108

 

“பார்த்து ஓட்டுங்க, பழனிசார், நீங்க போற வேகத்தைப் பார்த்தா, நாம ரெண்டு பேரும் இன்னொரு ஆம்புலன்ஸில் போகவேண்டியிருக்கும் போலிருக்கே!”

வேலு சொன்னதைக் கேட்டு மெதுவாகச் சிரித்தான் பழனி. “அதென்னவோ தெரியலை வேலு, இந்தமாதிரி விபத்துன்னு ஃபோன் வந்து உதவிக்குப் போகும்பொழுது, ஏதோ என் சொந்தக்காரங்களே அடிபட்டுக்கிடப்பதுபோல் ஒரு படபடப்பு வந்துடுது. அதான் என்னையும் அறியாமல் வண்டி ரொம்ப வேகமெடுக்கிறது” என்றான்.

பழனி இந்த ஆம்புலன்ஸ் டிரைவராகி நான்கு வருடங்கள் இருக்கும். இதுவரை எத்தனையோ விபத்துக்களைப் பார்த்திருக்கிறான். ரத்தவெள்ளத்தில் இருக்கும் எத்தனையோ பேரை ஆம்புலன்ஸில் ஏற்றிப் போயிருக்கிறான். சாதாரணமாக இந்த மாதிரி வேலையில் இருப்பவர்களின் மனது மரத்துவிட்டிருக்கும். ஆனால் பழனியோ முதல் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்த அதே மனநிலையில்தான் ஒவ்வொரு முறை விபத்து நடந்த இடத்துக்குப் போகும்போதும் இருக்கிறான். அப்போதிருந்த அதே படபடப்பு, பதட்டம், உயிர்களைக் காப்பாற்றப்போகிறோம் என்ற உணர்ச்சி எல்லாம் இன்றுவரை மாறவேயில்லை. இப்பொழுதும் அதேமாதிரிதான் திருமங்கலம் அருகே விபத்து என்று அழைப்பு வந்தவுடன் வண்டியை அவசரமாக அந்த இடத்திற்கு விரட்டிக் கொண்டிருக்கிறான். இன்னும் 5 கிலோமிட்டர் தூரம் போகவேண்டும். சைரனைப் போட்டப்படியே வண்டி பறந்து கொண்டிருந்தது. மற்ற எந்த வண்டியும் அருகில் இல்லை. சுற்றுவட்டாரத்தில் 20,25 கிலோமீட்டருக்கு அப்பால் அனுப்பப்பட்டிருந்தனர். விபத்து நடந்த இடத்திற்கு கொஞ்சம் அருகில் என்று பார்த்தால் பழனியின் வண்டி மட்டுமே இருந்ததால் அவனுக்கு அழைப்பு வந்து, போய்க்கொண்டிருக்கிறான்.

பழனியின் தந்தை, அவன் அம்மா வீட்டில் செய்து கொடுக்கும் தின்பண்டங்களை பாக்கெட் செய்து டிவிஎஸ்50யில் எடுத்துப்போய் மதுரையின் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள கடைகளுக்கு விற்று வருவார்.

பழனி ப்ளஸ் 2 முடித்து ஒரு மெக்கானிக் பட்டறையில் சிறிதுகாலம் வேலையில் இருந்தான். பிறகுதான் டிரைவிங் லைசென்ஸ் எடுத்து, இரண்டு,மூன்று இடங்களில் வேலையில் இருந்து எதுவும் திருப்தியில்லாமல் இந்த வேலையில் சேர்ந்தான். தினம் பல கோர விபத்துக்களைப் பார்த்து மனம் அழுதாலும், அடிபட்டவர்களுக்கு உதவுவதில் ஒரு ஆத்மத் திருப்தி இருந்தது.

“ஆம்மாம், நீங்க எவ்வளவுதான் வேகமாகப் போனாலும் அங்க இருக்கற ஜனங்க நம்மளை குறைதான் சொல்றாங்க. காசு வாங்கிக்கிட்டு காய்க்கூடைங்களை, ஜனங்களை ஏத்திட்டுப் போறோம், விபத்து நடக்கற இடத்துக்குச் சீக்கிரமா வருதுல்லைன்னு சொல்றாங்க.”

“விடு. யாரோ சிலபேரு செய்யற தப்பு, நம்மள மாதிரி இருக்கறவங்களையும் பாதிக்கிறது”

என்று பழனி பதில் சொல்லிக்கொண்டிருக்கும்போதுதான் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் கண்ணெதிரே அது நிகழ்ந்தது.

இவர்கள் வந்துகொண்டிருந்த நான்குவழிச்சாலையின் மறுபக்கம் ஒரு பள்ளிவேனின் மீது குறுக்குச்சாலையில் வந்த ஒரு சொகுசுக்கார் மோதியதில் அந்த இடமே ஒரே கூக்குரலாக இருந்தது.

வேனில் இருந்த பள்ளிச்சிறுவர்களின் கதறல். அதிர்ந்த பழனி ஒரு நிமிடம் வண்டியை நிறுத்தினான். ஒரு தீர்மானத்துக்கு வந்தவன் போல் விபத்து நடந்த இடத்துக்கு வண்டியைச் செலுத்தினான். வேலு, “சார், நாம திருமங்கலம் கிட்டக்கப்போகணும்” என்றான்.

பழனி, பலமாகத் தலையசைத்து, “முதலில் கண்ணெதிரே கஷ்டப்படறவங்களுக்கு உதவுவோம். இந்தா, ஃபோன், இந்த இடத்துக்கு ஒரு ஆம்புலன்ஸ் போறாது. இன்னொன்று அனுப்பச்சொல்லி ஃபோன் பண்ணு.” என்றான்.

அவசரஅவசரமாக அடிபட்டக்குழந்தைகளை வண்டியில் ஏற்றிக்கொண்டனர். அருகிலிருக்கும் மருத்துவமனையில் கொண்டுச் சேர்த்தனர். எத்தனை அவசரமாகச் செய்தும் அரைமணிக்குமேல் ஆகிவிட்டது. பிறகு அங்கிருந்து திருமங்கலமருகே சென்றனர்.

சிறிது தூரம் இருக்கும்போதே அங்குள்ள நிலைமை இருவருக்கும் புரிந்துவிட்டது. ஒன்றும் செய்ய இயலாத நிலைமையில் கனத்த இதயத்துடன் பழனி வண்டியை நிறுத்தினான். மக்கள் கொந்தளிப்புடன் நிற்பதைப் பார்த்த வேலு மறுபக்கம் குதித்து ஓடினான். பழனி மட்டும் அந்த இடத்தை நெருங்கினான். சாலையில் தாறுமாறாகக் கிடந்த டிவிஎஸ் 50 யையும், அதனருகே சிதறிக்கிடந்த தின்பண்டப்பொட்டலங்களையும், இன்னும் கொஞ்சதூரத்தில் அடிப்பட்டுக்கிடந்தவரையும் பார்த்தான். அதற்குள் கோபாவேசமான ஜனங்கள் அவனைத் தாக்க ஆரம்பித்தனர். அவன் கண்ணில் நீர் வழிந்தோடியது. தாங்கள் அடிப்பதினால் வலி தாங்காமல் அவன் அழுகின்றான் என்று மேலும் கூட்டம் இன்னும் பலமாகத்தாக்கியது. தன் மேல் மேன்மேலும் அடிவிழுவதை உணராமல் அவன் தந்தைக்காக அழுதுகொண்டிருந்தான். 

தொடர்புடைய சிறுகதைகள்
“நீயும் வாயேன் யமுனா.” “நீங்க இரண்டு பேரும் போயிட்டுவாங்க. இன்னிக்கு ஒரு நாளாவது உங்க இரண்டு பேர் தொந்தரவு இல்லாமல் நிம்மதியாக இருக்கேன்” “அம்மா” என்று சிணுங்கிய கௌதமையும், “அப்படியா சொல்றே, இரு, வந்துப் பேசிக்கிறேன்” என்ற முகுந்தையும் அனுப்பி விட்டு வாசல் கதவைத் ...
மேலும் கதையை படிக்க...
கணேசனுக்கு இன்று காலையிலிருந்தே எல்லாம் அவசரகதி. aஅலுவலக வேலையாக காலை ஒன்பது மணிக்கு திருச்சி செல்லும் பேருந்து. பயணச்சீட்டும் முதல் நாளே எடுத்தாகிவிட்டது. இருந்தும் எப்படியோ இன்று படுக்கையிலிருந்து எழுந்ததிலிருந்து எல்லாமே தாமதம். குளித்து, தயாராகி மணி பார்த்தால் எட்டு. இனிமேல் ...
மேலும் கதையை படிக்க...
இன்று காலையிலிருந்தே ஷண்முகத்திற்கு ஏதோ மனதே சரியில்லை. மனைவி ரேணுகூட கேட்டுவிட்டாள் “இன்னிக்கு என்னாச்சு உங்களுக்கு” என்று. அமெரிக்காவிலிருந்தாலும் மனசு என்னவோ இன்னிக்கு இந்தியாவையும் அம்மாவையுமே சுற்றிவருகிறது. அடுத்தமாதம் எப்படியாவது இந்தியாக்கு ஒருமுறை போக முயற்சிப் பண்ணணுமென்று நினைத்துக்கொண்டான். அலுவலகம் வந்தவுடன் கார் ...
மேலும் கதையை படிக்க...
மீனாட்சிக்குத் தலைகால் புரியவில்லை. நல்ல வேளை! அவளுக்கு நடனம் தெரியாது. தெரிந்திருந்தால் ஒரு ஆனந்த நடனமே ஆடியிருப்பாள். என்ன ஒன்றும் புரியலையா? நான் பாட்டுக்கு இப்படிக்கு புதிர் போட்டிண்டிருந்தால் உங்களுக்கு எப்படிப் புரியும்? மீனாட்சியின் ஏகப்புத்திரன் விஸ்வா என்கிற விஸ்வநாதன் வெளிநாடு போய் ...
மேலும் கதையை படிக்க...
ஸர்ரென்று டயர் ரோடில் உரசி ப்ரேக் அடிக்கும் ஓசை. “என்னாப்பா, வூட்டுலே சொல்லிக்கினிவந்துக்கினியா?” என்ற குரல் கேட்டப்பிறகுதான் சுயநினைவுக்கு வந்தார் செந்தில்நாதன். ட்ராஃபிக்கைக் கவனிக்காமல் ராங்க்சைடில் வந்து நல்லவேலையாக இருபுறமும் வந்தவர்கள் ப்ரெக் அடித்ததினால் தப்பினோம் என்று நினைத்து வெட்கி, சாரி ...
மேலும் கதையை படிக்க...
ஃபிஃப்டி, நாட் அவுட்
ஆண்டவனில்லா உலகம் எது?
நிஜமிழந்த நிழல்கள்
ஜெயுச்சுட்டேன்
கீழே விழும் நட்சத்திரங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Sirukathaigal

FREE
VIEW