Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

வெந்து தணிந்தது காலம்…

 

அந்த மாமரம்¸ ஆல மரத்தைப் போல அடர்ந்து¸ படர்ந்து விரிந்திருந்தது. கடந்த மூன்று மாதங்களாக மழை பெய்து ஓய்ந்திருக்கும் காலம். இப்போது வெய்யிற் காலமாகியும் புழுதி பறக்காமல் ஈர நிலம் எங்கும் வியாபித்திருந்தது. மரத்தில் புதிய தளிர்கள் துளிர்த்து¸ பச்சைப் பசேலெனச் செழித்திருந்தன. காற்றில் சலசலக்கும் இலைகளும்¸ கிளைகளும் குளிர்ந்தக் காற்றை அள்ளி வீசிக் கொண்டிருந்தன. அந்த மரமே அங்கு தவித்திருக்கும் அகதிக் குடும்பங்களுக்கு கூரையாக¸ வீடாக¸ ஊராக¸ பாதுகாப்பாகக் குஞ்சுகளை இறக்கைக்குள் அணைத்து வைத்திருக்கும் பேடாக ஆதரவளித்துக் கொண்டிருக்கிறது. நெருப்பாய் எரிக்கும் வெய்யிற் காலங்களில் சுகமான நிழலைக் கொடுக்கின்றது. சுகமான குளிர்ந்தக் காற்றை¸ அனலாய் தகித்துக் கொண்டிருக்கும் அவர்களைத் தழுவி சுகம் கொடுக்கிறது. மாமரக் கிளைகளில் தொங்கும் தொட்டில்களில் தங்கள் தலைவிதிகளை மறந்து¸ அகதிக் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கின்றன. மனிதக் கொடூரங்களால் துவம்சம் செய்யப்பட்ட இன்னொரு மனிதக் கூட்டத்துக்கு¸ அந்த இயற்கையின் இரக்கம் அருள் பாலித்துக் கொண்டிருந்தது….. பழம்பெரும் இந்த மாமரம்¸ ஆல மரமாகவிருந்திருந்தால்¸ அரண்மனைத் தூண்களாய் விழுதுகளை இறக்கி¸ நாலா புறமும் பூமியில் பதிந்திருக்கும்.

ஆள் அரவமற்ற இந்தக் காட்டுப் பாதையின் ஓரத்தில் இப்படியொரு மரமிருப்பதற்கானக் காரணம் பின்னர்தான் தெரிய வந்தது. இது காட்டுப் பிரதேசமல்ல.. பூர்வீகமாக மக்கள் குடியிருந்த ஓர் ஊர்… தூர்ந்து போன கிராமம்… மாமரத்தின் அருகிலே குண்டுகளுக்கு இறையான பெரிய கோவில் இருந்ததாம்.. கோவில் இருந்த அடையாளத்திற்குச் சாட்சி சொல்லுமுகமாக மூலஸ்தான திண்ணை கொஞ்சம் பட்டும் படாமல் தெரிகின்றது. கொஞ்சத் தூரத்தில் துப்பாக்கிக்காரர்களின் கூடாரங்களில் அழகழகான தேர்ச் சில்லுகள் ரசனைக்காக வைக்கப்பட்டிருந்தன. யுத்தம் எரித்த எத்தனை கோவில்களின் தேர்ச்சில்லுகள் இப்படி காட்சிப் பொருளாக்கப்பட்டிருக்கின்றன..?

இந்தப் பொட்டலில் ஆமிக்காரர்கள் கூடாரம் அமைத்து¸ அகதிகளைக் குவித்திருந்தார்கள். வெறும் மனித உடல்களாகவே உடுத்தியத் துணிகளோடு வந்தமர்ந்த மக்கள் கூட்டம்… ‘இதுதான் இனி இருப்பிடம்’ என்ற முடிவோடு¸ அக்கம் பக்கத்துக் காடுகளைச் சுத்தம் செய்யும்படி பணிக்கப்பட்டனர். அதன் பின்னரே கட்டிடச் சிதைவுகள்¸ தூர்ந்து போன கிணறுகள் தெரிந்தன. மூளி மரங்களாகத் தென்னையும்¸ பனையும்¸ குண்டடிப்பட்டு¸ எரிந்துக் கருகிய நிலையில் முண்டங்களாக நின்றன. இங்கு மனிதர்கள் வாழ்ந்து¸ அழிந்து போன எச்சங்களைக் காட்டி நிற்கும் இந்தப் பிரதேசம்¸ ஒரு கால் நூற்றாண்டுக்கு மேலான பின்னர் மீண்டும் மனிதர்கள் வாழ்வதற்கான காலத்தை உருவாக்குமா..? வரலாறு திரும்பும் என்பார்கள்….

***

மாமரத்தடி அகதி முகாம் நிரந்தரமாகப் பல வருஷங்கள் நிலைத்திருந்தாலும்¸ ‘இடைத் தங்கல் நிலையம்’ என்றே புதிய நாமம் சூட்டப்பட்டிருக்கின்றது..! இங்கே குவிக்கப்பட்டிருக்கும் மனிதக் கும்பல்களில் வயதானவர்களும்¸ சின்னஞ் சிறுசுகளும்¸ கர்ப்பிணிப் பெண்களுமே காணப்பட்டார்கள்.

உயிரை மட்டுமே பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்ற நினைப்பில் இரவிலும்¸ பகலிலும்¸ காடுகளில் ஓடித் திரிந்து¸ மழையிலும்¸ வெய்யிலிலும் உழன்று¸ கறுத்து¸ மெலிந்து¸ தலைமுடி சடைபிடித்து¸ தாடி வளர்த்த ஆண்களும்¸ தலைவிரி கோலமாய் பெண்களும் ஆதி மனிதர்களைப் போன்று பஞ்சை உடைகளுடன் காட்சிக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். சொத்து¸ சுகத்தோடு வாழ்ந்த மக்கள்¸ உள்ளதை¸ உழைத்ததை காய்ச்சிக் குடித்து¸ உண்டுக் களித்திருந்த மக்கள் இன்று¸ நிர்க்கதி நிலையில்¸ பல ஆண்டுகளாய் கூடாரங்களில் குவிக்கப்பட்டிருக்கும் துயர நிலையை¸ உலகப் போர்க் கால வரலாற்றில் எந்த தேசத்திலும் பார்த்திருக்க முடியாது…

ஆசனம் போல மேலுயர்ந்திருக்கும் மாமரத்து வேரில்தான் பார்வதி ஆச்சி சிலை போல உட்கார்ந்திருப்பாள். அவளுக்கு இன்னும் விலாசம் இருக்கிறதா..? பெயர் கேட்டு அறிந்துக் கொள்ளும் அளவுக்கு அவள் மட்டும் மிஞ்சியிருக்கிறாள். கணவனை¸ மகனை¸ மகளை¸ மருமகளை என்று எல்லா உறவுகளையும்¸ உயிர்களையும் இழந்து¸ அவளது உயிர் மட்டும் அந்த உடலோடு ஒட்டிக் கொண்டிருப்பதால்¸ அங்குள்ள உயிர்களோடு இந்த மூதாட்டியும் ஒருமித்துப் போயிருக்கிறாள்….

வெந்து¸ நொந்து… சிதறி அலைக்கழிக்கப்பட்ட மனம்¸ குமுறிக் கொந்தளித்து¸ இன்று அடங்கி மௌனித்துப் போய் விட்டாலும்¸ அவளது நினைவுக்குள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் அனுபவங்கள்¸ சம்பவங்கள் அனைத்தும் சித்திரமாக அந்த மனத்திரையில் ஓடிக் கொண்டேயிருக்கின்றன.

பார்வதி ஆச்சி¸ இறுதி யுத்தத்தில் ஊழித் தாண்டவம் ஆடி முடிந்த அந்த நாட்களை மீட்டினாள். நந்திக் கடல்… முள்ளி வாய்க்கால்… புது மாத்தளன்.. வலைஞர் மடம்… என்னும் வன்னிப் பெருநிலம்… அவள் கண்களை இறுக மூடிக்கொண்டாள். ஆயிரமாயிரம் மனித உயிர்கள் சாரி சாரியாக விமானக் குண்டுகளுக்கு இரையாகி¸ மலை மலையாய் குவிந்துக் கிடந்த பிணங்களின் மேல் ஏறி தடுக்கி விழுந்து¸ மீண்டும் எழுந்து கால் போன வழியில்¸ உயிர் மட்டும் மிஞ்சியிருந்த தங்கள் உடல்களைச் சுமந்துக் கொண்டு¸ ஓடோடி வந்து நின்ற இருண்டக் காட்டை நினைத்தாள்.

குழந்தை¸ குட்டிகளோடு அல்லோலக் கல்லோலப்பட்டு ஓடிவந்த மனிதக் கும்பல்கள் திடீர் திடீரென்று காணாமற் போனார்கள். என்ன மாயம்… பூமி பிளந்து பாதாளத்துக்குள்ளே அவர்கள் வீழ்ந்து விட்டார்களா..? பேயிரைச்சலோடு விமானங்கள் பறந்தோடுகின்றன. அந்த இரும்புப் பறவைகளின் நிழல்கள்¸ தலையில் மோதித் தாக்குவது போன்ற பிரமையை உருவாக்குகின்றன. திடீரென மின்னலைப் போன்று கதிர் வீச்சுக்கள்… எதுவித சத்தமும் இல்லாமல்¸ சனங்கள் எரிதனலில் எரிந்து கொண்டிருப்பது தெரிகிறது. காடு எரிகிறது.. மரஞ்செடி கொடிகள் ஜூவாலை விட்டு அலை பரப்புகின்றன. மனித உடல்கள் எண்ணெய் நிறைந்தவை.. புகை மண்டலத்தில் கொழுந்துவிட்டு எரிகின்றன.. காற்று துர்நாற்றத்தை வீசுகிறது… உயிர் தப்பியவர்கள் உடலைச் சுமந்துக் கொண்டு ஓடுகின்றனர்.

இரவும்¸ பகலும் கவிழ்ந்தத் தலையை நிமிர்த்தாமல்¸ கெட்ட சொப்பனங்களாய் மீண்டும்.. மீண்டும் நிழலாடிக் கொண்டிருக்கும் நினைவுகளை மீட்டி…. மீட்டிப் பார்ப்பதற்காய் அசை போட்டுக் கொண்டேயிருக்கிறாள்…..

“அம்மம்மா… அப்பம்மா…” சில நேரங்களில் “ஆச்சி” என்று கூவிக் கொண்டு¸ தன்னைச் சுற்றிச் சுற்றி ஒட்டிக் கொண்டிருக்கும் அந்தச் சிறுமி¸ பார்வதிக்குக் கிடைத்த புதிய உறவு… போர்க்களத்தில் குண்டுகள் விழுந்து எரிந்துக் கொண்டிருக்கும் சவக் கிடங்கில் கண்டெடுத்த சின்னஞ் சிறு உயிர்… எந்த வித சொந்த பந்தமில்லாது இறுக்கி அணைத்துக் கொள்ளப்பட்ட மனிதப் பிணைப்பு… வேதனையிலிருந்து தன்னைச் சுதாகரித்துக் கொள்கின்ற நேரங்களிலெல்லாம்¸ அந்தச் சின்னவளின் தலையைக் கோதி விடுவாள். எண்ணெய் கண்டு¸ சீப்பு கண்டு¸ தலை சீவி எத்தனைக் காலங்கள்…? அந்தக் குழந்தையின் தலை மயிர் சடை விழுந்து விடக் கூடாது.. என்று விரல்களைச் சீப்பாக விரித்துச் சிறுமியின் தலையைக் கோதி விடுவாள்…

திடீரென அச் சிறுமியைப் பற்றிய நினைப்பு¸ அந்த முழு துயரச் சம்பவங்களையும் மீட்டியது… குண்டுகள் மழையெனக் கொட்டும் போது.. தீச் சுவாலைகளில் அகப்பட்டு பலர் அலறித் துடித்து¸சத்தம் அடங்கி எரியும்போது… குய்யோ… முறையோ… என ஓடி.. ஓடி…திக்குத் தெரியாத காடு மேடுகளில் ஏறி¸ இறங்கி… கணவன்¸ மகன்¸ மகள்¸ மருமகளோடு சில இடங்களில் ஒருவரையொருவர் தொலைத்து… மீண்டும் தேடித் திரிந்து.. தொலைந்தவர்களைக் கண்டுப் பிடித்து… கைக்கோர்த்தபடி மூச்சு இறைக்க… இறைக்க… அரண்டு¸ மிரண்டு¸ ஒடிக் கொண்டிருந்தார்கள்;. அவர்களோடு அந்தனி… காட்டுக்குள்ளே திடீர் உறவாகி¸ கடைசியில் அவளுக்கு இன்னொரு மகனாகத் துணைக்கு வந்து சேர்ந்தான். அந்த உறவோடு அவர்கள் ஆறு பேர்களாக ஓடிக் கொண்டிருந்தார்கள்..

மீண்டும் குண்டுத் தாக்குதல்…ஷெல் தாக்குதல்…தேனீக்களாய்¸வானத்தில்வட்டமிட்டுச்சுழலும் விமானங்கள்.. தீச் சுவாலைகள்… பெருங் கூக்குரல்கள்… புகை மண்டலம் அவர்;களை மூடிக் கொண்டது. ஒருவரையொருவர் பார்க்க முடியவில்லை…புகைக் கலைந்து…வெளிச்சம் தெரிந்தது.. அவரை மாத்திரம் காணவில்லை. மகனும்¸ அந்தனியும் அவரைத் தேடி குண்டுகள் விழுந்த இடத்துக்கு ஓடினார்கள். அவர் கிடைக்க வில்லை. மகளும்¸ மருமகளும் கதறி அழுதார்கள். அந்தனியின் பின்னால் ‘அப்பா… அப்பா’… என்று அழுதுக்கொண்டு¸ பெற்றோரைப் பிரிந்த அந்த சிறுமி ஒடி வந்தாள். அந்தனி அவளை ஓடிச் சென்று தூக்கிக் கொண்டான்.

அவர்கள் அந்த இடத்தை விட்டு நகர வில்லை. அப்பாவைத் தேடிக் கொண்டேயிருந்தார்கள். கடைசியில் அவரைக் கண்டார்கள். இரண்டு கால்களையும் இழந்து இரத்த வெள்ளத்தில் கிடந்தார்.. தன்னை அவ்விடத்தில் போட்டு விட்டு¸ அவர்களைத் தப்பி ஓடிவிடும்படி சத்தமிட்டார். மகனும்¸ அந்தனியும் அவரைத் தூக்கி எடுத்தார்கள். இருவரது சட்டைகளையும் கழற்றி துண்டாகிவிட்ட கால்களில் கட்டுப் போட்டு¸ அவரைத் தூக்கிச் சுமந்துக் கொண்டு நடந்தார்கள்.

“ஆமிக்காரங்கள் வருவாங்கள் கொஸ்பிட்டல்ல சேக்கலாம்.” என்று மகன் குமரன் சொன்னான். “பிள்ளைகளா..! என்ன இவ்விடத்தில வீசிப் போட்டு¸ ஓடுங்கோ குஞ்சுகளா..! நான் பிழைக்க மாட்டன்..! ஐயோ ஓடுங்கோ..! தம்பி என்ன கீழ கிடத்துங்கோ ராசா..!” என்று அப்பா சத்தமிட்டார்.. அந்தனி அவரை மெதுவாகத் தரையில் கிடத்தினான். “என்ர குஞ்சுகளா…!” என்று எல்லோரையும் பார்த்து¸ கை கூப்பி… தலையைச் சாய்த்துக் கண்ணை மூடிக் கொண்ட காட்சி.. பார்வதியின்; நினைவில் மீண்டும் வந்தது…

பார்வதியின்; கணவன் ராமசாமி¸ எழுபத்தேழாம் ஆண்டு இனக் கலவரத்தில் உயிர் தப்பிய ஒரு பெருந்தோட்டக் குடும்பஸ்தர்.. கப்பல் மார்க்கமாக அனைத்து அகதிகளோடும்¸ காலியிலிருந்து வடபகுதிக்கு வந்து சேர்ந்தவர்.…முப்பது… முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இப் பகுதி மக்களோடு வாழ்ந்து¸ அவர்களது பேச்சு¸ வழக்கு¸ சடங்கு¸¸ சம்பிரதாயங்களோடு ஒன்றிவிட்டவர். பெருந்தோட்டக் கூலித் தொழில் முறையிலிருந்து¸ நிலம் பெற்ற சுதந்திர விவசாயியாக சமூக மாறுதலை புதுப்பித்துக் கொண்டவர். இவரைப் போன்று¸ இறுதி யுத்தத்தில் ஆயிரமாயிரமாகச் செத்து மடிந்துப் போன மக்கள் கூட்டத்தின் பெரும் பகுதியினர் மலையகக் குடிகளாவர்……..

பார்வதி திடீரென சத்தமிட்டாள். சிறுமி பயந்து நடுங்கிக் கொண்டு ஆச்சியின் தலையை நிமிர்த்திப் பார்த்தாள். மற்றவர்கள் ஆச்சியின் சத்தத்தைக் கவனிப்பதில்லை. ஆச்சி ஒவ்வொரு நாளும் இவ்வாறு மிரண்டு சத்தம் போடும் வழக்கத்தை அவர்கள் அறிந்திருந்தார்கள்..

ஆச்சியின் மனதுக்குள் அந்தச் சம்பவம் படமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கணவரை மடியில் இருத்திக் கொண்டு அவள் கத்தவும்¸ மகள்¸ மருமகள்¸ மகன் எல்லோரும் கதறி அழவும்… அந்தனி ஒரு யோசனை சொன்னான். “ஆமிக்காரன்கள் கண்டு விட்டால்¸ ஐயாவைத் தூக்கிக் கொண்டு போய் எந்த இடத்திலயாவது வீசி… எரிச்சுப் போடுவான்கள். அதுக்குள்ள நாங்கள் காட்டுக்குள்ளக் கிடத்தி தகனம் செஞ்சு போடுவம்..!” எல்லோருக்கும் அது சரியெனப் பட்டது. மகன் குமரனும்¸ அந்தனியும் அப்பாவைச் சுமந்துக் கொண்டு காட்டுக்குள் போனார்கள். ஒரு பொட்டலில் அவரைக் கிடத்தினார்கள். காட்டுச் சறுகுகள்¸ விறகுக் குச்சிகளைச் சேர்த்து குவித்தார்கள். குமரன்¸ பக்கத்தில் எரியும் நெருப்பைக் கொண்டு வந்து தீ மூட்டினான். சாவோடு போராடிக் கொண்டிருக்கும் அந்த நிலைமையிலும்¸ அவரது உடல் எரிக்கப்பட்டது பார்வதியின் மனதுக்கு நிம்மதியைக் கொடுத்தது. “நாய்¸ நரிகள் கடிச்சுக் குதறி¸ நாறி¸ புழுத்துப் போகாம… மனுசன் சாம்பலா போயிட்டுது…”

காட்டு விறகுகள் எரிந்துத் தணிந்துக் கொண்டிருந்தன…

விடிந்து விட்டது… குண்டு விழுகின்ற சத்தங்கள்.. தூரத்து ஓலங்கள்… இவைகளோடு தலைக்கு மேலே பூதங்களாய் போர் விமானங்கள் பறந்துக் கொண்டிருந்தன…

“மவன்..! சாம்பல் ஒரு பிடி அள்ளித் தா ராசா..! சீலத் துண்டால முடிஞ்சிக் கொள்றன்.. நாங்க உயிர் பிழைச்சா¸ என்டைக்காவது கடல்ல கரைச்சுப் போடுவம்..! முடியாட்டி ஓடையிலாவது விடுவம்..!” குமரனும்¸ அந்தனியும் பிடி சாம்பல் அள்ளிக் கொடுத்தனர். அவர்கள் பயணம் கால்கள் போனபடி தொடர்ந்தன.

முழு நாளும் நடந்தனர். இரவு மணி பன்னிரண்டு.. பனிக் குளிர் வீசியது. நிலவொளி பேருதவியாக வந்தது. மேகங்கள் தெளிந்த வானில் வேகமாக ஒடிக் கொண்டிருந்தன. அவர்களால் நடக்க முடிய வில்லை. பார்வதிக்கு கால்கள் பின்னின. மகனும்¸ மருமகளும் அவளை அணைத்துப் பாதையோரமாக அமர வைத்தனர். அந்தனியும்¸ குமரனும் மேல் சட்டை இல்லாமல் பரிதாபமாகக் குளிரில் வாடினர்.

வைகறை வெளிச்சம்… பொழுது புலர்ந்தது…

பார்வதி எழுந்து நடந்தாள்… முன்னால் பூவரசம் மரம் தென்பட்டது. மரத்தடியில் வழிப் பிள்ளையார் கோவில் திண்ணை…பார்வதி; கைகளை உயர்த்திக் கும்பிட்டாள். என்ன நினைத்தாளோ தெரிய வில்லை.. குமரனின் தோளைப் பிடித்து நிறுத்தினாள்… அவன் காதுக்குள்ளே ஏதோ குசு குசுத்தாள். குமரன் தயங்கினான். “அம்மாவுக்கு விசரே..?”

“ஓமோம்..! நீ கேக்காட்டா நான் கேப்பன்..” என்றவள் அந்தனியை அருகில் அழைத்து விசயத்தைச் சொன்னாள். அந்தனி அதிர்ச்சியடைந்தான்..

“அம்மா..! நான் யார் எவரோ..? கிறிஸ்தவன்.. என்ர சாதி.. சனம்.. உங்கட குல.. கோத்திரம் எதுவும் சரிவராது… நாங்கள் எந்த நேரமும் செத்துப் போறவங்கள்.. இந்த நிலைமையில .. இதுவும் தேவையா..?” என்றவன் நகைப்போடு ஒதுங்கி நின்றான்.

பார்வதி பித்துப் பிடித்தவளாய் அவனிடம் உரத்துப் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.. “சிங்களவன்தான் எனக்கு ஞானத்தக் குடுத்தவன்கள்…! அவன்கள் எங்கள ஒரே சாதியா நினைச்சுத்தான் கொல்லுறான்கள்…நாங்கதான் இன்னும் பல சாதிகளாய் இருக்கிறம்..!” என்று ஏளனமாகச் சிரித்தாள்… அவனையும்¸ மகள் ஈஸ்வரியையும் இழுத்து… விளக்குக் கம்பத்திலிருந்த எண்ணெய்க் கரியை தேய்த்தெடுத்து இருவரின் நெற்றியிலும் பூசினாள்.. பைத்தியக்காரியைப் போல சிரித்தாள். “இவளுக்கு ஒரு ஆம்பிள துண கிடச்சி போச்சி கணேசா..! இனி நான் இந்தக் காட்டுல எங்க வேண்டுமானாலும் செத்துப் போவனப்பா..!” இந்தத் துயர நிலையிலும் இப்படியொரு அதிர்ச்சி தரும் நிகழ்வை பார்வதி நடத்தியது எல்லோரையும் என்னவோ செய்தது.

அந்த மூதாட்டிக்கு அந்தச் சூழலில் தனித்து நிற்கும் குமரிப் பெண்ணுக்கு ஒரு ஆண் துணையைத் தேடிக் கொடுத்ததில்¸ பெரும் மனச் சுமை குறைந்ததாகத் தோன்றியது. .

அவர்கள் மௌனமாக நடந்தார்கள். வழியில் பின்புறமாக பலத்த வாகனச் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தனர். ஆமி வாகனம் வந்துக் கொண்டிருந்தது. அந்தனியும்¸ குமரனும் கைகளை நீட்டினர். வாகனம் நின்றது. அவர்களை ஏறச் சொன்னார்கள். வாகனத்தில் நிறைய அகதிகள் இருந்தார்கள். அவர்கள் எங்கோ முகாமுக்குக் கொண்டுச் செல்லப்படுகிறார்கள்.

***

வாகனம் வந்து நின்ற இடம்…. மக்களை இறங்கச் சொன்ன இடம்.. இந்த மாமரத்து ஓரம்…

இதுவும் ஒரு ‘இடைத் தங்கல் நிலையம்’. ஐந்து வருசங்களுக்கு மேலாக அகதி மக்கள் இங்கே வாழ்ந்து வருகிறார்கள். இப்போது இவர்களுக்குக் கொஞ்சம் கூரைத் தகரங்கள்¸ கொஞ்சம் மரக்கம்புகள் கொடுத்து கூடாரம் கட்டிக் கொள்ளும்படி ராணுவம் கட்டளையிடுகின்றது. பூர்வீகமாக வாழ்ந்த அவர்களது பாரம்பரிய நிலத்துக்குப் போக முடியாதத் தடை விழுந்தது. மீள் குடியேற்றம்¸ புனர் வாழ்வு எல்லாம் பொய்யாய்¸ பழங் கதையாய் போய் முடிந்தன. புதிய இடங்களில்¸ புதிய கூடாரங்கள் கட்டி குந்துவதுதான்¸ புதிய வாழ்க்கையாக அமைந்தது.. அவர்கள் வாழ்ந்த பூர்வீகக் குடியிருப்புக்களில் இன்று புதிய குடியேற்றங்கள் நடைபெறுகின்றன… காணுமிடமெல்லாம் ராணுவக் கட்டிடங்கள் காட்சித் தருகின்றன..

யுத்தம் கைப்பற்றிய இடங்களிலெல்லாம் தமிழரின் வரலாற்று அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன.. திரிபுப் படுத்தப்படுகின்றன… இந்த அதர்மங்களுக்கு மத்தியிலே¸ ஒரு பௌத்த சங்கம் ஆதரவு காட்டுவதற்கு முன்வந்தது. ‘சொந்தக் காணிக்காரர்கள் தங்கள் நிலத்தில் விகாரைகள் கட்டுவதற்கு சம்மதித்தால்¸ ஆறு லட்சம் ரூபாய்களில் வீடுகள் கட்டித்தரப்படும்’ என்று விளம்பரம் செய்தார்கள்.
மக்கள் புனித பகவானின் சிலைகளையும்¸ போதி மரங்களையும் கண்டு பயந்தார்கள். அவர் போர் சட்டையோடும்¸ பூட்ஸ் கால்களோடும் நிற்பதாக நினைத்து மிரண்டார்ககள்…

வாகனத்திலிருந்து ஜடமாகக் கொட்டப்பட்ட மக்கள் கூட்டம்¸ அழுகைப் புலம்பல்களோடு முகாம் அருகில் வந்து குவிந்தார்கள்.

***

வெற்றுடம்போடு திரிந்த அந்தனி¸ குமரன் இருவருக்கும் அகதி முகாமுக்குள் இருந்த ஒரு பெரியவர்¸ இரண்டு பழையச் சட்டைகளை உடுத்திக் கொள்ளும்படி¸ கொண்டு வந்துக் கொடுத்தார். அவரது உணர்வுகளை அறிந்த இருவரும் அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கண் கலங்கினார்கள். அங்கே இருக்கும் எல்லோருக்கும் மௌனமும்¸ பார்வையுமே பேசும் மொழியாகவிருந்தன… வாய் திறந்து எவராலும் பேச முடியவில்லை. சட்டைகளைக் கொடுத்த பெரியவர்¸ அந்தனியையும்¸ குமரனையும் வெறிக்கப் பார்த்துக்கொண்டேயிருந்தார். தேக்கு மரங்களாய்¸ தென்னை மரங்களாய் இளந்தாரிப் பொடியன்களை தன் கண் முன்னாலேயே பறி கொடுத்த அவரின் மேல் மிரட்சி; படிந்திருந்தது. எத்தனை ஆயிரம் இளைஞர்கள்… யுவதிகள்…. அவர்கள் எல்லோரும் எங்கே போய் மறைந்தார்கள்…? அவர் மனம் பயந்து நடுங்கியது. அங்கு குவிந்திருந்த அத்தனை அகதிப் பெற்றோர்களின் கண்களுக்கும்¸ அந்தனியும்¸ குமரனும் உறுத்தலாகவே தெரிந்தார்கள்…..

பார்வதி¸ மகள்¸ மருமகள் மூவரும் தங்களை மறந்து மரத்தடியில் நித்திரையாகினர். அவர்கள் அருகில் குமரனும்¸ அந்தனியும் அமர்ந்திருந்தனர். ஈஸ்வரி எழும்பி உட்கார்ந்து¸ வெந்து போயிருந்த ஒரு காலைப் பிடித்துக் கொண்டு அழுதாள். அவளது காலை வாஞ்சையோடு பிடித்து மாங்குலையால் காற்று விசிறினான் அந்தனி. எரியும் புண்ணுக்கு குளிர் காற்று இதமாகவிருந்தது. அவள் அவனைக் கும்பிட்டாள்.. அவன் அவள் தலையைப் பாசத்தோடு தடவினான். இந்தத் துயர் நிறைந்தச் சூழலில் பரஸ்பரம் துணைக்காக இணைத்து வைக்கப்பட்ட பந்தம்… தங்கள் இளமை வாழ்க்கையில் திருமணச் சடங்காக நடந்து விட்டதாய்… தான் அவனுக்கு தாலி கட்டிய மனைவியாய் ஈஸ்வரி மனதுக்குள் நினைத்து மகிழ்ந்தாள்.

இரத்த உறவுகள் அத்தனை பேரையும் கண் முன்னாலேயே குண்டுகளுக்குப் பறிகொடுத்துத் தனித்து நிற்கும் அவனுக்கு¸ இனிமேலும் உயிர் இருந்தால்¸ அந்த உயிருக்கு அம்மா¸ அப்பா¸ அக்கா¸ தங்கை¸ அண்ணா எல்லோரும் இவளேதான் என்று அந்தனி நினைத்தான். கனகம் நகர்ந்து வந்து நீட்டிக் கிடந்த குமரனின் கால்களில் தலையை வைத்துக் கண்ணயர்ந்தாள்… அவளது கையில் இரத்தம் கசிந்துக் கொண்டிருந்தது. குமரன் குனிந்து வாயால் காற்று ஊதினான். “நாளைக்குக் காலமை டொக்டர்மார் இங்க வருவினமாம். காயம் பட்டவங்களுக்கு மருந்து கட்டுவினமாம்..!” குமரன் சொன்ன வார்த்தை அக்கம் பக்கத்தவர்களுக்கு ஆறுதலாகவிருந்தது.

***

— மனித உயிர்களின் அந்த அவலமான இரவு சூனியமாகவே முடிந்து விடிந்தது…

காலையில் கோப்பி¸ தேயிலைச் சாயம் தருவதாக வாகனம் ஒன்று வந்து நின்றது. வாடி வதங்கிக் கிடந்தவர்கள் மத்தியில் சல சலப்பு எற்பட்டது. ஆவலோடு வாகனத்தை நோக்கி ஓடினார்கள். சிலர் பிளாஸ்டிக் கோப்பைகள் வைத்திருந்தார்கள். குமரனும்¸ அந்தனியும் எழும்பி வெறுங் கையோடு வாகனத்தை நோக்கிச் சென்றார்கள். சிறிது நேரச் சுணக்கத்துக்குப் பின் வெறுங் கையோடு திரும்பிவந்தார்கள்.

“கோப்பித் தண்ணி கிடைச்சுதோ..?” பார்வதி கேட்டாள். குமரனும்¸ அந்தனியும் திரு திருவென விழித்தார்கள். முகத்தில் இருள் கவ்வி பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். “அம்மா..! ஆமிக்காரவங்கள் எங்க ரெண்டு பேரையும் அடுத்த முகாமுக்கு வரச் சொல்லி வாகனத்தில ஏறச் சொல்லுறாங்கள்..!” அவர்கள் கண் கலங்கினார்கள். அவர்கள் இருவரையும் கட்டிப் பிடித்துக் கொண்டு அந்தக் குடும்பம் ஈனக் குரலில் சத்தமிட்டது. நாலைந்து துப்பாக்கிக்காரர்கள் வேகமாக ஓடி வந்தனர்… “கோ.. தென்னம நெகபல்லா லொரியட்ட..!” “நீ ரெண்டு பேரும் லொறிக்குள்ளே ஏறுங்கடா..!” என்று அவர்களை முரட்டுத்தனமாக இழுத்துக்கொண்டுப் போனார்கள்..

தனித்து விடப்பட்டப் பெண்கள் மூவரும் தலையிலும்¸ மார்பிலும் அடித்துக் கொண்டு பின்னால் ஒடினார்கள். குமரனும்¸ அந்தனியும் கண்ணீரோடு அவர்களுக்கு ஆறுதல் சொல்லும் போதே வாகனம் இழுத்தது. வாகனத்தின் பின்னாலேயே மூவரும் ஓடிக் கொண்டேயிருந்தார்கள். வாகனம் ஓடி மறைந்தது. ஆறுதல் சொல்லிவிட்டு¸ சாகப் போகும் அவர்கள் ‘காணாமல் போனார்கள்…!’ ஈஸ்வரியும்¸ கனகமும்¸ பார்வதியைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதார்கள். அழுதழுது கண்ணீர் இல்லாத அழுகையே மிஞ்சியது. வாகனம் போன திசையைப் பார்த்து அவர்கள் கல்லாகச் சமைந்துக் கிடந்தார்கள். அந்த முகாமில் எவரும் எவருக்கும் ஆறதல் சொல்லிக்கொள்ளும் மன நிலையில் இல்லை. விடியும் வரை அந்த அடர்ந்தக் காட்டுப் பாதையில் நின்றவர்கள்¸ விடிந்த பின்னரும் அந்த இடத்திலேயே நின்றார்கள். அந்தி சாயும் வரை வேறு எந்த வாகனங்களும் வர வில்லை.

பார்வதி; மார்பிலும்¸ தலையிலும் அடித்துக்கொண்டு¸ ஆவேசமாய் அழுதுக்கொண்டிருந்தாள். அவளின் தொண்டையிலிருந்து குரல் வெளி வரவில்லை. நா வரண்டு¸ தொண்டை வரண்டு¸ மன உணர்வுகள் எல்லாமே வரண்டு போக வாடி நின்றாள். ஊமைகளாய் தலையில் கைகளை வைத்துக் கொண்டு¸ ஈஸ்வரியும்¸ கனகமும் நடு வீதியில் குந்தி இருந்தார்கள். சாயங்காலப் பொழுது இறங்கியது. மிக வேகமாக நேற்று வந்த அதே வாகனம் பயங்கர உறுமலோடு வந்து நின்றது. மகனையும்¸ மருமகனையும் இழுத்துச் சென்ற அதே ஆயுததாரிகள் வந்து நின்றனர்.

அவர்களின் முன்னால் சென்று அகதி முகாமில் இருந்த அத்தனை பேர்களும் கூக்குரலிட்டு நெருங்கினார்கள். “எங்கே எங்கட பிள்ளைகள். ? எங்கே கொண்டு போனனீங்கள்..?” என்று ஆவேசமாகக் கத்தினார்கள். அவர்களுக்கு மொழி விளங்க வில்லை. அவர்கள் சொன்னது இவர்களுக்கும் விளங்க வில்லை. அவர்கள் சில படிவங்களை அள்ளி பலவந்தமாகக் கொடுத்துவிட்டு¸ வாகனத்தில் ஏறி சென்று விட்டார்கள்.

“காணாமற் போனோர் பற்றிய விண்ணப்பம்”

இந்தப் பேயன்களே நேத்து எங்கடை பிள்ளைகளைக் கொண்டு போனவன்கள்.. இன்டைக்கு இவன்களே படிவங்களை கொடுக்கினம். கடவுளே..! யாரிட்ட இந்த அநியாயத்தைச் சொல்றது..? வெளிச்சமே இல்லாத இருண்டு போய்க் கிடக்கும் அந்த அகதி முகாம்¸ துயரக் குரல்களை எழுப்பிக் கொண்டிருந்தது. தன்னந் தனியான நடுக் காட்டில்…. நிசப்தமான இரவு நேரத்தில்… இந்த அவலக் குரல்கள் பயங்கரமானச் சூழலை உருவாக்கி;க் கொண்டிருந்தது. காட்டு ஜீவராசிகள்கூட பயந்து ஓடி ஒளிந்திருக்கலாம்.

முகாமில் இருந்த சில முதியவர்கள் உருக்கமான தொனியில் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஊர்¸ உலகம் அறிந்த¸ படித்த¸ சிந்தனையாளர்களாய் தெரிந்தார்கள். அவர்களின் வார்த்தைகளில் அரசியல் உணர்வுகள் வெளிக் கிளம்பிக் கொண்டிருந்தன.. “சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் போச்சு… சர்வதேச மன்னிப்புச் சபையும் போச்சு.. ஐக்கிய நாட்டு சபையும் போச்சு.. தொண்டு நிறுவனங்களும் போச்சு… குடியிருந்த வீடு வாசல்¸ ஊரும் போச்சு..”

இந்தப் பேச்சுக்களுக்குப் பிறகு அங்கே மௌனம் சூழ்ந்தது…

இந்தச் சூழ்நிலையிலும் அந்த முகாமுக்குள் ஒரு வேடிக்கையான மனிதர் இருந்தார். நெற்றி நிறைய திருநீறு பட்டையைப் பூசிக்கொண்டு எந்த நேரமும் மங்களகரமாக அங்கேயும்¸ இங்கேயும் ஓடித் திரியும் ஒரு சைவப் பழமாகக் காட்சி கொடுத்துக்கொண்டிருப்பார்.… எச்சில் தெறிக்கப் பேசுவார். எந்த நேரமும் உதடுகள் ஈரமாகவே இருக்கும். வாய் துர்நாற்றம் வீசும். அவருக்கு சாப்பாடு வெளியிலிருந்து வரும்.. முகாமுக்குள்ளும் ராஜமரியாதை உண்டு. பல ரகங்களில் கோஷ்டிகளை அந்த முகாமுக்குள் உருவாக்குவதுதான் அவரது பொழுதுபோக்கு. சாதிக்கு¸ சமயத்துக்கு¸ ஊருக்கு¸ அந்தஸ்துக்கு என்று விதத்தால் ஒரு கோஷ்டியை உருவாக்கி¸ பிரிவினைவாதம் படைப்பதில் வெற்றியும் கண்டிருந்தார்.

முகாமுக்குள் குந்திக்கிடக்கும் அகதிகளிடம் போய் “நீர் எவ்விடம்..? நீர் எவ்விடம்..? மன்னாரே..? மட்டக்களப்பே..? மலைநாட்டாக்கள் இங்க ஏன் வந்தனீங்கள்..? உங்கடை ஆக்கள்தானே வன்னி முழுக்க குடியேறி இருக்கினம்..? தனி நாடு எங்களுக்கு கிடச்சுதென்டால் நீங்க உங்கட ஊர் பக்கம் போய்ச்சேர்றதுதான் உங்களுக்கு…மெத்தச்சுகம்..”! என்று வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவார். இனத் துவேசிகளை விட சமூகத் துவேசிகள் ரொம்பவும் ஆபத்தானவர்கள் என்பதை அந்த விபூதிப் பட்டை உணர்த்திக் கொண்டிருந்தார்.

“சிங்களச் சனங்களோட சேந்து வாழலாம்.. இவங்களோட வாழவே முடியாது பார்வதி…!” என்று ஒருநாள் ராமசாமி நம்பிக்கையிழந்தபடி வேதனையோடு அவளிடம் பேசியதை நினைத்துப் பார்த்தாள். காலியில்… அந்த சிங்கள ஊரில் வெட்டுப்பட்டு… குழந்தை குட்டிகளோடு காட்டுக்குள் பதுங்கியிருந்தபோது… “வடக்குப் பக்கம் போயி… தமுள் எனத்தோட அண்டி வாழலாம் பார்வதி..” என்று குடும்பத்தைக் கூட்டிக்கொண்டு வந்தவர்¸ இப்படி சொல்லம்பு பட்டு மனம் தளர்ந்து போனதையும் பார்வதி நினைத்தாள்.

முகாமுக்குள்ளிருக்கும் பெரியவர்கள் தொடர்ந்து பொதுக் கதைகள் பேசிக் கொண்டிருந்தார்கள். இறுதி யுத்தத்தில் பெருவாரியாக மலைநாட்டுச் சனங்கள் செத்தழிந்து போனதைப்பற்றி புலம்பெயர்வாசிகளும் ¸ உள்ளுர் ரட்சகர்களும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை… என்பதை ஒரு பெரியவர் வேதனையோடு சுட்டிக்காட்டினார். “இதுதான் தமிழ் தேசியத்தின்ர மகிமை..!” என்று இன்னொரு பெரியவர் ஏளனமாகச் சிரித்து எச்சிலைத் துப்பினார்

மேலும் இரண்டு வருஷக் காலங்கள் எதுவித அர்த்தமுமின்றி அந்த முகாமில் அழிந்து முடிந்தன.

***

ஈஸ்வரியும்¸ கனகமும் தங்களை சுமங்கலிப் பெண்ணா..? கைம் பெண்ணா..? என்ற முடிவுக்கு வர முடியாமல்¸ பார்வதி அம்மாளின் கால்களில் விழுந்துக் கலங்கினார்கள். கண்ணார ¸ மனமார கணவனின் மரணத்தை… பிணத்தைப் பார்த்தவள்… இன்னும் எரித்தச் சாம்பலை முந்தானையில் முடிச்சுப் போட்டு¸ வைத்துக் கொண்டு¸ நான் கைம் பெண் என்று உரத்து நினைக்கும் அவள்¸ அந்த அபலைகள் கேட்கும் கேள்விகளுக்கு இரண்டு வருசங்களாகப் பதில் கூற முடியாமல் மௌனித்துப் போய் இருக்கிறாள்.

மரணங்களைக் கண்டுகொள்கின்ற மனம்¸ அழுது¸ புலம்பியத் துயரத்துக்குப் பின்னர் ஆறுதலடைகின்றது. ஆனால்¸ காணாமல் போன உறவுகளைத் தேடிக் கொண்டிருக்கும் மனம் படுகின்ற அவஸ்தையை விவரிக்க முடிவதில்லை…

***

இன்று குளிப்பதற்கு பௌசர் தண்ணீர் கிடைத்தது. அகதிகள் நீரில் நனைந்த சுகத்தில் துயர் மறந்திருந்தனர். கனகமும்¸ ஈஸ்வரியும் தர்மச் சேலைகளை உடுத்திக் கொண்டு¸ பார்வதி அம்மாளின் அருகில் அமர்ந்து உணர்ச்சித் ததும்பும் அந்த வார்த்தைகளைக் கொட்டித் தீர்த்தனர்.

“மாமி..! அவர் மோசம் போயிருப்பார்…! நான் கைம் பெண் என்டு ஊருக்குக் காட்ட வேணும். கருமாதி செய்ய வேணும். மோட்ச விளக்கு ஏத்த வேணும்.. அவர் மோட்சத்துக்குப் போக வேணும்… கனகத்தைத் தொடர்ந்து ஈஸ்வரியும் கதைத்தாள்.

“ஓம் அம்மா..!” அண்ணியின் பேச்சுக்கு ஒத்தாசை வழங்கியவளாய் மூன்று வருசங்களாக மனதுக்குள் முள்ளாய் நெருடிய நினைவுகளை வெளியில் கொட்டினாள். அந்தனியின் நிழலைக் கூட தொடாதவள்… அவனது சுவாசத்தின் அருகில் கூட நில்லாதவள்… அவனது பாசத்தை மட்டுமே பகிர்ந்துக் கொண்டு… மானசீகக் கணவனாக மட்டுமே அவனை ஏற்றுக் கொண்டவள்¸ தன்னையும் புருஷனை இழந்தவளாகக் காட்டிக் கொள்ள விரும்பினாள். இன்று வரை கல்லாக்கிக் கொள்ளாதிருந்த தன் மனதை¸ பாறையாக்கிக் கொண்டாள் பார்வதி அம்மாள். மகனும்¸ மருமகனும் மோட்சம் அடைய வேண்டும் என்று சிவ புராணத்துச் சில வரிகளை முனு முனுத்தாள். அந்த இடத்தில் அவர்கள் மூவரும் விதவைகள்.. அவர்களைப் போல¸ அந்த முகாமுக்குள் எத்தனை விதவைகள்…? பத்திரிக்கையில் படித்த செய்தி ஒன்றை பார்வதி அம்மாள் நினைத்தாள்.. எவனோ ஒரு மந்திரி சொல்லியிருந்தான்¸ எண்பத்தொன்பதாயிரம் விதவைகள் இருக்காங்களாம்.. அது லச்சமாகவும் இருக்கலாம்…

அவர்கள் கைகளைக் கூப்பிக் கொண்டு¸ கண்களை மூடிக்கொண்டு மனதுக்குள் பிரார்த்தனை செய்தார்கள். இதுவரை சுமந்து வைத்திருந்த பாரம் அன்றைய இரவோடு இறக்கி வைக்கப்பட்ட உணர்வாய் நிம்மதியாக மரத்தடியில் சாய்ந்தார்கள்.

***

விடிந்தது…

எட்டுமணியளவில் அந்த முகாம் அதிகாரிகளில் ஒருவன் சிங்கள மொழியில் சத்தமிட்டுக் கொண்டு வந்தான். அவனைத் தொடர்ந்து வெள்ளையும்¸ சொள்ளையுமாக ஒருவன் தமிழில் ‘தண்டோரா’ போட்டுக் கொண்டு வந்தான். “வெளி நாட்டு அரசியல் பிரமுகர்கள் பத்து மணிக்கு முகாம்களப் பார்வையிட வாராங்கள். வீடு¸ வாசல்¸ காணி¸ பூமி கிடைக்கும்போது¸ சனங்கள் குழப்படிச் செய்யக் கூடாது…! ஓத்துழைப்புத் தர வேணும்.. ச்சரியோ…?” என்று பல்லை இளித்துக் கொண்டுச் சென்றான்.

சிறிது நேரத்தில் வெளி நாட்டுப் பிரதிநிதிகள் என்ற இரண்டு பிரமுகர்கள் முகாமுக்கு விஜயம் செய்தனர்.

பார்வதி அம்மாள் அவர்களைக் கூர்ந்து கவனித்தாள். “இவங்கள்தானே எங்கட இந்தக் கெதிக்கெல்லாம் காரணமானவங்கள்..? இவங்கள்தானே ஆயுதம் கொடுத்தவங்கள்..? இவங்கள்தானே ராணுவம் கொடுத்தவங்கள்..?” அவளின் உதடுகள் துடி துடித்தன.. அவள் மனதுக்குள்ளே வார்த்தைகள் பல வந்துக் குமைந்தன…

அவளின் பின்னால் நின்று¸ பிரமுகர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த முதியோர் சிலர் பேசிய வார்த்தைகள் பார்வதியின் காதுகளில் தெளிவாக விழுந்தன.

“இங்க நிக்கிற பொம்பிளைகள் கூட இவங்கள் தலையில மண்ண வாரிப் போடலாம்..!”

“இது இன்டைக்கு உலகத்தில நடக்கிற அரசியல் பகிடியப்பா..!” என்று சிரித்தார்கள்.

“ஒரு அரசியல்வாதியின்ர தலையில துப்பாக்கியால தாக்கியவன் தேசிய வீரனென்டு பட்டம் வாங்கிக்கொண்டது தெரியுமே…!”

“வெளி நாட்டில இன்னும் ரெண்டு பகிடி நடந்ததப்பா..! மாநாடு நடக்கேக்க சப்பாத்துக்கள கழட்டி¸ அரசியல் பிரமுகர்கள் மேல வீசியடித்தவங்கள் உலகப் பாராட்ட வாங்கினவங்களாம்..!”

இவ்வாறு அவர்கள் சுவாரஸ்யமான சில உலக சம்பவங்களை அங்கே சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

பார்வதி அம்மாளின் மனம் துடித்தது. “பிள்ளையாரப்பா..! அவங்கள் தலையில நானும் மண்ணவாரி வீசி இருக்கலாமல்லோ…?” அவள் அங்கலாய்த்துப் போனாள். முந்தானைச் சேலையை இழுத்து இறுக்கி இடுப்பில் செருகினாள். ஆவேசத்தால் அவள் மனம் பட படத்தது. தள்ளாத வயதிலும் மனம் எதிர்ப்பைக் காட்ட துடித்துக் கொண்டிருந்தது.

வந்தப் பிரமுகர்களும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே நடை பயின்று மறைந்தார்கள்..

அகதி முகாமில் அன்றைய ஒரு நாள் பொழுதும் அவர்களைப் பொறுத்தளவில் அழிந்துப் போனது …

***

காலையில் எழுந்த கனகமும்¸ ஈஸ்வரியும் கோப்பி கலக்கினார்கள். அம்மாவுக்கும்¸ சின்னவளுக்கும் கொடுத்தார்கள். தாங்களும் கோப்பி குடிப்பதற்கு கோப்பைகளைத் தேடிக் கொண்டிருந்தார்கள். திடீரென ஒரு வண்டி¸ பூதம் போல வந்து நின்றது. வண்டியிலிருந்து இறங்கிய துப்பாக்கிக்காரர்கள்¸ முகாமுக்குள் நுழைந்தனர். அவர்கள் கனகம்¸ ஈஸ்வரியை விசாரிக்க வேண்டும் என்றனர். அவர்களை கூடாரத்துக்கு வரும்படி அதட்டினார்கள். விரியனை… புடையனை… மிதித்தவளாய் பார்வதி; மிரண்டு போனாள். துப்பாக்கிக்காரர்களிடம் ஓடிப் போய் பிள்ளைகளை விடும்படி சத்தமிட்டாள். அவளை இடித்துத் தள்ளிவிட்டு அவர்கள் அவ்விரு பெண்களையும் இழுத்துச் சென்றார்கள். அகதி முகாமே குமுறிக் கொந்தளித்தது. அவர்கள் உரத்துச் சத்தமிட்டார்கள். புல்லாய்.. புழுவாய்… பூச்சிகளாய் மிதிபட்டுக் கொண்டிருக்கும் அவர்களால் வேறு என்ன செய்து விட முடியும்..?

எதிர்ப்பு… துடிப்பு… வெறி… ஆவேசம்.. என்ற உணர்வுகளெல்லாம் செத்து மடிந்து விட்ட இந்த நிலைமையில் எரிந்து¸ கருகி முண்டங்களாய் நிற்கும் பனைகளாய்¸ தென்னைகளாய் அவர்கள் நின்றார்கள்.

இன்று காலையில்¸ வெட்ட வெளிச்சத்தில் பலரின் கண் முன்னால்¸ கனகமும்¸ ஈஸ்வரியும் ‘காணாமல்’ போனார்கள்..!

பார்வதி அம்மாள் சுய நினைவை இழந்தவளாய்… பிள்ளைகளைப் பறி கொடுத்தும்¸ பதட்டமில்லாமல் நின்றுக் கொண்டிருந்தாள். அவள் தள்ளாடிக் கொண்டு மாமரத்தடியில் அமர்ந்துக் கொண்டாள். தலை கவிழ்ந்திருந்தது. அவளது குடும்பத்தில் கணவனை¸ மகனை¸ மருமகனை பறி கொடுத்த நிலையில்¸ இன்று மகளையும்¸ மருமகளையும் பறி கொடுத்துவிட்டு¸ தனி மரமாக நிற்கிறாள். அவளோடு அண்டியிருக்கும் ஊரும்¸ பெயரும் அறியாத உறவாக அந்தச் சிறுமி மட்டும் உரசிக் கொண்டு நின்றாள். “இன்டைக்கோ¸ நாளைக்கோ நான் போய் சேந்த புறகு¸ என்ர பூர்வீகமும் முடிஞ்சுப் போகும்… இந்தப் புள்ளையின்ர எதிர்காலம் எப்படியாகும்…? எத்தன பேர்களின்ட எதிர் காலமெல்லாம் எப்படியெல்லாமோ போச்சு… அப்படியே இவளுக்கும் போகட்டும்…!ஹ ஹ_ம்.. ஹ_ம்.. அப்படியெல்லாம் போகாது.. இவள் ராசாத்தி போல வாழப் போற காலம் திரும்பி வரும்..” பார்வதி ஆச்சியின் மனம் இன்னும் தளராது¸ சவால் விட்டுக் கொண்டிருந்தது. அவள் மெதுவாகத் தன் சேலை முந்தானை முடிச்சைத் தடவிப் பார்த்தாள். அது பத்திரமாக இருந்தது… அவளின் அசை போடும் மனம் மட்டும் நடந்து முடிந்தக் கொடூரங்களை நிதானமாக மீட்டிக் கொண்டிருந்தது.

ஆயிரமாயிரம் சம்பவங்கள் அவளது புண்பட்ட நெஞ்சுக்குள் படம் காட்டிக் கொண்டிருந்தன. வாழ்ந்த ஊரை நினைத்தாள்… ஊர் சனங்களை நினைத்தாள்… எத்தனை கோயில்கள்… எத்தனை பாடசாலைகள்… எத்தனை வீடுகள்… வாழ்வு தந்த வயல்கள்… தோட்டங்கள்… குளங்கள்… மரங்கள்… வாழ்க்கையின் ஆதாரங்கள்… அத்தனையும் இழந்து… ஜடமாக… வெட்ட வெளியில் குப்பைகளாகக் குவிக்கப்பட்டிருக்கும் இந்தச் சனங்களின் நிலையை நினைத்தாள்….

பார்வதி அம்மாளின் இறுதி ஆறு வருசங்களும் இந்த ‘இடைத் தங்கல் முகாமிலேயே’ முடக்கப்பட்டிருக்கின்றன..

அவள் மௌனமாக மனதோடு சிரித்துக் கொண்டிருந்தாள். முகாமுக்குள் முள் வேலிகளுக்குள் முடங்கிக் கிடந்தாலும்¸ காற்றோடு வருகின்ற சிற் சில செய்திகள் மனதுக்கு ஒத்தடம் கொடுத்தன… ஊழிக்கூத்து ஆடியவர்கள் எல்லோரும் தன் கண் முன்னாலேயே தண்டிக்கப்பட்டு வருவது¸ அவள் பார்வையில்… அது அவன் செயலா..? அது இயற்கையின் நியதியா..?

***

இந்தக் கேள்விகளை ஏந்திக் கொண்டு மறுநாள் விடிந்தது… “ஆச்சி இன்னும் எழும்ப வில்லை..”

சிறுமி ஆச்சியைத் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தாள். ஆச்சி இன்னும் எழும்பாததைக் கண்டு¸ அவள் அழுதாள். சிறிது நேரத்தில் முகாமில் சல சலப்பு ஏற்பட்டது. பார்வதி அம்மாளைச் சுற்றி கூட்டம் கூடியது.

வழமைப் போல துப்பாக்கி வண்டி வந்தது. பார்வதி அம்மாளை உருட்டிப் புரட்டினார்கள். சேலையில் முடிச்சு… “ரத்தரங் படு வாகே பங்..” (தங்க சாமான் மாதிரி..) அவிழ்த்துப் பார்த்தனர். கணவனின் பிடி சாம்பல் முடிச்சு…. “ஏகொல்லங்கே கோவிலே விபூதி வாகே பங்” (அவங்கட கோயில் விபூதி போல) அதை அப்படியே ஒருவன் முடிச்சு போட்டான். பார்வதி அம்மாளை வண்டியில் தூக்கிப் போட்டார்கள். இன்னும் பல பிணங்களும் வண்டிக்குள் கிடந்தன. கொஞ்சம்கூட மனிதாபிமானம் இல்லாத அவர்கள்¸ பிணத்தின் சொந்தக்காரியான சிறுமியையும் சவ வண்டிக்குள்ளேயே ஏறச் சொன்னார்கள். அவள் ஆச்சியின்அருகில் உட்கார்ந்துக் கொண்டாள்.

“ஆச்சிய டொக்டரிட்ட கூட்டிக்கொண்டு போறம் அக்கா..!” சிறுமி ஒரு அகதிப் பெண்ணைப் பார்த்து புன்னகை செய்தாள். ஒரு துப்பாக்கி இளைஞன் அந்த சிறுமியின் பாமரத்தனத்தை அறிந்து மனதுக்குள் வேதனைப்பட்டான். அவளை அனாதை சிறுவர் மடத்தில் ஒப்படைத்து விடுவதே துப்பாக்கிக்காரர்களின் ஏற்பாடாகவிருந்தது…

***

முள்வேலிக்குள் நிர்க்கதியாய்¸ வெறுங் கைகளோடு மௌனித்து நின்றுக் கொண்டிருக்கும் மனித இனங்கள்… கை நிறைய ஆயுதங்களைச் சுமந்து நிற்கும் இன்னொரு மனித இனத்தை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தன….

போர்¸ கந்தகத் தீயை உமிழ்ந்து முடித்தது.

சர்வமும் வெந்து தணிந்து போய்விட்ட ஓர் காலத்துக்கு¸ இனியும் ஆயுதங்கள் தேவைதானா..?

அவர்களின் தீட்சண்யமான பார்வை மனித உலகத்தைத் தேடிக்கொண்டிருந்தது…

(எல்லாமே கற்பனை..!) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)