Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

வறுப்பு!

 

சில கடைகளுக்கு போர்டே தேவையில்லை. அந்த ரகத்தைச் சேர்ந்ததுதான் அந்தப் பட்டாணிக் கடலைக் கடை. ஆனாலும், கடை திறந்த புதிதில் ‘வருகடலை வருத்தகம்’ எனக் கோணாமாணா வென்று, முதலாளியே தனக்குத் தெரிந்த ‘ர’கர ‘ற’கரங்களைப் பிரயோகித்து, பெயின்ட்டால் எழுதியிருந்தார். பின்னர், வருத்தகத்தில் ‘க’ உதிர்ந்து வருகடலை வருத்தம் என்றானது.

தலையில் அழுக்குத் துண்டும், முண்டா பனியனுமாக, காய்ந்து போன தென்னை ஓலையைப் போல ஒரு எலும்புக்கூடு மனிதன், கடையின் கர்ப்பக்கிரகத்தில் பட்டாணியையோ வேர்க்கடலையையோ விளக்குமாற்றின் அடிக்கட்டையால் வறுத்துக்கொண்டு இருப்பான்.

பெரும்பாலான நேரம் வாணலியில் மணல்தான் இருக்கும். சரிந்த நிலையில் வாய்பிரிந்து, அருகே இருக்கும் மூட்டையிலிருந்து வேர்க்கடலையை அவ்வப்போது அள்ளி, வாணலியில் போட்டுக் கொள்வான். அதைப் போடுபவனும் அவனே, வறுப்பவனும் அவனே, சல்லடையால் சலித்து எடுப்பவனும் அவனே என எல்லாமாகி நின்றான் அவன்!

அவல், காரம் போட்ட காராமணி வகையறாக்கள் சிறுசிறு கூடைகளில், குட்டிக் குட்டி ஆழாக்குகளோடு வீற்றிருந்தன. பின்னணியில், கண் மூக்கு வாயுடன் கூடிய இன்னொரு பெரிய கூடை போல முதலாளியின் கனத்த சரீரம்.

ஆயுத பூஜை, பொங்கல் போன்ற நாட்களில் பிரமாண்ட பொதிமூட்டைகளில் பொரியும், அதன் மேல் அளப்பதற்கான பளபள பக்காப்படியும் (முத்திரை போட்டது) வைக்க முதலாளி தவறியது இல்லை. பொரி கால், புழுதி முக்கால் என்று தெருப் புழுதியெல்லாம் படிந்தாலும், உப்போடு உப்பாக அது இரண்டறக் கலந்துவிடும்.

அந்த ரோடில் வெகுநாள் வரை அவருடையது தவிர, வேறு பொரிக் கடை கிடையாது. திடீரென்று ஒரு நாள், ஒரு பெரிய அடுக்குமாடி டிபார்ட்மென்ட் ஸ்டோர் வந்தது. அதிலிருந்து அவருக்கு வியாபாரம் கொஞ்சம் மட்டுப்பட்டது. அறுத்து வெச்ச காகிதம் அப்படியே கரையாமல் கொக்கியில் கத்தையாகத் தொங்குவது அவர் மனதைச் சஞ்சலப் படுத்தியது. முக்கியமாக, பொரி மடிக்கும் அரை நியூஸ் பேப்பர் ஏறக்குறைய பழுத்தேவிட்டது.

பொரி தின்னுகிறவர்கள் வேகமாகக் குறைந்து வருகிறார்களா? அதெல்லாமில்லை. பொரிக்கு மசாலா கிசாலா போட்டு பிளாஸ்டிக் பையில் அழகாக, அதே சமயம் அநியாயமாக அஞ்சு ரூபாய்க்கு விற்கிறார்கள். அதையும் ஏமாளி ஜனங்கள் கேள்வி கேட்காமல் வாங்கிப் போகிறார்கள். கண்ணாடிக் கூடுக்குள் இருந்தால், அதுக்கு மவுசே தனிதான்!

அதுவும் தவிர, பக்கத்தில் புதுசாக ‘பாம்பே சாட்’ கடை வந்ததில், இவர் வியாபாரம் இன்னும் படுத்துவிட்டது. பொரியிலே காராபூந்தி கலப்பாங்க, தெரியும். ஆனால் பொரியில் பூரி, வெள்ளரிக்காய், உருளைக் கிழங்கு என்று எதையெல்லாமோ கலந்து, சிவப்பாக என்னத்தையோ ஊற்றி விற்பதை அவர் அப்போதுதான் பார்க்கிறார்.

ஒரு பக்கம் விஜயா டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸ், இன்னொரு பக்கம் பாம்பே சாட் என நெருக்கடியான நிலையில், வறுகடலை எலும்புக் கூடுக்கு ரெண்டு மாச சம்பளம் பாக்கி. அவனுக்கும் வயிறு இருக்கே… ஒரு நாள், ‘‘இன்னியோட நின்னுக்கறேன் மொள்ளாலி’’ என்று சொல்லிவிட்டு நின்றுவிட்டான்.

ஒரு நாள், புல்டோசருங்க சகிதம் நகரசபைக்காரங்க வந்துட்டாங்க. தெருவிலே நிறையக் கடைகளை இடிச்சுத் தள்ளிக்கிட்டே வராங்க.

‘‘உங்க ஓனருக்கு நோட்டீஸ் வுட்டாச்சு. எவனையும் கேட்க வேண்டியதில்லை. நாளைக்குக் காலி பண்ணலேன்னா, உன் அத்தனை சாமானும் மண்ணுதான்’’னு எச்சரிச்சுட்டுப் போனாரு இன்ஜினீயரு. அஞ்சு பத்து கொடுத்து அடக்குகிற சமாசாரமில்லே இது! நெசமாலுமே ரொம்பக் கடைங்களை இடிச்சுட்டாங்க. கெவுர்மென்ட் எடமாம். ஆக்கிரமிச்சிருக் காங்களாம் கடைக்காரங்க.

‘‘அந்த நாயி நம்ம கைல சொன்னானா பார்த்தியா?’’ என்று மறுகினார் முதலாளி.

‘‘அந்த பம்பாய் சாட்காரனைக்கூட காலி பண்ணச் சொல்லிட்டாங் களாமே?’’

‘‘ஒழியட்டும். அவனுகளுக்கென்ன பொழைச்சுக்குவானுங்க… இளவட்டம்…’’

கொஞ்ச நாள் சமாளிச்சுப் பார்த்தார். அப்புறம், வீட்டிலேயே வறுத்து எடுத்து, தகர டின்களில் போட்டு, கடற்கரைப் பக்கம் கொண்டுபோய் விற்றார். ‘‘அடியே! வறட்டுக் கடலை வேணாம். எல்லாப் பயலுவளுக்கும் நாக்கு நீண்டுபோச்சு. மசாலா கிசாலா எதுனா போட்டுக் கண்ணாடிக் காகிதம் சுத்தி ‘ஷோ’ பண்ணுனாத்தான் வாங்கறேங் கறாங்க!’’

அப்படித்தான் மூணு மாசம் விற்றார். சரக்கு நல்லாவே போச்சு! வெறும் ஒட்ச கடலையிலே கார மசாலாவைப் போட்டு, அதிலே பொதினாவையும் வறுத்துப் போட்டு, ரெண்டு ரூபா பாக்கெட்டு நல்லாவே மூவ் ஆச்சு!

ஆனா, அவர் துரதிர்ஷ்டம்தான் எங்கே போனாலும் அவரை நிழல் மாதிரி துரத்திக்கிட்டு வருமே, அது இப்போ சுனாமியா வந்து சேர்ந்தது.

கடற்கரை வெறிச்சோடிப்போச்சு! பீச்சாங்கரைக்கு வர்றதுன்னாலே ஜனம் அஞ்சுது. கடலைப் பார்க்க வர ஜனம் குறைஞ்சதுனால, இவர் கடலை போணியாவலே!

பொஞ்சாதிக்கும் மூட்டு நோவு, சர்க்கரைன்னு தெனமும் எதுனா பிடுங்கல். ‘வயசான காலத்திலே இப்படி மாட்டிக்கிட்டோமே மீனாச்சி’னு வருத்தப்பட்டார்.

ஒரு நாள் ‘வறுப்பு’ அவர் வீட்டுக்கு வந்தான். கடலை வறுத்துக்கொண்டிருந்த எலும்புக் கூடு.

‘‘மொள்ளாலி… நல்லாயிருக்கீங்களா?’’

‘‘நீதான் பாக்குறியே வறுப்பு! எல்லாம் போச்சி. அடியோடு புட்டுக்கிச்சிடா! அண்டாவாட்டம் உருண்டு கெடப் பாளே ஆச்சி… இப்பப் பாரு, சுக்காட்டம் ஆயிட்டா! அது எப்போ மண்டையைப் போடுமோ, தெரியலே!’’

‘‘மனசு நொந்துபோகாதீங்க மொள்ளாலி. ஒரு விசயம் ஒங்க காதுல போட்டுட்டுப் போகத்தான் இப்ப நான் வந்தேன்…’’

‘‘என்னடா, சொல்லு?’’

‘‘நம்ம பட்டாணியைப் பதமா வறுத்து, ஏதோ வெளிநாடாம்… பேரு வாயில நுழையலே, அங்கே அனுப்பிடறாங்க. சூப்பரா பிசினஸ் நடக்குது. இருபது ஆளுங்க ராப்பகலா வேலை செய்யறாங்க. நாம ஓல் லாட்டா வறுத்து அனுப்பிச்சுடலாம். விதவிதமா பாக்கிங்கெல்லாம் வெளிநாட்ல நடக்குது. அவன் ஒண்ணியுமே சேக்கறதில்லே. வெறும் பாக்கிங்கி லேயே மயக்கிப் போடறாங்க.’’

‘‘அப்படியா?’’

‘‘தேய்க்கத்தான் ஆளில்லாம இருக்குது. தெனத்துக்கும் சேட்டு நூறு ரூபா தந்துடறான். யாருங்கறியா? முன்னே பாம்பே சாட் வெச்சிருந்தானே, அவன்தான்!’’

‘‘அடப் பாவி… அங்கே கௌம்பிட் டானா?’’

‘‘மொள்ளாலி! பணம் நல்ல வெதை மாதிரி. போடறவன் போட்டா எங்கேயும் மொளைக்கும். நீங்க வர்றீங்களா? வர்றதானா நாளையிலிருந்து கூட்டிப் போறேன்.’’

மகிழ்ச்சியும், துக்கமும் அதுவாகப் பொங்கி வழிந்தது. இரண்டொரு நிமிஷ மௌன இடைவெளிக்குப் பிறகு, ‘‘அதையும் ஒரு வார்த்தை கேட்டுக்கறேன்’’ என்றார்.

‘‘கேக்குறதென்னது?’’ என்று உள்ளேயிருந்து குரல் வந்தது. சில நிமிஷங்களில் மீனாட்சி எழுந்து, பலவீனமாக வந்து நின்றாள். அவள் காலில் ‘வறுப்பு’ விழுந்து வணங்கினான்.

‘‘உன்னாட்டம் விசுவாசக்காரங்க இன்னும் இருக்காங்கப்பா. எந்திரி! பொண்ணுக்குக் கண்ணாலம் பண்ணிட் டியா? பார்த்துட்டிருந் தியே?’’

‘‘நோட்டீஸ் வெக்க வரேம்மா. எடம் குதுந்து போச்சு!’’

உள்ளே போய் முதலாளி தேடித் துருவி ஐம்பது ரூபா நோட்டு ஒன்றைத் தட்டில் வைத்துக் கொண்டு வந்தார். ‘‘ஒரு அஞ்சு நூறு வெச்சுக் குடுக்கக் கூட வசதி இல்லாமப் போச்சுடா வறுப்பு’’ & அவர் தொண்டை கரகரத்தது.

‘‘குடுத்த கைதானே மொள்ளாலி’’ என்றவன், மறுப்பு சொல்லாமல் ரூபாயை எடுத்துக்கொண்டு, ‘‘நாளைக்கு ரெடியாயிருங்க மொள்ளாலி’’ என்றுவிட்டுப் புறப்பட்டான்.

அவன் வந்துவிட்டுப் போய்ச் சில நிமிடம் ஆகியும், வறுப்பு வாசனை அங்கேயே சுழன்றுகொண்டு இருந்ததை அவர் நாசி உணர்ந்தது.

- வெளியான தேதி: 21 மே 2006 

தொடர்புடைய சிறுகதைகள்
'கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை?' என்று சீதாப்பாட்டியின் கண்கள் அப்புசாமியை வினவின எரிச்சலுடன். வேறொன்றுமில்லை. அப்புசாமி வழக்கமாகத் தான் படிக்கும் தமிழ் தினசரியைப் படிக்காமல் ஆங்கிலப் பேப்பரைத் தரையில் தாள் தாளாகப் பரத்திக் கொண்டு அதன் மேலேயே ஏறக்குறைய தவழ்ந்தவாறு ...
மேலும் கதையை படிக்க...
காலப்போக்கிலே எதெதுவோ மாறுகிறது. நல்ல ஆறாயிருந்தது கூவமாயிடுது. சமுத்திரம் முன்னே போகுது. பின்னே வருது. பனந்தோப்பாக இருந்த இடம் காலனி அந்தஸ்து பெறுகிறது. குளமாயிருந்த இடம் குடியிருப்பா மாறுது. அதெல்லாம் மாறிட்டுப் போகுது... ஆனால் மனுஷாள் மாறிப் போறதுலேதான் எனக்கு ரொம்ப வருத்தம்... மனுஷங்களிலும் இந்த ...
மேலும் கதையை படிக்க...
ஓட்டேரிப் பாதையிலே..
அப்புசாமி, சீதாப்பாட்டியின் மோவாயைத் தொடாத குறையாகக் கெஞ்சினார். சீதாப்பாட்டியோ கைக்குட்டையால் மோவாயைத் துடைத்துக் கொண்டு. "என்னைக் சும்மா தொந்தரவு செய்யாதீர்கள். ஐ டூ க் லை டமில் பிக்சர்ஸ். ஆனால் இந்தப் படத்துக்கு மட்டும் 'ப்ளீஸ்' என்னைக் கூப்பிடாதீர்கள்," என்று மறுத்தாள். சாதாரணமாகச் சீதாப்பாட்டி ...
மேலும் கதையை படிக்க...
ஒரு ராதையும் ஒரு ராவணனும் அப்புசாமியும்.
அப்புசாமிக்கு அபூர்வமாகத்தான் டெலிபோன் கால் வரும் அந்த அபூர்வத்தையும் சீதாப்பாட்டி அவரிடம் சொல்ல மறந்து விடுவாள். இரண்டு நாள் கழித்துச் சாவகாசமாக, 'உங்களை யாரோ டெலிபோனிலே டே பி·போர் யெஸ்டர் டே கூப்பிட்டாங்க. சொல்ல மறந்து விட்டேன்,' என்று மேட்டர் ஆ·ப் ·பேக்டாகச் ...
மேலும் கதையை படிக்க...
கீழ் வானில் பெளர்ணமி சந்திரன் சோளா பட்டூரா மாதிரிப் பெரிசாகக் காட்சி தந்தது. நட்சத்திரங்களே சென்னா, நீலவானமே அவைகளை ஏந்தும் பிளேட். அழுக்கு மேகமே லாலா கடை சப்ளையர், ஆனால் அப்புசாமி காளிதாச மனோநிலையில் இல்லாததால் சந்திரனை ரசிக்காமல் மொட்டை மாடியிலிருந்து ...
மேலும் கதையை படிக்க...
சிதெய்ங் அப்புங்சாம்ங்
மச்சினனுஙக மாறிட்டானுக…
ஓட்டேரிப் பாதையிலே..
ஒரு ராதையும் ஒரு ராவணனும் அப்புசாமியும்.
தேள் அழகர் அப்புசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)