதும், ஏற்றுமதி இறக்குமதி வியாபார எதிர்பார்ப்புக்கள் எளிதில் கணக்கிடப்படுகின்ற. இதனால் கணிணி போடும் பட்ஜட்டில் குறைந்த அளவே துண்டு விளுகிறது.

அரசாங்கத்திலிருக்கும் மனிதர்கள் கணிணிக்குத் தேவையான மென்பொருள் திருத்தங்கள் மற்றும் மேன்பாடுகளை அலசுகிறார்கள். தொகுதி முன்னேற்றத்தை பார்வையிடுவதும், புதிய சட்டங்கள் கொண்டுவருவதும்தான் இவர்களின் சில பொறுப்புக்கள்.”

“செந்தமிழ், எங்கள் ஊரிலிருந்த பழைய அமைப்புத்தானே அது. ஆனால் தேர்தல் எப்படி நடக்குதுன்னு சொல்லேன்.”

“ஓ…தேர்தல் என்று பெரிதாய் ஒன்றுமில்லை அந்தந்த தொகுதிக்கு யார் சிறந்த பிரதிநிதி என்பதை கணிணியே தேர்வு செய்கிறது. எல்லோரின் தகுதியும் திறனும் மதிப்பிடுமளவுக்கு நம்மை பற்றிய செய்திகளை கணிணியில் சேகரித்துக்கொண்டிருக்கிறார்கள். உங்கள் ஊரில் இது பழைய தொழில்நுட்பம்.”

“நல்ல யுக்தி. கணிணியே தேர்ந்தெடுப்பது அருமை.”

“லாங்டன், மின்னணு மயமான இயந்திர வாழ்க்கையில் எளிதில் விரக்தியாகிவிடுகிறது. மூன்று வருடம் வேலை இல்லாமல் அரசு தரும் காசில் உயிர்வாழ்கிறேன். உனக்குத் தெரியுமே.”

“ம்…”

“தற்கொலை செய்யலாம் என்றிருக்கிறேன்.”

“என்ன…ஏய் என்ன சொல்ற.”

“கடைசியா நாயர் டீகடை சாட் ரூம் வந்து நண்பர்களிடம் விடைபெறலாமென வந்தேன். நீ மட்டும்தான் கிடைத்தாய். கேத்தி மற்றும் சில்வியாவிடம் சொல்லிவிடு. வருகிறேன்”

லாங்டன் சப்தமாய் ஏதோ சொல்லிக்கொண்டிருக்கும்போதே சாட்ரூமிலிருந்து வெளியேறினேன். வாங்கிவைத்திருந்த மூளைக் கொல்லி (Brain Killer) பாட்டிலை கையிலெடுத்தேன். எந்த வருத்தமுமில்லை. வாயருகே கொண்டு சென்றேன்.

“பீப்…பீப்”

சாகப்போகும் நேரம் கை கணிணியில் செய்தி. தானாகவே வாசித்தது.

“வணக்கம் செந்தமிழ் செல்வராஜ். வாழ்த்துக்கள் நீங்கள் இந்தமுறை கல்வி அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். மேலும் விவரங்களை விரைவில் தெரிந்துகொள்வீர்கள்”

கையில் வெறுமையான விஷக் குப்பியை பார்த்தேன், சிரிப்புத்தான் வந்தது.

(இரண்டாம் பரிசு பெற்ற கதை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *