முடிவு

 

ரவி வேலையை முடித்து வீட்டுக்கு வரும்போது இரவு 11 மணி ஆகியிருந்தது. வீட்டுக்குள் நுழையும்போது, தூங்கிக்கொண்டிருந்த தன் 8 வயது மகன் ராஜாவையும், 5 வயது மகள் மீனாவையும் பார்த்தபடி எதையோ யோசித்துக்கொண்டே உள்ளே நுழைந்தான்.

ரவி உள்ளே நுழையும் சத்தத்தைக்கேட்டு அவனுடைய மனைவி சீதா எழுந்து, சமையலறைக்குச் சென்றாள். அவனுக்கு சாப்பாடு எடுத்து தரையில் வைத்தாள். புளிக்குழம்பும், ரசமும் தான் அன்றைய சமையல்.

வேலை முடித்து வீட்டிற்கு வந்தவுடன் குளித்துவிட்டு சாப்பிடுவது ரவியின் வழக்கம். அன்றும் எப்போதும் போல் குளித்துவிட்டு, நீல நிற லுங்கியை எடுத்து கட்டிக்கொண்டு சாப்பிடுவதற்கு வந்து உட்கார்ந்தான். ஏதோ ஒரு விஷயம் அவனுடைய சிந்தனையைக் கைப்பற்றியிருந்தது.

தட்டில் சாதமும், அதன் மேல் புளிக்குழம்பும் இருந்தது. சாதத்தைப் பிசையத் தொடங்கினான். “என்னங்க இன்னிக்கு எதையோ யோசிச்சிட்டே இருக்கீங்க? என்ன ஆச்சு இன்னிக்கு உங்களுக்கு?” என்றாள் சீதா. அதற்கு ரவி, “ஒன்னும் இல்ல, எப்பவும்போல தான் இன்னிக்கும். ராஜாவும், மீனாவும் சாப்பிட்டாங்களா? நீ சாப்பிட்டியா?” என்றான்.

அதற்கு சீதா, “சாப்பிட்டோங்க. ராஜா தான் இன்னிக்கும் புளிக்குழம்பான்னு அலுத்துக்கிட்டான்” என்றாள். “நீ புள்ளைங்களுக்கு புடிச்ச மாதிரி ஏதாவது செய்ய வேண்டியதுதானே? ஏன் அவங்களுக்கு இதையே சமைச்சு கொடுக்கற?” என்றான் ரவி.

“இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்ங்க. அவங்களுக்கு புடிச்ச மாதிரியே சிக்கன், மீன் எல்லாம் தினமும் செஞ்சு போடறேன். இப்ப, மாசாமாசம் உங்களுக்கு வர்ற சம்பளத்துல, அவங்க ரெண்டு பேரோட ஸ்கூல் ஃபீஸுக்கே முக்கால்வாசி போயிடுது. கொஞ்சம் மிச்சம் பிடிச்சா பின்னாடி உதவும்னுதான் இப்ப பாத்து செலவு பண்றேன்” என்றாள் சீதா.

அதற்கு ரவி, “சரி, அசைவ சாப்பாட்ட விடு. அவங்களுக்குப் புடிச்ச உருளைக்கிழங்கு, வாழைக்காய் பொரியலாவது செய்யலாம்ல” என்றான்.

“இன்னிக்கு தேதிக்கு காய்கறி விக்கற விலைல அத வாங்கறதுக்குக்கூட யோசிக்க வேண்டியிருக்குங்க. அதான் வாரத்துக்கு ஒரு தடவ, பத்து நாளைக்கு ஒரு தடவ, அவங்களுக்கு புடிச்சமாதிரி செய்ய வேண்டியிருக்கு. மத்த நாளெல்லாம் கொஞ்சம் பொறுத்துக்கத்தான் வேணும்” என்றாள் சீதா.

சாப்பிட்டு முடித்து தட்டிலேயே கை கழுவினான் ரவி. “என்னங்க ரசம் சாதம் சாப்பிடவே இல்ல, அதுக்குள்ள கை கழுவிட்டீங்களே” என்றாள் சீதா. அதற்கு ரவி, “வேணாம், பசி இல்ல” என்றான். பாத்திரங்களை ஒரு ஓரமாக எடுத்து வைத்து விட்டு சீதா அவளுடைய மகளுக்கு அருகில் தரையில் படுத்தாள்.
ரவி கூடத்தில் பாயை விரித்து கீழே போட்டு அதில் படுத்தான். தன் வலது கையை தலைக்கு அடியில் வைத்துக்கொண்டு மறுபடியும் ஏதோ ஒரு யோசனையில் ஆழ்ந்தான். “சீக்கிரம் தூங்குங்க. நாளைக்கு வேலைக்குப் போகணும். எதையாவது யோசிச்சிட்டு இருக்காதீங்க” என்று சீதா சொல்ல, அதற்கு ரவி, “நான் பாத்துக்கறேன், நீ தூங்கு” என்றான்.

கண்களை மூடிக்கொண்டு தூங்க முயர்சித்தான் ரவி. ஆனால் அவனுக்கு தூக்கம் வரவில்லை. ஒருக்களித்து படுத்துப்பார்த்தான். நேரம் அதிகாலை ஒரு மணி ஆகியும் அவனுக்கு தூக்கம் வரவேயில்லை. மனம் கனத்தது. காரணம் அவன் வேலை செய்யும் டாஸ்மாக் கடையில் அன்று நடந்த ஒரு சம்பவம் தான்.

அன்று மாலை எட்டு மணி இருக்கும். வழக்கம்போல் டாஸ்மாக் கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. வண்டி இழுப்பவர்கள், கூலித்தொழிலாளிகள், ரிக்ஷா ஓட்டுபவர்கள் என பல்வேறு தரப்பினர் கடைக்கு வந்து விஸ்கி, பிராண்டி என் திணுசு திணுசாக வாங்கிக்கொண்டு சென்றனர்.

அப்போது ஒரு 75 வயது மதிக்கத்தக்க முதியவர் கடைக்கு வந்தார். ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் பேரைச் சொல்லி அந்த கம்பெனி பிராண்டி வேண்டும் என்று ரவியிடம் கேட்டார். அதற்கு ரவி, “அந்த கம்பெனி பிராண்டி இல்ல. வேற ஒன்னு இருக்கு. வாங்கிக்கறீங்களா?” என்றான்.

அதைக்கேட்டு கோவப்பட்ட அந்த பெரியவர், “என்னய்யா கடை நடத்தறீங்க? நான் தினமும் வந்து இந்த சரக்க வாங்கிட்டு போறவன். அந்த கம்பெனி சரக்கு பாட்டில் ஒன்னு எனக்காகன்னு எடுத்து வெக்கமாட்டீங்களா?” என்று சத்தம் போட்டு தகராறு செய்ய ஆரம்பித்தார். வேறு ஒரு கடையிலிருந்து அந்த முதியவர் கேட்ட சரக்கை வரவழைத்துக் கொடுத்தான் ரவி. இந்த பிரச்சனை தீருவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது.

சிறிது நேரம் ஆனது. “அண்ணே, மூணு பாட்டில் பீர் கொடுங்க. சில்லுனு இருக்கறதா கொடுங்க” என்று ஒரு குரலைக் கேட்டு அந்தப் பக்கம் திரும்பினான் ரவி. தூக்கி வாரிப்போட்டது அவனுக்கு.

ஏனென்றால், அந்த வார்த்தைகளைச் சொன்னது ஒரு பள்ளி மாணவன். 12, 13 வயது இருக்கும் அவனுக்கு. பள்ளிக்கு செல்லும் மாணவன் ஒருவன் கடைக்கு நேராக வந்து பீர் வாங்குவது அதுவரை அவன் பார்த்திராத ஒன்று. திகைத்துப்போனான்.

“என்னடா வயசு உனக்கு? அதுக்குள்ள பீர் வேணுமா?” என்று அந்த பையனை அதட்டிக்கேட்டான் ரவி. அதற்கு அந்த பையன், “எவ்ளோ வயசா இருந்தா உங்களுக்கு என்ன? காசு கொடுக்கறேன்ல, அதுக்கு நான் கேட்டத கொடுங்க” என்றான்.

இந்த மாதிரி ஒரு பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்லை ரவி. கோவம் வந்தது அவனுக்கு. “டேய், ரொம்ப திமிரா பேசற நீ. உன் வயசு பசங்களுக்கு எல்லாம் நான் சரக்கு தரமாட்டேன். போய் படிக்கற வேலையப் பாரு” என்றான் ரவி. அதற்கு அந்தப் பையன், “உங்ககிட்ட இருந்து எப்படி வாங்கறதுன்னு எனக்குத் தெரியும்” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டுச் சென்றான்.

மணி பத்து ஆனது. கடையை மூடி பூட்டிவிட்டு, கடையின் முதலாளியின் வீட்டுக்குச் சென்று சாவியை கொடுத்துவிட்டுத் தன் வீட்டை நோக்கி வந்துக்கொண்டிருந்தான் ரவி. வரும் வழியில் அவனை மடக்கினான் அந்தப் பையன், கையில் பீர் பாட்டிலுடன்.

“யோவ், பெரிய பருப்பு மாதிரி இன்னிக்கு பேசின. நீ கொடுக்கலன்னா எனக்கு உன் கடையில இருந்து வாங்கிக்க தெரியாதா? பாத்தியா கையில என்ன இருக்குன்னு?” என்று திமிராக சொன்னான் அந்த பையன். அதற்கு ரவி, “எப்படிடா கிடைச்சுது உனக்கு? யார் கொடுத்தாங்க?” என்று கேட்டான்.

“உன் கடைக்கு எத்தனை பேர் வர்றாங்க. அதுல ஒருத்தன்கிட்ட நாலு பாட்டில் வாங்கினா ஒரு பாட்டில் தர்றதா சொல்லி காசு கொடுத்தேன். அவன் வாங்கிக் கொடுத்த பாட்டில்தான் இது” என்றான். இதைக்கேட்டு திகைத்துப்போன ரவி, “இந்த வயசுலயே குடிக்க ஆரம்பிச்சா அப்பறம் அந்த பழக்கத்தை விடறது ரொம்ப கஷ்டம்டா. தப்பான பாதையில போகாதே” என்றான்.

அதற்கு அவன், “யோவ், நீ பெரிய யோக்கியன் மாதிரி பேசாதே. இவ்ளோ பேச்சு பேசறவன் எதுக்குய்யா அந்த கடையில வேலை பாக்கற? நீ எதுக்குய்யா வர்றவங்களுக்கு சரக்கு பாட்டில் எடுத்து கொடுக்கற. வேற ஏதாவது வேலை பாக்க வேண்டியதுதானே?” என்றான். சுளீரென்று உறைத்தது ரவிக்கு.

இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அங்கிருந்து யோசித்தபடி வீட்டுக்கு வந்து சேர்ந்தான். இப்போது இதையே யோசித்துக்கொண்டிருந்ததால் தான் தூக்கம் வரவில்லை ரவிக்கு. சமுதாயம் கெட்டுப்போவதற்குத் தான் உடந்தையாக இருக்கக்கூடாது, அப்படியே நடந்தாலும் அதில் தன் பங்கு இருக்கக்கூடாது என்றும் நினைத்தான். அதே நேரத்தில் உடனடியாக வேறு வேலையிலும் சேர முடியாது என்று நினைத்துக் குழம்பியபடியே படுத்துக்கொண்டிருந்தான்.

காலை 7 மணிக்கு எழுந்தான். ஓரளவு தூங்கியிருந்தான். இன்று முதல் வேலைக்கு போக வேண்டாம் என்றும், வேறு ஏதாவது வேலை செய்து பிழைக்கலாம் என்றும் முடிவு செய்திருந்தான் ரவி. தூங்கி எழுந்து, பாயை சுருட்டிக்கொண்டிருந்தபோது, “அப்பா, ஸ்கூல்ல ஸ்போக்கன் இங்கிலீஷ், கம்ப்யூட்டர் எல்லாம் சொல்லித்தராங்களாம். அதுக்கு ஆளுக்கு மாசாமாசம் 500 ரூபாய் தரணுமாம்” என்றாள் மீனா.

ரவி மனதில் ஏகப்பட்ட குழப்பம். அவனைப் பொருத்தவரை 500 ரூபாய் என்பது சாதாரண தொகை அல்ல. அதனால் இப்போது என்ன செய்வது என்று புரியாமல் இருந்தான். சமுதாயத்துக்காக வேலையை விட்டால் அடுத்து என்ன வேலை செய்வது என்று தெரியவில்லை. தேவையான அளவுக்கு சம்பளம் கிடைக்குமா என்பதும் சந்தேகம் தான். இதனால் இப்போது இருக்கிற வேலையை விடக்கூடாது என்று கனத்த இதயத்துடன் முடிவு எடுத்தான்.

சமுதாயம் பற்றிய சிந்தனை நல்லதுதான், மிகவும் உயர்வானதும் கூட. ஆனால், குடும்பமா, சமுதாயமா என்ற கேள்வி எழுந்தால் பல பேரது முடிவு குடும்பத்துக்காகத்தான் இருக்கும். ரவி ஒரு சராசரி குடும்பத்தலைவன். அதனால் அவனுடைய முடிவு சரியானதே! 

தொடர்புடைய சிறுகதைகள்
வேலூர் காந்தி நகரில் இருக்கும் தன் வீட்டு வாசலில், தன் ஒன்றரை வயது மகன் தேஜஸுடன் விளையாடிக் கொண்டிருந்தான் செந்தில். மழலைப்பேச்சில் மனம் உருகி, முகம் முழுவதும் மகிழ்ச்சி நிரம்பியிருந்தது செந்திலுக்கு. “இங்க பாரு தேஜஸ், அப்பா சொல்லு, அப்பா சொல்லு” என்று ...
மேலும் கதையை படிக்க...
வீட்டிலிருந்து பத்து மணிக்கு மனைவி அம்பிகா, மகள் அஞ்சலி, மகன் அரவிந்தனுடன் லண்டன் ஹீத்ரோவ் விமான நிலையத்திற்கு புறப்படுகிறான் கார்த்திக். இரட்டையர்களான அஞ்சலி, அரவிந்தனுக்கு ஐந்து வயது. ஒரு மென்பொருள் நிறுவனத்தின் இணை இயக்குனரான கார்த்திக்கும், லண்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாகப் பணிபுரியும் ...
மேலும் கதையை படிக்க...
கிழக்கு கடற்கரை சாலை. நேரம் பகல் ஒரு மணி. சாலையோரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த குமாரை வழிமறித்து நின்றது ஒரு கார். கார் ஒட்டுனரைப் பார்த்து அவனை திட்டுவதைப்போல் கையசைத்துவிட்டு தன் வழியில் சென்றான் குமார். சில நிமிடங்களுக்குப் பிறகு மறுபடியும் அதே ...
மேலும் கதையை படிக்க...
“வாங்கடா சீக்கிரம், படம் ஆரம்பிச்சிடப் போறாங்க” என்று தன் நண்பர்களான சிவா, பாபு, மணி ஆகியோரை கிளப்பிக்கொண்டு திரையரங்கத்திற்கு உள்ளே சென்றான் ரவி. படம் விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருந்த்த போது இடைவேளை வந்தது. “சரிடா, சாப்படறதுக்கு ஏதாவது வாங்கிட்டு வரலாம் வா” என்று ...
மேலும் கதையை படிக்க...
சென்னை ஏ. ஜி. எம் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாள் சாந்தி. தவறு அவளுடையது அன்று. சாலையோரத்தில் இருந்த ஓர் இளநீர் கடையில், இளநீர் வாங்கி குடித்துக் கொண்டிருந்தாள். ஆனால் அப்போது அந்த சாலையில் நடந்த விபத்தினால், எதிர்பாராத விதமாக ஒரு ...
மேலும் கதையை படிக்க...
அவர்களும் குழந்தைகளே
சிவப்பு மஞ்சள் பச்சை
பழக்கம்
பயம்
அப்பனுக்குப் பிள்ளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)