கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 8,329 
 

அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டுக்குள் கையில் பொம்மைகளோடு குழந்தை பெற்ற ஒரு நாள் இரண்டு நாள் ஆன தாய்மார்களிடம் எல்லாம் பொம்மை வாங்கும்மா என கேட்டுக்
கொண்டிருந்தார் நவநீதன்.

யோவ் இடத்த காலி பண்ணுப்பா, பொறக்கற கொழந்தைங்க உடனே எழுந்திரிச்சு பொம்மைகளோட விளையாடவா போகுது?

எரிந்து விழுந்தான் கிருஷ்ணசாமி.

இந்த மாதிரி ஆளுங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணும். கொஞ்சம் அசந்தா குழந்தைகள திருடிகிட்டுப் போய் வித்துடுவாங்க!

பக்கத்திலிருந்த வேலுமணி சொன்னபோது நவநீதனுக்கு இதயம் சுக்குநூறாக உடைந்து தெறித்தது போலிருந்தது.

யோவ் இங்கபொம்மை வியாபாரம் பண்ற மாதிரி குழந்தைகள திருட நோட்டம் போடுறான் ஒருத்தன் பிரசவ வார்டுக்குள் நுழைந்த துப்புரவுத் தொழிலாளியை வழிமறத்து புகார் சொன்னார்கள் கிருஷ்ணசாமியும், வேலுமணியம்.

யோவ், அந்த பொம்மை வியாபாரி வந்ததுக்கு அப்புறம்தான் இங்க குழந்தைங்க காணாம போறது சுத்தமா கொறஞ்சு போச்சு. அவரு பொம்ம விக்குற சாக்குல எல்லா குழந்தைகளையும்
கண்காணிச்சுக்கிட்டே இருப்பார். இங்க பிரசவம் ஆகி தாயும், சேயும் நல்லபடியா வீடு போய்ச் சேருற வரைக்கும் அவர் கண்காணிச்சுக்கிட்டே இருப்பார். நாலைஞ்சு திருடன்கள் கையும் களவுமா பிடிச்சிருக்கார்.

பாவம், போன வருஷம் இதே ஆஸ்பத்திரியில் அவரோடு குழந்தை திருட்டுப் போயிடுச்சு. இன்னமும் கிடைக்கல. அதுக்கப்புறம்தான் இந்த பொம்ம வியாபாரமெல்லாம்!

கிருஷ்ணசாமியும், வேலுமணியும் சிலையாகி நவநீதனை தேடிக்கொண்டிருந்தார்கள். அவன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க.

– பால் ராசையா(ஓகஸ்ட் 2010)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *