விதி

 

காலையில் சீக்கிரமே எழுந்திருக்கணும். பிராஜெக்ட் மேனேஜர் சுந்தரம் சார் நேற்றே சொல்லியிருந்தார். இது அதி முக்கியமான கிளையண்ட், கரெக்ட்டா சொன்ன தேதியில் ரிப்போர்ட் கொடுத்து விடணும். வரும் 15 ஆம் தேதிதான் கடைசி என்றாலும் 15 நாள் முன்னால் முடித்து புரோகிராமை ரன் பண்ணி எல்லாம் சரி செய்ய அந்த 15 நாள் கண்டிப்பாகத் தேவை. மாலதிக்கு எல்லாம் தெரியும். இருந்தும் நான்கு நாட்களாக ஒன்றும் செய்ய முடியவில்லை. போன ஞாயிறு கோவிந்த் வந்து பெண் பார்த்து விட்டுப் போனான். அப்புறம் வரிசையாக திங்கள், புதன் கிழமை, வியாழன் என்று இதுவரை இந்த வாரத்திலேயே மூன்று பேர்கள் வந்தாயிற்று. ஆக மூன்று வெட்டி பர்மிஷன்.

சுந்தரம் சார் நல்ல புராஜெக்ட் மேனேஜர். நடுத்தர வயது குடும்பஸ்தர். மாலதி வயசில் அவருக்கும் ஒரு பெண் கல்யாணத்திற்கு நிற்கிறாள். ஆகவே கடுப்படிக்க மாட்டார். புரிந்து கொள்வார். அம்மா ஆடி வெள்ளி, வரலட்சுமி விரதம் எல்லாம் லீவு எடுக்கச் சொன்னபோது கூட மறுத்து விட்டாள். ஆக இன்று கண்டிப்பாக எவ்வளாவு நேரம் ஆனாலும் முடித்துக் கொடுத்து விட வேண்டும்.

கடகடவென்று குளித்து விட்டு வரலாம் என்றால் “வெள்ளிக்கிழமை தலையில் ஒரு குத்து எண்ணைய் வைச்சுக் குளி. முடிவேற அதிகமா உதிருது, எல்லாம் கம்பியூட்டர் சூடு. கண்ணெல்லாம் பொங்கி, முகம் அதைப்பா இருக்கு” அம்மா கிச்சனிலிருந்தே குரல் கொடுத்தாள். மாலதிக்கும் வெங்காயம், மிளகு, சீரகம் எல்லாம் போட்டு காய்ச்சிய நல்லென்ணய் தலையில் அரக்கி அரக்கித் தேய்த்து குளிக்கப் பிடிக்கும். அவர்கள் வீடு இருந்த தெருவில் முனியக்காவின் நடுத்தர எளிய குடும்பம் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தது. அந்த வீடு பெரிய ஃப்ளாட் கட்ட விலை போனபின் வீடு கிடைக்காமல் முனியக்கா தம்பதி தவித்தனர். கணவன் , மனைவி இருவர் மட்டுமே. குழந்தை இல்லை.

மாலதி வீட்டின் பின்புறம் இருந்த ஒரு சின்ன இரண்டு அறை வீடு பூட்டிக் கிடந்தது. அதில் வாடகைக்கு வந்தவர்தான் முனியக்காவும் அவரது கணவர் ராஜூவும். முனியக்காவின் கணவர் ராஜூ ஐ.சி.எப் பில் கலாசியாக இருந்தார். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டார். அதனால் தானோ என்னவோ கடவுளுக்கு மிகவும் பிடித்துப் போய் அவரை முப்பத்தைந்து வயதிலேயே கூட்டிக்கொண்டான். அப்போது முனியம்மாவிற்கு முப்பது வயது. தன்னை அழகாகப் படைத்ததிற்கு திருமணம் ஆன புதிதில் சந்தோஷப்பட்டவள், இப்போது அழகாக இருப்பதற்கு வருந்தினாள். அப்போது தெய்வம் போல மாலதியின் குடும்பம் அடைக்கலம் தந்து வீட்டோடு வைத்துக் கொண்டது. ஏதோ பென்ஷன் வந்தது. கழுகுகளின் பார்வையிலிருந்து தப்ப, நிம்மதியாக, பாதுகாப்பாகத் தூங்க ஒரு இடம் கிடைத்தது. அறியாத சின்ன வயதிலிருந்தே மாலதிக்கு முனியக்காதான் எல்லாம். சின்னப் பிள்ளையிலிருந்து இன்று வரை அந்த பாசம் கொஞ்சமும் குறையவில்லை. வீட்டு அருகில் இருந்த கிருஸ்து அரசன் மெட்ரிக் பள்ளியில் கொண்டு விட்டு மதியம் சாதம் ஊட்டி, திரும்பவும் மாலையில் கூட்டி வருவது என்று முனியக்காதான் தன் பிள்ளை போல பார்த்துக் கொண்டாள்.

மாலதி அவளை அக்கா என்றே அழைத்தாள். பள்ளியில் தினம் தினம் நடந்த கதை எல்லாம் முனியக்காவிடம் சொல்லாவிட்டால் அவளுக்கு நாள் போகாது. இரவில் அக்காவை கட்டிக்கொண்டு தூங்கப் போகும் போது கதை சொல்லுவது. அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வது இப்படி ஒரு அன்னியோனியம் அந்த இருவருக்கும் இடையில். அப்புறம் மீனாட்சி காலேஜில எம்.சி.ஏ முடித்து கேம்பஸில் அந்த பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த பின்பும் முனியக்கா தலையில் எண்ணைய் தேய்த்து விட வேண்டும். அப்புறம் அக்கா மசாஜ் செய்து குளிப்பாட்டும் போது தூக்கம் கண்ணைச் சொக்கும் அவளுக்கு. குளித்து விட்டு வந்தால் சூடாக இட்லி, சாம்பார் கொத்தமல்லி சட்னியுடன். முனியக்காவும் மாலதியும் சேர்ந்து போனால் நிறையப் பேர் அம்மா, பெண் என்றே நினைத்திருப்பர். இன்று முனியக்கா ஆடி கடைசி வெள்ளி என்பதால், மாங்காடு கருமாரியம்மன் கோவிலுக்கு அதிகாலையிலேயே போயாச்சு. மாலதிக்கு எண்ணைய் தேய்த்துக் குளிக்கவே பிடிக்கவில்லை. “முனியக்கா வந்த பின் ஞாயிற்றுக்கிழமை குளிக்கிறேன்” என்று பதில் கொடுத்து விட்டு குளியலறைக்குள் புகுந்தாள். பூவாக விழுந்து மேனி நனைத்த ஷவரை ரசித்தபடி குளித்தாள். இன்னிக்கு அந்த மஞ்சள் கலர் சுடிதார் போட்டுக் கொண்டு போகணும். ஆபிஸில் ராம லட்சுமி அவளது அணித்தலைவர். மாலதியை விட நான்கு வயது பெரியவள். ராம லட்சுமியின் திருமணம் காதல் திருமணம். அவளைப் பொருத்தவரை பெண் பார்த்தல் எல்லாம் சுத்த வேஸ்ட். பெண் பார்க்க வந்த கதையெல்லாம் கேண்டீனில் விலாவாரியாக சொல்லி இருவரும் சிரித்துக் கொண்டாடியாயிற்று. வியாழக்கிழமை வந்த அந்த சுகுமாரின் அக்கா , அவள் தலை முடியை தொட்டு பார்க்கிற மாதிரி இழுத்துப் பார்த்தது. திங்கள் கிழமை வந்த கோபாலின் சித்தி பேங்க் பாஸ் புத்தகத்தை பார்க்காமல் இடத்தை காலி பண்ணுவதாக இல்லை. இதை எல்லாம் கேண்டீன் வட்ட மேஜை மகாநாட்டில் சிரிக்கச் சிரிக்கப் பேசியாச்சு. ராம லட்சுமி, “நீ அந்த கும்பலை சும்மா விட்டிருக்கக் கூடாது. அந்த அம்மா பல் செட்டை தட்டியிருக்கணும்” என்றாள். நினைத்தாலே சிரிப்பு வந்தது. அவசரமாக இரண்டு தோசைகளை சாப்பிட்டவள், “ அம்மா இன்னிக்கு புராஜெக்ட் முடிக்கணும். கொஞ்சம் லேட் ஆகும். கவலைப்படாதே. ராம லட்சுமியோட காரில் வந்து விடுவேன். பை. அப்பா என்னை சி.எம்.பி.டி யில் கொண்டு விட்டுருங்க, பிளீஸ்” என்றபடி வெளியே வந்தாள். அப்பா வண்டி எடுப்பதற்கு முன் வாசல் கதவை திறந்தபடி வந்தார் முனியக்கா.

“ அப்பா, மாலதியை நான் ஸ்கூட்டியில் பஸ் ஸ்டாண்ட்டில் கொண்டு விடுகிறேன். நீங்க உங்க வேலைகளை கவனியுங்கள்” என்று சொல்லியபடி பிரசாதத்தை மேசையில் வைத்துவிட்டு ஸ்கூட்டி சாவியை எடுத்துக் கொண்டார். “ வாடா, செல்லம் போகலாம்” என்று வண்டியை ஸ்டார்ட் செய்தார். பின் சீட்டில் உட்கார்ந்து , அம்மா, அப்பாவிற்கு டாடா சொல்லியபடி, “ ஓகே. போகலாம் கா” என்றாள் மாலதி. சாயங்காலம் வந்து கோவிலுக்குப் போகலாம் என்று மாலதி சொன்னாள். அப்புறம் அண்ணா நகரில் சாந்தி காலனி ஸ்ரீ மித்தாயில் இரவு சாப்பிடுவதென முடிவாயிற்று. திருப்போரூர் செல்லும் குளிர் சாதன 570 பேருந்து வந்ததும் ஏறி அமர்ந்து கொண்ட மாலதி, முனியக்காவிற்கு டாடா என்று கையசைத்தாள்.

பழைய மகாபலிபுர சாலையில் அந்த பொறியியல் கல்லூரியின் ரோமியோக்களில் ஆனந்தும் ஒருவன். ஓ என்று சிரிப்பும் களிப்புமாய் அரட்டைக் கச்சேரி ஓடிக்கொண்டிருந்தது.

சேகர் தான் ஆரம்பித்தான், “ டேய் மச்சி, நேத்து கேசவன் தண்டர்பேர்டில் பாரீஸிற்கு கூட்டிப் போனான் டா. ஸ்பீட்னா அது ஸ்பீட். ஜஸ்ட் 30 நிமிஷம் டா, வி.ஜி.பி லேர்ந்து பாரீஸுக்கு. அவனை நம்ம காலேஜில எந்த கொம்பனாலும் அடிச்சிக்க முடியாது”.

திரும்பிப் பார்த்தான் ஆனந்த்.” எங்க திரும்பிச் சொல்லு”

“ நம்ம காலேஜில் எந்த கொம்பனாலும் கேசவனை பைக் ரேசில் அடிச்சிக்க முடியாது”

“ தூ. போடா, அந்த நாய இன்னிக்கு என்னோட ரேசிங் வரச் சொல்லு. அப்ப தெரியும் இந்த ஆனந்த் யாருன்னு”

ஆனந்தின் அப்பா மகேஸ்வரனுக்கு பரம்பரை சொத்து ஏகத்துக்கும் இருந்தது. மூணார்,கொடைகானலில் ரிசாட், டீ எஸ்டேட்கள்.சென்னையில் இரண்டு தலைமுறைகளாக செய்து வரும் பேக்கேஜிங் தொழிலில் நிறைய சம்பாத்தியம். போறாத குறைக்கு வாழ வந்த மகாலட்சுமி வேற சீதனமாய் ஏகத்துக்கும் கொண்டு வந்தாள். ஆனால் இருபத்தைந்து வயதில் திருமணம் ஆன அவர்களுக்கு புத்திர பாக்கியத்திற்கு கோவில் கோவிலாக ஏறி இறங்க வைத்தான் ஆண்டவன். கடைசியில் கடவுள் அவரது முப்பத்தைந்து வயதில் கண் திறந்தார். மகேஸ்வரன் மகாலட்சுமி தம்பதிக்கு ஆனந்த் பிறந்தான். அதிகமான செல்லம் கொடுத்து வளர்ந்த பணக்கார பிள்ளைகளுக்கும் இருக்கும் அத்தனை கெட்ட பழக்கங்களையும் பதினைந்து வயதுக்குள் கற்றுக் கொண்டு விட்டான். பள்ளியில் படிக்கும் போது செய்த தவறுகளை பணத்தால் மூடினார் மகேஸ்வரன். தவமிருந்து பெற்ற பிள்ளையில்லையா. வீட்டில் தங்கும் நேரம் குறைந்து போனது. கேட்டது உடனே கிடைத்தது. தினமும் விதவிதமான கார்களும் , பெண்களும். ஊர் சுற்றுதலுக்கே நேர்ந்து விட்டது போன்ற நுனி நாக்கில் ஆங்கிலமும், கொஞ்சும் பேச்சுமாக பல பெண் நண்பிகளுடன் பொழுது கழிந்தது. கல்லூரிக்கு வருவதே அன்றைக்கு யாரோடு சுற்றுவது என்பதை தீர்மானிக்கத்தான்.
அருகில் இருந்த கோபி, “ மச்சான் நீ பொண்ணுகளுடன் கடலை போட்டுபீச்சில் சுத்தத்தான் லாயக்கு. ரேசெல்லாம் உனக்கு எதுக்குடா” என்றதும்.
அகிலா, ஆனந்த் மேல் சாய்த்தபடி,” ஷேம்.ஆனந்த். ஹீ சேய்ஸ் யூ ஆர் அன்பிட் ஃபார் ரேசிங்யா. ப்ரூவ் ஹூம் யூ ஆர்” என்றவள்

“கோபி, இஸ் கேசவன் தாட் மச் மேன்லி? என்று கண்கள் விரியக் கேட்டதும் ஆனந்த்தின் கோபம் இன்னும் அதிகமாயிற்று.

கூட ஆனந்த் போடும் சில்லறை காசுகளுக்கு அலையும் ஒரு அல்லக்கை கூட்டம் உசுப்பேற்ற ஆரம்பித்தது.

“ தல, அந்த கேசவன் தேர்ட் இயர் ஈ சிஈ டா. நாம நேர அங்க போறோம். ஆளைத் தூக்கறோம். ரேசிங் மாயாஜாலில் ஆரம்பிக்கிறோம். அதே பாரீஸ் கார்னரை இருபது நிமிஷங்களில் யாரு போறாங்களோ , அவன் தான் காலேஜ் தலை. சரியா”?

இருபது பேர் கொண்ட அந்த கூட்டம் ஆனந்தின் தலைமையில் கேசவனை தேடிப் போனது. கேசவனைப் பார்த்து ரேசிங் வர கூப்பிட்டது. மறுத்த கேசவனை நக்கலடித்து வெறுப்பேற்றியது. கேசவன் பக்கத்தில் வந்த அகிலா,” கேசவ் ஐ தாட் யூ ஆர் பிரேவ். நௌ ஐ அண்டர்ஸ்டாண்ட் யூ ஆர் புல்ஷிட்” என்று சொல்லவும் , எல்லோரும் சிரிக்க கேசவனுக்கு அசிங்கமாகி விட்டது.

“ஒகே. சேலஞ்ச் அச்செப்டட்” மாயாஜால் டு பாரீஸ் கார்னர் 25 மினிட்ஸ். சிக்னல், போலீஸ், ஆக்ஸிடெண்ட் இதில் போட்டுக்கொடுக்கக் கூடாது. அது அவரவர் பொறுப்பு என்று போட்டி விதிகள் இருபக்கமும் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆளுக்கு ஒருவரை பில்லியனில் ஏற்றிக்கொள்ள முடிவானது. காலை 9.30க்கு மாயாஜாலில் போட்டியாளர்கள் புறப்படத் தயாராயினர். ஆனந்திற்கு க்வாட்டர் ரகசியமாக தரப்பட்டது.

கோயம்பேட்டிலிருந்து அந்த 570 பேருந்து அக்கரை பேருந்து நிறுத்தத்தில் மாலதி இறங்கினாள். பேருந்தில் பயணிக்கும் போது கலவையான கனவுகள் மனதில் பல கற்பனைகள். காதில் செல்பேசிலிருந்து “ எங்கே வாழ்க்கை தொடங்க்கும், அது எங்கே எவ்விதம் முடியும்…..” என்று P.B.ஸ்ரீனிவாஸ் பாடிக் கொண்டிருந்தார். பாடலை ரசித்து,பேருந்துக் கனவுகளை அசை போட்டபடி சாலையைக் கடக்க சிக்னலுக்காக காத்திருந்தாள்.

அந்த சிக்னல் கேசவன் கடந்து செல்லவும் சிவப்புக்கு மாறியது. பாதசாரிகள் கடக்க பச்சை மனிதன் விழ, சிக்னல் விழுந்ததும் சாலையின் குறுக்கே ஜீப்ரா கிராசிங்கில் மாலதி நிதானமாக நடக்க ஆரம்பித்தாள். இன்னும் நாலைந்து பேர் அவள் பின்னால். எதிரே யாரும் இல்லை. பின்னால் வந்த ஆனந்திற்கு கடும் போதையில், கேசவன் சிக்னலை தாண்டி விட்டது மட்டுமே தெரிந்தது. சிவப்பு சிக்னல் விழுந்தது தெரியவில்லை. கடுமையான வேகம் சாலையைக் கடக்கும் மாலதி கண்டு பதட்டத்தில் பிரேக்கை அழுத்தியும் வண்டி நிற்கவில்லை. மாலை செய்தித்தாள்களில் மாலதி, ஆனந்தின் புகைப்படங்களுடன் விபத்து குறித்த விபரமும் போக்குவரத்து அமைச்சரின் இருவரின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்த செய்தியும் “சென்னையில் கோர விபத்து – இருவர் மரணம்” என்ற தலைப்புச் செய்தியாக முதல் பக்கத்தில் ஆறு காலத்தில் வெளியாகியிருந்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
“டார்லிங், இன்னிக்கு ஒரு முக்கியமான போர்ட் மீட்டிங் இருக்கு. கம்பெனி செகரட்டரி, செக்சன் ஹெட், லாயர் அப்புறம் சில போர்ட் மெம்பர்கள் கவர்ன்மெண்ட் நாமினி இப்படி பெரிய கும்பலை கூட்டிக்கிட்டுப் போகணும் . நான் அதனால இன்னோவாவை எடுத்துக்கிறேன். நம்ம நீ ...
மேலும் கதையை படிக்க...
இன்னும் சரியாகப் புலர்ந்திராத ஜனவரி மாத காலை. மணி நாலரை ஐந்துக்குள் இருக்கும். தினசரி காலை நடைப் பயிற்சி என்பது பொதுவாக மெட்ரோ ரயில் நிலைய கார் பார்க்கிங் பகுதியில்தான். திரும்பத்திரும்ப ஒரே நேர்கோட்டில் கைத்தறியில் ஊடை நூலைப் போல இயந்திரத்தனமாய் ...
மேலும் கதையை படிக்க...
தர்மலிங்கம் பிரபல அரசியல் கட்சியின் வட்டப் பிரதிநிதி . அவரது குடும்பமே ஆரம்ப நாளிலிருந்தே கட்சியில் இருக்கிறது. கட்சி ஆட்சியில் இல்லாதபோது பலர் வழக்கு வியாஜியங்களிலிருந்து தப்பிக்க வேண்டி சுயநலத்துடன் வேறு கட்சிக்குச் சென்றபோதும் அவர் கட்சி மாறவில்லை. இயற்கையிலேயே நல்ல ...
மேலும் கதையை படிக்க...
காரையார் என்ற நெல்லை மாவட்டத்தில் உள்ள ஊருக்கு அரசுப் பள்ளி ஆசிரியர் பணியில் சேர எனக்கு ஆணை வந்ததும் எல்லோரும் சொன்னதே,” அந்தப் பக்கத்து ஊர்கள் எல்லாம் நல்ல செழிப்பான ஊர்கள்தான். பக்கத்தில் இரண்டு அணைகள், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம், ...
மேலும் கதையை படிக்க...
“மலரு.... ஏட்டி, மலரு....... காலங்காத்தால பொட்டப் புள்ள இப்டி தூங்கனா வூடு வெளங்கிடும். எழுந்து வேலையப் பாரு” என்று தாயின் குரல் கேட்டதும் “ஆம்ம்மா” என்றபடி வாரிச் சுருட்டி எழுந்த நம் கதா நாயகி தங்க மலருக்கு மிஞ்சிப் போனால் 18 ...
மேலும் கதையை படிக்க...
‘கண்டதைச் சொல்லுகிறேன், உங்கள் கதையைச் சொல்லுகிறேன்.இதைக் காணவும், கண்டு நாணவும் உமக்குக் காரணம் உண்டென்றால் அவமானம் எனக்கு முண்டோ’? இந்தப் பாடல் வரிகள் பல நாட்கள் என்னை அவஸ்தைப் படுத்திய பல சம்பவங்கள் குறித்த வரிகளாக உள்ளத்தில் பதிந்தது. அந்த அரசுப் பள்ளியில் ...
மேலும் கதையை படிக்க...
டேய், முத்து, “இன்னிக்கி நீ கேட்டபடி கூளயனை நீ கூட்டிக்கிட்டு போ. நூத்தம்பது ரூபாய் அக்காட்ட கொடுத்திட்டு போயிடு. ராத்திரி 9 மணிக்கு கூளையனை கொண்டு விட்டுறணும். மத்ததெல்லாம் உனக்கு தெரிஞ்சதுதான்”. அண்ணாச்சியிடமிருந்து போன் வந்ததும் முத்துவிற்கு சந்தோசம். பதுவா அண்ணாச்சியோட ...
மேலும் கதையை படிக்க...
மப்பும் மந்தாரமுமாக இருக்கும் ஐப்பசி மாதத்தின் குளிர்ந்த ஈரமான காலைப் பொழுது. இந்தியன் மனித வள முகவாண்மை, உத்தமர் காந்தி சாலை சென்னை, என்ற முகவரியில் இயங்கிய அந்தத் தனியார் நிறுவனத்தின் வரவேற்பறையில் எப்படியும் குறைந்தது நூறு பேராவது இருப்பதாகவே தோன்றியது. ...
மேலும் கதையை படிக்க...
கடற்கரையில் அலைந்து கொண்டிருந்தேன். எத்தனை காலமாகி விட்டது இப்படி ஏகாந்தமாக கடற்கரையில் அலைவது. எப்படி வந்தேன் இங்கே? எங்கே யார் அழைத்து வந்தார்கள்? ஒன்றும் புரியவில்லை. இதுவரை எவ்வளவு நேரமாயிற்று? ஏன் பசிக்கவே இல்லை? எந்த கேள்விக்கும் விடை தர ஆளில்லை. ...
மேலும் கதையை படிக்க...
அம்பாசமுத்திரம் வண்டி மறிச்ச அம்மன் கோவிலை ரோட்டோரமா சைக்கிளில் தாண்டினான் பாவனாசம். மனசுக்குள் பயந்தபடி தாயே காப்பாத்து கெட்ட கனா தந்திராதே, நோய் ,நொடி தந்திராதே என்று வேண்டுதல் முடித்தான். பாவனாசத்திற்கு ஆத்துப்பால இசக்கியம்மன் மேல அத்தனை பயம். கல்யாணி டாக்கீஸில் இரண்டாம் ஆட்டம் பார்த்திட்டு ...
மேலும் கதையை படிக்க...
மகளிர் தினம்
இன உணர்வு
தீராத விளையாட்டுப் பிள்ளை
பவுன் மூட்டை
மலரும் முட்களும்
சண்முகவடிவு
கூளயன்
சங்கிலிக் கண்ணிகள்
காத்திருப்பு
பாவனாசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)