Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ரௌத்திரம் பழகு!

 

மணிக்கூண்டு சிக்னல். கடைவீதியின் மிக முக்கியமான ஒரு நாற்சந்தியின் சிக்னல். ஈரோட்டின் ஜவுளிச் சந்தை கூடுமிடத்திற்கு வெகு சமீபம் என்பதாலும், அன்று சந்தை நாள் என்பதாலும் கலகலவென்று தெருவெல்லாம், சரக்கு வண்டிகளும், இருசககர, நான்கு சக்கர வாகனங்களும் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன. சிக்னலில் சிவப்பு வண்ணம் வந்து அந்த மூன்று நிமிடம் காத்திருக்கும் பொறுமை கூட இல்லாமல் சிக்னல் விழுவதற்குள் அந்த இடத்தைக் கடந்துவிட வேண்டும் என்ற அவசரம் அத்துனை பேருக்கும் இருந்தது. எத்துனை விதமான மனிதர்கள், அவர்தம் குணங்களை இந்த ஒரு சில நிமிடங்களில் கணிக்க முடியும் அளவிற்கு அவர்தம் போக்கு. இவ்வளவு அவசரமாக வந்தும் சிக்னலில் சிவப்பு விளக்கு விழுந்து விட்டதே என்று சர்ர்ர்ர்ர்ரென்று வந்து வண்டியை நிறுத்தி விட்டு சிக்னலைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தவர்கள் மத்தியில் சற்றே ஓரமாக நின்றிருந்த ஒரு இரு சக்கரவாகனப் பெண்மணி முன்னால் தெரிந்த ஏதோ மனித தலையை அடையாளம் கண்டு மெல்ல தம் வண்டியை ஓரமாகவே உருட்டிக் கொண்டு நாலெட்டில் அந்த மனிதரை நெருங்கி, சற்றும் தாமதிக்காமல் தன்னால் இயன்ற மட்டும் கையை ஓங்கி அந்த மனதனின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டவுடன் அத்தனை பேரும் ஸ்ஸ்ஸ்ஸ் என தன் கன்னம் நோக்கி தன்னிச்சையாக கையைக் கொண்டுபோகும்படி ஆனது.. “தொலைச்சுப்புடுவேன்.. எங்கே போயிடுவே. மரியாதையா வந்து சேரு. ………” என்று மேலும் சொன்ன சில வார்த்தைகள் சரியாகக் காதில் விழவில்லை. அதற்குள் சிகனலில் மஞ்சள் விளக்கு வரவும் வாகனங்கள் கிளம்பத் தயாராகின.. அடுத்த பச்சை விளக்கில் அனைத்து வாகனங்களும் முந்திச்செல்ல முற்பட்டு, அதில் அடி கொடுத்தவரும், அடி வாங்கியவரும் ஆளுக்கொரு திசையில் பறக்க ஆரம்பித்து விட்டார்கள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த என்னால்தான் இந்த சம்பவத்தை மறக்கவே முடியவில்லை. அப்படி என்ன கோபம் வந்துவிடும் ஒரு பெண் பிள்ளைக்கு. எப்படியும் 30 வயது இருக்கும்.. இந்த வயதில் நடுத்தெருவில் ஒரு ஆடவனை அடிக்கும் அளவிற்கு எத்துனை துணிச்சல் இருக்க வேண்டும்.. சே.. கொஞ்சமும் சபை நாகரீகம் தெரியாத கேவலமான குணம் என்று திட்டிக்கொண்டே சென்றேன்.. அன்று முழுவதும் அந்தப் பெண்ணின் முகத்தில் இருந்த ஆக்ரோஷமும், அந்த ஆடவன் நடுங்கி பின் வாங்கியதும் அடிக்கடி மனக்கண் முன்னால் வந்து போய்க் கொண்டிருந்தது……

பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடந்து கொண்டிருப்பதால் நாலைந்து நாட்களாக அதே நினைவாக இருந்தபடியால் மெல்ல, இந்தப் பெண் அடி கொடுத்த விசயம் சுத்தமாக மறந்துவிட்டது. ஒரு வாரம் சென்றிருக்கும். ஒரு நாள் மாலை பள்ளிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தேன்.. கடைவீதியில் வந்து கொண்டிருக்கும் போது என் இரு சக்கர வாகனம் கூட நுழைய முடியாத அளவிற்கு ஒரு இடத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. போக்குவரத்து இடைஞ்சல் ஆக நேர்ந்த போது போக்குவரத்து காவல் துறை அதிகாரி வந்து அங்கு கூட்டத்தை விலக்க வேண்டியதாக இருந்தது. யாரோ ஒருவன் நன்கு அடி வாங்கியிருந்தான். குடித்திருப்பவன் போன்று உளறிக் கொண்டும் இருந்தான். போலீஸாரும் உள்ளே சென்று கூட்டத்தை விலக்கி அவனை மிரட்டி விட்டுச் சென்றார். அங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் எட்டிப்பார்க்க நினைத்த போது, அதே முகம்… கோபமான அதே முகம், கூட்டத்தை விலக்கிக் கொண்டு யாரையோ வசைமாரி பொழிந்து கொண்டு கையோடு ஒரு பெண்ணை தரதரவென இழுத்துக் கொண்டு வேகமாக வந்து தன் வ்ண்டியில் ஏறியதோடு பின் இருக்கையில் கையோடு கூட்டிவந்த அந்தப் பெண்ணையும் அமர்த்திக் கொண்டு யாரையும் திரும்பிக்கூட பாராமல் விர்ரென்று வண்டியைக் கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டார், முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க….. அந்த அம்மாவைப் பார்த்தவுடன் எனக்கு திரும்பவும் அன்று அடி வாங்கியவனின் நினைவு வந்தது. ஒரு வேளை திரும்ப அவனாகவே இருக்குமோ என்று எண்ணி திரும்பிப் பார்த்தால் இது வேறு ஒரு ஆள்.

“அட….ச்சை.. என்ன பொம்பிளை இது.. கொஞ்சமும் அடக்கமில்லாமல் இதே பொழைப்பாகத் திரிகிறதே.. யார்தான் இதைத்தட்டிக் கேட்பது. பெண் குலத்திற்கே அவமானச் சின்னம் போல”
என்று எண்ணிக் கொண்டே, முனுமுனுத்தவாறே கிளம்பினேன்.. அடுத்து ஒரு வாரம்தான் இருக்கும் இன்னொரு இடத்தில் ஏதோ தகராறு நடந்து கொண்டிருந்தபோது கட்டாயம் இந்தம்மாதான் அதற்கு காரணமாக இருப்பாள் என்று மனம் நம்ப ஆரம்பித்துவிட்டது. அந்தம்மாவின் தலை போல் தெரிந்தது என்னுடைய கற்பனையாகக்கூட இருக்கலாமோ என்னவோ அதுவும் புரியவில்லை. ஆனாலும் அந்தம்மாவின் மீது ஒரு வெறுப்பே வளர ஆரம்பித்துவிட்டது.

பரிட்சையெல்லாம் முடிந்து விடுமுறை ஆரம்பித்து விட்டது. அன்று ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரியும் என் சகோதரரைக் கண்டு ஒரு குடும்ப விசயம் பேச வேண்டும் என்று சென்றேன். அண்ணன் வேலையில் மும்முரமாக இருந்ததாலும், அவருடைய அறையில் யாரோ வாடிக்கையாளர்கள் பேசிக்கொண்டிருப்பதும் தெரிய, வெளியில் இருந்த இருக்கையில் அமர்ந்து அங்கிருந்த தினசரிகளை புரட்டிக் கொண்டிருந்தேன். உள்ளே இருப்பவர்கள் வெளியே வந்தவுடன் போகலாம் என்று காத்திருந்தேன். சற்று நேரத்தில் அறைக்கதவு திறந்து யாரோ இருவர் வெளியில் வருவது தெரிந்தது.. தினசரியில் சுவாரசியமாகப் படித்துக் கொண்டிருந்த ஒரு செய்தியின் இறுதிப்பகுதி.. அதை மட்டும் படித்துவிடலாமே என்று வேகமாக பார்வையை ஓட்ட, ஏதோ தெரிந்த குரல் போல கேட்கவும் குரல் வந்த திசை நோக்கி பார்வையைத் திருப்ப, அங்கு என் வெறுப்பிற்கு முழுவதுமாக பாத்திரமாகியிருந்த அதே பெண்மணி. இங்கு என்ன செய்கிறது இந்த அம்மணி என்று யோசிக்கும் போதே, மேலாளர் அறையைக் காட்டி ஏதோ பேசிக் கொண்டிருந்தது உதவி மேலாளரிடம்.. ஒரு புழுவைப்போல அந்த அம்மாவைப் பார்த்த என் பார்வை அவரை அத்துனை சங்கடப்படுத்தியிருக்க வாய்ப்பிருக்குமா என்று தெரியவில்லை.. அப்படி நெளிந்து கொண்டிருந்தார் பாவம்..

அறையினுள் சென்று சகோதரரிடம் கேட்ட முதல் கேள்வி, இப்போது ஒரு அம்மணி வந்து செல்கிறதே அது யார் என்பதுதான்…. சகோதரரும், தன்னுடன் அழைத்து வந்திருந்த ஒரு பெண், கணவனால் கைவிடப்பட்டவர் என்றும், அவளுக்கு ஒரு சிறுதொழில் கடன் வேண்டியும் அழைத்து வந்திருந்ததாகச் சொன்னார். உடனே நான், “அண்ணா அந்த அம்மா சம்பந்தமாக எது செய்தாலும் பல முறை யோசித்து செய்யுங்கள். மிக மோசமான பொம்பிளை போலத் தெரிகிறது, சரியான சண்டைக்காரி. நாளைக்கு உங்களுக்கு ஏதும் பிரச்சனை வந்துவிடப் போகிறது” என்றேன். அண்ணனும், அதுசரி, விசாரிக்காமல் கொள்ளாமல் அவ்வளவு எளிதாகவெல்லாம் தூக்கிக் கொடுத்து விடமாட்டோம் அரசாங்கப் பணத்தை” என்று சொன்னதும்தான் மனம் ஆறியது..

அடுத்த நாள் காலை வழக்கம்போல ரயில்வே காலனி மைதானத்தில் நடைப்பயணம் சென்றுவிட்டு திரும்பலாம் என்று எண்ணியபோது சற்று அதிகமாக நடந்த களைப்பு அங்கிருந்த பெஞ்சில் சிறிது நேரம் உட்கார்ந்து ஓய்வெடுக்கத் தூண்டியது. அப்போது அங்கு டீ விற்றுக் கொண்டிருந்தவர் வைத்திருந்த எப்.எம். ரேடியோவில் ஒரு குட்டிக்கதை சொல்லிக் கொண்டிருந்தார்கள்… அதாவது, வியாச முனிவர் ஒருநாள் நகரத்தினுள் நடந்து சென்று கொண்டிருந்த போது ஒரு புழு ஒன்று வெகு வேகமாக அந்த இடத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தது. இதைக் கவனித்த வியாசர் “அப்படி அவசரமாக எந்த கோட்டையைப் பிடிக்கப் போகிறாய்”? என்று கேட்க,

அதற்கு அந்தப்புழு,”சுவாமி, தொலைவில் ஒரு வாகனம் வரும் அதிர்வு தெரிகிறது.அதனால் என்னை காப்பாற்றிக் கொள்ளவே இத்துனை வேகமாகச் செல்கிறேன் “ என்றது.

அதற்கு வியாசரும், “அப்படி உன்னைக் காப்பாற்றிக் கொண்டு நீ என்னசாதிக்கப் போகிறாய். ஒரு அற்பப் புழுவான நீ உயிரோடு இருந்துதான் என்ன சாதிக்கப் போகிறாய், உன்னால் யாருக்கு என்ன இலாபம்”? என்றார்.

அந்த புழு அவரைப் பார்த்து ”உங்கள் அளவிற்கு நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுபோல என் அளவிற்கு நானும் செய்து கொண்டுதான் இருக்கிறேன். அதனால் இதில் யார் பெரியவன் என்ற சர்ச்சையெல்லாம் வேண்டாம் “ என்றது.

வியாசரோ மிகவும் கோபப்பட்டு ”என்னுடன் உன்னை இணைத்துப் பேச என்ன தகுதி இருக்கிறது உனக்கு. நீயும் நானும் ஒன்றா.. தவத்தில் சிறந்து விளங்கும் நான் எங்கே, அற்பமாகச் சுற்றித் திரியும் நீ எங்கே” என்று சத்தம் போட ஆரம்பித்தார்.

அந்தப்புழு சற்றும் தயங்காமல், “ஐயனே, நான் என்னை என்றுமே பெரியவனாக நினைத்துக் கொண்டதே இல்லை. ஆனால் தலைப்பரட்டை புழுவிற்கும், மற்ற சிறு புழு வகைகளுக்கும் நான் உயர்ந்தவன்தான். அதேபோல தேவர்களுக்கு ஒருபடி தாழ்ந்தவர்தான் நீங்கள். என் அளவிற்கு என்னுடைய இன்பமோ அல்லது துன்பமோ பற்றி ஏதும் உங்களுக்குத் தெரியுமா? அப்படியிருக்க நீங்கள் எப்படி உயர்ந்தவர்கள் ஆவீர்கள்’? என்று வினவ அப்போதுதான் வியாசருக்கு உரைத்தது தன்னுடைய தவறு என்ன என்று

இந்தக் கதையை சொல்லி முடித்தவர், உலகத்தில் யாருமே அற்பமானவர்கள் அல்ல, ஏதோ ஒரு காரணத்திற்காக இயற்கையால் படைக்கப்பட்டவர்கள். காரணங்கள் இல்லாமல் காரியங்கள் இல்லை. அதனால் எவரையும் உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ மதிப்பிடக்கூடாது என்று பேசிமுடித்தார்.

நேரம் ஆகிவிட்டபடியால் எழுந்து வீடு நோக்கிச் செல்லும் போது வ்ழியெல்லாம் ஏதோ மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது. அந்தக் கதை என் மனதை மிகவும் பாதித்திருந்தது. ஏனோ அந்த சண்டைக்கார அம்மணியின் முகம் நினைவில் வந்தது.. தான் அவ்வளவு மோசமாக நடந்து கொண்டிருக்கக் கூடாதோ.. அவருடைய சூழ்நிலை என்ன ஏது என்று கூட யோசிக்காமல் சகோதரனிடமும் அவரைப்பற்றி ஒரு மோசமான அபிப்ராயத்தை திணித்து விட்டோமே என்று வருத்தம் ஏற்பட்டது.

அதே உறுத்தலுடன் வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது, வழியில் முதன்முதலில் அந்த அம்மையாரிடம் அறை வாங்கிய அந்த ஆடவனைக் காண முடிந்தது.. இன்னொருவனிடம் ஏதோ பேசிக் கொண்டிருப்பது தெரிய, மெதுவாக நெருங்கிச் செல்லும் போது , இன்னொருவன் , என்னப்பா ஆச்சு அந்த பிரச்சனை .. அதான் அந்த குருட்டுப் பிள்ளையை கெடுத்துப்போட்டு ஒதுக்கிவிட்டு வந்தாயே. இப்ப என்ன ஆச்சு அந்த ஆசிரமத்துக்காரம்மா உன்னை இழுத்துக்கிட்டுப் போச்சே.”? என்று கேட்க,

அவனும், “அதை ஏம்ப்பா கேக்கற, அந்த குருடி அனாதைச் சிறுக்கிதானேன்னு சாதாரணமா நினைச்சி உட்டுப்போட்டு வந்துட்டேன். ஆனா அந்த ஆசிரமத்துக்காரம்மா என்னை துரத்தி துரத்தி அடிச்சி அந்தப் புள்ளைய கட்டி வச்சிப்புடிச்சி… அதோட நிக்காம, கண் வங்கில போராடி அந்த புள்ளைக்கு பார்வை கிடைக்கவும் வழி செய்துடிச்சி.. இப்ப அந்தம்மாதாம்ப்பா எங்களுக்கு தெய்வம்.. எங்களுக்கு மட்டுமா, அந்த ஆசிரமத்துல வந்து பாரு எத்தனை பொம்பிளைகள், பெரிசுகள்னு அனாதைகளா அவங்களோட பாதுகாப்புல இருக்காங்கன்னு.. ஒரு கல்யாணம் இல்லை, சொந்தபந்தமும் இல்லை, தன்கிட்ட இருந்த சொத்தெல்லாம் இந்த ஆசிரமத்துக்கு எழுதி வச்சதோட, உடம்பாலயும் உழைச்சு ஓடாத்தேயற அந்தம்மா இன்னொரு மதர் தெரசாப்பா.. என்ன அந்த தெரசாம்மா அமைதியே உருவாக, அன்பே தெய்வமாக வாழ்ந்தாங்க. இந்தம்மா கொஞ்சம் பாரதியின் ரௌத்திரம் பழகுறாங்க.. என்னைப்போல ஆளுங்களை சமாளிக்க அதுவும் தேவையால்ல இருக்கு. அன்னைக்கு உட்ட ஒரு அறையில பாரு இன்னைக்கு ஒழுங்கா அந்த ஆசிரமத்துக்கு பாதுகாவலனாவும், அந்த குருட்டுப் பொண்ணு வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டியாவும் இருக்கிறேனே..” என்று சொன்ன போது,

என் கன்னத்தில் யாரோ ஓங்கி அறைந்தது போல இருந்தது. அவசரப்பட்டு தீர விசாரிக்காமல் கூட எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோமே என்று மனம் நொந்து போனாலும், வீட்டிற்குப் போய் குளித்துவிட்டு, முதல் வேலையாக வங்கிக்குச் சென்று சகோதரனிடம் நடந்ததெல்லாம் கூறி ,அந்தம்மா கூட்டி வந்த அபலைப் பெண்ணிற்கு தொழிற்கடன் பெற உதவ வேண்டும் என்று எண்ணிய போதுதான் மனபாரத்தை இறக்கி வைத்தது போல ஒரு நிம்மதி கிடைத்தது…. 

தொடர்புடைய சிறுகதைகள்
கதை ஆசிரியர்: பவள சங்கரி. இன்று சனிக்கிழமை. மகள் மதிவதனி குழந்தைகளுடன் வருவதற்கு இன்னும் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டும். ஒரு வாரமாக பேரக்குழந்தைகளைப் பார்க்காமல் கண்ணில் கட்டியது போல் உள்ளது… மகளைஅடிக்கடி பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமென்றுதான் உள்ளூரிலேயே தேடிப்பிடித்து இந்த ...
மேலும் கதையை படிக்க...
எங்கே அவள்?
கதை ஆசிரியர்: பவள சங்கரி. நான் உன்னைக் காதலிப்பேன். மரணமற்ற நித்ய காதலாகும் அது. கதிரவன் குளிர்ந்துபோகும் வரை நட்சத்திரங்கள் முதுமையடையும் வரை நான் நித்தம் உன்னைக் காதலிப்பேன் –ஷேக்ஸ்பியர் அற்றைத் திங்களில், நிலவொளியில்நீயிருந்தாய் என்னோடு இற்றைத் திங்களில்நிலவு மட்டுமே என்னோடு… எங்கே சென்றாய் என் இனிய இதயமே என்று தொலைந்த தன் ...
மேலும் கதையை படிக்க...
தேவையில்லாத எதிர்பார்ப்புகளே ஒருவரை வாழ்க்கையின் அடிமையாக்குகிறது.. இரவு படித்து முடித்து வைத்த புத்தகத்தின் சில வரிகள் பளிச்சென்று நினைவிற்கு வந்தது தூங்கி முழித்தவுடன்…. அழகாக குளித்து முடித்து நார்மலான காலை வழிபாடு முடித்து மதிய உணவிற்கு இரண்டு சப்பாத்தியும் கொஞ்சம் சன்னாவும் ...
மேலும் கதையை படிக்க...
”ஏப்பா…. சந்திரா பொண்ணு வீட்டுக்காரங்க எப்ப பார்க்க வர்ரீங்கன்னு கேட்டு அனுப்பியிருக்காங்க.. நீ ஒன்னுமே சொல்லாம இருக்கியே…?” “கல்யாணம் பண்ணிக்கற நிலைமையிலா இப்ப இருக்கு நம்ம் வீடு… அக்கா குழந்தைக்கு மொட்டையடிக்கிறதுக்கு போயிட்டு வந்து சீர் பத்தலைன்னு அவிங்க மாமியார்கிட்ட பேச்சு தின்ன ...
மேலும் கதையை படிக்க...
சாம்பிராணிப் புகையின் மணம், மேக மூட்டமாய் வீடு முழுவதும் நிறைத்திருக்க, வெங்கடேசுவர சுப்ரபாதம் இதமாய் ஒலிக்க, விடியலில் எழுந்து குளித்து, மஞ்சள் பூசி, குங்குமமிட்ட மங்கலகரமான முகத்துடன், நுனியில் முடிந்த கூந்தலில் கொஞ்சமாக முல்லைப் பூவும் சூடி, விளக்கேற்றி, பூஜை முடித்து, ...
மேலும் கதையை படிக்க...
பெற்ற மனது
எங்கே அவள்?
பூமிதி…
இது…இது… இதானே அரசியல்!
ஆசை அறுமின்!

ரௌத்திரம் பழகு! மீது ஒரு கருத்து

  1. a says:

    உண்மை தான். silaneram silar seiyyum nanmy nam kankalukku theriyathu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)