வெறும் கூடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 14, 2012
பார்வையிட்டோர்: 7,978 
 

சற்று முன்புதான் திருந்தாசி மணியடித்து ஓய்ந்தது.முன்பெல்லாம் நள்ளிரவு மூன்றோ நான்கோ மணிக்கெல்லாம் விழித்து தொழிலுக்கு போவதுதான் தொழிலார்களின் வழக்கம்.அந்தோணியும் இதற்கு விதிவிலக்கல்ல.இப்போதெல்லாம் அப்படி நடப்பதில்லை.திருந்தாசி மணி ஆறு மணிக்கு கோயிலிருந்து அடித்த பின்னர்தான் தொழிக்கு போக வேண்டிய கட்டாய சூழ்நிலை. இந்திய இராணுவம் சனசமூக நிலைய கட்டிடத்திற்குள் முகாமிட்ட பின்னரே இந்தக் கால வரையறை கட்டாயநிலைக்கு வந்துவிட்டது.பொதுவாக இந்தச்சூழல் மீனவர்களுக்கு உடன்பாடில்லையென்றாலும் அவற்றை மீறி நடந்து கொள்ள எவருக்கும் துணிச்சல் வரவில்லையென்று சொல்வதிலும் பார்க்க துப்பாக்கிச் சூடு வாங்கத் தயார் என்றால் அந்த முடிவை எடுக்கலாம் என்று சொல்வதுதான் பொருத்தமாயிருக்கும்.

காலையில் இராணுவத்தின் காவல் அரணுக்கு சென்று தொழிலுக்கு போகிற மீனவர்கள் வரிசையில் நின்று தமது அடையாள அட்டையை கொடுத்து பதிவேட்டில் பதிந்த பின் அடையாள அட்டையை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு கடலுக்கு போனால் வரும் போது அந்த காவல் அரண்ணுக்குச் சென்று வாங்கிக் கொண்டு வீட்டிற்கு போவர்கள்.இராணுவம் கட்டிடத்திற்குள் இருந்தாலும் அந்த வளவுக்குள்ளேயே ஒரு மூலையை ஒட்டி மண்மூடைகள் அடுக்கி ஒரு சிறிய கூடுபோல் காவல் அரண் போட்டிருந்தார்கள்.சிலமணித்தியாலத்திற்கு ஒரு முறை மாறி மாறி காவல் புரிவார்கள்.இதேபோல் கடற்கரையை பார்த்தபடியிருக்கும் கட்டிடத்தின் பின் பக்கமாக என்னெரமும் துப்பாக்கி சகிதம் உலாவித் திரிவார்கள்.முன்னரங்கில் மட்டுமல்ல கடல்பக்கமாக இருந்தும் வந்து தாக்குதல் தொடுக்கலாம் என்ற எச்சரிக்கையோடு மிகவும் அவதானமாக காவலிருப்பார்கள். உள்ளுக்குள் ஒருவித பயமோ அல்லது பயமற்றோ இருக்கும் அந்த இருப்பில் காவல் அரணை கடந்து செல்கின்ற ஒவ்வொரு மனித முகத்தையும் உன்னிப்பாய் கவனிக்காமல் விடுவதில்லை.சிலர் தங்கள் கண்ணுக்குள் இதுவரையில் புலப்படாத முகமாய் இருந்தால் அவர்ளை மறித்து அடையாள அட்டையை பார்ப்பதோடு அவர்கள் பற்றிய முழுமையான விபரத்தை அறிந்து கொள்வார்கள். சந்தேகத்தின் பேரில் யாரும் கைது செய்யப்பட்டாள் அவர்களை எங்கு கொண்டு செல்கிறார்கள் அவர்களுக்கு என்ன நடக்கின்றது என்பது பற்றி அநதோணிக்கோ அந்த ஊரைச்சேர்ந்த யாருக்குமே தெரியாத விடயம்.

அந்தோணி தொழிலுக்குப் போவதற்கு தயாராகிக் கொண்டான். இன்று சனிக்கிழமை என்ற படியால் மாறனுக்கு பாடசாலை விடுமுறை. மகனையும் எழுப்பி விட்டான், தொழிலுக்குப் கூட்டிக் கொண்டு போவதற்காக. அறைக்குள் படுத்திருந்த மேரியின் இருமல் சத்தத்துடன் அந்தோணியின் மனைவி எலிசபேத்து தூக்கம் கலைந்து விழித்து விட்டாள். படுத்த படுக்கையில் கிடந்தபடியே… “இஞ்சேருங்க தேத்தண்ணி போட்டுத் தரட்டாங்கோ?” என்று கேட்ட போது எலிசபேத்தின் நினைவு அந்தோணியின் நெஞ்சில் முட்டியது. நேற்றிரவே அவனுக்கு எலிசபேத் சாப்பாடு போட்டு கொடுக்கும் போதே அவள் கொஞ்சும் குரலில் செல்லமாய் பலவற்றை சொன்னாள். அனேகமாக இருவரும் சாப்பிடும்போது தான் பல விடையங்கள் பற்றி பரஸ்பரம் புரிந்துணர்வுடன் கதைத்துக் கொள்வது வழக்கம். எப்போதாவது எந்தக் கருத்து நிலையில் முரன்பாடு எழுந்தாலும் அவர்கள் தங்களுக்குள் அன்றைய பொழுதே பேசித்தீர்த்துக் கொள்வார்க்ள். நேற்றைய பொழுதில் எலிசபேத் சொன்ன வார்த்தைகள் அவனைச் சுற்றிச் சுழன்று வந்துகொண்டிருந்தது. “இங்கேரப்பா நமக்கெண்டு இருக்கிற தொழில் கடலத்தொழில் தான். அதையும் இந்த பாழ்பட்டுப்போவார் வந்த பிறகு நேரக் கட்டுப்பாடு போட்டிட்டாங்க. இதால வலை இழுக்கப் போறதற்குள்ள விடிஞ்சுபோய் மீன,; றால் எல்லாம் வலைக்குள்ள இருந்து மீண்டு போய்விடுதுங்க. எத்தனை நாளுக்குத் தான் இப்படி வலை இழுக்கப்போய் வெறுங்கையோட வாறது. ஒருக்கா ஆமிக்காரன்கிட்ட கதைச்சு நேரத்தோடு தொழிலுக்கு போக வழிபண்ண மாட்டிங்களா..?”“எலிசபேத் நான் என்ன செய்ய முடியும். அவங்க என்ன தான் இருந்தாலும் ஆமிக்காரன்கள். அவங்க தங்கட மேலிடத்து ஓடரைத்தான் செய்வாங்க.”

“உங்களோடதானே அந்த ஆமிக்காரன்கள் நல்லா கதைப்பாங்கள் எண்டு சொன்னீங்கயல்ல…….. அவங்கட்டயாவது சொல்லிப் பாருங்கவன். அப்படி கேட்டு சரிவந்தால் மெத்தப்பெரிய உபகாரமாக இருக்கும் நம்ம ஊருக்கு. எனக்கு உடபெல்லாம் என்னவோ செய்யிறமாதிரி இருக்குது. நாரி வேற உழைவாய்யிருக்கு. காச்சல்கீச்சல் வருகிறமாதிரி போல இருக்கு. நான் தூங்கப்போறன்.” என்று எலிசபேத் சொல்ல,“அப்ப இரண்டு ‘டிஸ்பிறின்’ வாங்கிக் கொண்டு வரவாங்க.. போட்டுட்டு படுத்தா கொஞ்சம் சுகமாக இருக்குமல்ல.” என்று அந்தோணி கேட்டான்.

“வேணாப்பா…. நாளைக்கும் இதேமாதிரி இருந்தா காலையில பார்த்துக் கொள்ளலாம். இப்ப நான் தூங்கப்போறன்.” என்று தூங்கப் போனவள் தான் இப்ப எழும்ப இசக்கம் இன்றி வார்த்தைகள் வந்த போது அந்தோணிக்கு எலிசபேத்தின் நினைவு அனிச்சையாக வெளிப்பட்டு விலகிச் சென்றது.

“இங்கேரப்பா நான் கேட்டதக்கு ஒண்டும் பறையாமல் கொள்ளாமல் நிக்கிறையள். என்ன நடந்தது…?”மின்விளக்கு போடப்படாத இருள் சூழ்ந்த அறையில் இருந்து குரல் அந்த அமைதியை கிழித்துக்கொண்டு அந்தோணியின் காதில் விழுந்தது.

அந்தோணி கோடிப்பக்கமாக மின்விள்க்கின்; வெளிச்சத்தில் ‘கடிப்பைத்’ தேடிக் கொண்டிருந்தான். “எழும்பி தேத்தண்ணி போட்டுத்தரவாங்க..?”மீண்டும் ஒடுங்கிய குரலில் எலிசபேத் கேட்டாள்.

“இந்த நேரத்தில எதுக்கு உனக்கு சிரமத்த கடலுக்கு போகேக்க சந்தியிலிருக்கிற அப்துல்லா காக்ககிட்ட குடிச்சுப்போட்டு போறன்” என்றான் அந்தோனி.

எலிசபேத்து நேற்று தன் உடல் நிலை பற்றி சொன்னதை நினைவு வைத்துத்தான் இதைச் சொல்லியிருக்கலாம்.

“சில்லறைக்காசு உங்கட்ட கிடக்கோ…?”

“இல்லையப்பா…”

“என்ர பச்ச வைல் சீலை மூலையில முடிஞ்சு வைச்சிருக்கிற சில்லறைக் காசை எடுத்துக்கொண்டு போங்க…”.

“சரியென எடுத்துக்கொண்டு போறன். நீங்க தூங்குங்க…” என்று சொல்லிக் கொண்டு மாறனையும் கூட்டிக்கொண்டு கடலுக்கு போவதற்கு புறப்பட்டார்கள்.

மங்கலான வெளிச்சத்தில்வீதி விறைத்து கிடந்தது.துயரத்தில் தோய்ந்த இருப்பின் ஈடாட்டத்தை இரவு சுமந்து கிடந்தது. கடற்கரையின் மெல்லிய அலையசைவு இராணுவம் தங்கியிருக்கும் கட்டிடத்தின் பின்பக்க கரையை மோதிக்ககொண்டிருந்தது. ஊதல்காற்றின் வீச்சில் ப+மி குளிர்ந்திருந்தது. காவல் அரண்களில் லாம்பின் வெளிச்சத்தில் கடல் செல்வதற்காக காத்திருக்கும் மீனவர்கள் நேர் வரிசையில் நின்றார்கள். ஒவ்வொருவரிடம் இராணுவம் அடையாள அட்டையை வாங்கி பதிவு செய்தபின் காவல் அரணுக்குள் இருக்கும் ஒரு சிறிய பெட்டிக்குள் அடிக்கி வைத்தார்கள். அந்தோணி அடையாள அட்டையை கொடுத்து பதிவு செய்து விட்டு கடற்கரைக்கு வந்து தோணியில் ஏறி மரக்கோலால் தாங்கத் தொடங்கினான். அந்தோணி கடையால் பக்கமாக நின்று தாங்க, மாறன் அணியப் பக்கத்தில் வங்கில் இடது காலை பிடிப்பாக வைத்துக்கொண்டு வள்ளத்தைத் தாங்கினான். அந்தோணி கடையால் பக்கதில் நின்று வள்ளத்தை தாங்குவதோடு வள்ளம் போகும் திசையை கவனமாக செலுத்தினான். சிலர் குறுக்குமறுக்காக களங்கண்ணி வலையை துறையால் பாஞ்சதால் அந்த வலைகளை அறுத்துக்கொண்டு போகாமல் அவதானமாக தாங்கிக் கொண்டு போனர்கள்.

களங்கண்ணி வலைகள் பல வெள்ளை பறிந்து கிடந்தது. நிலவுகாலம் நெருங்குகின்றது. இனிமேல் தான் எல்லோரும் வலையைப் பிடுங்கி துவர்ப்பட்டை போட்டு அவிச்சு மீண்டும் இருட்டு வந்தவுடன் கடலில் புதைப்பார்கள். அந்தோணி கொஞ்சம் வித்தியாசமாகச் செய்வான். களங்கண்ணி வலை இரண்டு கடலில் நிற்கும் போது வீட்டில் எப்போதும் இரண்டு களங்கண்ணி வலையை பொத்தி, அவிச்சு, காயப்போட்டு மேலதிகமாக வைத்திருப்பான். நிலவு காலம் வந்தால், வெள்ளை பறிந்த வலையை பிடுங்கி வீட்டுக்கு கொண்டு வந்து விட்டு, வீட்டில் இருக்கும் வலையை அடுத்த நாளே கடலில் புதைச்சு விடுவான். நிலவு காலத்தில் இறால் பிடிபடாவிட்டாலும், சில மீன் சாதி வலைக்குள் அகப்படும் என்பதற்காக.

கிழக்கால் வெள்ளாப்புக் கொடுத்துக் கொண்டிருந்தது. முனங்குப் பக்கம் இருந்து கொண்டல் காற்று விடாமல் மூசிக்கொண்டிருந்தது. களங்கண்ணி வலையை அந்தோணியின் வள்ளம் நெருங்கிக்கொண்டிருந்தது. கடல் காகங்கள் கடலுக்குள் விழுந்து விழுந்து மீனைக் கொத்திக்கொண்டு மேல்நோக்கி பறப்பதும், மீண்டும் கடலுக்குள் மூழ்குவதுமாக இருந்தது. வள்ளத்தை விரைவாக தாங்கினார்கள். கடல் சாதாளையை கிழித்துக்கொண்டு வள்ளம் வேகத்தில் முன்நோக்கி பாய்ந்து, பாய்ந்து போனது. மாரி காலம் என்பதால் துறைக்கரை கூட கொஞ்சம் ஆழமான கடல் பகுதி போல் இருக்கும். கடலின் நீர்ப்பரப்பில் வெண்ணாரைகள் தென்றல் போல் அசைந்து கொண்டு போனது. மாரிகாலங்களில் தான் அநேகமாக ‘சுணைநீர்’ மீனவர்களுக்கு பிடிப்பது வழக்கம். ‘சுணைநீர்’ தொழிலாளிகள் மீது மெல்லப் பட்டாலும், உயிரைக் கொல்லும் அளவிற்கு உடலை வருத்தி பாடுபடுத்தி விடும். அப்படி யாருக்கும் சுணைநீர் பட்டால் அடுத்த நாள் வரை அந்த வலி தாங்க முடியாமல் தவிப்பார்கள்;. கொஞ்சம் வசதி உள்ளவர்கள், யாழ்ப்பாண பிரதான வீதியில் உள்ள டொக்டர் பிலிப்பிடம் போனால், அவர் கொடுக்கிற மருந்துடன் அந்த வலி மறைந்து போய்விடும். இந்தச் சுணைநீர் எப்படி கடலில்…?அதுவும் மாரி காலத்தில் தான் திடீரென தோன்றுகின்றது என்றால், யாழ்ப்பாணப் பெரியாஸ்பத்திரியில் இருந்து இரசாயணக் கழிவுக் கூறுகள், கழிவுக் குழாய்கள் வழியாக பண்ணைப் பக்கமாக கடலோடு கலக்கின்றது. இந்தக் கழிவு நீர்தான் கடலில் கலந்து மாரிகாலத்தில் ஒரு வகையான இரசாயன பதார்த்தம் போல் கடலின் நீரின் மேற்பரப்பில் கண்ணுக்குப் புலப்படாமல் மிதந்து செல்லுகின்றது. தற்செயலாகவே தொழிலாளிகள் மீது பட்டுவிடுகிறது. இது காலம் காலமாய் இருந்து வந்ததா என்று பார்த்தால் அதுவும் கிடையாது. ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன்னர் தான் இந்த ‘சுணைநீர் பிடிச்சது’ என்ற வார்த்தைப் பிரயோகம் புளக்கத்தில் வந்தது. இதை நிவர்த்தி செய்ய எவரும் முன்வரவில்லை.சுனை நீர் உடலில் படும்போது அது வழுக்குண்டு போய்விடும் என்பதால். அந்தோணியின் வள்ளத்துக்குள் எப்போதும் ஒரு போத்தலில் தேங்காய்யெண்ணை நிரப்பி வைத்திருப்பார்.

அந்தோணி வள்ளத்தை வலையோடு அணைத்துக் கட்டினான். போத்தலோடு இருந்த தேங்காய்யெண்ணையை எடுத்து அந்தோணியும், மாறனும் உடம்பு முழுக்க ப+சிக் கொண்டு, கடிப்போடு வலைக்குள் இறங்கும் போது கடல் தண்ணியைத் தொட்டு அந்தோணி பிதாச் சுதன் போட்டு விட்டு இறங்க அதன் பின் மாறனும் அதேமாதிரிச் செய்து கொண்டு கடலில் இறங்கினான். முதல் இழுப்பை இழுத்து மாட்டி வள்ளத்துக்குள் போட்டார்கள். மீண்டும் அடுத்த இழுப்பிற்காக மாறன் கடிப்பின் ஒரு பக்கத்தை கையால் வலையின் வாசல் பக்கத்தை மறைத்த படி நிற்க அந்தோணி சுற்றி இழுத்துக் கொண்டு வந்தான். சிறகு வலைக்குள் கிடக்கின்ற, கடல் உணவுகள் அனைத்தும் கடிப்பைப் போட்டு இழுப்பதன் மூலம் அகப்பட்டு விடும். சில வேளை, கடிப்பை வளைத்து இழுக்கும் போது மீனோ, றாலே கழிந்து போய்விடும். அதற்காகத் தன் ஒரு முறை மட்டும் இழுக்காமல் இரண்டு அல்லது மூன்று முறை இழுப்பது வழக்கம்.மூன்றாவது முறையாகவும் வலை இழுத்;துவிட்டு கடிப்பை வள்ளத்திற்குள் வைத்து விட்டு வள்ளத்திற்குள் மாறன் எறினான்.வலை வெள்ளை பறிந்து போய் விட்டதால் வீட்டில் துவர்வைத்து காயப் போட்டு கட்டிவைத்திருக்கும் வலையை நாளை கொண்டு வந்து புதைப்பதற்காக அந்தோணி வலையை புடுங்கத் தொடங்கினான்.

மாறன் வள்ளத்திற்குள் இருந்து கொண்டு மீனை தனியாகவும் றாலைத் தனியாகவும் தெரிவு செய்து அத்தாங்கிற்;குள் போட்டுக் கொண்டிருந்தான்;.உப்பிய வயிறோடு உயிரோடு வள்ளத்தின் நடுவங்குப் பக்கமாக கிடந்த பேத்தை மீனை எடுத்து நண்டுத் தொழிலுக்கு போறவர்களுக்கு கொடுப்பதற்காக கடையால் பக்கமாக வீசி எறிந்தான்.வீசிய பேத்தைமீன் கடையால் பக்கமாக கிடந்த தண்ணீருக்குள் விழ வள்ளத்தின் உட்ப்பரப்பில் உப்புத்தண்ணீ சிதறியது.

“மாறன்”என்று அந்தோணி கூப்பிட வள்ளத்திற்குள் குனிந்து கொண்டிருந்த மாறன் தலையை நிமிர்த்தி தந்தையை பார்த்தான்.“என்னப்பா கூப்பிட்டியலோ…..?”“ஒம் மாறன்……கம்புகுகளை கடலில விட்டிட்டு போவமா…?”“ஏனப்பா யாரவது களவெடுத்துக் கொண்டு போகமாட்டாங்கள….?”“என்னத்த புடுங்கிக் கொண்டு போகப் போறாங்க…..நாளைக்கு காலையிலேயே வீட்டில இருக்கிற துவர் வைச்ச வலையைக் கொண்டு பாய்யிறதுக்கிடையில…கம்பையும் புடுங்கிக்கொண்டிருந்தால் உனக்கு ரீயுசனுக்கு போறதுக்கு நேரம் போய்விடும்”“அப்பா!கம்பில கொட்டலசு இல்லையோ…?”“இல்லையட மாறன்..”“அப்பா!அப்ப புடங்காமல் கம்பை கடலிலேயே விட்டிட்டு போவம்….”“ம்….மாறன்.மீனையையும் றாலையும் தெரிஞ்சு போட்டிட்டு நடுப்பலகை பக்கமாக நின்டு கொண்டு வலையில அப்பிக்கிடக்கிற சொளியை வள்ளத்தில அடிச்சுப்போட்டு வள்ளத்திற்குள் ஏத்து மாறன்……”“ஓமப்பா….தெரிஞ்சுட்டன்.அத்தாங்கை கடையாலுக்குள்ள வைச்சுப் போட்டு வலையை ஏத்துறனப்பா” என்றான் மாறன்.“மாறன் முதலில்ல சிறகை அடிச்சுப்போட்டு ஏத்து…..அதுக்குப் புறவு நிலவலையை ஏத்தி ஒரு வங்குக்குள்ளே கிடக்கக் கூடிய மாதிரி போட்டு விடு” என்றான் அந்தோணி..“ஒம் அப்பா”என்று சொல்லிக் கொண்டு நடுப்பலகை பக்கமாக வந்து வலையை வலது கையால் பிடித்து வள்ளத்தின் பலகையின் வெளிப்பரப்பில் அடிப்பதும் பின் கடலில் தோய்த்து வள்ளத்திற்குள் வலையை ஏத்தத் தொடங்கினான் மாறன்.

வானம் மப்பும் மந்தாரமுமாய் இருந்தது.மழை வருவதற்குரிய சாத்தியக் கூறுகள் அதிகமாய் காணப்பட்டது.இடி மின்னல் என்று அடிக்கடி எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது.கருமேகம் திரட்சியாய் வானத்தில் தோண்றிய போதும் வெண்மேகமும் அங்கொன்றாய் இங்கொன்றாய் வியாபித்துக் கிடந்தது
“அளப்புளு”கடலின் நீர் மட்டத்தில் சில மிதந்தும் சில கடல்மட்டத்தில் தாண்டும் கிடந்தன.அளப்புளு ஒரு மீன் வகை அல்ல ஆனால் அது பூ வடிவில் அழகாய் இருக்கும்.அதைத் தொட்டால் ஒருவகை கடி தோண்றும்.அதுவும் கொஞ்ச நேரம் மட்டும்தான். பரவைக் கடலில் மட்டுமே இது காணப்படும்.

கெலுறுமீன்,யப்பான்மீன் போன்ற மீன்களும் மிக ஆழம் குறைந்த சதுப்பு நிலம் கொண்ட துறைப் பகுதியிலே காணப்படும்.சாதளை என்றொரு செடி வகையும் இப்பகுதியில் வளர்ந்து நீட்டி நிமிhந்து கிடக்கும்.கடலில் நடக்கும் போது சாதளை கால் கைகளை வெட்டிக் கிழித்து விடும். இதைவிட “ஆர்க்கு”என்று ஒரு சிப்பி வகையும் சில இடங்களில் ஆவெண்டு கடலின் நிலமட்டத்தில் விளைந்து கிடக்கும். மீனவர்கள் நடக்கும் போது கால் இதன்மீது தடுமாறி வைத்தால் பெரிய கத்தியால் வெட்டியது போன்றுஆழமான வெட்டுக் காயத்தை உண்டுபண்ணி விடும்;.நரிச்சுங்கான் என்றொரு மீன்வகை உண்டு இது அழகாக வரிக் குதிரைகளில் விழுந்திருக்கும் கோடுகள் போல் உடல் முழுதும் கொண்டிருக்கும்.இது சில மனிதர்கள் வெளித் தோற்றத்திற்கு நல்லவர்கள் போல் நடித்துக் கொண்டு உள்ளே விசத்தை சுமப்பவர்கள் போல் இருக்கும். பார்ப்பதற்கு மிக அழகாய் இருக்கும் சுங்கான்மீன் மீது கை தடுமாறி உடலின் மேற்ப் பரப்பில் இருக்கும் முள்ளின் மீது பட்டால் உயிர் போக வலி எடுக்கும் இது கடலின் மேற்ப்பரப்பில் ஒரு கூட்டமாகவே நீந்தித் திரியும்.களங்கண்ணி வலைக்குள் கூட ஒரு கிளையாகத்தான் மாட்டிக கொள்ளும். இவையெல்லாம் கடலில் கிடந்து மீனவர்களை துன் புறுத்திய போதும் கடல்தான் அவர்களுக்கு கடவுள் போல….
வதவதவென்று வலையை வள்ளத்தில் அடித்துக் கொண்டு சிந்தனையில் நின்ற மாறன் திடீரென ஏதோ தோண்ற….“அப்பா” என்று கூப்பிட்டான்.“என்ன மாறன்”என்று பதிலுக்கு அந்தோணி கேட்டான்.“அப்பா…!உங்களுக்கெனப்பா அந்தோணி என்டு அப்பு பெயர் வைச்சவா.;..?”“அப்பு அந்தோணியார் மீது அதிகம் பற்றுள்ளவர் அதனால் அந்தோணி என்று எனக்கு பெயர் வைத்தவர்.ஆனா நான் தமிழ் பற்றுள்ளவன்.அதனால் மாறன் என்ற பெயரை உனக்கு வைத்தனான். “அப்பா! அப்புவட காலத்தில தமிழ் பற்றுயில்லையோ…?”“இல்லையெண்டு சொல்ல முடியாது……நாற்பத்தெட்டுக்கு முதல் நம்மள வெள்ளையன்தான் ஆட்சி செய்தான்.அப்ப மொழிப் பற்று நம்ம சனத்தட்ட இருந்தாலும் என்ர ஜயாவுக்கு இருந்த மாதி தெரியல…அவருக்கு கிறிஸ்த்தவ மதத்தை தவிர பெரிசாக எதிலும் பற்றற்வராகத்தான் சாகும் வரையில் இருந்தவர்.நம்மட மூதாதையர் கிறிஸ்தவர்களாக இருந்ததற்கான எந்தச் சாத்தியக் கூறுகள் எதுவும் கிடையாது.ஒல்லாந்தர் போத்துக்கீசர் இங்குவந்த பிறவுதான் கிறிஸ்தவம் பரப்பப்பட்டது. பெரும்பாலும் கரையோரப் பிரதேசத்தை அண்டியே பரப்பப்பட்டு நன்றாக வளர்ந்திருக்குது….” அந்தோணி வைத்த பிரசங்கத்தை பேசாமல் பறையாமல் மாறன் வள்ளத்தில் நின்று கேட்டுக்கொண்டு நின்றான.;
அந்தோணி நிலவலையைப் பிடுங்கிக்கொண்டு;;…நிலவலையோடு கட்டப்பட்ட “றால் கூட்டை” வலையிலிருந்து பிடுங்கி றால்கூட்டின் முன் பக்கமாக வட்ட வடிவில் வலைக்குள் கோர்த்திருக்கும் இரும்புக் கம்பியை இடது கையால் பிடித்துக் கொண்டு வலது கையால் அந்தோணி வளைத்தான். நீண்டு வட்ட வடிவில் பிண்ணப்பட்ட றால் கூட்டு வலை.. றால் பிடிப்பதற்காக பிரத்தியேகமாக களங்கண்ணி வலையில் வைக்கப்படுவது. றால்கூட்டை வளைத்துக் கொண்டு வந்த அந்தோணி அடிப்பக்கமாக எல்லா றாலும் சேர்ந்து கிடக்கும் என்ற நம்பிக்கையோடு “தூர்ரை” கையால் வளைத்து பிடிக்க றால் கூட்டுக்குள் ஓரு மச்சசாதியிம் இல்லாமல் கிடந்ததைக் கண்டு அந்தோணி விக்கித்துப் போனான்.அந்தோணி வள்ளத்திற்குள் நின்ற மாறனை பார்த்து…..“மாறன் றால் கூட்டில ஒரு மச்சசாதியையும் இல்ல…யாரோ வெள்ளனத்தோடு வந்து தட்டிக் கொண்டு போய்விட்டாங்க” என்றான் அந்தோணி.“அப்பா வெறும் கூடுதான இருக்கு…”“ஓம் மாறன் வெறும் கூடுதான் என்ர கையில இருக்கு…இது மட்டுமல்ல வெறுங் கூடு…. அங்க பார் என்று சொல்லிக் கொண்டு கையை பரலோகமாத கோயிலுக்கு முன்பாக இருக்கிற சனசமூக நிலையக் கட்டிட வளவுக்குள் இருக்கிற இந்திய ஆமிக்காரனின் காவல் கூட்டை காட்டிக் கொண்டு… “இந்தக் காவல்கூட்டினால் நாங்கள் படும்துன்பம் கொஞ்ச நெஞ்சமில்ல… ஒருநாள் நம்மட பொடியல் அவங்கள அடிச்சு கலைச்சு விடுவாங்க அப்ப அதுவும் வெறும் கூடாய்த்தான் இருக்கும்…”என்று அந்தோணி சொல்லமாறன் உன்னிப்பாய் அந்தோணி சொன்னதைக் கேட்டுக் கொண்டு நின்றான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *