Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

வழிச் செலவு

 

பிப்ரவரி மாதம் என்றால் எல்லோருக்கும் சந்தோஷம்தான். சுண்டுவிரல் மாதம் என்று கொஞ்சுவான் என் தம்பி ராஜா. லீப் வருஷ பிப்ரவரியின் இருபத்து ஒன்பதாம் தேதியை ஆறாவது விரல் என்பான். அப்பாவுக்கும்கூட பிப்ரவரி மகிழ்ச்சி தரக்கூடிய மாதமாகத்தான் இருந்தது. இரண்டு மூன்று நாட்கள் குறைவாக வேலை செய்தாலும் முழுமாசச் சம்பளமே கிடைத்துவிடுவதோடு இரண்டு மூன்று நாட்கள் முன்னாலேயே சம்பளம் வந்துவிடுவதில் கவர்ண்மெண்டை ஏமாற்றிவிட்ட திருப்தி அவருக்கு இருக்கும். ஆனாலும் லீப் வருஷம் பிப்ரவரி இருபத்தி ஒன்பதாம் தேதி வேலைக்குப் போவதில் அவருக்கு எரிச்சலும் வரும். “நல்லவேளையாக சம்பளத்தைத் தமிழ் மாதக் கணக்கில் போடாமல் விட்டானே! இல்லையென்றால் ஆடி மாசம் முப்பத்தியிரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டும் அடுத்த சம்பளத்திற்கு!” என்று அம்மா நிம்மதி கொள்வாள்.

பள்ளிக்கூடங்களில் என்ன காரணத்தினாலோ ” எக்ஸ்கர்ஷன் ” அழைத்துப்போக பிப்ரவரி மாதத்தையே தேர்ந்தெடுக்கிறார்கள். எங்கள் பள்ளிக்கூடத்திற்கு வைத்தியனாதன் சார் ஹெட்மாஸ்டர் ஆன பிறகு படிப்பைத் தாண்டி கலை பண்பாடு போன்றவற்றிற்கெல்லாம் அதிக முக்கியத்துவம் ஏற்பட்டது. வாராவாரம் வெள்ளிக்கிழமை மூன்று மணிக்கு பள்ளியின் மாணவர் பேரவைக் கூட்டம் நடக்க ஆரம்பித்தது அவர் ஹெட் மாஸ்டராக வந்தபின் தான் . ” அன்பார்ந்த மாணவ மாணவிகளே ! ” என்று மைக்கைப் பிடித்து அவர் பேச ஆரம்பித்தாரென்றால் மாணவமணிகள் மட்டுமல்ல; ஆசிரியப் பெருந்தகைகளே கலங்கிப்போவார்கள். அப்படி நடந்த ஒரு கூட்டத்தில்தான் எங்கள் பள்ளியின் ஆண்டு சுற்றுலாவிற்கான பிள்ளையார் சுழி போடப்பட்டது. அந்த வெள்ளிக்கிழமை மூன்று மணி ஆவதற்கென்றே காத்திருந்தாற்போல பரபரப்பாக இருந்த ஹெட்மாஸ்டர், மைக்கைப் பிடித்து முக்கால் மணி நேரம் அன்றைய ஹிண்டுவில் டூரிஸம் பற்றிவந்திருந்த கட்டுரையைப் பற்றி blade போட்டு முடித்தபின்தான், மாணவர் பேரவைத் தலைவனே அன்றைய கூட்டத்திற்கு வரவேற்புரை வாசிக்க வேண்டியிருந்தது. அன்று எங்கள் தமிழாசிரியர் திருச்சியின் மேன்மைகளைப்பற்றி அடுக்கு மொழியில் பிளந்து கட்டிக்கொண்டிருக்கும்போது வழக்கம்போல ஹெட் மாஸ்டர் குறுக்கிட்டு, ” கல்லணையை, யார் எப்போது கட்டினார்கள் என்று தெரியுமா? ” என்று மாணவ மணிகளைப் பார்த்து எங்களுக்கு பதில் தெரிந்திருக்காது என்ற நிச்சயத்தில் விளைந்த காது – டு – காது சிரிப்போடு ஒரு கேள்வியை வீச, அந்தச் சமயத்தில்தான் எங்கள் வகுப்பு இருதயராஜ் அவன் இதய ராணியான சாந்தகுமாரியின் கவனம் ஈர்க்க அவள் மீது கல்லை விட்டெரிந்த சாகசக் காட்சியைப் பார்த்து வியந்துகொண்டிருந்த சங்கரன், திடீரென ஹெட்மாஸ்டர் தன்னைத்தான் ” யார் கல் வீசியது ? ” என்று கேட்டதாக நினைத்துக் கொண்டு , உண்மையைச் சொல்லிவிடவேண்டும் என்ற அரிச்சந்திர உத்வேகத்தில், ” இருதயராஜ்தான் சார் ” என்ற சொன்ன பதிலைக்கேட்டு கூட்டமே கலகலத்துப்போனது. எல்லோரும் சிரித்ததைப் பார்த்து ஹெட் மாஸ்டரின் கேள்விக்கு உண்மையிலேயே பதில் தெரியாத நானும் நண்பர்களும் கொஞ்சம் அதிகமாகவே சிரித்தோம். விக்கித்துப்போன இருதயராஜ் சங்கரனை என்றாவது ஒரு நாள் பழிவாங்கியே தீரவேண்டும் என்று பார்த்த பார்வையின் கோபம் சங்கரனின் நெடிதுயர்ந்த உயரத்தை அளந்த கணத்தில் அடங்கிப்போனது. அன்றிலிருந்து இருதயராஜை எல்லோரும் ( ஹெட் மாஸ்டர் உள்பட ) ” கல்லணை ” என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர். ஹெட் மாஸ்டர் தன் பள்ளியின் மாணவ மணிகள் பொது அறிவிலும் இவ்வளவு பூஜ்யங்களாக இருப்பதை, அதுவும் பள்ளிக்கூடம் அமைந்திருக்கிற திருச்சிக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு சரித்திரப் பிரஸித்தி பெற்ற இடம் பற்றிக்கூட அறியாமையிலிருப்பதை அகற்ற உடனேயே கல்லணைக்கு சுற்றுலா செல்ல பத்து நாட்களுக்குள் ஏற்பாடு செய்துவிட்டார். இப்படி ஆரம்பித்த எக்ஸ்கர்ஷன் ஒவ்வொரு ஆண்டின் முக்கிய நிகழ்வாக மாறிப் போயிற்று.

சாவித்திரி டீச்சர்தான் எப்போதும் சுற்றுலாவுக்குத் தலைமை. சாவித்திரி டீச்சர் நல்ல சிவப்பாக எல்லோருக்கும் பிடிக்கும் படியான நடை உடை பாவனைகளோடு எல்லா காலத்திற்கும் தேவையே என்பதுபோலப் புடவைக்கு ஏற்ற கலரில் குடையும் வைத்துக்கொண்டிருப்பார். ரயில்வே காலனியின் தென் புறத்திலுள்ள சர்ச்சுக்குப் பக்கத்தில்தான் அவர் வீடு இருந்தது. அவர் வீட்டில் அவரைத் தவிர வேறு யாரும் இல்லாதிருந்தார்கள். சாவித்திரி டீச்சரின் குரல் சன்னமாக குன்னக்குடி வயலினின் மெல்லிய சாகஸ சங்கீதம்போல் தங்க விளிம்பு கட்டி இனிக்கும். எங்கள் பள்ளியின் பெண்பிள்ளைகள் மேடையில் பாட அவர் சொல்லிக்கொடுத்த பாரதியாரின் ” மலரின் மேவு திருவே நின்மேல் மையல் கொண்டு நின்றேன் ” பாடலை வேறு யாருக்கும் அல்லாது சாவித்திரி டீச்சர் பாடுவதற்காகவே பாரதியார் எழுதினாரோ என்றுதான் எனக்குத்தோன்றும். பள்ளியின் கலைசார்ந்த பொது விஷயங்களில் அவரின் ஈடுபாடு மற்ற ஆசிரியைகளுக்கு மிகுந்த பொறாமையையே ஏற்படுத்தியிருந்தது. அவரைப் பற்றின கதைகளெல்லாம் எல்லோருக்கும் ஸ்வாரஸ்யம் மிகுந்ததாய் இருந்தாலும் எங்கள் பள்ளிக்கு அவர் ஒரு தவிர்க்கவியலாத ஆளுமையாய்த்தான் இருந்தார்.

கல்லணை, முக்கொம்பு போன்ற பக்கத்திலுள்ள இடங்களுக்கெல்லாம் சுற்றுலா போய்வந்த பின், சற்று தள்ளியுள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கும் போய் அவை எல்லாம் மாணவ மணிகளால் பெரிதும் விரும்பப்பட்ட நிலையில் அந்த வருடம் கொடைக்கானல் போய்வர முடிவு செய்யப்பட்டது. இந்த முறை சாவித்திரி டீச்சருக்குத் துணையாக ஆண் ஆசிரியர்கள் தேவைப்பட , ஆண் ஆசிரியர்கள் மட்டுமல்ல எந்த ஆசிரியையும் தயாராக இல்லை. எனவே அந்தச் சுற்றுலாவைக் கேன்சல் செய்துவிட ஹெட்மாஸ்டர் முடிவு செய்ய நினைக்கும்போது அப்போதுதான் புதிதாக அப்பாய்ன்மெண்ட் ஆகி இருந்த சரத் என்கிற இங்ஜினியரிங் ஆசிரியரைச் சாவித்திரி டீச்சர் சம்மதிக்க வைத்திருந்தார். சரத் வாத்தியாரை பார்த்தால் எங்களுக்கெல்லாம் வாத்தியாராகவே தோன்றவில்லை. என் நண்பன் சங்கரனில் பாதிதான் இருந்தார். ரொம்ப சின்னப்பையனாய்த் தோன்றுவதைத் தவிர்க்க தாடி வளர்க்க முயற்சித்துக் கொண்டிருந்தார். இண்டர்வெல்லில் ஒதுக்குப் புறமாய்ப் போய் சிகெரட் குடித்தது சீனியர் ஆசிரியர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர் முக்கால்பங்கு மலையாளத்தில் கால் பங்கு தமிழ் கலந்து மாணவர்களுக்கு ஊட்டிய இங்ஜினீரிங் பாடம் மாணவர்களை அதிகம் சுவாரஸ்யப் படுத்தாதபோதெல்லாம் ஜேசுதாஸ் பாடல்களைப் பாடி எங்கள் தூக்கத்தைக் கலைத்து மீண்டும் இஞ்சினீரிங் ஊட்டுவார். சாவித்திரி டீச்சருக்கும் மலையாளம் தெரிந்திருந்ததில் அவரின் உதவி சரத் சாருக்கு அதிகம் தேவையாயிருந்தது. ஒன்றிரண்டுமுறை சரத் சார் சாவித்திரி டீச்சர் வீட்டிற்கு வந்திருந்தது பள்ளிக்கூடத்தின் ஒட்டுமொத்த கற்பனையிலும் தீ யைத் தடவி விட்டிருந்தது. ஆனாலும் மாணவமணிகளுக்குக் கொடைக்கானல் இன்னொரு தீபாவளியைப் போன்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

எங்கள் கேப்டன் ஷம்சுதீனும் சங்கரனும் எப்படியும் எக்ஸ்கர்ஷன் போவார்கள். ஏனென்றால், அவர்கள்தான் எங்களையெல்லாம் டீச்சர் சொல்படி எங்களை ஓட்டிச் செல்லும் நல்ல மேய்ப்பர்கள். டீச்சர்கூட எங்களை அடிக்க மாட்டார். ஆனால் ஷம்சுதீன் திடீரென்று படக்கூடாத இடத்திலெல்லாம் ஏதேனும் செய்து வலிக்க வைத்துவிடுவான். மாணவிகளைப் பார்த்துக்கொள்ள இருதயராஜ் என்கிற கல்லணை தன்னையே அதற்கு நாமினேட் செய்துகொண்டிருந்தான். சாவித்திரி டீச்சரும் சிரித்துக்கொண்டே அதற்கு சம்மதம் சொல்லியிருந்தார். ஆனால் அவன் இதய ராணி சாந்தகுமாரி இந்த முறை சுற்றுலா வருவாளா என்று தெரியாததால், அவன் டென்ஷனில் இருந்தான். நான் என் அப்பாவிடம் இன்னும் சுற்றுலாவுக்குப் பர்மிஷன் கேட்கவில்லை. நான் கேட்கும் நிலையிலும் இல்லை. அரையாண்டுத் தேர்வில் எல்லா சப்ஜெக்டுகளிலும் ஜஸ்ட் பாஸாகி இருந்ததில் ப்ராக்ரெஸ் ரிப்போர்ட்டில் எங்கள் வகுப்பாசிரியர் ” கவனம் தேவை ; கரணம் தப்பினால் மரணம் ” இன்னும் இதுபோன்று ரொம்பப் பயப்படுத்தி சிகப்பு மையால் நான் ஏதோ ஹேர்பின் வளைவுகளில் வண்டியை ஓட்டிச் சென்றுகொண்டிருப்பதைப்போல் எனக்கு அபாய அறிவிப்பைக் கொடுத்திருந்ததால், அதில் கையெழுத்து வாங்கவே ரொம்ப சிரமமாக இருந்தது. எப்படி சுற்றுலாவிற்கு அனுமதி கேட்பது. அனுமதி மட்டுமல்ல பணமும் வேண்டும் .

சங்கரன், ” பணத்தைப்பத்தி க் கவலைப் படாதடா. நான் பாத்துக்கறேன் ” என்றான். எனக்கு இன்னும் பயமாய்ப் போயிற்று. அவன் அப்பா பாகெட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வந்துவிடுவானோ என்று பயம் வேறு. ஆனால் எப்படி அந்தக் கடனை என்னால் அடைக்க முடியும் ? நான் படிக்கும் அழகுக்கு எனக்கு வேலையே கிடைக்காது என்று அம்மா வேறு ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறாள். இவையெல்லாம் மனதி ஓட , ” எப்படிடா பாத்துப்ப ? ” என்று கொஞ்சம் ஆவல் பொங்கத்தான் கேட்டேன். அதற்கு அவன், சாவித்திரி டீச்சர் வழிச் செலவிற்கென்று அவனிடம் முன்னூறு ரூபாய் கொடுத்திருப்பதாகவும் அதிலிருந்து எவ்வளவு வேண்டுமானாலும் ஏழை மாணவர்களுக்காக எடுத்துக் கொள்ளலாம் என்றும் அவனுக்கு அனுமதி அளித்திருந்ததைச் சொல்லிப் பணத்தையும் என்னிடம் காட்டினான். எனக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது. கொஞ்ச நாட்களாகவே அடிக்கடி எரிந்து விழுந்துகொண்டிருந்த அப்பாவிடம் எப்படிக் கேட்பது என்று தெரியவில்லை. அம்மாவிடம் என் தம்பி ஏற்கனவே ” என் சேர்க்கை சரியில்லை ” என்று வயதிற்கு மீறிய வார்த்தைகளில் கோள்மூட்டியிருந்ததில், அம்மாவும் எனக்கு சாதகமாகப் பேசமாட்டாள் எனத் தெளிவாயிற்று. சாலமன் பாப்பையாவின் பட்டிமண்டப வார்த்தைகள்போல் ” கொஞ்சம் கஷ்டம்தான் ” என்றுதான் பட்டது. ஆனாலும் நாட்களை ரொம்பக்கடத்த முடியாததால், அன்று அப்பா சாப்பிடும்போது கொஞ்சம் சுவைத்துச் சாப்பிடுவதுபோல் பட்டதால், மெதுவாக மேட்டரை ஆரம்பித்தேன். ” அப்பா, ஸ்கூல்ல கொடைக்கானலுக்கு எக்ஸ்கர்ஷன் போராங்க; நானும் போட்டுமா ” என்று கேட்டதுதான் தாமதம். கேசரியில் முந்திரிப்புப் பருப்புப் போட்டதுபோல ஆங்காங்கே கெட்டவார்த்தைகள் சிதற அவர் சொன்னதன் சுருக்கம் இதுதான்: ” போய்ப் படிக்கிற வழியைப் பாரு. உனக்கும் வேலையில்ல உங்க வாத்திகளுக்கும் வேலயில்ல ” .

மறு நாள் சங்கரனிடம் நடந்ததைச் சொன்ன போது ” எந்த அப்பாடா கேட்ட உடனே சரின்னு சொல்லியிருக்காங்க இந்தப் பொன்மலையில? ஒரு நாள் கழிச்சு இன்னொருதடவை கேளு ” என்று ஊக்கம் கொடுத்தான். எனக்கு என்னவோ நம்பிக்கையில்லாதால், நான் மீண்டும் முயற்சிப்பதாகவே இல்லை. மற்ற நண்பர்களெல்லாம் மிகவும் சந்தோஷமாகக் கொடைக்கானல் நாளை நோக்கித் தவமிருந்துகொண்டிருந்தபோது என் மனம் வெறுமையில் தவித்துக்கொண்டிருந்தது. ஆனால் சுற்றுலா நாளின் ஐந்து நாட்களுக்கு முன்பிருந்து சாவித்திரி டீச்சரை ஸ்கூலில் காணவில்லை. உடம்பு சரியில்லையென ஷம்சுதீன் சொன்னான். ஆனால் சங்கரனோ டீச்சரின் வீடு பூட்டியிருப்பதாகவும் டீச்சர் ஊரிலேயே இல்லை எனவும் சொன்னான். மேலும் ரகசியமாக என்னிடம் சாவித்திரி டீச்சர் இன்னும் ஐ நூறு ரூபாய் வழிச் செலவுக்கெனக் கொடுத்து வைத்திருப்பதாகவும் சொன்னான். சரத் சாருக்கும் சாவித்திரி டீச்சர் எங்கு போயிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

அன்று காலை ஸ்கூலுக்குக் கிளம்பும்போது சங்கரன் அவசரமாக வந்து ரொம்பப் பதட்டத்துடன் சாவித்திரி டீச்சர் இறந்து போய்விட்டதாகச் சொன்னான். அவர்கள் வீட்டிலேயே தூக்குப் போட்டுக் கொண்டு விட்டதாகவும் அதுவும் அவனிடம் ஐ நூறு ரூபாயைக் கொடுத்த நாளாகத்தான் அப்படி நடந்திருக்க வேண்டும் என்று சொல்லும்போதே கேவிக் கேவி அழ ஆரம்பித்துவிட்டான். நானும் அவனும் மௌனமாக சாவித்திரி டீச்சர் வீட்டிற்குப் போனபோது அங்கு பெரிய கூட்டம் நின்று கொண்டிருந்தது. போலிஸ்காரர்கள் எல்லோரையும் ” போங்க போங்க இங்க என்ன வேடிக்கை ” என்று விரட்டிக் கொண்டிருந்தாலும் கூட்டம் கலையவில்லை. சரத் சாரை அந்தப் பக்கம் காணவில்லை. கூட்டத்தில் யார் யாரோ என்னென்னவோ கதை சொல்லிக்கொண்டிருந்தார்கள். மனதில் ” மலரின் மேவு திருவே ” பாடல் சாவித்திரி டீச்சரின் குரலில் ஓடிக்கொண்டிருந்தது.

ஹெட் மாஸ்டர் வந்த போது அந்த இடம் பரப்பரப்பானது. வீட்டிற்குள்போய் சற்று நேரத்தில் வெளிவந்த அவர் பாடியை போஸ்ட் மார்ட்டத்திற்கு எடுத்துச் செல்ல போலிஸ் தயாராவதையும் மற்ற செலவிற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்ர போது கூட்டம் கொஞ்சம் கலையத் தொடங்கியது. அதைக் கவலையோடு பார்த்துக்கொண்டிருந்த ஹெட் மாஸ்டர் சற்றே தனிமைப்பட்ட போது சங்கரன் அவர் கைகளில் எண்ணூறு ரூபாயைத் திணித்துவிட்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்தான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)