லிண்டா தாமஸ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 10,507 
 

” சித்து உனக்கு நாய்கள் பிடிக்குமா? ” – இதுதான் லிண்டா என்று அழைக்கப்படும் லிண்டா தாமஸ் அலுவலக விஷயம் தாண்டி என்னிடம் கேட்ட முதல் கேள்வி. பேசிய முதல் விஷயம். பெரும்பான்மையான நாட்கள் அவர் வீட்டிலிருந்தே வேலை செய்வார். 17 ஆண்டுகளாக பணியாற்றிக் கொண்டிருக்கும் நிறுவனம் அவருக்கு இந்தச் சலுகை கூட தராமல் போனால்தான் ஆச்சர்யம். அந்த நிறுவனத்தில் தனது 25 ஆம் வயதில் ஒரு கால் அட்டண்டராக சேர்ந்தவர். படிப்படியாக முன்னேறி, இன்று அவர்தம் 42ஆம் வயதில் அந்நிறுவனத்தில் ஒரு அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்திருந்தார்.

தோள்களைத் தாண்டி முதுகில் படரும் செம்பழுப்பு நிற முடிக்கற்றைகள்; கொஞ்சமே கொஞ்சமாய் ஏறிய நெற்றி; கூரிய நாசி; மேக்கப்பை மீறித் தெரியும் கன்னச் சுருக்கங்கள்; ஆறடி உருவம்; குளிரைத் தாங்கும் மெரூன் நிற ஓவர்கோட். இத்தனையையும் கற்பனை செய்தாகிவிட்டதா? இதுதான் நான் லிண்டா தாமஸ். இப்படித்தான் நான் கற்பனை செய்து வைத்திருக்கிறேன். இதுவரையில் அவரது புகைப்படத்தைக் கூட நான் பார்த்ததில்லை.

எடுத்துக் கொண்ட வேலையைச் செய்து முடிப்பதில் அவர் காட்டும் அக்கறைக்கும், அர்ப்பணிப்புக்கும் முன்னால் நேற்று வேலைக்குச் சேர்ந்த புதியவர்கள் கூட பக்கத்தில் நிற்க முடியாது. செய்யும் வேலையை நேசித்து, ரசித்துச் செய்பவர்களுக்கு மட்டுமே இதெல்லாம் சாத்தியம். அவருடன் ஃபோனில் உரையாடும் பொழுதுகளில் பெரும்பாலான சமயங்களில் பின்னால் இருந்து நாய் ஒன்றின் குரைப்புச் சத்தம் கேட்டபடியே இருக்கும். எங்கள் பக்கமிருந்து வரும் சின்னச் சின்ன ‘ஹஸ்கி’ சத்தங்களைக் கூட சகித்துக் கொள்ள முடியாத லிண்டா, அந்த நாயின் ஹை டெசிபல் குரைப்புகள் பற்றி கொஞ்சம் கூட சட்டை செய்ததில்லை.

ஒரு முறை அப்படி குரைத்துக் கொண்டிருந்த பொழுது, “பாவம் அவளுக்குப் பசிக்கிறது போலிருக்கிறது. என்னை மன்னித்துக் கொள். ஐந்து நிமிடத்தில் நானே திரும்ப அழைக்கிறேன்” என்று கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்தார். அப்போது அங்கே ‘நாஷ்வில்’லில் காலை 9. இங்கே, சென்னையில் இரவு 10:30. எனக்கு பசியில் கண்களைக் கட்டிக் கொண்டு வந்தது. எழுந்து, காஃபே சென்று எதையாவது கொரித்துவிட்டு வரலாம் என்றால் லிண்டா எப்போது திரும்ப அழைப்பார் என்று சொல்வதற்கில்லை. அவர் அழைத்து நான் இல்லாது போனால் அதன் பின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று யூகிக்க முடியாது.

நாங்கள் இங்கே செய்ய வேண்டிய வேலை குறித்து எங்களுக்கு விளக்க வேண்டியது அவரது பொறுப்பு. அவரது நிறுவனத்தில் அவரும் அவரின் கீழ் பணிபுரிபவர்களும் செய்யும் வேலையை சுலபமாக்க மென்பொருள் ஒன்றைத் தயார் செய்யும் வேலை என்னுடையது. அவர் தரும் தகவல்களை வைத்தே என் வேலையை என்னால் செய்ய முடியும். அவரிடமிருந்து அவரைத் தொந்தரவு செய்யாமல் தகவல்களைப் பெறவே நான் பணிக்கப்பட்டிருக்கிறேன். அதனால் என் இந்திய இரவுகளை அமெரிக்கப் பகல்கள் தின்று கொண்டிருந்தன.

அவருடனான எனது முதல் தொலைபேசி அழைப்பை என்னால் மறக்கவே முடியாது. அவர்களது காலை 8 மணிக்கு எங்கள் இருவருக்கிடையேயான கலந்துரையாடல் முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்திய நேரப்படி இரவு 9:30 மணி. நான் ஐந்து நிமிடம் முன்னதாகவே அழைப்பில் காத்துக் கொண்டிருந்தேன். மணி 9:40 ஆன போதும் அவர் வரவேயில்லை. பொதுவாக அமெரிக்கர்கள் நேரத்தை மிகச்சரியாக கடைபிடிப்பவர்கள். அதில் மாற்றம் இருப்பின் முன்னரே தெளிவாக தெரிவித்தும் விடுவார்கள். எனவே இணைப்பைத் துண்டித்துவிட்டு அவருக்கு நான் காத்திருந்தது குறித்து ஒரு மெயில் அனுப்பலாம் என்று மெயில் பெட்டியைத் திறந்தேன். இன்பாக்சில் முதல் மெயிலாக லிண்டாவின் மெயில் இருந்தது. கொஞ்சம் பெரிய மெயில். முழுக்க முழுக்க என்னைத் திட்டியும், எனது காலம் கடைபிடிக்க இயலாமை குறித்தும் ஒரு பக்கத்திற்கு நீண்டிருந்தது. அந்த மெயில் எனது மேலாளர், அவரது மேலாளர், இன்னபிற பெரிய தலைகள் என அனைத்து முக்கியஸ்தர்களுக்கும் அனுப்பப் பட்டிருந்தது. முதலில் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. நண்பர்களிடம் காட்டி விசாரித்த பொழுதுதான் உண்மை புரிந்தது. அதற்கு முந்திய வாரத்திலிருந்துதான் அமெரிக்காவில் “டே லைட் சேவிங்” என்னும் பகல் வெளிச்சத்தை மிச்சப்படுத்தும் முறை முடிந்துவிட்டிருந்தது தெரிய வந்தது. அதன்படி நான் லிண்டாவை இரவு 9 மணிக்கே அழைத்து இருந்திருக்க வேண்டும். அவர் எனக்காக கால்மணி நேரம் காத்திருந்து பார்த்துவிட்டு நான் வராமல் போகவே அத்தனை கோபத்தையும் உள்ளடக்கி ஒரு மெயிலைத் தட்டிவிட்டிருக்கிறார்.

அந்த மெயிலுக்கு நான் அளித்த விளக்கங்கள் அவரை மேலும் கோபப்படுத்தவே செய்தது. முதல் கோணல், எல்லா இடங்களிலும் இடித்தது. அன்றிலிருந்து கிட்டதட்ட ஒரு மாதமாக நாங்கள் தினமும் ஒரு மணி நேரம் பேசுகிறோம். பேசவேண்டிய அலுவல் விஷயத்தைத் தவிர கூடுதலாக ஒரு வார்த்தை கூட அவர் பேசியதில்லை. நான் முன்னால் கூறியபடி ஆச்சர்யமாக அன்று தன் நாய்க்கு உணவிட்டு வந்து ஐந்தே நிமிடங்களில் திரும்ப அழைத்தார். மிகவும் பரிவுடன் ” சித்து உனக்கு நாய்கள் பிடிக்குமா? ” என்று என்னைக் கேட்டார்.

அமெரிக்கர்கள் வளர்ப்பு பிராணிகளிடம் காட்டும் அன்பு பற்றி நான் அறிவேன். எனவே “பிடிக்கும்” என்ற ஒரு வார்த்தை அவரிடம் என்னைப் பற்றிய பிம்பத்தை மாற்ற உதவும் என்பதையும் நான் அறிவேன். இருந்தாலும் நான் சொன்னேன் ” இல்லை லிண்டா. எனக்கு நாய்கள் என்றால் எனக்குப் பயம் “. அவரிடமிருந்து ஒரு ஆச்சரியப் பெருமூச்சு வெளி வந்தது.

” உங்களுக்கு எப்படி நாய்களைப் பிடிக்காமல் போகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை ” இதில் ‘உங்களுக்கு’ என்பதை ‘உன்னைப் போன்றவர்களுக்கு’ என்ற தொனியிலேயே அர்த்தப்படுத்தினார்.

சக மனிதனையே பிடிக்காத இவ்வாழ்வில் அது ஒன்றுதான் குறை என்று மனதில் நினைத்துக் கொண்டாலும், ” அறுதியிட்டுக் கூற வேண்டிய காரணம் ஒன்றுமில்லை. ஆனால், அது அப்படித்தான் ” என்றேன்.

இதற்கு முகத்தில் அடித்தாற் போன்ற பதிலை எதிர்பார்த்தேன். ஏமாற்றமாக, அவரிமிருந்து கனிவுடனே வார்த்தைகள் வெளிவந்தன. ” நாய்களைப் போன்ற உற்ற தோழர்கள் வாழ்வில் கிடைக்க மாட்டார்கள். அவைகளைப் பார்த்து பயப்பட என்ன இருக்கிறது? என் அன்பு மகளையும், அன்பற்ற கணவனையும் பிரிந்து வாழும் எனதிந்த 8 வருட வாழ்வில் என் தனிமையை இட்டு நிரப்பியவள் இந்த டெஸ்ஸா .கோல்டன் ரெட்ரீவர் இனத்தைச் சேர்ந்தவள். மிக மிக நட்பானவள். இரண்டு நாட்கள் பழகிப் பார்த்தால் உனக்குக் கூட இவளை மிகவும் பிடித்துவிடும். இப்போது கூட என் கால்களையேச் சுற்றி வந்து கொண்டிருக்கிறாள். ”

இதைச் சொல்லும் பொழுது லிண்டாவின் குரலில் ஒரு குழந்தையின் குதூகலம் தொற்றிக் கொண்டது. இவர் இப்படியும் பேசுவாரா என்ற ஆச்சர்யத்தில் எனக்கு வார்த்தைகளே வரவில்லை.

அன்றிலிருந்து லிண்டாவிடம் மிகப் பெரிய மாற்றம். அதன்பின் ‘குட் மார்னிங்’ சொல்லி, நான் என்ன சாப்பிட்டேன் என்று கேட்காமல் அவர் பேச ஆரம்பிப்பதே இல்லை. சில சமயங்களில் என்னிடம் அவர் சமையல் குறிப்பெல்லாம் கூட விசாரித்ததுண்டு. இந்தியன் மசாலாக்கள் அவருக்கு மிகவும் விருப்பம். அவரிடம் பேசியவரையில், அவர் தனியாக டெஸ்ஸாவுடன் வசித்து வருகிறார். அவரின் மகள் கரோலின் கலிபோர்னியாவில் வசிக்கிறார். அவரின் கணவர் குறித்து அவர் எந்தத் தகவல்களையும் பகிர்ந்ததில்லை. அவர்களாகப் பகிராமல் கேட்டுத் தெரிந்து கொள்வது முறையல்ல. அது அத்தனை முக்கியமுமில்லை. அவர் ஏன் முதலில் அப்படி நடந்து கொண்டார்? அவரிடம் இந்த மாற்றம் ஏற்பட என்ன காரணம் என்பதை எத்தனை யோசித்தும் என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முயற்சிப்பதும் கூட ஒரு வகையான முட்டாள்தனம் தானே.

இப்படியாக மூன்று மாதங்களில் நாங்கள் செய்து முடிக்க வேண்டிய மென்பொருள் கிட்டத்தட்ட தயாராகிவிட்டது. பின்பு, அவரிடம் கேட்டு அறிந்து கொள்வதற்குப் பெரிதாக ஒன்றும் இருக்கவில்லை. தினசரி 1 மணி நேரம் நடந்த கலந்துரையாடல், 5 நிமிட தகவல் பரிமாற்ற அழைப்பாக மாறியது. பின்னர் அதுவும் படிப்படியாகக் குறைந்து தினம் என்பதிலிருந்து வாரம் ஒரு முறை என்றாகிவிட்டது. ஆனாலும் அவ்விடைப்பட்ட காலங்களில் எங்கள் இருவருக்கிடையேயான நட்பு பலப்பட்டிருந்தது.

அப்படியான ஒரு நாளில் எங்கள் டீமில் இருந்த அனைவருக்கும் லிண்டாவிடம் இருந்து கீழ் கண்டவாறு மெயில் ஒன்று வந்திருந்தது.

அன்பு நண்பர்களே,

இதுதான் இந்த நிறுவன ஐ.டியிலிருந்து நான் உங்களுக்கு எழுதும் கடைசி மெயிலாக இருக்கக் கூடும். ஆம், இன்று இங்கு எனக்கு கடைசி நாள். சிலருக்கு இது முன்பே தெரிந்திருக்கக் கூடும். சிலருக்கு இது அதிர்ச்சியாகவும் இருக்கலாம்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். உங்களின் வருங்கால வெற்றிகளுக்கு எனது வாழ்த்துகள்.

லிண்டா.

மூன்றே வரிகளில் மிகத் தெளிவாக தான் சொல்ல விரும்பியதைச் சொல்லிவிட்டிருந்தார். எனக்குத்தான் ஒன்றும் விளங்கவில்லை. குறைந்தது பத்து முறையாவது திரும்பத் திரும்ப வாசித்திருப்பேன். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான்கு நாட்களுக்கு முன்பு பேசும் போது கூட எனது திருமண ஏற்பாடுகள் குறித்து மிகுந்த அக்கறையுடன் விசாரித்த அவர், இதைப் பற்றி ஒரு வார்த்தையும் கூறவில்லை. இது ஒன்றும் திடீரென்று எடுத்த முடிவு போலவும் தெரியவில்லை. முன்பே திட்டமிடப்பட்ட ஒன்று போன்றுதான் தோன்றியது. ஆனால் அவரே அறிவிக்கும் வரையில், இதுபற்றி எந்தத் தகவலோ, சிறு குறிப்போ கூட அவர் வெளியிடவில்லை. முதல் நாளில் பேசிய அவர் குரலின் கடுமை ஒரு முறை நினைவில் தோன்றி மறைந்தது.

இத்தனை நாட்கள் குரலில்தான் பரிவும், கனிவும், குழைவும் இருந்ததே தவிர, உள்ளத்திலிருந்து வரவில்லை போலும். என்னிடம் ஒரு வார்த்தை கூற வேண்டும் என்று கூடத் தோன்றாத அவரைப் பற்றி நான் மட்டும் ஏன் இவ்வளவு அலட்டிக் கொள்கிறேன். தேவையில்லை.

எத்தனை சமாதானப்படுத்தினாலும் ‘அவர் ஏன் திடீரென்று 17 வருடமாக இருந்த நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டும். அவருக்கு ஓய்வு பெறும் வயதுமில்லை. பின் ஏன்? அவரின் மகள் நலமாக இருக்கிறார் தானே? அவர் கணவர் இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்? ‘ இது போன்ற கேள்விகள் என்னில் துருத்திக் கொண்டேயிருந்தன. அவரிடமோ, அவரது நண்பர்களிடமோ கேட்டுத் தெரிந்து கொள்வதும் சாத்தியமில்லை. எனவே ‘நாஷ்வில்’லில் தங்கியிருக்கும் எங்கள் நிறுவன மேலதிகாரியிடம் கேட்டால் நிச்சயமாக ஏதேனும் பதில் கிடைக்கக் கூடும்.

அதுவாக அமையாத போதும், அப்படியொரு வாய்ப்பை நானே ஏற்படுத்திக் கொண்டேன். அலுவல் சம்பந்தமாக சில விசயங்களைப் பற்றி விசாரித்துவிட்டு, மிகவும் இயல்பாக இலக்கண பிழையற்ற ஆங்கிலத்தில் அவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன். ” பிரசாத், ஏன் மிஸஸ் லிண்டா தாமஸ் திடீரென்று அவரது நிறுவனத்திலிருந்து விலகிவிட்டார்? ”

” அவர் விலகவில்லை. விலக்கப்பட்டிருக்கிறார். ”

இது நான் கொஞ்சமும் எதிர்பார்க்காத பதில் என்ற பொழுதும் அந்த அதிர்ச்சியை என் குரலில் வெளிப்படுத்திக் கொள்ளாத லாவகத்துடன், ” ஏன் ஏன் பிரசாத்? அவரை விலக்கும்படி என்ன நேர்ந்தது ? ” என்று கேட்டேன்.

” உண்மையைச் சொல்லட்டுமா? அவரை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் தான் நாம்.. இன்னும் சரியாகச் சொன்னால் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள் ”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *