ராகிங்…?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 6,231 
 

விடிய விடியத் தூங்காமல் பயத்திலேயே கிடந்தான் குமார். நாளை முதல் நாள் காலேஜூக்குப் போகப் போறேன் என்ன நடக்குமோ?… ஏது நடக்குமோ?…எப்படியெல்லாம் ராகிங் பண்ணுவாங்களோ?” பயம் அவனைத் தூங்க விடாமல் வதைத்தெடுத்தது.

மறுநாள் காலை.

ஆர்வமேயில்லாமல் கிளம்பி அரைகுறையாய்ச் சாப்பிட்டுவிட்டுப் போகும் போது அம்மாவை ஏனோ உற்று உற்றுப் பார்த்துவிட்டு வெளியேறினான். “உசுரோட திரும்பி வருவேனா?”

கல்லூரி கேட்டிற்குள் நுழையும் போது அவனையுமறியாமல் கால்கள் நடுங்கின. தூரத்தில் நின்று கொண்டிருந்த சீனியர் மாணவர் கூட்டம் இவனைப் பார்த்ததும் நெருங்கி வர “ஆஹா…மாட்டிட்டோமே…இப்படியே திரும்பி ஓடிவிடலாமா?” யோசித்தான்.

அதற்குள் அவர்கள் நெருங்கி, “ஃபர்ஸ்ட் இயரா?” என்று கேட்க வார்த்தைகள் வர மறுக்க மேலும் கீழுமாய்த் தலையாட்டினான் குமார். அவ்வளவுதான் அந்தக் கூட்டத்தின் தலைவன் போலிருந்த ஒருவன் “டேய்…எடுத்திட்டு வாங்கடா அதை” என்று கத்தலாய்ச் சொல்ல,

இரண்டு மாணவர்கள் ஒரு தட்டில் எதையோ வைத்து துணியால் மூடி எடுத்து வந்து குமாரின் முன் நீட்டினர்.

“உள்ளார என்ன இருக்கும்?..செருப்பு?…ஷூ?…பிரா?….ஆட்டுத் தலை?…மனிதத் தலை?” கற்பனை கன்னா பின்னாவென்று ஓட “அய்யோ..ஆண்டவா…என்னைக் காப்பாத்து” மனசுக்குள் கூவினான் குமார்.

“ம்…திறந்து பாரு” ஒரு கரகரப்பான குரல் மிரட்டலாய்ச் சொல்ல நடுங்கும் கைகளால் மெல்ல அத்துணியை விலக்கினான் குமார்.

உள்ளே…

லட்டு…மைசூர்பாகு…ஜாங்கிரி…என எச்சில் ஊற வைக்கும் பல்வேறு வகையான இனிப்பு வகைகள்.

“பிரதர்… நாங்க திருந்திட்டோம்… எங்க ராகிங் கொள்கையைத் தூக்கி வீசிட்டோம்… இனிமே புதுசா வர்ற ஃபர்ஸ்ட் இயரர் ஸ்டூடண்ட்ஸை இப்படித்தான் வரவேற்கப் போறோம்” என்றபடி அந்தத் தலைவன் ஒரு இனிப்பை எடுத்து குமாருக்கு ஊட்டி விட,

நெகிழ்ந்து போன குமார் அந்த இனிப்பை கண்ணீருடன் விழுங்கினான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *