வாய்மையே வெல்லும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 9, 2017
பார்வையிட்டோர்: 11,815 
 

அலுவலகம் பரபரப்பாக இருந்தது. டெஸ்பாட்ச் ரங்கசாமி சாரை இன்னும் காணோம். தினத்தந்தியை விடவும் செய்திகளை முந்தித்தருவதற்கு அவரால்தான் முடியும். அழகு நெல்லைத்தமிழில் அவர் சொல்லும் செய்திகளைக் கேட்கவே ஒரு ரசிகர் பட்டாளம் அலுவலகத்தில் உண்டு. “ வேய் அக்கோண்ட்ஸ் அண்ணாச்சி, இன்னும் இரண்டே மாசந்தான் பாத்துக்கிடுங்க. அப்புறம் நம்மாள கையில புடிக்க முடியாது. புள்ளிக்காரன் கெங்ககொண்டான் பக்கத்தில நூத்தம்பது ஏக்கர் வளைச்சிப் போட்டாச்சு. அதுல அம்பது அந்த விளாத்திகுளக்காரி இளைய குடியாளுக்காம். டிரான்ஸ்பரில போற ஊருக்கு ஊர் தொடுப்பு, எல்லாம் கலிகாலம். அந்த நெல்லையப்பந்தான் இந்த சவத்து மூதி கிட்டேந்து நம்ம காப்பாத்தனும்”, என்று கேண்டீன் மரப்பெஞ்சில் உட்கார்ந்தபடி அரை கிளாஸ் டீயை லாவகமாக ஊதிக் குடித்தபடி அவர் கதை சொல்லும் அழகே தனி.

ரங்கசாமி அந்த அரசு அலுவலகத்தில் பழம் தின்று கொட்டை போட்ட ஆசாமி. அந்த காலத்தில் டெஸ்பாட்ச் கிளார்க் வேலை என்பதே கொஞ்சம் சின்ன மதிப்புக் கட்டையான வேலைதான். அதிகம் காசு பார்க்க முடியாது. இல்லை, காசே பார்க்க முடியாது. எப்போதாவது அத்தி பூத்தாற்போல் நேரில் தங்கள் அவசரம் கருதி தபால் வாங்க வரும் ஆட்கள் மனமுவந்து தருவதுதான். மற்றபடி அவராக யாரையும் காசு கேட்டு துன்புறுத்தியதாக சொல்ல முடியாது. பொதுவாக காசு வரும் பிரிவுகளுக்கு சரியான போட்டி இருக்கும். ஆனால் டெஸ்பாட்ச் மேசை என்பது தண்டனைப் பிரிவு. யாரும் மேற் சொன்ன காரணத்தால் அதை விரும்பிக் கேட்பதில்லை.

நம்ம ரங்கசாமி சார் பிறந்து வளர்ந்து சர்வீசில் முக்கால் பகுதி குப்பை கொட்டியது திருநெல்வேலியில்தான். பக்கத்தில் சேரன்மாதேவி தான் சொந்த ஊர். ஓரளவுக்கு வசதியானவர். இரண்டு மூன்று ஏக்கர் நன்செய் நிலம், மட்டப்பாவீடு என்று நிம்மதியான கிராமத்து வாழ்வு. பேட்டை M.D.T இந்துக் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்ததும் சர்வீஸ் கமிஷன் எழுதி பாஸானவர். முதல் போஸ்டிங் சேலத்தில். தரையில் விழுந்த மீனாக துடித்துப் போனவர் சேர்ந்த பத்தே நாளில் ஆளைப்பிடித்து மாற்றல் ஆர்டர் நெல்லைக்கு வாங்கி விட்டார்.

அப்போது கொக்கிரகுளத்தில் இருந்த அந்த மாவட்ட அலுவலகத்தில் டெஸ்பாட்ச் இடம் தான் காலியாக இருந்தது. புதுப் பையனுக்கு , அதான் நம்ம ரங்கசாமிக்கு அதை பெரிய கிடைத்தற்கரிய போஸ்ட் மாதிரி பில்டப் கொடுத்து நம்ப வைத்து ஏமாற்றி உட்கார்த்தினார்கள். இருந்தாலும் என்னவோ ரங்கசாமிக்கு அதுவே மிகவும் பிடித்துப் போனது. சேர்மாதேவியில் சரியாக காலை எட்டு மணி ரயிலைப் பிடித்து ஒன்பதரைக்கெல்லாம் அலுவலகம் வந்து விடலாம். படிக்கிற காலத்து வழக்கம் அதுதான். அப்புறம் வெளி அனுப்ப வேண்டிய நேற்றைய தபால்களை பிரிவு வாரியாக எண் கொடுத்து பதிவேட்டில் பதிந்து அலுவலக உதவியாளர் நடேசனிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு அஞ்சல் அலுவலகத்தில் சேர்ப்பிக்க பொறுப்பு ஒப்படைத்து விட்டால் மணி பதினொன்றாகிவிடும். அப்புறம் கேண்டீனில் காபி, டீ சாப்பிட போனால் அரட்டையுடன் அரை மணி நேரத்துப் பொழுது கழியும். மணி ஒன்றாகும் முன்னர் முந்திய நாள் உள்ளே வந்த தபால்களை பதிவிட்டு அந்தத்த சூப்பிரண்டெண்ட் மேசைக்கு அனுப்பி விட்டால் அன்றையபாடு கிட்டத்தட்ட முடிந்த மாதிரித்தான்.

வேலைக்குச் சேர்ந்த புதிதில் முதல் ஒரு மாதத்தில் கன்னையன் சார் சொல்லிக் கொடுத்த நுணுக்கங்களை சட்டென பற்றிக்கொண்டார். தன் பதிவேட்டில் புள்ளி விவரங்களை சரியாக குறித்து வைத்து நல்ல திறமைசாலி ஆகிவிட்டார். மாலை ஐந்து முப்பது ரயிலைப் பிடித்தால் ஆறரைக்கெல்லாம் வீட்டிற்குப் போய் விடலாம். அப்புறம் வயல், வரப்பு, வியாஜியம் என்று பால்ய நன்பர்களுடன் திண்ணை கச்சேரியில் பல செய்திகள் சேகரமாகும். மறு நாள் அவற்றை குமுதம் கிசு கிசு மாதிரி அத்தனை சுவையாக சொல்லி சிரிக்க வைப்பார்.

பணிக்காலத்தின் இடையிடையே மாறுதல்கள் வரும். ஆனால் தலைமை அலுவலகத்திற்கு அரசியல் அழுத்தம் கொடுத்து காசு செலவு பண்னி வரும் ஆட்கள் டெஸ்பாட்சில் உட்காருவார்களா என்ன? ஆகவே ரங்கசாமியின் சேவை உடன் உணரப்பட்டு டெபுட்டேஷனில் அந்த இடத்திற்கு அடுத்த 10 நாட்களில் மீண்டும் வந்து விடுவார். அப்படி அதிகம் போன ஊர் என்றால் பக்கத்து தூத்துக்குடிதான். ஆக வடக்கே கோவில்பட்டி கூட தாண்டியதில்லை. இருக்கும் இடமே பரம சுகம் என்பது நல்லதோர் சித்தாந்தம்தான். ஆனால் அது பலருக்கும் வாய்ப்பதில்லை. நம்ம ரங்கசாமிக்கு வாய்த்தது. அதை அனுபவிக்கும் மனசும் அவருக்கிருந்தது. அதிகம் ஆசைப்படாதவருக்கு வாய்த்த மகராசியும் அதே மாதிரி .

கடவுள் எப்போதும் கருணையுடன் இருந்தாலும் , மனிதனின் கண்டுபிடிப்புகள் அப்படி இல்லை. தபால் துறை அழிந்து கொரியர் வளர்ந்தது. அப்புறம் ஈ மெயில் எல்லாம் வந்தபின்னர் டெஸ்பாட்ச் கிளார்க்குகள் நிலை கவலைக்கிடமானது. பல அலுவலகங்களில் அந்த பதவியில் இருந்தவர்களை வேறு பணிகளுக்கு மாற்றத் தொடங்கினர். அந்த நேரத்தில் நம்ம ரங்கசாமி சாருக்கும் புதிய பொறுப்பு தரப்பட்டது. கம்ப்யூட்டர் கற்றுக் கொள்வதில் அவருக்கு ஆர்வமும் இல்லை. கேட்டால் ,”கழுதை இன்னும் நாலு வருஷத்தில் ரிட்டயர்ட் ஆகிப் போற எனக்கு எதுக்கு கம்பியூட்டர்?” என்று அலட்சியமாக வசனம் பேசிச் சிரிப்பார். ஆக அவர் டெஸ்பாட்சில் ஈ ஓட்டுவதால் கூடுதலாக கொடி நாள், காச நோய் தடுப்பு இத்தியாதி வசூல் பள்ளிகளிலிருந்து பெற்று கணக்கில் செலுத்தும் பணி தரப்பட்டது.

பள்ளிகளுக்கு மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கொடிகளைப் பங்கிடுதல் அப்புறம் அனுப்பி வைத்தல் பின்னர் நினைவூட்டி பணத்தை வசூலிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இதற்கு முன்பெல்லாம் உடனுக்குடன் பணத்தை கருவூலத்தில் செலுத்தி ரசீதை செலான் ஒட்டு கோப்பில் ஒட்டி வைப்பது நடைமுறை.

கொக்கிரகுளம் அலுவலகத்திற்கு மாறுதலில் ஆபீசராக சத்திய மூர்த்திக்கு சின்ன வயசு. மனிசன் வந்ததும் முந்தைய நடைமுறைகள் எல்லாம் மாற்றப்பட்டன. பெயருக்கும் ஆளுக்கும் சம்பந்தமில்லாதவர். எங்கியோ கோயமுத்தூர் மாவட்டத்திலிருந்து வந்தவர். நிறைய நேர்மை பற்றி பேசுவார். வெளி மாவட்ட ஆள் என்பதால் அதிகம் அவர் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. காந்தியடிகளை விடவும் தான் நேர்மையானவன் என்ற தொனியில் அவர் ஊழியர்களிடமும் ஊள்ளூர் அரசியல்வாதிகளிடம் பேசுவார். ரங்கசாமி எந்த வேலைக்கும் லாயக்கில்லை என்று அடிக்கடி கடித்தபடி இருப்பார். ரங்கசாமிக்கு அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. பணத்தை கட்டும் போது சில்லறை ஐம்பது காசை விட்டு விட்டு கட்டுவது வழக்கம். அடுத்த முறையில் கட்டும் போது வரும் சில்லரையுடன் சேர்த்து கட்டுவார். அப்படி கட்டி செலான் கையெழுத்து வாங்கியவரை, “ என்ன ஏமாத்துறயா, இப்ப ஐம்பது பைசா குறைவா கட்டுவே, அப்புறம் நான் அசந்த நேரத்தில் ஆயிரக் கணக்கில் அமுக்கி ஆட்டயப் போட நூல் விட்டுப் பார்க்கிறாயா? சர்வீஸ் பூரா இங்கியே குப்பை கொட்டுறயாமே, தொலைச்சுப்புடுவேன் ஜாக்கிரதை.” என்று ஒருமையில் பேசியது ரங்கசாமியை சற்று மிரள வைத்தது. இது நாள் வரையில் ஒன்றாக இருந்த ஊழியர்களிடம் முதல் முதலில் சாதி வித்து விதைக்கப்பட்டது. அந்த விஷ விருட்சம் மடமடவென வளர்ந்து கிளைபரப்பி நின்றது. கொஞ்சி கொஞ்சிப் பேசும் இளநிலை உதவியாளர் ரூபா மேடத்திற்கு அவர் அருகில் இடம் தரப்பட்டது. பல முக்கிய முடிவுகளை ரூபாவே தன்னிச்சையாக எடுக்கும் அளவுக்கு செல்வாக்கு ஓங்கியது.

இந்த பேச்சிற்குப் பின்னர் ரங்கசாமியிடம் வரும் பணத்தை அவர் நேரடியாக ஆபீசர் சத்திய மூர்த்தியிடம் ஒப்படைத்து விட வேண்டும். சத்திய மூர்த்தி அதை முறையாக அரசாங்கக் கணக்கில் கட்டி விடுவது என்று ஏற்பாடானது. ரங்கசாமியும் ஒரு பதிவேடு போட்டு பணம் பெற்ற தினம், சத்திய மூர்த்தியிடம் வழங்கிய தினம் எல்லாம் குறித்து வைத்து அதில் அவ்வப்போது பக்கவாட்டில் கையெழுத்து பெற்றுக் கொண்டார்.

மாவட்ட ஆட்சியாளர் அலுவலக பேச்சிமுத்து ரயிலில் ரங்கசாமியை பேட்டை ரயில் நிலையத்தில் பார்த்து,

“ என்ன அண்ணாச்சி, கொடிக்காசு நாலு லகரம் நிக்காப்போல இருக்கு”. “நேத்திக்கி மீட்டிங்கில் கலைக்டர் உங்க தலைவரை எழப்பிக் கேட்டாப்பில”. “அந்தாக்கில அவரு நீங்க நேருங்கூறுமா வசூல் பண்ணலையாட்டு இருக்கு, ஜாரிச்சி அடுத்த இரண்டு நாளில் கட்ட ஏற்பாடு செய்யுதேன்” என்னாரு. “சீக்கிரம் கணக்கை நேர் பண்ணுங்க” .

“கரைச்சல் புடிச்ச சமாசாரம் நமக்கெதுக்கு அண்ணாச்சி, இல்லாட்டா போலிஸ் கேஸ் கொடுக்கச் சொல்லியிருக்காரு கலைக்டர். அதால வார பொதன் கிழமைக்குள்ள முடிச்சிடுங்க” என்று சொல்லி விட்டுச் சென்றார்.

ரங்கசாமிக்கு ஒன்றும் புரியவில்லை. எதுவானாலும் பதிவேட்டில் பணம் கொடுக்கல் வாங்கலை பதிவு செய்து கையெழுத்து வாங்கி வைசிருக்கோமே என்ற தைரியம் இருந்தது. யோசனயாய் அலுவலகத்தில் நுழைந்தவரை எல்லோரும் பரிதாபமாகப் பார்ப்பது தெரிந்தது. வருகைப் பதிவேடு தலைவர் அறையில் இருந்தது. கதவைத் தட்டி விட்டு, உள்ளே சென்றவரிடம்,

“ வாயா, ரங்கசாமி, அந்த கொடிக்காசு நாலு லட்சம் பணத்தை ஒடனெ கட்டிடுயா, கலைக்டர் வேற மீட்டிங்கில் எழுப்பி விட்டு என்னவொ கேள்வி மேல கேள்வி கேக்காரு”.

“நீரு பொண்ணுக்கு கல்யாணம் அமக்களமா பண்ணிய போதே நினைச்சேன் . அது சரியாப் போச்சு”, இந்தியா நாசமா போறதுக்கே உன்னை மாதிரி ஆளுங்கதான் காரணம். இதெல்லாம் சங்கத்தில் உள்ள ரௌடிபசங்க கிட்ட சொல்லி ஆர்ப்பாட்டம் எல்லாம் பண்ணாதே. நான் காண்டாறேனோ இல்லியோ கலைக்டர் செம காண்டாகிடுவார். ஆமா” என்றார் சத்திய மூர்த்தி.

“போ, போயி சீக்கிரமா போலிசில் கையாடல் புகார் தருவதற்கு முன் பணத்தைக் கட்டிடு”.

பல்லைக்கடித்தபடி வெளியில் வந்தவரை ஊழியர் சங்க செயலாளர் சசிதரன் மெல்ல கேண்டீனுக்கு கூட்டிப்போய் விவரம் தெரிந்து கொண்டார். ரங்கசாமியிடமிருந்து அவர் சத்திய மூர்த்தியின் கையொப்பம் பெற்றிருந்த பதிவேட்டை வாங்கிக் கொண்டு அந்தப் பதிவேட்டின் பக்கங்களை அருகில் இருந்த கடையில் கலர் ஜிராக்ஸ் நான்கு பிரதிகள் எடுத்துக் கொண்டார். நடந்ததை எழுதி வாங்கி அதையும் பிரதியெடுத்து தான் ஒன்றை வைத்துக் கொண்டு ஒன்றை பதிவுத்தபாலில் மாவட்ட ஆட்சியருக்கும் மற்றொன்றை முதலமைச்சரின் தனிப்பட்டபிரிவுக்கும் அனுப்பினார்.

இவற்றை எல்லாம் முடித்துக்கொண்டு அலுவலகம் வந்த ரங்கசாமி சத்திய மூர்த்தியிடம் சென்றார். ரங்கசாமி பதிவேட்டை ஆதாரமாக அவரிடம் காட்டி, தான் அவ்வப்போது சத்திய மூர்த்தியிடம் பணம் கொடுத்ததை கூறினார். அதை கூர்ந்து நோக்கியவர், “அப்படியா” என்றபடி,

“சரி, அதில் உள்ளது என் கையெழுத்துதானா என்பதை சரி பார்க்க வேண்டும். மாலையில் என் வீட்டிற்கு எடுத்து வந்து விடு. இப்போது அவசரமாக வெளியே போகிறேன்” என்று சொல்லி வெளியே போனார்.

சத்திய மூர்த்தியின் மனதில் இந்த சிக்கலை எப்படித் தீர்ப்பது என்ற எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. மாலையில் தன்னுடன் ஜீப்பில் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வந்து பதிவேட்டை வாங்கிக் கிழித்துப் போட்டு விடலாம். எதாவது பிரச்சனை செய்தால் அலுவலகத்தில் பணம் கையாடல் செய்ததைக் கண்டித்தேன். யாரும் அறியாமல் என் வீட்டில் புத்திமதி சொல்ல அழைத்து வந்தேன். அதனால் என்னைக் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறான் என்று போலிசில் புகார் கொடுத்து உள்ளே தள்ளி விடலாம். மனதில் திட்டம் சரியாக இருந்தது.

மாலை ஐந்தரை மணிக்கு ரங்கசாமியை, “ சார் வாங்க, வீட்டில் போய் அக்கவுண்ட் சரிபார்த்து விடுவோம். உங்களை பஸ் ஏத்தி விட சொல்லிடறேன் என்று அன்பொழுக கூப்பிட்டார். அதற்குள் சசிதரன், “அய்யாவுக்கு ஏன் சிரமம்? நாங்க ஆட்டோவில் வந்துடறோம் சார்”. “ரங்கசாமி சார், நாம் போய் சேர்வதற்குள் அய்யா செக் பண்ணி விடட்டும். அப்புறம் நாளைக்கு ஒட்டு மொத்தமா சலான் போட்டு கட்டிடலாம்” என்றார். “இந்தாங்க அய்யா” என்று பத்து அலுவலக ஊழியர்கள் பார்க்கும் படி பதிவேட்டை சத்திய மூர்த்தியிடம் தந்தார்.

ஆகா, பழம் நழுவிப் பாலில் விழுகிறதே. இந்த ரங்கசாமி அப்பாவி அது தெரியும் இந்த சசிதரன் கூட இப்படி அடி முட்டாளாயிருப்பானா?. ஏப்படியோ இன்னிக்கி நமக்கு குருட்டு அதிருஷ்டம். “அதுவும் செரிதான். டிரைவர் வண்டியை எடு” என்று சொல்லியபடி கிளம்பினார்.

வண்டி வரும் வழியில் செல் போனைத் தேட அலுவலகத்திலேயே விட்டு விட்டு வந்தது நினைவுக்கு வந்தது. மீண்டும் அலுவலகத்தில் நுழைந்தவரை அழைத்தபடி இருந்தது செல்போன். “நொம்ப நேரமா அடிக்குது அய்யா”, என்றார் பணியிலிருந்த இரவுக்காவல் பணியாளர்.

“கொண்டாய்யா அதை” என்று சொல்லி வாங்கியவர் கையிலிருந்த பதிவேடு நோட்டை பக்கத்து மேசையில் வைத்து விட்டு , “அலோ, என்னம்மா” என்றார் சன்னமான குரலில். அழைப்பு வீட்டிலிருந்துதான். “ ஏங்க, இந்த அநியாயத்தை எப்படிங்க சொல்வேன். நம்ம நர்மதா கடிதாசி எழுதி வைச்சிட்டு யாரோ ஒரு பையனோட காலேஜில் இருந்து ஓடிப்போய்டாங்க. சீக்கிரமா வாங்க” என்றது மறுமுனை. மனது படபடக்க “இதோ உடனே வரேன்” என்று பதிலளித்தவர் அவசரத்தில் ரங்கசாமியின் மேசையில் விட்டுச் சென்றது எதுவும் எழுதப்படாத சசிதரன் அவரிடம் கொடுத்த வெற்று கணக்கு நோட்டின் அட்டையில் வாய்மையே வெல்லும் என்று எழுதி காந்தியடிகள் படம் போட்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *