மேகக் கணிமை

 

இந்தியாவிலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய சில கணினி விற்பன்னர்களில் டாக்டர் ஹர்ஷவர்த்தனும் ஒருவர். அவரைப் பற்றித் தெரியாதவர்கள் கணினி உலகில் இருக்க முடியாது. உலகின் மற்ற பிரபல கணினி நிறுவனங்கள் அவரை தன் பால் இழுக்க முயன்றாலும், டாக்டர் ஹர்ஷவர்த்தன் மிகப் பிடிவாதமாக இந்தியாவின் வளர்ச்சிக்காக மட்டும்தான் தன் பணி இருத்தல் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

அவர் தற்போது தரமான கிளவுட் கம்ப்யூட்டிங் முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்திவிடும் தீவிரமான முனைப்பில் இருக்கிறார்.

மேகக் கணிமை (தமிழில்) திறத்தினை அதிகமாக உபயோகப் படுத்தும் டெக்னாலாஜியை இந்தியப் பொதுமக்களுக்கு அறிமுகப் படுத்திவிட்டால் அது அரசுக்கு மிகப் பெரிய பொருளாதார வளத்தை ஏற்படுத்தி, பொதுமக்களுக்கும் மிக்க நன்மை பயக்கும் என்பதை விளக்கிச் சொல்லி இறுதி ஒப்புதல் பெறுவதற்காக ஜூலை 15 ம் தேதியன்று பாரதப் பிரதமருடன் அவருக்கு ஒரு சந்திப்பு இருக்கிறது. அதற்கு இன்னமும் இரண்டு மாதங்கள்தான் இருக்கின்றன.

பிரதமர் ஒப்புக் கொண்டவுடன், அதை இந்திய அரசாங்கம் ஏற்றுக் கொண்டுவிடும். அதைத் தொடர்ந்து கிளவுட் கம்ப்யூட்டிங் முறையினால் இந்தியாவில் ஒரு மிகப் பெரிய கணினி புரட்சியே உண்டாகிவிடும்.

பாரதப் பிரதமருடனான சந்திப்பை எப்படியாவது முறியடித்து விட வேண்டும். டாக்டர் ஹர்ஷவர்த்தனை கொலை செய்து விட்டால் இன்னமும் உசிதம்… அதற்காக எத்தனை கோடிகள் செலவானாலும் பரவாயில்லை என்பதில் ரமேஷ் கஷ்யப் உறுதியுடன் இருக்கிறான். அவனுக்கு பின்புலமாக சில அயல் நாட்டு கணினி நிறுவனங்களும் இயங்குகின்றன. அவைகள் கஷ்யப்பிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு காத்திருந்தன.

அது என்ன மேகக் கணிமை? அதுக்கு ஏன் டாக்டர் ஹர்ஷவர்த்தன் கொலை செய்யப்பட வேண்டும் ?

சமீப காலங்களாக கணினிகளின் ஆற்றல் முழுவதும் மேகக் கணிமையை நோக்கிப் பயணப் படுகின்றன. அடுத்த பத்து ஆண்டுகளில் மேகக் கணிமை வழியாகத்தான் அனைத்து சேவைகளையும் பல நிறுவனங்களும், பல்கலைக் கழகங்களும், மருத்துவ விடுதிகளும், தனியார்களும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிற அளவில் அது வேகமாக வளர்ந்து வருகிறது.

தனித் தனியாக வீடுகளில் கணினிகள் வைத்துக்கொண்டு, வருடத்திற்கு ஒரு முறை மாறி வரும் மென் பொருள்களை வாங்கிப்போட்டு வைரஸ் தாக்குதல்களிலிருந்து தப்பித்து பொதுமக்கள் எல்லோரும் கணினிகளைப் பயன் படுத்துவது என்பது இந்தியாவில் இயலாத காரியம். பெரும் பணச் செலவு. இதற்கு ஒரு தீர்வாக இணையத்தின் ஊடாகக் கணினிச் சேவைகளை வழங்கபோவது மேகக் கணிமைதான்.

நகராட்சி வீடுகளுக்குத் தண்ணீர் வழங்குவதும், மின்சாரத்தை கம்பெனிகள் வழங்குவதும் போன்று, கணினித் தேவைகளை வேண்டிய அளவில் பெற்றுக்கொண்டு அதற்கான விலையை ஒவ்வொரு மாதமும் கட்டி விடலாம். மேகக் கணிமைக்கு நம்மிடம் எந்த ஹார்ட்வேரும், சாப்ட்வேரும் இருக்கத் தேவையில்லை. வெறும் கணித் திரையும் அதைத் தட்டுவதற்கு ஒரு விசைப்பலகையும் மட்டுமே போதுமானது. நம் கணினிக் கணக்கில் நுழைந்தால் மேகக் கணிமையைப் பயன் படுத்தலாம். நாம் பயன் படுத்தும் அளவிற்கு ஏற்ப கட்டணம் வரும்.

தனித் தனியாக கம்ப்யூட்டர், அதன் சாப்ட்வேர், அதனை அடிக்கடி மேம்படுத்த மாற்றுதல், வைரஸ் தாக்குதல், பராமரிப்புச் செலவினங்கள் போன்றவைகள் இனிமேல் இருக்காது. மேகத்தில் எல்லாக் கணிவளங்களும் இருப்பதால், எந்த இடத்திலிருந்தும் நம் கணக்கை உபயோகிக்கலாம். வேண்டியது ஒரு கணித்திரை மட்டுமே.

அதனால்தான் டாலர் கணக்கில் பெரும் பணம் புழங்கும் சாப்ட்வேர், ஹார்டுவேர் கம்பெனிகள், வைரஸ் எடுக்கும் கம்பெனிகள் அனைத்தும் இனி தாங்கள் கல்லா கட்டமுடியாது என்பதால், மேகக் கணிமையையும், அதைப் பிரபலப் படுத்தப் பாடுபடும் டாக்டர் ஹர்ஷவர்த்தனையும் பார்த்துப் பயப்படுகின்றன.

டாக்டர் ஹர்ஷவர்த்தனின் வாழ்வியல் ரொம்ப ஹைடெக் என்பதால் அவரை அத்தனை எளிதாகக் கொன்று விட முடியாது என்பது ரமேஷ் கஷ்யப்புக்கு நன்கு புரிந்திருந்தது. ஏனெனில் சென்னை பாலவாக்கத்தில் அவர் குடியிருப்பது வீட்டில் அல்ல. டெக்னாலஜியில்… துப்பாக்கி ஏந்திய காவலர்களைத் தவிர, வீட்டு வாசலின் நுழைவில் ஆரம்பித்து எல்லா அறைகளிலும் தானியங்கி காமிரா, மெட்டல் டிடெக்டர், காரை எவராவது தொட்டால் ஸ்மார்ட் போனில் அலாரம் என்று மிகுந்த கவனத்துடன் தன்னைப் பாதுகாத்துக் கொள்பவர்.

டாக்டர் ஹர்ஷவர்த்தனுக்கு வயது முப்பத்தைந்து. இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை. யாரவது அவரது திருமணத்தைப் பற்றிக் கேட்டால் கணினிதான் தன் மனைவி என்பார். தமிழில் ஆர்வமுள்ளவர். நல்ல கதைகளைத் தேடி தேடிப் படிப்பார். தன் தம்பி குமாரசாமியுடன் வசித்து வருகிறார். குமாரசாமிக்கு படிப்பு ஏறவில்லை என்பதால் நல்ல வேலையும் கிடைக்கவில்லை. எனவே டாக்டர் ஹர்ஷவர்த்தன் தனக்கு உதவியாக அவனைத் தன்னுடனேயே வீட்டில் வைத்துக் கொண்டார். ‘தம்பியுடையான் படைக்கு அஞ்சான்’ என்று அவனிடமே சொல்லிச் சிரிப்பார்.

அன்று அவரது சிறந்த நண்பர் நரசிம்மன் டாக்டரைப் பார்ப்பதற்கு வீட்டிற்கு வந்திருந்தார்.

அலுவலக அறையில் துப்பாக்கி ஏந்திய ரோபோ அமைப்பில் இருந்த இரண்டு பொம்மைகளைப் பார்த்து, “ஏய் ஹர்ஷா இந்த பொம்மை நல்லா இருக்குடா..” என்றார்.

“அவைகள் பொம்மை இல்லை, என்னைப் பாதுகாக்கும் ப்ரோக்ராம்டு ரோபோ வீரர்கள்.”

“ஹர்ஷ் வேற என்ன புதுசா கண்டு பிடிச்ச? எனக்கு இப்ப சும்மா ஆசைக்கு ஒரு ஈ மெயில் இன்பாக்ஸில் புகுந்து ரகசியமா பாக்கணும்”

“அது தப்புடா…என்னப் பத்தி உனக்குத் தெரியும்..”

“இது சும்மா ஒரு த்ரில் அவ்வளவுதான்… ப்ளீஸ்.”

“சரி யாரோட இன்பாக்ஸ்?”

சிறுகதைகளுக்கான ஒரு இணைய தளம்.. நியூஜெர்சிலர்ந்து வருது. அதோட இன்பாக்ஸ். பாக்கணும் அவ்வளவுதான்டா…”

“ஏன் உன் கதைய அவங்க போடலியா?”

“அப்படி இல்ல.. அதுல இதுவரை ரெண்டு கதைகள் ஏத்திட்டேன்.”

“சரி சொல்லித் தொலை.”

“இன்பாக்ஸ் பேரு சப்போர்ட் அட் சிறுகதைகள் டாட் காம். சிறுகதைகளுக்கான அந்த இணைய தளத்துல கிட்டத்தட்ட 7000 கதைகள் படிக்கலாம். காதல், குடும்பம், சமூகநீதி, க்ரைம் இப்படி வகை வகையா கதைகளை பிரிச்சு சேமிச்சு வைக்கிற அழகும், கதாசிரியர்கள் பற்றிய குறிப்பும் தந்து ரொம்ப ஆர்கனைஸ்டா இருப்பாங்க. ரொம்ப நல்ல இணைய தளம். மற்ற நாட்டிலிருந்தும் நிறைய பேர் எழுதுவாங்க… சின்ன சின்ன குறைகளைத் தவிர…”

“அது என்ன குறை? அந்த ரெண்டு கதைக்கப்புறம் உன் எல்லா கதைகளையும் ரிஜெக்ட் பண்ணிட்டாங்களா?” கிண்டலாக சிரித்தார்.

“சேச்சே… அது அவங்க உரிமை…சென்ற மாத டாப் டென்னு போடுவாங்க…ஆனா ஒரு வருஷமா அதே கதைகளை அதுல வச்சிருப்பாங்க..அப்புறம் வாசகர்களின் விருப்பம்பாங்க ஆனா அதை எப்படி தேர்வு செய்றாங்கன்னு ஒரு டிரான்ஸ்பிரன்ஸி இருக்காது. இது மாதிரி சின்ன விஷயங்கள்தான்..”

“சரி சரி இப்ப அவங்க இன்பாக்சுக்கு போகலாம் வா …”

டாக்டர் சில கமாண்ட்களை கம்ப்யூட்டரில் தட்ட அடுத்த நொடியில் சிறுகதைகள்.காம் இன்பாக்ஸ் தெரிந்தது. அதில் நிர்மலா ராகவன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியன், கவிஜி, ச.தாமோதரன், அனிதா சரவணன், லதா ரகுநாதன் அனுப்பியிருந்த கதைகளைத் தவிர ஏகப்பட்ட கதைகள் குவிந்திருந்தன. நரசிம்மன் அதிர்ந்தார்.

“எப்படிடா இது உனக்கு சாத்தியம்?”

“இது ஒரு பெரிய விஷயமே கிடையாது…” இன்பாக்ஸை மூடினார்.

ரமேஷ் கஷ்யப் மிகவும் யோசித்து, டாக்டர் ஹர்ஷவர்த்தனை தீர்த்துக் கட்ட ஒரேவழி அவரது தம்பி குமாரசாமியை உபயோகப் படுத்துவதுதான் என்று முடிவு செய்தான்.

குமாரசாமியுடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டான். அடிக்கடி அவனுடன் தொடர்பில் இருந்தான். ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் விருந்து கொடுத்து நன்றாக குடிக்க வைத்தான். அழகிய பெண்களை அறிமுகம் செய்து அவர்களின் உடல் மென்மையைப் புரிய வைத்தான்.

குமாரசாமி ஒரு கட்டத்தில் ரமேஷ் கஷ்யப்பின் உபசரிப்பில் மயங்கி அவன் என்ன சொன்னாலும் கேட்கும் நிலைக்குத் தள்ளப் பட்டான்.

“குமார் எனக்கு நீ ஒரு பெரிய உதவி செய்யணும், செய்வியா?”

“சொல்லு ரமேசு… உனக்காக என் உயிரையே கொடுப்பேன்.”

“நீ உயிர விட வேண்டாம்… உயிர எடுத்தாப் போதும்.”

“கொலையா…? எனக்கு பயமா இருக்கு ரமேஷ்…”

“இத பாரு குமார் உன்னால ஈஸியா செய்ய முடியும்.. இத நீ செஞ்சிட்டேன்னா மொத்தம் எட்டு கோடி உனக்கு கிடைக்கும்..முதல் தவணையா நாளைக்கு ரெண்டு கோடி அட்வான்ஸ் தரேன்..”

“………”

“இத பாரு குமார் இந்தக் கொலைய செஞ்சிட்டு எட்டு கோடில நீ புரளலாம்… உலகம் சுற்றி வந்து ஆசைப்பட்ட பெண்களை தொட்டுப் பார்த்து ரசனையுடன் அனுபவிக்கலாம்.. நீ நம் நட்புக்காக இந்தக் கொலையை செய்யணும்.”

‘யாரை?”

“உன்னோட அண்ணன் டாக்டர் ஹர்ஷவர்த்தனை…”

மறுநாள் ரமேஷ் அவனை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று அந்த உயர் ரக சைலன்சர் துப்பாக்கியை எப்படி இயக்குவது என்று விளக்கிச் சொல்லி புரிய வைத்தான். அடுத்த நாள் டாக்டர் ஹர்ஷவர்த்தனை அதே துப்பாக்கியால் கொலை செய்ய முடிவு செய்யப்பட்டது. .

குமாரசாமிக்கு அன்று மாலை ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பெரிய விருந்தும் அதைத் தொடர்ந்து அழகிய பெண்களின் அருகாமையும் கிடைத்தது. முன் பணமாக இரண்டு கோடி கை மாறியது.

அதே இரவு டாக்டர் ஹர்ஷவர்த்தன் தூங்கிக் கொண்டிருந்தபோது குமாரசாமி மெட்டல் டிடெக்டர்கள், தானியங்கி கேமிராக்கள் அனைத்தையும் நிறுத்திவிட்டு அடுத்த தெருவில் காரினுள் காத்திருந்த ரமேஷ் கஷ்யப்பிடம் சென்று துபபாக்கியை வாங்கி வீட்டினுள் ஒளித்து வைத்துக் கொண்டான்.

மறுநாள்… டாக்டர் ஹர்ஷவர்த்தன் கொலை செய்யப்பட வேண்டிய தினம்.

காலை பத்து மணிக்கு அவரது அலுவலக அறையில் அவரை சுட்டுக் கொல்வதாக ஏற்பாடு. எட்டரை மணிக்கு குமாரசாமி அவருடன் காலை உணவு எடுத்துக் கொண்டான். நடக்கப்போகும் விபரீதங்கள் ஏதுமறியாமல் டாக்டர் தன் தம்பியிடம் சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்.

ஒன்பதரை மணிக்கு தன் அலுவலக அறைக்குச் சென்று லாப்டாப்புக்கு உயிரூட்டி தனக்கு வந்த மெயில்களை மேய்ந்து கொண்டிருந்தார்.

9.58…

குமாரசாமி அவரது அலுவலக அறைக்குள் வந்தான். டாக்டர் அவனைக் கவனிக்காது மெயிலில் மூழ்கியிருந்தார்.

“என்னை மன்னிச்சிடு ஹர்ஷா..” குரல் கேட்டு டாக்டர் நிமிர, தன்னை நோக்கி கையில் பள பளக்கும் துப்பாக்கியை நீட்டியபடி குரூரப் புன்னகையுடன் நின்றிருந்த தம்பியைப் பார்த்து மிகுந்த பதட்டத்துடன், “குமார், துப்பாக்கிய உடனே உள்ள…”

கிஷ்யோங் கிஷ்யோங் என்று புல்லட்கள் தொடர்ந்து பாய, உடல் சல்லடையாகி ரத்த வெள்ளத்தில் கிழே சரிந்தான் குமாரசாமி.

அங்கிருந்த ரோபோக்களின் துப்பாக்கிகளிலிருந்து வெண்மையாக புகை வெளியேறியது.

ஜூலை 15ம் தேதி தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரத்தில் டாக்டர் ஹர்ஷவர்த்தன் மேகக் கணிமை பற்றி பாரதப் பிரதமரிடம் நேரில் விளக்கினார். 

தொடர்புடைய சிறுகதைகள்
என் பெயர் சேஷாத்ரி. எனக்கு கடந்த பத்து நாட்களாக மனசே சரியில்லை. காரணம், நான் மிகவும் எதிர்பார்த்திருந்த ஜெனரல் மானேஜர் ப்ரமோஷன் எனக்கு கிடைக்கவில்லை. இனி எப்போதும் கிடைக்கப் போவதுமில்லை. கடந்த இருபது வருடங்களாக ஆக்ஸி நிறுவனத்திற்கு நேர்மையாக நான் உழைத்ததிற்கு இதுதான் ...
மேலும் கதையை படிக்க...
அவர் பிறப்பால் ஒரு பிராமணர். நல்ல செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவர். வேதங்களைக் கரைத்துக் குடித்தவர். உபநிஷம் படித்து அதிகம் அறிந்தவர். இதிகாசங்கள் மற்றும் புராணங்கள் அத்துப்படி. ஏகப்பட்ட பணம் கையில் சேர்த்து வைத்திருந்தார். இவ்வளவு சிறப்பு அம்சங்கள் உடைய அவருக்கு ஒரு பெரிய ...
மேலும் கதையை படிக்க...
மீனலோச்சனிக்கு இருபத்திநான்கு வயது. கல்யாணம் ஆனவுடன் கணவனுடன் மேட்டூர்டாம் மால்கோ காலனி குடியிருப்பில் தனிக் குடித்தனம் வந்துவிட்டாள். புது இடம், எவரையும் தெரியாது...எப்படிக் குடித்தனம் நடத்துவது என்று தவித்துக் கொண்டிருந்தபோது அறிமுகமானவள்தான் பக்கத்துவீட்டு காயத்ரி. காயத்ரிக்கு முப்பத்தைந்து வயது இருக்கும். சிரித்தமுகத்துடன் சுறுசுறுப்பாக ...
மேலும் கதையை படிக்க...
தென்காசி அருகே அழகிய சிறிய ஊர் இலஞ்சி. இலஞ்சியிலிருந்து அந்தக் காலத்தில் ஒருமுறை சென்னைக்கு விஜயம் செய்த ராமபத்திரன், ஒரு டைம்பீஸ் வாங்கிச்சென்று அதை ஆசையாக தன் பாட்டிக்குப் பரிசளித்தார். பாட்டி அதற்குமுன் டைம்பீஸ் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. ஆரம்ப முதலே அவள் அதன்மீது ...
மேலும் கதையை படிக்க...
அடுத்தவாரம் ஞாயிற்றுக் கிழமை பெங்களூர் மல்லேஸ்வரம் ஸ்ரீ சிருங்கேரி சாரதா மடத்தில் சரஸ்வதியுடன் எனக்கு அறுபதாம் கல்யாணம். எங்களுக்கு அறுபதாம் கல்யாணம் வேண்டாம் என்று மறுத்தாலும், அமெரிக்காவில் இருக்கும் என் ஒரேமகன் ராகுலும், மருமகள் ஜனனியும் எங்களை வற்புறுத்தி இணங்க வைத்தனர். அதனால் நான் ...
மேலும் கதையை படிக்க...
கிடைக்காத ப்ரமோஷன்
மனம்
ரசனை
அறிவும் மதமும்
மாமி போட்ட கோலம்

மேகக் கணிமை மீது ஒரு கருத்து

  1. Janani Ramnath says:

    கதையின் போகிற போக்கில் சிறுகதைகள்.காம் ஆசிரியரையு ம் வம்பிற்கு இழுத்துள்ளார் கதாசிரியர். தைரியம்தான்
    ஜனனி ராம்நாத், திருச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Sirukathaigal

FREE
VIEW