Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

வேண்டும் வேண்டும்…

 

அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறிவிட்டேன். வேலைக்குச் செல்பவர்களின் கூட்ட நெரிசலால், நிரம்பி வழிந்தது ரயில்.

எவ்வளவு மாறி விட்டது சென்னை….பூங்கா ரயில் நிலையத்திலேயே இவ்வளவு கூட்டம் என்றால் போகப் போக பெட்டி தாங்காதே….

முண்டியடித்து முன்னேறி பெட்டியின் அந்தப் பக்கத்தில் கதவு ஓரத்தில் ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டு நின்றேன்.

வேண்டும் வேண்டும்சிறைச் சுவர்களில் கைதிகள் கிறுக்கியிருப்பதைப் போலவே, நான் இருந்த பெட்டியிலும் நிறைய எழுதப்பட்டிருந்தன. கல்லூரி மாணவர்களின் பெயர்கள், எழுத்துப் பிழைகளோடு தமிழ்க் கவிதைகள் என… சுற்றிச் சுற்றிப் படித்தேன்.

நெரிசல், சப்தம், நிறுத்தங்களில் பயணிகள் திமுதிமுவென இறங்கி ஏறுவது என ஒரே பரபரப்பாக இருந்தாலும், எனது மனம் மட்டும் பழைய நினைவுகளையே அசை போட்டது.

தட…தட…தட…

வாசல் அருகில் நின்றிருந்த என் மீது குளிர்ந்த காற்று படர்ந்தது இதமாக இருந்தது. எதிர்திசையில் திடீரென வந்த ரயிலின் ஓசையால் நான் சற்று பயந்து போனேன்…

அந்தக் கவனப் பிறழ்வு என்னுடைய சிந்தனையைக் கலைத்தாலும் நான் மீண்டும் என்னை மறந்தேன்…

“”காந்தி…காந்தி…”

“”ஐயா…”

“”உனக்கு எவன்யா பேரு வெச்சது?…” புதிதாக வந்த ஜெயிலர் என்னை வித்தியாசமாகப் பார்த்தார்.

“”ஐயா….”

“”நாளைக்கு காந்தி பிறந்தநாள், அதனால உன்னோட தண்டனை காலத்தைக் குறைச்சு…நன்னடத்தை எல்லாம் கணக்கில வெச்சு, உன்னை நாளைக்கு விடுதலை செய்யப் போறாங்க…”

“”சரிங்க…” சிரிச்சுக்கிட்டே சொன்னேன். அந்த சிரிப்பு இப்போதும் என் இதழில் தவழ்ந்தது.

எழும்பூரில் இன்னும் ஏராளமான பயணிகள் ஏறினர். வெளியூரிலிருந்து சென்னைக்கு வந்தவர்கள் தங்கள் பகுதிகளுக்குச் செல்ல இந்த ரயிலில் ஏறியதால், என்னுடைய இடத்தில் நான் நிற்பதற்குக் கூட இயலாமல் போய் விட்டது.

கூட்டம் என்னை நெட்டித் தள்ளினாலும் சிறை வாழ்வை என் மனம் திரும்ப திரும்ப மீட்டிப் பார்த்தது.

ஆரம்ப காலங்களில் சின்ன சின்ன திருட்டுக் குற்றங்களில் ஈடுபட்டு சிறைக்குச் சென்று வந்த எனக்கு, அதுவே நாளாக நாளாக சுவாரஸ்யமான பொழுது போக்காக மாறியது.

தாய்-தந்தை இல்லை, உறவினர்கள் இல்லை… நண்பர்கள் எல்லாம் குற்றப் பின்னணி உள்ளவர்கள்தான். நண்பர்களுடனும், குற்றங்களுடனும் பழகப் பழக என்னிடம் மனசாட்சி என்பது கொஞ்சம் கூட இல்லாமல் போய், சிறை என்பதும் நல்ல வாழ்க்கைதான் என்று என் மனம் ஏற்றுக் கொண்டது…

என் வயது நாற்பதைத் தொட்ட நிலையில் என்னென்ன குற்றம் செய்தேன்…? எந்தெந்த ஊர் சிறை…? இதெல்லாம் எனக்கு ஞாபகமில்லை. நான் என்ன மகாத்மாவா…பெயர் அப்படி இருக்கிறது என்பதற்காக நான் என்ன சுயசரிதையா எழுத முடியும்? …

ஆயுள் தண்டனைக் கைதியாக சென்னை சென்ட்ரல் ஜெயிலில் அடைக்கப்பட்ட முதல் நாளில்தான், கம்பிகளுக்குள்ளேயே என் வாழ்க்கை முடிந்து போனதாக குற்ற உணர்வு ஏற்பட்டது.

எத்தனை நாள் சிறை வாசம்…?

வீடு வரை உறவு…வீதி வரை மனைவி…காடு வரை பிள்ளை…கடைசி வரை யாரோ…கண் தெரியாதவர்கள் உதவி கேட்டு பாடிய பாடலால் என் கனவு கலைந்தது.

மாம்பலம் ரயில் நிலையத்தில் கூட்டம் கொஞ்சம் குறைந்தவுடன் பெட்டியில் நெரிசல் இல்லை. ஆனாலும் உட்கார இடம் கிடைக்கவில்லை.

மீண்டும் பழைய நினைவுகளுக்கு திரும்பினேன்..

சென்ட்ரல் ஜெயிலில் புதிய புதிய அறிமுகங்கள் கிடைத்தன. வாழ்க்கையில் வெவ்வேறு நிலைகளில் இருந்தவர்கள், திடீரென உணர்ச்சி வசப்பட்டு ஏதாவது குற்றம் செய்து சிறைக்கு வந்தவர்கள் என பல்வேறு தரப்பினர் இருந்தனர்.

விதவிதமான குற்றவாளிகளுடன் நான் சிறையில் இருந்தேன். தாயைக் கொன்றவன், நண்பனின் மனைவியுடன் ஏற்பட்ட கள்ளத் தொடர்பால் சொந்த மனைவியைக் கொலை செய்தவன்…கொள்ளையடித்தவன்…எனப் பலப்பல குற்றம் செய்த நபர்களைக் கண்டேன். மனிதன் உணர்ச்சிவசப்பட்டு இப்படி எல்லாம் கூட கொலை செய்யத் துணிவானா… என் மனம் பதறியது…

நான் கோயிலில் கொள்ளையடிக்கும் போது தடுத்த காவலாளியைக் கொலை செய்து விட்டு சிறைக்கு வந்தவன்… நான் குற்றத்திலேயே உழன்றவன்…ஆனால் இவர்கள் எப்படித் தவறாக முடிவெடுத்து சிறைக்கு வந்தார்கள்…

சிறைவாசிகளின் பல்வேறு அனுபவங்களைக் கேட்ட நான் வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களைத் தெரிந்து கொண்டேன்.

சிறையில் உள்ளவர்களைப் பார்க்க உறவினர்கள் வரும் போது, என் இதயத்தில் பாரம் அதிகரிக்கும்…

அடுத்த முறை வரும் சொந்தங்களைப் பார்ப்பதற்காகவே காத்திருக்கும் கைதிகளின் சிறை வாழ்க்கையிலும், ஓர் அர்த்தம் இருப்பதாக எனக்கு பட்டது.

எனக்கென்று யார் இருக்கிறார்கள்…? உறவினர்களைப் பார்த்த மகிழ்ச்சியில் இருக்கும் மற்ற கைதிகளைப் பார்க்கும் போது, உறவுகளுக்காக என் மனம் ஏங்கும்.

அப்போது தான் எனக்கு அறிமுகமானார் தேடல் சிவா. நரைத்த தாடி, கண்கள் உள்ளே சென்ற முகம், மெலிந்த தேகம்…அவர் சிறைவாசிகளுடன் மேற்கொள்ளும் அரசியல் விவாதங்கள், அவருடன் பேச வேண்டும் என்ற என் ஆவலைத் தூண்டின.

சக சிறைவாசிகளும் அவரைப் பற்றி என்னிடம் கூறியிருந்தனர்.

ஆயுள் தண்டனைக் கைதியான தேடல் சிவாவுடன், வலியச் சென்று என்னை நான் அறிமுகம் செய்து கொண்டேன். பெயருக்கு ஏற்ப நிரம்ப தேடல் நிறைந்த மனிதர்தான். அவர் என்னைவிட வயதில் மூத்தவராக இருந்தாலும், நண்பரைப் போல பழகினார். நிறையப் பேசினார்…வாழ்வைக் கற்றுக் கொடுத்தார் என்றே சொல்லலாம்…

பழைய நினைவுகளுடன், சட்டைப் பையில் இருந்த முகவரியை தடவிப்பார்த்துக் கொண்டேன். தாம்பரத்திற்குச் சென்று, சிவா ஐயா கொடுத்தனுப்பிய முகவரியில் உள்ளவரைப் பார்த்து ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்ய கேட்டுக் கொள்ள வேண்டும்… எப்படியாவது வேலை கிடைக்க வேண்டும்…

ரயில் குரோம்பேட்டையைத் தாண்டியது. அப்போது காலில் ஏதோ தென்படுவது தெரிந்தது. கூட்ட நெரிசலில் கஷ்டப்பட்டு கீழே கிடந்ததை எடுத்தேன். அது ஒரு செல்ஃபோன்.

நான் பழைய காந்தியாக இருந்திருந்தால், இந்நேரம் அதன் உரிமையாளராக ஆகியிருப்பேன். சிறைச்சாலை என்னை மாற்றி விட்டதே…?

“யாரு தொலைச்சதோ, பாவம்…’ அப்போது அந்த செல்ஃபோன் ஒலிக்கத் தொடங்கியது.

அதை தவறவிட்டவர் அந்த பெட்டியிலேயே இருந்தார். சற்று முன்பு தான் கூட்ட நெரிசலில் தவறவிட்டிருப்பார் போலும்…

அருகிலிருந்தவரின் செல்ஃபோனை வாங்கி தொலைந்து போன அவருடைய எண்ணுக்கு அழைப்புக் கொடுத்தார் புத்திசாலித்தனமாக… எனக்கு செல்ஃபோனை இயக்கத் தெரியாததால், அவர்தான் அழைத்திருக்க வேண்டும் என்று கூட்டத்தில் இருந்த அந்த நபரைத் தேடினேன்…

“”இது யாரோடது…?”

பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது.

இவரே செல்ஃபோன் உரிமையாளராக இருக்கலாம் என்று நினைத்து, “”சார்…” என்று திரும்பினேன்.

நான் சொல்லி முடிக்கும் முன்பே, “”திருட்டு நாயே…”என்று என் பிடறியில் அவர் ஓங்கி அடிக்க, சுற்றி இருந்தவர்களும் என்னைக் கடுமையாகத் தாக்கினர்.

நான் சொல்வது எதையுமே யாரும் கேட்கவில்லை. இதற்குள் தாம்பரம் ரயில் நிலையம் வந்து விட்டது. பேந்தப் பேந்த விழித்த என்னை ரயில்வே காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

- டிசம்பர் 2011 

தொடர்புடைய சிறுகதைகள்
புரிந்தும் புரியாமலும்…
பாவாடை கட்டிய பட்டாம்பூச்சி! இரண்டரை வயது ஹைகூ கவிதை! என் மகள் வெண்மணி! ஆஹா, அவள் பெயரை உச்சரிக்கும்போதே என் நாவில் கற்கண்டாய்த் தித்திக்கிறதே! அவளது மழலை மொழி கேட்டால் தேவாமிர்தம் பருகியதாகவே உணர்கிறேன். அவள் துள்ளி விளையாடும் அழகோ பாரதியின் ...
மேலும் கதையை படிக்க...
காலை மணி 10.00. அந்த நகரத்தின் பிரதான அஞ்சல் அலுவலகம் ரொம்ப சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அழுக்கு வேட்டி சட்டை, தோளில் துண்டு. ஐம்பது வயது பெரியவர் கையில் உள் நாட்டு கடிதத்துடன் படி ஏறி சுற்றும் முற்றும் பார்த்தார் எல்லா கௌண்டர்களிலும் மக்கள் ...
மேலும் கதையை படிக்க...
“எனக்கு ஒரு பிரச்னை’ என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு. வந்தவன் ஒரு இளம் தொழிலதிபன். “என்ன பிரச்னை, என்னாச்சு?’ என்று வினவினார் குரு. “என்னிடம் வேலை பார்க்க நல்ல வேலையாட்கள் கிடைப்பதில்லை. வேலைக்கு வருபவர்களும் நீடித்து இருப்பதில்லை. ஏதாவது பிரச்னையில் வேலையை விட்டுப் போய்விடுகிறார்கள்’ ...
மேலும் கதையை படிக்க...
உங்களில் மிகச் சிறந்த ஆண்மீகவாதிகள் யார் என்று தலையில் தலைப்பாகையுடன், கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு, தீர்க்கமான பார்வையுடன் அவர் (விவேகானந்தர்) அந்தக் கேள்வியை கேட்டபோது நான் மட்டும்தான் வேகமாக கையை தூக்கினேன் அவ்வளவு பெரிய கூட்டத்தில்.... 'வெரிகுட்" என்று என் ...
மேலும் கதையை படிக்க...
மாறனுக்குக் கண்ணத்தில் அறை வாங்கியதுபோல் இருந்தது. அவமானமும் ஆத்திரமும் ஜிவுஜிவுயென தலைக்குமேல் ஏறி உச்சந்தலையில் ஆணியடித்துப் பொறிகிளப்பின. ஒன்றும் செய்யமுடியாத வக்கற்ற நிலை அவனை ஏளனம் செய்து உட்கார வைத்துவிட்டது. பக்கத்து நாற்காலியில் எதிர்த்த வரிசையில் என்று எல்லாரும் தன்னைப் பற்றித்தான் ...
மேலும் கதையை படிக்க...
புரிந்தும் புரியாமலும்…
இ(எ)ப்படியும்…
தண்டித்தலைவிட தட்டிக் கொடு…
ஃபிராய்ட் கனவுகள்
இன்னும் அரைமணிநேரத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)