வந்தவன்!

 

தலைப்புக்கு நன்றி : ‘வாத்தியார்’ சுஜாதா

தன் முன்னால் அமர்ந்திருந்தவனை, வங்கி அதிகாரி ஆண்ட்ரூ (எ) ஆண்ட்ரூ மில்லர் பார்த்தான்.

பழுப்பு நிறமாயிருந்தான். கண்ணாடி அணிந்திருந்தான். உப்பு/மிளகு தலை முடி ஒழுங்கில்லாமல் கலைந்து, நெற்றியில் புரண்டிருந்தது. இரண்டு நாள் தாடி.

ஆசியக் கண்டத்திலிருந்து வந்திருப்பான் போலும். பார்த்தாலே ஆண்ட்ரூவிற்கு வெறுப்பாயிருந்தது. இந்தியா / சீனா / பாகிஸ்தான் / வங்க தேசம் / இலங்கை-யிலிருந்து சலிக்காமல் பயணம் செய்து, ஸ்காட்லாந்திற்கு வந்து, வேலையும் நன்றாகச் செய்து, ஆங்கிலேயப் பிரஜையாகி நம் பிழைப்பில் மண்ணைப் போடுகிறார்கள். பிரசுரிக்கத்தகாத வார்த்தையை உதடுகள் மௌனமாய் உச்சரித்தது.

வங்கியில் கணக்கை இப்போதுதான் துவக்கியிருப்பான் போலும். பற்று அட்டையை (debit card) பணிவாய் நீட்டினான்.

‘மாலை வணக்கங்கள். என் பெயர் நாகேஷ். இணைய வங்கி (internet banking) விண்ணப்பிக்க வந்திருக்கிறேன்’ என்றவனின் ஆங்கிலம் ஆங்கிலேயனின் ஆங்கிலத்தை ஒட்டியிருந்தது ஆண்ட்ரூவிற்கு எரிச்சலை அதிகப்படுத்தியது.

வலிய புன்னகையை வரவழைத்துக் கொண்டு பற்று அட்டையை வாங்கி, கணிணியை மேய்ந்தான்.

‘உங்கள் பிறந்த தேதி?’

சொன்னான்.

’உங்கள் தபால் இலக்கத்தின் (postal code) கடைசி மூன்று எண்களைச் சொல்ல முடியுமா?’

உதட்டைப் பிதுக்கி ‘தெரியாது’ என்று அலட்சியமாய்ச் சொன்னதில் எரிச்சல் கூடிற்று. ’எப்படியாவது இவனைச் சிக்கலில் மாட்டி விட்டு வேடிக்கை பார்க்க வேண்டும்’ என்கிற எண்ணம் வந்தது.

‘உங்கள் அடையாளத்தை (identification) நிரூபிக்க வேறு ஏதாவது இருக்கிறதா?’ என்று கேட்டான். வங்கி அதிகாரி என்கிற அதிகாரத்தில், சந்தேகம் எழுந்தால் மட்டுமே கேட்க வேண்டும் என்கிற முறையை மீறிய கேள்வி அது. பற்று அட்டை வைத்திருப்பவன் என்பதே போதுமானதாயிருந்தது.

வந்தவன் யோசித்தான். ஆண்ட்ரூவிற்கு உள்ளுக்குள் சந்தோஷமாயிருந்தது. ஆனால், நீடிக்கவில்லை.

மேல் அங்கியை (coat) விலக்கி, துழாவி, பயண இசைவுச் சீட்டை (passport) எடுத்து நீட்டினான்.

வாங்கிப் பார்த்த ஆண்ட்ரூவிற்கு வந்தவன் இந்தியன் என்பது மட்டும் புரிந்தது. பெயர் வாயில் நுழையவேயில்லை. புகைப்படம் பொருந்திப் போனது.

வேறு வழியில்லாமல் அவன் சொன்னதைச் செய்து விட்டு, ‘இன்னும் ஐந்து தினங்களில் உங்களுக்குத் தபால் வந்து சேரும். பிறகு இணைய வங்கியை இனிதாய்த் துவங்கலாம்’ என்று செயற்கையாய்ப் புன்னகைத்து, குலுக்குவதற்காகக் கைகளை நீட்டினான்.

நாகேஷ் மெலிதாய்க் கை குலுக்கி, மார்பில் பெயரைப் படித்துவிட்டு ‘திரு ஆன்ட்ரூ! ஒன்று சொல்லட்டுமா?’

‘என்ன?’ என்பது போல் புருவம் நெரிந்தது.

‘உங்கள் நாட்டிற்குப் பணி நிமித்தமாய்த்தான் வந்திருக்கிறேன். அதுவும் ஆறு மாதம்தான். அதுவும் மனமில்லாமல்தான். நிரந்தரமாய்த் தங்கும் எண்ணமுமில்லை. இதற்கே உங்களுக்கு எரிச்சலாயிருக்கிறது என்றால் 300 ஆண்டுகள் எங்கள் நாட்டை விட்டுப் போகாமல் நங்கூரம் அடித்த உங்களைப் பார்க்கும்போது எங்களுக்கு எப்படியிருக்கும்?’ என்று நிதானமாய்க் கேட்டான்.

ஆண்ட்ரூ பதறி ‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை’ என்றாலும் குரலில் சுரத்தில்லை.

‘பரவாயில்லை. எங்களுக்கு தோல் கெட்டி! அப்புறம் இன்னொன்று…’

‘இன்னுமா?’ என்பது போல ஆண்ட்ரூவின் பார்வை.

‘என்னைப் பார்த்தவுடன் நீங்கள் உதிர்த்த வார்த்தைக்கான அர்த்தத்தை உங்கள் தாயாரிடம் கேளுங்கள். இனிய மாலை உமதாகட்டும்’ என்று சொல்லிவிட்டு நாகேஷ் போயே விட்டான்! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)