விதை தேடிய மரம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 11, 2024
பார்வையிட்டோர்: 1,266 
 

சிறுமி லிவிக்கு அன்று உறக்கம் வர மறுத்தது. ‘ஒரு வேளை புதிய இடமென்பதால் இவ்வாறு உறக்கம் வர மறுக்கிறதோ…?’ என நினைத்துக்கொண்டாள். அன்று பகல் முழுவதும் ஓய்வின்றி வீட்டு வேலை செய்திருந்ததால் ஏற்பட்ட களைப்பின் காரணமாக உடல் சோர்வுற பின் இரவில் உறங்கிப்போனாள்.

லிவி வறுமையின் எல்லையைத்தொட்டிருந்த புறம்போக்கு நிலத்தில் போடப்பட்டிருந்த ஒரு குடிசையில் வாழும் பரம ஏழையின் பத்து வயது மகள். தந்தை நோய்வாய்பட்டு இறந்து போனதாலும், தாயாருக்கு ஒரு கைக்குழந்தை இருப்பதால் தாயால் வேலைக்கு செல்ல இயலாது என்பதாலும் அந்த ஊரின் வசதி மிகுந்த ஒரு அரண்மனை போன்ற வீட்டில் எடுபிடி வேலைக்காக பள்ளிக்கூடம் போவதை விடுத்து சிறிய மாத சம்பளத்துக்காகவும், பசி போக்கும் உணவுக்காகவும் அவளது தாயின் கட்டாயத்தால் அடிமையாக, ‘வெளியே செல்லக்கூடாது, வீட்டில் நடப்பதை வெளியில் சொல்லக்கூடாது’ எனும் கட்டுப்பாட்டுடன் வீட்டு வேலை செய்ய வேலையில் சேர்க்கப்பட்டிருந்தாள்.

அவளது தாயுடன் நேரில் பேசினால் வீட்டு ஞாபகம் வந்து விடுமென்பதால் மாதம் ஒரு முறை ஒரு நிமிடம் போனில் மட்டும் பேச அனுமதிப்பார்கள். அதே வீட்டில் உள் அறையில் உள்ள போனில் லிவியும், வெளியில் உள்ள திண்ணையில் வைக்கப்பட்டிருக்கும் போனிலிருந்து தாய் ராணியும் ஒருவருக்கொருவர் பத்தடி தூரத்தில் இருந்தும் பார்க்காமல்  பேசிக்கொள்ளும் கட்டுப்பாடுகள். அதுவும் மாதம் ஒரு முறை மகளின் சம்பளம் வாங்க வரும் போது மட்டுமே பேச வாய்ப்பு கிடைக்கும். 

இதில் லிவியின் தாயாருக்கும் உடன் பாடு இல்லையென்றாலும், வருமானத்துக்கு வேறு வழி  இல்லாததால் மனக்கவலையுடன் ஒத்துக்கொண்டாள். வருடம் ஒரு முறை தைப்பொங்கல் நாளில் மட்டும் தாயும், மகளும் முதலாளியின் தோட்டத்து வீட்டில்  சந்தித்து பேச அனுமதி கிடைக்கும்.

வேலை பார்க்கும் வீட்டில் சமைக்க ஒரு பெண்ணும், வீட்டைக்கூட்டித்துடைக்க ஒரு பெண்ணும் வந்து போன பின்பு தான் சிறுமி லிவியின் அறைக்கதவையே திறந்து விடுவர். மற்றவர்களைச்சந்தித்தால் வெளியுலகம் தெரிந்து விடும், வேலையை விட்டு போக நேரும் என்பதாலேயே இந்தக்கட்டுப்பாடுகள்.

லிபிக்கு அந்த வீட்டில் எடு பிடி வேலை. சொன்னதை மறுக்காமல் செய்ய வேண்டும். உணவு பரிமாறவும், கேட்டதை உடனே எடுத்துக்கொடுக்கவும், கைகால்களை அமுக்கி விடவுமான வேலைகளே அதிகம். 

ஒரே நேரத்தில் யாரும் சாப்பிட வருவதில்லை. ஒவ்வொருவராக சாப்பிடும் போது மதியம் ஆகி விடும். மீண்டும் முதலில் இருந்து மதிய உணவு. இப்படியே இரவு வரை தொடரும். இரவு எட்டு மணிக்கு வரும் சமையல் செய்யும் பெண் விடிவதற்குள் மூன்று வேளைக்குமான சமையலை முடித்து விட்டு சென்று விடுவாள். எட்டு மணிக்கு லிவியை அவளது அறையில் விட்டு வெளியில் பூட்டி விடுவார்கள். அந்தக்குடும்பத்தினரின் பழக்க வழக்கங்களே மிகவும் வித்தியாசமாக இருந்தது.  வீட்டிலிருக்கும் எழுபது வயது முதலாளி, அவரது மனைவி, திருமணமாகாத இரண்டு மகன்கள் அனைவரும் மாடியிலிருக்கும் அறைக்கு இரவு படுக்கச்சென்று விடுவார்கள்.

லிவியிடம் ‘பசிக்கிறதா?’ என யாரும் கேட்க மாட்டார்கள். அனைவரும் சாப்பிட்ட பின் மீதம் இருப்பதை சாப்பிட வேண்டும் என்பது தான் அங்குள்ள எழுதாத சட்டம். சில நாட்கள் மீதம் ஆகாது. பல நாட்கள் ஆகும். சில சமயம் ஒரு வேளை மீதமாகி மறு வேளை மீதமாகாத போது முன்பு மீதமானதை சாப்பிட்டுக்கொள்வாள்.

அவர்கள் சாப்பிடும் போது தனக்கிருக்கும் பசியை அடக்கிக்கொள்வதில் மிகவும் சிரமப்படுவாள். இரவு வேளையின் போது உணவு தனக்கு கிடைக்காத நிலையில் தண்ணீரைக்குடித்து விட்டுப்படுப்பதால் காலையில் பசி உயிரைப்பிடுங்குவது போலிருக்கும். அதை விட பெரிய வேதனை இருக்காது. மீண்டும் தண்ணீரையே குடித்துக்கொள்வாள். கடைசியாக சாப்பிடுபவர் கூட ‘உனக்கு இருக்கிறதா?’ என கேட்க மாட்டார்கள். பதிலாக அவர்களுக்கு போதவில்லை என அவளை முறைப்பார்கள். அவளும் மனசாட்சிப்படியும், வீட்டுச்சட்டத்தை மீறியும் அவர்களுக்கு முன் இதுவரை சாப்பிட ஆசைப்பட்டதில்லை. சாப்பிட்டதுமில்லை. 

ஒரு நாள் அந்த வீட்டின் கடைசி மகன் முரண் சாப்பிட்ட போது உணவு போதவில்லை என்றதும் ‘தனக்கான உணவை லிவி உண்டு விட்டாளோ?’ எனும் சந்தேகத்தில் அவளை அடித்து விட்டதோடு ‘உண்டதை வாந்தி எடு’ என மிரட்டினான். ‘உண்டிருந்தால் தானே வெளியே வரும்?’ எனும் அடிப்படையறிவு கூட இல்லாமல்  பிஞ்சுக்குழந்தையை போட்டிருக்கும் மேலாடை கிழிய அடித்தான். அவள் அடியால் ஏற்பட்ட வலியாலும், பசியாலும் மயங்கிய பின்பே விட்டுச்சென்றது அந்த கொடிய மிருகம்.

தனது தாயை ஒரு முறை சந்தித்த போது அவள் வேலை செய்யும் வீட்டில் கீழே ஒரு அறை இருப்பதாகவும், அந்த அறை எப்போதும் பூட்டப்பட்டிருப்பதாகவும், ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே திறந்து அங்கிருக்கும் ஒருவருக்கு உணவு கொடுப்பதாகவும், தான் ஒரு முறை உணவு கொடுக்கப்போன போது அவரது நாக்கு அறுக்கப்பட்டிருப்பதால் பேச முடியவில்லை, எழுதவும் முடியாதவாறு விரல்களும் வெட்டப்பட்டிருந்தன. ஆனால் அவருக்கு வலது கையில் ஆறு விரல்களை வெட்டிய தழும்பும், முகத்தின் வலது பக்கம் ஒரு வெட்டுத்தழும்பும் இருந்ததாக  லிவி கூறிய போது அதிர்ச்சியடைந்த அவளது தாய் ராணி சோகமான முகத்துடன் மகளை அனுப்பி வைத்தாள்.

லிவிக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ஒரு சந்தேகம். குழந்தை தம்பியின் ஜாடை, தந்தை மாதிரியே இருப்பது போல் தனது முகம் இல்லாததை நினைத்து வருந்தி இருக்கிறாள்.

ஆனால் தம்பியை விட, ஏன் பெற்றோரை விட தான் மட்டும் செல்வந்தர் குடும்பத்து குழந்தை போல் இருப்பதை நினைத்து மகிழ்ந்தும் இருக்கிறாள்.

அடுத்த முறை பாதாள அறையிலிருப்பவருக்கு உணவு கொடுக்கப்போனால் கொஞ்ச நேரம் இருந்து விட்டு வர வேண்டும் என யோசித்தாள்.

இந்த முறை உணவை சற்று அதிகமாகவே எடுத்துச்சென்றவளை அன்பாகப்பார்த்தவன்

பக்கத்தில் அழைத்து தனது மடியில் சிறிது நேரம் அமர வைத்து மகிழ்ந்தான். தாடி வளர்த்து ஒரு அழுக்குத்துணியுடன் பைத்தியகாரனைப்போலத்தெரிந்தான். ஒரு வேளை உணவு கொடுத்தாலும் குறைவாகக்கொடுக்கும் நிலையில் தன் உணவையும் சேர்த்து அன்று எடுத்துச்சென்றிருந்தாள். ஒரு கை மற்றும் ஒரு காலுக்கும் விலங்கு போடப்பட்டிருந்தது. விலங்கு மனம் கொண்டவர்கள் தான் இவ்வாறு செய்வார்கள். அப்படி என்ன தவறு செய்து விட்டான்?

சுற்றிலும் உள்ள சுவற்றில் நகங்களின் மூலம் பல கிறுக்கல்கள். அதில் அதிக இடங்களில்  தெளிவில்லாமல் கால் விரல்கள் மூலமாக ரவி என எழுதியிருப்பது மட்டும் தெரிந்தது.

மறுமுறை தாயை சந்தித்த போது அவனது பெயர் ரவியாக இருக்கலாம் என லிவி கூறியதைக்கேட்ட அவளது தாய் திடீரென கதறி அழுதாள்,  தேம்பினாள். ‘அவரு தான் உன்னோட அப்பா…’ என சொன்னதைக்கேட்டு மயங்கிச்சரிந்த லிவிக்கு முகத்தில் தண்ணீர் தெளித்ததும் நினைவு வந்ததும் அவளும் அழுதாள்.

அவள் சந்தேகப்பட்டது போல் நடந்து விட்டது. ‘இறந்த தந்தையைப்போல் தான் இல்லை’ என நினைத்து சந்தேகப்பட்டது மட்டுமில்லை ‘வேலைக்காரியான தன்னை, அவர்களுக்கு பணிவிடை செய்யும் தன்னை ஒரு எதிரியைப்போல ஏன் நினைக்கிறார்கள்?’ என சந்தேகப்பட்டதும் தான்.

ஆனால் இந்த வேலைக்காரச்சிறுமி உள்ளிருக்கும் கட்டிப்போடப்பட்டிருக்கும் மனிதருடைய மகள் என அவர்கள் அறிந்திருக்கவில்லை. 

மறுமுறை தாயைச்சந்தித்தபோது தாய் தன்னிடம் நடந்ததைச்சொல்லச்சொல்ல அதிர்ச்சியடைந்தாள் லிவி.

“அவரு பெரிய பணக்காரர் வீட்டு பையன்னு எனக்குத்தெரியாது. ஊட்டில இருக்கிற அவரோட எஸ்டேட்டுக்கு மாசத்துக்கு ஒரு தடவ வருவாரு. என்னோட அம்மாவுக்கு ஒடம்புக்கு சரியில்லாததால நான் டீத்தளை பொறிக்க போன போது என்னப்பார்த்தவரு என்னை மட்டும் கெஸ்ட்ஹவுஸ் வேலைக்கு வரச்சொன்னாரு. நானும் போயிருந்தேன். அப்போ என்னை ரொம்ப புடிச்சிருக்கிறதா சொன்னவரு அடுத்த நாள் மாறு வேசத்துல எங்க வீட்டுக்கே வந்துட்டாரு.  என்னோட அம்மாகிட்ட பொண்ணு கேட்டதால சின்ன முதலாளி சொன்னா தட்ட முடியாதுன்னு அம்மா சரின்னதும் வீட்லயே என்னைக்கல்யாணம் பண்ணிகிட்டாரு. ஒரு மாசம் ஒன்னா வாழ்ந்தோம். அப்புறம் அவரோட வீட்டுக்கு போயி விசயத்த சொல்ல, அவங்க எங்களை வந்து அடியாள் வெச்சு மிரட்டி எஸ்டேட்ல இருந்தே வெளியே போக வெச்சுட்டாங்க. அதுக்கப்புறம் அவரு செத்துப்போனதா எஸ்டேட்ல இருந்தவரு சொன்னதும் நானும் செத்துப்போலாம்னு விசத்தக்குடிக்க, ஆஸ்பத்தில அம்மா சேர்த்துட்டாங்க. அங்க என்ன காப்பாத்துன டாக்டர் நான் கெற்பமா இருக்கறதா சொன்னப்ப கதறி அழுதேன். அம்மா கெற்பத்த கலைக்க விரும்பாம வேற வழியில்லாம ரெண்டாந்தாரமா என்னோட மாமாமாவுக்கே என்னைக்கட்டிக்கொடுத்திட்டாங்க. நாங்களும் வேலை தேடி கோயமுத்தூருக்கு வந்து பொறம்போக்கு நெலத்துல குடிசையப்போட்டு வாழ ஆரம்பிச்சோம். உன்னை வேலைக்கு சேத்தரப்போ அவரோட வீடு இதுன்னு எனக்குத்தெரியாது. அந்தக்கெற்பக்குழந்தை தான் நீயி. அப்புறம் என் மாமாவுக்கு பொறந்தவன் தான் உன் தம்பி” எனக்கூறியள் கண்ணீர் சிந்தினாள்.

ரவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போக மருத்துவர் வரவழைக்கப்பட்டார். மருத்துவரின் உதவிக்கு லிவி சென்றாள். மருத்துவரிடம் நடந்த விசயங்களை ஒன்று விடாமல் சொன்னாள். ‘இவர் இறந்து போனால் யாருக்கும் தெரியாமல் புதைத்து விடுவார்கள். ஏனென்றால் ஏற்கனவே ஒரு அனாதைப்பிணத்தைக்காட்டி இவர் இறந்து போனதாகக்கூறிவிட்டார்கள்’என அவள் கூறியதைக்கேட்ட மருத்துவர் கண் கலங்கிய படி நீண்ட யோசனைக்குப்பின் மேலே வந்து ரவியின் அண்ணணிடம் பேசினார்.

“ரவிக்கு நினைவில்லை. இன்னும் இரண்டு நாட்களுக்குள் இறந்து விடுவார். மருத்துவக்கல்லூரிக்கு ஒரு பாடி தேவைப்படுகிறது” என்று மருத்துவர் கூறிய மறு நொடி “இவனை நாங்களாகக்கொன்னா பாவம் புடிச்சுக்கும். தானா சாகட்டும்னு இருந்தோம்.  நல்ல வேளை கடவுள் உங்களை அனுப்பி வெச்சுட்டார். இன்னைக்கு ராத்திரிக்கே நீங்க சொல்லற இடத்துக்கு நாங்க அனுப்பி வெச்சுடறோம்” என கூறியதும், “சரி” என சம்மதித்த மருத்துவரின் பேச்சைக்கேட்டு லிவி மகிழ்ந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *