ரயில் விளையாட்டின் ராட்சஸ நொடிகள்!

 

புதிதாக வேலை கிடைத்த பூரிப்பு தேகமெங்கும் மெருகேற்றியிருந்தது சாந்திக்கு. அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தாள். சென்னையிலிருந்து முதல் தடவையாக உறவுக்காரர்கள் இல்லாத ஊருக்குச் செல்கிறாள். தேவையானவற்றை மறந்துவிடவில்லை என்பதைச் சரி பார்த்த பிறகு லக்கேஜைத் தூக்கிக் கொண்டாள். ரயிலில் டிக்கெட் கிடைக்காது. தக்கலில் போட்டாள் ரயில் பயணம் இலகுவானது. மனசை மிதக்கச் செய்யும்.

ரயில் விளையாட்டின்சிறு வயதில் ரயிலில் போவதென அம்மா சொன்னதும் சந்தோஷத்தில் குதிப்பாள். பேருந்தில் செல்வதென்றால் வயிற்றைப் பிரட்டும். கழிவறையில்லாததால் அம்மாவைச் சீண்டி விரலைக் காட்டியதும் அடி பின்னி விடுவாள். நேரங்காலமே கிடையாதா கழுதை என திட்டுவாள். சுற்றியிருப்பவர்கள் இவளைப் பார்க்கும்போது அவமானமாய் இருக்கும்.

பேருந்து; ஓரளவு ஊர்களைக் கடந்து செல்லும் ரயில் ஆளரவமற்ற வனாந்தரத்தைக் கடக்கும் கும்மிருட்டுத் தடதட ஓசை; இவற்றினூடாகக் கற்பனை சிறகடிக்கும் புதிய உலகத்தில் பயணிக்கத் தொடங்குவாள். அந்தச் சின்ன வயசின் அனுபவங்கள் திரும்பக் கிடைக்கப் போகும் சந்தோஷத்தோடு புறப்பட்டாள்.

இரண்டாம் வகுப்புப் பெட்டி இடமில்லாமல் நிறைந்திருந்தது. டிப்டாப்பாக உடையணிந்த ஒருவன் டி.டி.ஆரிடம் ஒரு பர்த் கிடைக்குமாவெனக் கேட்டுக் கொண்டிருந்தான். ஏசி பெட்டியில் வேண்டுமானால் ஏற்பாடு செய்து தருவாதாக டி.டி.ஆர் சொல்லிக் கொண்டிருக்க, ஒரு அம்மா புடைவையை உதறி, தூளிகட்ட அளவு பார்த்தாள். வண்டி கிளம்பட்டும்னு கூட இல்லையாம்மா என ச்த்தம் போட்டுவிட்டு இன்னும் கிளம்பவில்லையே என்பது மாதிரி புருவத்தை உயர்த்திவிட்டு நேரத்தை பார்த்தார். வண்டி கிளம்பியது.

அருகில் வயதுபெண் புத்தகத்தில் மூழ்கியிருந்தாள். கல்லூரியில் படிக்கிறாளா வேலைக்குப் போகிறாளா? யோசித்தவாறே பெட்டியிலிருந்தவர்களைப் பார்த்தாள் சாந்தி.

வியாபாரத்துக்காகச் செல்பவர்கள், சில கல்லூரிப் பசங்க தவிர மற்றவர்கள் குடும்பத்தோடு இருந்தார்கள். இவளும் இன்னொருத்தியும்தான் குடும்பத்தோடு வராத பெண்கள். மற்ற ரயில்களைப் போல இந்த ரயில் கிடையாது. ஒரு ஏசி பெட்டி, ஒரு அன்ரிசர்வ்டு பெட்டி சில இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் மட்டும்தான் நாங்கள் போகிற ஊருக்குச் செல்லும். இது கேரளா செல்லும் இரயில். எங்கள் பெட்டிகளை மட்டும் ஈரோட்டில் கழற்றிவிட்டுவிடும். இங்கிருந்து திருச்சி செல்ல மின்சார இணைப்பு இல்லையாம் புகைரயில்தானாம். இந்தப் பெட்டிகளை அதோடு இணைத்துவிடுவார்கள். கேட்கப் புதிதாக இருக்கிறது.
பெட்டிகளைக் கழற்றி மாட்டுவதெல்லாம் சகஜம்தானே; பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டதால்தான் இவளுக்கு இத்தனை விவரமும் தெரிந்தது. வண்டி கிளம்பும் வரை இது தெரியாமல் போனது மனசை என்னவோ செய்தது. அருகில் இருந்தவள் சாந்தியிடம், “உங்க பர்த் எது’ எனக் கேட்டாள். சாந்திக்கு ஆச்சரியமாக இருந்தது. பேசக்கூட செய்கிறாளே; பர்த் நம்பரைச் சொன்னாள் அவள், “எனக்கு அப்பர் பர்த் வசதியா இருக்கும். முடியும்னா உங்கள் அப்பரை நான் எடுத்துக்கிறேன். என்னோடது மிடில்’ எனப் படபடவெனப் பேசிவிட்டு, பதிலை எதிர்பார்க்காமலே கழிவறைக்குச் சென்றாள். திரும்பியவள் முடிவு தெரியவேண்டி சாந்தியைப் பார்க்க, “தாராளமா எடுத்துக்கோங்க’ என்றாள். அவள் சொன்ன அடுத்த நொடி அப்பருக்குச் சென்று புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கிவிட்டாள்.

பெட்டியிலிருந்தவர்கள் தூங்குவதற்கு ஆயத்தமானார்கள். மிடில் பர்த் என்பதால் கதவருகே வந்து வேடிக்கை பார்க்கத் தொடங்கி விட்டாள். காற்றுக்கு முகம் காட்டிக் கொண்டு தமக்குப் பிடித்த பாடல் வரிகளை முணுமுணுத்துக் கொண்டிருந்தள். அவளது பெட்டிகளுக்கான டி.டி.ஆர். இவளிடம், “என்னம்மா பண்ற தூக்கம் வரலயா?’ எனக் கேட்கத் தொடங்கி, இவளுக்கு அநத வழித்தடத்திலிருந்த சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளும் வகையில் உரையாடல் முடிந்தது.

இப்படியாக வார இறுதியில் பயணித்துக் கொண்டிருந்தவளுக்கு, ஓரளவு தெளிவு கிடைத்தது. இவளைப் போல முதல் பயணத்தில் பார்த்த அந்தப் பெண்ணும் வந்து கொண்டிருந்தாள். அவளது பெயர் பிருந்தா எனச் சொல்லியிருக்கிறாள். இருவரும் சில வார்த்தைகள் பேசி கொள்ளுமளவு பழகியிருந்ததனால் இரவு வீட்டில் சாப்பிடாமல் ரயிலில் சேர்ந்து சாப்பிடத் தொடங்கியிருந்தனர்.

பிருந்தா கலகலப்பாகப் பேசினாலும் திடீரெனக் கண்களில் பயம் தென்படும். அதற்கு காரணம் தெரியவில்லை. இப்படி அவள் அச்சப்படுவது ரயில் பெட்டிக்குள் மட்டும்தானெனப் புரிந்துகொண்டாள். அவளுக்கு புகளூர் காகித மில்லில் வேலை. பொறியியல் படித்திருக்கிறாள். முதல் வகுப்பு ஏசி டிக்கட்டுக்கு அலுவலகத்தில் பணம் கொடுத்தாலும் இரண்டாம் வகுப்பு ஆர்டினரி கோச்சில் பயணம் செய்ய விரும்புவதாகச் சொல்லியிருக்கிறாள் அவ்வளவு எளிமை.

பேசிக் கொண்டிருந்தாலும் பர்த் போட ரெடியானதும் உடனே படுக்கச் சென்று விடுவாள். சாந்தி இறங்குவதற்கு முன்பு பிருந்தாவின் புகலூர் நிறுத்தம் வருவதால் இவளைத் தட்டி கையாட்டிவிட்டு இறங்கி விடுவாள். சாந்தி தொலைவில் தெரியும் புளிய மரங்களையும் தென்னைமரங்களையும் மஞ்சக்காடுகளையும் ரசித்துக் கொண்டு பச்சைவாசத்தை அனுபவித்தபடி புது உலகத்தில் பிரவேசிப்பது போல உணர்வாள். அதற்குள் இவளது நிறுத்தம் வந்து விடும்.

ஸ்கூட்டியை வேகமாக ஓட்டிக்கொண்டிருந்த பிருந்தாவின் பின் உட்கார்ந்திருந்தவள் கண்ணைக் குறுக்கிக் கொண்டு “போதும் நிறுத்துடீ’ என அலறிக்கொண்டிருந்தாள். பிருந்தாவுக்கு திரில்லர் ரெய்ட் மீது தீராத காதல். பின்சீட்டில் ஒருத்தி அலற ஆரம்பித்தாள் இவள் உடம்பின் ரத்தம் சூடாக, இன்னுமின்னும் வேகம் கூட்டிக் கொண்டிருந்தாள்.

வண்டியை தோழியிடம் கொடுத்துவிட்டு ரயில் நிலையம் விரைந்தாள். இன்றும் பிருந்தா அப்பர் பர்த் கேட்டு முகத்தில் வெளிச்சம் படாதவாறு சீக்கிரமாகப் படுத்தாள். இருளில் திடீரென ஒரு உருவம் அவள் மீது அழத்தி மார்பை அழுத்தியது. மூச்சுவிடமுடியாமல் வாயைக் கவ்விக் கொண்டதால் எதிர்பபைக் காட்டும் வேகத்தைச் செலுத்த முயன்று அவள் முகத்தை மீட்டுக் கொள்ளப் போராடினாள். முகத்தை விடுவித்துக்கொண்டு வீலென அலறினாள். “பிருந்தா, பிருந்தா’ சாந்தி பலம்கொண்ட மட்டும் அவளை உலுக்கினாள். கண்விழித்தவள் பேயறைந்தது போலிருந்தாள்.

முகங்கழுவி வந்து தீர்மானமான குரலில், “சாந்தி இனி நான் ட்ரெயினில் வரப்போறதில்ல. பஸ்ல வந்துடறேன். பேசிக்கலாம் சாந்தி’ என்றவள் ஈரோட்டில் கழற்றிவிடப்பட்டு வண்டி நிற்பதை உறுதி செய்து கொண்டு மிக சகஜமாக பால் வாங்கி, “இந்தா சாந்தி சூடா பால குடி, ப்ரெஷ்ஜாயிடுவே’ என்றவாறு சிந்தாமல் கொடுத்தாள். சற்று நேரத்துக்குமுன் அலறியவள் இயல்பானதில் சந்தோஷமடைந்த சாந்தி, அவளிடம் பேசினால் முடிவை மாற்றிக் கொள்வாளென நினைத்து, “பஸ்ல வந்தா உடம்பு போயிடும்மா. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு. சரியாயிடுவ’ பால் கப்பை கசக்கி எறிந்தபடி சொன்னாள்.

“சாந்தி என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும்…. நீங்க உங்களைப் பார்த்துக்கோங்க… டிரெயின் அவ்வளவு சேஃப்பா இல்ல… இங்க சில வன்முறைகள் நடக்குது…’ வெடுக்கென வெட்டிவிட்டதோடு புதிதாக ஒரு விஷயத்தைப் பேசும் பதற்றத்தினை அடக்கிக் கொண்டாள். அதன் பின் சாந்தி கேட்ட கேள்விகளுக்குப் பதிலற்ற மௌனம்தான் நிலவியது.
சாந்தி இந்த வாரம் பிருந்தா வருவாளாவென எதிர்பார்த்தாள். வரவில்லை. சேஃப்டியில்லயென அவள் சொன்னது நினைவைக் கலைத்துப்போட்டது. திடீரென இப்படிச் சொல்லக் காரணமென்ன என்கிற யோசனையில் தன்னிலை மறந்திருந்தாள். நின்னுட்டே கனவு காண்றீங்களாவென்று டி.டி.யின் குரலில் தெளிந்தாள். சுகமான பயணத்தை இழந்துவிட்ட கவலை அவளிடம் தெரிந்தது. பிருந்தாவை சந்திக்காமலிருந்தால் இப்படி ஒருபோதும் நினைக்கத் தோன்றியிருக்காதென மனசுக்குள் சொல்லிக்கொண்டாள். சாப்பிட்டாச்சாவென கேட்ட டி.டி.க்கு தலையசைப்பில் முடிந்ததென உணர்த்தினாள்.

“பெட்டில எல்லாரும் படுத்துட்டாங்க ஆட்சேபணை இல்லைன்னா நான் சாப்பிடுறவரை பேசிட்ருக்கலாம் வாங்க’ என்றார். ஐம்பதைக் கடந்தவர். உயரத்துக்கேற்ப வாட்டசாட்டமானவர். தூரத்திலிருந்து பார்க்க அமிதாப் போலத் தெரிவார். பெட்டியில் எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசுவார். இப்படியே படுத்தால் தூக்கம் வராது சற்றுப் பேசிக்கொண்டிருந்தால் நன்றாயிருக்குமெனத் தோன்றியது.
டி.டி.யுடன் ஏ.சி. பெட்டிக் சென்றாள். பல்வேறு சிறுவயது சாகசங்களைப் பெருமையோடு சொல்லிக் கொண்டிருந்தார். இடையிடையே சில கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தாள். குடித்திருக்கிறாரெனத் தெரிந்தும் பேசிக்கொண்டிருந்தாள். அப்பா அவ்வப்போது குடிப்பவர் என்பதால் பதற்றமேதுமில்லை.

“இந்த வயசுக்கு லேட் நைட்ல பிரியாணி சாப்பிடாதீங்க… உடம்புக்கு நல்லதில்ல..’ என்றதும் அடுத்த லாகிரியை ஆரம்பித்தார்.

“சார் நான் தூங்கப் போறேன். நீங்க சாப்பிட்டு படுங்க… குட்நைட்’ சொல்லிவிட்டு விரைந்தாள்.

சரியா தூங்கலன்னா காயிற வெய்யிலுக்கு உடம்பு செத்துப் போகுது. வேலபாக்க முடியறதில்ல. கொளுத்தற வெயில்ல ஜன்னல மூடிட்டுப் படுக்கிறாங்க; மூச்சு முட்டாதானு தெரியல தன் மனசுக்குள் சொன்னவள் ஜன்னலைத் திறந்து விட்டு, படுத்த வேகத்தில் உறங்கினாள்.

சில மாதங்களுக்குப்பின் இன்றுதான் மீண்டும் லோயர் பர்த்தும் அதே ஐம்பதைக் கடந்த டி.டி.யையும் பார்க்கிறாள். செக்கில் முடித்தவிட்டு, இனி அரக்கோணத்தில் ஏறுபவர்கள் இருப்பதாகச் சொன்னவர், “ஏம்மா… இங்க உக்காந்துருக்க.. என்னுடைய பெட்டிக்கு வாம்மா’ சொன்னதோடு நிற்காமல் இவளுடைய சிறு பையை எடுத்துக்கொண்டு வேகமாக நடந்தார். சட்டென நடந்த இச்சம்பவத்தால் சுற்றுமுற்றும் பார்த்தவள் அடுத்த என்ன செய்வதெனப் புரியவில்லை. இங்கேயே இருந்து விடுவோமா? போவோமா? சுற்றியிருந்தவர்கள் இவள் என்ன செய்வாள் என்கிற ஆர்வம் கொண்டவர்களாய்ப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
தயங்குவது ஆபத்தான வியாதி; எதிர்மறையாக அசம்பாவிதம் நடந்துவிடும் என நினைப்பது இயல்பாகவே சாந்திக்கு சுத்தமாய்ப் பிடிக்காது. எல்லாம் சில நொடிகள்தான். சாந்தி மிக மெதுவாகக் கைப்பையை எடுத்துக் கொண்டு நடந்தாள்.
சிரித்துக்கொண்டே, “வா சாந்தி’ என நகர்ந்து இடம்விட்டார். டூ டயர் ஏ.சி பெட்டி. டி.டி. கொடுத்த இடத்தில் உட்காராமல் எதிரில் அமர்ந்தாள். “இங்கேயே இரும்மா அரக்கோணம் வரப்போகுது செக் பண்ணிட்டு வரேன்’ கையில் பயணிகள் விவரமிருந்த பட்டியலுடன் கிளம்பினார்.

சாந்தி உனக்கு அசட்டு தைரியம் அதிகம்டீ… முடியாதுன்னு சொல்லிட்டு பழைய இடத்துக்குப் போவதுதான் சரியாயிருக்கும். பாக்கிறவங்க உன்னதான் பேசுவாங்க… என அடங்க மறுத்த மனசிடம் அந்தாளுதான எம்பய்ய தூக்கிட்டு வந்தவன் அவன் விட்டுட்டு என்னை மட்டும் பேசிடுவாங்களா? பேசற நாக்க இழுத்து அறுக்கணும் என சொல்லிக் கொண்டாள்.
அரக்கோணத்திலிருந்து ரயில் கிளம்பி கொஞ்ச நேரமானது டி.டி. கையில் ஒரு பாலிதின் கவருடன் வந்தார். “காக்க வச்சுட்டனா.. சாரி,’ அசடுவழிந்தார். கவரிலிருந்து சாப்பாட்டு பொட்டலங்களையும் ஒரு பிரௌன் நிற பாட்டிலையும் எடுத்தார். “நீ சாப்பிட்டுட்டிரும்மா. நான் இதை முடிச்சிட்டு சாப்பிடறேன்.’ பாட்டிலை திறந்து கொண்டிருந்தவரிடம், “ரயிலில் இதெல்லாம் பயன்படுத்தக்கூடாதே நீங்க ஆக்ஷன் எடுக்கிற இடத்திலிருந்துகிட்டு இப்படிச் செய்யலாமா?’ என்றாள்.

“இதெல்லாம் அளவோடிருந்தா தப்பில்ல. டிரெயினே நம்மோடது. அப்புறமென்ன நீ பயப்படாம சாப்பிடு.’ கண்கள் சிவப்பேற சாந்தியினருகில் வந்தார். திரை மூடியிருக்கிறதாவென அவர் கண்கள் பார்த்துக்கொண்டது. அந்தப் பெட்டியில் இவர்களைத் தவிர்த்து இரண்டு வயதானவர்கள்தான். பயப்பட வேண்டாமென்று சொன்னபோது பிருந்தா சாந்தியின் கண்முன் தெரிந்தாள்.

“என்ன வேணும் சார்? ஏன் அடிக்கடி பயப்படாதேன்னு சொல்றீங்க?’

“எனக்கென்ன பயம்?’ நிறுத்தி நிதானமாகப் பேசிக் கொண்டிருந்த சாந்தியைப் புரிந்துகொள்ள முடியாமல் பார்த்தார்.

புரிந்துகொண்ட பாவத்தோடு சாந்தியின் தொடைமீது கை சென்றது. மறுப்பேதும் சொல்லாமல் இறுக்கமான முகத்தோடிருந்தவள், சட்டெனக் கையைத் தட்டிவிட்டாள். “நீ மனசுல பெரிய இவனா? நீ பையத் தூக்கிட்டு வந்தா பின்னால வரணும்.. படுக்க நினைச்சா படுக்கணுமா… செருப்பு பிஞ்சிடும் நாயே. உம்பொண்டாட்டி வேலை பாக்குற காலேஜ்ல வேலை பாக்குற பாரதி புத்திரன், ஜார்ஜ், நரசிம்மம் கேள்விப்பட்டிருக்கியா? இரு இன்னும் அஞ்சு நிமிஷத்தில் உம்பொண்டாட்டி போன் பண்ணுவாங்க பாரு’.

பொரிந்து தள்ளியவளிடம் முகம் வியர்க்க, “வேண்டாம் சாந்தி… யாருக்கும் சொல்லாத, ப்ளீஸ்…’ அதன்பின் இவளிடம் மன்றாடினான். அந்த வார்த்தைகள் எதுவும் அவள் காதில் விழவில்லை. உதடு பன்முறுவலோடு குளிர்ந்தது.
செல்ஃபோனை அழுத்தி, “பாரதிபுத்திரன் ஐயா நல்லாருக்கீங்களா? பா. கல்பனாவின் கவிதை தொகுப்புக்கு நீங்க சொல்லிருக்க விமர்சனம் படித்தேன்.’ உரையாடல் நீண்டது. திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்த டி.டி. அடுத்த படுக்கைக்குப் பதற்றத்தோடு ஓடினான்.

தலையணைகளைச் சரிபார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெட்டியின் உதவியாளனின் கண்கள் எட்டிப்பார்த்த இவள் கண்களை சினேகமாய்ப் பார்த்தது.

- எஸ்.விஜயலட்சுமி (செப்டம்பர் 2011) 

தொடர்புடைய சிறுகதைகள்
ஸ்ரூலில் அமர்ந்தவனுக்கு இருக்க முடியவில்லை. மனசு சின்னதாகக் கோபித்தது அம்மாவின் மீது. அறுபது வயதிலும் தன்னுடைய சீரழிவுகளோடு மாரடித்துக் கொண்டிருக்கும் அவரை எப்பவும் மனசால் கூட நொந்தது கிடையாது. ஆனால் இண்டைக்கு ஏஜ் இவ்வளவு நேரம். திருச்சி கே.கே. நகரில் ஒரு ...
மேலும் கதையை படிக்க...
சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் கிழவன் ஒருத்தன் சாய்ந்து சாய்ந்து நடந்து போய்க் கொண்டிருக்கிறானே, அந்த இடத்திலிருந்து பதினாலாவது கிலோமீட்டரில்தான் ஒசூர் இருக்கிறது. இரைச்சலுடன் போகும் பெரிய லாரிகளின், கண்டெய்னர் வாகனங்களின், கார்களின், சத்தங்களுக்கிடையில் சிலுசிலுவென்று பனிச்சாரலுடன் வீசும் காற்றினால் குளிர் கவ்வுகிறது. ...
மேலும் கதையை படிக்க...
செங்காணி என்ற திவ்வியப் பிரதேசத்தைப் பற்றி, நீங்கள் எந்தப் பூகோள சாஸ்திரத்தையோ, படங்களையோ, காருண்ய கவர்ண்மெண்டார் மனமுவந்து அருளிய நன்மைகளில் ஒன்றாகிய கெஜட்டுகளையோ திருப்பித் திருப்பிப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் எனது வார்த்தையையும் அந்தப் பெயர் தெரியாத புலவர் இசைத்த, தருவைக்கு ...
மேலும் கதையை படிக்க...
எழுதப்பட்டிருப்பது கில்லியா?, தில்லியா? என இமைகள் சுருங்க உற்றுப்பார்த்தார் சண்முகம். கில்லி என்று தான் எழுதப்பட்டிருந்தது. புது தில்லி என்பதற்கு தில்லி என்று எழுதியிருந்தால் போனாப்போகுதென்று ஒரு மதிப்பெண் கொடுக்கலாம். இவன் கில்லி என்றல்லவா எழுதியிருக்கிறான். கில்லிக்கும் தில்லிக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. ...
மேலும் கதையை படிக்க...
தமிழ்நாடு கமர்சியல் பேங்க் கிளை, சென்னைக்கு பக்கத்தில் உள்ள திருவாலங்காடு. “கிரி, யாருப்பா அது? நானும் நாலு நாளா பாத்துக்கிட்டேயிருக்கேன். பாங்குக்கு வரான், போறான். என்ன பண்றான்? ”, வங்கி கிளையின் மேனேஜர் ரங்கமணி தனது அக்கௌண்டன்டை வினவினார். “யார்ன்னு தெரியலே சார், நான் ...
மேலும் கதையை படிக்க...
வலியின் மிச்சம்!
நெடுஞ்சாலையில் ஒரு…
தியாகமூர்த்தி
வினோதன் என்கிற மெண்டல்
துப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)