யமனின் கணக்கு – ஒரு புரியாத புதிர்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 20, 2013
பார்வையிட்டோர்: 14,104 
 

யமலோக பட்டினம். யமனின் தர்பார்.

யமன் – சித்திர குப்தன் உரையாடல்.

“சித்திர குப்தா! சொல்லு, அடுத்து நான் யார் உயிரை எடுக்க வேண்டும்?” –யமன்.

“ஐயா. எல்லாவற்றிற்கும் நீங்கள் போக வேண்டிய அவசியமில்லை. கிங்கரர்களை அனுப்பிக் கொள்ளலாம்”

“இல்லை சித்திரகுப்தா, நானும் கொஞ்சம் வேலை செய்ய வேண்டும். கணக்கு காட்ட வேண்டும். சொல், நிறைய பாவங்கள் செய்து, நரகத்திற்கு வர வேண்டியவர் யார்?”

“சென்னையில், கந்தசாமி என்று ஒருவர். பெரிய பணக்காரர். தொழிலதிபர். அவரது உயிரை வேண்டுமானால் நீங்களே எடுங்கள்.”

“அவர் செய்த பாவங்கள் என்ன?”

“அவர் மகா பாவி. செலவை குறைப்பதற்காக, அவரது தொழிற்சாலை கழிவை, யாருக்கும் தெரியாமல், பூமிக்கடியில் தேக்கி விட்டுக் கொண்டிருக்கிறார். அந்த விஷ கழிவு, நிலத்தடி தண்ணீரில் கலந்ததனால், ஊர் ஜனங்கள் கடுமையான தோல் நோய், வயிற்று நோய், புற்று நோய் வந்து படாத பாடு படுகிறார்கள். நிறைய பேர் செத்துப் போயிட்டாங்க. இறந்துகிட்டு இருக்காங்க”.

“அவன் அதுக்கு வருத்த பட்டானா?”

“அதை பற்றி அவர் கொஞ்சமும் கவலைப் படவில்லை. அரசாங்கத்துக்கு லஞ்சம் கொடுத்து கொடுத்து சரி கட்டிகிட்டிருக்கார். பெரிய பணக்காரராக ஆசை. பேராசை.”.

“அதை தவிர? ”

“தனது தொழிலாளிகளை சரியா கவனிக்க மாட்டார். ஏழைகளின் வயிற்றிலே அடிப்பார்”.

“சரி. அப்படியானால், நானே போய் அவன் ஆயுசை முடிச்சி, உயிரை எடுத்துகிட்டு வாரேன்!”

“ஆனால், ராஜா, அவரது ஆயுசு முடிய இன்னும் இரண்டு மாதமிருக்கிறது”

“இருக்கட்டும், எனக்கும் அவனை பார்க்க வேண்டும் போலிருக்கிறது. நாம் செய்ய வேண்டிய சில பல வேலைகளை அவன் செய்திருக்கிறானே? சும்மா பார்த்துட்டு வரேனே?”

யமன் கிளம்பி விட்டார். பூலோக விஜயம்.

*****

சென்னை:

தொழிலதிபர் கந்த சாமியின் பங்களா:

கந்தசாமி வேக வேகமாக தனது காரை விட்டு இறங்கினார். தீவிர சிந்தனையோடு, வீட்டில் தனது அறைக்குள் நுழைந்தார். சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார். கொஞ்சம் விஸ்கியை விழுங்கினார்.

”சே! நேரம் நமக்கு சாதகமாக இல்லியே!” கொஞ்சம் புழுங்கினார். சிகரேட்டு புகையை கொஞ்சம் ஊதினார்.

இப்போது அவருக்கு இன்னொரு பிரச்னை பூதாகாரமாக உருவேடுத்திருக்கிறது. அவரது தொழிற்சாலையின் ரசாயன கழிவினால், நிறைய மக்கள் பாதிக்க பட்டிருப்பதால், உயர் நீதி மன்றத்தில் இவரது தொழிற்சாலைக்கு எதிராக வழக்கு இன்று முடிந்தது. நீதி மன்ற உத்திரவுப் படி, இழப்பீடாக 200 கோடி ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும். மேல் முறையீடு செய்யவேண்டும். அவரது தன்மான பிரச்சனை. எப்படி விட்டுக் கொடுப்பது?.

இதனால், இப்போது இவரது பங்குதாரர்களிடையே இவருக்கு எதிர்ப்பு. அதை வேறு சரி செய்தாக வேண்டும்.

இந்த நேரம் பார்த்தா, இந்த பாழாய் போன கான்சர் இவருக்கு வர வேண்டும்? எண்ணி இரண்டு மாதமென்கிறார் டாக்டர். என்ன பண்ணலாம்?

“சே! எனக்கு மட்டும் கடவுள் ஏன் தான் இவ்வளவு சோதனை தருகிறாரோ? இன்னும் கொஞ்ச காலம் நான் உயிரோட இருந்தால், எவ்வளவு செய்யலாம்?”

“இன்னும் கொஞ்ச நாள் இல்லை கந்தசாமி, நான் நினச்சா இன்னிக்கே உன் டைம் முடிந்துவிடும்” அசரீரி குரல் அந்த அறையில் ஒலித்தது.

திடுக்கிட்டார் கந்தசாமி “யார்? யாரது?”

“நான்தான் யமன்! நீ எவ்வளவு பாவம் பண்ணியிருக்கே? எங்க லிஸ்ட்லே நீ ஒரு முக்கிய புள்ளி. சொல்லப் போனால், கரும்புள்ளி. உன்னை நரகத்திற்கு அழைச்சிண்டு போகவே வந்திருக்கேன். கிளம்பு”

“ஐயோ! நான் செய்ய வேண்டியது நிறைய இருக்கே! உனக்கு என்ன வேணா தரேன். என்னை விட்டுடேன். இதோ பாரு! என் சொத்தை மூணு மடங்காக்கணும். நாலு பாக்டரி கட்டணும். இழப்பீட்டு மனுவை எதிர்த்து அப்பீல் பண்ணனும். எக்கச்சக்க வேலை இருக்கு.”

“ம்!” யோசித்தார் யமன். “நீ எவ்வளவோ பேரை கொன்னிருக்கே! உன்னாலே, இந்த உலகத்திலேயே நிறைய பேர் சித்தரவதை அனுபவிச்சிட்டு இருக்காங்க. தெரிஞ்சோ, தெரியாமலோ, என்னோடைய வேலையை நீ செஞ்சிருக்கே. சரி. போனால் போகிறது, உனக்கு ஒரு வரம் தருகிறேன். எடுத்துக்கோ !”

“ஒ. நன்றி நன்றி யம தர்மா. நான் என்ன பண்ணனும்? ”

“உன்னோட உயிரை வேற யாராவது உடம்பிலே செலுத்திடறேன். அந்த உடம்பிலே நீ இருக்கலாம். அவங்க உயிரை, உன்னோட உடம்பிலே செலுத்திடறேன். யார் உடம்பு உனக்கு வேணும், நீயே சொல்லு?”

“ அடே ! இந்த டீல் நல்லா இருக்கே? இப்போ என் உடம்பு கான்சர் வந்த உடம்பு. இதுலேருந்து நான் ஒரு நல்ல திட காத்திரமான ஒரு 28 வயது சின்ன பையன் உடம்பிலே போயிட்டா, நான் ரொம்ப நாள் நல்லா இருக்கலாமில்லே?”

“ஒ. இருக்கலாமே!”

“அப்படின்னா, யம தேவரே! எனது தம்பி மகன், வரதனின் உடலுக்குள் நான் கூடு பாயணும்”

“அப்போ, அந்த பையன் வரதனின் கதி, அவன் உன் தம்பி பிள்ளையாச்சே! உனது இந்த புற்றுநோய் உடம்புக்கு, அவன் உயிர் வந்துவிடும். பரவாயில்லையா?”

”அதெல்லாம் பாத்தா நடக்குமா?. எல்லாம் அவன் தலையெழுத்து!”

“சரி! அப்படியே ஆகட்டும்! இந்த நிமிடத்திலிருந்து உனது உயிர், புத்தி எல்லாம் உன் தம்பி மகன், வரதன் உடலில். அவன் உயிர், புத்தி எல்லாம் உன் உடலில்.”

அடுத்த நாள்:

கந்தசாமி தம்பி ரங்கசாமி வீடு. வாசல் வராந்தாவில் ரங்கசாமியின் பூத உடல். சுற்றிலும் உறவினர்கள், நண்பர்கள், தொழிற்சாலை ஊழியர்கள். விஷயம்இதுதான். முந்திய நாள் மாலை, நான்கு மணிக்கு, ஊட்டி அருகே அவரது கார் ஒரு வேன் மீது மோதி, ரங்கசாமி மரணம்.

அதிசயம், ரங்கசாமியின் மகன் வரதன், விறைப்பாக இருந்தான். அப்பாவின் மரணம் அவனை பாதித்ததாகவே தெரியவில்லை. எல்லோருக்கும் ஆச்சரியம். ரொம்ப நல்ல மகனாயிற்றே. அவன் அம்மாவுக்கும் அவனது போக்கு புரியவேயில்லை. அவனது கணக்கு எல்லாம், அப்பாவின் சொத்து எவ்வளவு தேறும்? இழவு வீட்டிலேயே, அவனது பேச்சில், அது நன்றாக தெரிந்தது.

ஆனால், அதற்கு நேர்மாறாக, அங்கு வந்திருந்த அவனது பெரியப்பா, தொழிலதிபர் கந்தசாமியின் நடவடிக்கை இருந்தது. தம்பி பிரிவு தாங்காமல், அவரது கண்களில் மாலை மாலையாக கண்ணீர்.

அனைவருக்கும் ஆச்சரியம். எதற்கும் கலங்காத கந்தசாமியா இப்படி தம்பிக்காக அழுகிறார். எப்போதும் ,தம்பியை துச்சமாக நடத்துவாரே!
இப்போது என்ன ஆயிற்று?

கந்தசாமி, வந்திருந்த உறவினர் , நண்பர்கள் அனைவரது கை பிடித்து கொண்டு உருக்கமாக பேசினார். இன்னொரு அதிசயம்.

வேலைக்காரர்கள், அடி மட்ட தொழிலாளர்களுடன் சரி சமமாக அமர்ந்து தம்பி பற்றி உயர்வாக பேசினார். அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்டார்.

இதுவரை அவர் இப்படி நடந்து கொண்டதேயில்லையே! ஏழைகளை திரும்பிக் கூட பார்க்க மாட்டாரே. தம்பியின் துர்மரணம் அவரை வெகுவாக மாற்றிவிட்டது போல என எல்லாரும் பேசிக் கொண்டனர்.
*****

இரண்டு நாள் கழித்து, வரதன் பெரியப்பாவை தேடி தொழிற்சாலைக்கே வந்து விட்டான்.

“வா வரதா! வா!” வரவேற்றார் கந்தசாமி.

“பெரியப்பா! அப்பாவுக்கு பதிலா என்னை இப்போவே நிர்வாக டைரக்டர் ஆக்கணும்.”
“அப்படியே செய்யலாம் வரதா! அதுக்கு முன்னாடி நீ நிர்வாக நெளிவு சுளிவு தெரிஞ்சுக்கணும்.”

“வேண்டாம் பெரியப்பா! இதெல்லாம், எனக்கு நல்லாவே தெரியும். ஏதாவது குறுக்கு வழியிலே என்னை டைரக்டர் ஆக்கிடுங்க.”

“அதுக்கு வழி இல்லையப்பா. போர்டு ஒப்புக்காது. நீ ஒன்னு செய். முதல்லே மார்க்கெட்டிங் மேனேஜர் கிட்டே பயிற்சி எடுத்துக்கோ”

வேண்டா வெறுப்பாக வரதன் அங்கே இருந்து நகன்றான். இருக்கட்டும், கான்சர் நோயாளி பெரியப்பாக்கு மிஞ்சி போனால், மூணு மாசம். அவருக்கு பின் கம்பனி என் கையில். பத்தே வருஷத்தில், பத்து மடங்கு பெரியதாக்கி காட்டுகிறேன்.

****

பத்து நாள் கழித்து.

கந்தசாமியை பரிசோதித்த டாக்டருக்கு ஆச்சரியம்.

“கந்தசாமி சார், எதுக்கும் இன்னொரு தடவை ஸ்கேன் பண்ணிடலாமா?”

“என்ன டாக்டர், என்ன விஷயம்?”
“ஒண்ணுமில்லே, அதிசயமாயிருக்கு! ம்! இந்த ரிப்போர்ட் பிரகாரம், உங்க புற்றுநோயின் தாக்கம் கொஞ்சம் குறைஞ்சிருக்கு. ரெமிஷன். எப்படி? அதான் புரியலே? இது ஒரு மிரகல்”

“தெரியலே டாக்டர்! இப்போவெல்லாம் எனக்கு சிகரெட்டு, மது கண்டாலே குமட்டுது. அந்த சனியங்களை விட்டே பத்து நாளாச்சு.”

“ஆச்சரியமாயிருக்கு! எதுக்கும் ஒரு மாசம் கழிச்சி பாப்போம்.”

“ரொம்ப சந்தோஷம் டாக்டர்! எனக்கும் ஏகப்பட்ட வேலை இருக்கு”.

வெளியே வந்தார். டிரைவர் கதவை திறந்தான். “என்ன மணி! எப்படி இருக்கே? உன் சம்சாரம் ஊரிலிருந்து வந்துட்டாங்களா?”

“வந்துட்டாங்கய்யா!”. மணிக்கு ஆச்சரியம். நம்ம எசமானா இது?நம்பவே முடியலியே?இவ்வளவு பிரியமா பேசறாரே?

****
அடுத்த நாள்.

கந்தசாமி போர்டு மெம்பர்களை கூப்பிட்டார்.

“நம்ப பாக்டரி கழிவு விஷயமா கோர்ட் ஆர்டர் 200 கோடி இழப்பீடு கொடுக்க வேண்டி வந்திருக்கில்லே?”

“அது , நாம்ப மேல் முறையீடு பண்ண போறோம் சார்.”

“வேண்டாம். இழப்பீடு கொடுத்திடுங்க. பாவம், ஏழைகள், அவங்க மருத்துவத்துக்கு தேவை.”
அனைவருக்கும் ஆச்சரியம். கந்தசாமியா இது? என்னாச்சு இவருக்கு?

“அப்புறம், நம்ப தொழிலாளர் எல்லோருக்கும், சம்பளத்தை 30% இந்த மாசத்திலேருந்து உசத்துங்க.”

என்னையா இது, சிக்ஸர் சிக்ஸரா அடிக்கிறார்?

“அப்புறம், நமக்கு நிறைய லாபம் வருதில்லே! அதிலேருந்து தொழிற்சாலை கழிவு சுத்தம் பண்ண இயந்திரம் வாங்குங்க”

“அப்போ நம்ப லாபம்? பங்குதாரருக்கு என்ன பதில் சொல்றது?”- நிதி டைரக்டர்.
“கவலையே படாதிங்க! நிச்சயம் லாபம் பண்ணலாம். நியாயமா பண்ணலாம். அதுக்கு நான் உத்திரவாதம்”

****
இரண்டு மாதம் கழித்து:

“நாந்தான் கந்த சாமி பேசறேன்”
“நான் உங்க டாக்டர் பேசறேன். ஒரு சந்தோஷமான் செய்தி. உங்களுக்கு புற்றுநோய் நல்லாவே ரெமிஷன் ஆயிடுச்சி. இன்னும் ஒரு வருஷத்தில் பூரண குனமாயிடுவீங்க. கவலையே பட வேண்டாம். ஆரோக்கியமா இருப்பீங்க”

“ரொம்ப தாங்க்ஸ் டாக்டர். எல்லாம் உங்க திறமை”

கொஞ்ச நேரத்தில், கந்தசாமியை தேடி வக்கீல்.

“வக்கீல் சார், எனது சொத்தில் ஒரு 50 கோடி அனாதை இல்ல டிரஸ்ட்காக ஒதுக்குங்க. இன்னொரு 50 கோடி முதியோர் வாழ்வு டிரஸ்ட்காக. நம்ப தொழிலாளர் குடும்ப டிரஸ்ட், பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி, கல்லூரி இதுக்காக மீதி சொத்தை எனது உயிலா எழுதிடுங்க.”

“அப்படியே ஆகட்டும்”.

****
வரதன் வீட்டில்:

“என்னது! என்னம்மா சொல்றே? பெரியப்பா சொத்தில் எனக்கு எதுவும் வைக்கவில்லையா? இதோ நேரே போறேன் அவர்கிட்டே. நாக்கை பிடுங்கிக்கராமாதிரி கேக்கிறேன்”

வரதனின் அம்மா “வரதா! சொல்றதை கேளு. நமக்கு எதுக்கு இன்னும் சொத்து? உங்கப்பா விட்டுட்டு போனதே போறுமே! சும்மா பெரியப்பா மனசை நோகடிக்காதே!”

“சும்மா இரும்மா! உனக்கு ஒன்றும் தெரியாது!”

வரதன் வேகமாக மாடியிலிருந்து , படிக்கட்டில் இறங்கினான். கண்மூடித்தனமான கோபம். ஆத்திரம். கால் தடுக்கியது. இடறி விழுந்தான். உருண்டான். கழுத்து மளுக்கென்றது. ஆவி பிரிந்தது. காலாவதியானான். எமதர்மன் வரதன் உடலிலிருந்து , உயிரை எடுத்துக் கொண்டான்.

யம கிரந்தப் படி, கந்தசாமியின் உயிர் பிரிய வேண்டிய நாள் அன்றுதான்.

****

யமலோகம் :

கந்தசாமி ஆத்மா, யமன எதிரில். அது யமனை கேட்டது “இது நியாயமா தர்மா? நீ உன் சொல்படி நடக்கவில்லையே?”

யமன் “கந்தசாமி, நீ என்ன நினைத்தாய்? சின்ன வயது உடலுக்குள் போனால், இன்னும் 50 ஆண்டுகள் இருக்கலாமென்று. ஆனால், உடலில் உயிர் இருப்பதற்கும், வயதிற்கும் சம்பந்தம் இருக்க வேண்டிய அவசியமில்லையே! கணக்குப்படி, உனக்கு ஆயுள் இன்று முடிந்து விட்டது. வரதனுக்கு இன்னும் 20 வருடமிருக்கிறது. உன் உடம்பில் அவன் ஆரோக்கியமாக இருப்பான். இதுதான் விதி. மாற்ற யாராலும் முடியாது. என்னாலும், எந்நாளும். என்ன புரிந்ததா?”

Print Friendly, PDF & Email

1 thought on “யமனின் கணக்கு – ஒரு புரியாத புதிர்

  1. கதையெல்லாம் நல்லாத்தான் இருக்கு , ஆனா கொலை சொஞ்ச எமனுக்கு ரொம்ப பிடிக்கும்போலிருக்கு .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *