யார் மாற வேண்டும்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 5,905 
 

ஒரு சமயம் இரண்டு அமெரிக்க போர்ப்படைக் கப்பல்கள் கடலில் கடற்படையினருக்குப் பயிற்சி அளிக்கும் பணியில் பயணித்துக் கொண்டு இருந்தன. பனிமூட்டத்தினால் சில நாட்கள் தொடர்ந்து அவர்களுடைய பயணம் தாமதப்பட்டு வந்தது. ஒருநாள் இரவு கடும் பனிமூட்டத்தில் கடற்பகுதி மூடியிருந்ததால் முன்னால் சென்று கொண்டு இருந்த போர்ப்படைக் கப்பலின் மேற்தளத்தில் கப்பலின் கேப்டன் நின்று மேற்பார்வை இட்டுக் கொண்டு இருந்தார்.

அப்போது தொலைநோக்கி வழியாக கண்காணித்துக் கொண்டு இருந்த கடற்படை வீரர் கேப்டனிடம் சொன்னார். “ஐயா நாம் போகின்ற பாதையில் சற்று தொலைவில் விளக்கு வெளிச்சம் தெரிகிறது. இன்னொரு கப்பலாக இருக்கக்கூடும் என்று சந்தேகப்படுகிறேன்”

“அது நின்று கொண்டு இருக்கிறதா இல்லை, நகர்கிறதா?”

“நகராமல் தான் இருக்கிறது”

“உடனடியாக அவர்களுக்கு சிக்னல் அனுப்பு. நமது கப்பல் போகின்ற வழியில் அது நிற்கிறது என்று தெரிவி. 20 டிகிரி விலகிப் போகச் சொல்.”

அப்படியே சிக்னல் அனுப்பப் பட்டது. அங்கிருந்து உடனடியாக மறுமொழி வந்தது. “நீங்கள் 20 டிகிரி விலகிப் போவது நல்லது”.

எரிச்சலடைந்த கேப்டன் சிக்னல் அனுப்பினார். “நான் கேப்டன் சொல்கிறேன். 20 டிகிரி விலகிப் போங்கள்”

மறுமொழி உடனடியாக வந்தது. “ஐயா நான் கப்பல்படையின் இரண்டாம் நிலை ஊழியன். தயவு செய்து 20 டிகிரி விலகிப் போங்கள்”

கேப்டனுக்கு ஒரு இரண்டாம் நிலை ஊழியன் இப்படி கீழ்படியாமல் நடந்து கொள்வது பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. “இது போர்ப்படைக் கப்பல். உடனடியாக 20 டிகிரி விலகுங்கள்”

பதில் உடனடியாக வந்தது. “இது கலங்கரை விளக்கம்”

மறு பேச்சு இல்லாமல் போர்ப்படைக் கப்பல்கள் தங்கள் பாதையை 20 டிகிரி மாற்றிக் கொண்டன.

(இது அக்கப்பலில் பயணித்த கடற்படை வீரர் கடற்படையினரின் பத்திரிக்கையில் தெரிவித்து அதை ஸ்டீபன் கோவே தன் புத்தகம் ஒன்றில் மேற்கோள் காட்டியிருந்தார்).

ஒவ்வொருவர் வாழ்க்கைப் பாதையிலும் இப்படி சில கலங்கரை விளக்கங்கள் குறுக்கிடத்தான் செய்கின்றன. நம் விருப்பப்படி மாறவோ, நமக்காக விலகி வழி விடவோ செய்யாத சில இருக்கத்தான் செய்கின்றன. மாற்றவே முடியாத இது போன்ற குறுக்கீடுகள் வரும் போது நாம் தான் நம் பாதையை சற்று மாற்றிக் கொண்டு செல்ல வேண்டும். அதை விட்டு விட்டு நான் மாற மாட்டேன், அதை மாற்றியே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்து எதிர்த்து நின்றால் அது வடி கட்டிய முட்டாள்தனமாகவே இருக்கும்.

இப்படிப் பட்ட சூழ்நிலைகளில் தங்களை மாற்றிக் கொள்ள நேரிடுவது சிலருக்கு கௌரவக்குறைவாக தோன்றுவதுண்டு. மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சியில் கேப்டனுக்கு வந்த கோபம் போல “ஈகோ” பிரச்சினை எழுவதுண்டு. ஆனால் சந்தர்ப்பங்களின் தன்மை அறிந்து தெளிவுடன் மாறுவதும், வளைந்து கொடுப்பதும் பக்குவமேயன்றி தோல்வியல்ல.

ஒரு ஆங்கிலக் கவிஞன் கடவுளிடம் பிரார்த்தனை செய்தான். “கடவுளே! உலகில் மாற்ற முடிந்த விஷயங்களை மாற்றும் சக்தியையும், மாற்ற முடியாத விஷயங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும், இந்த இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அறிந்து தெளியும் ஞானத்தையும் எனக்குத் தருவாயாக!”

கடவுளிடம் நாம் வேண்டுவதும் அதுவாகவே இருக்கட்டும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *