தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 29, 2014
பார்வையிட்டோர்: 15,179 
 

பஸ் கிளம்பிவிட்டது.

ஆடி பிறந்துவிட்டால், மதுரைப் பக்கக் கிராமங்களில் திருவிழாதான். முதல், நடு, கடைசி ஆடி தினங்களைக் கறிச்சோறு தின்று கொண்டாடுகிறார்கள். அன்று ஆடி முதல் தேதி என்பதைப் பளிச் என்று உணர்த்துகிற மாதிரி, ஒரு ஆள் பஸ்ஸுக்குள் ஆடிக்கொண்டே சந்திரனில் கால்வைத்து நடக்கிற மாதிரி, கையையும் காலையும் துழாவிக்கொண்டு சீட்டைத் தேடினார். தேனி பஸ் ஸ்டாண்ட் வளைவு திரும்பியதும் தடுமாறினார்.

‘யேய்… விழுந்துராதப்பா” – விசிலடித்தார் கண்டக்டர். ”எறங்கு… எறங்கு… பல்லே வெளக்காம காலங்காத்தால ஃபுல்லா ஏத்திக்கிட்டு வந்துட்டாரு. கெரகம். எறங்குய்யா.”

”அட! விடுய்யா கண்டைட்டரு. வந்துட்டுப்போறான். எந்தூரப்பா?”

”அய்ழ்…ண்…” என்று அந்த ஆளுக்கும் ஊர் பெயரைச் சொல்லிவிட ஆசைதான்.

”ஆடிங்குறாங்க… அம்மாசிங்குறாங்க… சனியன் கூட்டங் கொறைய மாட்டேங்குது. கரெக்டா தண்ணியப் போட்டுட்டு பஸ்ஸேற வந்துர்றாய்ங்க.”

”ஆய்ன்ட்டி… வட்டிதான வோகுது?”

”ஆண்டிபட்டியாக்கும். கரெக்ட்டா வேற வண்டில ஏறி உசுரை வாங்குங்கடா. ஏய்… எறங்ங்கப்பா… இது மயிலாடும்பாறை போகுது.” ஆடி மாத முதல் குடிமகனை அநாதையாக இறக்கிவிட்டுப் பயணம் தொடர்கிறது.

”எப்படா ஆடி பொறக்கும்? கறி எடுப்போம்னு அலையிறாங்கப்பா… ஏந்தேன் இப்பிடி கவுச்சி கவுச்சினு சாகுறாங்கன்னே தெரியல.”

”சரி பெரிசு, வருஷம் பூராமாத் திங்கிறோம். வருஷத்துல ஒரு நா ஆடி அன்னைக்குக்கூட கறி எடுக்கலைன்னா… ஊர்ப் பயக சிரிச்சுப்போடுவான்ல.”

”என்னத்தையோ கழுத… கழுத்துக்குக் கீழே போயாச்சுன்னா அம்புட்டும் நரகல்தேன். அதுக்குப் பய சனம் பறக்குற பறப்பு… கறி, புளின்னுக்கிட்டு.”

”நீங்க என்ன இம்புட்டு வெள்ளன பஸ்ஸுல?”

”கடமலைக்குண்டுல ஆறு மணிக்குள்ளயே அம்புட்டு ஆடும் அறுத்து வித்துத் தீந்துபோச்சு. அதேன் தேனி வந்து இந்தா பித்தளைத் தூக்குல ஒன்றக் கிலோ… அதும் கொழுப்பும் கொடலுமாத்தேன் கெடச்சுச்சு… வாய்ண்ட்டுப் போறேன்.”

”வெளங்குமா? இதுக்கு இம்புட்டுப் பேச்சா?” என்று பெரிசிடம் பேசியவர் சிரித்தார்.

கண்டக்டர் கடந்துபோக, பெரிசு தலையை அரை வட்டம் அடித்துத் திரும்பி, ”யோவ், சில்றயக் குடுய்யா. மறந்துட்டு நாம் பாட்டுக்கு எறங்கிப்போறதுக்கா?”

”அடேயப்பா, மறந்துட்டுப் போயிருவியாக்கும். நான் ஓங் கிட்ட என்னா சொன்னேன்?”

”சொன்ன… சுண்ட வத்தல் வதங்கலனு.”

”என்னாய்யா மொணங்குற?”

”முக்கா ரூவா இருந்தாக் குடு. அஞ்சு ரூவா தாரேன். இல்லன்னா, சில்ற சேர்ற வரைக்கும் நொய்யி நொய்யிங்காம கம்முனு வா.”

நாலு சீட்டுத் தள்ளி மற்றொரு பெரியவர், சுருட்டியிருந்த இடுப்பு வேட்டியிலிருந்து திருகித் திருகி சில்லறை எடுத்து நீட்டி, ”கடமலைக்குண்டுங்க.”

”கடமலைக்குண்டுக்கு இன்னம் ஒண்ணு அம்பது வேணும் குடு.”

”அம்புட்டுத்தாங்க இருக்கு.”

”மிச்சத்தை நான் யாருகிட்ட வாங்க? ஒங்கப்பன் மேலதிகாரி என்னைக் கேப்பானா இல்லையா?”

”திண்டுக்கல்லில் இருந்து கௌம்பி மக வீட்டுக்கு வர்றேனய்யா. வேற காசு இல்லை. நீங்க இன்னொருக்க திரும்பி வரையில, எம் மககிட்ட வாய்ங்கிக் குடுத்திர்றேன்” என்றார் பரிதாபமாக.

முறைத்துப் பார்த்துவிட்டு, ‘சரி… சரி… போ. காசில்லாம வந்துட்டு ஆயிரம் கதை சொல்லு” – சலித்து நகர்ந்தார் கண்டக்டர்.

அரண்மனைப்புதூர் தாண்டி கொடுவிலார்பட்டி சமீபிக்கும்போது பஸ் போட்ட ‘சடன் பிரேக்’கில் ஒரு கிழவியின் பை சாய்ந்து மாம்பழங்கள் உருண்டோட, கண்டக்டர் பாய்ந்து கம்பியைப் பற்றிச் சமாளிக்க, பெரிசுகள் ”பாவப் பயகா!” என்று கத்த… பஸ்ஸே எழுந்து நின்று கண்ணாடி வழியே காரணம் தேடுகிறது. ஆடிக் காற்றில் ‘பேலன்ஸ்’ உழன்று பஸ் முன் திடீரெனச் சாய்ந்துவிட்ட நீலச் சட்டைக்காரர் சைக்கிளை நிமிர்த்தி வெட்கப்பட, பஸ்ஸின் எல்லா இடதுபுற ஜன்னல்களில் இருந்தும் நீளும் தலைகள் தத்தம் தகுதிக்கு ஏற்றவாறு, அவருக்கு உபதேசங்கள் தருகின்றன. பஸ் மீண்டும் இயல்பாக… பஸ்ஸுக்குள்… ”புளூ சட்டக்காரன் அவம்பாட்டுக்கு வந்து விழுக, இவரு நம்ம அம்புட்டுப் பேத்தையும் கவுக்கத் தெரிஞ்சாரு. வீட்ல கறி எடுத்துக் குடுத்துட்டு தேனி போய்த் திரும்புறதுக்குள்ள இப்பிடி இடைவெட்டுல செத்துப்போனா, அப்புறம் கட்டை வேகாது. பெறகு, கஞ்சி கொண்டுபோற பொம்பளைககிட்ட சாராயம்கொண்டா, கஞ்சி கொண்டான்னுக்கிட்டு பேயாத் திரிய வேண்டியதுதான்.”

பஸ்ஸின் தடதடப்பையும் மீறி ஒருவர் உரக்கப் பேசிக்கொண்டே வர, ஜன்னலுக்கு வெளியே விரையும் தோட்டங்களினூடே பஸ்ஸினைத் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது வைகை. நீரின்றிக் காய்ந்துபோய் வெயிலில் கண் கூசும்படி மினுங்குகிற மணல் ஆறாக வைகை நதி. அங்காங்கே மணல் அள்ளிய பள்ளங்கள்.

எட்டிப்பார்க்கிற உருமால்காரர், ”ஆடில தேடி விதைம்பாங்க. இப்ப வரைக்கிம் மழையக் காணோம். வையை காஞ்சுகெடக்கு. எங்குட்டுக் கூடி நம்ம வெதைக்கிறது? ஆத்துல முந்தியெல்லாம் இன்னாவரை (இந்நேரம்) தண்ணி ஓடும். வெள்ளாமை பண்ணுவோம். இப்ப மண்ணுதான் ஓடுது. அள்ளீட்டுப் போயி தேனிக்குச் செவை கட்டடமாக் கட்டுறாங்க. கட்டுங்கடா ஒங்க பாட்டுக்கு. யாரு துட்டுல கட்டுறான்? அம்புட்டும் சம்சாரிப் பய துட்டுதான்? என்னாங் கிற வெள்ளை?”

”கரெய்ட்டுதான்… ந்தா, கத்திரியைக் கொண்டுபோட்டுட்டு வாரேன். நாப்பது ரூவாய்க்கிப் போகுது. என்னத்தைக் கட்டும்? நமக்கு நல்ல நாள்ல கட்டக்கூடத் துணிமணி இல்லை. கமிசங் கடைக்காரந்தான் வீடு கட்டவும், வண்டி வாங்கவுமாத் திரியிறான். ஆறு மாத்தைக்கு முன்னாலதான் செகப்பு வண்டி வாங்குனான். இப்ப சிமின்ட் கலர்ல இன்னொரு வண்டி வாங்கீருக்கான்.”

உருமால்காரர் இயற்கை ஏமாற்றுவதைச் சொல்லிப் புலம்ப, வெள்ளை என்பவர் வியாபாரி வளர்வதையும், சம்சாரி தேய்வதையும் சொல்லி ஆதங்கப்படுகிறார். மூளையை உபயோகித்து அலசி, ஆராயாமல் வெறும் உணர்வுகளின் பொருமலிலேயே விஷயங்களின் ஆழங்களைத் தொடுகின்றனர் இருவரும். ஆனால், சற்று நேரத்திலேயே அதிலிருந்து விலகி, பொழுதுபோக்காகப் பேச்சு மாறுகின்றனர். ஒரு சினிமா போஸ்டர் சுவரில் கடக்க,

”அதென்னாய்யா, சிவாய்சி தாடில நடுக்குண்டு ‘கரேர்’னுருக்கு?”

”சாயந்தீட்டுறது மாமோய்… ‘டையி’.”

”அதான! வெளுக்குறதும் கறுக்குறதும் இப்படி ‘சைஸா’ன அமைப்புலயா இருக்கும்?”

பஸ் நின்று சிலர் ஏறினார்கள். ஒரு சிறுவன் கையில் காலித் தூக்குடன் அருகில் வந்து அமர்ந்தான்.

”எங்கடா போய்ட்டு வர்ற சில்லு?”- பக்கத்து சீட்காரர்.

”காலைல அக்கா வீட்டுக்கு வந்தேண்ணே. இப்ப நம்ம ஊருக்குப் போறேன்.”

”என்னாவாம் வந்ததும் திரும்பிப்போறவன்?”

”இன்னைக்கி ஆடில்ல. அக்கா வீட்ல இட்லிக்கிப் போடலயாம். அதனால, எங்கம்மா இட்லி கொண்டுபோய்க் குடுத்துட்டு வரச்சொல்லுச்சு. அதேன் கொண்டுவந்து குடுத் துட்டுப்போறேன்.”

”ஏன், ஒங்க அக்கா வீட்ல இட்லிக்குப் போடலை?”

”தெரியலைண்ணே” என்றான் அப்பாவியாக. கஷ்டநஷ்டங்கள் புரியாத ஆசீர்வதிக்கப்பட்ட வயது. ஜன்னலுக்கு வெளியே சமீபித்துக்கொண்டிருக்கும் கரட்டை, விழிகள் விரியச் சந்தோஷமாகப் பார்க்கத் துவங்கினான். பின் சீட்டில் இரண்டு பேர் பேசிக்கொண்டே வந்தார்கள்.

”சினிமாக்கு நேத்து சாயங்காலம் போய்ட்டு வாரப்ப, நூத்தம்பது ரூபா சொச்சமிருந் துச்சு. சரி! சொரண்டி பத்து நாளைக்கி மேலாச்சேனு சொரண்டுனேன். நேத்து ஒண்ணும் ராசி ஒட்டலை.”

”எம்புட்டுப் போச்சு?”

”நூத்தம்பது போயி, நம்ம பிச்சை இருக்கான்ல, அவங்கிட்ட கைமாத்தா அம்பது வாங்கினேன். வாங்கிட்டு வந்து பஸ் ஏறுறப்ப ஒரு எண்ணம். நூத்தம்பதயும் இத வெச்சுப் பிடிச்சுப்போடலாமுன்னு. ஆனா, கதையாகல. முப்பது ரூவா வரைக்கிம்போச்சா? சரி, இந்தளவுல ஆள் தப்பிக்கணும்னு இருவது ரூவாயோட வண்டி ஏறிட்டேன்.”

”இடையில விழுகவே இல்லையா?”

”விழுந்துச்சு. அஞ்சும் பத்துமா. ஆனா, அது அப்பிடியே திருப்பி உள்ளதான ‘ரொட்டேசன்’ ஆகும்?”

”இன்னைக்குச் செலவுக்காச்சும் வெச்சிருக்கியா… இல்லையா?”

”இருவது தேறும். நாலு கிளாஸ் போட்டுட்டு மிச்சத்துக்குக் கடன் சொல்லிக்கிரலாம்.”

”எப்பிடி? கருவாப் பயகிட்டயா? இன் னைக்கி ஆடி வேற. கடன் தர மாட்டான்.”

”அது நாஞ் சொல்லிக்கிர்றனப்பா, ஒனக்கென்னா?”

கண்டக்டரிடம் கடன் சொன்ன பெரியவரைக் காணோம். கடமலைக்குண்டில் இறங்கிவிட்டார்போலும். பஸ் மயிலாடும்பாறையை அடைந்து மீண்டும் தேனிக்குப் புறப்படுகிறது.

ஆடிக்குத் தலை முழுகிய ஜனங்கள் தலைமுடி காற்றில் அலைய, மிதப்பாக வந்து பஸ்ஸில் ஏறுகிறார்கள். அநேகமாக எல்லோரும் இட்லி சாப்பிட்டிருப்பார்கள். தேனிக்கோ, ஆண்டிபட்டிக்கோ மதிய சினிமா நோக்கிப் போகிறார்கள். பத்துப் பன்னிரண்டு சிறுவர்களின் அணி ஒன்று வந்து ஏறி, பஸ்ஸின் கடைசி சீட்டை ஆக்கிரமித்தது.

”என்னாங்கடா? மைனருகளாச் சேந்து எங்கிட்டுக் கௌம்பீட்டீக?”

”சினிமாக்கு. கடமலைக்குண்டுல ‘மேட்டுக்குடி’ பாக்கப்போறோம்” என்ற சிறுவர்கள், கோயில்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய திருநாள் பஸ்ஸின் வழியே, தியேட்டரில் பூர்த்தியாவதற்காக கோயில்பாறையில் இருந்து நடந்துவந்து மயிலாடும்பாறையில் பஸ் ஏறிப்போகிறார்கள்.

அவர்களின் ‘மேட்டுக்குடி’க் கனவுகளோடு பஸ் கடமலைக்குண்டை அடைய, முந்திக்கொண்டு பஸ்ஸைவிட்டுக் குதித்துக் குதித்து இறங்குகிறார்கள். பஸ் ஸ்டாண்டில் அந்தப் பெரியவர் நிற்பது தெரிய, கண்டக்டர் தலையை வெளியே நீட்டி,

”என்னா பெரிசு? ஒண்ணார் ரூவா வாங்கி ரெடியா வெச்சுக்கிட்டு நிக்கிறயா?”

”தலையெழுத்து சாமி. மக வீட்டுல எல்லாரும், காலைல மொத வண்டிக்கிக் கௌம்பி, திண்டுக்கல்லு போயிட்டாகளாம். என்னா செய்யிறதுன்னு தெரியாம நின்னுக்கிட்டுருக்கேன்.”

கண்டக்டர் இந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை. சற்றுத் தாமதித்து, ”அப்புறம் என்னா செய்யப்போற? தேனிக்கு வர்றயா?”- கிண்டலாக, ”கவர்மென்ட் காசுதேன்”.

பெரியவர் சலனம் இன்றி ”தேனிக்கு அங்கிட்டு திண்டுக்கல்லு வரைக்கும் எப்பிடிப் போக? நீங்க போங்க” என்றார். அதற்குள் பயணிகள் அனைவரும் பஸ்ஸில் ஏறிவிட்டனர்.

அந்தப் பெரிசு ஏமாற்றுக்காரரா, அப்பாவியா? கடமலைக்குண்டில் அவருக்கு வேறு சொந்தம் உண்டா? திண்டுக்கல் போன மகள் திரும்பி வரும் வரை என்ன செய்வார்? அல்லது திண்டுக்கல்லுக்கு எப்படித் திரும்புவார்? காலையில் சாப்பிட்டாரா? கேள்விகளோடு, அவரையும் விட்டுவிட்டு பஸ் கிளம்பியது!

– பாஸ்கர் (24-8-97)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *