வல் விருந்து

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 7, 2018
பார்வையிட்டோர்: 7,264 
 

கும்பமுனிக்கு அன்று குளிமுறை. என்றால் அன்று மட்டும்தான் குளிப்பார் என்று பொருளில்லை. அன்றுதான் எண்ணெய் தேய்த்துக் குளிப்பார் என்று அர்த்தம். மற்ற நாட்களில் எண்ணெய் தேய்க்க மாட்டார் என்றும் உரை எழுத முடியாது. மற்ற நாட்களில் உருக்குத் தேங்காய் நெய். உண்மையில் எள்+நெய் தானே எண்ணெய்? எனவே வாரந்தோறும், சனிக்கிழமையில், எள் நெய் தேய்த்துக் குளியல். தவசிப் பிள்ளை, வாராது வந்த கனகமாமணி என்று கும்பமுனியைப் போற்றுவது காரணமாக இருக்கலாம். தாங்க ஆளுண்டு என்றால் தளர்ச்சியும் உண்டுதானே!

எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்றால் என்ன? தேய்த்தோம் குளித்தோம் என்று இல்லை. அது ஒரு மதச் சடங்கு போல. புரியவில்லை என்றால் Ritual போல. காலையில் முழு உளுந்தும், அரிசியும், வெந்தயமும், பூண்டும், துருவிய தேங்காயும், தட்டிப் போட்ட சுக்கும், சேர்த்து உப்புப் பார்த்துக் கொதிக்க வைத்த உளுத்தம் கஞ்சி.

மந்தார மலையை மத்தாக, வாசுகிப் பெரும்பாம்பை வடமாக, ஆமையை அடை கல்லாக, சந்திரனை அடை தூணாகக் கொண்டு, வாலியும் சுக்ரீவனும் பாற்கடலைக் கடைந்த போது, அமுதம் வருவதற்கு முந்தி வந்தது உளுத்தங்கஞ்சி என்பார்கள் லோக்கல் தலபுராணம் யாத்த புலவர்கள்.

காலைக் கஞ்சி ஆனவுடன், கும்பமுனி படிப்புரையின் கைப்பிடிச் சுவரில் அமர்ந்திருப்பார். இரு வழியும் தூயவந்த அதி சுத்த கௌபீனம் தரித்திருப்பார். பக்கத்தில், முன்னாளில் காப்பி குடிக்கும் பித்தளை வட்டையில் காய்ச்சிய நல்லெண்ணெய் இருக்கும்.

கிழமை தோறும் பனையோலைப் பெட்டியில் பெரிய எண்ணெய்ப் பரணிகள் அடுக்கி, தலைச் சுமடாகக் கொண்டு வரும் தாணுச் செட்டியாரிடம் வாங்குவதுதான் சுத்தமான நாட்டுச் செக்கு நல்லெண்ணெய். செட்டியார் என்றால் அவர் நாட்டுக்கோட்டைச் செட்டியோ, சைவச் செட்டியோ, கோமுட்டிச் செட்டியோ, ஆரிய வைசியச் செட்டியோ, இலை வாணியச் செட்டியோ அல்ல. எண்ணெய்ச் செட்டி. எங்கோ ஆடுகிற நாட்டுச் செக்கில் கொள்முதல் செய்து சில்லறையாகக் கடனுக்குக் கச்சவடம் செய்பவர். எண்ணெய் சுமந்து கரிய மேனியெங்கும் எண்ணெய் மினுக்குடன் இருப்பார். இலக்கியத் தமிழில் எழுதினால் நீலமேக சியாமள வண்ண எண்ணெய்ச் செட்டியார். எண்ணெய் அளந்து ஊற்றியபின் கையில் புரண்டிருக்கும் எண்ணெயை உடம்பில் பூசிப் பூசி, சிவலிங்கத்துக்கு எண்ணெய் முழுக்காட்டியது போல. ஒரு நாளைக்கு ஓர் ஊர் என்று நடந்து அலைந்து திரியும் வாணிபம். வாயகன்ற நார்ப்பெட்டியில், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், வேப்ப எண்ணெய்….

கும்பமுனி வீட்டுப் புரையில் பாரம் இறக்கினால் கொஞ்சம் எழுத்தாளருடன் வாயாடுவார். தாணுச் செட்டியாருக்கு எழுத்து வாசனையும், கம்யூனிஸ்டு ஆதரவும் உண்டு. அன்று ஜில்லா கமிட்டித் தலைவராக இருந்தவர் ஒரு செட்டியார் என்பது ஒரு உப தகவல். வேறு இங்கு அதைக் குறிப்பிடுவதற்கு உள்நோக்கம் ஏதும் இல்லை. மேலும் சாதியும் மதமும் இல்லாத அரசியல் கட்சி ஏதும் உண்டா இங்கு? கும்பமுனி எந்தக் கொள்கையில் இதுவரை நிலை குத்தி நின்றிருக்கிறார்? தாணு செட்டியாருக்கு அது ஓய்வு நேரம். வாதாடி புரட்சியை கும்பமுனி வீட்டு முற்றம் வரை கொண்டு வந்து நிறுத்தி, ஒரு கட்டன் சாயாவும் குடித்த பிறகே மறுபடி சுமடு எடுப்பார்.

ஒரு நாள் கும்பமுனி கேட்டார்,” வே, செட்டியாரே! இதுவரை தோழர்கள் எல்லோரும் சேர்ந்து எத்தனை கோடிப் பணத்துக்குச் சாயாவும் பீடியும் குடித்திருப்பியோ? புரட்சி எங்கிணவரை வந்திருக்கு?”

“இதென்ன வில்லுப் பாட்டிலே வரத்துப் பாடப்பட்ட எடவாடா?” என்றார் தவசிப் பிள்ளை.

தாணுச் செட்டியாருக்கு, கும்ப முனி ஒரு பூர்ஷுவா நிலவுடைமை திரிபுவாத திருத்தல்வாத சக்தி என்றும் பிற்போக்கு என்றும் திருத்தவே முடியாது என்றும் முன் தீர்மானம் உண்டு. ஒருவேளை இந்துத்வா ஆக இருப்பாரா என்றொரு ஐயமும். சிரித்து விட்டுப் போய் விடுவார். அடுத்தச் சந்திப்பு அடுத்த மாதம்தான்.

வாங்கிய நல்லெண்ணெயைப் பரணியில் ஊற்றி வைத்திருப்பார் தவசிப்பிள்ளை. குளி முறை அன்று கொஞ்சமாக எடுத்து, பெரிய எண்ணெய்க் கரண்டியில் அளவாய் ஊற்றி, அடுப்பில் வைப்பார். நல்லெண்ணெய் நன்கு காயவும் வேண்டும், முறுகவும் கூடாது. இது கொழுக்கட்டையும் வேண்டும், மாவும் குறையக்கூடாது என்பது போல. எண்ணெய் முறுகாமல் இறக்குவதற்கு எளிய வழி ஒன்று உண்டு. எண்ணெய் காய்ந்து வரும்போது இரண்டு நெல் எடுத்து எண்ணெய்ச் சட்டியில் எறிய வேண்டும். நெல் பொரியும் பருவம் சரியான பருவம். பிறகு சதைத்து வைத்திருந்த இஞ்சி, ஒன்றிரண்டாய்த் தல்லிய குருமிளகு போட்டுப் பொரித்தவுடன் இறக்கி விடலாம். இளஞ்சூட்டில் நல்லெண்ணெய் வடிகட்டியபின், உமியுடன் பொரிந்து கிடக்கும் நெல்லைப் பொறுக்கி வீசிவிட்டு, பொரிந்து கிடக்கும் இஞ்சி, குருமிளமை வாயில் போட்டுக் கரகரவெனக் கடித்துத் தின்பது ஆலயம் தொழுவது போல சாலவும் நன்று. கும்பமுனிக்குக் கடைவாய்ப் பற்கள் கண்காணாத தேசத்துக்குப் போய்விட்டபடியால், தவசிப்பிள்ளையே அதைத் தின்று விடுவார்.

கௌபீன சுத்தனான கும்பமுனி, சிரசில் இருந்து கால் பெருவிரல் வரை எண்ணெய் தேய்த்து முடிக்க 24 நிமிடங்கள் ஆகும். அஃதென்ன கணக்கு 24 நிமிடங்கள் என்று கேட்பீர்கள்! ஏனெனில் ஒரு நாழிகை நேரமாகும் என்று எழுதினால் உங்களுக்கு அர்த்தமாகாது. நீங்கள் FB, Twitter காலக் கணக்கர்கள்.

எண்ணெய்ச் சொட்டுகளை தொப்பூழ் குழி, மூலஸ்தானம், செம்பியன் ஏற்றையின் முகம் எங்கும் தொட்டு வைப்பார் நிதானமாக. மீசை இல்லாத, பல் விழுந்த, வழுக்கையும் நரையும் கூடிய, தோல் திரைந்த கிழட்டு உடலுக்கு எண்ணெய் முழுக்காட்டியது போலிருந்தது கும்ப முனியைப் பார்க்க. தலையினின்றும் இழிந்த எண்ணெய் கண்களில் கசிந்து காந்தியது. கம்பனின் கடவுள் வாழ்த்துப் பாடலொன்று சாரைப் பாம்பு போல் சீறிப் பாய்ந்தது.

வான் நின்று இழிந்து, வரம்பு இகந்த

மாபூதத்தின் வைப்பு எங்கும்,

ஊனும் உயிரும் உணர்வும் போல்,

உள்ளும் புறத்தும் உளன் என்ப-

என்று வளைந்தோடியது.

சட்டென்று கட்டன் சாயா தவித்தது கும்பமுனிக்கு. செல்லக் கொஞ்சலுடன் தவசிப் பிள்ளைக்குக் குரல் கொடுத்தார்.

“மக்களே! கண்ணு பிள்ளே… ஒரு சாயா போடேன் டே…”

“எழவு! அன்பு ஒழுகயில்லா செய்யி… வேணும்னா சக்கை வேரிலேயும் காய்க்கும்” என்று எதிர்க்குரல் கொடுத்தார் தவசிப்பிள்ளை.

“முடிவான் புரட்சிக் கவிஞர் ரேஞ்சிலெல்லா பேசுகான்.”

“என்ன புதுசாட்டுச் சொல்லுதேரு? புரட்சி நடிகர் உண்டும். புரட்சிக் கலைஞர் உண்டும்…. இப்பம் யாரு புரட்சிக் கவிஞர்?”

“வேய்! இவுரு ஒரிஜினலு…. கேள்விப்பட்டதில்லையா? கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே இங்கு வேரில் பழுத்த பலா….”

“நீரு கேட்டாப் போதாதா? எனக்கு அதா பாட்டா சோலி! இண்ணைக்குத் தளிகை என்ன செய்யட்டும்? அதைச் சொல்லும்!”

“என்ன இருவத்தோரு கூட்டானும் மூணு பிரசமனுமா வய்க்கப் போறேரு? எப்பவும் உள்ள மொளவச்சமும், முருங்கைக் கீரைத் தொவரனும் தாலா… குளிக்க வென்னி ஆயாச்சா?”

“மொதல்ல கேட்ட சாயாவைக் குடியும்… பொறவு வென்னி அளாவி வைய்க்கேன்…”

படைப்புப் பொறியொன்று மண்டைக்குள் பொன் வண்டாய்க் குடைந்தது கும்ப முனிக்கு. அப்படித்தானே குடையும் எழுத்தாளனுக்கு?

திருக் கார்த்திகை மாதம்….

காமக் கடும்புனல் நீந்தும் பருவத்துப் பெட்டை…

தகிக்க ஒண்ணாது தொடர்ந்தும், துரத்தியும், மோந்தும் முனகியும் செவலை, கறுப்பு, வெள்ளை இடைந்த கடுவன் குக்கல்கள்.

வாலிபமாய் இரண்டு, பெட்டையின் உடன் பிறப்புப் போல.

நடுவயதில் நான்கு- சித்தப்பன், பெரியப்பன், அப்பன், மாமன் ஆகலாம்.

நொண்டி ஒன்று கல்லெறிபட்டுக் காயத்தின் புண் வடிய…

சொறிப்பட்ட தொன்று, தாயாதியோ, சொக்காரனோ!

கிழட்டு நாயும் ஒன்று….

தாய்வழிப் பாட்டனோ, தாதை வழி ஐயனோ!

ஆண்டுச் சேமிப்பான அரைச் சொட்டு விந்து முடுக்கியது.

பந்தயத்தின் கடைசி ஓட்டக்காரனாய்!

இந்தப் பருவகாலமே கிழவனின் இறுதிப் பருவகாலம் எனலாம்.

“நாயோனி’ விருது அதன் மோகம், தாகம், சோகம், வேகம்…

அதுவென்ன பத்ம விருது பெற சினிமாவுக்குப் பாட்டெழுதிற்றா? முதுகுமேல் கால் தூக்கிப் போடவே முயல வேண்டியதிருக்கும்! கிழட்டு நாயும் அஞ்சலோட்டத்தில்….

இளைக்க இளைக்க… நாத் தொங்கத் தொங்க…

இனி அடுத்தக் கட்டம்- தேவாசுரப் போர் போல, மாபாரதப் போர் போல, இராவணாசுரப் போர் போல, தலையானங்காலத்துச் செருப் போல,கலிங்கத்துப் போர் போல, நாய் யோனி விருதுப் போர் நேரிட வேண்டும் பாட்டனுக்கு!

கிட்டாது எனத் தாத்தனுக்கு உள்ளுணர்வு இருக்குமோ? கிட்டாது எனவே வெட்டென மறக்க விடாத கடும் துளி விந்து…

நாத பிந்து வானால் என்ன, நாய் விந்துவானால் என்ன?

”கெக்கெக் கெக்கே…” என்று சிரித்தார் கும்ப முனி.

புதுமைப் பித்தன் போட்ட ஒற்றையடிப் பாதையில் ஓடியது பின்னவீனத்துவப் பிரம்மாவின் படைப்பு மனம்.

“ என்னா, குளிக்கேரா பாட்டா?” என்றார் தவசிப்பிள்ளை.

”குளிப்பாட்டிக் கெடத்தீரலாம்ணு பார்க்கேரு!” என்றார் கும்பமுனி.

“எண்ணைக்கிண்ணாலும் குளிப்பாட்டிக் கெடத்த வேண்டியதுதானே! அதுக்காச் சுட்டித்தான், போன வருசம் கோளரி சங்கத்திலே உமக்குத் தந்த சரிகைக்கரை வேட்டியும் சரிகை நேரியலும் பத்திரமா வச்சிருக்கேன், பாத்துக்கிடும்! திருநீத்தை நல்ல தண்ணி விட்டுக் கொழச்சு, நெத்தி, தோளு, நெஞ்சு, கை முட்டு, முழங்கை, விலாவு எல்லாம் பூசி… நல்ல அந்தசாட்டு சிவப்பழம் மாதிரியில்லா இருக்கும் பாக்கத்துக்கு? எத்தனை கோயில்லெ பிரசாதம் வாங்கி, நெத்தீல பூசாம ஆரும் பாக்காமக் கீழே போட்டுக்கிட்டு வந்திருகேரு? பொணத்துக்கு முன்னால இருந்து தேவாரம் படிக்கத்துக்கு ஒரு ஆளு பாக்கணும்…”

“யே! அது நாஞ்சில் நாடனுக்க கதையில்லா? தாய்ளி மனுசனுக்கு ஒரு ஆசையைப் பாரு… அப்பம் மத்த புரட்சிக்காரனுவோ சொல்லப்பட்ட வெள்ளாள, பார்ப்பன சார்புள்ள இந்துத்துவா பிற்போக்கு, அராஜக, எழுத்தாளங்கதை போத்தியப் படுத்தீருவேரு? மோடி மந்திரிசபையிலெ ஒரு இணையமைச்சரோ துணையமைச்சரோ மாகாணக் கவர்னரோ கெடைக்கும்ணு பாத்தேன்.. அதுலயும் மண்ணு விழுந்தாச்சு…”

“அதை விடும். நம்ம பாறையாத்துக்குக் கிட்டே ஒரு நினைவு மண்டபம் கெட்டதுக்கு வழி உண்டாண்ணு பாரும்… ஆத்துப் பொறம்போக்கிலே, நீள வாட்டத்திலெ அரை ஏக்கர் கெடச்சாப் போரும் பாட்டா…”

“கல்லுக் குழியிலே ஒரு வாசகம் மறக்காம எளுதீரணும் கேட்டேரா?”

“என்னாண்ணு?”

“எதையும் தாங்கும் இதயம் உறங்குகு இங்கே!”

”அப்பிடி ஏற்கனவே யாரோ உறங்கியாச்சு…”

“இங்கே தமிள் மாணவன் உறங்குகிறான்!”

“அதும் போட்டாச்சு ஓய் பாட்டா!”

”வள்ளுவனுக்கும் கம்பனுக்கும் பொறவு வந்த சாகித்தியகர்த்தாவின் ஓய்விடம்!”

“ரெண்டு விசயம்… மொதல்லெ நீரு பாரதி, புதுமைப் பித்தன், சுந்தர ராமசாமி வரிசையிலே கூட வர மாட்டேரு…”

“வேய்…. உடம்பிறந்தே கொல்லும் சொகக்கேடு நீரு!”

“ரெண்டாவது, சாகித்ய கர்த்தாங்கப்பட்டது வடமொழியாக்கும்.”

“பின்னெ என்னதான் போடுவேரு?” என்றார் கும்பமுனி, சலித்த குரலில்.

“சொன்னா செனப்படப் பிடாது!”

“இல்லவே! சொல்லும்… ரொம்பத்தான் பாவ்லா காட்டுதேரு!”

“சத்தியமா கோவப்படப் பிடாது… ஒறப்பு?”

“ஒறப்பு…”

”எளுதவும் தெரியாத பொளைக்கவும் தெரியாத ஒரு நாறவாப் பொறப்பு இங்கிண செத்துக் கெடக்கு..”

சற்று நேரம் மௌனமாக இருந்தார் கும்பமுனி. கண் கலங்கினாற் போலவும் இருந்தது. மண்டையில் நின்றும் இழிந்த நல்லெண்ணெய் கண்ணில் இறங்கியதாயும் ஆகலாம். சாலையில் ஓடிய நாய்க்கூட்டம் பறத்திய புழுதி அடங்கியிருந்தது. மீட்டும் புதுமைப்பித்தன், ‘வானத்து அமரன் வந்தான் காண், வந்தது போல் போனான் காண்!” என்று புலம்பியது நினைவுக்கு வந்தது.

பரக்கப் பரக்கப் பார்த்தார் கும்ப முனி. தான் பேசியது வர்மத்தில் கொண்டு விட்டது என்பது மனதில் ஏறியது தவசிப்பிள்ளைக்கு என்றாலும் தப்பென்று தெரிந்தும் மாப்புக் கேட்பது தான் பிறந்த குலத்துக்கு அபகீர்த்தி என்பதறிவார் அவர்.

“கொஞ்சம் கூடிப் போச்சா பாட்டா?” என்றார்.

”அதுக்கில்லடே- நான் பொளக்கத் தெரிஞ்சிருந்தா ஒண்ணு முற்போக்கு சங்கத்திலே சேந்திருக்கணும்… தலித்தியம் பெண்ணியம்னு பக்கமேளம் வாசிச்சிருக்கணும்! அல்லது மிஷெல் ஃபூக்கோ, ஜீல் டெலூஸ், ஃபெலிக்ஸ் கத்தாரி, ரோலாண் பார்த், ழாக் மரி எமில் லக்கான், ழாக் தெரிதா என்று ஓதி ஞானஸ்நானம் பெற்றிருக்கணும்… பொளக்கத் தெரியாதவன்னு சொன்னது வாஸ்தவம் தான். அதுலெ எனக்கொண்ணும் வருத்தமில்லெ. ஆனா, எழுதத் தெரியாதவன்ணு சொல்லீட்ட பாத்தியா? அதான் மூலத்திலேருந்து ரெத்தமாச் சாடுகு பாத்துக்கோ…”

“வேற கோவணம் எடுத்தாரட்டா? சரி! விடும் பாட்டா… வென்னிப் பானையைத் தூக்கி முத்தத்திலே வைக்கட்டா? நீரு சுத்தச் சூழலுக்குத் தோதா ஒவ்வொரு செடி மூட்லயா நிண்ணு குளியும்.”

”அதாவது செடிக்கு வென்னி ஊத்தச் சொல்லுகே?”

கதாசிரியனின் மனக்குறளி: இப்பிடியே அஞ்சாறு பக்கம் ஓட்டியாச்சு!

மோதகத்துக்கு உள்ளே பூரணத்தைக் காணோம்!

இவன் சோலியே இதான்பாங்க!

கலைமகளே, வெள்ளைத் தாமரைப் பூவில்

உறைபவளே, சகலகலாவல்லியே…! படைப்பிலக்கிய

மேதாவிகள் தெரிவு செய்யும் ஆகச் சிறந்த

நூறு உலகக் கதைகளில் ஒன்றென இடம்பெற

உன்னதப் படைப்பாக்க வித்து ஒன்று தா!

வழக்கமான மந்தகாசச் சிரிப்புடன், கும்பமுனி கோவணத்தின் கொசுவம் சீராக்கியபோது, தவசிப் பிள்ளையின் அலைபேசி, ‘மருதமலை மாமணியே முருகையா” என்றது மதுரை சோமுவின் குரலில்.

இலக்கியக் குறிப்பு: கும்பமுனிக்கு என்று சொந்தமாய் அலைபேசி கிடையாது.

கதாசிரியன்: யாராவது அன்பளித்தால்?

கும்பமுனி: மொதல்ல காளை கண்ணு போடட்டும்.

மொதல்ல அந்தச் சனியனை எடும்வே, கண்ணுபிள்ளே! காதடைக்கில்லா! உமெக்கெல்லாம் செல்ஃபோன்ல கூப்பிடுதாம் பாரும்! ரெண்டு ரூபாய்க்கு மோரு ஆர்டர் பண்ணி இருந்தேரா?”

”பொறும் பாட்டா! யாருண்ணு பாப்போம்… வெப்ராளம் படாம இரியும்…. தலையிலே நல்லெண்ணெய் வேற தேச்சு ஊறப் போட்டிருக்கேரு! BP ஏறி சன்னி வந்திராம…” என்று சொன்ன தவசிப் பிள்ளை எகத்தாளமாக செல்ஃபோனை எடுத்து, பொத்தானைக் குத்தி அமுக்கி

”அல்லோ… அல்லோ …யாரு?” என்றார்.

”….. ….. …..”

“ஆமா… இருக்காரு… குளிக்கப் போறாரு…”

”…. …. ….”

“ ஒரு அரை மணிக்கூர் செண்ணு வாரும்.. பின்னே ஒரு காரியம்… வரச்சியே ஒரு பாக்கட் பாலு வேண்டீட்டு வாரும்… சாயா போடதுக்கு வீட்டிலே பாலில்லே… இங்க இனி சாயங்காலம்தான் கறப்பா பாலு…”

”… … …”

“ஆங்… என்னது? பஞ்சாரை, சாயாத்தூளெல்லாம் இருக்கு… பாலு மாத்திரம் போதும்.”

“யாருட்டே வே பாலுக்கு எரக்கேரு?” கும்பமுனி.

“எவனோ ஒருத்தன். கல்லூரிப் பேராசானாம்… உம்மைப் பாக்கணுமாம்… வெளங்காத பய.. ஒம்ம கதையைப் படிச்சு பின்னே வெளங்கினாப்பிலெ தானே?”

“மொதல்ல மனசிலாகணும்லா வேய்?”

“மனசிலாகதுக்கு நீரு என்ன கைவல்ய நவநீதமா எழுதினேரு?”

“சரி! வரடும். எவனாம் மீட்டிங் கூப்பிட வருவானாட்டு இருக்கும்! பின்ன ஒரு காரியம்! எலக்கிய காரியம் எல்லாம் நான் பேசிக்கிடுவேன். லௌகீகம் நீரு பேசிக்கிடணும். பொறவு பொழைக்கத் தெரியாதவம்ணு நீரு என்னைப் பரியாசம் செய்யப்படாது என்னா?” என்றார் கும்பமுனி.

“ ஆ… பெரிய லௌகீகம்.. நீரு சாலமன் பாப்பையா பாரும்…!”

கும்பமுனி குளித்து, துவைத்து உலர்த்திய வேட்டி தரித்து, மொளவச்சத்துக்கு வெஞ்சனம் வறுக்கும் வாசனையை இழுத்து உறிஞ்சி மெய் மறந்திருந்த போது, முற்றம் தாண்டிய சாலையில், ஆட்டோ ஒன்று வந்து நின்றது. நின்ற ஆட்டோ உடனே திரும்ப யத்தனிக்கவில்லை. எனவே சாப்பாட்டுக்கோ, சாயாக் குடிக்கோ வந்தவர் தாமசிக்க மாட்டார் என்று தோன்றியது.

”உயிர்மொழித் தமிழாய்வு ஒன்றியம்” என்று கொட்டையாக அச்சிடப்பட்டிருந்த கைப்பையை ஒரு கையிலும், அடித்துக் கொன்ற அவயானை வெளியே வீச, வாலைப் பிடிக்கும் தோரணையில் அரை லிட்டர் பால் பாக்கெட்டுமாக நடந்து வந்தார் பேராசான்.

”சே! ஆனாலும் இந்தத் தவசிப்பிள்ளைக்கு ஒரு எரப்பாளித்தனம்…” என்று மனதுள் சுய பச்சாதாபப் பட்டார் கும்ப முனி.

“வரட்டு வரட்டு… எல்லாம் வவுச்சர் போட்ட காசுதானே? கொறச்சப்பட்டா நடக்குமா? நமக்கு பால்கலைக் கழகம் பால் மாடும் புண்ணாக்கும் தவிடுமா வாங்கித் தந்திருக்கு? வரப்பட்ட ஆசானுக்கு எல்லாம் சாயா போட்டு ஆத்த முடியுமா?”

வேகமாக வந்த பேராசான் பால் பாக்கெட்டை தவசிப்பிள்ளையிடம் நீட்டினார்.

”அரை லிட்டர் பாக்கெட்டுதான் கெடச்சு… கேட்டேளா?”

“அப்பம் ரெண்டாட்டு வேண்டீர வேண்டியது தாலா? சவம் செமந்துகிட்டா வரணும்? ஆட்டோல தானே வந்தேரு..”

வந்தவர் ஒரு மாதிரியாகச் சிரித்தார், பேராசிரியச் சிரிப்பு.

”வந்த கால்லேயே நிக்கேரே! இரியும்.” என்றார் தவசிப்பிள்ளை. வந்தவர், எதிரே கிடந்த மடக்குக் கசேரியில் அமர்ந்து, ’உயிர்மொழித் தமிழாய்வு ஒன்றியம்’ பையைத் திறந்து ஒரு உறையை– உறையை என்றவுடன் ஆணுறையை என்று பொருள் கொளல் ஆகா, இது கவர்- வெளியே எடுத்து, உள்ளே இருந்து ஒரு கடிதத்தை எடுத்துக் கும்ப முனியிடம் நீட்டினார்.

”இதுலே நீங்க ஒரு ஒப்புப் போட்டுக் குடுக்கணும்….”

“என்னத்துக்கு? எனக்கு ராஜ்ய சபா பதவியை ராஜினாமா செய்யதுக்கா?”

“சாயா போடட்டா? கட்டனா? பாலூத்தியா?” என்றார் தவசிப்பிள்ளை ஊடறுத்து.

“பாலூத்தியே போடுங்க… பஞ்சாரை போடாண்டாம்.” என்றார் பேராசான்.

”அதுக்குள்ளே நீரிழிவு வந்தாச்சா?” தவசிப்பிள்ளை.

“ஏழு வருசம் ஆச்சு”- பேராசான்.

“வேலையிலே சேந்ததுமே வந்திற்றோவ்?” – தவசிப்பிள்ளை.

“வந்திரும்லா? தமிள் சொல்லித் தரப்பட்ட வேலையில்லா?” என்ற கும்பமுனி, “சரி! இப்பம் ஒப்பு என்னத்துக்குப் போடணும்?” என்றார்.

“எங்க கல்லூரியிலே பாடத்துக்கு ஒங்க கதை ஒண்ணு சேக்கணும்!”

”என்ன கல்லூரி? யாரு நடத்துகா?”

“கல்வித் தந்தை கரிய மாணிக்க வாசகம். தெரியும்லா?”

”ஊருப்பட்ட கல்வித் தந்தை வே நாட்டிலே…சாராயம் காய்ச்சினவன், மணல் கடத்தினவன், சந்தன மரம் வெட்டி, சுடுகாடு கெட்ட காண்ட்ராக்ட் எடுத்தவன், மலையைக் கொடஞ்சு கல் எடுத்தவன்னு நாட்லே கல்வித் தந்தை கூடிப் போச்சுவே! கல்விதான் நாசமாப் போச்சு… கெடக்கட்டும்… சூடா சாயாவைக் குடியும்! கும்பம் ஒப்பு என்னத்துக்குக் கேக்கேரு?”

“சொன்னம்லா… உங்க கதை ஒண்ணை பாடத்திலே சேத்திருக்கோம்…”

“எந்தக் கதை?”

“கம்பன் பஜனை மண்டலியும் கருவாட்டுக் குழம்பும்”

“சரி! அதுக்கு இப்பம் என்ன வேணும்?”

“உங்க ஒப்பு வேணும்”

“அதுக்காச் சுட்டியா இம்புட்டு தூரம் வந்தேரு? அவுருக்கு ஒப்பு, நீரு போட்டுக்கிட மாட்டேரா?”- என்றார் தவசிப்பிள்ளை.

“கெட்டுச் சோத்துக்குள்ள எலியை வச்ச மாதிரி, நமக்குண்ணு இப்பிடி ஒரு மந்திரி’ என்று கறுவினார் கும்பமுனி.

பேராசானுக்குப் புத்தியில் அது போய்த் தாக்கிற்று.

“சே! என்ன வேல மெனக்கெட்ட வேல.. காரியமாட்டுத் தாலா சொல்லுதாரு… கணிசமாட்டு ஒரு தொகை வவுச்சர் போட்டிருக்கலாம். புத்தி கெட்டுப் போயி வந்தேன்’ என்று கழிவிரக்கப் பட்டவர். கும்பமுனியிடம் இருந்த, இன்னும் கையொப்பம் இடாத கடிதத்தைப் பிடுங்காத குறையாக வாங்கிப் பத்திரப்படுத்தினார்.

“சரி, சரி! ராயல்டி அனுப்பீரும் என்ன?” என்றார் தவசிப் பிள்ளை.

”ரெண்டு காப்பி மட்டும் அனுப்புவோம்!”

“துட்டு கெடையாதா?”

“மாணவருக்கானதுல்லா?”

“அப்பம் மாணவருட்ட பைசா வேண்ட மாட்டேளா?”

காதில் விழாதது போல் பேராசான் விரைந்து போனார். ஆட்டோ ஸ்டார்ட் ஆகித் திரும்பியது.

தவசிப்பிள்ளை முகத்தில் மூன்றாம் விழி திறக்க, “என்ன அண்டி ஒறப்பு பாத்தேரா பாட்டா?” என்று பொருமினார்.

“விடும் வே! அவன் கடையிலும் வேவாரம் ஆகாண்டாமா!” என்றார் கும்ப முனி.

வீட்டுப் படிப்புரையில் காகம் ஒன்று உட்கார்ந்து கரைந்தது.

“விருந்து வருகுவே!” என்றார் எகத்தாளமாகக் கும்பமுனி.

“வரட்டும்… வெளக்குமாறு வச்சிருக்கேன்!” என்றார் தவசிப்பிள்ளை.

– ஜூன் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *