முத்துநகர் எக்ஸ்பிரஸ்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 11, 2013
பார்வையிட்டோர்: 10,982 
 

எழும்பூர் ரயில் நிலையம்.
பயணிக்க வருவோரும், பயணித்துப் போவோரும் சுறுசுறுப்பாய் இயங்கியதால், பரபரப்பாக இருந்தது.
டிக்கெட் வாங்கி பையில் பத்திரப்படுத்தி, முத்துநகர் எக்ஸ்பிரஸ் நின்று கொண்டிருந்த நடைமேடைக்கு வந்தேன். டிக்கெட் ரிசர்வ் செய்யாததால், அன் ரிசர்வ்ட் கம்பார்ட்மென்ட் நிற்கும் இடம் நோக்கி நடந்தேன்.
ஒரு வழியாய் கண்டுபிடித்து, ஏறி அமர்ந்தேன். கடைசி நேரத்தில் ஓடிவந்து, முண்டியடித்து ஏறி, இடம் கிடைக்காமல், இரவு முழுவதும், தூக்கத்தையும் கெடுத்து, நின்று கொண்டேயல்லவா போக வேண்டிவரும் என்பதை மனதில் கொண்டு தான், நிலையத்திற்கு சீக்கிரமாக வந்தேன்; இடமும் கிடைத்தது.
நடந்து வந்த களைப்பு தீர, உட்கார்ந்து ஆசுவாசப்படுத்தி, வாட்டார் பாட்டிலிலிருந்து கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டு, ஜன்னல் வழியே பிளாட்பாரத்தை பார்வையிட்டேன்.
முத்துநகர் எக்ஸ்பிரஸ்பயணிக்க வந்தவர்களை விட, அவர்களை வழியனுப்ப வந்தவர்கள் அதிகம் இருப்பர் போலும். எத்தனை விதமான மனிதர்கள்; எத்தனை விதமான பயண நோக்கங்கள்… தன்னுள் ஏறி பயணம் செய்பவர்கள் நல்லவரா, கெட்டவரா… ஏழையா, பணக்காரனா… டிக்கெட் எடுத்தவரா, எடுக்காதவரா என எவ்வித பாகுபாடுமின்றி, எல்லாரையும் ஏற்றிச் செல்ல காத்திருக்கிற இந்த வண்டி தான், உண்மையிலேயே ஒரு பொது நல வாதி!
நேரம் ஆக, ஆக, நான் உட்கார்ந்திருந்த பெட்டியில், எல்லா இடமும் நிரம்பின. சிலர் நெருக்கியடித்து நின்றிருந்தனர்; முடியாதவர்கள், அப்படியே கீழே உட்கார்ந்து விட்டனர்.
என் எதிர் சீட்டில் புத்தகம் ஒன்றை அடையாளமாக போட்டு விட்டு, வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தான் இளைஞன் ஒருவன்… தாடி வழித்து அழகாக மீசையை நறுக்கியிருந்தால், பார்க்க அம்சமாக இருப்பான். ஆனால், ஏனோ இந்த காலத்துப் பிள்ளைகள், இப்படி தேவதாஸ் மாதிரி, தாடி, மீசையோடு அலைகின்றனரோ தெரியவில்லை!
அவனை வழியனுப்ப வந்த மூன்று பேரும், அவனுடன் வெகு இயல்பாக அங்கே போவோரையும், வருவோரையும், கிண்டலடித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.
பிளாட்பாரம் பரபரப்பானது… விசில் சப்தம் கேட்க, அதைத் தொடர்ந்து வண்டியின் பிளிறல். பிளிறலின் முடிவில், வண்டி மெல்ல நகர ஆரம்பிக்க, இளைஞன் வண்டியோடு வேக நடை போட்டு தாவி ஏறி, நண்பர்களுக்கு கையசைத்து விட்டு, உள்ளே வந்து இடத்தில் அமர்ந்தான்.
ரயில் பயணம் என்பது, சில மணி நேரங்கள் தான்; அவரவர் இடம் வந்தால், இறங்கி போய்விட வேண்டும். அதுவரையில் பயணம் செய்யும் அந்த சில மணி நேரங்களை சினேகமாக கழிப்பதென்பது, எனக்குப் பிடித்தவொன்று!
அங்கிருந்தவர்களிடம், மெல்ல பேச்சுக் கொடுத்தேன். முதலில், நான் ரிட்டையர்டு போஸ்ட் மாஸ்டர் எனவும், திருச்சியில் கட்டிக் கொடுத்திருக்கும் என் மகளைப் பார்ப்பதற்காக போகிறேன் என, என்னைப் பற்றி அறிமுகப்படுத்தி, பேச்சை ஆரம்பித்தேன்.
ஒவ்வொருத்தரும், எங்கே போகிறோம், எதற்காகப் போகிறோம் என்று, தங்களைப் பற்றி கூறினர். அதைத் தொடர்ந்து, ஊர் நிலவரம், மழை, வெயில், நாட்டு நடப்பு, கொஞ்சம் அரசியல்… என, பொதுவாக பேசிக் கொண்டோம்.
ஒரு தாள லயத்தோடு, சீரான வேகத்தில் வண்டி ஓடிக் கொண்டிருந்தது.
அப்போது ஒரு பெண், நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்திற்கு எதிரே இருந்த இடைவெளியில் வந்து நின்றாள்.
“”திடீர்னு எங்க இருந்து வந்தம்மா இப்போ… முதல்ல நின்ன இடத்துலயே நிக்க வேண்டியது தானே… நாங்களே இங்க கால் நீட்டவும் முடியாம, மடக்கவும் முடியாம அவதிபடறோம்…” என்றார், பெரியவர் ஒருவர்.
“”பக்கத்துலதான்யா நின்னுகிட்டிருந்தேன்… பீடி நாத்தம் தாங்க முடியல… வயித்த கொமட்டுச்சி… அதான் இப்படி நவுந்து வந்தேன்…” என்றாள்.
பார்க்க அழகாக, லட்சணமாக இருந்தாள்; ஆனால், அழுக்காக இருந்தாள். குளித்து இரண்டு, மூன்று நாட்கள் இருக்கும்போல், உடை அழுக்காகவும், கசங்கியும், எண்ணெய் காணாத தலையுமாய், கையில் ஒரு மஞ்சள் பையை சுருட்டி வைத்து நிற்கும் அவள், பார்க்க முகம் சுளிக்க வைத்தாலும், நல்ல நிறம்.
நீல நிறத்தில் அவள் கட்டியிருந்த புள்ளிப் போட்ட சேலையும், அதே நிறத்தில் அணிந்திருந்த ஜாக்கெட்டும், அவளின் உண்மையான நிறத்தை எடுத்துக்காட்டுவதாய் இருந்தது. கழுத்தில் ஒரு கறுப்பு நிற பாசிமணியும், காதிலும், மூக்கிலும், அழுக்கேறிய கவரிங் தோடும், மூக்குத்தியும் தான் என்றாலும், லட்சணமாக இருந்தாள்.
தப்பான கண்ணோட்டத்தில் நான் பார்க்கவில்லை. இந்த ஏழ்மையிலும் சிலருக்கு, ஆண்டவன், அழகை அள்ளிக் கொடுத்திருக்கிறானே என்று, நல்ல மனதோடு, சந்தோஷத்தோடு தான் பார்த்தேன்.
சட்டென்று எனக்கோர் நெருடல்… நானே இந்தப் பெண்ணை இப்படி பார்த்தேனே, என் எதிரே இருக்கும் அந்த இளைஞன் எப்படி பார்ப்பான் என்ற எண்ணம் வந்ததும், மெல்ல பார்த்தும், பார்க்காதது போல் அவனைப் பார்த்தேன்.
கண்களாலேயே அவளைக் களவாடி விடுபவன் போல், வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். யாராவது அவனைப் பார்த்து விட்டால், சட்டென புத்தகத்தைப் படிப்பது போலவும், பிறகு புத்தகத்தை விரித்து வைத்து, ஜாடையாய் அவளைப் பார்ப்பதுமாக இருந்தான்.
இந்தப் பெண் இருக்கும் இதே இடத்தில், நேர்த்தியாக உடையணிந்து, படித்தவளாக ஒருத்தி நின்றிருந்தால், இந்த இளைஞன் இப்படிப் பார்ப்பானா… பார்த்தால் தான், அவளும் விட்டு விடுவாளா?
பாவம்… இதையெல்லாம் அறியாத அந்த அப்பாவிப் பெண், ஒரு கையால் பையை மார்போடு அணைத்து, வண்டி ஆட்டத்தில், பேலன்ஸ் தவறி எவர் மீதும் விழுந்துவிடக் கூடாதென, மேலே உள்ள கம்பியை மறுகையால் பிடித்தவாறு நின்றிருந்தாள். அப்படி அவன் நிற்பது, அவனுக்கு மிக சவுகரியமாக இருந்ததோ, என்னவோ… அவன் கொள்ளிக் கண்கள், அவளையே விழுங்கிக் கொண்டிருந்தன.
அவனுடைய கவனத்தை வேறு பக்கம் திருப்ப ஏதாவது பேச்சுக் கொடுக்கலாமென, “”தம்பி… என்ன புத்தகம் படிக்கறீங்க?” என்றேன்.
“”இந்தாங்க படிக்கறீங்களா?” என்று புத்தகத்தை என்னிடம் கொடுத்தான். பிரித்துப் பார்த்தேன்; விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு.
பரவாயில்லையே… பார்வைக்கு இவன் ஒரு மாதிரியாக தெரிந்தாலும், படிக்கும் புத்தகம் நன்றாக இருக்கிறதே… என் யூகம் தான் தவறோ… அவன், அவளை சாதாரணமாகத்தான் பார்த்தானோ?
பொதுவாக பெரிசுகள் என்றாலே, “சந்தேகப் பேர்வழிகள்’ என்பது எனக்கும் பொருந்துமோ?
வனைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்கும்போதே, “”சார்! கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு, இந்தப் பொண்ணுக்கும் உட்கார இடம் கொடுப்போமே… நம்ம மத்தில அவங்க மட்டும் நின்னுகிட்டு வர சங்கடப்படுறாங்க…” என்றான் அவன்.
அவன் சொன்னதும், நெருக்கமாக அமர்ந்து, அந்தப் பொண்ணுக்கும் இடமளித்தனர். மேலே பிடித்திருந்த கையை எடுத்து விட்டு உட்காருகையில், வண்டி ஆட்டத்தில், கையிலிருந்து பை நழுவி கீழே விழுந்தது. அதை அப்படியே அள்ளி எடுத்து மடியில் அழுத்திக் கொண்டு உட்கார்ந்தாள்.
இப்போதுதான், அவன் இருந்த வரிசையில் இடம் பிடித்துக் கொடுத்து, சிநேகம் ஆக்கப் பார்க்கிறான். இன்னும் கொஞ்சம் நேரம் போனால், பக்கத்திலேயே உட்கார வைத்துக் கொள்வானோ… எந்தப் புற்றில் எந்தப் பாம்போ! இவர் இவர் இப்படி என்று, நம் கண் முன்னே தெரியும் உருவத்தைப் பார்த்தே ஒன்றும் சொல்ல முடிவதில்லை; பலரும் வேடம் தரித்த மனிதர்களாய் இருக்க, இவன் எப்படிப்பட்டவன் என்று உள்ளத்தைப் படிக்க முடியுமா, என்ன… அந்தப் பெண், உடம்பில் அழுக்காய் இருக்கிறாள். இவன் மட்டும், முழுக்க அழுக்காய் இருக்கலாம். நாமென்ன செய்ய முடியும். ராகவா… நீதான் இந்தப் பெண்ணைக் காப்பாத்தணும்… என, எண்ணிய என் சிந்தையை மீண்டும் கலைத்தான் அவன்…
“”பையை சரியா வச்சிக்கோம்மா… இல்லேன்னா, பைல இருக்கிறதெல்லாம் கீழே விழுந்துட போவுது… முதல்ல டிக்கெட் பத்ரமா இருக்கான்னு பார்த்துக்க…” என்றான்.
அவன் அப்படிச் சொன்னதும், அவள் விழித்தாள். கண்களில் பயம் தெரிந்தது; உடம்பில் ஒரு நடுக்கம் ஏற்பட்டது.
“”என்னம்மா… டிக்கெட் எடுக்கலையா?” என்றேன் நான்.
“”இல்லீங்கய்யா… எடுக்கல…”
“”ஏன் சார்! ஒரு டிக்கெட் லெஸ் டிராவலுக்கா இடம் அட்ஜஸ்ட் பண்ணிக் கொடுக்கச் ன்னீங்க? நல்ல ஆள் சார் நீங்க…” என்றார், உட்கார இடம் போதாமையால் அவதிப்பட்ட ஒருவர்.
“”சாரி சார்! நீங்க நல்லா உக்காந்துக்குங்க… நான் எழுந்துக்கிறேன்…” என்று அவன் எழுந்து, “”நாம ஆறு பேர் ஆம்பளைங்களா உக்கார்ந்திருக்கோம்… நம்ம மத்தில இந்தப் பொண்ணு கையைத் தூக்கிக்கிட்டு, எல்லாரும் பார்க்கும் படியா நிற்கிறதுக்கு சங்கோஜப்படுது… அதனால தான், அது உட்காரட்டுமேன்னு இடம் கொடுக்கச் சொன்னேன்…” என்றான்.
“”ஏம்மா டிக்கெட் எடுக்காம ஏறினே… கூட யாரும் வரலையா?” என்றான்.
“”இல்லீங்க சார்! எனக்கு அம்மா, அப்பா இல்ல; மாமா வீட்ல இருந்தேன். “இனிமே உன்னை வச்சி சோறு போட முடியாது; உன் சித்தப்பா வீட்டுக்குப் போ…’ன்னு சொல்லி துரத்திட்டாங்க. அதான், திருச்சில இருக்கிற சித்தப்பா வீட்டுக்குப் போறேன்…” என்று சொல்லும்போதே, அவள் கண்கள் கண்ணீரில் மூழ்கியிருந்தன.
எல்லாருடைய மனதையுமே ஒரு நிமிடம் கரைய வைத்து விட்டாள் அவள். அவளுடைய மாமா – மாமியை சபித்தோம்; அவளுக்காக பரிதாபப்பட்டோம். அவளை நல்லபடியா கொண்டு போய் சேர்ன்னு இறைவனை வேண்டினோம். ஆனால், அதையெல்லாம் தாண்டி, அந்த இளைஞன் செய்த காரியம் என்னை அதிசயிக்க வைத்தது.
ஆமாம்…
டிக்கெட் பரிசோதகர் வந்தார். எல்லாரும், அவரவர்களின் டிக்கெட்டை எடுத்து வைத்துக் கொண்டோம். அந்த இளைஞன் மட்டும், தன் டிக்கெட்டை எடுத்து, அந்தப் பெண்ணின் கையில் திணித்து, “”இதை வச்சிக்கோ… அவர் கேக்கறப்ப டிக்கெட்டை குடு… இல்லேன்னா, உன்னை போலீஸ்ல புடிச்சிட்டுப் போயிடுவாங்க…” என்றான் மெல்லிய குரலில்.
பரிசோதகர், எல்லாருடைய டிக்கெட்டையும் வாங்கிப் பார்த்து இனிஷியல் கிறுக்கி கொடுத்து விட்டு, “”ஹலோ… உங்க டிக்கெட்?” என்றார் அந்த இளைஞனிடம்.
“சாரி சார்! என்னோட பிரண்ட் எடுத்து வச்சிருக்கேன்னான். வந்து பார்த்தா, அவன் வரவேயில்ல. டிக்கெட் எடுக்க நேரமில்லை. வண்டி மூவ் ஆயிருச்சு… கடைசி நேரத்துல, ஓடி வந்துதான் ஏறினேன். டிக்கெட்டுக்கான பணமும், பெனாலிட்டியும் கட்டிடறேன்…” என்று, பணம் கொடுத்து, ரசீது வாங்கிக் கொண்டான்.
அவர் சென்றதும், “”நீங்க நல்ல காரியம் தான் செஞ்சீங்க… ஆனா, முன்ன, பின்ன அறிமுகமில்லாத பொண்ணுக்கு, சட்டுன்னு உங்க டிக்கெட்டை கொடுத்து…”
மேற்கொண்டு எப்படி பேசுவதென புரியாத, என் குழப்பத்கைத் கண்டு, அவனே தெளிவாகப் பேசினான்…
“”ஆமாம் சார்! இந்த ஏழைப் பொண்ணுகிட்ட, கைல காசும் இல்ல, டிக்கெட்டும் எடுக்கல… பைன் கட்டி தப்பிக்கவும் வழியில்லை. அடுத்த ஸ்டேஷன் வந்ததும், “டிக்கெட் லெஸ் டிராவல்…’ன்னு சொல்லி, போலீஸ்ல ஹேண்ட் ஓவர் பண்ணிடுவாங்க. அங்கே இந்தப் பெண்ணை எப்படி நடத்துவாங்க… அங்கே இவளுக்கு என்னென்ன நேரும்ன்னு மக்கெல்லாம் தெரியாததில்லை.
“”தினம், தினம் தான் பேப்பர்ல படிக்கிறோமே! அப்படியேதும் இந்தப் பெண்ணுக்கு நேராம இருக்கணும்னுதான், என் டிக்கெட்டை கொடுத்தேன்… நான் ஆம்பளை! என்னை ஜெயில்ல போட்டா கூட, ஒரு நாள் இருந்துட்டு, பைன் கட்டிட்டு வந்துடுவேன்…”
அவன் பேசப் பேச, என் மனம் நெகிழ, கண்கள் கலங்கியது.
இவனையா நான் தப்பாக நினைத்தேன்… விஸ்வரூபமாய் எழுந்து நின்று, எங்களையெல்லாம் நிமிர்ந்து பார்க்க வைத்து விட்டானே!
ஒரு தடவை விவேகானந்தரைப் பார்த்து ஒரு பெண், “உங்களைப் போல் எனக்கு, அழகாகவும், அறிவுள்ளதாகவும் பிள்ளை வேண்டும். நாமிருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா?’ என்றாளாம். அதற்கு அவர், “நமக்குத் திருமணமாகி, குழந்தை பிறந்து, வளர்ந்து, அது உங்களை அம்மா என்றழைக்க, பல மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதனால், இப்போதே என்னை உங்கள் மகனாக ஏற்றுக் கொள்ளுங்கள் தாயே!’ என்றாராம்.
என் எதிரே அமர்ந்திருக்கும் இந்த இளைஞனைப் பார்க்கும்போது, விவேகானந்தரின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் தான் நினைவுக்கு வந்தது. என் மனதில் மதிப்பாய் சம்மணம் போட்டமர்ந்த அவனை, மனதார வாழ்த்தினேன்.
பெண்களை மதிக்கும் நாடும், வீடும் கெட்டுப் போவதில்லை!

– ஜூன் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *