மேயர் தேர்தல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 1, 2014
பார்வையிட்டோர்: 7,056 
 

அந்த நகரத்தில் மேயர் தேர்தலில் இரண்டு முக்கிய கட்சிகள் நேரிடையாக மோதல்! எங்கும் ஒரே பரபரப்பு! கொடிகட்டிய வேன்களும் கார்களும் சந்து பொந்தெல்லாம் ஸ்பீக்கர் கட்டிக் கொண்டு நுழைந்து ஆரவாரம் செய்தன.

அரவிந்தன் மாநிலத்திலேயே மிகச் சிறந்த பேச்சாளன். ஒரு நல்ல எழுத்தாளன். சிந்தனைச் சிற்பி. ஒரு கட்சி சார்பாக அந்த நகரத்தில் இரண்டு நாட்கள் வாக்கு சேகரிக்க வருகை தந்திருந்தான்.

உள்ளூரைச் சேர்ந்த சில முக்கியத் தொண்டர்களோடு, காரில் முக்கிய வீதிகளில் தெரு முனை பிரச்சாரம் செய்து கொண்டு வந்தான்.

கோடீஸ்வர தொழிலதிபர்கள் வாழும் ஒரு நகர் வந்தது. அங்கு தெருமுனைப் பிரச்சாரம் வேண்டாம் என்று காரை வேறு இடத்திற்கு விடச் சொல்லி விட்டான்.

குடிசைகள் நி்றைந்த குப்பங்கள், தொழிலாளர்கள் நிறைந்த பகுதிகளை தேர்ந் தெடுத்துப் பிரச்சாரம் செய்தான்.

இன்னொரு எழில் மிக்க சிறு நகர் வந்தது. அரவிந்தன் தொண்டர்களை விசாரித்தான்.

அங்கு பல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். ,டாக்டர்கள், லாயர்கள், உயர் அதிகாரிகள் வசிக்கும் காலனி என்றார்கள்.

“இங்கு எந்தப் பிரச்சாரமும் வேண்டாம்! காரை வேறு பகுதிக்கு விடுங்கள்!..” என்று சொல்லி விட்டான்.

கார் டாஸ் மாக் கடைகள், தொழிற் சங்கக் கொடிகள் நிறைய பறக்கும் பகுதி, சினிமா ரசிகர்கள் மன்றம் நிறைந்த பகுதிகளாகப் பார்த்து காரை நிறுத்தி தெரு முனைப் பிரச்சாரம் செய்தான்.

பிரச்சாரம் முடிந்து அரவிந்தன் கட்சி அலுவலத்திற்கு திரும்பினான். அங்கு மேயர் வேட்பாளர் அவனுக்காக காத்திருந்தார்.

“ ஏன் சார்!…நீங்க தொழில் அதிபர்கள், டாக்டர்கள், லாயர்கள், உயர் அதிகாரிகள் குடியிருந்த பகுதியில் எல்லாம் பேசுவதை தவிர்த்து விட்டீர்களாம்?….”

“ அந்தப் பகுதியில் எல்லாம் நம்முடைய துண்டுப் பிரசுரங்களை, நம் தொண்டர்களை விட்டு ஒவ்வொரு வீட்டு வாசல் கேட்டுகளிலும் சொருகி வைத்து விடச் சொல்லுங்கள்!..அந்தப் பிரச்சாரமே போதும்!..”

“ ஏன் சார்… அப்படி நினைக்கிறீங்க?…”

“ நம் நாட்டில் மொத்த வாக்குப் பதிவில் சுமார் 25% வாக்குகள் பதிவாவது இல்லை! டாக்டர்கள், லாயர்கள், உயர் அதிகாரிகள், பெரும் பணக்கார்கள், தொழிலதிபர்கள், நிறைய படித்த மேதைகள், அவர்கள் எல்லாம் தான் அந்த 25%

இவர்களின் மொத்தக் கூட்டுத் தொகைகளில் 20% மட்டுமே வாக்குச் சாவடி க்யூவில் நின்று வாக்கு அளிப்பவர்கள். மீதி 80% பேர்கள் க்யூவில் நிற்பதை கேவலமாக நினைப்பவர்கள். அவர்கள் எல்லோரும் சேர்ந்து ஜனநாயகக் கடமையை உணர்ந்து வாக்களிப்பதாக இருந்தால் மிக நல்ல அரசு அமைந்து நம் நாடு எப்பொழுதோ வல்லரசாக மாறி இருக்கும்! ஓட்டுச் சாவடிப் பக்கம் வராதவர்களுக்காக நாம் ஏன் நேரத்தை வீண் செய்ய வேண்டும்?…” என்றான் அரவிந்தன்.

மேயர் வேட்பாளரால் எதுவும் சொல்ல முடியவில்லை!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *