முத்துப்பேச்சியும் குரோட்டன்ஸ் செடியும்

 

நாளைக்கு காலைல 6 மணிக்கு ஒரு கொலை செய்யப் போறேன்.
+2 படிச்சுட்டு வேலை தேடி சென்னைக்கு வந்து நாலு மாசமா அலைஞ்சு திரிஞ்சும் ஒரு வேலையும் கிடைக்கல.

திருவல்லிக்கேணில ஒரு மேன்சன்ல தங்கி இருக்கேன். தங்கி இருக்கேன்னு சொல்றது தப்பு. நாலு பேரு தங்கி இருக்கற ரூம்ல அஞ்சாவதா ஒட்டிக்கிட்டு இருக்கேன். கொசுத்தொல்லை தாங்காம ராத்திரி பூரா கொசு அடிச்சுகிட்டே இருப்பேன் அதனால செல்லமா “கொசு” குமார் ஆக்கிட்டாங்க.

நேத்து காலையிலதான் சாஹீப் அண்ணன் எனக்கு அறிமுகமானார்். ஆறடி உயரம் இருப்பார். மாமிச மலைன்னு சொல்லலாம்.

இந்த ஏரியாவுல “பாய்”ன்னு சொன்னா அது சாஹீப்ங்கற அளவுக்கு ஆள் ரொம்ப பிரபலம்.

மேன்சனுக்கு பக்கத்துல இருக்கற டீ கடையிலதான் பார்த்தேன். ரெண்டு நிமிசம் பேசினோம்.

எலும்பும் தோலுமா இருக்கற என்னை பார்த்தா கொலை பண்ற மாதிரியா இருக்கும்?
முடியுமான்னு கேட்டார்..முடியாதுன்னு சொல்ல மனசு ஆசபட்டுச்சு. ஆனா வயிறு முடியும்னு சொல்லிடிச்சு.

இப்படி ஒருத்தர்கூட சேர்ந்து இப்படி ஒரு தொழில் நான் பண்ண போறத எப்படி தாங்குவா என் முத்துப்பேச்சி?
____________________________________________________________________________
எங்கூட ஒண்ணாப்புல இருந்து பத்தாப்பு வரைக்கும் படிச்சவதான் முத்துப்பேச்சி. அழகா இருப்பான்னு சொல்றதவிட லட்சணமா இருப்பா.

ஒரு நாள் அம்மன் கோவிலுக்கு வரச்சொன்னா.

“டேய் குமாரு உங்கிட்ட ஒண்ணு சொல்லனும்டா” தரைய பார்த்துக்கிட்டே கேட்டா முத்துப்பேச்சி.

“சொல்லுடி, என்ன ரொம்ப குழையுது சத்தம்?”

“இல்ல, நேத்து நல்லா மழை பெஞ்சுதில்ல, அப்போ பள்ளிக்கூடத்துக்கு வெளிய வந்து பார்த்தேன். நீ குரோட்டன்ஸ் செடி இருக்கற தொட்டிய தூக்கி மழை நனைக்காத இடத்துல வெச்சியே ஞாபகமிருக்கா?”

“ஆமா முத்து, மழையில ரொம்ப நேரம் நனஞ்சுதுன்னா அந்த செடி அழுகி போயிடும்னு ஓடி போய் அந்த செடிய காப்பாத்திட்டேன்”

“ஒரு செடி கஷ்டப்படக்கூடாதுன்னு எப்போ நீ நெனச்சியோ அப்போவே எனக்கு உன்னை ரொம்ப புடிச்சி போச்சுடா” சொல்லிவிட்டு தலைகவிழ்ந்து கொண்டாள் முத்துப்பேச்சி.

எனக்கு வார்த்தையே வரல. லேசா கால் நடுங்கிச்சு. வீட்டுக்கு ஓடியே போயிட்டேன்.
முதல்ல புடிச்சிருக்குன்னு சொன்னா, அப்புறம் காதலிக்கறேன்னு சொன்னா.

முத்துப்பேச்சியோட கம்மல்போலவே எல்லாத்துக்கும் தலையாட்டினேன். ஒரே சாதி பொண்ணு சேர்த்துவச்சிருவாங்க அப்படீங்கற நம்பிக்கை மட்டும் காரணமில்ல, எனக்கும் முத்துபேச்சின்னா உசிரு.
————————————————————————————————-
மனசெல்லாம் அவ ஞாபகம் மின்ன,மொட்டை மாடியில நின்னு நட்சந்திரங்கள பார்த்தேன்.

ஊர்ல பொட்டிகடை போட்டு பொழச்சுக்கலாம்னு முத்துபேச்சி சொன்னப்ப முடியாதுன்னு சொல்லிட்டு அவள நல்லா வாழ வைக்கணும்னு சென்னைக்கு வந்தேன்.
ஆனா இப்படி ஒரு தொழிலுக்கு நான் போகப்போறேன்னு தெரிஞ்சா எவ்வளவு வருத்தப்படுவா..

கொலை செஞ்சு சம்பாதிக்கறேன்னு தெரிஞ்சா என்னை விட்டு போயிடுவாளே! கடவுளே ஏன் எனக்கு மட்டும் இப்படி ஒரு விதி??

என் புலம்பல் மேகத்துக்கும் கேட்டுச்சோ என்னவோ, கண்ணீரா கொட்டுது மழை.
————————————————————————————————-
நாலுமணிக்கே எழுந்திட்டேன்.

முதல் நாள்ங்கறதால சாஹீப் அண்ணன் ஆள் அனுப்பறதா சொல்லி இருந்தாரு.
ரத்தம் பார்க்க போறதுக்கு புதுச்சட்டை ஒரு கேடா? இருந்தாலும் தொழில்னு வந்தாச்சு…

அம்மன்கோவில் திருவிழாவுக்கு எடுத்த மஞ்சக்கலரு சட்டைய மாட்டிகிட்டேன்.

“தம்பி, இங்க குமார் யாருப்பா” மீசையில் முகத்தை வைத்திருக்கும் ஒரு கறுப்பு உருவம் கனத்த குரலில் கேட்டது.

“நாந்தாண்ணே…”

“வா தம்பி போகலாம்”

அவருடன் பைக்கில் தொத்திக்கொண்டேன். உயிரை எடுக்கும் திசை நோக்கி பறந்தது யமன்கா….சே யமகா.
————————————————————————————————————————————-
ஒரு முட்டுச் சந்தில் வண்டியை நிறுத்தினார் மீசை.

விடியத் தொடங்கி இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மனித நடமாட்டம் ஆரம்பித்திருந்தது.

இறங்கி நடக்க ஆரம்பித்தோம்.

“சீக்கிரம் நட டா” அவசரப்படுத்தினார் மீசை.

முட்டுச் சந்தின் கடைசி பில்டிங்கில் சாஹீப் அண்ணன் உட்கார்ந்திருந்தார்.

“வாடா சட்டுபுட்டுன்னு காரியத்த முடிச்சிடணும் புரியுதா” தடித்த குரலில் கட்டளை பிறந்தது.

“சரி….ண்ணா…” உள்ளுக்குள் லேசான உதறல்.

“இந்தா இந்த கத்திய புடி,கழுத்துல ஒரே போடா போட்டுடனும்” முதல் முறையாக கத்தி என் கையில் வந்தது.

கடவுளே என்னை மன்னிச்சிடு, முத்துப்பேச்சி நீயும் என்னை மன்னிச்சிடு மனதுக்குள் நினைத்துக்கொண்டே கழுத்தில் கத்தியை சொருகினேன்.

கண்கள் வெறித்து, கால்கள் இழுத்துக்கொண்டு இருநிமிடம் துடித்தது அந்த ஆடு.
வாயில்லா ஆட்டைக் கொன்று என் முதல்கொலை வெற்றிகரமாக முடிந்தது.

குடலை உருவி சுத்தம் செய்து கழிவு நீரை அருகிலிருந்த குரோட்டன்ஸ் செடியில் ஊற்றினேன்.

“உயிர்களைக் கொல்வது பாவம்” பள்ளிக்கூடத்தின் வேப்ப மரத்தடியில் முதுகில் சாய்ந்து கொண்டு முத்துப்பேச்சியும் நானும் படித்தது மனதில் விரிய ஆரம்பித்தது.

- Sunday, May 4, 2008 

தொடர்புடைய சிறுகதைகள்
ரமேஷின் வீட்டிற்குள் நுழைய தயக்கம் கலந்த பயம் என்னை முதல்முறையாய் ஆட்கொண்டது. ரமேஷ் என் பக்கத்துவீட்டு பையன்.ஏழாம் வகுப்பு மாணவன். எப்பொழுதும் துறுதுறுவென்று இருப்பவன். "அண்ணா அண்ணா" என்று என்னிடம் பாசம்பொழியும் நல்லிதயம் கொண்டவன். அவனுக்கு இது நிகழ்ந்திருக்ககூடாது. பேருந்து விபத்தில் ...
மேலும் கதையை படிக்க...
"என்னங்க எனக்கொரு சந்தேகம்" தடதடக்கும் ரயிலில் ஜன்னல் வழியே இயற்கை ரசிக்கும் தன் கணவனிடம் மெதுவான குரலில் கேட்டாள் செண்பகம். முகத்தில் கேள்விக்குறியுடன் திரும்பி "என்ன?" என்றார் ராதாகிருஷ்ணன். "நம்மள வழி அனுப்ப வந்த இரண்டு பசங்களுக்கும் நீங்க பணம் கொடுத்தீங்க இல்ல" "ஆமா அதுக்கென்ன?" "மூத்த ...
மேலும் கதையை படிக்க...
"ஹலோ சுகுமாரன், பூஜாஸ்ரீ பேசுறேன், என் கதையை படமாக்கனும், நீங்கதான் டைரக்டர், யாருகிட்டேயும் இதுபத்தி சொல்ல வேண்டாம், தேவையில்லாத குழப்பங்கள் வரலாம். இன்று மாலை 5 மணிக்கு என்னை வந்து பாருங்கள்,தேங்க்ஸ்,பை" துண்டிக்கப்பட்ட தொலைபேசியை கீழே வைக்காமல் அதிர்ச்சியில் உறைந்து நின்றான் ...
மேலும் கதையை படிக்க...
"எத்தனை நாளுக்குத்தான் இப்படி உனக்குள்ளேயே வச்சுக்கிட்டு கஷ்டபடுவே? பேசாம நேரா போய் சொல்லிடுடா" அக்கறையுடன் சொன்னான் என் அறைத்தோழன். எனக்கு மட்டும் என்ன சொல்லக்கூடாது என்கிற எண்ணமா? பயம்தான். பயம் மட்டும்தான் காரணம். காலேஜே திரும்பி பார்க்குற அழகி அவள். சென்னையில் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்தவள். அவளிடம் ...
மேலும் கதையை படிக்க...
ஜெயரஞ்சனி யின் அப்பா ஓரிரவு அவள் விரும்பிய கரடி பொம்மையை வாங்கி வந்திருந்தார். அவள் அவரைக் கட்டிக்கொண்டு முத்தம் பொழிந்தாள். அடுக்களையிலிருந்து வெளிவந்த அம்மாவுக்கு ஜெயாவின் சந்தோஷம் மனதை பிசைந்தது. கரடி பொம்மையின் புசுபுசுவென்ற அடர் கருமைநிற முடியை ஜெயா வாஞ்சையுடன் ...
மேலும் கதையை படிக்க...
ஊனம்
ஊர்க்காசு
ஒரு நடிகையின் கதை….
என் இனிய ஜெசினா…
வேலியோர பொம்மை மனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)