யாரைக் கலாய்க்கலாம்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 5,720 
 

குமார் வீட்டு மொட்டை மாடியில் கூடியிருந்த அவன் நண்பர் குழாம் வழக்கம் போல் அவனை உசுப்பியது.

‘அது சரி குமார்… இன்னிக்கு என்ன த்ரில் வெச்சிருக்கே…? யாரைக் கலாய்க்கப் போறே?”

‘ம்ம்ம்…” ஆட்காட்டி விரலைத் தாடையில் வைத்து யோசித்த குமாரின் பார்வை கீழே தெருவில் அந்த மின் விளக்குக் கம்பத்தில் தொங்கிக் கொண்டிருந்த அந்தச் சிறிய விளம்பரப் பலகை மீது உட்கார்ந்தது.

‘அவசரத்திற்கு பஞ்சர் போட அணுகவும்…98941 25211”

‘ஆங்…. கெடைச்சிருச்சு….” என்று வாய் விட்டுக் கூவிய குமார் தன் நணபன் விக்னேஷின் பக்கம் திரும்பி, ‘டேய்…உன் மொபைல் போனைக் குடுடா…”

‘எதுக்குடா?’ கேட்டபடியே நீட்டினான் அவன்.

அந்த விளம்பர போர்டில் குறிப்பிட்டிருந்த எண்ணுக்குப் போன் செய்த குமார், ‘சார்…பஞ்சர் சர்வீஸ்தானே?’ பவ்யமாய்க் கேட்டான்.

‘ஆமாம்”

‘சார்…நான் சாந்தி நகர்லேயிருந்து பேசறேன்… என்னோட வண்டி பஞ்சராயிடுச்சு… கொஞ்சம் உடனே வந்து போட்டுத் தர முடியுமா?”

‘ஓ.கே. சார்… நீங்க இடத்தை மட்டும் கரெக்டா சொல்லுங்க… பத்தே நிமிஷத்துல வந்திடறேன்” சொன்னான் குமார்.

சொல்லி விட்டுப் போனை அணைத்தவன், ‘இப்பப் பாருங்கடா… விளையாட்டை…!’ என்றபடி மொட்டை மாடிக் கைப்பிடிச் சுவற்றினருகே சென்று அந்தப் பஞ்சர்க்காரனுக்காகக் காத்து நின்றான்.

சொன்னது போலவே பத்தே நிமிடத்தில் அந்தத் தெருவிற்குள் நுழைந்த அந்தப் பஞ்சர்க்காரன் நாலாப்புறமும் தேட,

மேலிருந்தபடியே அவனுக்கு மொபைல் போனில் வழி சொன்னான் குமார், ‘நீங்க நிக்கற இடத்துக்கு வலப்பக்கம் ஒரு குப்பைத் தொட்டி இருக்கா?… அதுக்குப் பக்கத்துல ஒரு சின்ன சந்து போகுதா?… ம்ம்ம்… அதுல போங்க… ஒரு மஞ்சள் கேட் போட்ட வீடிருக்கா?… அதைத் தாண்டிப் போங்க… ம்ம்ம்… அப்படியே லெப்ட் திரும்புங்க… அங்க… வேலியோரம் ஒரு வண்டி நிக்குதல்ல… அதுதான் என் வண்டி… நாலு வீலுமே பஞ்சர்… உடனே போட்டுடுங்க ப்ளீஸ்”

குமார் சொல்லியபடியே சென்று அந்த இடத்தை அடைந்து, அங்கு நின்றிருந்த வண்டியைப் பார்த்ததும் அதிர்ந்து போனான் அந்தப் பஞ்சர்க்காரன்.

அது… இறந்தவர்களைச் சுமந்து செல்லும்….சொர்க்க ரதம்.

அப்போதுதான் அந்தப் பஞ்சர்க்காரனுக்கு உறைத்தது தான் கலாய்க்கப் படுகிறோம் என்று. ‘ராஸ்கல்…எவனோ வெளையாடுறான்…” தனக்குத் தானே சொல்லிக் கொண்டு அக்கம் பக்கம் யாராவது கண்ணில் படுகிறார்களா என்று தேடினான்.

மொட்டை மாடியிருந்து அவன் தவிப்பை பார்த்து…ரசித்துச் சிரித்தது குமாரின் நண்பர் குழாம்.

மீண்டும் மொபைல் ஒலிக்க அதை எடுத்துப் பேசிய பஞ்சர்க்காரன் கத்தினான். ‘டேய்…யார்றா நீ?… வெளையாடறியா?…உன் நம்பரை வெச்சு நீ யார்ன்னு கண்டுபிடிச்சுட்டு வந்து உன் பல்லைப் பேக்கறனா இல்லையா பாரு”

‘அட ஏன்யா கோவிச்சுக்கறே?… நான் ஒண்ணும் பொய் சொல்லலை… எம் பேரு முனுசாமி… மூணு மாசத்துக்கு முன்னாடி செத்துப் போன என்னை அந்த வண்டிலதான் சுடுகாட்டுக்கு கொண்டு போய் பொதைச்சாங்க… அப்ப அதுதானே என் வண்டி.”

பஞ்சர்க்காரன் வெலவெலத்துப் போனான். வியர்த்துக் கொட்டியது அவனுக்கு.

இதையெல்லாம் மேலிருந்து பார்த்த குமார் குழாமிற்கு பஞ்சர்காரனின் பயமும், வியர்வையும் சந்தோசமாக இருந்தது.

இதைப் பார்த்தபடியே மாடியிலிருந்து ரசித்த குமார் சிரித்தபடி சற்று முன்னே நகர கால் இடறி கீழே விழுந்தான்.

குமாரின் நண்பர்கள் குழாம் “டேய் குமார்…” என்றபடி அலற…

அந்த சொர்க்க ரதத்தின் மேல் பகுதியில் போய் விழுந்து…அப்படியே அதிலிருந்து தரையில் விழுந்தான் குமார்.

குமாரின் உடலில் சில இடங்கள் பஞ்சராகி இரத்தம் வெளியேறத் தொடங்கியது.

இதைப் பார்த்த பஞ்சர்காரன் முதலில் சற்று பயந்தாலும், அவனுக்குள்ளிருந்து மனித நேயம் எட்டிப் பார்க்க அவனைத் தூக்கி அவன் உடலிலிருந்து அதிகமான ரத்தம் வெளியேறாதபடி தன் கையிலிருந்த துணியால் அவன் காயங்களில் கட்டுப் போட்டான்.

இதைப் பார்த்த குமாருக்கு மயக்கம் வந்தது… அவன் மனதிற்குள் இனி யாரையும் கலாய்க்கக் கூடாது… என்று நினைத்துக் கொண்டான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *