வணங்கா மூடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 10,578 
 

ராமநாதபுரத்து அரசர்களாகிய சேது, வேந்தர்கள் தமிழ்ப் புலவர்களைப் பாதுகாத்துப் புகழ் பெறுவதில் பெரு வேட்கையுடையவர்கள். சங்க காலத்திற்குப் பிறகு அங்கங்கே சிற்றரசர்களுடைய வள்ளன்மையால் தமிழைக் கைவிடாமல் வாழ்ந்து வந்த புலவர்கள் பலர். அவர்கள் அவ்வப்போது தம்மைப் பாதுகாத்த உபகாரிகளைப் பாடிய பாடல்கள் பல. சேதுபதிகளால் ஆதரிக்கப்பெற்ற தண்டமிழ்ப் புலவாணர் பாடிய பாடல்கள் எவ்வளவோ இருக்கின்றன.

ரகுநாத சேதுபதி என்ற அரசர் தமிழன்பும் வள்ளன்மையும் மிக்கவர். அவருடைய ஆஸ்தானத்தில் அமுதகவிராயர், அனந்த கவிராயர், சவ்வாதுப் புலவர், சர்க்கரைப் புலவர் முதலிய புலவர் பலர் இருந்து விளங்கினர். சவ்வாதுப் புலவர் முகம்மதியர். தமிழில் நினைத்தபோது நினைத்த பொருளை விசித்திரமாக அமைத்துப் பாடும் ஆற்றல் உடையவர்.

ஒருநாள் புலவர்கள் கூடியிருந்த சபையில் நடு நாயகமாய் ரகுநாத சேதுபதி வீற்றிருந்தார். புலவர்கள் மிக்க இடத்தில் தமிழையன்றி வேறு எதைப் பற்றிப் பேச்சு நிகழப் போகிறது? அங்கே இருந்த மதிமந்திரிகளுள் ஒருவர் புலவர்களை நோக்கி, ” இன்று மகாராஜாவைப்பற்றி ஓர் அழகான செய்யுளை நீங்கள் இயற்றவேண்டும்” என்று சொன்னார்.

“பாட்டில் என்ன பொருளை வைக்க வேண்டும்?” என்ற கேள்வி அடுத்தபடி பிறந்தது.

“எல்லோரும் புகழ்கிறமாதிரி இருக்கக்கூடாது. மகாராஜா தாம் செய்யக்கூடாத காரியத்தைச் செய்ததாக இருக்கவேண்டும்” என்று ஒரு மந்திரி சொன்னார்.

வணங்கா முடியையுடைய மகாராஜா வணங்கினதாக ஒரு செய்யுள் சொல்லலாமே” என்று வேறொரு மந்திரி யோசனை கூறினார்.

அப்போது சேதுபதி அரசருக்கு முகத்தில் சிறிது கோபக்குறி தென்பட்டது.

சட்டென்று ஒரு புலவர் பேச்சைத் திருப்பினார்; “சிவபெருமானுக்கு மகாராஜா வணங்கினாலும் அவருடைய திருமுன் உலகமே வணங்கி நிற்கிறது” என்று சாதுரியமாகச் சேதுபதியின் வணங்கா முடியும் வணங்கும் சந்தர்ப்பத்தைப் புலப்படுத்தினார்.

கேட்ட அரசருக்குக் கோபம் அடங்கிவிட்டது. வேறொரு புலவர், “அது மட்டுமா? வேறொரு சமயத்தும் மகாராஜாவின் திருமுடி வளையலாம். ஆனால் அதன் பயன் இன்பம்” என்றார்.

“எந்தச் சமயம்?” என்று மந்திரிகள் ஒருங்கே கேட்டனர்.

புலவர் சிரித்துக்கொண்டே, “இளையார் கலவியிடத்து” என்று சொல்லிச் சிரித்தார். மன்னர் முகத்தில் புன்னகை ஒளிர்ந்தது.

மற்றொரு புலவருக்குக் கம்பர் பாடிய பாட்டொன்று ஞாபகத்துக்கு வந்தது. அவர் ஓர் மயிர் வினைஞனைப்பற்றிப் பாடின பாட்டு அது: “ஆரார் தலை வணங்கார்” என்று ஆரம்பமாகும் அந்தப் பாட்டை நினைத்துப் பார்த்துவிட்டு,’சே! இது உசிதமான சமாசாரம் அல்ல’ என்று எண்ணி அவர் மௌனமாக இருந்துவிட்டார்.

ஒரு மந்திரி, இவ்வளவு தானா? இதற்கு மேலே சாமர்த்தியமாக ஒன்றும் தோன்றவில்லையா?” என்று கேட்டார்.

அப்போது சவ்வாது புலவர் சிறிதே கனைத்துக் கொண்டார்.

“என்ன புலவரே, ஏதோ சொல்லப் போகிறீர்கள் போல் இருக்கிறதே!” என்று மந்திரி கேட்டார்.

“ஆம். மகாராஜாவின் முடி வணங்கும் சந்தர்ப்பம் மற்றொன்று எனக்குத் தெரியும்” என்றார்.

எல்லோரும் அவர் வாயையே பார்த்துக்கொண் டிருந்தார்கள்.

“வணங்காத மகாராஜாவின் பொன்முடி வணங்கும்; அதுவும் பகை மன்னருடைய முன்னிலையில் வணங்கும்” என்றார்.

அங்கு இருந்தவர்களுக்குப் புலவர் கருத்து விளங்கவில்லை. அரசரும் யோசனையில் ஆழ்ந்தார்.

“நம்முடைய மகாராஜா பகைமன்னர் முன்னிலை யில் தலை வணங்குவாரென்றா சொல்கிறீர்கள்?” என்று ஒருவர் கேட்டார்.

” ஆம், நம்முடைய வணங்கா முடியையுடைய சேதுபதி மகாராஜாவின் திருமுடி பகைவர் முன்னிலையில் வணங்கும் என்றுதான் சொல்கிறேன்.”

“இவர் என்ன இப்படி என்னவோ உளருகிறாரே!’ என்று சிலர் நினைத்தனர்.

வித்துவான்கள் சவ்வாதுப் புலவர் யாவரையும் பிரமிப்பில் மூழ்கச் செய்யப் போகிறாரென்றே எதிர்பார்த்தனர்.

“மறுபடியும் சொல்கிறேன். நம்முடைய மகாராஜா தம்முடைய பகையரசர்களூக்கு முன்னே தம் திருமுடியை வளைப்பார்.”

“யோசித்துப் பேசவேண்டும், புலவரே” என்று ஒருமந்திரி சொல்லி எச்சரித்தார்.

“பலமுறை யோசித்துத்தான் சொல்கிறேன். அப்படி வளைவதனால் நம்முடைய மகாராஜாவின் பெருமை தான் தெரிகிறது; பகையரசரின் இழிவும் புலப்படுகிறது” என்று கம்பீரமாகக் கூறினார் புலவர்.

இந்த மூடுமந்திரம் ஒருவருக்கும் விளங்கவில்லை.

“போதும் போதும். எங்களை தவிக்கவைப்பது. விஷயத்தை வெளிப்படையாகச் சொல்லிவிடுங்கள்” என்று சிலர் வேகமாகக் கூறினர்.

” மகாராஜா சிங்காதனத்தில் வீற்றிருக்கிறார். அவரால் தோல்வியுற்ற பகையரசர்கள் கையில் தளை பூண்டு சிறைப்படுகிறார்கள். சிலகாலம் கழித்து மகாராஜாவுக்குக் கருணை பிறக்கிறது. பகைவர்களை விடுவித்துத் தளையைத் தறித்து விடுகிறார். அவர்களுள் சிலர் மகாராஜாவின் பாராக்கிரமத்துக்கு அடிமையாகி இங்கேயே குற்றவேல் செய்யத் துணிகின்றனர். மகாராஜாவுக்கு அருகில் இருந்து வேண்டிய பணிவிடைகளைச் செய்கின்றனர்.

” மகாராஜா நல்ல இனிய வாசமுள்ள தாம்பூலம் அணிந்து சுவைத்து விட்டுத் திரும்புகிறார். அவர் குறிப்பறிந்த ஒரு பகையரசன் கையில் காளாஞ்சியை ஏந்திக்கொண்டு மன்னர்பிரானுக்கு அருகில் நிற்கிறான். அப்போது அந்தப் பகையரசனுக்கு முன்னே நம் மகாராஜாவின் திருமுடி சற்றே வளையும். வளை யாதா? காளாஞ்சியில் எச்சில் தம்பலத்தைத் துப்பும்போது வளையாதா? அந்த வளைவிலே மகாராஜாவின் வெற்றி மிடுக்குப் புலப்படவில்லையா?”

“ஆஹா! என்ன சாமர்த்தியம்! என்ன அருமையான கருத்து!” என்று அங்கே இருந்தவர்கள் ஆரவாரித்தனர். மகாராஜாவின் உள்ளம் மகிழ்ச்சி நிரம்பி அலர்ந்ததை அவர் முகத்தின் மலர்ச்சி தெரிவித்தது.

“ஙபுலவர் இந்தக் கருத்தைப் பாடலாகச் சொல்லலாமே” என்று ஒரு மந்திரி சொல்லும்போதே, “இதோ, சொல்கிறேன்,கேளுங்கள்” என்று சவ்வாதுப் புலவர் பின்வரும் அழகிய பாடலைச் சொன்னார்.

கிளையாளன் சேது பதிரகு நாயகன் கிஞ்சுகவாய் இளையார் கலவி யிடத்தும்நம் ஈச ரிடத்தும்அன்றி வளையாத பொன்முடி சற்றே வளையும் மகுடமன்னர் தளையா டியகையில் காளாஞ்சி ஏந்தும் சமயத்துமே.

[மந்திரி முதலிய சுற்றத்தையுடைய ரகுநாத சேதுபதியினது, முருக்கம் பூப்போன்ற சிவந்த வாயையுடைய இளம் பெண்களோடு இன்புறும் சமயத்திலும் சிவபெருமான் முன்னிலை யிலுமன்றி வணங்காத, பொன் அணிந்த திருமுடி, மகுட மணிந்த பகையரசர்கள் விலங்கு பூட்டியிருந்த தம் கைகளில் காளாஞ்சி ஏந்தும் சமயத்திலும் சற்றே வளையும். கிளை- சுற்றம். கிஞ்சுகம்- முள்ளூமுருங்கை. இளையார்- இளம் பெண்கள். தளை- விலங்கு.]

நன்றி: http://www.projectmadurai.org/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *