கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 4, 2013
பார்வையிட்டோர்: 15,525 
 

அவன் அந்தச் சிலையை உற்றுப் பார்த்தான். பார்க்கப் பார்க்க, பார்த்துக் கொண்டே நிற்க வேண்டும் என்ற வெறிதான் அதிகமாயிற்றே தவிர, வெறும் சிலைதானே என்ற உணர்வு ஏற்படவே இல்லை. அடடா, என்ன அழகு! என்ன அழகு!

அவள் அவனையே குறுகுறுவென்று பார்த்தாள். வைத்த விழி வாங்காமல் அவன்மீது தன் கூரிய பார்வையை செலுத்தியிருந்தாள். போதாக்குறைக்கு மெல்லிய புன்னகை வேறு. ரோஜா நிறம். உடலின் அளவான பருமனுக்கும் உயரத்துக்கும் தகுந்த மாதிரி பச்சை வண்ணப் பட்டுச் சேலையை வேறு சுற்றிவிட்டிருக்கிறார்கள். அதற்குப் பொருத்தமாக மஞ்சள் ரவிக்கை, காதில் ஓர் அழகு வளையம். கழுத்தில் ஒரு நெக்லஸ். பொன் நகை அலங்காரம் என்னவோ அதிகமில்லைதான். அந்தப் புன்னகையின் அலங்காரம்தான் அற்புதம்!

உள்ளுக்குச் சுருங்கிக் கிடந்த தன் கைவிரல்களின் ரணங்களின்மீது மொய்த்த ஈயை விரட்டி விட்டு விட்டு, பார்வையை மீண்டும் அந்தச் சிலை மீது செலுத்தினான் அவன். அடடா, அவனையே குறுகுறுவென்று பார்க்கிறாளே!

அவன் உள்ளத்தில் பெருமிதம் பொங்கிற்று. ஒரு பெண், அதிலும் பட்டுச் சேலை கட்டிய ஓர் அழகான பெண், அவனை இத்தனை தூரம் இவ்வளவு நேரமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாளே! அவளால் எப்படி முடிகிறது?

“டொங்!”

அவன் தன் கைகளில் ஏந்திருந்த தகரக் குவளையைப் பார்த்தான். புதிதாக ஓர் ஐந்து பைசா நாணயம் விழுந்திருந்தது. அந்த ஜவுளிக்கடை முதலாளியின் ‘பெரியமன’த்தின் சிறிய பிரதிபலிப்பு. பார்வையைத் திருப்பி அவளைப் பார்த்தான். இப்போது அந்தப் புன்னகையில் சிருங்காரமில்லை. ஏளனம்தான் தெரிந்தது. ஏன் இப்படி?

அவன் பார்வை தாழ்ந்தது.

‘சே, அவள் முன்னாள் பிச்சை வாங்கலாமா?’ என்று உள் மனம் கடிந்து கொண்டது. என்ன செய்வது? போட்டுவிட்டார்கள். திருப்பிக் கொடுத்துவிடுவது முறையாகுமா? ‘இனிமேல் அவள் முன்னால் பிச்சை வாங்கக் கூடாது’ என்ற சங்கல்பம்.

“டேய், பெனாதிப் பயலே, அதான் வழக்கம்போல வாய்க்கரிசி போட்டாச்சே? இன்னும் ஏண்டா நிக்கறே, செனியனே?” ஜவுளிக்கடை முதலாளி கண்டனம் எழுப்பினார். அவன் அவரைப் பரிதாபமாகப் பார்த்தான். அவரோ தன் முகத்தை விகாரமாய்ச் சுருக்கிக் கொண்டார். எப்போதுமே அவர் அவனைக் கண்டுவிட்டால், இஞ்சிக் கஷாயம் குடித்த மாதிரிதான் ஆகிவிடுவார். அதைப் பற்றி அவருக்குக் கவலை இல்லை. அவனை இமைக்காது பார்க்கத்தான் அருகிலேயே ஒருத்தி நிற்கிறாளே?

அவன் மறுபடியும் அவளைப் பார்த்தான். அந்தப் பார்வையைச் சந்தித்ததும் மனத்துக்குள்ளே ஒரு கிளுகிளுப்பும், உடன் ஒரு புல்லரிப்பும் நிகழ்வது அவனுக்கே வியப்பை உண்டு பண்ணிற்று. இவளுக்கு இத்தனை பொறுமையும் இவ்வளவு சகிப்புத் தன்மையும் எப்படி வந்தது?

அவன் முகத்தைச் சிலீரென்று எதுவோ தாக்கிற்று. ஒரு கணம் திக்குமுக்காடிப் போன அவன், நிமிர்ந்து பார்த்தபோது, எதிரே ஜவுளிக்கடை முதலாளி நின்று கொண்டிருந்தார். கையில் குவளையுடன். சற்று முன்பு அவரால் அபிஷேகம் செய்யப்பட்ட தண்ணீர் முகத்திலிருந்து வழிந்தது அவனுக்கு.

“போடா, அந்தண்டை நாயே! நாலு பேர் வந்து போற கடை வாசலில் வந்து நிற்கிறான். உன்னைப் பார்த்தாலே, ஒருத்தனும் உள்ளே நுழைய மாட்டான். போ, போ!”

அவனுக்கு கண்ணீர் தளும்பிக் கொண்டு வந்தது. அவர் சொல்வதும் உண்மைதானே? கடையின் அழகுக்காக ‘அவளை’ நிறுத்தி வைத்திருக்கும் அவர், அருகிலேயே ஓர் அருவருப்பான தோற்றம் நிற்பதைக் கண்டால் அனுமதிப்பாரா? உன்னைத் தொலைவில் கண்டுவிட்டாலே, முகத்தைத் திருப்பிக் கொள்ளும் மனிதர்கள் அவன் அருகில் நிற்பதை விரும்புவார்களா? ஆனால், அந்த அவளே அவனை இமைக்காது பார்த்துக் கொண்டிருப்பது அவர்களுக்கெல்லாம் தெரியுமா, பாவம்?

அவன் தலையைத் திருப்பி அவளைப் பார்த்தான். அந்தப் புன்னகையில் இப்போது அனுதாபம் சுடர் விட்டது. அவன் ‘போய் வருகிறேன்’ என்று சொல்லாமல் சொல்லிவிட்டு தள்ளாடி நடந்தான். ‘ச்சே, என்ன உலகமடா இது, பொல்லாத உலகம்! நம்மையும் ஒருத்தி அன்பாகப் பார்ப்பதைப் பொறுக்காத உலகம்’ என்று அவன் உள்ளம் வேதனையில் அரற்றினாலும், அவளுடைய அந்தப் பார்வையும் புன்னகையும் நினைவுக்கு வந்து ஓர் இன்பமயமான வேதனையையும் தவறவில்லை.

அவனைப் பொறுத்தவரை இது முதல் அனுபவம் — ஆனால் சுகானுபவம். துள்ளியோடும் சிறுமி முதல் தள்ளாடும் கிழவி வரை அவனைப் பார்க்கவே கூடாத பிராணியாகக் கருதி ‘ஈஸ்வரா’ என்றும், ‘கருமம், கருமம்’ என்றும், ‘த்தூ, தூ! ஒழி சனியனே’ என்றும் கண்களை மூடிக்கொள்ளும் இந்த உலகத்தில், கொஞ்சமும் அஞ்சாது, நின்ற நிலை வழுவாது, பார்வையைத் துணிச்சலாக, அவன் மீதே நாட்டி, அப்படியே அற்புதப் புன்னகையையும் காட்டி அவனுக்கும் ஒரு புத்துணர்வை வழங்கியிருக்கிறாளே, ஒருத்தி! அந்த அனுபவம் புதுமையல்லவா அவனுக்கு?

சித்திரத்துச் சுவரில் வசதியாகச் சாய்ந்து கொண்டு அவள் நினைவை அசை போட்டுக் கொண்டிருந்தான் அவன். எதிரே தகரக் குவளையும், அருகே சாலையில் பொறுக்கி வந்த துண்டு சிகரெட்டுகளும், சற்றுத் தள்ளி நாற்றம் நாறும் கிழிசல் துணிகளும், மூலையில் சுருட்டிப் போடப்பட்ட ஓலைப்பாயும் தங்கள் தலைவனின் இன்ப மயக்கத்தை உணர முடியாமல் விழித்துக் கொண்டு கிடந்தன. அவன் தீண்டக்கூட இல்லை அவற்றை.

அவனைப் பொறுத்த மட்டில், கை கால்கள் என்றைக்குச் சுரணை இழந்து சுருங்கிச் சாம்பி, ரணங்களைப் பெற்றனவோ, அன்றையிலிருந்தே அவன் உள்ளத்திலும் அந்த சுரணையற்றதனம் பரவத் தொடங்கி நாளடைவில் மரத்து மண்ணாய்ப் போயிற்று. அது முதல் அவன் தன்னையும் உலகத்தின் சம்பிரதாயமான பழக்க வழக்கங்களில் இருந்தும், உணர்ச்சி பூர்வமான செயல்களிலிலிருந்தும் பிரித்துக்கொண்டு, அர்த்தமற்ற, பிடிப்பில்லாத, ஒரு வாழ்வைத் தொடங்கிவிட்டான்.

உலகம் என்பது தன்னைத் தங்குவதற்கு அனுமதிக்கும் அந்தச் சத்திரத்தைவிட விசாலமானதல்ல என்பதும், மனிதர்கள் தனக்குப் பிச்சையிடும் இயந்திரங்களே அன்றி வேறல்ல என்பதும் அவனுடைய முடிவு. தான் படுக்கும் ஓலைப்பாயின் மீதும், உண்ணும் தகரக் குவளையின் மீதும், பிடிக்கும் துண்டு சிகரட்டுகளின் மீதும் அவன் காட்டும் அன்பில் நூற்றில் ஒன்றுகூட அவனுக்குச் சக மனிதர்களின்மீது தோன்றியதில்லை. அதற்குக் காரணம், பிற மனிதர்கள் அவனை நோக்கும் விதம்தான். வியாதிக்காரன் என்பதால் அவனைத் தோளோடு தோள் சேர்த்து அணைத்து ஒரே பந்தியில் உணவிட மாட்டேன் என்கிறார்களே என்று அவன் வருத்தமுற்றதுமில்லை, வருத்தமுறப் போவதுமில்லை. ஆனால், மனிதனுக்கு மனிதன் காட்டும் அந்த மனிதாபிமானம் கூடவா வறண்டுவிட்டது?

உலகம் அவனை கழிவுப் பொருளைவிடக் கேவலமாகக் கருதுகிறது என்பதைவிட, உலகத்தை அவன்தான் அப்படிக் கருதுகிறான் என்பதுதான் பொருந்தும். ஏனெனில், அவன் பெண்களைப் பார்த்திருக்கிறான். கட்டுக் கிழத்திகளாய் கண்ணை கவரும் உடையலங்காரங்களோடும், உணர்வைக் கிளறும் அங்கங்களோடும் நடை போடுவதைக் கண்டிருக்கிறான். ஆனால், ஒரு சிறு சலனம்கூட அவன் இதயத்தில் குமிழிப்பதில்லை. அவனுடைய பார்வையில் பட்ட ஒரு துண்டு சிகரட் அவனுக்கு ஏற்படுத்தும் ஆவல்கூட, அந்தப் பெண்களின் லாவண்யத்திலும், சௌந்தர்யத்திலும் அவனுக்கு ஏற்பட்டதில்லை. ஆனால் அவர்களோ, அவனைக் கண்டு ஒதுக்கவும், முகம் சுளிக்கவும், திட்டவும் கற்றிருக்கிறார்கள். யாருக்கு வெற்றி?

இப்போது அந்த அகராதியிலே ஒரு புதிய மாற்றம். அவனையும் ஒருத்தி பார்க்கிறாள்; புன்னகைக்கிறாள்; எதிரே நிற்கிறாள். அந்தத் துணிவை அவன் ஏற்கத்தானே வேண்டும்? அந்தத் தியாகியின் அன்பைப் போற்றத்தானே வேண்டும்?

குவளையில் இருந்த அழுகிய வாழைப்பழங்களையும், மிக்சர், காரா பூந்தி, பக்கோடா, என்று இனம் பிரிக்க முடியாமல் கலந்து கிடந்த பட்சணங்களையும், உடைந்த லட்டுத் துகளையும், ஒரு கை பார்த்துவிட்டு, மீண்டும் சத்திரத்துச் சுவரில் சாய்ந்து கொண்டு கற்பனையுலகில் சஞ்சரிக்கலானான் அவன்.

மனிதனின் மனமே விந்தையும் வேடிக்கையும் நிறைந்த ஒன்றுதான். இகத்திலிருந்து கொண்டே பரத்தில் வாழும் மாமுனிவர்களும், தவயோகிகளும்கூட சலனத்தால் அடித்து வீழ்த்தப் பட்ட மாயை என்றும், மயக்கம் என்றும், ஐயந்திரிபறத் தெரிந்தும்கூட ஓர் இழப்புணர்வால் ஈர்க்கப் பட்டு, படு பாதாளத்தில் விழும்போது, சாதாரண, ஒரு சதைப் பிண்டமான, அவன் தன்னையே ஏமாற்றிக் கொள்வதொன்றும் அதிசயமல்ல.

அவனின் அன்றாட நடவடிக்கைகள் அனைத்தும் இப்போது மாறிவிட்டன. யாருக்காகவோ — எதற்காகவோ, வாழ்கிறோம் என்ற உணர்வுதான் அவனுக்கு இப்போதெல்லாம் தோன்றத் தொடங்கிற்று.

தினமும் அவன் கடை வீதிக்கு வருவான். அவளைத் தூர நின்றும், அருகில் நின்றும் பார்ப்பான். எப்படி நின்றாலும் அவள் தன்னையே பார்ப்பதாக அவன் நினைப்பான். அவளுடைய உடலுக்குப் பொருத்தமான சேலையையும், ரவிக்கையையும் ரசிப்பான். இப்படி அந்த சிலைக்கும் தனக்கும் ஓர் அர்த்தமற்ற உறவை கற்பித்துக் கொண்டு வாழ்ந்த அவன் வாழ்க்கையிலும்கூட, இப்போது சுவையியிருந்தது.

மார்கழி தொடங்கிவிட்டது. குளிரின் தன்மை அவனுடைய உணர்வற்ற உடலைக்கூட வாட்டிற்று. தரையில் படுத்துக் கொண்டு, ஓலைப்பாயை உடம்பில் சுற்றிக் கொண்டு, தூங்கிக்கூட அதன் பார்வைக்குத் தப்ப இயலவில்லை. நெஞ்சப் பிரார்ந்தியம் முழுவதையும்கூட நெருடிப் பார்த்தது அந்தப் பொல்லாத குளிர்.

மெல்லத் தன் சேமிப்பை ஆராய்ந்தான் அவன். முழு ரூபாயும் எழுபது பைசாவும் இருப்பிருந்தது. அதில்கூட வாங்கிவிடலாம்தான். அந்த சேமிப்பின் நோக்கமே ஒரு கதை. சுருங்கச் சொல்லப் போனால், அது அவனுக்கு இறுதியாத்திரைக்கு வழியனுப்பு விழா நடத்தத் தேவையான செலவுகளுக்கு. எங்கேயாவது எப்போதாவது திடேரென்று செத்துவிட்டால், அநாதைப் பிணமாய், முனிசிபாலிட்டி லாரியில் அள்ளிக் கொண்டு போகிற துரதிருஷ்டம் தனக்கு நேரக்கூடாது என்ற நினைப்பில், நாலு பேரைப்போல, தனக்கும் பாடை கட்டி, சங்கு முழங்க, சேகண்டி ஒலிக்க ஜம்மென்று க்ருஷ்ணாம் பேட்டை இடுகாட்டில் எரிய வேண்டும் என்ற நப்பாசை காரணமாக, அவனால் சேமிக்கப்படும் சுயநிதி. அந்த நிதியைத் தகுந்த முறையில் செலவிட நான்கு கிழட்டு பிச்சைக்காரர்களைக் கொண்ட ஒரு கமிட்டியைக்கூட அவன் நியமித்திருந்தான்.

அத்தகைய ஒரு நிதியைப் போர்வைக்குச் செலவிட அவன் தயங்கினாலும், குளிரே இரண்டொரு நாளில் அந்த நிதிக்கு வழியனுப்பு செலவை வைத்துவிடுமே என்ற பயத்தில் அவன் தயாராகிவிட்டான். அந்த பயத்துக்கு — உயிர் போய்விடுமோ என்ற அந்த புதிய பயத்துக்கு — காரணமே அந்த அவள்தான். அவளிருக்கும்வரை ஏன் சாகவேண்டும்?

நிதியோடு புறப்பட்டு வந்த அவன் ஒரு நடைபாதைக் கடையில் தனக்கொரு போர்வை தேர்ந்தெடுக் கொண்டு குவளையில் இருந்த சில்லறையை அள்ளி வியாபாரியிடம் கொடுத்தபோது, அவன் வேறொரு குவளையில் தண்ணீர் கொண்டு வந்து காசுகளைக் கழுவிப் பெற்றுக்கொண்டு விட்டான்.

புது மணம் கமழும் அந்த சாக்குப் போர்வையை தோளில் போட்டுக் கொண்டு ஒரு கம்பீரப் பெருமிதத்தோடு நடந்தான் அவன். அவனுக்காக அங்கே ஒரு கடை வாசலில் கால் கடுக்க நின்று கொண்டுருப்பாளே அவள்?

ஜவுளிக்கடையை நெருங்கின அவன் கால்கள். கடை வாசலில் நின்று கொண்டிருக்கும் அவள்மீது பார்வை பட்ட மாத்திரத்தில் அவன் இடியால் தாக்குண்ட அதிர்ச்சியை அடைந்தான். நெற்றி மேட்டுச் சுருக்கங்கள் புருவத்தை மேலேற்றின. விகாரத் தன்மை நிரம்பிய வதனம் மேலும் பயங்கரமாயிற்று.

என்ன கொடுமை! இது என்ன கொடுமை! நேற்றுவரை பச்சை வண்ணப் பட்டுடுத்தி பவிசோடும் பாங்கோடும் நின்றிருந்த அவளுக்கா இந்த அநியாயம்?

அவனுக்குக் கால்கள் உளைந்தன. உடம்பெல்லாம் ஒரு நடுக்கம். நெஞ்சே விண்டுவிட்டது.

அது வெறும் சிலை. அதிலும் வியாபாரச் சிலை. பட்டுடுத்துவதும், பொட்டிடுவதும், துணியின் விற்பனைக்காகவே அன்றி, சிலையில் அழகுக்காக அல்லவே! கட்டிவிட்ட சேலைக்கு விலை வரும்போது, சிலையின் தன்மையையும் நிலையையும் யாரும் நினைக்கப் போகிறார்களா, என்ன?

அவனுடைய அவள் மொழுக்கென்று வெறுமையாக நின்றாள். எந்தவித மாற்றமுன் இன்றி அவள் அதே புன்னகையோடும் எழிலோடும் நின்றாள். அவனுக்குப் பொறுக்கவே இல்லை. ஓர் ஆவேசத்தோடு அருகே நெருங்கினான். தோளில் கிடந்த போர்வையை நடுங்கும் கரங்களால் எடுத்து அதைப் போர்த்தினான். கடை விழியில் ஈரம் கசிந்தது. திரும்பிப் பாராமல் தள்ளாடி நடந்தான். அவனுடைய அவள் அப்படியே நின்றாள்.

“டேய் பையா, ஒரு குச்சியால அந்தப் போர்வையைத் தூக்கி ரோட்டிலே எறிஞ்சிட்டு, அந்தச் சிலையை உள்ளே கொண்டு போய்ப் போடுடா சீக்கிரம். கண்றாவி..!” ஜவுளிக்கடை முதலாளியில் உத்தரவு செயல் வடிவமாயிற்று. தன்னுடைய அவளின் புனிதத் தன்மைக்காக அவனால் சமர்ப்பிக்கப்பட்ட அந்தக் காணிக்கை ரோட்டில் விழுந்தது. அவனுடைய ‘அவள்’ அப்படி வெறிச்சென்று நிற்கும் காட்சியைக் காண்பதைவிட, குளிரின் கொடுமை பெரிதாகத் தெரியவில்லை அவனுக்கு. இது இந்த மனிதர்களுக்குத் தெரியுமா?

(ஆனந்த விகடன் முத்திரைக் கதை, 18.02.1966)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *