தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 29, 2013
பார்வையிட்டோர்: 8,405 
 

“”உள்ளே வரலாமா சார்?”

“”வாங்க”என்றார் எங்கள் கம்பெனி எம்.டி.

நான் உள்ளே நுழைந்ததும், “”உட்காருங்க…எப்படி இருக்கீங்க?”

“”நல்லா இருக்கேன் சார்” என்றேன்.

விலைசிறிது நேரம் எங்கள் கம்பெனி விவகாரங்களையும் பொதுவான விஷயங்களையும் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். மெதுவாக நான் வந்த விஷயத்தை ஆரம்பித்தேன்.

“”ஆமா…ஆமா…ரங்கராஜன், ஞாபகமிருக்கு. பதவி உயர்வு வந்திருக்கிற ரெண்டு பேர்ல நீங்களும் ஒருத்தர் இல்லையா? இன்னொருத்தர் யாரு?”

“”தயாபரன் சார். நுங்கம்பாக்கம் கிளையிலே உதவி மேலாளரா இருக்காரு”

“”சென்னையிலே பதவி உயர்வு இடம் ஒண்ணுதான் காலியாக இருக்கு தெரியுமில்ல. இன்னொரு இடம் கும்பகோணத்திலதான் இருக்கு. அப்ப உங்க இரண்டு பேர்ல யாரோ ஒருத்தர் கும்பகோணம் போய்த்தான் ஆகணும் இல்லையா?”என்றார் எம்.டி.

“”ஆமாம் சார். அதுபற்றித்தான் உங்களிடம் பேச வந்தேன். என் குடும்பத்தைப் பற்றி சொல்லிடறேன், சார். என் மூத்த பையன் இன்ஜினியரிங் முடிச்சிட்டு வேலை இல்லாம இருக்கான். இப்பத்தான் ஒரு கம்பெனியிலிருந்து எஸ்ஸிக்யூட்டிவ் ட்ரெய்னி போஸ்ட்டுக்கு இன்டர்வியூ வந்திருக்கு; முயற்சி பண்ணிட்டிருக்கேன். அநேகமாக கிடைச்சாப்ல தான். போஸ்டிங் சென்னையில் இல்ல. வெளியூர் போக வேண்டியிருக்கும். என்னோட இரண்டாவது பொண்ணு பி.காம். இரண்டாவது வருஷம். என் மனைவி ஓர் இதய நோயாளி.

மிஷன் ஹாஸ்பிடல்ல சிகிச்சை எடுத்துக்கிட்டு இருக்காங்க. கட்டிக்கிட்டு இருக்கிற வீடு வேற பாதியிலே நிக்குது. இந்த சூழ்நிலையிலே நான் சென்னையை விட்டுப்போறது…ரொம்ப கஷ்டமான விஷயம். நீங்க நினைச்சீங்கன்னா என்னை சென்னையிலேயே நியமனம் செய்ய முடியும்”என்றேன்.

“”கண்டிப்பா செய்யலாம் இதிலே என்ன இருக்கு? உங்க இரண்டு பேர்ல யாரு சீனியர்?”

கொஞ்சம் தயங்கி,””தயாபரன்தான் சார்”என்றேன்.

“”அப்படியா…யூ ஸீ மிஸ்டர் ரங்கராஜன் அவருக்கும் பதவி ஓய்வு பெறுவதற்கு இன்னும் இரண்டு வருஷம்தான் இருக்கு. பாவம் மிகவும் வயசான பெற்றோர்கள் வேற, ஒரு பார்வையற்ற தங்கை, எக்ஸட்ரா…எக்ஸட்ரா…”

“”இருந்தாலும் நீங்க எனக்கு உதவி செய்ய முடியும்னு எதிர்பார்க்கிறேன்”என்றேன் விடாப்பிடியாக.

“”சீனியாரிடியைப் புறக்கணிக்க முடியுமா ரங்கராஜன். அது அவ்வளவு சுலபமில்ல”என்றார் எம்.டி. தீர்மானமாக.

இதற்கு முன்னால் அது போன்று நடந்திருக்கும் முன்னுதாரணங்களை எடுத்து அவருக்கு விளக்கினேன்.

“”அப்படியா?”என்று யோசித்தார். பின்பு,””அவங்க எல்லாம் சம்திங் வாங்கியிருப்பாங்க”என்றார் சிரித்தபடி.

“”அதற்கும் நான் தயார் சார்” என்று சொல்லிவிட்டு அவர் முகத்தை உற்று நோக்கினேன்.

சரியாக இருபது நிமிடங்கள் அந்த விஷயத்திலுள்ள முழுமையான சாதக பாதகங்களை அலசினோம். முடிவாக, “”சரி ரங்கராஜன். நீங்க எதுக்கும் ஒரு ஐம்பதாயிரம் தயார் பண்ணிக் கொடுங்க. உங்க இன்றைய நிலையை வச்சுப்பாக்கறபோது இது சின்ன தொகைதான். நானும் மேலிடம் வரை சரிக்கட்டணுமில்ல”என்றார்.

அப்படியெல்லாம் சரிக்கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் இந்த விஷயத்தில் அவர் “பெரிய மனது’ செய்து அளித்த வாய்ப்புக்கு நன்றி சொல்லிவிட்டு அவர் கேட்ட தொகையுடன் ஒரு வாரத்தில் சந்திப்பதாகக் கூறி புறப்பட்டேன்.

வீட்டுக்கு வந்தபோது மகன் பிரபாகர் வாசலில் காத்திருந்தான்.

“”அப்பா! என்ன இன்னைக்கு லேட்டு. நாளை என்னை அந்தக் கம்பெனியில இன்டர்வியூக்கு வரச் சொல்லியிருக்காங்க. அந்த வேலைக்கு இரண்டரை லட்சம் வரை பேரம் போறதுன்னு கேள்விப்பட்டேன்”என்றான்.நான் பதில் பேசவில்லை.

அடுத்த வாரத்தில் நான் என்னுடைய கம்பெனி எம்.டி.யிடம் அவர் கேட்ட தொகையைக் கொடுத்துவிட்டு எனது பதவி உயர்வு நியமன உத்தரவை சென்னைக் கிளைக்கே வாங்கிக் கொண்டேன். எனது இந்தச் சரியான அதிரடி நடவடிக்கையை எண்ணி மனதிற்குள் பெருமிதம் கொண்டேன்.

இரண்டு வாரங்கள் கழிந்தன. பிரபாகர் நேர்முகத் தேர்வுக்குச் சென்று வந்த நிறுவனத்திலிருந்து தகவல் ஒன்றும் வரவில்லை. இத்தனைக்கும் பிரபாகர் நேர்முகத்தேர்வுக்குச் செல்லும் முன்பே அக்கம்பெனியின் உயர் அதிகாரிகளைப் பார்த்து செல்வாக்குள்ள இடங்களிலிருந்து சிபாரிசுக்கு ஏற்பாடு செய்திருந்தேன்.

எனவே நியமனத்தில் தாமதம் இருந்தாலும் கண்டிப்பாக உத்தரவு வந்துவிடும் என்பதில் சந்தேகமின்றி இருந்தேன். அடுத்த நாள் பிரபாகரை அழைத்துக் கொண்டு அந்த நிறுவனத்திற்குச் சென்றேன். நிறுவனத்தின் எக்ஸிக்யூட்டிவ் ட்ரெய்னி இடம் ஏற்கெனவே நிரப்பப்பட்டுவிட்டதாக தகவல் சொன்னார்கள். உயர் அதிகாரிகள் யாரும் அன்று சென்னையில் இல்லை. ஆதலால் என்னால் யாரையும் சந்திக்க இயலவில்லை. எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

சலிப்புடன் வெளியே வந்தேன். வாசலில் நின்றிருந்த பியூனிடம் மெதுவாக விசாரித்தேன்.

“”ஆமா சார். அதுக்கென்ன இப்போ? போன மாதம் இருபதாம் தேதியே உத்தரவு அனுப்பியாச்சே. அந்த நபர் கூட இரண்டு நாள் முன்னாடி வந்து எல்லாருக்கும் இனிப்பு கொடுத்திட்டு போனாரே. செங்கல்பட்டு ஆளு சார். நோட்டீஸ் போர்டுல பட்டியல் ஒட்டியிருக்கே”என்று சொல்லிவிட்டு ரகசியமாக என் அருகே வந்து “”மூணு லட்சம் விளையாடியிருக்கு சார். பணம் உள்ளவன் அடிச்சிக்கிட்டுப் போயிட்டான். சார் யாரு? உங்க மகனா? இன்டர்வியூ அன்னைக்கு பார்த்தாப்ல இருக்கு. உங்க பையனுக்கு கிடைக்கலயா?”என்றான் போலி வருத்தத்துடன். கூடவே,””ஒரு பத்து ரூபா குடு சார் நாஸ்தாவுக்கு”என்றான்.

பியூனை அனுப்பிவிட்டு நான் பிரபாகரைப் பார்த்தேன். திறமையானவன்; சந்தேகம் இல்லை; நிறைய வருத்தப்படுவதுபோல் தெரிந்தது.

“”டேய்,நோட்டீஸ் போர்டுல நியமன விபரங்களை போட்டிருப்பாங்கன்னு அந்த பியூன் சொன்னாப்ல. போய் பார்த்திட்டு வா” என்றேன். பிரபாகர் போய் ஐந்து நிமிடங்களில் திரும்பி வந்தான்.

“”ஒரு இடம்தான் காலி இருந்திருக்கு அதை நிரப்பிட்டாங்க”என்றான்.

“”அவங்க தேர்வு செய்த கேன்டிடேட் பேர் என்ன?”

என்றேன்.

“”சங்கர் சன் ஆஃப் தயாபரன்”என்றான் பிரபாகர்.

– கடலூர் ஆர். ராஜசேகர் (அக்டோபர் 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *