Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

வரிகள்

 

இன்று ஒருவன் நகையைத் திருப்ப வந்தான்.

ஓ, மறந்தேன். இது இந்தப் பக்கத்துப் பாஷை–நகை மேல் வாங்கிய கடனை அடைத்துவிட்டு நகையைத் திரும்பப் பெற. நான் இங்கு வந்து நாளாகவில்லை. இன்னமும் இங்கு பழகிக்கொண்டிருக்கிறேன்–பாஷை, இடம், சூழ்நிலை, மனிதர்கள் உள்பட.

ஆள் முகத்தின் சோகம் புரியவில்லை. நானும் கேட்கவில்லை. கேட்பதில்லை. சுபாவமே அதுதானோ அல்லது இந்த ஊரின் மிதமான சீதோஷ்ண நிலையின் தூங்கு மூஞ்சித்தனம்தானோ என்று நினைத்துக் கொண்டேன்.

கீழே பேழையறையிலிருந்து அவன் நகைப் பெட்டியைக் கண்டெடுத்து மணிக்கூண்டு ஏறுவது போன்ற மாடிப் படியேறிட, திணறல்கூட அடங்கவில்லை, பெட்டியைத் திறந்த பின்தான் தெரிந்தது; ஆள் பார்க்க, பங்கியடித்தவன் மாதிரி இருந்தாலும், என் எதிரில் உட்கார மறுத்தாலும் புள்ளி புள்ளிதான்.

கல்லு கல்லா நான்குவடப் பட்டைச் சங்கிலி 3, வளையங்கள் (கெட்டி) ஜோடி 5, கல் பதித்த பதக்கத்துடன் அட்டியல் 1, (ஒரு நீல மாம்பழக் கதுப்பு அகலம்) ஒட்டியானம்1–இடுப்பா அது இந்த அளவில், இந்த அகலத்தில் அது ஒரு கேலிக் கூத்துத்தான். இந்த நாளில் இந்தக் கனத்தில் தங்க நகை காணவும் முடியாது. அணிந்தாலும் உடலுக்குச் சுமைதான்.

அடமானம் வைக்கத்தான் சரி.

ஒரு கணம் ப்ரமித்துவிட்டு, இந்த திகைப்பு உண்மையாயிருந்தாலும் எதிராளியைச் சந்தோஷப்படுத்துவதற்கு எதிராளியைச் சந்தோஷப்படுத்துவதற்கு இதுவும் ஒரு வழிதான். என் உத்தியோகத்தில், எப்படியேனும் எதிராளியைச் சந்தோஷப்படுத்துவது முக்கியம். The customer is always right– இது என் வங்கியில், என் உத்தியோகத்தின் நெற்றிப்பட்டை. மேஜைமேல் நகைப் பெட்டியை அவன் பக்கம் நகர்த்தினேன்.

‘இந்தாங்க தேவரே சரிபார்த்து எடுத்துக்கோங்க ‘ ‘

‘கையில் எடுத்துக் கொடுங்க சாமி ‘ ‘

ஓஹோ ‘ கரடி மயிர் போன்று தழைத்து என் விழிகளை மறைக்கும் புருவங்களின் வெள்ளைக்கு இவன் செலுத்தும் காணிக்கையாக்கும் ‘

இவ்வெள்ளைப் புருவங்களின் விளைவுகள் வெவ்வேறு.

என் பிள்ளைகளுக்கு அப்பாவோடு தெருவில் நடக்க வெட்கம். (அப்பாவா தாத்தாவா ?)

புருவத்துக்கு லேசாய் மை தடவறேனே ‘ என்னைப் பக்கத்தாத்துலே கேக்கறா ‘ஏண்டி ஹேமா, நீ மாமாவுக்கு இளையாளா, மூணாம் தாரமா ? ‘

‘சாமிக்கு வயசு எழுபது கிட்ட இருக்குமா ? ‘

‘ஏன் உமக்கு என்ன ஆகிறது ? ‘

‘வர ஆனிக்கு அறுவது முடியலாமா வேணாமான்னு பார்க்குங்க. ‘

‘ஓய், உம்மைவிட நான் இப்பவே ஐந்து வயது சின்னவன்தான் ‘ ‘ என்று பதில் சொல்லி அவன் மூக்கை உடைத்து என் ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள முடியுமா ? மூச் ‘ ஆள் இரண்டு வருடத் தவணையில் ரூ.25,000 போட்டிருக்கிறான்.

‘ஹி ‘ ஹி ‘ ‘ ஹி ‘ ‘ ‘ ‘

அசட்டுச் சிரிப்புச் சிரித்து சமாளித்துக் கொள்ள வேண்டியதுதான்.

The customer is always right.

இதுதான் பாங்க் மானேஜர் உத்தியோகம்.

அவசரமாய் எழுந்து பெட்டியை எடுத்துக் கையில் கொடுத்தேன்.

நகைப்பெட்டியுடன் என் கரங்களைப் பற்றிக் கொண்ட அவன் கைகள்மேல் அவன் முகம் குனிந்து, உடல் குலுங்கி, தோள்கள் குலுங்கி (நெருப்புக்குச்சி போன்று மெலிந்து ஒடிந்துவிடுமோ போன்ற தோள்கள்) என் புறங்கைமேல் இரண்டு அனல் சொட்டுக்கள் உதிர்ந்து பொரிந்தன.

‘என்ன தேவரே ? ‘ நான் பதறிப் போனேன். எனக்கு முழங்கால்கள் கிடுகிடுத்துவிட்டன.

தேவர் நகைப்பெட்டியை மேஜைமேல் வைத்தார். மூக்கை இருமுறை உறிஞ்சிக்கொண்டார்.

‘ஒண்ணுமில்லேங்க. இந்த நகையெல்லாம் என் மூத்த மகளுக்கு உள்ளதுங்க. நல்ல இடத்திலே கட்டிக் கொடுத்தேனுங்க. நல்லாத்தான் வாழ்ந்தாள். மருமவப் பிள்ளைக்குப் பெரிய உத்தியோகம். டிபுடி ரெஜிஸ்தராருங்க. ஒரே பிள்ளை. நஞ்சை, புஞ்சை, காடு, கிணறு, வீடு, மனை, தோப்பு எல்லாமே உண்டுங்க. போன வருடம் ஆறு மாதம் வயி
த்து வலியிலே துடிச்சா பாருங்க. பார்க்க வேணாங்க. யானைக்குட்டியாட்டம் இருப்பா. அந்த ஆறுமாதத்துலே வெற்றிலைக்கு நடு நரம்பாட்டம் ஆயிட்டா. கடைசி மூணு மாதம் வேலூர் ஆஸ்பத்திரியிலே வெச்சுப் பார்த்தோமுங்க. அந்த மூணு மாதத்திலே இருவது பெரிய நோட்டு அவுட்டு. ‘அப்பா எப்படியாச்சேனும் என் மூணு குழந்தேங்களுக்குத் தாயாரா என்னைக் காப்பாத்திக் கொடுத்துடு. தலைமுறைக்குத் தலைமுறை உன் பேரை வெச்சு உன் பேரைச் சொல்லிக்கிட்டிருப்போம் ‘னு அழுவறா. அசட்டுப் பொண்ணு ‘ எனக்குச் சொல்லணுமா ? யாருக்குச் செய்யப் போறேன் ? ஆனால் அவள் வேதனை அப்படி அவளைச் சொல்ல வைக்குது. ஒரு மிளகாய்ச் செடியிலே அறுத்தாலும் போச்சு, ஒரு வேர்க்கடலையிலே தோண்டினாலும் போச்சு, இருவது என்ன, மேலும்தான் போவட்டுமே ‘ மேலும்தான் போச்சு ‘ நல்லாத்தான் போச்சு; நிறையத்தான் போச்சு. போய் என்ன ? நிலைகுத்திப் போன கண்ணை நானேதான் மூடினேன். ஆனால் கண்கண்டு வழிஞ்சு இந்த உலகம் பூரா வழியும் அவள் துயரத்தை மூட முடியல்லேங்களே ‘ முடியல்லேங்களே ‘ அவள் குழந்தைகள் மூணுபேர் பொம்மையும் அவள் கண் பாப்பாவுலே கடைசிக் கரையாத் தேஞ்சு போச்சே. அதை யாராலே அழிக்க முடியும் ‘ அந்த யமனாலே அழிக்க முடியுமா ? சுட்டுப் பொசுக்கின சாம்பரா அது மாத்திரம் ஆயிட முடியுமா ? ‘

வருத்தம் தரும் பலஹீனத்தில் கம்பியாய்ப் போய் விட்ட குரல்.

சுவரில் காலண்டர் தாள்கள் காற்றில் படபடவென அடித்துக் கொண்டன. மணியடிக்கும் தறுவாயில் சுவர்க் கடியாரம் ‘கர்ர்ர் ‘ரென்று உறுமிவிட்டு மணியடிக்க மறந்து போயிற்று.

‘உப்பே…ய் ‘—தெருவில் உப்பு வண்டிக்காரன் கத்திக் கொண்டே போனான்.

என் வாயுள் என்னையறியாமல் கடித்துக்கொண்ட நாக்கில் கசிந்த ரத்தம் கரித்தது.

அறைக்கு வெளியே மொட்டை மாடியில் பக்கத்து வளைவுகளிலிருந்து ஓங்கும் தென்னை மரங்கள் பெரு மூச்சாடின.

‘என்ன செய்வதுங்க ? போனவ திரும்பி வரப் போறாளா ? இனி நானே அவளைப் போய்க் கண்டால் தான் உண்டு. அங்கேயும் அவள் கண்ணில் பட்டால்தான் உண்டு. அதுக்குள்ளேயும் எங்கே பிறந்துடறாளோ ? ‘

ஆச்சு இந்த ஆனி 12-க்கு நாள் குறிச்சாச்சு. மாத்துக் காலுக்கு மறுகாலா என் இளைய பொண்ணை, மருமவப் பிள்ளைக்கு திருமலைக் கோவிலில் வெச்சுக் கட்டிக் கொடுத்துடப் போறேனுங்க. ரொம்ப சொல்பமா பத்திரிகைக் கூட அச்சடிக்கல்லே. உங்களைக்கூட அழைக்கலே. ஆசீர்வாதம் பண்ணுங்க. இந்த நகையெல்லாம் சின்னப் பொண்ணுக்குப் பூட்டி நேரே கோவில்லேருந்தே அவ வீட்டுலே கொண்டு போய் விட்டுடப் போறேன். அந்தக் கலியாணம் பிரமாதமுங்க. கடையநல்லூர் ஷன்முகசுந்தர நாயனம் நாலுநாள் ஊரழைச்சு சாப்பாடு ஆனால் நம்மதென்ன போச்சுங்க ? புல்லெல்லாம் நெல்லா விளையற நாள். சந்தனம் சிந்தின இடம். சேறு குப்பையோடே பொன் கலந்திருக்கும். இல்லாட்டி, இதெல்லாம் இப்போ வாங்க முடியுமா, செய்ய முடியுமா ?

பேரப் பையன்களும் என் பொண்ணு வயிறு. இன்னொருத்தி அவள் இடத்துக்கு வந்தால் காரணம் காட்டியோ இல்லாமலோ மாற்றாந்தாய் கொடுமைக்காரப் பழி பொல்லாப்பு நமக்கேனுங்க ? தவிர, கலியாண கோலத்துலே ஜரிகைப் புடவையைக் கட்டிகிட்டு, செத்துப்போனவ வானத்துலே நின்னுகிட்டு, கையைப் பிசைஞ்சுகிட்டு யார் கண்ணுலேயும் தென்படாமல் வடிக்கின்ற ஊமைக்கண்ணீருக்கு யார் பதில் சொல்றது ? மாப்பிள்ளைக்கும் இன்னும் முதல் தாரம் கட்டி வாழற வயதுதான். நான் பெண் கொடுக்காட்டா அவர் வேறே கட்டாமே யிருக்க முடியுமா ? பெரிய வேலைங்க. டிபுடி ரெஜிஸ்தாரருங்க. நல்ல செயலுங்க.

என் சின்னப் பொண்ணும் காலையிலே சாணி தெளிக்கறப்பவோ, மாலையிலே விளக்கேத்தறப்பவோ, உலையிலே அரிசியைக் களைஞ்சு போடறப்பவோ, ராவுலே அடுப்பை மெழுகி, கோலம் போடறப்பவோ, தாலியை��
�் தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கிட்டே திக்குத் திக்குனு குடித்தனம் நடத்த வேணாம். ரெண்டுபேரும் ஜோடிப் பொருத்தம் இன்னும் நல்லாவேயிருக்குங்க. ரெண்டுபேரும் நல்ல செவப்பு. அவள் முதல் குழந்தையை பெத்துச் சீராட்டறப்போ உங்களைக் கண்டிப்பாக் கூட்டிப் போய்க் காட்டியே ஆவணுங்க. சரி, உங்களுக்கு நேரமாச்சு. நான் போய் வரேனுங்க. ‘–அவன் போய்விட்டான்.

நான் நாற்காலியில் சாறு பிழிந்த குற்றுயிர்ச் சக்கையாய்க் கிடக்கிறேன். குற்றாலத்தின் மலயமாருதம் தவழ்ந்து வந்து நெற்றி வேர்வையை ஒற்றியது.

இதயத்தில் எங்கோ ஏதோ பலகணி தானே திறந்து கொள்கிறது. அதன் வழி, இன்னதென்று பிடிபடாத, புலப்படாத தண்ணொளியின் நிழற் கோடுகள் வரி வரியாய், இதயத்துள் விழுகையில் உள்ளம் பூரா, உள்ளம் மூலம் உடல் பூரா ஏதோ வெளிச்சம் ஏற்றிக்கொள்கிறது. கண்ணீரில் குழைத்திட்ட திலகமாய் நெற்றி நடுவில், ஏதோ புரியாத, புலப்படாத, பிடிபடாத வெற்றி குளுகுளுவென மிளிர்கின்றது. 

தொடர்புடைய சிறுகதைகள்
1967/68 நாகர்கோவிலில் ஒரு நண்பர் வீட்டில் நான் குடும்பத்துடன் தங்க நேரிட்டது. சென்னையில் ஓரிரண்டு இலக்கியக் கூட்டங்களிலும் அவரை சந்தித்ததோடு எங்கள் பரிச்சயம் அப்போது நின்றது. ஆனாலும் அந்த வீட்டாரின் வரவேற்பு விருந்தோம்பலின் சிறப்பு பற்றி எள்ளளவும் சந்தேகமில்லை. என்றாலும் ஒரு சங்கோஜம் ...
மேலும் கதையை படிக்க...
மதில்கள் போன்ற பாறைகளின் மேல் மேகங்கள் பொங்கித் தளைத்து நுரை கக்கின. சென்னையில் கானல் கொடுமையை வருடக் கணக்கில் அனுபவித்தவனுக்கு இங்கு கோடை தெரியவில்லை. வேர்வையும் மறந்தது. ஆனால் வெய்யிலை மறக்க நான் இங்கு வரவில்லை. உத்யோகம் புருஷ லட்சணம். ‘ராமாமிருதம், உமக்கு மேற்பதவி வேணுமானால் இனி ...
மேலும் கதையை படிக்க...
அம்முவுக்கு தூக்கமே பிடிக்கவில்லை. பழக்கக்கோளாறு அப்போதைக்கப்போது கடியாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் மணி பார்க்கத் தெரிந்திருந்தால்தானே ஆனநேரம் தெரியும் ? அப்புறம் படுத்திருக்கவும் முடியவில்லை. எழுந்து போய் பல் விளக்கிவிட்டு, வென்னீரடுப்பை மூட்டி, தாமிரம் பளபளக்கத் தேய்த்து செம்மண் பூசிய வென்னீர்த் தவலையை அடுப்பில் ...
மேலும் கதையை படிக்க...
கண்ணன் கால்வாயோரமாய் உட்கார்ந்து, ஒவ்வொரு கல்லாய்ப் பொறுக்கியெடுத்துத் தண்ணீரில் விட்டெறிந்து கொண்டிருந்தான். ஒரு கல்லைப் போட்டதும், தண்ணீர் சலனம் அடைந்து, அலைகள் எழும்பி, வட்டம் வட்டமாய்ச் சுற்றி ஓயுமுன் இன்னொரு கல்லைப் போடுவான். சீக்கிரமே இருட்டிவிட்டது. அரை நிலா பனையுச்சியிலிருந்து எட்டிப் பார்த்தது. ...
மேலும் கதையை படிக்க...
மாசக் கடைசியில் ஒவ்வொரு மாசமும் அப்படித்தான் – பருப்புத் தட்டுப்பாடில் ஆரம்பித்து சிறுகச் சேர்ந்து கட்டுக்கடங்காமல், திடீரென்று பெருத்துவிட்ட பூதத்தைச் சமாளிக்க P.F. இல் கடன் வாங்குவது பற்றிப் பாரதியுடன் இறங்கிவிட்ட பேச்சு சுவாரஸ்யத்தில், தான் திடீரென்ற நின்ற இடத்திலிருந்து தள்ளப்படுவதுகூடத் ...
மேலும் கதையை படிக்க...
சிந்தாநதி
இவளோ?
அம்முலு
கண்ணன்
பிம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)