வானில் வியந்து…நீரில் குளிர்ந்து…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 10,926 
 

வங்க சாப்டலாம்…’-வெள்ளையும் கறுப்புமான அரை அங்குலத் தாடியும் பளிச்சென்ற வெண்மை மாறாச் சிரிப்புமாக அழைத்தார் கேசவன்.

மனைவிக்குப் பள்ளிக்கூடத்தில் சாப்பாடு கொடுத்துவிட்டு, தனக்காக சன்னாசிக் கடையில் இரண்டு மசால் வடையை பார்சல் கட்டிக்கொண்டு வரும்போதுதான் சபாபதிக்குக் கூவலான… அதே சமயம் மெல்லிசான அந்த அழைப்பு.

புரோட்டா கடையின் வாசலில் நின்று இருந்தார் கேசவன். இடப் பக்கம் இருந்த டிரம் அடுப்பில் வட்டமான பெரிய தோசைக் கல் காய்ந்துகொண்டு இருந்தது. கல்லில் வெந்துகொண்டு இருந்த ஆம்லெட்டுகளுடன் சால்னாச் சட்டி ஒன்றும் சூடேறிக்கொண்டு இருந்தது.

வானில் வியந்து...நீரில் குளிர்ந்து...நல்ல வெயில் நேரம். கடையில் அளவான கூட்டம்தான் அமர்ந்திருந்தது. கல்லா வில் முதலாளியும் அடுப்பில் ஒரு மாஸ்டரும் கேசவனும் மட்டுமே. கேசவனின் இன்றைய டூட்டி சப்ளை போல் இருக்கிறது.

‘இங்க அப்பிடியெல்லாம் கணக்குஇல்லைங்க… எல்லாருமே ஆல்ரவுண்டர்தான்’னு பட்டறையில் நின்று புரோட்டாவுக்காக நெஞ்சு உயரத்துக்கு மைதா மாவைக் குமித்து, பாத்தி கட்டி நீர்விட்டு, விழுந்து விழுந்து மாவு பிசைபவர். கொஞ்ச நேரத்தில் தோசைக் கல்லில் நின்று புரோட்டாவைப் பிய்த்துப்போட்டு முட்டை, தக்காளி, வெங்காயம், குழம்பு சேர்த்துத் தடதடவெனத் தாளம் இசைக்கக் கொத்துப் போட்டுக்கொண்டு இருப்பார்.

இன்னொரு கிழமையில் ஈரத் துணி எடுத்து மேஜை களை அழுந்தத் துடைத்து, ”நம்ம டேபிளுக்கு ரெண்டு கொத்து, மூணு ஆஃப்பாயிலு… அதுல ஒண்ணு ஃபுல்பாயிலு… பெரட்டிப் போட்டு…” எனக் கூவுவார். ஆனால், கல்லாப் பெட்டியில் காசு வாங்கிப் போடுகிற வேலையில் மட்டும் யாரும் முதலாளியைப் போல உட்கார்ந்து செய்ய மாட்டார்கள். நின்றபடிதான். முதலாளியும் இதுவரை உட்காரச் சொன்னது இல்லை.

வடை பார்சலோடு கேசவனின் அருகில் போனான் சபாபதி.

”வாங்க சாப்பிட்டுப் போவம்” – மறுபடி கடைக்கு உள்புறமாகக் கைகாட்டி அழைத்தார் கேசவன்.

”வெஞ்சனத்துக்கு வடய வாங்கீட்டுப் போறேம் பாருங்க… வீட்ல சாப்பாடு நமக்காகக் காத்திருக்கு.”

”நேத்து வீரப்ப அய்யனார் கோயில்ல ஷூட்டிங் நடந்துச்சுபோல…”

இது விஷயமாத்தான் பேசக் கூப்பிடுவார் எனத் தெரியும். பெரிய துரதிர்ஷ்டம் என்னஎன்றால், சபாபதியை சினிமாத் துறையில் எல்லாம் தெரிந்தவனாக கேசவன் கருதுவதுதான். பார்க்கிற இடம் எல்லாம் சல்யூட் செய்வார். டீக்கடையில் சந்தித்தால் வடை, காபியோடு சிகரெட்டும் வாங்கித் தருவார். எங்கே பார்த்தாலும் ஒரே கேள்விதான்.

”ஷூட்டிங் எடுக்க எப்ப வர்றாங்க..?”

சபாபதியின் இலக்கிய நண்பர்கள் சிலர் ஒரு நாள் ஒரு குறும்படம் எடுக்க இங்கே வந்திருந்தனர். வீரபாண்டியிலும் இங்குமாக மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதில் ஒரு காட்சி கேசவன் வேலை பார்க்கும் இதே புரோட்டாக் கடையில் எடுக்கப்பட்டது. கடையில் பாத்திரம் கழுவுகிற பெண்மணியைத் துணை நடிகையாகவும் நடிக்கவைத்தனர்.

படப்பிடிப்பு முடிந்து அவர்கள் ஊருக்குப் போன நாளில் கேசவன், சபாபதியைத் தேடி அவனுடைய வீட்டுக்கு வந்தார். அன்று, சபாபதியின் மனைவி வெங்காய சாம்பார் வைத்துக் கொண்டுவரச் சொல்லி இருந்தாள். அதற்காகக் காய்கறிகளைப் பரப்பி வைத்துக்கொண்டு சமையல்கட்டில் உட்கார்ந்து இருந்தான் சபாபதி. கேசவனை உள்ளே வரச் சொன்னான். அதுநாள் வரையிலும் கேசவனோடு சபாபதி நின்று பேசியது இல்லை. உள்ளூர் என்கிற அளவில் பார்த்தால் சிரிப்பதும், சிரித்தால் ”நல்லா இருக்கீங்களா?” என விசாரித்துக்கொள்வதுமான அறிமுகம்தான். ஊரின் மையமான இடத் தில் அமைந்த ஹோட்டல் ஒன்றில் வேலை பார்க்கிறவர் என்பதுவரையில்தான் கேசவனைத் தெரியும்.

சமையல் கட்டுக்குள் நுழைந்த கேசவன், ”என்ன செய்றீங்க..?” என்று பரப்பிக்கிடக்கும் சரக்குகளைப் பார்த்துக் கேட்டார்.

”டீச்சருக்கு வெங்காய சாம்பார் மேல பிரியம் வந்திருச்சு.”

”மாசமா இருக்காங்களா..?”- கேசவனின் அந்தக் கேள்வி சபாபதியைத் திகைக்கவைத்தது.

”ஆமா!” என்றதும், ”ஒரு நிமிஷம்…” என்றபடி, பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம் எனத் தேவையான அயிட்டங்களை ஒதுக்கி வைத்துக்கொண்டு, ”அருவாமணையா… கத்தியா..?” எனக் கேட்டார். சபாபதி கத்தியும் பலகையும் கொடுக்க, மடமடவெனப் பத்தே நிமிஷத்தில் காய்கறிகளை வெட்டித் தீர்த்து, ஸ்டவ்வைப் பற்றவைத்தார். அடுத்த அரை மணி நேரத்தில் சோறு, வெங்காயச் சாம்பார், வெந்தய ரசம், பொரியல், மோர் எனத் தயாரித்து முடித்தார்.

”சாம்பாரக் குடிச்சுப் பாருங்க…” – கரண்டியில் மொண்டு உள்ளங்கையில் ஊத்தினார் கேசவன். இன்னதெனப் பிரித்து உணர முடியாத மணத் தோடு, வெறும் சாம்பாரையே வாங்கி வாங்கிக் குடிக்கவைத்த சுவை.

டிபன் பாக்ஸில் சாப்பாட்டை அடைத்துக்கொண்டு, பெட் பாட்டிலில் தண்ணீர் பிடித்துக்கொண்டபோது… ”நீங்க தேடி வந்த காரணத்தைச் சொல்வே இல்ல” எனக் கேட்டான் சபாபதி.

”நீங்க வேலையா இருந்தீங்க…”

”வேல முடிஞ்சிருச்சில்ல… சொல்லுங்க…

பன்னெண்டே முக்காலுக்குத்தான ஸ்கூல்ல சாப்பாட்டு நேரம். மணி பன்னெண்டுதான ஆவுது”- மணியைப் பார்த்துக்கொண்டே பேசினார் சபாபதி.

”ஸ்கூலுக்கு நடந்துபோவீங்களா… வண்டிலயா?’

சபாபதிக்கு எரிச்சலாக வந்தது. ஆனாலும், ஏதோ ஒரு முக்கியமான காரியம்போல் இருக் கிறது. தனக்குச் சிரமம் தராமல் இங்கிதம் பார்த்து நடக்கிறார் என்கிற கேசவனின் மனசு புரிந்தது.

‘நடந்து போக டைம் இருக்கா..?’

”வாங்க…”

வானில் வியந்து...நீரில் குளிர்ந்து...2வீட்டைப் பூட்டியதும் கேசவன் தண்ணீர் பாட்டிலை வாங்கிக்கொண்டார்.

”அவுங்கள எல்லாம் ஊருக்கு அனுப்பிச்சு விட்டீங்களா..?” மொட்டையாகக் கேட்டார்.

”யாரு..?”

”அவுங்கதே… ஒங்க ஃப்ரெண்டு. படம் எடுக்க வந்தாங்கள்ல…”

”அவுங்க நேத்தே போய்ட்டாங்களே…”

”மெட்ராஸ்தான..?”

”ஆமா!”

”மறுபடி வருவாங்களா..?”

”ம…று…ப…டீ..? சொல்ல முடியாது. ஏதாச்சும் ரீடேக் தேவைப்பட்டா வரலாம்.”

”மூணு நாளும் நானும் இருந்தே…” முகத்தில் எந்தச் சலனமும் காட்டாமல் சபாபதிக்கு இணையாக நடந்துவந்தார் கேசவன்.

சபாபதிக்கு ஒரு சின்ன உறுத்தல். அது அவனுடைய நடை வேகத்தை மட்டுப்படுத்தியது.

”மூணு நாளுமா இருந்தீங்க..?”

”வீரவாண்டில நடந்ததுதான் எனக்குத் தெரியல. நம்மூர்ல, வெங்கலா கோயிலு, கீரக்கல் தெருவு, பஜாரு கடை வீதி, சர்வண்டு தண்ணித் தேக்கம்… நம்ம கடையில வெச்சுக்கூட ஒரு சீன் எடுத்தீங்கள்ல…” என அத்தனையும் சிறு பிள்ளையைப் போல ஒப்பித்தார். அது மட்டுமல்லாது வசன உச்சரிப்பில் நடிகருக்கும் இயக்குநருக்கும் எழுந்த வாதம், கேமராவுக்கு லைட்டிங் போதாமல் பெட்ரோ மாக்ஸ் பிடிக்கச் சொல்லியது… என்று சின்னச் சின்ன நிகழ்வுகளையும் ஞாபகப்படுத்தினார்.

”ஒருதரங்கூட நான் ஒங்களப் பாக்கவே இல்லியே…”

”நீங்கதான் ஒரு எடத்துல நிக்கலியே… ஓடிக்கிட்டே இல்ல இருந்தீங்க…”

”ஒங்க கடைல வேல பாக்குற ஒரு அம்மா நடிச்சாங்க தெரியுமா..?”

”ம்..! படம் எப்ப வரும்?”

”தெரியல…” என்ற சபாபதி, ”ஆமா… மூணு நாளும் நீங்க கடைக்குப் போகலியா?”

”இல்ல…னேன்?”

அப்போதுதான் கொஞ்சம் வெட்கப்பட்டவர்போல வார்த்தைகளை விழுங்கினார்.

”சின்ன வயசில் இருந்தே நமக்கு அப்பிடித்தாங்க. எங்கியாச்சும் படம் பிடிக்கறதப் பாத்தா அங்ஙனயே நின்னுருவேன்.”

நாற்பத்தைந்து வயதைத் தாண்டியவரின் மழலைப் பேச்சை அன்றுதான் கேட்டான் சபாபதி.

‘கடைல ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா..?”

‘நா முன்னக்கூட்டியே லீவு சொல்லிருவே…”

அந்தப் பேச்சு அதோடு முடிந்தது. பள்ளிக்கூடத்து வாசலில் கேசவன் விடைபெற்றுக்கொண்டார். சாயங்காலமாக கடைக்கு வரச் சொன்னார். நைட் டூட்டியாம். சபாபதி அன்று போகவில்லை.

மறு நாள் வீட்டுக்கு புரோட்டா பார்சல் வாங்க வேண்டியிருந்தது.

‘புரோட்டா சாஃப்ட்டா, சூடா வாங்கி வாப்பா…” எனற மனைவியின் வேண்டுகோளில் கேசவன் ஞாபகத்துக்கு வந்தார். கட்டைப் பை ஒன்றை எடுத்துக்கொண்டு கிளம்பி னான் சபாபதி.

‘ரெண்டு நாளா எதிர்பாத்தேன்… இன்னிக்கி வரலைன்னா, ஒங்க வீட்டுக்கு நாளைக்கி வரலாம்னு நெனச்சே…” என்ற கேசவன், கடை முதலாளியிடம், ”கல்லாவுக்குள் இருக்க அந்தக் கவர எடுத்துக் குடுங்கண்ணே…’ என்றார்.

முதலாளியும் அந்த வார்த்தையை எதிர்பார்த்து இருந்தவரைப் போல ஒரு கவரை எடுத்து சபாபதியிடம் நீட்டினார்.

‘சித்த உக்காந்து இதப் பாருங்க…’

சபாபதிக்குக் காலியாக இருந்த ஒரு மேசையில் இடம் ஒதுக்கித் தந்தார் கேசவன். கட்டைப் பையை வாங்கி கல்லாப் பெட்டியின் மேல் வைத்தார்.

சபாபதி தனக்கு வேண்டியதை ஆர்டர் கொடுத்துவிட்டு கவரைப் பிரித்தான்.

பூராவும் வண்ணப் புகைப்படங்கள்.

அத்தனை படங்களிலும் கேசவன். விதவிதமான உடைகளில், வேறுவேறான பாவனைகளில்… குதிரை மீது சவாரி செய்தபடி… வாள் பிடித்துச் சண்டையிட்டபடி… சிலம்பாட்டம் போட்டபடி… சுருள்கத்திச் சுழற்றி… கோயிலில் பவ்யமாக… குளக்கரையில் கைகட்டிச் சிரித்து… வானைப் பார்த்து வியந்து… நெருப்பைக் கண்டு ஆக்ரோஷித்து… மழையில் குளிர்ந்து… உயரத்தில் இருந்து தாவி… நடந்தபடி… நாட்டியம் ஆடியபடி… என ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்கள். ஒவ்வொன் றும் பார்க்கப் பார்க்க… புரோட்டாக் கடையில் உட்கார்ந்திருக்கிறோம் என்ற நினைப்பு ஒழிந்து, ஏதோ ஒரு காட்சிப்புலத்தில் மிதப்பதாகவே இருந்தது.

மறுபடி மறுபடி அந்த போட்டோக்களைப் பார்த்தான்.

”பெரிய கிறுக்கேங்க” – கடை முதலாளி சபாபதியின் பக்கமாக வந்து நின்று சிரித்தார்.

”திடீர்னு கட்டபொம்மெ வசனத்தப் பேசுவா… சந்திரபாபு மாதிரியே காலக் கால ஆட்டிக்கிட்டுப் பாட்டுப் பாடுவியான்… பெரிய கூத்துக்காரப் பய. ஏதாச்சும் ஒரு புதுப் படத்துல எவனாச்சும் ஒரு மாதிரியா மீசை வெச்சோ, குடுமிவெச்சோ வந்தாக்க… அதே மாதிரி வெட்டச் சொல்லி போட்டோ எடுத்து வெச்சுக்குவான். எம்புட்டுப் போட்டாங்கிறீக. வீட்டுல கெடக்கு இன்னம் ஆயிரக்கணக்குல…”

”நடிக்கணும்னு ஆசப்படுறாராக்கும்..?”

”ஆசப்படுறானா..? அதாங்க அவனோட ஒரே குறிக்கோள். ஒரு படத்துலயாச்சும் நடிச்சுப் பாத்துரணுமாம். சின்ன வயசுல இதுக்காக மெட்ராஸ் போயி… லோல்பட்டு வந்தவனாக்கும். இப்ப கலியாணம் முடிச்சு புள்ளைக ஆன பெறகுதேன் கிருமமா வேலையப் பாக்குறான். இப்பயும்கூட எங்குட்டாச்சும் சினிமா ஷூட்டிங்னு கேட்டுட்டா, கடைக்கி லீவப் போட்ருவான்ல.’

”நல்லாருக்கா..?”- கேசவன் வந்து கேட்டார்.

”ம்… பிரமாதம். இத அன்னிக்கே சொல்லிருக்கலாம்ல… மூணு நாளும் கூடவே இருந்தேங்கிறீங்க. லேசாக் காதக் கடிச்சிருக்கலாமே… ஷார்ட் ஃபிலிம்தான எதாச்சும் பண்ணிருக்கலாம். பெரிய படத்துலதான் நடிக்கணுமா?”

”அய்யோ, அப்பிடியெல்லாம் கிடையாது… எதாச்சும் வந்தாப் போதும். ஒரு ஃபிலிம்…”

”சின்னப் பசங்க பிலிம் வெச்சுப் படம் பாப்பாங்கள்ல. எம்.ஜி.யார், ஜிவாஜினு அதே மாதிரி ஒரு ஃபிலிம்லயாச்சும் இவன் நிக்கணுமாம்”- கடையின் இரைச்சலையும் மீறிச் சிரித்தார் முதலாளி.

”அது ஒண்ணும் இன்னிக்கிப் பெரிய விஷயம் இல்லியே. ஆனா, ஃபிலிம் வகையறா எல்லாம் இப்பக் கெடையாது. எல்லாமே சி.டி-தான்.”

”எதாச்சும் ஒரு அமைப்பு வந்தா அமைச்சுவிடுங்க!”

‘வேற யார்கிட்டயும் போட்டாவக் காமிச்

சீங்களா?”

”ம்ஹூம்…”

”வேடிக்கை பாக்கத்தான் போவான். யார் கிட்டயும் பேசவே மாட்டான். என்னமோ ஒங்க கிட்டக்கதாம் பேசியிருக்கான்.

‘மெட்ராஸ்காரங்க வந்தாச் சொல்லுங்க…’ – கேசவன் போட்டாவைக் கவருக்குள் வைத்தபடி சொன்னார்.

‘அவரு சொல்றது இருக்கட்டும் கேசவா… நீயும் அப்பப்ப பாக்குறப்ப தாக்கல் கேட்டு ஆவுகப்படுத்திக்க…’

”பெரிய படமெல்லாம் நமக்குத் தெரியாது. ஷார்ட் ஃபிலிம்னா. ஃப்ரெண்ட்ஸ் ஒண்ணு ரெண்டு பேர் எடுப்பாங்க… சொல்றேன்…”

”முன்னக்கூட்டியே சொல்லிட்டீங்கன்னா, நா லீவு போடுறதுக்குத் தோதுவா இருக்கும்.”

அன்றைக்கு சபாபதியின் மனைவி விரும்பியபடி புரோட்டா பஞ்சுபோல மிருதுவாகவும் அதே சமயம் சூடாகவும் கிடைத்தது.

போன வாரம் சினிமாவில் இணை இயக்குநராக இருக்கும் சபாபதியின் நண்பர் சின்னமனூர் ஸ்ரீதர் சென்னையில் இருந்து பேசினார். ஒரு சிறுகதை தன்னை வெகுவாகப் பாதித்ததாகவும் அதனைக் குறும்படமாக எடுக்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் சொன்னார். ஷூட்டிங்குக்குத் தேதியைக்கூடத் தோராயமாகச் சொல்லிவிட்டார். தவிர, சில ஏற்பாடுகளுக்குச் சபாபதியின் நல்லாதர வையும் கேட்டிருந்தார். அந்தத் தகவலை கேசவனிடம் சொல்லி உற்சாகப்படுத்தி இருந்தான் சபாபதி. அதில் இருந்து காணும்போது எல்லாம் சல்யூட் செய்வதும் நலம் விசாரிப்பதுமாக இருந்தார் கேசவன்.

”வாய்ப்பு கெடைக்கும்னு நெனைக்கிறேன்…’ பட்டும்படாமலும்தான் சபாபதி சொல்லியிருந்தான். ஒருவேளை ஆண் கேரக்டரே இல்லாத கதையாக அமைந்துவிட்டால்… தன் மீது குற்றம் வந்துவிடக் கூடாது அல்லவா?

”கூட்டத்தில் ஒரு சீன் நின்னாக்கூடப் போதும்.”

”நல்ல ரோலே குடுக்கச் சொல்லலாம்.”

கேசவனின் போதாத நேரமோ, ஸ்ரீதரின் நல்ல நேரமோ, பெரிய படம் ஒன்றில் கதை சொல்லத் தயாரிப்பாளர் ஒருவர் ஸ்ரீதரைக் கூப்பிட்டு இருந்தார். அதன் காரணமாகக் குறும்பட வேலை தள்ளிப்போகும் என சபாபதிக்கு அவசரத் தகவல் அனுப்பியிருந்தார் ஸ்ரீதர். அதனை எப்படி கேசவனிடம் சொல்வது என விளங்காமல் ஓரிரு நாளாக ஒதுங்கிப் போய்க்கொண்டு இருந்தான் சபாபதி. யதேச்சையாக இந்தச் சந்திப்பு.

”நீங்க வீரப்பய்யனார் கோயில் போயிருந்தீங்களா..? ஒரே நாள்ல பேக்கப் பண்ணிட்டாங்களாமே… விஷால் படமாம்ல…”- கேசவன் பேசிக்கொண்டே போனார்.

”அங்க எல்லாம் போக மாட்டேன் தலைவா…’ எனப் புதுசாக அடைமொழி கொடுத்துப் பேசினான் சபாபதி.

”அப்பறம்… டீச்சருக்கு சாப்பாடு குடுத்திட்டு வாரீகளாக்கும்” – பேச்சை வளர்த்துக்கொண்டுபோனார்.

”ஆமா…” என்ற சபாபதி, ஸ்ரீதரின் புரொகிராம் ஷெட்யூல் கேன்சலான தகவலைச் சொல்ல வார்த்தைகளைத் தேடிக்கொண்டு இருந்தான். சட்டென ஒரு பொறி கிளம்பியது.

‘ஆங்… நம்மாளுக்குப் பெரிய படம். அதான் சினிமா படம் ஒண்ணு பண்ண சான்ஸ் கெடச்சிருக்கு. ஒரு புரொடியூசர் கதை கேக்கக் கூப்பிட்டு இருக்கார். ஓ.கே. ஆச்சுன்னா, ஒங்களுக்கும் பெரிய சான்ஸ் உண்டு. மூணு மாசம் கடைக்கி நீங்க லீவு போட வேண்டிருக்கும்’ – வலிந்து சிரித்தான்.

”சந்தோஷம்” என வானத்தை நோக்கிக் கும்பிட்ட கேசவன், ‘எனக்குச் சின்னதா ஒரு சீன் வந்தாலே போதும்” என்றார்.

கேசவனின் அந்த மௌனமான பதில் சபாபதிக்குக் கழிவிரக்கத்தைக் கோருவதாக இருந்தது.

அதுவரையிலும் நின்றுகொண்டு இருந்த சபாபதி நிதானமாக நடந்து வந்து கல்லாவுக்கு முன்புறம் இருந்த ஸ்டூலை இழுத்துப்போட்டு உட்கார்ந்தான். கல்லாவில் அமர்ந்து இருந்த முதலாளியும் இதுவரை அவனை உட்காரச் சொல்லவில்லை என்கிற குற்ற உணர்ச்சியில் உந்தப்பட்டவராகச் சற்று எழுந்து நின்று, ”உக்காருங்க…” என சபாபதி உட்காருவதற்கு ஏதுசெய்து கொடுத்தார்.

‘சொன்னாக் கோச்சுக்க மாட்டீகள்ல’- சபாபதியும் பூடகமாக கேசவனை நோக்கி பேச்சைத் துவக்கினான்.

‘அய்யோ… எனக்கு என்னாங்க கோவம்…’ என்றபடி கேசவன் உடனடியாக சபாபதியின் அருகில் வந்தார். தொடர்ந்து, ”ஒங்க ஃப்ரெண்டுக்கு நல்ல சான்ஸ் கெடச்சிருக்குன்னீக. அது அவருக்கு நல்லபடியா அமைஞ்சு அவரு பெரியாளா வரணும். நெறைய சம்பாதிச்சு ஏகப்பட்ட பிரைசு… விருது எல்லாம் வாங்கி நல்லா இருக்கணும். நம்மளுக்கு நீங்க போதும். ஒங்க ஆதரவுதே முக்கியம்’ என்றார்.

தான் அவரை அறிமுகப்படுத்திய காரணத்துக்காகத் தன்னைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கேசவன் சுயம் இழந்து பேசுவது சபாபதிக்கு அப்பட்டமாகத் தெரிந்தது.

‘ஒரு உண்மையச் சொல்லட்டுமா…” என்ற சபாபதி, ‘கொஞ்சம் பக்கத்துல வந்து உட்காருங்க…” என்று அவரை உட்காரச் செய்தான். கடை முதலாளியும் சபாபதியின் பேச்சை ஆவலோடு கேட்கலானார்.

‘நானோ, உங்க முதலாளியோ…’ என்று பேச்சைத் துவக்கியவன், ”நீங்க கோவிச்சுக்கக் கூடாது” என்று முதலாளியிடம் ஒரு விண்ணப்பம் போட்டுக்கொண்டான்.

‘நானோ, உங்க முதலாளியோ சாதாரண மீடியேட்டர்கதான்… அதாவது ஒரு பாலம் மாதிரி. உங்களுக்குப் பாதையக் காட்டுறோம். ஆனா, நீங்களும் ஸ்ரீதரும்தான் மேட்டர். அதாவது, கலைஞர்கள்.”

கலைஞன் என்ற வார்த்தையில் கேசவனின் உடம்பில் ஒரு மாற்றம் தெரிந்ததை சபாபதியும் முதலாளியும் நேரடியாகக் கண்டனர்.

‘ஏன்னா, உங்களுக்குள்ள எரிஞ்சிக்கிட்டு இருக்கே ஒரு பொறி… அதுதான் இத்தனை காலமா உங்களைக் காபந்து செஞ்சிக்கிட்டு இருக்கு. அது இல்லாட்டி, இந்த மனச நீங்க தக்கவெச்சிருக்க முடியாது. விதவிதமா போட்டோ வுக்கு போஸ் குடுத்து நின்னிருக்க முடியாது. ஊருக்குள்ள ஷூட்டிங் வேனைப் பாத்ததும் ஒரு நெலையில நிக்காமத் தவிக்கிறீங்க பாருங்க… அந்தத் தவிப்பு சாதாரணமானது இல்ல… அது எல்லாருக்கும் வராது.”

சபாபதியின் வார்த்தைகள் அத்தனையும் கேசவனுக்கு சத்திய வாக்குகளாக ஒலித்தன.

அந்த நேரம் குழந்தையை இடுப்பில் இடுக்கியபடி ஒரு பெண் தூக்குவாளி ஒன்றை ஏந்தி கடைக்கு வந்தாள்.

”அஞ்சு ரூவாய்க்கி ரசம் ஊத்துங்கண்ணே…’ – தோசைக் கல்லை ஒட்டியபடி நின்று கேட்டாள்.

பொதுவாக, இம்மாதிரி இடைப்பட்ட நேரத்தில் சில சில்லறை யாவாரங்கள் நடக்கும். வீடுகளில் வெறும் சாதம் மட்டும் தயார் செய்து விட்டு, குழம்பு, ரசத்தைக் கடைகளில் வாங்கி சிலர் பொழுதைக் கழிப்பது உண்டு.

முதலாளிகூட முதலில் இந்த யாவாரத்துக்கு ஒப்புக்கொள்ளவே இல்லை. முதல் இரண்டு நாள் காசு கொடுத்து வாங்குவார்கள். பிறகு, அதற்கும் கடன் சொல்வார்கள். ஓசி யேவாரம் பார்க்கிறாப் போல் ஆகிவிடும் என்பது அவர் கணக்கு. கேசவன்தான் வற்புறுத்தி செய்யச் சொன்னார். யாவாரம் இல்லாத நேர்த்தில் அஞ்சு, பத்து என்று ஒரு பத்துப் பேர் வந்துபோனால், அது ஒரு செலவை அடித்துச்செல்லும். அதுவும் இல்லாமல் குழம்பு, ரசம் கேட்டு வருபவர்கள் ரெம்பவும் வழியற்றவர் கள், இல்லாதவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு ஏதோ நம்மால் ஆன சின்ன உதவியாக இருக்கும். ஒரு தர்ம காரியம் என்றார். அது இவர்கள் நினைத்ததைவிடக் கணிசமான வருமானத்தையும் தந்தது.

சபாபதியின் பேச்சில் சிக்குண்ட கேசவனால் எழுந்து சென்று ரசம் எடுத்துத் தர முடியவில்லை. முதலாளிக்கும் அப்படியே இருந்தது. பட்டறை யில் நின்றிருந்த வேலையாளை ஏவிவிட்டார்.

‘அளவா ஊத்திக் குடுப்பாவ்…”

ஏதோ ஒரு உந்துதலில் சிரித்த கேசவன், ”நான் சாதாரண ஹோட்டல் கடைல நிக்கிற புரோட்டா மாஸ்டரு… வேற எதும் எனக்கு தெரியாது” என்றார்.

தலையைக் குலுக்கிய சபாபதி, ”நீங்க பெரிய கலைஞரு…’ என்றான். மறுபடியும் கேசவன் சிரித்தார். அது அவரது இயல்பில் இருந்து மாறி இருந்தது.

”நா நடிச்சதே இல்லியே”- சொல்கிறபோதே சிலம்பாட்ட போட்டோவும் குதிரைச் சவாரி போஸும் கேசவனை முட்டித்தள்ளின.

”முயற்சி செய்யலேன்னு சொல்லுங்க… என்னங்ண்ணாச்சி…” என்று முதலாளியையும் சாட்சிக்கு இழுத்தான் சபாபதி.

சபாபதியின் முனைப்பும் கேசவனின்

மயங்கிய நிலையும் பார்த்து முதலாளிக்கு

ஏதோ ஒரு வித்தியாசம் தெரிந்தது. இரண்டு பேரையும் மாறி மாறிப் பார்த்தார். கேசவன் குதிரைச் சவாரியில் சென்னைக்குப் பறந்துபோவதைப் போல ஒரு காட்சி முதலாளியின் கண்களில் தெரிந்தது.

”சினிமாவுல சேரணும்… ஆயிரம், லட்சம்னு சம்பாதிக்கணும்னு நம்ம கேசவெ எப்பவுமே ஆசப்பட்டதில்ல. என்னமோ சின்ன வயசி லேர்ந்து ஓர் எண்ணம்… எதுனாச்சும் ஒரு படத்துல ஒரு சின்னதா ஒரு கட்டம் வரணும்… அவ்வளவுதே”- முதலாளி மென்மையாகப் பேசினார்.

”தப்பு…” சபாபதி அந்த வார்த்தையைக் கொஞ்சம் சத்தமாகத்தான் சொன்னான்.

”அது ரெம்பத் தப்புங்கறேன். கலைஞன்கிறவன் கூடுதலாவே ஆசப்படணும். எதையும் பெருசாவே நெனைக்கணும். அவனோட கனவு பூமியத் தாண்டி ஓடணும், நட்சத்திரங்களை மிதிச்சு ஏறணும், வானத்தை எடுத்து இடுப்பில் சேத்துக்கட்டி இழுத்துட்டுப் போற மாதிரி… அவனோட ஒவ்வொரு எண்ணமும் உயரமா இருக்கணும். அப்பதான் அவனுக்குள்ள அலஞ்சுக்கிட்டு இருக்கிற கலை மனசு உயிர்ப்போட இருக்குனு அர்த்தம். புரோட்டாவுக்கு யார் வேணும்னாலும் மாவு பெசையலாம். காசிருந்தா யார் வேணாலும் கடையப்போட்டு கல்லாவுல உக்காரலாம். ஆனா, ஒரு கலைஞனா இருந்த இடத்துல இருந்தே இந்திர லோகத்துல வாழ முடியாது. அதனால…’

மேலும் தனது பேச்சைத் தொடர இருந்த சபாபதிக்கு கேசவனிடம் இருந்து வெளிப்பட்ட ஏதோ ஒரு வெளிப்பாடு அவனது பேச்சை நிறைவு செய்தது.

– டிசம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *