விலை

 

“தமிழ் இலக்கியத்தின் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரம் எழுத்தாளர் இளம்புயல் அவர்களுடன் நடக்கப்போகும் இந்த நேர்காணல் நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பார்வையாளர்கள் அனைவரும் எங்கள் வணக்கம். முதலில் அவரைப்பற்றிய ஒரு சிறு விளக்கம். பின்னர் அவருடன் வந்திருக்கும் பார்வையாளர்கள் கலந்துரையாடலாம்” என்று அந்த பிரபல தொலைக்காட்சி சேனலில் பிரபல anchor விமல் சொன்னதும், சொல்லிக்கொடுத்தது போல பார்வையாளர்கள் அனைவரும் ஒரு சேர கை தட்டினார்கள்.

டிவி கேமரா இளம்புயல் முகத்தில் மையம் கொண்டது. சுமார் இருபத்தி ஐந்து வயதிருக்கும். சுருள் முடி, தமிழ் இலக்கிய கர்த்தாக்களுக்கே உரிய மெல்லிய நறுக்கி விடப்பட்ட மீசை. இரண்டாவது முறை பார்த்தால் வசீகரிக்கும் முகம். நிரந்தரத் தேடலில் அலைபாயும் கண்கள்.வெகு நேரம் தன்னை கேமரா பார்த்ததில் சட்டென்று சுயநினைவுக்கு வந்தவன் போல ஒரு அசட்டு சிரிப்பு சிரித்து, கை கூப்பி வணங்கினான்.

‘மிஸ்டர் இளம்புயல்! முதலில் உங்கள் சமீபத்திய புதினம் ‘விலை’யின் மகத்தான வெற்றிக்கு எங்கள் வாழ்த்துக்கள். அதைப் பற்றிய அனுபவங்களை சற்று எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?” என்ற டிவி நிருபரை பார்த்து ‘தாராளமாக’ என்றான் இளம்புயல்.

“இதுவரை பெரிய வெற்றி என்று எதுவும் பார்காத எனக்கு இந்தப் படைப்பின் வெற்றி ஆச்சரியத்தைக் கொடுத்தது என்பதைவிட விடா முயற்சி வெற்றி தரும் என்னும் முதியோர் சொல்லின் உண்மையை உணர்த்தியது என்றே சொல்லலாம். என் ஏழு மாத உழைப்பின் பலன்.

இளம்புயல் என்ன சாதித்தான் என்று கூசாது குற்றம் சாட்டிய வாய்களுக்கெல்லாம் நான் போட்ட பூட்டு தான் இந்த ‘விலை’. என் அடிப்படை எழுத்து நடையை சற்று மாற்றி நான் செய்த experimental work இது. என் அடையாளம். இது போல இனி என்னாலேயே எழுத முடியுமா என்பது சந்தேகம் தான். ஏனென்றால் என் உள்ளத்தில் குடி கொண்டிருந்த ஒரு நெடு நாளைய கனவின் வெளிப்பாடு இது” என்றான் இளம்புயல்.

“ஆனால் இது நீங்கள் எழுதியதே இல்லை என்றும், இதனை வேறு ஒரு பிரபல எழுத்தாளர் எழுதியிருக்கலாம் என்றும் ஒரு வதந்தி உலவுகிறதே, அது பற்றி உங்கள் கருத்து என்ன” என்று கேட்ட டிவி anchor விமலை இளம்புயல் எரித்து விடுவது போல் பார்த்தான்.

“சுற்றி வளைத்து ஏன் கேட்கிறீர்கள் விமல்? எழுத்தாளர் சந்திரமதி என்று நேரடியாக அவர் பெயரைச் சொல்வதுதானே?” என்றான்.

“இல்லை…” என்று ஆரம்பித்த விமலை மேலும் பேச விடாமல் அவனே தொடர்ந்தான். “ சந்திரமதி வெறும் எழுத்தாளர் மட்டுமல்ல. இந்த யுகத்தின் பரிசு. அவரின் தாக்கம் இல்லாத எழுத்தாளர்களைக் காட்டுங்களேன் பார்க்கலாம். அவரால் inspire ஆன பல இளைஞர்களில் நானும் ஒருவன். அவரின் சாயல் என் எழுத்தில் இருக்கலாம். இருக்கும். இருக்க வேண்டும். இந்த வதந்திக்கு இறுதியாக ஒரு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். ‘விலை’ என் படைப்பு. என் உழைப்பின் பலன். என் கனவுகளின் வெளிப்பாடு. இதனை யாரும் எனக்காக ghost write செய்யவில்லை” என்று ஆத்திரத்துடன் சொல்லி முடித்தான்.

விமல் பார்வையாளர்கள் பக்கம் திரும்பி “யாரும் எதுவும் கேள்வி கேட்க விரும்பினால் கேட்கலாம்” என்றான்.

அடுத்து பார்வையாளர் தங்கள் கேள்விகளைக் கேட்பதற்கு முன்னமே டிவியை mute செய்தார் எழுத்தாளர் சந்திரமதி. பின்னர் அந்த ரிமோட்டை தன் அருகில் தூக்கியெறிந்த பூமாலையைப் போல் கசங்கலாகப் படுத்தக் கிடந்த அந்த அழகியப் பெண்ணின் வயிற்றின் மேல் வைத்தார். கட்டில் அருகில் இருந்த டேபிளில் வைத்திருந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்து அதிலிருந்து ஒரு சிகரெட்டை உருவி தன் உதடுகளிடையே பொருத்தினார். இதற்காகவே காத்திருந்தவள் போல் அந்தக் கசங்கிய பூமாலை சட்டென்று எழுந்து லைட்டரால் அதற்கு நெருப்பூட்டினாள்.

சந்திரமதி சிகரெட்டின் புகையை உள்வாங்கி நுரையீரல் எல்லாம் நிறைத்து பின் வாய் வழியே வளையமாக வெளியேற்றினார். அவர் கண்கள் அவளைத் தலை முதல் கால் வரையில் கணக்கெடுத்தது.

‘என்ன பாக்குறீங்க?” என்றாள் அவள்.

“உனக்கு அந்த ‘விலை’ அதிகமோன்னு பாக்குறேன்” என்றார் கொஞ்சலாக.

“பாப்பீங்க பாப்பீங்க, கெழட்டுச் சிங்கத்துக்கு யோசனை போகுது பாரு” என்று சொல்லியபடியே சந்திரமதியின் உடல் மீது காமத்துடன் படர்ந்தாள்.

அனிச்சையாக அவர் கண்கள் டிவியின் பக்கம் சென்றது. அங்கே அந்த கசங்கிய பூமாலையின் கணவன் எழுத்தாளர் இளம்புயல் தன்னிலை விளக்கம் அளித்துக் கொண்டிருந்தது இவர்கள் இருவரின் காதுகளிலும் விழவில்லை.

- நவம்பர் 2013 

தொடர்புடைய சிறுகதைகள்
வெங்கடேஷுக்கு முத்துச்சாமி சொன்னதைக் கேட்டு இன்ப அதிர்ச்சி! இப்படியெல்லாம் கூட நடக்குமா? தன் வேண்டுதல்களை கடவுள் கேட்டுவிட்டது. இல்லையென்றால் முத்துச்சாமி திரும்பி வருவானா? அதுவும் ஒரு மணி நேரம் முன்னால் மீட்டுக் கொண்டு போன அதே நகையை எடுத்துக் கொண்டுவந்து திரும்பவும் அதன் ...
மேலும் கதையை படிக்க...
“தலைல அடி பட்டிருக்கு ; அபாயம் தாண்டினாலும் ட்ரீட்மென்டுக்கு கவர்மென்ட் ஆசுபத்திரி சரியில்லை. ப்ரைவேட் தான் போகணும். ஒரு லட்சம் வரைக்கும் செலவாகும்” டாக்டரின் பேச்சு இடி போல இறங்கியது பூங்காவனத்தின் காதுகளில். ஒரு லட்சம்! பணம் என்றதும் சேட் சோஹன்லால் தான் ...
மேலும் கதையை படிக்க...
அந்த சின்ன கிராமத்துல அஞ்சு வருஷம் முன்னால செத்துப் போன சேகரனப் பாப்பேன்னு சத்தியமாக் கனவுல கூட நெனக்கலை. அதுவும் அவன் சாவுக்குப் போய் மாலையெல்லாம் வேற போட்டுட்டு வந்திருக்கற எனக்கு ரொம்ப பெரிய அதிர்ச்சி. பாங்கில் இருந்து ரிடையர்மென்ட் ஆனதுக்கு அப்புறம் போர் ...
மேலும் கதையை படிக்க...
இதைப் படித்துவிட்டு இது உண்மையில் நடந்ததா என்று கேட்கப்போகும் நண்பர்களுக்கு நான் இப்போதே சொல்லிக்கொள்ள விரும்புவது – ‘எனக்குத் தெரியாது!’ நான் வெங்கடேஷ். VRI என்று சொன்னால் என் முகநூல் நட்பு வட்டத்தில் புருவம் உயர்த்தி ‘அவனா?’ என்று ஒரு விதமாக சிரிப்பார்கள். ...
மேலும் கதையை படிக்க...
மழை விடுவது போலத் தெரியவில்லை. இன்னும் அதிகமாகிக் கொண்டிருந்தது. ஏற்கனவே குளிர்காலம். மழையினால் குளிர் அதிகமாகி விட்டது. திரும்பவும் நான் என் எதிரிலிருந்த மேஜையில் வைக்கப் பட்டிருந்த அந்தப் பழைய செய்தித்தாளைப் பார்த்தேன். முதல் பக்கத்தில் இருந்து என் முகம் என்னைப் பார்த்து ...
மேலும் கதையை படிக்க...
விதி
பூங்காவனம்
என்ன மன்னிச்சுக்குங்க சார்
நடந்தது என்ன?
ஒரு மழை நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)