வந்துடுச்சா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 17, 2014
பார்வையிட்டோர்: 10,008 
 

“யாருப்பா இங்க தோணி”

குரல் வந்த திசையை நோக்கி ஒடி “நான் தான் சார்” என்று நின்றவனை இன்ஸ்பெக்டர் ஜான் ஏற இறங்கப் பார்த்தார்.

பழைய சாயம் போன எங்கிருந்தோ கண்டெடுத்த பாண்ட்- முட்டியில் கொஞ்சம் கிழிசல். சோப்பைப் பாத்து ரொம்ப நாளாகிப் போன ஒர் டீ ஷர்ட். வாராத தலை, ஒரு வார தாடி.

கிட்ட வந்து நின்னவனை , முகத்தை சுளித்து “தள்ளி நில்லுயா” என்ற ஜான், “முழுப் பேர் என்ன அந்தோணியா ” என்றார்.

“இல்ல சார் தோணியப்பன்” என்ற பதிலில் கொஞ்சம் ஏமாற்றமாகிப் போய் “என்னன.. பேருயா” என்றார், மணிவண்ணன் குரலில்.

“தெரில. அப்பனும் ஆத்தாளும் வச்சது. ஏன்னு கேக்கரதுக்கு முன்னமே போய்ட்டாங்க” என்று வெள்ளந்தியாக பதில் சொன்னவனுக்கு தான் சீர்காழிக்குப் பக்கத்து கிராமத்துல பொறந்தது தெரிய நியாயமில்லை. அவன் பேர் Dhoni  இல்லை Thoni

நேத்தி ராத்திரி பதினோரு மணிக்கு போலிஸ் ஸ்டேஷனுக்கு தன் பெண் கோகிலாவோடு வந்தவன்தான். காலைல ஒரு டீயும் பன்னும் ஏட்டையா குடுத்ததை தின்னுண்டே “சார் எப்ப சார் வூட்டுக்குப் போலாம்” என்றவனை “இருய்யா. இன்ஸ்பெக்டர் வரட்டும் என்று சொன்னதைக் கேட்டு இன்னமும் அங்கேயே இருக்கிறான். அவ்வப்போது பக்கத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் கோகிலாவைத் தட்டிண்டே.

கோகிலாவுக்கு வயதுதான் பன்னெண்டு ஆச்சே தவிர இன்னும் விவரம் பத்தாது. தோணிக்கு சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யும் வேலை. காலைல போனால் மதியம் ரெண்டோ, மூணோ சொல்ல முடியாது. தன் குடிசைக்குப் பக்கத்துல கீரை விக்கும் கிழவி கிட்ட தான் விட்டுட்டு போவான். நேத்துக்கும் அப்படிப் போனவன் தான் நாலு மணிக்கு வந்தப்போ கிழவி சொன்னாள் “உன்னத் தேடிண்டு தான் பஜார் பக்கம் போச்சு” என்று.

அலைந்து திரிந்து பார்த்ததில் ஊருக்கு ஒதுக்குப் புறமான அம்மன் கோயில் பக்கமுள்ள அரச மரத்துக்குக் கீழே தூங்கிக் கொண்டிருந்தாள். கிட்டப் போய்ப் பாத்தாத் தான் தெரிஞ்சுது “மயக்கமுன்னு”. அப்படியே தூக்கிண்டு போய் பக்கதுல இருக்கற தர்மாஸ்பத்ரில பாத்தா, டாக்டர் ‘ஏய்யா இப்படி வெவரம் தெரியாத வயசுப் பொண்ணெல்லாம் தனியா உட்டுட்டு போறீங்க”ன்னு சத்தம் போட்டார்.

“நான் என்னய்யா பண்றது. இறங்கி காவா கழுவினாத்தான் அன்னிக்கு சோறு” என்றவன், “என் பொண்ணுக்கு என்னய்யா” என்றான்.

அங்கு வந்த நர்ஸ், அவனுக்கு பதில் சொல்லாம “ஆமா, இவன் மட்டும் ரொம்ப வெவரம் தான்” என்றவள். “வெளையாடிண்டு இருந்த பொண்ண யாரோ அப்பா கூப்ட்ரார்ன்னு மோட்டார் சைக்கிள்ள கூட்டிண்டு போயிருக்கான் ஒரு பையன். இது போலிஸ் கேஸு, டேசனுக்கு போ, இன்ஸ்பெக்டர் சொல்வார்”ன்னு அனுப்பிச்சுட்டாங்க.

இன்ஸ்பெக்டர் ஜான், ஏட்டையாவிடம் விஜாரித்த போது தான் தெரிஞ்சது “லோகல் பையன் ஒருத்தன் தான் கூட்டிண்டு போயி விபரீதம் பண்ணியிருக்கான் ஸார். வண்டிய வெச்சு ஆள கண்டு பிடிச்சாச்சு”

“அப்புறம் ஏய்யா பையனத் தூக்கிண்டு வரல. அதுக்கும் நா வரணுமா. லாக்கப்புல வெச்சு லாடம் கட்டினா கக்கறான்” என்றார்.

அதற்க்கபுறம் ஏட்டு, ஜான் காதைக் கடித்ததில் பாதி தான் தோணிக்குக் கேட்டது “….டாக்டர் பேசினார்…ரொம்ப மோசம்….பெரிய புள்ளி.. போன் வந்தது. உங்க பொண்டாட்டி இருக்கிற திண்டிவனத்துக்கு நீங்க கேட்ட ட்ரான்ஸ்பர் …..” ஆனா தோணிக்கு ஒண்ணும் புரியல்ல.

இன்ஸ்பெக்டர் அவனிடம் வந்து “டேய், நான் டாக்டர் கிட்ட பேசிட்டேன். ஒரு ஊசி போடுவாங்க. எல்லாம் சரியாப் போய்டும். போ” என்றபடி அவனிடம் ஒரு அம்பது ரூபாயக் குடுத்தார், ரெண்டு பேருக்கும் டிபனுக்காக.

பக்கத்தில் நின்ன கோகிலாவிடம், அப்பத் தான் கொடியேத்தி விட்டு வந்த இன்ஸ்பெக்டர் கோகிலாவிடம் கொடுத்தார்.

கையில வாங்கிண்டு “இது ஏது” ன்னா.

“முட்டாய். இன்னிக்கு சுதந்திர தினமோன்னோ , சாப்பிடு” என்றார்.

“நமக்கு சுதந்தரம் வந்துடுச்சாப்பா” என்றவளிடம் என்ன சொல்வதென்று தெரியாது நின்ற தோணியிடம் ஏட்டு “டேய், சாயந்திரம் வீட்டுப் பக்கம் வா. கொல்லையில அடச்சுண்டு இருக்கு. இறங்கித்தான் பாக்கணும்” என்றார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *