விதை

 

நாலரை மணிக்கு கடைசி மணி அடித்தார்கள் . முத்துசாமி வேக வேகமாக புத்தகங்களை பைக்குள் திணித்துக் கொண்டு வெளியே வந்தான். வழக்கமாகவே பள்ளி முடிந்தவுடன் அடிக்கப்படும் கடைசி மணி அவனுக்கு சந்தோஷம் கொடுக்கும் . அன்று வழக்கத்தை விட அதிக சந்தோஷமாக இருந்தது . பள்ளியின் தேசிய சேவை இயக்கத்தில் அவன் உறுப்பினன் . ஒவ்வொரு வாரமும் ஐந்து பேர்களைத் தேர்ந்தெடுத்து , நகரத்தின் ஒரு பகுதியில் உள்ள டிராபிக் போலீஸ்காரரோடு நிற்க வைத்து , போக்குவரத்து விதிகளையும் , போக்குவரத்தைக் கட்டுப் படுத்தும் முறைகளையும் கற்றுக் கொடுப்பது இயக்கத்தின் செயல்களில் ஒன்றாகும். அந்த வாரம் முத்துசாமியும் ஒருவன் .

வகுப்பை விட்டு வெளியே வந்தவன் , பைக்குள் இருந்த பாட்ஜை எடுத்து மாட்டிக் கொண்டான் . அவனுக்கு ஒதுக்கப் பட்டிருந்த இடம் பக்கத்தில்தான் . பள்ளியில் இருந்து பத்து நிமிட நடைதான் . ஐந்து மணிக்குதான் அங்கு இருக்க வேண்டும் . முத்துசாமி நிதானமாக நடந்தான். மனம் ஒருவித உற்சாகத்தில் திளைத்திருந்தது .

சாலைகளில் அங்கங்கே நின்று , போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் போலீஸ்காரர்களை அவன் எப்போதுமே ஒருவித ஆச்சரியத்தோடு பார்ப்பான். அவர்களது கை அசைவிற்கு பஸ்களும் , கார்களும் , லாரிகளும் நிற்பதும் , போவதும் அவனுக்கு பிரமிப்பை உண்டாக்கும் .

தானும் அதைப் போலவே எல்லா வாகனங்களையும் கட்டுப் படுத்தப் போகிறோம் என்ற எண்ணம் அவன் மனதினுள் பிரமாண்டமான சந்தோஷத்தை உருவாக்கியிருந்தது .

பதினைந்து நிமிட நடையில் அவன் அந்த இடத்தை அடைந்து விட்டான் . அது நான்கு சாலைகள் இணையும் இடம் . நடுவில் சற்று உயரமாக இருந்த வட்ட வடிவமான மேடை . அதன் மீது ஏற சின்ன இரும்பு ஏணி . நடுவில் பெரிய இரும்புக் குடை .

நகரத்தின் அரிமா சங்கம் ஏற்படுத்திக் கொடுத்த அமைப்பு அது . அவ்வப்போது சுத்தம் செய்து வர்ணம் அடித்து பராமரித்து வந்ததால் பளிச்சென்று இருந்தது .

மேடையின் மேல் அந்த போலீஸ்காரர் நின்று கொண்டிருந்தார் . தெற்குப் புறச் சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி வைத்து , மற்ற வாகனங்களைப் போக விட்டுக் கொண்டிருந்தார் .

வாகனப் போக்குவரத்து அதிகமாக இருந்ததால் , நடைபாதையிலேயே நின்றான் முத்துசாமி . சிறிது நேரத்தில் சாலை ஓய்ந்து விட்டது . வேகமாக சாலையைக் கடந்து மேடையின் அருகில் போய் நின்றான் .

“ என்ன தம்பி ? “ போலீஸ்காரரின் குரல் கரகரவென்றிருந்தது .

அவன் பாட்ஜைக் காண்பித்தான் .

“ ஓஹோ , நீதானா ! வா , வா . ஏணியிலே ஏறி மேல வா . “

அவன் ஏறி மேலே வந்தான் . பையை ஓரமாக வைத்தான் . அதற்குள் இரண்டு புறமும் இருந்து வாகனங்கள் நிறைய வர , போலீஸ்காரர் தன் கையைக் காட்டி போக்குவரத்தை சீராக்க ஆரம்பித்தார்.

இன்னும் சிறிது நேரத்தில் தானும் அதைப் போலச் செய்யப் போகிறோம் என்ற எண்ணம் பிரமிப்பை ஏற்படுத்த , நின்று கொண்டிருந்தான் முத்துசாமி . அந்த இடத்தில் இருந்து சாலைகளையும் , அவற்றில் ஓடும் வாகனங்களையும் பார்ப்பது ஆனந்தமான அனுபவமாக இருந்தது .

“ தம்பி பேரென்ன ? “

“ முத்துசாமி . நல்லசாமி மேல்நிலைப் பள்ளியில ஏழாவது படிக்கிறேன் . “

“ சந்தோஷம் . இன்னும் கொஞ்ச நேரத்தில் டிராபிக் ஹெவியாயிடும் . நான் செய்யற மாதிரியெல்லாம் செய்யணும் . நான் அப்பப்ப சொல்ற விஷயங்களை எல்லாம் கவனமாக கேட்டுக்கணும் . சரியா ? “

வாகனங்கள் அவ்வளவாக இல்லாதபோது போலீஸ்காரர் சாலை விதிகளை அவனுக்கு கற்றுக் கொடுத்தார் . சாலையில் வாகனங்கள் எந்தப் பக்கமாக போக வேண்டும் , எப்படித் திரும்ப வேண்டும் , எப்போது நின்று போக வேண்டும் என்று கொஞ்சம் கொஞ்சமாக சொல்லிக் கொடுத்தார் .

அவ்வப்போது சந்தேகங்கள் வந்தபோது அவன் கேட்ட கேள்விகளுக்கு விரிவாக பதில் கொடுத்தார் . அவன் புரிந்து கொண்டிருக்கிறானா என்று பார்க்க , அவ்வப்போது கேள்விகள் கேட்டார் . அவன் சரியாக பதில் சொன்னதைப் பாராட்டினார் .

இடையிடையே அவர் கைகளை வெவ்வேறு விதமாக ஆட்டி அசைக்கும் போதெல்லாம் , தானும் அதைப் போலவே செய்தான் .

போலீஸ்காரர் சொன்னதைப் போலவே சிறிது நேரத்தில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து விட்டது . அலுவலகங்கள் முடியும் நேரமாதலால் பஸ்களும் , கார்களும் , ஸ்கூட்டர்களும் நான்கு புறங்களில் இருந்தும் விரைந்தன . போலீஸ்காரர் பேசுவதை நிறுத்தி விட்டு சுறுசுறுப்பானார் . அவனும் அவர் செய்வதைப் போலவே செய்து கொண்டிருந்தான் .

போக்குவரத்து சற்று குறைந்த போது , அவர் கையைக் காட்டுவதைக் கவனியாமல் கோட்டைக் கடந்து ஒரு மோட்டார் சைக்கிள் வந்து விட்டது . போலீஸ்காரர் சட்டென்று விஸிலை வாயில் வைத்து ஒலியெழுப்பியதும் , தன் தவறையுணர்ந்து , மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டார் அந்த மனிதர். கையைக் காட்டி மேடையருகில் அழைக்கப்பட்டதும் மோட்டார் சைக்கிளை உருட்டியவாறே மேடையருகில் வந்து நின்றார் . போலீஸ்காரர் அவர் பெயர் , முகவரி எல்லாம் கேட்டு நோட்டில் குறித்துக் கொண்டார் .

“ தெரியாம வந்துட்டேன் சார் . கவனிக்கலே . மன்னிச்சு விட்ருங்க சார் “ அந்த மனிதர் மெல்லிய குரலில் கேட்டார் .

“ எப்படிய்யா விட முடியும் ? இந்தா , இதில ஒரு கையெழுத்துப் போடு . சம்மன் வரும் . கோர்ட்டில வந்து ஃபைன் கட்டிட்டுப் போ . “

அந்த மனிதர் கையெழுத்துப் போட்டு விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஏறிப் போய் விட்டார் .

“ எப்படி கேஸ் புக் பண்றதுன்னு பார்த்துட்டியா ? அந்த ஆளு நிற்காமப் போயிருந்தான்னா வண்டி நம்பரைக் குறிச்சுக்கிட்டு கேஸ் புக் பண்ணிடலாம் .“

முத்துசாமியின் மனதில் வருங்காலம் பற்றிய கற்பனைகள் நிறைய உண்டு . டாக்டராக வேண்டும் , வாத்தியாராக வேண்டும் , வக்கீலாக வேண்டும் … புதிதாக ஒரு ஆசையும் சேர்ந்து கொண்டது . டிராபிக் போலீஸாக வேண்டும் .

அவரது கையசைவுகளினால் எவ்வளவு விபத்துகள் தவிர்க்கப் படுகின்றன ! அது ஒரு பெரிய சமூக சேவை என்று நினைத்துக் கொண்டான் .

ஆறரை மணிக்கு போக்குவரத்து குறைய ஆரம்பித்து விட்டது .

“ சரி தம்பி , இன்னைக்குப் போதும் . இருட்டிடும் . நீ கெளம்பு ” என்றார் போலீஸ்காரர் .

முத்துசாமிக்கு மனம் கஷ்டமாக இருந்தது . அங்கேயே நின்று கொண்டு இருக்க வேண்டும் போலிருந்தது . மனமில்லாமல் பாட்ஜைக் கழற்றினான் .

“ கெட்டிக்காரனா இருக்கே . சட்னு புரிஞ்சுக்குறே . நாளைக்கும் வந்துடு “ அவரது பாராட்டுகள் உற்சாகத்தை அதிகப் படுத்தின .ஏணி வழியாக இறங்கத் தொடங்கினான் .

அப்போதுதான் அது நிகழ்ந்தது . கிழக்குப் புறச் சாலையில் வந்த வெள்ளை நிறக் கார் ஒன்று சட்டென்று வலது கைப்புறம் திரும்பி வடபுறச் சாலையில் சென்றது .

பார்த்த மாத்திரத்திலேயே அந்தக் கார் சாலை விதிகளை மீறி விட்டது புரிந்தது . கிழக்குப்புறச் சாலையில் இருந்து வடபுறச் சாலைக்கு வர வேண்டுமானால் மேடையைச் சுற்றி வந்து மீண்டும் வடபுறச் சாலையின் இடது கைப் பக்கமாகத்தான் போயிருக்க வேண்டும் .

போலீஸ்காரர் வண்டியை நிறுத்துவார் என்ற எதிர்பார்ப்போடு நின்று விட்டான் முத்துசாமி . ஆனால் போலீஸ்காரர் விஸில் அடிக்கவில்லை . அவரும் அதைப் பார்த்தார் . அப்புறம் ஏன் நிறுத்தவில்லை ?

மீண்டும் மேடைக்கு ஏறினான் .

“ ஸார் , அந்தக் கார் சாலை விதிகளை மீறிப் போச்சே , அப்புறம் ஏன் நிறுத்தலை சார் ? நான் நம்பரை நோட் பண்ணிட்டேன் . “

போலீஸ்காரர் லேசாகச் சிரித்தார் .

“ அது யார் கார்னு தம்பிக்குத் தெரியாதா ? நம்ம லோக்கல் எம்.எல். ஏ. காரு . அதை புக் பண்ணா அவரு மேலதிகாரிங்க கிட்டச் சொல்லி என்னை ஒரு வழி பண்ணிருவாரு . எதுக்கு வம்பு ? “ மிக நிதானமாகச் சொன்னார் .

“ சட்டம்னா எல்லோருக்கும் ஒண்ணுதானே சார் ? “ அவன் குரலில் கோபம் தெரிந்தது .

“ அதெல்லாம் உனக்கு இப்ப புரியாது . சரி , நீ கெளம்பு . இருட்டிடும் . “

அவன் கீழே இறங்கினான் . போலீஸ்காரரைப் பற்றியிருந்த நல்ல எண்ணங்களும் இறங்கி விட்டன .

போலீஸ்காரர் நடந்து கொண்ட விதம் அவனுக்குப் புரியவில்லை ; பிடிக்கவும் இல்லை .நாளைக்கு வரக் கூடாது என்று முடிவெடுத்தவாறே நடக்கத் தொடங்கினான் .

விதிகளையும் , கட்டுப்பாடுகளையும் கற்றுக் கொள்ள வந்த அந்த இளைய தலைமுறைக்கு , சட்டங்களை உருவாக்குபவர்களே அவற்றை உடைத்துக் கொண்டிருக்கும் நிலைமையையும் , அதனைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கும் ஒருவித கையாலாகாத்தனத்தையும் கற்றுக் கொடுத்து விட்டு தன் கடமையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் அந்த போலீஸ்காரர் .

நாட்டின் வளர்ச்சியையே பாதித்துக் கொண்டிருக்கும் ஒருவித மனோபாவத்தின் விதை அந்த இளம் நெஞ்சில் ஊன்றப் பட்டு விட்டதை உணரும் பக்குவம் அவருக்குக் கிடையாது .

விதைக்கப் பட்ட விதை முளைத்து அதற்குரிய விஷ விருட்சமாக வளரப் போகின்றதா , அல்லது அந்த விதை அழுகி அழிந்து போய் , வேறு நல்ல விதை ஊன்றப் பட்டு அழகிய மரமாக வளரப் போகின்றதா என்ற கேள்விக்கு காலம் மட்டுமே பதில் சொல்ல முடியும் .

- பாக்யா வார இதழ் . அக்டோபர் 19 – 25 , 1990ல் வெளியானது 

தொடர்புடைய சிறுகதைகள்
“ அவனுக்கு என்ன வயசாகுது ? “ “ இருபத்தஞ்சு இருக்கும் . கல்யாணம் ஆகலே . அலையற வயசு . அந்த டாக்டருக்கும் மானமில்லாமப் போச்சு . அவனே அந்தப் பொண்ணை மாடிக்கு அனுப்பிவைப்பான் போல இருக்கு . “ “ டெளரி ...
மேலும் கதையை படிக்க...
ஒரு உஷ்ணமான ஆகஸ்ட் மாலை . நகரத்தை விட்டு அதிகமாக விலகிச் செல்லாமல் ஆனால் நகரத்தின் இரைச்சல்களில் இருந்து விடுபட்டு நிற்கும் அந்த டெர்மினஸில் ஒரு ஷெல்ட்டரின் கீழ் நான் நின்று கொண்டிருக்கிறேன் . பஸ்ஸிற்காக நின்று கொண்டிருக்கிறேன் என்ற வார்த்தைகளை என்னால் ...
மேலும் கதையை படிக்க...
கடைவீதியில் கூட்டமேயில்லை . பின்னால் வந்து கொண்டிருந்தவன் செயல் திலகாவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது . திரும்பிப் பார்த்தாள் . அவன் பத்தடி தள்ளி ஒன்றுமே தெரியாதவன் போல வந்து கொண்டிருந்தான் . ஐந்தாறு அடிதான் நடந்திருப்பாள் . மீண்டும் சில்மிஷத்தை ஆரம்பித்துவிட்டான் . ...
மேலும் கதையை படிக்க...
‘கட்டக் ...கடக்...கட்டக்...கடக்...’ கலவை மெஷின் சீராக ஒடிக்கொண்டிருந்தது. குடம் கவிழ்ந்து கலவை பொலபொலவென்று தரையில் கொட்டியது. “முனுசாமி , ஜல்தியா அள்ளிவிடுப்பா . வானம் மூடுது . மழை வந்தாலும் வரும் . “ பொன்னுசாமி மேஸ்திரி குரல் பின்னால் கேட்டது. முனுசாமி குனிந்து கலவையை ...
மேலும் கதையை படிக்க...
பூவரச மரத்து நிழல் இதமாக இருந்தது . முத்தையா பனியனுக்கு மேல் போட்டிருந்த துண்டை உதறி முகத்தைத் துடைத்துக் கொண்டான் . களத்து மேட்டு மூலையில் பூவரச மரத்தின் அடியில் இருந்த திண்டின் மீது துண்டை விரித்து உட்கார்ந்தான் . “என்ன முத்தையா ! ...
மேலும் கதையை படிக்க...
“ கொஞ்சம் இருண்ணே . இன்னும் ஒரு டிக்கெட் வரலை . ரிசர்வ் பண்ணது . அஞ்சு நிமிஷம் இருக்கில்ல . பார்த்துட்டுப் புறப்படுவோம் . “ என்றார் நடத்துனர் . நடத்துனர் அனுமதித்த ஐந்து நிமிடம் முடிந்ததும் ஓட்டுனர் வண்டியை பின்னால் ...
மேலும் கதையை படிக்க...
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீது ஏறி அங்கு தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான் . பின்னர் கீழே இறங்கி அதனைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கி அவன் செல்கையில் அதனுள் இருந்த வேதாளம் எள்ளி ...
மேலும் கதையை படிக்க...
நகரத்திற்கே உரித்தான பரபரப்பு . மாலைச் சூரியனின் மரண அவஸ்தை . நான் போக வேண்டிய இடத்திற்கு பஸ் இன்னும் ஒருமணி நேரம் கழித்துத்தான் . என்னைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு நாளும் இப்படி பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கும் மாலை நேரம்தான் வாழ்வின் ...
மேலும் கதையை படிக்க...
தொடர்ந்து படிகளில் ஏறி…
ஒரு மாலை நேரத்தில் என் மனம் அழுகின்றது
வேண்டாம் விளையாடாதே…
குடை
பாட்டியின் பாம்படம்
இந்தத் தடவையாவது…
வேதாளம் சொன்ன தேர்தல் கதை
பார்வை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)