யாரும்மா மைனரு?

 

முனியன் மஞ்சனத்தி மரத்தினடியில் நின்றிருந்தான். காலை மணி பத்து. தொண்டு நிறுவனத்துக்கு வேலைக்கு வருவோர் அவனை வினோதமாக பார்த்துக்கொண்டே அவசரமாக உள்ளே நுழைந்து பையோ பன்ச் வைத்தனர். அவன் கைலியை பின்பக்கம் எற்றி கட்டியபடி ஏதோ நினைப்பில் ஒரு குச்சியை மென்ற படி நின்றிருந்தான். யாரை பார்த்தும் அவன் கைலியை இறக்கிவிடவில்லை. வணக்கம் சொல்லவில்லை. அப்பா வந்து கூட்டிக்கொண்டு செல்வதாக சொன்னாரே இன்னும் வரவில்லையே என்ற கவலையோடு இருந்தான்.

டார்லிங்க் செல்வி வியர்க்க வியர்க்க நடந்து வந்தாள். அவள் அந்த தொண்டு நிறுவனத்தின் களப்பணீயாளர். தென் மாவட்டத்தை சேர்ந்தவள். எங்கு அநியாயம் நடப்பதாக தெரிந்தாலும் அவசர அவசரமாக ஓடிப் போய் நியாயம் கேட்டு பாதிக்கப்பட்டவருக்கு உதவுவாள். இரவு பகல் பார்க்காமல் பயணிப்பாள். வெயில் மழையிலும் அசர மாட்டாள். கடும் உழைப்பாளீ. முனியனைப் பார்த்ததும் ‘என்ன முனியா இங்கே நிக்குற? சாப்பிட்டியா உள்ள வா’ என்ற படி ஓடிப்போய் அவளும் பன்ச் வைத்தாள். மணி பத்து பத்து.

முனியன் உள்ளே சென்றான். அன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. டார்லிங் செல்வி முனியனை கொத்தடிமை என்று அறிமுகம் செய்து வைத்தாள். அவன் தந்தை ஐம்பதாயிரம் விலை பேசி பத்தாயிரம் முன்பணம் வாங்கியதாக ஆவேசத்துடன் எடுத்துரைத்தாள். கொத்தடிமை சட்டத்தின் கீழ் பணம் கொடுத்தவரை கைது செய்ய உரிய நடவடிக்கையை தங்கள் வழக்கறிஞ்ர் குழு எடுத்திருப்பதாக உரைத்தாள். முனியனோடு இன்னும் இரண்டு ஆண்களும் பெண்களும் காட்டில் மாடு மேய்த்து வருவதாகவும் குறிப்பிட்டாள் இவர்கள் ஐவரும் மைனர் என்பதால் வழக்கு இன்னும் சூடு பிடித்தது. பத்திரிகையாளர் அவனிடம் சில கதைகளை கேட்டு எழுதிக்கொண்டர்.

முனியனை பற்றி கேள்விப்பட்டு அவன் வீட்டுக்கு டார்லிங் செல்வி போனபோது . அவன் அம்மா ‘தாயி என் கண்ணுக்கு இந்த அய்ப்பசி வந்தால் பதினாறு வயசாகுது. பச்ச மண்ணு. படிச்சுக்கிட்டிருந்த பையனை இந்த மனுசன் மாடு மேய்க்க அனுப்பிட்டார்’. என்று அழுதாள. முனியனின் அப்பா, ‘அம்மா படிக்கிற பைய்னை மாடு மேய்க்க அனுப்ப எனக்கு மட்டும் ஆசையா? அவனுக்கு படிப்பு வரல. எட்டாப்பு பெயிலாயிட்டான். வெவசாயம் இல்லை. கந்து வட்டிகொடுமை. நான் என்ன செய்வேன். மூனு மாசம் ஆச்சு என் மகன் முகத்தை கூட பார்க்கல. வாங்கின காசை அப்படியே கடன்காரனுக்கு வட்டிக்கு கொடுத்துட்டேன்’ என்று அழுதார். அவரிடம் முனியனை கொத்தடிமையாக பணம் கொடுத்து வாங்கியவரின் முகவரியை பெற்றுக்கொண்டாள்.

மறு நாள் அலுவலகத்தில் வந்து தகவல்களைச் சொல்லிவிட்டு டார்லிங் செல்வி கரட்டுப்பட்டி கிராமத்துக்கு சென்றாள். ஊர்ப் பெரியவரின் வீட்டுக்கு போனாள் அவர் செய்த அநியாயத்தை எடுத்து சொன்னாள். அவர் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் தன் பக்கத்து நியாயத்தை எடுத்துரைத்தார்.

‘உங்க பேர் என்னம்மா சொன்னீங்க. செல்வியா. சரி செல்விம்மா மாசத்துக்கு ஆயிரம் ரூபாய் முனியனுக்கு சம்பளம் பேசினேன். பன்னெண்டு மாசத்துக்கு எவ்வளவு பன்னெண்டாயிரம். சரியா? அதையே முன்பணமா மொத்தமா குடுத்தா கொஞ்சம் சலுகை உண்டு. அது தான் பத்தாயிரம். சரியா? அதாவது இப்ப பெரிய பெரிய கம்பெனியில அப் ஃப்ரண்டா கொடுக்குறாங்களே அது மாதிரி இது” என்றார்.

செல்வி, ‘ஐயா அவன் மைனர் அவனை நீங்க வேலைக்கு வச்சது தப்பு நாங்க உங்க மேல வழக்கு போடுவோம்’.

அவனா சின்ன பையன் ரெண்டு மாசம் கழிச்சு வாங்க. அவன் ரெண்டு குட்டி போட்டிருப்பான் என்று சொல்லிவிட்டு பெரியவர் வீட்டுக்குள் போய்விட்டார்.

டார்லிங் செல்விக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. பாவம் மைனர் பையனை கொத்தடிமையா வச்சுக்கிட்டு பேச்சை பாரு. என்ன ஆணவம். இந்த ஆளை சும்மா விடக் கூடாது, என்று பொருமிக்கொண்டே வந்தாள்.

அந்த கடும் வெயிலில் தனியாக மேய்ச்சல் காட்டுக்கு போனாள். உச்சி வெயிலில் பெண்கல் அந்த காட்டு வழியாக போக பயப்படுவார்கள் ஆனால் பாவம் பேய் தான் இவளை கண்டு பயப்படும். அப்படி அஞ்சாமல் விறுவிறுவென்று நடந்து போனாள். முனியனை தேடி பிடித்து அவனிடம் அவன் அப்பா அம்மாவை பார்த்த விஷ்யத்தை சொன்னாள். அவனை மேற்கொண்டு படிக்க வைக்கிறேன் நல்ல வேலை வாங்கி தருகிறேன் என்று சொல்லி அவனை அழைத்துக்கொண்டு வந்துவிட்டாள். தொண்டு நிறுவனம் இந்த செய்தியைப் பத்திரிகையில் போட்டு கலக்கி கொண்டிருக்கிறது. ஆனால் முனியன் மட்டும் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறான்.

மேடம் வந்து முனியனுக்கு ஒரு பெரிய சார்ட் கொடுத்து கலர் பென்சில் கொடுத்து உனக்கு பிடித்த படம் வரை என்றார்கள்.

மறுநாள் அவனிடம் ஒரு நோட்டை கொடுத்து இங்கிருக்கும் புத்தகங்களை எடுத்து வாசி. உனக்கு பிடித்த விஷயங்களை இதில் எழுதி வை என்றார்கள். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

திடீரென்று அவன் மூலைக்கடைக்கு போய் பீடி குடிப்பதாக யாரோ சொல்லவும் உடனே அவனின் மன அழுத்தத்துக்கு கவுசலிங் ஏற்பாடு செய்யப்பட்டது. அவனுக்கு தனிமை ஆகாது அவனை யாராவது என்கேஜ் செய்ய வேண்டும் என்றார்கள் இதனால்அடிக்கடி அவனிடம் யாராவது பேச்சு கொடுத்தார்கள். அவனும் தன் கிராமத்தில் மாங்காய் அடித்தது கரட்டாண்டி பிடித்தது. பொன்வண்டு பிடித்தது. கிழங்கு சுட்டு தின்னது என்று பேசிக்கொண்டே இருந்தான். மதியம் சாப்பிட்டதும் வேப்பமரத்து அடியில் இருக்கும் சிமென்ட் பெஞ்சில் படுத்து தூங்கிவிடுவான்.

ஒரு நாள் மாடியில் அவனுக்கு மன நல மருத்துவர் கவுன்சலிங் கொடுத்துக்கொண்டிருந்த போது அவனுக்கு பிடித்த வாசனை வந்தது. அந்த வாசனையைப் பிடித்துக்கொண்டே கிழே இறங்கி வந்தான்.. அங்கே சிலர் நிறுவனத்தின் இயக்குனரைப் பார்க்க அமர்ந்திருந்தனர். திடீரென்று முனியன் பொன்னீ என்று கத்தினான். ஓடிப்போய் ஒரு பெண்ணை கட்டி பிடித்துக்கொண்டான். ‘என்னாச்சு ஏம்பிள்ளை இங்க வந்த? நான் தான் வந்துருவேன்ல. எதுக்கு இங்கெல்லாம் வந்த என்று கேட்டான். அவள் ஏதோ சொல்லி விசும்பினாள் ‘அடச்சே இதுக்கா அழுகுற இங்க வா சாப்பிட்டியா என்று அவள தோளை அணைத்தபடி கிச்சனுக்கு அழைத்து போனான்.

அங்கிருந்தவர்கள் ‘யார் இது’ என்று கேட்டனர். பொன்னியுடன் வந்தவர்களில் ஒருவர் ‘இவன் தான் அவன்’ என்றார்.

டார்லிங் செல்வி முனியன் கத்தியதை கேட்டு மாடியில் இருந்து ஓடி வந்தாள். ‘என்னாச்சு யாரு நீங்கல்லாம்

கரட்டுப்பட்டி பெரியவர் அனுப்பினாரு. நீங்க மைனர்னு பிடிச்சு வச்சிருக்குற முனியன் அந்த பிள்ளைக்கு தாலி கட்டி குடும்பம் நடத்திருக்கான். இந்த பிள்ளை இப்ப அஞ்சு மாசம் கர்ப்பமா இருக்கு. அதை உங்க கிட்ட சொல்லிட்டு வரச் சொன்னாரு. இதுக்கு மேலே நீங்க கேஸ் கோர்ட்டுனு போகமாட்டீங்கன்னு நினைக்குறேன்’.

‘ஐயோ ரெண்டு பேரும் மைனரா’ என்று கேட்டாள் செல்வி.

‘யாரும்மா மைனரு? கோயீல வச்சு தாலி கட்டிருக்கான். அவன் மைனரா? அவன் அம்மா அப்பா பேச்சை கேட்டுக்கிட்டு நீங்க எங்க ஐயா மேலே பொய் வழக்கு போட்டிருக்கீங்க. முனியன் அப்பன் இப்படித்தான் ஒரு ஆளுகிட்ட பணத்த வாங்கிக்கிட்டு பெறகு உங்க மாதிரி ஆளுக மூலமா மகனை விடுவிச்சிருவான். பெறகு அடுத்த ஆளுகிட்ட பணத்த வாங்கிட்டு அவனை வேலைக்கு அனுப்புவான். அந்த காசு செலவானதும் உங்க மாதிரி ஆளுகளை பார்த்து அழுது மகனை விடுவிச்சிருவான். அவன் பெரிய பிராடும்மா’

விக்கித்து போய் நின்றால் செல்வி இப்படியும் செய்வார்களா? அப்போ முனியன் அம்மா சொன்னது எல்லாமே பொய்யா? ஐயோ தெய்வமே. முனியன் அப்பா வட்டி கொடுமை பற்றி சொன்னாரே அது யாருன்னு கேட்டு அந்த ஆளை கந்து வட்டி கொடுமையில பிடிக்கனும். அந்த ஆளால தான் முனியன் அப்பாவுக்கு மகனை கொத்தடிமையாக விற்க வேண்டிய நெலமை ஏற்படுது. அந்த ஆளு யார்ன்னு போய் விசாரிப்போம்’ என்று முடிவு செய்தாள்.

பத்திரிகை நண்பர்களிடமும் சொல்லி வைப்போம் என்று அடுத்த ப்ராஜெக்ட்டுக்கு தயாரானாள். 

தொடர்புடைய சிறுகதைகள்
‘அண்ணே என் கோலத்தைப் பார்த்தீங்களா’ என்று அமராவதி வீட்டுக்குள் நுழைந்தாள். “என்னாச்சு பெரியவர் தவறிட்டாரோ. நமக்கு ஒண்ணும் தகவல் வரலையே” என்று பொன்னையா வாத்தியார் யோசித்தார். அமராவதியின் சத்தம் கேட்டு வாத்தியார் சம்சாரம் ஹாலுக்கு வந்தாள். அமராவதி தலையை தட்டி அள்ளி முடிந்தாள் ...
மேலும் கதையை படிக்க...
இன்றைக்கு தவமணி அக்காவின் போக்கு சற்று விசித்திரமாகத்தான் தோன்றுகிறது. காலையில் பத்தரை மணிக்கே வந்து தேனப்பன் சார் முன் உட்கார்ந்தவர மணி பன்னிரெண்டு ஆகியும் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. இரண்டு மூன்று நாட்களாகவே இப்படித்தான் வந்து அமர்வதும் பின்பு சற்று ...
மேலும் கதையை படிக்க...
கலாவின் காதுக்குள் வந்து அவள் கணவன் ஏதோ சொல்லியதும் அவள் சீ என்று எரிந்து விழுந்தாள். அவள் முகத்தை பார்த்ததும் பாலுவுக்கு அருவருப்பாக போய்விட்டது. என்ன கேட்டுவிட்டோம் என்று இப்படி கத்தினாள். ‘’ராத்திரி முழுக்க பாலா பாலான்னு கொஞ்சுறா, காலைல வெலகி வெலகி ஓடுறா. ...
மேலும் கதையை படிக்க...
வீடு வெறும் வீடாக இருந்தது நாளை காலை அந்தமானுக்கு பயணம் மகள் சிந்தாமணி நிம்மதியாக தூங்குகிறாள் அவளுக்கு இது பிறந்த வீடு. எனக்கு நான் கட்டுன மாளிகை. பதினைஞ்சு பதினாறு வயசுல கட்டினது. மூக்கமாவுக்கு ஐம்பது வயது ஒருக்கும் அள்ளி முடிந்த கூந்தல் ...
மேலும் கதையை படிக்க...
தங்கக்கா, என்ன செய்றீங்க என்று கேட்டபடி உள்ளே வந்தார் கதீஜாம்மா. வாங்க, எங்க சின்னவனைக் காணோம் என்றபடி ஒரு செம்பு தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்தார். அவனை ஆசான்கிட்ட உட்கார்த்தி வச்சுட்டு வந்தேன். யாரோ உள்ள இருக்காங்க அவுங்க போனதும் வந்து கூப்பிடச் ...
மேலும் கதையை படிக்க...
அமராவதியின் காதல்
பட்டணமா…
பிருந்தா ஹாஸ்டல்
காதல் கிளிகள்
கதீஜம்மாவின் சந்தோஷம்

யாரும்மா மைனரு? மீது ஒரு கருத்து

  1. Rathinavelu says:

    முனியன் அப்பா பொய்யன். பலரிடம் மாறி மாறி மகனை அடகு வைப்பவன். அவன் பேச்சைக் கொண்டு கந்துவட்டிக்காரனைத் தேடுவதா?!
    பத்திக்குப் பத்தி ஆசிரியைக்குக் குழப்பம்!
    டார்லிங் செல்விyuம் ஏசுவைப் போலவே குழப்பவாதியா?
    அவர்தான் சிலுவையில் அறையப்படுமுன் சிறையில் ” கடவுளே ஏன் கைவிட்டீர் ” என்று குழம்பினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)