வாழ்க்கை வாழ்வதற்குத்தான்

 

கண்ணாடியை கழற்றி பக்கத்தில் இருந்த மேசையின் மேல் வைத்துவிட்டு களைப்பால் அப்படியே மேசையின் மீதே கன்னத்தில் முட்டு கொடுத்து கண்ணயர்ந்தாள் தேவகி.உடலில் அப்படி ஒரு அசதி, அதை விட மனதில் ஒரு வித அலுப்பு,யாருக்காக? எதற்காக? ஒன்றும் புரியவில்லை.

முப்பத்தி ஐந்து வருடங்கள் என்பது பெரிய வயதில்லை,ஆனால் ஒரு கலெக்டர் ஆவதற்கு இத்தனை வருடங்கள் தேவைப்படுகின்றனவே.அதற்குள் தான் எத்தனை போராட்டங்கள். வாழ்க்கையில் ஏதாவது ஒரு லட்சியம்தான் நிறைவேறுமா? அந்த லட்சியத்தை நிறைவேற்ற இத்தனை வருடங்கள் ஆயிற்று.பதவிக்கு வந்த பின்னால் மக்கள் தரும் மரியாதை “கலெக்டரம்மா” என்று கூப்பிடுவதை மனம் மகிழ்ச்சியாக எடுத்து கொள்கிறதே.

அம்மா கூட இல்லாதது இத்தனை நாளாக தெரியவில்லை, நான் இந்த பதவிக்காக உழைத்துக்கொண்டிருக்கும்போது துணை இருந்தவள் பதவி வந்து ஒரு வருடத்தில் என்னை விட்டு மறைந்து விட்டாள். உண்மையில் என்னை விட அவளுக்குத்தான் என்னை முன்னேற்றுவதில் வெறி என்று கூட சொல்லாம்.காரணம் அவளின் சுய நலம் தான். அவள் வீட்டுக்காரா¢ன் கனவை நிறைவேற்றுகிறாளாம்.அதாவது என் அப்பா நான் பிறந்த போது “கமலா எப்படியாச்சும் என் பொண்ணை கலெக்டருக்கு படிக்க வைக்கணும்” இந்த கிளார்க்கோட பொண்ணு கலெக்டரா ஆயிட்டா, அப்படீன்னு எல்லாரும் சொல்லோணும்.

சொன்னவர் இவள் பத்தாவது தாண்டுமுன்னு ஒரே அட்டாக்கில் போய்விட்டார்.

அதன் பின் அந்த பொறுப்பை இவள் ஏற்று என்னை கலெக்டராக உருவாக்கி விட்டு இவளும் அவர் பின்னால் போய் விட்டாள்.

இப்பொழுது எதற்கு இந்த பதவி? யாருக்காக நான் இருக்க வேண்டும்.எனக்கென்ன பிள்ளையா குட்டியா? அவளுக்கே தன்னிரக்கத்தால் கண்களில் கண்ணீர் வழிந்தது.

உள்ளே வரலாமா என்று கேட்பது போல மெல்ல கதவை தட்டும் ஓசை கேட்டவுடன் சட்டென்று விழித்துக்கொண்டவள் தன்னை ஒழுங்கு படுத்தி, கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டு எஸ்..கம்..இன்,சொல்லவும் அவளது செயலர் உள்ளே வந்தார். அம்மா உங்களை காண ஒருவர் வந்திருக்கிறார். நேற்றே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருக்கிறார்.

வரச்சொலுங்கள், உள்ளே வந்தவருக்கு வயது நாற்பதுக்கு மேல் இருக்கும், சாதாரண வேட்டி சட்டையில் தான் இருந்தார். வணக்கம் மேடம், என் பெயர் கணபதி, “கணபதி சிலக்ஸ்”துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறேன்.வருடா வருடம் ஏழை குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள்,யூனிபார்ம் போன்றவகளை அளித்துக்கொண்டிருக்கிறேன். இந்த முறை உங்கள் தலைமையில் இந்த விழாவை நடத்தலாமென்றிருக்கிறேன்.அதற்கு உங்கள் அப்பாயிண்ட்மெண்ட் வேண்டும்.பணிவுடன் கேட்டார்.

தேவகி மெல்ல புன்முறுவலுடன், சார், நீங்கள் செய்யும் காரியம் மிக நல்ல காரியம், அதற்கு வந்து தலைமையேற்க என்னை விட தகுதி உள்ள நிறைய பேர் இருக்கிறார்களே? அவள் முகத்தை கூர்ந்து பார்த்தவர், மேடம் நீங்கள் சொலவ்து எனக்கு புரியவில்லை, இருந்தாலும் நீங்கள் கலெக்டர் என்ற முறையில் நான் கூப்பிடவில்லை, சாதாரண குடும்பத்தில் பிறந்து உங்களுடைய திறமை, உழைப்பால் முன்னுக்கு வந்துள்ளீர்கள். இது மாணவர்களுக்கு ஒரு ஊக்கமாக இருக்கும், நாமும் நல்ல முறையில் படித்தால் இப்படி வரலாம் என்று எண்ணத்தோன்றும். மற்றபடி நான் அரசியல்வாதிகளையோ, பெரும் பெரும் பணக்காரர்களையோ இந்த நிகழ்வுக்கு கூப்பிடுவதிலை, கூப்பிட்டாலும் இது போன்ற சாதாரண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அவர்களுக்கு நேரமிருக்குமா என தெரியாது.

நன்றி, என்றவள் என்றைக்கு வரவேண்டும்? என்று கேட்டாள்.அவர் வரும் நான்காம் தேதி அதாவது வெள்ளி கிழமை, என்று சொல்ல தேவகி மணியை அழுத்தினாள். செயலர் உள்ளே வர வரும் நாலாம் தேதி ஏதாவது புரோகிராம் இருக்கா? அவர் ஒரு நிமிடம் என்றவர், ஒரு நோட்டு புத்தகத்தை பார்த்து காலை ஒரு பள்ளிக்கூட நிகழ்ச்சிக்கு போக வேண்டும், அந்த் நிகழ்ச்சி பத்தரை மணிக்கு முடிகிறது, மாலையில ஒரு மீட்டிங்க் இருக்கிறது, என்றார்.

நீங்கள் எத்தனை மணிக்கு நடத்துகிறீர்கள் என்று கேட்க அவர் பத்தரை மணிக்கு மேல்தான் என்றார். அப்படியானால் பத்தரை மணிக்கு நான் வருகிறேன், தயவு செய்து மாணவர்களை எனக்காக வெயிலில் காக்க வைக்காதீர்கள். நான் வந்தவுடன் அவர்கள் வந்து உட்கார்ந்தாலும் நான் தவறாக நினைத்துக்கொள்ள மாட்டேன். என்றவளை நன்றி மேடம் என்று சொல்லி விடை பெற்றார்.

மாணவ மாணவிகளுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள், யூனிபார்ம் போன்றவைகளை கலெக்டர் கையால் வாங்கியதில் அவர்களுக்கு மிகுந்த சந்தோசம். அவர்கள் முகத்தில் தென்பட்ட சந்தோசம் தேவகிக்கும் தொற்றிக்கொண்டது.இதனால் அவள் குறிப்பிட்டு கொடுத்த நேரத்தையும் தாண்டி அவர்களுடன் உரையாடினாள்.

எல்லாம் முடிந்து கணபதியிடம் விடை பெற நினைக்கையில், அவர் ஏதோ சொல்ல தயங்கினார்.நல்ல மன நிலையில் இருந்த தேவகி சொல்லுங்கள் என்ன வேண்டும் என்று ஊக்க படுத்த மேடம் எனக்கு எதுவும் வேண்டியதில்லை, நீங்கள் ஒரு முறை எங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்று கேட்டார். மன்னிச்சுங்குங்க, அலுவலக நேரத்துல உங்க வீட்டுக்கு வர முடியாது. இந்த வார விடுமுறை அன்னைக்கு வேணா வர முயற்சிக்கிறேன். சொல்லி விட்டு புன்னகையுடன் விடை பெற்றாள்.

மாலை பணி முடிந்து செயலாரிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்ப எத்தனிக்கையில் போன் அழைத்தது.கணபதி பேசுவதாக சொன்னவுடன் கொஞ்சம் யோசித்தாள். அவர் மெல்ல ஞாபகப்படுத்தினார். மேடம் நாளை விடுமுறை நாள், எங்கள் வீட்டுக்கு வருவதாக சொல்லி இருந்தீர்கள். ‘சாரி’ கொஞ்சம் வேலை அதிகமானதால மறந்துட்டேன்.நாளை காலை நான் அங்க வரேன், ஆனா ஒரு மணி நேரம்தான் இருப்பேன், அதுக்கப்புறம் வெளியூர் போகணும், மெனைமயாக சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

மறு நாள் காலை கணபதியே வீட்டுக்கு வந்திருந்தார். அவள் நானே வருவதாக சொல்லியிருக்கிறேனே, நீங்கள் எதற்கு எனக்காக காத்திருக்க வேண்டும் என்று கேட்டாள்.

இல்லை மேடம் அங்கு நிறைய பேர் உங்களுக்கு காத்திருக்கிறார்கள், அதுதான் உங்களையே கையோட கூட்டி வருவதாக சொல்லி வந்து விட்டேன். சொன்னவரிடம் மறு பேச்சு பேசாமல் தன் சொந்த வண்டியில் ஏறினாள். ஓட்டுனர் உட்கார்ந்து வண்டி எடுத்தார்.

அவரது வீட்டில் நல்ல கூட்டம் இருந்தது. ஆண்களும், பெண்களும் குழந்தைகளுடன் இவள் வரவை ஆவலோடு எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தனர்.இவளுக்கு தர்ம சங்கடமாகிவிட்டது.சாரி நான் லேட்டா என்று கேட்க, மேடம் இவங்க எல்லாரும் எங்க கடையில வேலை செய்யறவங்க,வருசத்துல ஒரு நாள் நாங்க எல்லாரும் கூடி வெளியூர் போவோம், இன்னைக்கு கிளம்பறதுக்கு முன்னாடி உங்களோட ஒரு காலை உணவு சாப்பிட்டுவிட்டு கிளம்பறதுக்கு தயாரா இருக்காங்க.

இவளுக்கு ஆச்சர்யம், அப்படியா வெரிகுட் சந்தோசமாய் போய் வாருங்கள் என்று வாழ்த்திவிட்டு அனைவருடனும் உணவு உண்ண சென்றாள்.

இவள் அனைவரிடமும் விடை பெற்று கிளம்ப தயாரானவள், திடீரென்று ஞாபகம் வந்து மிஸ்டர் கணபதி உங்கள் குடும்பத்தை எனக்கு அறிமுகப்படுத்தவே இல்லை. என்று கேட்டாள்.

சற்று நேரம் அமைதியாய் இருந்தவர் மேடம் என் குடும்பம் என்பது இந்த ஊழியர்கள், அவர்கள் குடும்பம், கொஞ்சம் ஏழை குழந்தைகள், கொஞ்சம் முதியவர்கள், இவர்கள் எல்லோரும்தான் என் குடும்பம்.

தேவகி ஒரு நிமிடம் சலனமற்று நின்றாள். மேற்கொண்டு அவரிடம் பேசுவது அவரது சொந்த விசயங்களை கிளறுவது போல் இருக்கும். என்றாலும் அவள் மனதின் மற்றொரு கதவு திறப்பது அவளுக்கு தெரிந்தது.நான் என்னை பற்றியே நினைத்துக்கொண்டிருந்தது எவ்வளவு மடமை.தெளிவுடன் அடுத்த பணியை காண வண்டி ஏறினாள். 

தொடர்புடைய சிறுகதைகள்
வேதனையாக இருந்தது எனக்கு சவாரியும் ஒன்றும் கிடைக்கவில்லை. கதை புத்தகங்கள் ஆட்டோவிலேய வைத்திருப்பேன், அதை படிக்க கூட மனம் வரவில்லை, பயம்தான் அதிகமாக இருந்தது. இந்த பிரச்சனை எனக்கு தேவையில்லாதது. ஆனால் நியாயம் என்று ஒன்று இருக்கிறதே, இருந்தாலும் நான் அதிகமாக ...
மேலும் கதையை படிக்க...
காட்டில் வசிக்கும் மிருகங்களுக்கு, அவர்கள் தலைவனாக ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கு தேர்தல் நடை பெற உள்ளது. ஜனாதிபதியான சிங்கம் முன்னிலையில் இந்த தேர்தல் நடை பெறும் என தேர்தல் குழு தலைவர் கரடியார் அறிவித்து விட்டார். யார் யார் போட்டியில் கலந்து கொள்கிறார்களோஅவர்கள் ...
மேலும் கதையை படிக்க...
ழேய்..யார்ராது? குழறிக்கொண்டே எங்கோ பார்த்துக்கொண்டு மிரட்டினான் அன்னாசி.யாரும் அவனுக்கு பதில் கொடுக்காததால் தூ..என்று காற்றை பார்த்து துப்பினான். அவனின் இடுப்பில் இருந்து அவிழ்ந்த வேட்டியை எடுத்து மடிக்க குனிந்தவன் தடுமாற்றம் வந்ததால் பேசாமல் நிமிர்ந்து நின்று மறுபடியும் ழேய்…யார்ராது?தன் குரலை உயர்த்த ...
மேலும் கதையை படிக்க...
தணிகாசலம் இப்பவோ அப்பவோ என்று இழுத்துக்கொண்டு உள்ளார். அவரின் மகள்கள், மருமகன்கள்,சொந்த பந்தங்கள் அனைவரும் வந்து விட்டார்கள், ஆனால் அவர்தான் இந்த உலகத்தின் பந்த பாசத்திலிருந்து விடைபெற மறுத்து யாருக்கோ காத்திருக்கிறார். தணிகாசலத்துக்கு மாமன் முறை ஆகவேண்டும் ராமசாமி, அவர் ஒரு யோசனை ...
மேலும் கதையை படிக்க...
தலையை சிலுப்பிக்கொண்டேன், கொஞ்சம் எண்ணெய் எடுத்து இரு கைகளிலும் தேய்த்து தலை முடிக்குள் விரலை நுழைத்து மெல்ல தலையை நீவி விடும்போது கண்கள் மெல்ல சொக்கியது. கண்ணாடி முன்னால் நின்று பார்த்தேன்.நாற்பது வயதாகியது போல தோன்றவில்லை, ஒரிரு நரை முடிகள் மட்டும் ...
மேலும் கதையை படிக்க...
மனித நேயம்
காட்டில் தேர்தலோ தேர்தல்
என் வீடு எங்கே?
தணிகாசலத்தின் இறுதி யாத்திரை
பொங்கி அடங்கிய சலனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)