ரெளத்திரம் பழகாதே

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 25, 2016
பார்வையிட்டோர்: 6,653 
 

சுகுமாருக்கு அடிக்கடி கோபம் வரும். அந்தக் கோபத்தை உடனடியாக வெளிப்படுத்தி மற்றவர்களை ரணமாக்கி விடுவார். அதீதமான கோபத்தினால் அவர் இழந்தது ஏராளம். நல்ல சந்தர்ப்பங்களை, நல்ல மனிதர்களை இழந்து அவர் அடைந்த நஷ்டங்கள் அதிகம்.

ஆனால் சுகுமார் நேர்மையானவர். நேர்கோட்டில் வாழ்ந்து வருபவர். அவரையும், அவர் கோபத்தையும் புரிந்துகொண்ட ஒரே நபர் அவர் மனைவியின் தம்பி சுந்தர். அடிக்கடி ஏற்படும் கோபத்திலிருந்து சுகுமாரை மீட்க அவரை அழைத்துக்கொண்டு பெங்களூரிலுள்ள ஒரு பிரபல ஆசிரம சுவாமிஜியைப் பார்த்துவர சுகுமாரும் சுந்தரும் நாகர்கோவில்-பெங்களூர் ரயிலுக்காக மதுரையில் காத்திருந்தனர்.

அப்போது ஒரு இளம்பெண் சுகுமாரிடம். “அங்கிள் டைம் என்ன?” என்று கேட்க, “நான் என்ன உனக்கு அங்கிள் உறவா? நீ யாருன்னே எனக்குத் தெரியாது” என்று கோபத்துடன் எரிந்து விழுந்தார்.

ரயில் இரவு பதினோரு மணிக்கு மதுரை வந்தது. சுகுமார் ரிசர்வ் செய்திருந்த லோயர் பெர்த்தில் வயதான ஒருவர் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அவரை உடனே அதட்டலாக எழுப்பி “என் பெர்த்தில் நீ எப்படி தூங்கலாம்?” என்று குரலை பெரிதாக உயர்த்தி சண்டைக்குப் போய்விட்டார். அவர் பயந்துபோய் தன்னுடைய அப்பர் பெர்த்துக்கு இடம் பெயர்ந்தார். மறுநாள் விடிந்ததும் சக பயணிகள் சுகுமாரை விரோதமாகப் பார்த்தனர்.

வீட்டிலும் இதே கோபம்தான். அவர் மனைவி அவர் சாப்பிட தட்டு வைத்துவிட்டு, பரிமாற சிறிது தாமதம் ஆகிவிட்டால், “எதுக்குடி சோறு திங்க என்னய கூப்பிட்ட? எல்லாத்தையும் தயாராக வைத்தவுடன் சாப்பிட கூப்பிட வேண்டியதுதான?” என்று கத்துவார். சாதத்தில் ஒருகல் இருந்துவிட்டால், மனைவியின் உள்ளங் கையை விரித்து காண்பிக்கச் சொல்லி, அதில் அந்தக் கல்லை வைத்து வலி வரும்வரை அழுத்துவார்.

இப்படியாக தினசரி நிறைய சம்பவங்கள்….அதனால் சுகுமாரிடம் அவரது உறவினர்கள், தெரிந்தவர்கள் அனைவரும் சற்று தள்ளியே இருப்பார்கள்.

ஒன்பது மணிக்கு பெங்களூரை அடைந்ததும் ஒரு நல்ல ஹோட்டலில் அறை எடுத்து குளித்து, டிபன் சாப்பிட்டுவிட்டு சுவாமிஜியை பார்க்க ஆசிரமம் சென்றனர்.

அங்கு சுவாமிஜி தரையில் அமர்ந்திருந்தார். இவர்களை கனிவுடன் பார்த்து புன்னகைத்தார். அவர்களை அருகில் அமரச்செய்து மெல்லிய குரலில், “என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள்?” என்றார்.

“சுவாமி என் பெயர் சுந்தர். இவர் சுகுமார். நாங்கள் இருவரும் உங்களைப் பார்க்க மதுரையிலிருந்து வந்திருக்கிறோம். சுகுமார் அடிக்கடி கோபப்படுகிறார். அவருடைய கோபத்தினால் பலர் அவரிடம் பேசவே பயப்படுகிறார்கள்…அவரது கோபத்தை அடியோடு நிறுத்த சுவாமிகள்தான் தயை புரிய வேண்டும்.”

சுவாமிஜி நிதானமாக சுகுமாரைப் பார்த்து “கோபத்தினால் நமக்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்காது. அடுத்தவர்களைத்தான் அது காயப்படுத்தும். ஆத்திரமும், கோபமும்தான் மனித குலத்தின் பிரதான எதிரிகள். நான் சொல்கிறபடி தாங்கள் முயற்சி செய்தால் உங்கள் கோபம் குணமாகி சாந்த சொருபியாக மாறி விடுவீர்கள்.” என்றார்.

சுகுமார் குரலில் கேலி தொனிக்க, “ நம் மகாகவி பாரதியார்கூட ரெளத்திரம் பழகு என்றுதானே சொன்னார்?” என்றார்.

சுவாமிஜி அழகாக புன்னகைத்தார்.

“தாங்கள் சொல்வது வாஸ்தவம்தான். ஆனால் பாரதியார் ரெளத்திரம் பழகு என்று சொன்னது பெண்ணடிமையையும், அநீதியையும், அக்கிரமங்களையும் எதிர்த்து. அவர் சொன்ன ரெளத்திரம் கொள்கை ரீதியானது. ஆனால் நம்மைப் பொறுத்தவரையில், தினசரி சம்பவங்களின் கோர்வைதான் நமக்கு வாழ்க்கை. அதில் நிறைய விஷயங்கள் நமக்கு உடன்பாடில்லை. அதற்காக நாம் கோபப்பட்டால் ரத்தக்கொதிப்பும், நரம்புத்தளர்ச்சியும் அதிகமாகி நம் உடல் நலத்திற்கு பெரும்கேடாய் முடியும். நல்ல நண்பர்களையும், உறவினர்களையும் இழக்க நேரிடும்.”

“என் கோபத்தை நிறுத்த எவ்வளவு செலவாகும் சுவாமி?”

“ஒன்றும் செலவில்லை. தாங்கள் மீண்டும் ஒருமுறை இங்கு வந்து செல்ல வேண்டியிருக்கும்…அவ்வளவுதான்.”

சுவாமிஜி எழுந்து உள்ளே சென்று காக்கி நிறத்தில் ஒரு அட்டைப் பெட்டியை எடுத்து வந்தார். அதைத் திறந்து உள்ளேயிருந்த ஒரு சுத்தியலையும், ஐம்பது ஆணிகளையும் காண்பித்தார்.

“இதை எடுத்துச் செல்லுங்கள். ஒவ்வொரு முறை கோபம் வரும்போதும், உடனே வீட்டின் உங்கள் படுக்கையறை சுவற்றில் இதிலிருந்து ஒரு ஆணியை எடுத்து இந்தச் சுத்தியலால் அடித்து இறக்குங்கள். பத்து நாட்களுக்கு அவ்விதம் தொடர்ந்து அடியுங்கள். ஆணி தீர்ந்துவிட்டால் வேறு ஆணிகள் கடையில் வாங்கி அடியுங்கள். பத்து நாட்கள் முடிந்தவுடன் என்ன நடந்தது என்று எனக்கு போன் செய்து சொல்லுங்கள்.”

அவர்கள் கிளம்பிச் சென்றனர்.

சுகுமார் முதல் இரண்டு நாட்களில் மொத்தம் பதினைந்து ஆணிகள் அடிக்க நேர்ந்தது. அடுத்த மூன்று நாட்களில் அதுவே பத்து என்றானது. . படிப்படியாக குறைந்து பத்தாவது நாள் ஒரு ஆணிகூட அடிக்க நேரவில்லை.

சுகுமார் சந்தோஷத்துடன் சுவாமிஜிக்கு போன் செய்து, “சுவாமி நான் தற்போது ஒரு ஆணிகூட அடிப்பதில்லை. சுவற்றில் மொத்தம் நாற்பத்துஐந்து ஆணிகள் உள்ளன.” என்றார்.

“ரொம்ப சந்தோஷம். இதுதான் ஆரம்பம். நீ முற்றிலும் குணமாகவேண்டும். எனவே அடுத்த நாற்பத்துஐந்து நாட்களுக்கு தினமும் ஒவ்வொரு ஆணியாக பிடுங்கி எறிந்துவிட்டு, எல்லா ஆணிகளும் பிடுங்கப்பட்டதும், அந்த சுவற்றின் புகைப்படத்துடன் என்னை நேரில் வந்து பார்.” என்றார்.

கோபத்தை முற்றிலும் துறந்துவிட்ட சுகுமார், ஆணிகள் அனைத்தும் பிடுங்கப்பட்டதும், சுவற்றின் புகைப்படத்துடன் சுவாமிஜியைப் பார்க்க மதுரை சென்றார்.

அவரைப் பார்த்ததும் குரலில் மரியாதை தொனிக்க “சுவாமிஜி, தங்களின் ஆசீர்வாதத்தால் என் கோபம் காணாமல் போய்விட்டது. தற்போது எனக்கு பொறுமை, நிதானம், பிறரிடம் மரியாதை போன்ற நல்ல பண்புகள் அதிகரித்துவிட்டது.” அவர் கண்கள் கலங்கின.

சுவாமிஜி சுகுமாரிடம் அந்த சுவற்றின் புகைப்படத்தை கேட்டு வாங்கிப் பார்த்தார்.

ஏகப்பட்ட துளைகள் ஆழமாக இருந்தன.

“ஆணிகளை பிடுங்கிவிட்டாய். சுவற்றில் உள்ள ஓட்டைகளை என்ன செய்வாய்? உன் கோபம் இதுபோல பலரை காயப்படுத்தி இருக்கும் அல்லவா? அந்த ரணங்களை ஆற்ற நீ இனி செய்யப்போகிறாய்?”

“……………………………”

“மனித வாழ்க்கை என்பது மிக உயர்வானது. அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என ஒளவையார் அன்றே சொன்னார். அத்தகைய அரிய பிறவியைப் பெற்ற நாம் சக மனிதர்களிடம் அன்புடனும், பண்புடனும் நடந்து கொள்ள வேண்டும். சென்று வா, இனி உனக்கு நல்லதே நடக்கும்.”

Print Friendly, PDF & Email

2 thoughts on “ரெளத்திரம் பழகாதே

    1. தங்களது பாராட்டுதலுக்கு மிக்க நன்றி திருமதி ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்.
      எஸ்.கண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *