Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

வினை

 

கோபால்சாமிக்கு நிரந்தரமாக இரண்டு குறைகள் இருந்தன. முதலிலெல்லாம் அவை குறித்து கூச்சமும் வருத்தமும் அதிகம் பட்டிருக்கிறான். மெல்ல மெல்ல வயதாக ஆக தன் மதியால் பெருமளவு விதியை வென்று விட்டான் என்றே சொல்லலாம். இருபத்தி நாலு வயதில் தன் பெயரை கோபால்சாமி என்று சொல்வதைத் தவிர்த்து ‘ ஐ’ ம் கோபி, . . . . . . பேங்க்’ என்று கொஞ்சம் ஸ்டைலிஷாகவே சொல்லி தனக்கு ரொம்ப வயதாகின மாதிரி பெயர் என்கிற குறையைப் போக்கிக் கொண்டு விட்டான். எடுப்பான தன் முன் இரண்டு பற்களை கருகருவென்று அடர்ந்து வளர்ந்த மீசையைப் பெரிதாக வளர்த்துக் கொண்டு இன்னொரு குறையையும் முழுதுமாக மறைத்துக் கொண்டுவிட்டான். “பல் கொஞ்சம் தூக்கலாக இருக்குமே அந்தப் பையனா” என்று இப்போது யாரும் அவனை அடையாளம் சொல்ல மாட்டார்கள் என்பது அவனுக்கு நிச்சயம். “ஓ அந்த மீசையா” அல்லது “மீசைக்காரனா” என்று வேண்டுமானால் யாராவது சொல்லலாம் என்பது அவனது அனுமானம்.

பெயர், பல் தவிர அவ்வப்போது சிலபல கஷ்டங்கள், குறைகள், அவஸ்தைகள் அவனுக்கு வரும். காலேஜ் படிக்கும்வரை அவன் பல பெண்களின் மோக வலையிலே மனதார விழுந்திருக்கிறான், அப்பெண்கள் அத்தகைய வலைகளை விரிக்காமலேயே. ஒரு தடவை ரொம்ப நேர்மையோடும், லக்ஷிய வேட்கையோடும் ஒரு பெண்ணிடம் “ஐ லவ் யூ” என்று சொல்லி அவள் “டோன்ட் பி ஸில்லி” என்று கூறிய மாத்திரத்தில் காதல் என்னும் மாயத்திரை அவனளவில் கழன்று விழுந்து விட்டது.

வேலையில் சேர்ந்து முதல் ஆறு மாதத் தற்காலிக கால அளவில் தினமும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டுதான் இருந்தான். அவனுக்கு வேலை நிரந்தரமாகி ரொம்ப நாள் பின்னரே அவன் பேங்க்கில் அனைவரையுமே ‘நிரந்தரம்’ பண்ணி விடுவார்கள் – கையாடல், ஏமாற்றுக் குற்றங்கள் இருந்தாலே ஒழிய – என்று அவனுக்குத் தெரிய வந்தது.

ஒரு கிராமத்தில் வேலை பார்த்துவிட்டு, சென்னைக்கு மாநிலத் தலைமை அலுவலகத்திலேயே மாற்றலாகி வந்த பிறகு வாழ்க்கை சுலபமாகவே இருந்தது.

ஒன்று

அவன் இருக்கை இருந்த இரண்டாவது மாடியிலேயே சுமார் நூறு பேர் இருந்தனர். இவன் செக்‌ஷனுக்குப் பக்கத்து செக்‌ஷனில் மதுரம் பட்டாபிராமன் என்று ஒரு அதிகாரி இருந்தாள். அந்தம்மாளுக்கு சுமார் முப்பத்தைந்து வயது இருக்கலாம். செக்கச் செவேல் என்று உயரமும் நளினமுமாக சுஷ்மிதா சென், லாரா தத்தா போல என்றே சொல்லிவிடலாம். ஆனால் இந்த வர்ணனை எல்லாம் அந்தம்மாள் முகத்தைப் பார்க்கும் வரையில்தான். கழுத்துக்குக் கீழ் பாதம் வரையிலும் அசாதாரண லாவண்யத்தோடு இருந்த அந்தம்மாளின் முகம் ஒரு சாதாரண உடலின் மேலேயே அவலட்சணமாக இருந்திருக்கும். இப்போ இரட்டிப்புக் குறை.

கோபால்சாமி முதலில் அந்த அலுவலகப் பெண்களைப் பற்றிய விஷயங்களைச் சேகரிக்கும் போது அந்தம்மாளை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. கல்யாணமாகாத தன் ஜாதிப் பெண்களை, மற்ற இளம் அழகிகளைப் பற்றிய எண்ணங்கள் தோன்றித் தோன்றி மறைகையில் அந்தம்மாள் இருக்கிற ஞாபகமே அவனுக்கு இல்லை.

ஒரு நாள் லிஃப்ட் வேலை செய்யாத போது அவள் பின்னாலேயே மாடி ஏறி வரும்போதுதான் அவனுக்கு அந்த விபரீத எண்ணம் “ஆஹா” வென்று தோன்றியது.

எந்த ஒரு தர்க்க ரீதியான காரணமும் இல்லாமலே அந்தம்மாளை அவன் கவனிக்க ஆரம்பித்தான். அதன் காரணமாகவே தனக்கு ஏதோ ஒரு அதிர்ஷ்டம் அடிக்கும் என்று ஸென்ஷுவலாக எதிர் பார்க்க ஆரம்பித்தான்.

வயது வித்யாசம், வேலை வித்யாசம், கல்யாணம் ஆன பெண்மணி போன்ற பகுத்தறிவின் பாற்பட்ட நினைவுகள் அவனுக்கு எழாமலில்லை. ஆனாலும் தான் ரொம்பப் பாதுகாப்பான இடத்திலிருந்து குறி பார்க்கிறோம் என்ற நிச்சயமும், அடிப்படையில் ஒரு இளைஞனான தனக்கு இருக்கும் அட்வான்டேஜ்களும், இது போன்ற சூட்சுமமான வாய்ப்பைக் கண்டு பிடித்த தன் திறனும் அவனை கர்வம் கொள்ள வைத்தன. மேலும் இது ஒரு போட்டி இல்லாத விளையாட்டு. அந்தம்மாளின் கவனிப்பு மட்டும் தனக்குக் கிடைத்து விட்டால்.. .. .. .. என்ற எதிர்பார்ப்பு அவனுக்கு இதில் ஒரு த்ரில்லைத் தந்தது.

கிட்டத் தட்ட ஒரு மாத காலமாகவே அவன் அவளைத் தன் இருக்கையில் இருந்தவாறே பார்த்து வந்தான். அந்தம்மாள் நிமிர்ந்து வலது புறம் லேசாகத் திரும்பினாலும் இவன் தெரிவான். இவன் நிதானமாகவே இருந்தான். வலியப் போய் பேசுவது போன்ற குழந்தைத் தனங்களில் அவனுக்கு நம்பிக்கையில்லை.

மூன்று நாட்களாக அந்தம்மாள் இவன் பக்கம் அடிக்கடி திரும்பினாள். இவன் தன்னை ஓர் ஆண் இயந்திரம் என்றும் அவளை ஒரு பெண் இயந்திரம் என்றும் நினைத்துக் கொண்டான். அவனுக்குத் தன்னைப்பற்றி தன் திட்டம் பற்றி புகைப்படலமாக ஒரு தீர்மானம் இருந்தது.

தலைக்கு அடிக்கடி ஷாம்பூ போட்டுக் கொள்வது, மீசையை அடிக்கடி செதுக்கிக் கொள்வது, எப்போதும் சட்டையை பேன்ட்டுக்குள் டக்-இன் செய்து கொள்வது என்று கடந்த ஒரு மாதமாகவே மிகவும் கவனமாக இருந்தான். மூன்று நாட்களாக நிச்சயமாக அவள் இவனைக் கவனிக்க ஆரம்பித்து விட்டாள்.

இன்றும் அவன் இருக்கைக்கு வந்து அமர்ந்ததும் அந்த செக்‌ஷன் பக்கம் பார்த்தான். அவள் இருக்கையில் இல்லை. பிறகு ஆபீஸ் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான். நண்பர்களோடு பேச்சு, காப்பி, பிஸ்கட் அலுவல் என்று இருந்தாலும் அடிக்கடி அவள் வந்து விட்டாளா என்று பார்த்துக் கொண்டிருந்தான். உணவு இடைவேளை வரை வரவே இல்லை. லீவ் போட்டிருப்பாள் என்று நினைத்தான். ஒரு பற்றற்ற, கடமையுணர்வு மட்டுமே உள்ள லக்ஷியவாதி நிலையில் அவன் இருந்ததால் அந்தம்மாள் லீவ் போட்டது அவனைக் கொஞ்சமும் பாதிக்கவேயில்லை.

லஞ்ச் முடிந்து மறுபடியும் வந்து இருக்கையில் அமர்ந்த போதும் அந்தம்மாள் வந்திருக்கவில்லை. வேலை நிறைய இருந்தது. மளமளவென்று பார்க்க ஆரம்பித்தான். மூன்றரை மணிவாக்கில் நிமிர்ந்தபோது பழக்க தோஷத்தில் அந்தப் பக்கம் பார்த்தான். அவள் வந்திருந்தாள். அவள் எதிரில் அந்த செக்ஷனைச் சேர்ந்த ராமலிங்கம் – அவன் பெயர்தான் தெரியும், பழக்கமில்லை – அமர்ந்திருந்தான்.

உடனே தலையைக் கையால் கோதிக் கொண்டு, கர்ச்சீப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டு, இழுத்து மூச்சு வாங்கி நெஞ்சைக் கூடிய மட்டும் அகட்டிக் கொண்டு, கால் மேல் கால் போட்டுக் கொண்டு அவன் அந்தம்மாளைப் பார்க்கத் துவங்கினான். முகத்தில் புன் சிரிப்பா இல்லையா என்ற பாதிப் புன்னகை தானாக வந்து ஒட்டிக் கொண்டது. அந்தம்மாள் வலது புறம் திரும்பி இவனைப் பார்த்தாள். இவனையே பார்த்தாள். கோபால்சாமிக்கு தான் மூன்று நாட்களாகக் கவனித்தது சரிதான் என்று நிச்சயமாயிற்று. அந்தம்மாள் திரும்பி ராமலிங்கத்திடம் ஏதோ பேசினாள். பிறகு மீண்டும் லேசாக வலது புறமாகத் திரும்பி இவனைப் பார்த்தாள். ஒரு தேர்ந்த வேட்டைக் காரனைப் போல் இவனும் நிதானம் இழக்காமல் அவளைக் கவனிக்கலானான். அந்தம்மாள் மீண்டும் திரும்பி ராமலிங்கத்திடம் ஏதோ சொன்னாள். அப்போதுதான் கோபால்சாமிக்குத் தான் தவறு செய்து வருகிறோமோ என்ற எச்சரிக்கை உணர்வு ஆரம்பித்தது. அந்தம்மாள் ராமலிங்கத்திடம் இந்த முறை பேசி வலதுபுறம் திரும்பி இவனைப் பார்க்கும்
அதே சமயத்தில், அவளெதிரில் கோபால்சாமிக்கு முதுகைக் காட்டிக் கொண்டு அமர்ந்திருந்த ராமலிங்கமும் கழுத்தை முடிந்தவரை திருப்பி இவன் புறம் பார்க்க ஆரம்பிக்க, அதற்கு முன் இவன் பார்வையை நேராக்கி கையிலிருந்த ஃபைலைப் பார்க்க ஆரம்பித்து விட்டான். திடீரென்று வரண்ட மண்ணில் ஆற்று வெள்ளம் இரண்டாள் உயரத்திற்கு வெகு சமீபத்தில் வந்து விட்ட மாதிரி இருந்தது. தான் செய்த அபத்தம் அவனுக்குப் புரிய ஆரம்பித்தது. ஆனால் இப்போ ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. வெறுமனே ஃபைலைப் பார்க்க வேண்டியது, இனி என்றும் அந்தம்மாள் பக்கம் திரும்பவே கூடாது என்று உடனடி தீர்மானம் போட்டுக் கொண்டும் விட்டான். தன்னைச் சூழ்ந்து விட்ட ஆபத்தை முழுவதுமாக உணர்ந்த அதே சமயம் தான் மிகவும் கண் மூடித்தனமாக, அநாகரிகமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது அவனுக்குத் தெளிவாயிற்று.

ஒரு வேளை அவள் ஏதாவது அஃபீஷியல் கம்ப்ளெய்ன்ட் கொடுத்தால்,, ,, .. நிச்சயம் கொடுக்க மாட்டாள். அவள் சொன்னால் யார் நம்புவார்கள். சொல்ல முடியாது. ஆனால் ஒன்று. தன்னைப் பொருத்தவரை அந்த எண்ணம் இனி இல்லை. வெளியாட்களைப் பொருத்தவரை இதுவரை இருந்ததும் இல்லை.

இரண்டு

ஐந்து மணி ஆக இரண்டு நிமிடம் இருக்கும் போதே கிளம்பி விட்டான். மாடியிலிருந்து இறங்கி கீழே வந்து ரோட்டில் நடக்கையில் ஒரு பிரச்னையும் வராது என்று அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்து விட்டது. ராமலிங்கம் தன்னைப் பற்றி என்ன நினைத்தால் என்ன, அந்தம்மாள் என்ன நினைத்தால் என்ன, தான் இனி தவறு செய்யக் கூடாது என்று தீர்மானமாக, வேகமாக, சுதந்திரமாக நாளைக் காலைவரை பிரச்னை நிச்சயமாக இல்லை என்ற பாதுகாப்புணர்வின் பின்னணியில் நடக்க ஆரம்பித்தான்.

வழக்கமாகப் போகும் பாதையில் போகாமல் பஸ் போகும் பெரிய சாலையில் போக ஆரம்பித்தான். அந்த சாலையில் ஒரு கல்லூரி இருந்தது. ஒரு பள்ளி இருந்தது. நிறைய கடைகள். முன்னெப்போதோ இருந்த ஜட்கா லாயம் போன்ற இருட்டுக் கொட்டகையும், அதைத் தாண்டி ஒரு ரிக்‌ஷா ஸ்டாண்டும் இருந்தன.

ரிக்‌ஷா ஸ்டாண்டில் இரண்டு ரிக்‌ஷாக்கள் தள்ளித் தள்ளி இருந்தன. சாதாரணமாக ஏழெட்டாவது இருக்கும். கோடியில் இருந்த ரிக்‌ஷாவில் ஒரு கிழவனும் அதற்கு முன்னால் இருந்த ரிக்ஷாவில் ஒரு இளைஞனும் இருந்தனர். கோபால்சாமி அந்த ரிக்‌ஷாக்களை அடைய இருபது அடி தூரத்தில் வரும்போதே அந்தப் பெண்ணைப் பார்த்தான். சுமார் பதினாலு வயதுச் சிறுமி. அந்த ரிக்‌ஷா ஸ்டாண்டைச் சேர்ந்தவள் என்பதை அவள் நிறமும், எண்ணை கூடிய தலையும், முகமும், வயதுக்கு மீறிய சேலையும் தெரிவித்தன. ஒரு சிறுமியின் அழகு அவளுக்கு இருந்ததாகவே கோபால்சாமிக்குத் தோன்றியது. அவள் முதல் ரிக்‌ஷாவில் இருந்த இளைஞனோடு ஏதோ வாயாடிக் கொண்டிருந்தாள். அவன் சிரித்தவாறே அவளை ‘டீஸ்’ செய்து கொண்டிருந்தான். கோபால்சாமி அவளையே பார்த்தவாறு அருகில் வந்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சி அவனது தற்காலிக நிம்மதி உணர்வைத் தூக்கி எறிந்து விட்டது. அந்தப் பெண் சவுக்கடி பட்டவள் போல் துடித்து வேதனையோடு “ஐயே !” என்று கத்தியவாறே முகத்தை மூடிக் கொண்டாள். கண்களைக் கையால் மூடியவாறே “ஐயே ! யப்பா இவனைப் பாரேன்” என்று நிராதரவாக முறையிட்டாள். அவள் அப்பன் – கோடி ரிக்ஷாவில் இருந்தவன் – திரும்பவேயில்லை. அந்த இளைஞன் சிரித்தவாறே எழுந்து மீண்டும் அவளருகில் சென்று “பாத்துக்கடி நல்லா. தெரியுதா நான் என்னான்னு” என்று அவள் அப்பனைப் பற்றியோ, ரோட்டில் வரும் கோபால்சாமி பற்றியோ, மற்றவர்கள் பற்றியோ கவலைப் படாமல் மீண்டும் அவளை அவமான உணர்வு கொள்ள வைக்கும் காரியத்தைச் செய்தான். அவள் அவனிடமிருந்து ஆறடி தள்ளி இருந்த போதிலும், கண்ணைத் திறக்காதவாறே இருந்த போதிலும் மீண்டும் சவுக்கால் அடி வாங்கின மாதிரி துள்ளி வேறு புறமாக ஓடியே போய் விட்டாள். அந்த இளைஞன் மெத்தனமாகச் சிரித்தவாறே ரிக்‌ஷாவில் போய் அமர்ந்து கொண்டான். அந்தக் கிழவன் இது எதையுமே லட்சியம் பண்ணவில்லை.

மூன்று

கோபால்சாமி வீட்டை அடைந்த போது நல்ல வெளிச்சம் இருந்தது. எந்த ஒரு தர்க்கத்துக்கும் நியதிக்கும் கட்டுப் படாத ஒரு அபத்த சுதந்திர உணர்வு, எது நடந்தாலும் பாதகமில்லை என்ற திமிர் போன்ற அலட்சியம் வந்திருந்தது. கண்ணை மூடிக் கொண்டு முழு வேகத்தில் ஓடுவது போன்ற அபாயகரமான தெளிவு வந்த உணர்வு. கிணற்றடியில் உல்லாசமாக சவரம் செய்து கொண்டான். மழுக் மழுக்கென்று நாலே இழுப்பில் மீசையைப் பூராவாகவும் வெட்டிச் சரித்து விட்டான்.

-o00o-

மேற்கூறிய இந்த மூன்று சம்பவங்களுக்கும் தொடர்பு உண்டு என்று வேறு யாராவது அவனிடம் தெரிவித்திருந்தால் அவன் சிரித்திருப்பான்.

- பெப்ரவரி 2010 

தொடர்புடைய சிறுகதைகள்
சுரேஷுக்குத் தூக்கம் வரவில்லை. விஜய் நாளை ஊரை விட்டே போகிறான். அவன் அப்பாவுக்கு மாற்றல் ஆகி விட்டது. ஆனால் தூக்கம் வராததற்கு அவனைப் பிரிவது காரணம் இல்லை. உண்மையில் சொல்லப் போனால் அவனுக்கு விஜயைப் பிடிக்காது. சுரேஷ் வீட்டின் மாடியில் விஜயின் மாமா ...
மேலும் கதையை படிக்க...
அருணாசலம் தன் முப்பது வருட உத்தியோக காலத்தில் ஒரு தடவை கூட பயண விடுமுறைச் சலுகையை உபயோகித்ததில்லை. இந்தத் தடவை விட்டால் போச்சு. ரிடையர் ஆவதற்கு முன், ‘இந்த சர்க்காருக்கு உழைத்து, உழைத்து ஓடானதற்கு என்னத்தைக் கண்டோம்’ என்று அடிக்கொருதரம் அலுத்துக் ...
மேலும் கதையை படிக்க...
வலுவான அடர்த்தியான கனமழை. மூன்று நாட்களாக விட்டுவிட்டும் இன்று காலையிலிருந்து ஓயாமலும் பெய்து கொண்டிருந்தது. திருவல்லிக்கேணி சமுத்திரக் கரையில் எண்பது வருட பழைய வீடு. மூன்று ஒண்டுக் குடித்தனங்கள். ஓவ்வொரு குடித்தனத்துக்கும் இரண்டே அறை. பொதுவான முன் முற்றம். சாக்கடை. கனிந்த ...
மேலும் கதையை படிக்க...
அந்த அறை ரொம்பப் பெரியதுமில்லை; மிகவும் சிறியதுமில்லை. பனிரெண்டுக்கு பனிரெண்டு இருக்கலாம். அதன் ஒரு சுவரினருகில் போடப் பட்டிருந்த இரும்புக் கட்டிலில் மெலிந்து போன மெத்தையின் மேல் நாராயணன் படுத்திருந்தான். நல்ல ஜுரம். மத்தியான நேரம். மதறாஸ் வெய்யில். ஃபேன் உஷ்ணக் ...
மேலும் கதையை படிக்க...
வாத்தியார் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்ததும் மனசு விச்ராந்தியாக இருப்பதை ஸ்ரீதரன் உணர்ந்தான். மணி ஏழு. மாதம் பிறக்கும்போதும், அமாவாசையன்றும் அவன் அதிகாலையில் எழுந்திருக்கிறான். குளிக்கிறான். நெற்றிக்கு இட்டுக் கொள்கிறான். அம்மா கொடுக்கும் எள், வெற்றிலை பாக்குப் பொட்டலத்தோடு கிளம்பி இதுபோல் வாத்தியார் ...
மேலும் கதையை படிக்க...
வரம்
இராமேஸ்வரமும், சனீஸ்வரனும்
மழை
காலம்
தர்ப்பணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)