முதலாளியோட செலக்சன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 5,704 
 

அந்த பிரம்மாண்ட ஜவுளிக்கடையின் முதலாளி ராமமூர்த்தி, தன் ஏ.ஸி.அறையில் அமர்ந்து வரப் போகும் தீபாவளி விற்பனைக்கான புதுச் சரக்குகள் குறித்த விலைப் பட்டியலை ஆராய்ந்து கொண்டிருந்த போது அறையின் கதவு லேசாகத் தட்டப்பட, நிமிர்ந்து பார்த்தார். மேனேஜர் பாலு நின்றிருந்தார்.

‘ம்….உள்ளார வாங்க பாலு”

உள்ளே வந்த மேனேஜர் ‘சார்…நாம குடுத்திருந்த ‘ஆட்கள் தேவை” விளம்பரத்தைப் பார்த்திட்டு நிறைய பேர் வந்து காத்திட்டிருக்காங்க சார்…”

‘ம்ம்ம்…எத்தனை பேர் வந்திருக்காங்க?’

‘இருபத்தி நாலு பேர் சார்”

‘நமக்குத் தேவை?”

‘பனிரெண்டு பேர் போதும் சார்”

‘ஓ.கே…நீங்களே இண்டர்வியூ பண்ணி… பன்னிரெண்டு பேரைச் செலக்ட் பண்ணிடுங்க”

‘சரி சார்” சொல்லிவிட்டு மேனேஜர் திரும்பி நடக்க,

‘ம்…பாலு…செலக்சன் முடிஞ்சதும்…செலக்சன் ஆகாதவங்களைத் திருப்பி அனுப்பிட வேண்டாம்…அவங்களையும் இருக்கச் சொல்லுங்க…நான் அவங்களையும் பார்க்கணும்”

‘அப்படியே செஞ்சிடறேன் சார்”

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, மேனேஜர் பாலுவிடமிருந்து இண்டர்வியூ மற்றும் செலக்சன் முடிந்து விட்ட செய்தி இண்டர்காம் வழியே வர, ‘வெய்ட் பண்ணச் சொல்லுங்க…பத்தே நிமிஷத்துல வந்திடறேன்”

சரியாகப் பதினோராவது நிமிடம் கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு வந்த ராமமூர்த்தி, முதலில் தேர்வான பன்னிரெண்டு பேரையும் தனித்தனியே அழைத்துப் பேசினார்.

அடுத்து தேர்வாகாத பன்னிரெண்டு பேரையும் அழைத்துப் பேசினார்.

எல்லாம் முடிந்ததும் மேனேஜர் பாலுவை அழைத்து, ‘பாலு….செலக்சன் ஆன பன்னிரெண்டு பேரையும் திருப்பி அனுப்பிச்சிட்டு ….செலக்சன் ஆகாத பன்னிரெண்டு பேருக்கும் உடனே அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் குடுத்து புதன் கிழமை வரச் சொல்லிடுங்க”

குழப்பத்திலாழ்ந்த மேனேஜர், ‘சார்…நீங்க சொல்றது….”

‘புரியலை…அதானே?”

அந்த பாலு மேலும் கீழுமாய்த் தலையாட்டி விட்டு, ‘வந்து என்னோட செலக்சன்ல ஏதாவது தவறு….?”

‘சேச்சே…அப்படியெல்லாம் எதுவுமில்லை…மொதல்ல நான் சொன்னபடி செஞ்சிட்டு என்னோட ரூமுக்கு வாங்க…நான் விளக்கமாச் சொல்றேன்” சொல்லிவிட்டு தன் அறையை நோக்கிச் சென்றவரை விசித்திரமாகப் பார்த்தபடி நின்றார் மேனேஜர் பாலு.

மாலை நாலு மணி வாக்கில் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, முதலாளியின் அறைக்குச் சென்ற மேனேஜர் பாலு முகம் வாடியிருந்தது. அந்த வாட்டத்திற்கான காரணத்தை யூகித்து விட்ட ராமமூர்த்தி, ‘உட்காருங்க பாலு” என்றார்.

தயக்கமாய் அமர்ந்த மேனேஜர் பாலுவிடம், தன் இருக்கைக்குப் பின்னாலிருந்த அந்தப் பெரிய போட்டோவைக் காட்டி, ‘இந்தப் போட்டோவுல இருக்கறது யாருன்னு உங்களுக்குத் தெரியுமா பாலு”

ஒரு சிறிய நிதானிப்பிற்குப் பின், ‘சார்…உங்க அப்பாவோ…தாத்தாவோ…”

மெலிதாய் முறுவலித்த ராமமூர்த்தி ‘ம்ஹூம்….ரெண்டு பேருமே இல்லை…இவர்தான்; என்னோட முதல் முதலாளி”

மேனேஜர் பாலு விழிக்க,

‘என்னோட பதினெட்டாவது வயசுல… நானும் ஒரு ஜவுளிக்கடைக்கு சேல்ஸ்மேன் வேலைக்கு இண்டர்வியூக்குப் போயிருந்தேன்…என்னைப் போலவே இன்னொருத்தனும் அந்த இண்டர்வியூக்கு வந்திருந்தான்!…கடை நிர்வாகத்தைப் பார்த்திட்டிருந்த முதலாளியோட மகன்தான் எங்களை இண்டர்வியூ பண்ணினார்…பண்ணிட்டு என்னை ‘வேண்டாம்”னுட்டு அந்த இன்னொருத்தனைச் செலக்ட் பண்ணி வெச்சிட்டாரு….’ சொல்லிவிட்டு வாய் விட்டுச் சிரித்தார் ராமமூர்த்தி.

‘எனக்கா…அழுகையே வந்து விட்டது…அப்பத்தான் உள்ளார வந்தார் பெரிய முதலாளி…அவரிடம் மகன் விவரங்களைச் சொல்ல, முழுவதையும் கேட்டு முடித்த பெரிய முதலாளி….என்னைப் பக்கத்துல அழைச்சாரு…’நீ நாளையிலிருந்து வேலைக்கு வந்துடு”ன்னாரு…அந்த இன்னொருத்தனை ‘வேண்டாம்”னு சொல்லி உடனே திருப்பியனுப்பிச்சிட்டாரு”

மேனேஜர் பாலு நெற்றியைச் சுருக்கிக் கொண்டு பார்த்தார்.

‘பாலு…நீங்க இப்ப எப்படி புரியாம முழிக்கறீங்களோ…அதே மாதிரிதான் நானும் முழிச்சேன்…ஒரு நாளு ரெண்டு நாளல்ல…மாசக் கணக்குல முழிச்சேன்…தலையைப் பிச்சுக்கிட்டேன்…காரணம் புரியாமத் தவிச்சேன்…மொதலாளிகிட்டக் கேட்கவும் பயம்…அப்புறம் கொஞ்சம் காலம் கழிச்சு…அவருகூட ஓரளவுக்கு நெருக்கம் ஏற்பட்ட பின்னாடி கேட்டே விட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு,

‘அட முட்டாப்பயலே…இது கூடவா புரியலை உனக்கு?…உன்கூட வந்து இண்டர்வியூல செலக்சன் ஆனானே…அவன் உண்மையிலேயே உன்னை விட திறமைசாலி…புத்திசாலி…அறிவாளி…எந்தப் பொருளையும் எளிதாய் விற்றுவிடும் சாமார்த்தியப் பேச்சுக்காரன்… நிச்சயம் அவனுக்கு இங்கே வேலை கெடைக்காட்டியும் வேற எங்கியாச்சும் கண்டிப்பாக் கெடைச்சிடும்…ஆனா…நீ அப்படி இல்லை…பச்சை மண்ணாட்டம் இருந்தே… எந்தச் சாமார்த்தியமும் உன்கிட்டே இல்லை…நாங்க உன்னைய ‘வேண்டாம்”ன்னு திருப்பி அனுப்பியிருந்தா நிச்சயம் உனக்கு வேற எங்கியும் வேலை கெடைக்காது…ஒரு கட்டத்துல நீ விரக்தியின் எல்லைக்கே போயி உனக்கு வேலை குடுக்காத எல்லா முதலாளிகளையும் திட்டிட்டு எதுனாச்சும் பண்ணிட்டிருப்பே…அதான்…உனக்கு….உன் வாழ்க்கைக்கு ஒரு கை குடுக்கலாம்னு உன்னைய வேலைக்கு வெச்சுக்கிட்டேன்….என்ன புரியுதா?”

தன் முதலாளியின் அந்தப் பேச்சிலிருந்து ஓரளவுக்கு யூகித்து விட்ட மேனேஜர் பாலு, மெல்லத் தலையை மேலும் கீழும் ஆட்ட,

‘இன்னிக்கு நீங்க செலக்ட் பண்ணின பனிரெண்டு பேரும் நல்ல ஆளுங்க… எங்கியும் அவங்களுக்கு வேலை கெடைக்கும்…. தேர்வாகாத அந்தப் பன்னிரெண்டு பேருக்கும் நாம கை கொடுத்துத் தூக்கி விட்டாத்தான் ஆச்சு… அதனாலதான்… அவங்களை வேலைக்கு வரச் சொன்னேன்….இதுதான்ப்பா என்னோட முதலாளிக்கு நான் காட்டுற நன்றி..” கடைசி வார்த்தைகள் வரும் போது ராமமூர்த்தியின் குரல் தழுதழுத்தது.

ஒரு சிறிய அமைதிக்குப் பின், ‘சார்…‘ பெரிய மனுஷங்க எப்பவும் பெருந்தன்மையாத்தான் சிந்திப்பாங்க‘ ங்கறது ரொம்பச் சரியான வார்த்தைங்க” சொல்லிவிட்டு எழுந்த மேனேஜர் பாலுவின் நெஞ்சில் வரும் போதிருந்த கனம் முற்றிலுமாய்க் கரைந்திருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *