Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மோர்…மோரே…

 

“”பஸ்ஸூ ஒரு பத்து நிமிசம் நிக்கும்…”

“”டீ, காபி சாப்புடறவங்க சாப்டுட்டு வரலாம்”

நடத்துநரின் உரத்த குரலில் சில வார்த்தைகள் மட்டுமே உறக்கத்திலிருந்த என் செவிகளுக்குள் நுழைந்து கிசுகிசுத்தன. பயணத்தின் களைப்பில் லேசாய் நினைவு வர விழித்தேன்.

மோர்...மோரேமூக்கின் நுனிவரையில் வந்து, கீழே விழுந்து தற்கொலைக்கு முயன்றிருந்த மூக்குக் கண்ணாடியைச் சுட்டு விரலால் மேலே உயர்த்திக் கண்ணுக்கு நெருக்கமாகப் பொருத்தினேன். சன்னல் ஓரத்து காற்று கலைத்துப் போட்டிருந்த என் முடியை விரலைச் சீப்பாக்கி இடதும் வலதுமாய் சீவினேன். காண்டாமிருகத்தின் தோலைப் போல போர்த்தியிருந்த பனியனை என் உடலிலிருந்து உரித்தேன். இடது சட்டைப் பையில் இருந்த அலைபேசியை எடுத்து ஏதேனும் அழைப்பு வந்திருக்கிறதா என்பதை உறுதி செய்துகொண்டேன். அடிவயிற்றுப் பகுதி முட்டிக்கொண்டு வரவே இயற்கை அழைப்பிற்கு இசைவு தெரிவித்தவனாய்ப் பேருந்திலிருந்து இறங்கினேன்.

ராணுவ வீரர்களைப் போல வரிசையாகவும் ஒழுங்காகவும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளை நோட்டமிட்டவனாய் நகர்ந்தேன். கடைகளை மதில்களாகக் கொண்ட பெரிய மைதானமாய் அந்த பேருந்து நிலையம் காட்சியளித்தது. பேருந்துகள் வருகிற நேரங்களில் மட்டுமே வர்த்தகம் அங்கு சூடு பிடிக்கும். மற்ற நேரங்களில் ஈ ஆடிக் கொண்டிருக்கும்.

பெருத்த ஆரவாரங்கள் இல்லையாயினும் வியாபாரம் இயல்பாகவே நடந்து கொண்டிருந்ததை கடைகளின் முன் வாசலை அடைத்து நின்று கொண்டே, பொருள்களை வாங்கித் தின்று, குடித்து, செரித்துக் கொண்டிருக்கும் கூட்டம் சொல்லாமல் சொல்கிறது.

“”நன்னாரி சர்பத்…நன்னாரி நன்னாரி…”

“”குண்டு மல்லிகை…முழம் பத்து ரூவா…”

“”பர்ப்பி பர்ப்பி இஞ்சி பர்ப்பி தேங்கா பர்ப்பி”

“”ஆரஞ்சு ஆரஞ்சு நாட்டுப்பழம் நாட்டுப்

பழம்”

என பேருந்துகளின் சன்னல்களில் யாராவது வாங்க மாட்டார்களா என்று ஏக்கத்தோடு எட்டியெட்டிப் பார்த்தபடி, அந்த கிராமத்து மனிதர்கள் நம்பிக்கையோடும் விற்பனைக்குரிய பொருள்களைக் கைகளில் நீண்ட நேரம் ஏந்திக் கொண்டும் வலிகளை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் எல்லா பக்கமும் நகர்ந்த வண்ணமாக இருந்தார்கள். ஒருவர் இருவரைத் தவிர யாரும் அவற்றை சீண்டவே இல்லை.

நகரும் அந்த மனித அங்காடிகளை சட்டை செய்யாமல், அசையாத நிலை அங்காடிகளை நோக்கி விரைந்து மொய்த்துக் கொண்டிருந்தார்கள்.

“”ஹலோ…ஒரு ஃபேண்டா கொடுங்க…”

“”சார்…பெப்ஸி டின் இருக்கா?”

“”ஜில்லுன்னு மாஸô ஒண்ணு கொடுங்க”

“”கோலா…ரெண்டு லிட்டர் பாட்டில் இருக்கா?”

கேட்கிறார்கள்; பெறுகிறார்கள்; வருகிறார்கள். பேருந்து கிளம்புவதற்கு இன்னும் ஐந்து நிமிடம் இருந்தது. இந்த கசப்பான காட்சிகளை மேலும் பார்க்கச் சகிக்காத நான், பேருந்துக்குள் வந்து அமர்ந்துகொண்டேன். இடதுபுற சன்னலுக்குள் நுழைந்த மாலை நேரத்து நெருப்பு வெயில் என்னை வருத்தத் தொடங்கியது. புழுக்கம் தாங்காமல் என் உடுகளைக் குவித்து, பெருமூச்சால் எனக்கு நானே விசிறிக்கொண்டேன். சட்டைக் காலரை என் இரண்டு கைகளால் கொஞ்சம் தூக்கிவிட்டபடி பறவை பறப்பதைப் போல சிறகடிக்கச் செய்தேன்.

சிறுநீர்க் கழித்தவர்கள், நொறுக்குத் தீனி தின்றவர்கள், உணவருந்தி முடித்தவர்கள், இளைப்பாறிக் கொண்டவர்கள் என்று ஒவ்வொருவராகக் கிளம்பவிருந்த பேருந்தை நோக்கிப் படையெடுத்தார்கள்.

மை பூசியதைப் போல கருத்த மெலிந்த தேகம், பழைய அழுக்குப் படிந்த பருத்திச் சேலை, ஒடுங்கிய கன்னம், செருப்பில்லாத நரம்பு புடைத்து சூம்பிய கால்கள், நெற்றியில் அழிந்தும் அழியாமலும் இருந்த திருநீறு, கலைந்த பரட்டைத் தலையில் சும்மாடு, அதன் மேலே குடத்தின் வடிவத்தில் ஓர் அலுமினியப் பாத்திரம் மூடியுடன் இருந்தது. அதன் மீது அலுமினிய டம்ளர் மற்றும் ஒரு லோட்டா. எழுபது வயதைத் தாண்டிய ஒரு மூதாட்டி பேருந்தை நெருங்கினாள்.

இடதுபுற சன்னலோரமாக அமர்ந்திருந்த எனது இருக்கைக்கும் கீழே நின்றுகொண்ட அவர் தன் தலைச்சுமையைக் கீழே இறக்கி வைத்தாள்.

“”மோர்…மோரே! மோர்…மோரே” என்று கூவிக்கொண்டே அலுமினியப் பாத்திரத்திற்குள் லோட்டாவை விட்டு ஒரு லோட்டா மோரை அள்ளி வலது கையை உயரே வைத்துக் கொண்டு டீ ஆற்றுவதைப் போல மீண்டும் அந்த பாத்திரத்திற்குள் திருப்பி ஊற்றினாள். மோரும் நீரும் கலந்த கறிவேப்பிலை, மல்லித்தழை, இஞ்சி கீற்று போன்றவை மேல் சுழற்சியில் வட்டமடித்தன.

ஒரு லோட்டாவில் வழிய வழிய நிரப்பிக் கொண்டு, “”கண்ணு…மோர் சாப்புடு கண்ணு… லோட்டா அஞ்சு ரூவாதான்… வீட்லெ வளக்குற கறவை பால்லெ செஞ்ச மோரு” என்று கேட்டபடியே ஒவ்வொரு ஜன்னலாக பயணிகளின் கை எட்டும் உயரத்திற்கு பிடித்துக்கொண்டு அங்குமிங்கும் நடக்கிறாள்.

“”மோர்…மோர்…மோரே…எஎஎ” என்ற அசட்டுத்தனமான அந்த வயதான கிராமத்து தேவதையின் குரல் பேருந்து நிறுத்தம் முழுக்க கேட்டுக்கொண்டே இருந்தது. வட்டமடித்து மீண்டும் நான் அமர்ந்திருந்த ஜன்னலருகில் வந்து நின்றாள்.

“”கண்ணு வாங்கி சாப்பிடு கண்ணு… நல்லா ஜில்லுன்னு இருக்கு… வீடுபோயி சேர்ர வரைக்கும் தாகமே எடுக்காது… வயித்துப் புண்ணுக்கு ரொம்ப நல்லது… நல்லா இல்லாட்டிநீ காசு தர வேணாம்” என்று சொல்லி முடிப்பதற்குள் பத்து ரூபாயை எடுத்து நீட்டினேன்.

“”முதல்ல குடி கண்ணு…அப்புறம் காசு வாங்கிக்கிறேன்” என்று பதிலளித்தபடியே கம்பிகளுக்குள்ளே நுழைத்த லோட்டா மோரை ரசித்து ருசித்து பருகினேன். ஒரே மூச்சில் பருகியதால் கொஞ்சம் மூச்சு வாங்கி பின் இளைப்பாறிக் கொண்டேன்.

பத்து ரூபாய்த் தாளை மகிழ்ச்சியோடு நீட்டியபோது பேருந்து கிளம்பத் தொடங்கிவிட்டது. மூதாட்டிக்கும் எனக்குமான இடைவெளியை நகரப் பேருந்து நீட்டித்துக் கொள்ள சன்னல் வழியாக கழுத்தை நுழைத்து பின் பக்கமாக திரும்பிப் பார்த்து மூதாட்டியை அழைத்தேன்.

“”கண்ணு நாளைக்கு வாங்கிக்கறேன்…நீங்க போங்க பஸ்ஸþ கிளம்பிடுச்சு” என்று என்னிடம் காசு வாங்காமலேயே வழியனுப்பி வைத்தாள்.

“”நாளைக்கு நான் வரமாட்டேன் பாட்டியம்மா…இதோ வாங்கிங்கோங்க…”

என்று ஒரு பொய்யைச் சொல்லி பத்து ரூபாய்த் தாளை மூதாட்டி பார்க்கும்படியாக கீழே போட்டேன். அந்தத் தாள் காற்றில் பறந்து அவளருகில் போய்ச் சேர்ந்தது. அதை கைகளில் எடுத்துக்கொண்டே அந்த மூதாட்டி ஐந்து ருபாய் நாணயத்தை எடுத்துக் கொண்டு பேருந்துக்கு பின்னால் ஓடி வருகிறாள்.

“”கண்ணு இந்தாங்க அஞ்சு ரூபா…ஏங்க பஸ்ஸþ கொஞ்சம் நிறுத்தச் சொல்லுங்க”

இப்படியாய் திரும்பத் திரும்ப சொன்னபடியே பேருந்துக்கு பின்னால் ஓர் அலைபறக்க பின் தொடர்கிறாள். காசைச் சேர்க்க முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியோடு ஓடிவரும் அவளின் பின்தொடரல் நிற்கவில்லை என்பதைக் கவனித்தவனாய் வரும் என்னையும் அந்த மூதாட்டியையும் ஒரு திருப்பம் பிரித்துப்

போடுகிறது. பலநாட்களாகியும் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

“”மோர்…மோரே…மோர்…மோரே”

- போ.மணிவண்ணன் (ஆகஸ்ட் 2012) 

தொடர்புடைய சிறுகதைகள்
ஒன்பது, எட்டு, எட்டு…
சற்றே அசைத்தாலும் கீழே விழுந்துவிடும் போல் இருந்தது படலை. அதனைச் சரிபடுத்திய தேவி சாலைக்கு வந்த போது எண்ணெய் தீர்ந்துப் போன தீபம் போல அந்தப் பகல் பொழுது மேகங்கள் சூழ்ந்ததால் இருண்டிருந்தது. அவள் வீட்டு வேலைக்காக இந்த ஊருக்கு வந்து ...
மேலும் கதையை படிக்க...
ஒரு முறை அவர் என் அலுவலகத்துக்கு வந்திருந்தார். நான் எழுந்து அவரை வரவேற்றேன். அவர் தம் ஷூக்களைக் கழற்றியபடியே என்னைப் பார்த்து மெல்ல புன்னகைத்தார். நான் பதிலுக்கு ஒரு மரியாதை கலந்த புன்னகையை அவர் பால் வீசியபடி என் அன்பை வார்த்தைகளால் விவரித்து ...
மேலும் கதையை படிக்க...
காலை நேரப்பரபரப்பு, தொலைக்காட்சியில் வணக்கம் தமிழகம் பேசிக் கொண்டிருக்க, அடுக்களையில் குக்கர் தன்னை நினைவுபடுத்த விசில் அடித்தது. சீதா, உனக்குக் காலேஜுக்கு சாப்பாடு எடுத்து வச்சுருக்கேன் பாரு, டிபன் பாக்ஸை எடுத்து வச்சுக்கோ, புது காலேஜ் அங்கே கேண்டின் இருக்கோ என்னமோ, நான் ...
மேலும் கதையை படிக்க...
'ஸேர் வரச் சொல்லியிருந்தீங்களா?' கையெழுத்துக்காக வந்திருந்த பைல்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த நான் நிமிர்ந்தபோது அலுவலகக் கதவை நீக்கியபடி உள்ளே நுழைந்தான் மக்பூல். என்னுடைய கோணேசர்பூமி வலயத்திற்குட்பட்ட புறநகர்ப் பாடசாலைகளில் ஒன்றான இலுப்பஞ்சோலை முஸ்லீம் மகாவித்தியாலயத்தின் அதிபர் அவன். ஓர் ஆசிரியராக இருந்த காலத்தில் ...
மேலும் கதையை படிக்க...
“என்னாப்பா இரகசியம் ஒன் முகம் எப்பவும் சந்தோஷமா மலர்ச்சியா இருக்கு”என்று கேட்பவர்களுக்கு மத்தியில்….. வயிற்றரிச்சல்காரர்கள் சிலர் ஒனக்கு பிரச்னையே இல்லியா எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கீயே” என இரகுராமனிடம் கேட்பவர்களும் உண்டு. அதற்கும் பதில்... அதே புன்னகைதான். அந்த தொழில் நிறுவனத்தில் தொழிலாளியாக இருக்கும் ...
மேலும் கதையை படிக்க...
ஒன்பது, எட்டு, எட்டு…
(அ) சாதாரணன்
ஒரு கல்லூரியின் கதை
ஒரு கதையின் கதை
மகிழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)