மூடுபனி கோபுரங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 8,057 
 

இரவு உணவை சற்று முன்னதாகவே முடித்து விட்டு, கையில் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு படுக்கையில் சாய்ந்தேன். ஏனோ கவனம் புத்தகத்தினுள் செல்ல மறுத்தது. ‘ச்சை!”. புத்தகத்தை மூடி தலை மாட்டில் வைத்து விட்டு ஓட்டுக் கூரையையே பார்த்தபடி படுத்திருந்தேன். எங்கோ தொலைவில் ஒரு நாய் குரைக்கும் ஓசை விட்டு விட்டுக் கேட்டுக் கொண்டேயிருந்தது.

‘அந்த வாத்தியார் சொல்வதுதான் சரியோ?…நான்தான் முட்டாள்தனமாய் வலியப் போய் “இந்தக் கிராமத்துக்கு மாற்றல் வேணும்!” னு கேட்டு…வாங்கி…மாபெரும் தப்புப் பண்ணிட்டேனோ?”

அந்தச் சிவகிரி கிராமத்துப் பள்ளிக்கு தலைமையாசிரியராக மாற்றல் பெற்று வந்த நான் அந்த ஊரைப் பற்றியும்….ஊர் மக்களைப் பற்றியும் …பள்ளியில் படிக்கும் மாணவ…மாணவியரைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் பொருட்டு நீண்ட காலம் அந்த ஊர் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் கல்யாண சுந்தரத்திடம் விசாரித்தேன். அதற்கு அவர் சொன்ன விளக்கம்தான் என்னை இந்த அளவிற்கு இடிந்து போகச் செய்திருந்தது.

‘ஊரா சார் இது?…ஹூம்….சரியான முட்டாப்பய மக்க ஊரு சார்….அந்த ஆண்டவன் இந்த ஊரு ஜனங்க தலைல மூளைய வைக்க மறந்திட்டான் போலிருக்கு சார்”

எடுத்த எடுப்பில் அவர் அப்படிச் சொன்னது எனக்கே கொஞ்சம் சங்கடமாய்த்தான் இருந்தது. ‘அட…என்ன சார் இப்படிச் சொல்லிட்டீங்க…?”

‘ஆமாம் சார்…நான் சொல்றது சத்தியமான நெஜம்…இங்க எவனுக்குமே சராசரி அறிவு கூட இல்லை சார்….அதை நான் சொல்றதை விட பேசிப் பாருங்க நீங்களே புரிஞ்சுக்குவீங்க..நீங்க ஒண்ணு கேட்டா அதை வேற மாதிரிப் புரிஞ்சுக்கிட்டு அதுக்கு வேற மாதிரி பதிலைச் சொல்லுவானுக…விளக்கம் கேட்டு தொடர்ந்து பேசினீங்கன்னு வெச்சுக்கங்க….அவ்வளவுதான் உங்களுக்கு தலையே சுத்த ஆரம்பிச்சிடும்…”

நான் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு அவரையே ஊடுருவிப் பார்க்க,

‘இவனுகளுக்கு என்ன தெரியும்கறீங்க?…காட்டிலும் மேட்டிலும் நல்லா மாடு மாதிரி வேலை செய்யத் தெரியும்….நல்லாத் திங்கத் தெரியும்….கோயில் மண்டபம்…பஞ்சாயத்துத் திண்ணைகள்ல உக்காந்து வாய் கிழிய வம்பளக்கத் தெரியும்…திருவிழா சமயங்கள்ல கூட்டமாச் சேர்ந்து குடிச்சிட்டு ஆட்டம் போடத் தெரியும்….அப்பப்ப வெட்டுக்குத்து நடத்தி ஒண்ணு ரெண்டு பேர்த்த காலி பண்ணத் தெரியும்…அவ்வளவுதான்….பச்…மத்தபடி…” உதட்டைப் பிதுக்கிக் காண்பித்தார் ஆசிரியர் கல்யாண சுந்தரம்.

ஒரு நீண்ட யோசிப்பிற்குப் பின் கேட்டேன் ‘நீங்க இந்த ஊர்ல எத்தனை வருஷமா இருக்கறீங்க?”

‘ஆச்சு…பத்து வருஷம்!…இந்தக் கிராமத்துக்கு வந்து…இந்தப் பள்ளிக்கூடத்துல வாத்தியாராச் சேர்ந்து!” அவர் பேச்சில் எக்கச்சக்க வெறுப்பு. ஏகமாய்ச் சலிப்பு.

‘இப்ப நம்ம ஸ்கூல்ல எத்தனை ஸ்டூடண்ட்ஸ்?”

‘அது…பாத்தீங்கன்னா…பதிவேட்டுல ஒரு எழுவத்தஞ்சு காட்டும்….ஆனா வகுப்புக்கு தெனமும் வந்து போறதென்னவோ ஒரு பத்தோ…பதினஞ்சோதான்”

‘அதான் ஏன்?னு கேட்கறேன்”

‘சார் குழந்தைகளை ஸ்கூல்ல சேர்த்தா ரெண்டு செட் யூனிபாரமும்…நோட்டு புத்தகங்களும் இலவசமாத் தர்றோம்…அதுக்காக வருஷ ஆரம்பத்துல குழந்தைகளை அழைச்சுக்கிட்டு வந்து ஸ்கூல்ல சேர்ப்பாங்க….அப்புறம் அவ்வளவுதான்…அதுகளை வயல் வேலைக்கோ…மாடு மேய்க்கவோ அனுப்பிடுவாங்க…சிலதுக கொஞ்ச நாளைக்கு வரும்க…அப்புறம் பாடங்க கஷ்டம்னுட்டு அதுகளும் வேலை வெட்டிக்குப் போய்டும்க”

‘பச்….நீங்கதான் சார் அதுகளைத் தக்க வைக்கணும்…எப்படின்னா…அதுகளுக்கேத்த முறைல பாடங்களைச் சொல்லிக் கொடுக்கணும்”

‘சார்..நான்தான் சொல்றேனே இந்த ஊர் ஆட்களுக்கு அறிவு மந்தம்னு…அதே மாதிரிதான் அதுகளோட குழந்தைகளும் இருக்குதுக…ஞானசூன்யங்க….எத்தனை தடவ சொல்லிக் கொடுத்தாலும் ஒரு பிட்டு கூட மண்டைல ஏறாது…..மக்குன்னா மக்குக…அப்படியொரு மக்குக….வெந்ததைத் தின்போம்….விதி வந்தாச் சாவோம்…ன்னு கெடக்குதுக சார்”

அந்த கிராமத்து மக்களையும் குழந்தைகளையும் அந்த ஆசிரியர் மகா கேவலமாய்ப் பேசியது எனக்குள் மாபெரும் ஆத்திரத்தையே மூட்டியது. தொடர்ந்து அவருடன் பேச்சு வைத்துக் கொள்ளவே பிடிக்காமல் அவ்விடத்தை விட்டு அகன்றேன்.

மறுநாள் காலை மணி பத்தரையிருக்கும் பள்ளி விடுமுறை தினமானதால் வயல் வெளிப் பக்கம் காலாற நடக்க ஆரம்பித்தேன்.

இஞ்சி படருமலை!…..ஏலம்சுக்கு காய்க்குமலை!….

மஞ்சி படருமலை!……மகத்தான சுருளிமலை!….

ஆக்கடிக்குந் தேக்குமரம்!….அலை மோதும் சொம்பைத் தண்ணி!

நீரோட நெல்விளையும்!…..நீதியுள்ள பாண்டி நாடு!…

கோரஸாய்க் கேட்ட பாட்டுச்சத்தம் என் கவனத்தை ஈர்க்க நின்று திரும்பிப் பார்த்தேன். நாற்று நடும் பெண்கள் பாடிக் கொண்டே நடவு செய்ய ‘ஆஹா….படிப்பறிவே இல்லாத இந்த ஜனங்க துளியும் அட்சரம் பிசகாம இவ்வளவு தெளிவாப் பாடுறது…பெரிய ஆச்சரியந்தான்”

யோசித்தபடியே அவர்கள் நடவு செய்யும் அந்த வயலுக்கு வந்து வரப்பில் நின்றேன்

‘ஆரது,…தம்பி…புதுசாயிருக்கு?” நடவுக்காரியொருத்தி உரத்த குரலில் வினவ,

பக்கத்திலிருந்தவள் பதில் சொன்னாள். ”அட…நம்மூரு பள்ளிக்கோடத்துக்கு புதுசா வந்திருக்கற பெரிய வாத்தியாரு…”

நடவு தொடர்ந்தது வேறொரு பாட்டுடன்,

‘அடிக்கொரு நாத்தை நடவங்கடி…அடி

ஆணவம் கெட்ட பெண்டுகளா!!

பிடிக்கொரு படி காண வேணுமடி…அடி

பிரிச்சுப் போட்டு நடவுங்கடி!!

பொழுதும் போச்சுது பெண்டுகளா…

போகணும் சீக்கிரம் புரிஞ்சுக்கடி

புளிய மரத்துக் கிளையிலதான்

புள்ள அழுவுது கேளுங்கடி”

என்னால் அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை. ‘எழுதப் படிக்கத் தெரியாத கூலிக்காரப் பொம்பளைகளே இவ்வளவு சுலபமா நெறைய பாட்டுக்களை மனப்பாடம் செஞ்சு வெச்சிருக்காங்கன்னா…இவங்களையெல்லாம் சாதாரணமா எடை போட்டுட முடியாது” அங்கிருந்து நகர்ந்தேன்.

‘என்ன புது வாத்தியாரு தம்பி!…எதுத்தாப்பல வண்டி வர்றதைக் கூட கவனிக்காம அப்படியென்ன ரோசனையாக்கும்?” வண்டியை நிறுத்தியவாறே வண்டிக்காரன் கேட்க,

சொன்னேன் என் வியப்பின் விலாசத்தை.

‘அட…இதென்ன சாமி பெரிய விஷயம்…நம்ம கைவசம் கூட நெறைய வண்டிப்பாட்டுக இருக்கு…”

‘அப்படியா?…எங்கே அதுல ஒண்ணை எடுத்து விடேன் பார்க்கலாம்”

”பருப்பு பிடிக்கும் வண்டி…இது பட்டணந்தான் போகும் வண்டி….

பருப்பு வெலை ஏறட்டும்டி தங்கரத்தினமே!!

பதக்கம் பண்ணி;ப் போடுறண்டி பொன்னுரத்தினமே!!

அரிசி பிடிக்கும் வண்டி…இது அவினாசி போகும் வண்டி…

அரிசி வெலை ஏறட்டும்டி தங்கரத்தினமே!!

அட்டி பண்ணிப் போடுறண்டி பொன்னுரத்தினமே!!

கொள்ளு பிடிக்கும் வண்டி…இது கோட்டைக்குப் போகும் வண்டி

கொள்ளு வெலை ஏறட்டும்டி தங்கரத்தினமே!!

கொலுசு பண்ணிப் போடுறண்டி பொன்னுரத்தினமே”

மலைத்துப் போய் நின்ற என்னிடம் ‘அப்ப வாரேஞ் சாமி…நேரமாச்சு” சொல்லி விட்டுப் பறந்தான் வண்டிக்காரன்.

‘அடேங்கப்பா…இவனுக்கு இத்தனை ஞானமா?” வியந்தபடியே நடை போட்டேன் வீடு நோக்கி.

மதியம் 3.00 மணியிருக்கும்,

அறையினுள் அரைத் தூக்கத்தில் கிடந்த என்னை சிறுவர்களின் ‘காச்…மூச்” சத்தம் உசுப்ப எழுந்து தெருவுக்கு வந்து பார்த்தேன். ஏழெட்டு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் என்னைப் பார்த்து மற்றவர்களிடம் ‘குசு…குசு”வென்று ஏதோ சொல்ல எல்லோரும் ‘கப்..சிப்” பென்று அமைதியாயினர்.

சிநேகிதமாய்ச் சிரித்து அவர்களை அருகினில் அழைத்துப் பேசிய போது அவர்களனைவரும் பள்ளிக்கு வராத பிரகஸ்பதிகள் என்றும் காலை முதல் மாலை வரை மலை சரிவினில் ஆடு…மாடு மேய்ப்பதே அவர்களின் உலகம் என்றும் தெரிந்து கொண்டேன்.

சட்டென்று அந்த யோசனை வர கேட்டேன். ‘நீங்கெல்லாம் ஆடு மேய்க்கும் போது பாட்டுப் பாடுவீங்களாமே….அப்படியா?”

அவர்கள் மேலும் கீழுமாய்த் தலையாட்ட,

‘அப்ப…நீ ஒரு பாட்டுப் பாடு கேக்கலாம்…” இருப்பதிலேயே சிறுவனான ஒருவனிடம் கேட்டேன். அத்தனை பேரையம் விட்டு விட்டு நான் அவனிடம் மட்டும் கேட்டது அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை உண்டாக்கி விட, சந்தோஷமாய் ஆரம்பித்தான்.

குளத்துக்கு அந்தப்பக்கம்…ஆடு மேய்க்கும் கூளைப் பெண்ணெ

குளத்துலதான் தண்ணி வந்தா என்ன செய்வே சொல்லாத்தா….

கொல்லனைத்தான்.கூப்பிடுவென்…குறிஞ்சிக் கப்பல் செய்திடுவான்

ஆத்துலதான் தண்ணி வந்தா என்ன செய்வே சொல்லாத்தா…

ஆசாரியக் கூப்பிடுவேன் அரிஞ்சுக் கப்பல் செய்திடுவான்

புள்ளத்துல தண்ணி வந்தா என்ன செய்வே சொல்லாத்தா…

பன்னாடியக் கூப்பிடுவேன் பரிசலத்தான் பொட்டிடுவான்

அந்தச் சிறுவன் பாடி முடிக்கையில் என் கண்களில் நீரே திரண்டுவிட்டது. ‘ச்சே…இந்த ஊர் ஜனங்களையும்…குழந்தைகளையும் பத்தி அந்தப் பழைய வாத்தியார் சொன்னது அத்தனையும் தவறான கருத்துக்கள்…ஒரு எழுத்துக் கூடப் படிக்கத் தெரியாத இந்தச் சிறுவர்கள் வெறும் கேள்வி ஞானத்தை மட்டுமே வெச்சுக்கிட்டு நெறையப் பாடல்களை அற்புதமாப் பாடறாங்கன்னா…இவங்களொட ஞாபக சக்தி சாதாரணமானதல்ல….நிச்சயம் இந்தப் பசங்களைப் படிக்க வெச்சா…நல்லா பெரிய ஆளா வருவானுக” எனக்குள் ஒரு வெறித் தீர்மானம் உருவானது.

மறுநாள் சற்று முன்னதாகவே பள்ளிக்குச் சென்று தாமதமாக வந்த அந்த ஆசிரியரை அழைத்து ‘பத்து வருஷமா பசங்களுக்குப் பாடம் எடுக்கறதாச் சொன்னீங்களே….என்ன சப்ஜெக்ட்?” கேட்டேன்.

‘அட…நீங்க வேற…இதென்ன டவுன் ஸ்கூலா?…ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு வாத்தியாரைப் போட…எல்லாத்துக்குமே நான் ஒருத்தன்தான்”

‘அப்ப…தமிழ்ப்பாடமும் பத்து வருஷமா எடுத்திட்டிருக்கீங்க,….அப்படித்தானே?”

‘ஆமாம்…அதிலென்ன சந்தேகம?,”

‘சரி…நாலடியார்ல ஒரு செய்யுள் சொல்லுங்க…”

அவட் யோசிப்பது போல் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு பின் மண்டையைச் சொறிய,

‘போகட்டும்…புறநானூற்றுல ஒரு செய்யுள் சொல்லுங்க…”

‘……………………………”

‘பெரிய புராணத்துல?……கலிங்கத்துப் பரணில?…..பச்…என்ன சார் பத்து வருஷமா…அதே பாடத்தை…அதே செய்யுளை…திருப்பித் திருப்பி சொல்லித் தர்றீங்க….அதுல ஏதாவது ஒரு செய்யுளாவது மனப்பாடம் ஆகியிருக்குமே?”

‘என்ன சார் நீங்க இப்படியெல்லாம் கேட்கறீங்க….புத்தகத்தைப் பார்த்து செய்யுளைப் படிப்போம்….அப்புறம் அதுக்கு அர்த்தத்தை உரையாடலா எளிய தமிழ்ல அதுகளுக்குப் புரியற மாதிரி சொல்லிக் குடுப்போம்…அவ்வளவுதான்…அதுக்காக செய்யுளையெல்லாம் மனப்பாடம் பண்ணி வெச்சுக்க முடியமா என்ன?” அந்த ஆசிரியர் திக்கித் திணறி சமாளிக்க,

‘பட்டப் படிப்பு படிச்ச ஆசிரியர் உங்களுக்கே பத்து வருஷமா திருப்பித் திருப்பி படிக்கற செய்யுள் ஒண்ணு கூட மனசுல ஒட்டலை….ஆனா படிப்பு வாசனையே இல்லாத இந்தக் கிராமத்து மக்கள் வெறும் கேள்வி ஞானத்துல எத்தனையோ நாட்டுப் பாடல்களை மனப்பாடம் செஞ்சு வெச்சுக்கிட்டு…வெகு ஈஸியா…துளியும் சறுக்காம…சரளமா பாடறாங்க…அவங்களைப் போய்…நீங்க…’மக்குக…மரமண்டைக…ஞானசூன்யங்க”…அப்படின்னு சொல்றீங்க…எப்படி சார்…எங்கியோ இடிக்குதே”

‘அது…வந்து…திரும்பத் திரும்ப அதே பாட்டைக் கேட்கறதினால அது அவங்களுக்கு மனப்பாடம் ஆகியிருக்கும்”

‘பெரியவங்க மட்டுமல்ல சார்…பள்ளிக் கூடப் பக்கமே ஒதுங்காத மாடு மேய்க்கற சிறுவர்கள் எத்தனை நாட்டுப் பாடல்களை மூளைல பதிவு செஞ்சு வெச்சிருக்கானுக தெரியமா?”

‘அவனுகளோட அப்பன் ஆத்தா பாடியிருப்பாங்க…அதைக் கேட்டுட்டு இதுகளும் பாடுதுக…இதிலென்ன பெரிய அதிசயம்?”

‘என்னமோ அன்னிக்கு சொன்னீங்க…இந்த ஊருல பெருசு…சிறுசு…எல்லாத்துக்கும் மூளையே வெச்சுப் படைக்கலைன்னு!….நல்லா யோசிச்சுப் பாருங்க…யாருக்கு மூளையே வைக்கப் படலைன்னு….யாரு அறிவு சூன்யம்ன்னு புரியும்”

அந்த ஆசிரியர் ‘திரு…திரு” வென விழிக்க,

‘சார்..யாரையும்…சட்டுன்னு எடை போட்டுடக்கூடாது… எல்லோருக்குள்ளும் ஒரு திறமை இருக்கும்…ஒரு ஞானம் இருக்கும்…அதைத் தோண்டியெடுக்க முடியாத பாட்டுக்கு அவங்களுக்கு மூளையே இல்லைன்னு மூடத்தனமா ஒரு முடிவு பண்ணிடக்கூடாது…போங்க சார்….போயி குழந்தைகளுக்கு ஒரு நம்பிக்கையோட பாடம் எடுங்க சார்…இங்கிருநது கூட ஒரு அப்துல் கலாம் உருவாகலாம்…ஆச்சரியப்படுவதற்கில்லை”

அவர் என்னைத் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே செல்ல, பள்ளிக்கூடப் பக்கமே வராத அந்தக் கிராமத்துச் சிறுவர்களை எப்படியாவது பள்ளிக் கூடத்திற்குள் கொண்டு வந்து அந்தப் படிக்காத மேதைகளை ஒரு ஒளிமயமான எதிர்காலத்திற்கு அழைத்துச் சென்றே தீருவது என்கிற குறிக்கோளோடு நானும் எழுந்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *