வயிறு

 

சதாசிவப் பண்டாரத்தின் சங்கொலி இரவின் எல்லாத் திசைகளிலிலும் பரவி அதிர்ந்தது. சிறிய சலசலப்புடன் ஓடிக்கொண்டிருக்கும் தாமிரபரணியும் எப்போதும் சிரித்து அருள் பாலிக்கும் முருகனும் வேப்ப இலைகளைக் கூட்டி தீமூட்டி கொசு விரட்டும் பாண்டியும் தவிர யாரும் அதைக் கேட்டிருக்கமுடியாது. பண்டாரம் அதிகக் கவலை கொள்ளும்போதோ பழம் நினைவுகள் அவரைத் துரத்தும்போதோ அன்றைய இரவுகளில் முருகனே வந்து நிறுத்தச் சொன்னாலும் சங்கூதுவதை நிறுத்தமாட்டார். அதில் ராகமெல்லாம் கிடையாது. ஒரே மாதிரியான இழுவை மட்டுமே. வேகம் அதிகரிக்கும்போது சங்கொலியின் சத்தம் கூடும். ‘சரி வுடு’ என்று பாண்டி சொல்லும்போது சில சமயம் அடங்கிப் போவார். சில சமயம் இன்னும் சத்தமாய் ஊதி ஒதுங்க இடம் தேடும் ஒன்றிரண்டு நாயை விரட்டி வைப்பார்.

அன்றைய தினம் பண்டாரத்தின் கோபத்துக்குக் காரணமானவர்கள் இரண்டு சிறுவர்கள். எந்தக் குடும்பமோ நேர்ச்சைக்காக பால் குடம் எடுக்க வந்திருந்தார்கள். பால் குடம் எடுக்கும் அன்று சதாசிவப் பண்டாரமே முக்கியப் புள்ளி. அவர் சங்கூதிக்கொண்டே குறுக்குத்துறை பிரகாரங்களில் செல்ல, அந்த ஒலியின் மீது கால்வைத்தே சனங்கள் பின்னால் வரும். மலையைக் குடைந்து ஓட்டையுடன் கிடக்கும் பிரகாரத்தின் ஓட்டைகள் வழியே வெயில் அவர் மேலே வழியும்போது அவர் ஆனந்தப் பரவசமாகி சிவனே சங்கூதுவதாக எண்ணிக்கொண்டு ஊதுவார். கோவில் பூசாரி போதும் என்று சொல்லுமட்டும் ஊதிக்கொண்டே இருப்பார். வலது கையால் சங்கைப் பிடித்துக்கொண்டு, இடது கையால் கழுத்தில் கிடக்கும் உத்திராட்சைக் கொட்டைகளை அவர் சரி செய்யும் காட்சி அவருக்கு இஷ்டமானது. அடிக்கடி அதைச் செய்வார். சில பையன்கள் பால்குடத்தைப் புகைப்படம் எடுத்தபோது, இடது கையால் சைகை செய்து தன்னை ·போட்டோ எடுக்கச் சொன்னார். அவர் அப்போது கொடுத்த போஸ் குறித்த கர்வம் எப்போதும் அவருக்கு உண்டு. நெஞ்சை நிமிர்த்தி, உத்திராட்சக் கொட்டைகள் மார்பில் தனித்து தெரியும் வண்ணம், வலை கையில் சங்கைப் பிடித்துக்கொண்டு, பார்வதி மட்டுமே அருகில் இல்லை என்கிற பாவத்துடன் கொடுத்த போஸ் அது. அப்போது ஒரு சிறுவன் ‘எல, அவர் வயித்த பாத்தியா’ என்றான். ‘ஆமால, தினுசே இல்லாம கெடக்கே, பயமா இருக்குலே’ என்றான் இன்னொரு சிறுவன். சகலமும் சுருங்கி போனது பண்டாரத்துக்கு.

பாண்டி மெல்ல “சரிவே வுடும், ஒதுங்கிக் கெடக்க பண்டாரத்துக்கு வயிறு எப்படிருந்தா என்னவே. கொமரிங்க வந்து தடவப்போறாளுகளா” என்றார். பண்டாரத்திற்கு சமாதானம் ஆகவில்லை. தொண்டை வறண்டு போனதால், சங்கை ஓரமாக வைத்துவிட்டு, பாதி புகைக்காமல் கிடந்த சுருட்டை எடுத்து பற்ற வைத்தார். தொண்டைக்கு இதமாக இருந்தது. அவரும் அவர் வயிற்றைப் பற்றிச் சில தினங்கள் நினைத்திருக்கிறார்.

ஆரம்பத்தில் அவரது வயிறு பெரும் தொப்பையைப் போன்று வீங்கித்தான் கிடந்ததாக நினைத்திருந்தார். இரவுகளில் தூண்களில் சாய்ந்து படுத்துறங்கும்போது தனது வயிற்றையே தூணுக்கு அண்டை கொடுத்துப் படுத்துக்கொள்வார். சில மாதங்கள் கழிந்தபோது வயிறு ஒரு தினுசான வடிவத்தில் இருப்பதாகத் தோன்றியது. பிரமையாக இருக்கலாம் என்று நினைத்தார். அன்று வந்த பூசாரி திடீரென்று ‘என்னவே வயிறு தினுசாயிட்டு கெடக்கு’ என்றார். தன் வயிற்றை ஒரு கணம் பார்த்துவிட்டு, ‘ஒம்ம வயிற நீரு பாரும்’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றுவிட்டார். அன்றிரவு பாண்டியிடம் கேட்டார். ‘அப்படி ஒண்ணும் தெரியலயே பண்டாரம்’ என்றான். பண்டாரத்தை ஒரு சிநேகப் பார்வை பார்த்துவிட்டு, வழக்கம்போல் வயிற்றை தூணுக்கு அண்டை கொடுத்துப் படுத்தார். மறுநாள் அவரது புகைப்படத்தைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போனான் பால்குடத்துக்கு வந்து படம் எடுத்தவன். அவருக்கே கொஞ்சம் திக்கென்றிருந்தது அவரது உருவத்தைப் பார்த்தபோது. முடியெங்கும் சடை கட்டி, நான்கைந்து உத்திராட்ச வரிசைகள் கழுத்தில் தொங்க, மார்பு வீங்கி, வயிறு உருவமற்று உருண்டு கிடந்தது. இத்தனை நாள் கண்ணாடியில் முகம் பார்த்திருக்கிறாரே ஒழிய அவரது வயிற்றைப் பார்க்கும் சந்தர்ப்பம் அவருக்கு எழவில்லை. மனதில் பெரும் பாரம் இறங்க ‘சிவ சிவா’ என்றார்.

‘டவுணாஸ்பத்திரிக்கு போவுமே’ என்றான் பாண்டி. ‘அது மட்டுந்தான் பாக்கி கெடக்கு’ என்று அலுத்துக்கொண்டார் பண்டாரம். ‘ஊதற மட்டும் ஊதுவோம், சிவன் பாத்துக்குவான்’ என்பது அவரது எண்ணம். ‘நீரு வாயில நல்லா சொல்லுதீரு, ஆனா வயிறு இப்படி ஆயிட்டுன்னு ரொம்ப மருகிற மாதிரி தெரியுதுவே’ என்றான் பாண்டி. பண்டாரம் ஒன்றும் சொல்லவில்லை. லேசாக வயிற்றைத் தடவிப் பார்த்துக்கொண்டார். வலதுபக்கம் வீங்கி இடது பக்கம் சுருங்கி கரும் நிறத்தில் வடிவமற்ற இலகுவான பாறை போன்று உருண்டது. ஏனோ அழவேண்டும் போல இருந்தது பண்டாரத்திற்கு. பாண்டி, ‘சங்க எடுத்துறாதீரும்’ என்று பல்லைக் காட்டிச் சிரித்தான்.

மறுநாள் பூசாரி கோயிலைச் சுத்தப்படுத்திக்கொண்டிருந்தார். வாசலில் சடைமுடியுள் கையைவிட்டு எதையோ தேடிக்கொண்டிருந்தார் பண்டாரம். பாண்டி நீர் மொண்டு கொடுக்க ஆற்றுக்குள் இறங்கியிருந்தான். பூசாரி ஆரம்பித்தான். ‘பண்டாரம், சொல்றேன்னு வெடைக்காத. டவுணாஸ்பத்திரிக்கு போய் வயிறு வீங்கிக் கெடக்குன்னு சொல்லி மாத்திர மருந்த வாங்கிப் போடும். வயிறு வெடிச்சு செத்துடாதீரும்’ என்றார். பண்டாரம் எரிச்சலுடம் ‘ஒன் வேலய பாரு சாமி’ என்றார். ‘ஏன் சொல்லமாட்டீரு, வேளைக்கு பிரசாதம் கொடுக்கேன்ல, வாய் இப்படித்தான் பேசும்’ என்றார். ‘நீரு கொடுக்கலைன்னா எவனாது கொடுப்பாம்’ என்றார் பண்டாரம். பாண்டி வந்து, ‘ஐயர் சொல்றதுல காரியம் இருக்குவே. சோத்துக்கில்லாம வயிறு வீங்கிச் செத்தா அசிங்கமில்லியா’ என்றான். மெல்ல கண்ணைச் சிமிட்டிக்கொண்டே, ‘விசாலத்தயும் பாத்த மாதிரி இருக்கும், டவுணாஸ்பத்திரிக்கு போரும்வே’ என்றான். அன்றிரவு பண்டாரம் ஊதிய சங்கின் ஒலி கைலாயத்தை அடைந்து சிவனின் காதையே கிழித்திருக்கவேண்டும். கடுமையான ஆங்காரத்துடன் எழுந்த ஒலி அது. பாண்டி லேசாக நடுங்கினான். கைலியை இழுத்துப் போர்த்திக்கொண்டு உறங்கிப்போனான்.

விசாலம் ஒரு தடவை பண்டாரத்திடம் உத்திராட்சக் கொட்டை கேட்டு வந்தாள். பண்டாரம் கர்வத்துடன் தன்னிடமிருந்த முப்பத்திரண்டு பக்க உத்திராட்சத்தை தரமுடியாது என்று சொல்லி அனுப்பினார். ‘கேட்டியா, இது சிவனே நேர்ல தந்ததாக்கும். நீ பசப்பிக்கிட்டு வந்து மொலயக் காட்டி நின்னா தந்துடுவானா இவன்’ என்று திட்டி அனுப்பினார். பூசாரியிடம் சொன்னார், ‘எங்க எவன்கிட்ட எது இருக்குன்னு இவளுவளுக்கு எப்படித்தான் தெரியுமோ’ என்று. ஆனால் விசாலம் விடுவதாய் இல்லை. தினமும் வந்தாள். அவளது எடுப்பான பல்லைப் பற்றிச் சொல்வார் பண்டாரம். அவள் பதிலுக்கு அவரது வயிறை சொல்லிக்காட்டிச் சிரிப்பாள். மெல்ல மெல்ல எடுப்பான அவளது பல் மறைய, பண்டாரத்திற்கு அவள் உடலின் தினவு தெரிய ஆரம்பித்தது. பண்டாரமும் விசாலமும் எச்சிலொழுகப் பேசுவதைப் பாண்டி வாய் பார்த்துக்கொண்டு நிறபான். ஒரு தடவை பூசாரியிடம் சொல்லி ‘இது சிவனுக்கே அடுக்குமா’ என்றான். பூசாரி பாண்டி சொன்னதைக் கேட்டு ‘போல அந்தால’ என்று விரட்டினார்.

டவுணாஸ்பத்திரியில் விசாலத்தைப் பார்த்து ‘காரியத்த சொல்லு’ என்று பூசாரி கேட்டதும், ‘அது கைல 32 பக்க உத்திராட்சம் கெடக்கு. அது சிவனே கொடுத்ததாம். யார்கிட்டயும் சொல்லிப்பிடாதேயும். அது கெடச்சா நிறைய மந்திரம் செய்யலாம்னு சொல்லி கேட்டுவிட்டது பரமசிவம். அதுக்குத்தான்’ என்றாள். பூசார் கெக்கெ பிக்கெ என்று உடல் குலுங்கிச் சிரித்து, ‘அவன் சொன்னானாம் இவ நம்பினாளாம் அவன் அனுப்பினானாம், இவ வந்தாளாம் எக்கேடும் கெட்டுப் போங்க, கோவில்னு மனசுல வெச்சிக்கிடுங்க’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். விசாலத்திற்கு யோசனையாய் இருந்தது.

அன்று இரவு தூணுக்கு பதில் விசாலத்திற்கு அண்டை கொடுத்துப் படுத்திருந்தார் பண்டாரம். அவரது வயிற்றை விசாலம் தடவ ‘கேலி பண்ணுவியேட்டி’ என்றார் பண்டாரம். ‘புடிக்காமயா கேலி’ என்றாள் விசாலம். பல நாளாக அலசாத சடை முடியிலிருந்து எழுந்த வீச்சமும் விசாலத்தின் வாயிலிருந்து எழுந்த துர்நாற்றமும் வெளியெங்கும் பரவியது. பாண்டி சுருட்டு பிடித்து அந்த நாற்றத்தை ஓட்டினான். மறுநாள் காலை பண்டாரம் எழுந்து குளிக்கப்போகும்போது அவரது உத்திராட்ச மாலை அறுந்து கிடப்பதைப் பார்த்தார். சிவன் கொடுத்த உத்திராட்சத்தைக் காணாமல் ஒரு நிமிடம் பதறினார். பின்பு பதற்றப்படவேண்டாம் என்று முடிவுக்கு வந்துவிட்டார். அதற்குப் பிறகு அவர் விசாலத்தைப் பார்க்கவில்லை. அவளும் ஏனோ வரவேயில்லை. பாண்டி டவுணாஸ்பத்திரிக்குப் போய்விட்டு வந்தபின்பு பண்டாரத்திடன் விசலாம் விசாரித்ததாகக் கூறுவான். அசட்டுச் சிரிப்பு சிரிப்பார் பண்டாரம். ‘சிரிக்காதேரும், அவளுக்க சோலியே இப்ப இதுதானுட்டு கேள்வி.’

‘அப்ப ஒருவாட்டி போயி பாக்கலாங்கியா’ என்றார் பண்டாரம். ‘பின்ன, அதுல்லா ஆம்ளைக்கு அளகு’ என்றான் பாண்டி.

பண்டாரம் ஆற்றில் குளித்து, முடி காயவைத்து, சடை கட்டி, வயிற்றுக்கு விபூதி பூசி டவுணாஸ்பத்திரிக்குக் கிளம்பினார். கூட பாண்டியும் ஒட்டிக்கொண்டான். ஆஸ்பத்திரியில் அவரைப் பார்த்த சிறுவர்கள் அவரது வயிறைக் கேலி செய்து ஓடினார்கள். கூட இருந்த பாண்டி அவரது வாட்டத்தைப் போக்கும் வண்ணம் எதாவது சொல்லிக்கொண்டே வந்தான். சீட்டெழுதிக் கொடுத்தார்கள். டாக்டரிடம் ‘கடுமையான வயித்தவலி கேட்டீளா’ என்றார் பண்டாரம். டாக்டர் ஊசிக்கு எழுதிக்கொடுத்தார். ஊசி போடும் அறையில் விசாலம் பெருக்கிக்கொண்டிருந்தாள். பாண்டி ‘பாரும்வே ஒம்ம பார்வதிய’ என்றான். எடுப்பான பல்லைத் தவிர எதையுமே காணவில்லை பண்டாரம். அவருக்கு திக்கென்றிருந்தது. சிவன் சூலத்தோடு அவரது தலைக்குள் ருத்ர தாண்டவம் ஆடுவது போல இருந்தது. உடனே அங்கிருந்து போய்விட அவசரப்பட்டார். ‘இம்புட்டு வந்துட்டு பேசாம போனா எப்படி’ என்றான் பாண்டி. அவரது கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டிருப்பதைப் பார்த்து கொஞ்சம் பயந்து, ‘சரி போயிடலாம்’ என்று அவரைக் கூட்டிக்கொண்டு குறுக்குத்துறைக்கு வந்துவிட்டான். பூசாரி ‘இன்னிக்கு காரியம் எதுவும் உண்டுமால?’ என்று கேட்டார். பாண்டி கண்ணைக் காட்டினான். பண்டாரம் எதுவும் பேசவில்லை.

இரவில் சங்கொலி பாண்டியின் காதைத் துளைத்தது. தூணுக்கு வயிற்றை அண்டை கொடுத்துப் படுத்தபோது பண்டாரத்திற்குக் கண்ணீர் வந்தது.

நன்றி: பிப்ரவரி 2008, வடக்கு வாசல். 

தொடர்புடைய சிறுகதைகள்
கடலின் அலைகளைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தேன். ‘என்னடே இங்க வந்து உட்காந்துட்ட’ என்ற குரல் என்னும் குரல் எப்போது வேண்டுமானாலும் கேட்கும். பக்கத்தில் உட்கார்ந்திருந்த சிவராமன் என்னைப் பார்த்து ‘யாரும் கூப்பிடல’ என்றான். மனதை ஒருநிலைப்படுத்தி மீண்டும் அலைகளைப் பார்க்கத் தொடங்கினேன். வெகு ...
மேலும் கதையை படிக்க...
கஸிக்குத் தூக்கமே வரவில்லை. கனவுகளில் சனி பூதாகரமாக வந்து அவன்முன் நின்று பல்லை இளித்துக்காட்டியது. அவன் ஓட ஓட துரத்தினான். சனியைப் பிடிக்கவே முடியவில்லை. அவனுக்கே அதைப் பற்றி நினைத்தபோது கேவலமாக இருந்தது. கனவில் கூட அவனால் சனியைப் பிடிக்க முடியவில்லை. ...
மேலும் கதையை படிக்க...
மாசாணத்துக்கு போன் செய்து சொன்னாள் சங்கரி, ‘ஏங்க அந்த மேல்வீட்டுப் பையன் தொலைஞ்சிட்டானாங்க.’பக்கத்தில் கட்டிலில் படுத்திருந்த கெளவி, ‘நாங்கள்லாம் பட்டிக்காடு’ என்றாள்.பதில் ஒன்றும் பேசாமல், சங்கரி மேல் வீட்டுக்குச்சென்றாள். அவளுக்கு அந்த வீட்டுக்காரம்மாவிடம் என்ன பேசுவதென்றே தெரியவில்ல. ‘ரொம்ப கஷ்டமா இருக்குங்க’ ...
மேலும் கதையை படிக்க...
சிவபாஸ்கரன் திடீரென்று வந்து வாசலில் நின்றபோது அந்த வயதான அவ்வாவின் மனம் எப்படிப் பதறியிருக்கும் என்பதிலேயே என் யோசனை இருந்தது. லக்ஷ்மி அக்கா வாங்க வாங்க என்றதையோ, அவ்வா எங்களைப் பார்த்து எப்படி இருக்க என்றதையோ, சிவபாஸ்கரன் என்னைப் பார்த்துப் புன்னகை ...
மேலும் கதையை படிக்க...
எப்போதும்போல் அன்றும் தூக்கம் வரவில்லை. தெருவில் எரியும் சோடியம் விளக்கின் மஞ்சள் நிற வெளிச்சம், அலங்கோலமாகக் கிடக்கும் ஜன்னலின் மூடப்படாத இடங்களின் வழியே உள்ளே தெறித்து விழுந்துகொண்டிருந்தது. சுசியின் தொடைவரை ஏறியிருந்த நைட்டியில் பளீரெனத் தெரிந்தது அவளது நிறம். தனியறையில் படுத்திருக்கும்போது ...
மேலும் கதையை படிக்க...
பத்து அடிக்கும் மேலான உயரமுள்ள தகரச் சுவரில் இருக்கும் துளையின் வழியே கண்களை வைத்துப் பார்த்தேன். மிகுந்த பிரயத்தனப்பட்டுப் பார்த்ததில் அப்புறத்தில் மெல்ல நடந்து செல்லும் மனிதர்கள் தெரிந்தார்கள். எனக்கெனத் தனியாகத் திரையிடப்படும் ஒரு திரைப்படம் போன்றகாட்சி அது. நான் எதிர்பாராத ...
மேலும் கதையை படிக்க...
புதுவீட்டுக்கு வந்து நான்கைந்து நாள்கள்தான் ஆகியிருந்தன. பழைய வீட்டில் ஒட்டுமொத்தப் பொருள்களையும் ஒரு வண்டிக்குள் ஏற்றி வைக்கவும் நம் வீடு இவ்வளவுதானா என்ற எண்ணம் வந்தது. என் மனைவி, கையில் என் மகனைப் பிடித்துக்கொண்டு அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருந்தவள், நான் என்ன ...
மேலும் கதையை படிக்க...
சிறிய திறப்பொன்றில் விழுவதாகவே தோன்றியது. ஆனால் அத்திறப்பு நீண்டு பெரும்பள்ளமாகி கீழே வெகு கீழே செல்ல நான் அலறத்தொடங்கினேன். கண் விழித்துப்பார்த்தபோது அறையெங்கும் பரவியிருந்த வெளிர் நீலநிறப் படர்வில் என் மகன் எவ்விதக் குழப்பமும் இன்றி இரண்டு கைகளையும் தலைக்குக் கொடுத்து ...
மேலும் கதையை படிக்க...
சுரேஷன் நாயர் ஒரு ரூபாய் நாணயத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுத்துக்கள் கட்டங்களில் எழுதப்பட்டிருந்தன. ஒரு சிறிய டம்பளரில் நீர் இருந்தது. அந்த நீர் அதிர்ந்துகொண்டே இருந்தது. ஒல்லியான ஆசாமி ஒருத்தன் சம்மணமிட்டு, விறைப்பாக உட்கார்ந்திருந்தான். கண்கள் மூடி இருந்தன. ...
மேலும் கதையை படிக்க...
அப்பாவின் மரணம் தந்த தீவிரமான யோசனையில் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது அப்பாவின் வெகுளித்தனமான உள்ளமே. அப்பாவை நிச்சயம் ஒரு குழந்தை என்று சொல்லிவிடலாம். மற்ற ஆண்களுக்கு இருக்கும் வல்லமையும் திறமையும் அப்பாவுக்கு இருந்ததாகச் சொல்லமுடியாது. அப்பாவின் உருவத்தை ஒரு ஏமாளிக்குரிய ...
மேலும் கதையை படிக்க...
அலை
சனி
மேல்வீடு
தொலைதல்
சொற்கள்
முகம்
சுற்றம்
பிரதிமைகள்
மழை
சாதேவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)