ரயில்வே கேட்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 23, 2018
பார்வையிட்டோர்: 5,853 
 

எங்கள் தெருவில் இருந்து அரைக் கிலோமீட்டர் வரை பயணம் செய்தால் நெல்லை டூ திருச்செந்தூர் வரை செல்லும் ரயில் தண்டவாளத்தை கடக்க நேரிடும். என்னைப் பொறுத்த வரை எங்க ஊர் ரயில்வே கேட் தனித்துவமானது. எங்கள் ஊரின் ஆண்கள் பூங்கா என்றால் அது கண்டிப்பாக ரயில்வே கேட்டாகத் தான் இருக்கும். அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் ஐம்பது வயதைக் கடந்தோர் குறிச்சியில் இருந்தும் கொக்கிரகுளத்தில் இருந்தும் நடைப்பயிற்சி செய்து வந்து சங்கமிக்கும் இடம் இந்த ரயில்வே கேட் தான். அப்போதெல்லாம் ரயில்வே கேட் மரக் கட்டையால் செய்து வெள்ளைப் பெயிண்ட் அடித்திருக்கும். அது மட்டுமல்லாது கேட் அடைப்பது என்பது கதவைத் திறந்து மூடுவது போன்றதொரு அமைப்பு. கேட்டைத் திறந்து மூடும் பணிக்கு ஒரு தாத்தா தான் அங்கு இருப்பார். ரயில்வே கேட்டில் உடற்பயிற்சி செய்ய வரும் அனைத்து ஆண்களுக்கும் அவர் நண்பர் தான். ரயில்வே கேட்டின் இரு புறங்களும் பச்சைப் பசேலென வயல் வெளிகளால் நிரம்பி இருக்கும். ரயில்வே கேட்டில் இருந்து பார்த்தால் வண்ணார்பேட்டையில் இருக்கும் சூரியன் எப்.எம் டவர், பி.எஸ்.என்.எல் அலுவலகம் மற்றும் கதீட்ரல் சர்ச் எல்லாமே தெரியும்.

பெரியவர்களுக்கும் விவசாயிகளுக்கும் மட்டுமல்லாது சிறுவர்களுக்கும் அது பயனுள்ளதாய் இருந்தது. ரயில்வே கேட்டின் கதவில் இருந்து ஏறக்குறைய இருநூறு மீட்டர் தொலைவுக்கு வலது புறமும் இடது புறமும் மரங்கள் மட்டுமே ஆக்கிரமிப்பு செய்திருக்கும். அதுவும் சிறிய மரங்கள் அல்ல குறைந்தது நூறு வருடங்களாவது இருக்கும் அந்த மரங்கள் வைத்து. அனைத்தும் அத்தனை பெரியது. சிறுவயதில் எனக்கும் என்னுடன் படித்த பள்ளி நண்பர்களுக்கும் மற்றும் தெருவில் உள்ள நண்பர்களுக்கும் படிக்க இடம் கொடுத்தது அந்த தண்டவாளங்களும் பெரிய மரங்களும் தான்.

வீட்டில் இருந்து ஒரு புத்தகம் மட்டும் கையில் எடுத்துக் கொண்டு நடந்து செல்வோம் அந்த ரயில்வே கேட்டிற்கு படிக்க. அதுவும் அறுவடைக் காலங்களில் தான் நடப்பதற்க்கே மிகவும் பிடிக்கும். பொன் நிறத்திலான நெற்கதிரில் இருந்து தெறிக்கும் நெல் மணியை பிரித்தெடுக்க சாலையில் தான் கதிர் அடிப்பார்கள். சாலையில் நடந்து செல்லும் போதெல்லாம் அந்த வைக்கோலில் தான் நடந்து செல்வோம். ஒரு வழியாக ரயில்வே கேட்டை அடைந்தவுடன் முதலில் தாத்தாவைப் பார்த்து நலம் விசாரித்து விட்டு தான் உள் நுழைவோம். கொண்டு வந்த புத்தகத்தை இரு தண்டவாளத்திற்க்கும் இடையே போட்டு விட்டு முதலில் மரங்களின் அழகை ரசிப்போம். அங்கு சென்றாலே முழுக்க முழுக்க பறவைகளின் சத்தம் தான். கிளிகள் குயில்கள் குருவிகள் மரக்கொத்திகள் மற்றும் சில நேரங்களில் மயில்கள் வந்து வந்து போகும். காரணம் சுற்றி இருக்கும் வயக்காட்டில் கிடைக்கும் உணவை எடுக்கவே.

அந்த மரங்கள் கண்டிப்பாக எங்களின் அந்தரங்க பேச்சையும் கேட்டுவிட்டு சத்தம் போடுவது போல் கிளை அசைக்கும் காற்று வீசும் போதெல்லாம். எங்களின் காதல் ரகசியங்களை மரவெட்டுகளாக பதிய வைத்திருக்கிறோம் அந்த மரங்களின் உடலின் மீது. மரம் ஏற பழகியிருக்கிறோம். பல பறவைகளின் முட்டையைப் பார்த்திருக்கிறோம். மரம் ஏறும் போது கீழேயும் விழுந்திருக்கிறோம்.

தண்டவாளங்கள் ரயில் செல்ல மட்டுமல்லாது எங்களின் விளையாட்டுக்கும் உதவி புரிந்திருக்கிறது. நண்பர்கள் எங்களுக்குள் யார் அதிக தூரம் காலைக் கீழே ஊன்றாமல் நடக்கிறார்கள் எனப் போட்டி நடக்கும். எல்லா முறையும் நான் தோற்றுப் போய்விடுவேன். என் நண்பன் மணி நன்றாக முயற்சி செய்வான். பெரும்பாலும் எங்களோடு சேர்ந்து நாங்கள் கொண்டு வந்த புத்தகங்களின் பக்கமும் புரளும் இயற்கையை ரசிக்க. ஒரு நாள் கூட ஒரு பாடத்தை முழுமையாக படித்ததே இல்லை அங்கு சென்று. வயல் வெளிகளில் உளுந்து பயிரிட்டிருந்தால் போதும் வயலில் இறங்கி உளுந்தை எடுத்துட்டு வந்து மரம் மீதேறி சாப்பிட ஆரம்பிப்போம்.அப்போதெல்லாம் சுத்தமான குடிநீர் விற்பனை பாட்டில்கள் மிகவும் குறைவு அப்படியே இருந்தாலும் வாங்க எங்களிடம் பைசா இருக்காது.அதிக பட்சம் நாலணா இருக்கும் குறைத்த பட்சம் ஐந்து அல்லது பத்து பைசா இருக்கும். அந்த காசுகளையும் சில நேரங்களில் இரயில் வரும் போது தண்டவாளத்தில் வைத்து ரயில் வேகத்தில் எப்படி மாறுகிறது என்று விளையாட்டாய் செய்து வம்பாக்கி விடுவோம்.ஆகவே தண்ணீர் தாகம் எடுத்தால் கொஞ்ச தூரம் நடந்து சென்று உப்பு தண்ணீர் பம்பில் பிடித்துக் குடிப்போம். பின்னர் மறுபடியும் ரயில்வே கேட்டிற்கு வந்து பேச ஆரம்பிப்போம்.

ஒரு நாள் இப்படி தான் புத்தகத்தை தண்டவாளத்திற்கிடையே வைப்பதற்குப் பதிலாக தண்டவாளத்திலே வைத்து விட்டு பைபாஸ் வரை தண்டவாளத்தில் நடந்து சென்று ஆந்தை பார்க்க போயிட்டோம். போகும் போது திருச்செந்தூரில் இருந்து ரயில் வேறு வந்தது அதில் எல்லாருக்கும் டாட்டா சொல்லிவிட்டு ஜாலியாக போய்ட்டு இரண்டு மணி நேரம் கழித்து வந்து பார்த்தால் புத்தகம் இரண்டாக கிடக்கின்றது. நண்பன் பயந்துட்டான் வீட்டில் என்ன சொல்வதென்று. பிறகு எல்லாரும் சேர்ந்து வீட்டில் இதைச் சொன்னால் இனிமே கண்டிப்பாக ரயில்வே கேட்டிற்கு விட மாட்டார்கள் என்று புரியவைத்து மறைத்து விட்டோம். பின்பு ஒரு மாதம் பணம் சேர்த்து வைத்து பழைய புத்தகக் கடையில் சென்று அந்தப் புத்தகத்தை பத்து ரூபாய்க்கு வாங்கினோம். அப்போது தான் எங்களுக்கு நிம்மதியே வந்தது.

ஏறக்குறைய ஒன்பதாம் வகுப்பில் ஆரம்பித்த ரயில்வே கேட் பயணம் டிப்ளமோ படிக்கும் வரை தொடர்ந்து. அங்கு நான் ரசித்தது ஒன்றல்ல இரண்டல்ல நிறைய உண்டு, மீட்டர் கேஜ் பாதை பிராட் கேஜ் பாதையாக மாறியது, சில வருடங்கள் ரயில் செல்லாத ஒற்றைத் தண்டவாளங்கள், சில நேரம் தண்டவாளங்களே இல்லாதது , கேட் கீப்பர் தாத்தா இல்லாமல் வெறிச்சோடி இருந்த அவரின் இடம், இப்படி ஏராளம். அதனுடன் மீசை முளைத்த பருவத்தில் நாங்கள் பேசிய அந்தரங்க பேச்சுக்கள், நாங்கள் சைட் அடித்த பிள்ளைகளைப் பற்றின உரையாடல்கள், எங்களின் காதல் படுத்தும் பாடு பற்றி இப்படியாக இன்னும் நிறைய அனுபவங்கள் உண்டு அந்த ரயில்வே கேட்டில்.

இப்போது அந்த இடங்களில் உள்ள நிறைய மரங்கள் வெட்டப்பட்டு விட்டன. ரயில்வே கேட் அருகே நான்கு சக்கர பழுது பார்க்கும் ஒர்க் ஷாப் வந்துவிட்டது. கேட் அடைப்பதற்குப் பதிலாக இப்போது மேலிருந்து கீழ் நோக்கி மூடப்படுகிறது சாலை. மரக்கட்டைக்கு பதிலாக கம்பியால் செய்த கேட் மற்றும் அதன் வண்ணமும் மாறிவிட்டது மஞ்சளும் கருப்புமாக.அந்த இடங்களில் சிறார்களை பார்க்க முடிவதே இல்லை, பெரியவர்களையும் பார்க்கக் கடினமாக உள்ளது. காலங்கள் , சுற்றி இருப்பவைகள் , கேட் , கேட்டின் வண்ணம் என அனைத்தும் மாறினாலும் இன்றும் அந்த பழைய கேட்டும், பழைய கேட் தாத்தாவும் , பழைய தண்டவாளங்களுமாகவே காட்சியளிக்கிறது ஒவ்வொரு முறையும் இரு சக்கர வாகனத்தில் அந்த ரயில்வே கேட்டைக் கடக்கும் போது…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *